இன்னோர் ஆதங்கமும்- கவிதையும்!

நன்றாக எழுதினாலும் எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாழ்த்துகிற தோழர்கள் இருக்கிறவரையில் நல்ல பதிவுகளை இடுவது என் கடன்! முன்னர் வெளியிட்ட மொழிபெயர்ப்புக் கவிதை நல்ல வரவேற்பு பெற்றதாலோ, என்னவோ இன்னுமொரு நல்ல மொழிபெயர்ப்புக் கவிதை கண்ணில் பட்டது. அதையும் பகிர ஆசை.

முன் சொன்ன கவிதை போலவே இதுவும் சிலரால் மட்டுமே அனுபவிக்கப்பட்டு, நம்மால் அனுதாபப்பட்டு கடந்து போகக் கூடிய ஒன்று! டயரிக் குறிப்புகள் பல சமயங்களில் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனி ஃப்ராங் டைரிக் குறிப்புகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தால் படிக்க முயற்சிக்க வேண்டும்.

பதிவிற்கு வருவோம். ஆண்கள்-பெண்கள் குறித்து நீங்கள் வைத்திருக்கிற நினைப்புகள் எல்லாமே உடையப் போகிறது. கிட்டத்தட்ட இதுவும் ஒரு பெண்ணின் நாட்குறிப்பு போலதான்!  மதுவைக் கூட ஒருவகையில் ஒழித்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த கவிதை……?              வாசிக்கவும்-யோசிக்கவும் உங்களுக்காக.

இன்னொரு பூங்கொத்து!

இன்று

முதல் முறையாக

என்னை வெறுப்புடன்

அடித்தான்.

மனம் போலவே உடலும்

வலித்தது.

விழிகளோ உறக்கம்

தொலைத்தது.

மறுநாள்  காலை

பூங்கொத்துடன் நின்ற அவன்

“மன்னிப்பாயா” என்றான்.

எனக்குத் தெரியும் அவன்

மனம் வருந்தியிருப்பான்.

இன்று

இரண்டாம் முறையாக

என்னை அடித்தான்.

இன்னும் வேகமாய் கோபமாய்

வலியால் துடித்து அலறிய

போதும் நிறுத்தவில்லை.

அழுதழுது ஓய்ந்துபோனேன்.

மறுநாள் காலை

பூங்கொத்துடன் நின்ற அவன்

“மன்னிப்பாயா” என்றான்.

எனக்குத் தெரியும் அவன்

மனம் வருந்தியிருப்பான்.

இன்று

திரும்பவும் என்னை அடித்தான்

இன்னும் மூர்க்கமாய்

இறந்து விடுவேனோ என

அஞ்சினேன்.

விதி போலும் என அழுது

தீர்த்தேன்.

மறுநாள் காலையும்

பூங்கொத்துடன்  அவன்.

“மன்னிப்பாயா” என்றான்.

எனக்குத் தெரியும் அவன்

மனம் வருந்தியிருப்பான்.

இன்றும்

மலர் கொத்தை அனுப்பினான்.

நேற்று அவன் அடித்தபோது

எழுந்த என் மரண ஓலங்கள்

அவன் செவிகளை எட்டவில்லை போலும்.

அந்த பூங்கொத்தை வாங்க

என் பிரேதம் மட்டுமே

மிஞ்சியிருந்தது

அமைதி காத்து

இறுதி மூச்சைத் தொலைத்திருந்தது.

ஒரு வேளை நான் பேசியிருந்தால்….

ராதா என்பவர் ஆங்கில மொழிக் கவிதை ஒன்றின் தழுவலாகத்  தந்தது. மக்கள் கண்காணிப்பகம் என்கிற அமைப்பு வெளியிட்ட ஒரு குறுங்கையேட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இந்திய அரசு 2005-ம் வருடம் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. விரிவாக இன்னொரு முறை பேசலாம். உங்கள் கருத்துகள் தேவை.

ஆசிரியர்: தமிழ்

எழுத்து, வாசிப்பு இரண்டும் பிடிக்கும். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் படிப்பதை விரும்புவேன். எப்போதாவது இவற்றை எழுதுவேன். மொழியியல், வரலாறு, தொழில்நுட்பம் இவற்றில் இப்போதைக்கு ஆர்வம். இனி எப்போதைக்குமே!

“இன்னோர் ஆதங்கமும்- கவிதையும்!” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. இதைப்போல எத்தனை பெண்கள் மெளனமாக அல்லலுறுகிறார்களோ, பாவம். ஒவ்வொரு முறையும் கணவன் திருந்தி விடுவான் என்று கடைசியில் இறப்பில் தான் தெரிகிறது அவன் திருந்தியும் பலனில்லை என்று.

    பரிதாபத்திற்குரிய பெண்களைப் பற்றிய கவிதை மனதை நோக வைத்தது.

திண்டுக்கல் தனபாலன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி