வேர் (சிறுகதை)

நீர்ச் சொட்டும் சத்தம் கேட்டு எதிர்ப்பக்கம் திரும்பினான் வியன். அவ்வளவு நேரமும் மெல்லிய சலசலப்புடன் சத்தமே எழும்பாமல் ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையில் நின்றபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான் அவன். ஒரு மனிதனுக்கு கடல் உண்டாக்கும் சுவாரசியத்தைக் காட்டிலும் ஆறு அப்படி ஒன்றும் சுவாரசியமில்லை. ஆனால் ஆறு எப்படி கடல் இல்லையோ அதேபோல் கடல் ஒருபோதும் ஆறாகாது. அவன் யோசனையை வளர்த்தெடுக்க எண்ணினான். ஆனால் இப்போது நீர்ச் சொட்டும் சத்தம் கேட்டு எதிர்ப்பக்கம் திரும்பினான். வயதான பெரியவர் ஒருவர் ஒரு மரக்கன்றுக்கு நீருற்றிக் கொண்டிருந்தார். முதற்பார்வைக்கு அந்த பெரியவரை எங்கோ பார்த்ததைப் போல தோன்றியது. இவனே இந்த ஊருக்குப் புதியவன் என்பதால் அந்த எண்ணத்தைப் புறந்தள்ளி அவரையே கவனிக்கத் தொடங்கினான். சட்டென்று அவனைக் கண்ட பெரியவர் மீண்டும் வேலையில் மூழ்கினார். மீண்டுமொருமுறை அவனைப் பார்த்து யார் நீ? என்பது போல சைகை காட்டினார் . அவன் அசையாமல் நின்றான்.

Continue reading “வேர் (சிறுகதை)”

தீரா வானம் – 2

02

வெள்ளை முகம்.

ஷ்ரவனைக் காணும் எவருக்கும்  முதல் பார்வையில் அதுதான் பதியும். அதை மிஞ்சி அடையாளம் ஏதும் சொல்ல முடியாத அளவு வெளுப்பான முகம். கொஞ்சமே கொஞ்சம் நேர்த்தியோடு வாரப்பட்ட தலை. மெல்லிதாக முகம் முழுதும் விரவிக் கிடக்கும் தாடியோடு காண்கையில் முகம் கூடுதல் பொலிவாக இருக்கும். திடீரெனத் தோன்றினால் மாதத்தில் என்றேனும் ஒருநாள் தாடியை மழிப்பான்.

தயவு செய்து தாடியை எடுக்காதே ராசா! காணச் சகிக்கல.

தெலுங்கும் ஆங்கிலமும் சரளமாய் புரளும் அந்த நாக்கு கொஞ்சமாய் இந்தி பேசும். ஆனால் சத்தியமாய் தமிழ் தங்காது. கொஞ்சமாய் மனதளவில் புரியும். ‘நீ என்னமோ தாடி பத்தி சொல்ற ப்ளீஸ் ஸ்பீக் இன் இங்லீஷ் மேன்.’

ஆங்கிலத்தில் ஒரு கட்டளை.

ப்ளீஸ் டோண்ட் ஷேவ்! வீ ஆர் பாவம்.

ஹரே..! என்று சொல்லி அவனும் மெல்லிதாய் சிரிப்பான்.

ஒரு நெடுந்தெரு போல நீண்டுகொண்டே சென்ற சாலையின் இரு மருங்கிலும் ஆங்காங்கே வீடுகளாகத் தெரிந்த கட்டிடங்களில் பரவலாக பல மொழிகள்  பேசக்கூடிய மனிதர்களின் நடமாட்டம் இருந்ததை உணர முடிந்தது., அவர்கள் பெரும்பாலும் இந்தி பேசுகிறவர்களாகவோ, மலையாளம் பேசுகிறவர்களாகவோ இருக்கக்கூடும். தமிழ் பேசுகிறவர்களை வெறும் முகத்தை வைத்து உறுதி செய்யவே முடிவதில்லை என நான் திடமாக நம்பத் தொடங்கினேன். கடந்த கால வரலாறு அப்படி! கடைசியில் ஒரு வீட்டின் முன் நின்று கொண்டிருந்தான் ஷ்ரவன். எனக்கு ஃபோனில் வழி சொன்னபடியே அங்கே காத்துக்கொண்டிருந்தான்.

கண்ணெதிரே நான் வந்ததும் ஃபோனை அணைத்தான்.

அருகில் வந்தவுடன் முகமன் சொன்னதும் நான் கேட்டேன்.

இந்த ஏரியாவுல நாய்த்தொல்லை அதிகமா என்ன?

அப்படியொண்ணும் இல்லை. இராத்திரிக்கு எங்கயாவது கத்திட்டு சுத்தும். பகல்ல ஒண்ணும் இல்ல.

ஓ!

நேரே வீட்டினுள் இருந்த முதல் அறைக்குள் நிதானமாக இருவரும் நுழைந்தோம். அங்கே தலை முழுக்க – முன்பக்கம் மட்டும் கொஞ்சம் சுருள்வடிவிலான – முடியுடன் ஒரு மனிதர் லேப்டாப்பை இயக்கிக் கொண்டிருந்தார்.

நம்ஸ்தே அண்ணா! ஷ்ரவன் அவரை பார்த்து சொன்னபடி ஒரு கையை மட்டும் உயர்த்தினான்.

அவரும் அவ்வாறே உயர்த்தினார்.

வீடே குமரன் என்று அறிமுகம் செய்து வைத்தான்.

அட்வான்ஸ் மற்றும் அறை வாடகை குறித்து மட்டும் ஒரு வழக்கமான அறை உரிமையாளரின் தொனியில் சொல்லிவிட்டு மீதத்தை ஷ்ரவனிடம் கேட்டுக்கொள்ள பணித்துவிட்டு அவர் லேப்டாப்பை இயக்கத் தொடங்கினார். என்னை ஷ்ரவன் அறைக்குக் கூட்டிச் சென்றான்.

அறை முழுக்க கட்டில்களும், சில அலமாரிகளும் மட்டும் இருப்பதாய் முதல் பார்வைக்குப் பட்டது. ஆனாலும் என்னமோ இலட்சணம் இருப்பதாயும் தோன்றியது. ஷ்ரவன் உடன் இருப்பதால் கூட அவ்வாறு தோன்றியிருக்கலாம். அட்டாச்டு பாத்ரூம் கூட இருந்தது.

வசதிதான்! என மெல்லிய குரலில் எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன்.

என்ன?- ஷ்ரவன் கேட்டான்.

திஸ் ரூம் கிவ்ஸ் மீ அ ப்ளஸண்ட் லுக்!

ஓஹோ! தட்ஸ் குட்! நீயும் இங்கிருந்தா இன்னும் ப்ளஸண்ட்தான். ஆங்கிலத்தில் சொன்னான்.

ம்ம்ம்.. வழக்கத்தைவிட அதிகம் பேசுற. அதுக்குள்ள இந்த ரூம் மாத்திடுச்சா என்ன? சரி விடு. இப்ப பார்த்தமே அவர்தான் வீட்டு ஓனரா?

பை தி வே, இது வீடு கிடையாது. பி.ஜி. மாதிரி. அவர் ஓனர் கிடையாது. ஓனர் மாதிரி. அவர் பேர் கேஷவ். 

பரவாயில்லை. உனக்கும் கொஞ்சம் இரசனையா பேச வருது. நல்லது. அடுத்த வாரக் கடைசியில கண்டிப்பா இங்க வந்திடறேன். இப்ப சாப்பிடப் போகலாமா? நல்ல பசி!

ஷ்யர்! பட் டுடே ஸ்ட்ரிக்ட்லி நோ பிரியாணி.

ஹா! இட்ஸ் ஓகே.. வில் ஹேவ் அ மீல்ஸ்.

ஹ்ம்ம்.. லெட்ஸ் கோ!

ஒரு ஆந்திரா மெஸ்ஸில் பழக்கமில்லாதவன் போல் ஷ்ரவன் நுழைந்தான். பிரியாணி வேண்டாமென்றவன் ஏன் ஆந்திரா மெஸ்ஸிற்குள் நுழைகிறான் என்றுதான் முதலில் எனக்குத் தோன்றியது.

நான் இதற்கு முன் இந்த ஹோட்டலில் சாப்பிட்டதில்லை. எனிவே, இன்னைக்கு ட்ரை பண்ணலாம் என்று முன்னெச்சரிக்கை செய்தான் ஷ்ரவன்.

பரிமாற வந்தவர் வகையாகச் சொல்லத் தொடங்கினார். நிதானமாக கேட்ட பின் மெனு கார்ட் கேட்டான் ஷ்ரவன். அவரும் தந்தார்.

முதலில் முழு சாப்பாடு இரண்டு. மற்றது பிறகு.

பெரிய ஆலோசனைகள் ஏதுமின்றி வெகு சுலபமாக ஒரு தீர்வு. ஆவி பறந்தபடி இரு தட்டுகளில் சோறு வந்தது. சுமாரான சாம்பாரும், காரமான வத்தக்குழம்பும், சராசரிக்கும் கீழான ரசமும், என்னவென்றே சொல்ல இயலாதபடிக்கு இருந்த வெள்ளை திரவம் அநேகமாக மோர் எனும் அற்புதமாக இருக்கக்கூடும் என தீர்மானித்து மீதமிருந்த பிடிச்சோற்றில் கவிழ்த்து பிசைந்த பின் நான் கேட்டேன்.

ப்ரதர்! உங்க சோத்துல உப்பு இருக்கா?

நான் ஏன் அப்படிக் கேட்டேன் என்பதை உணர்ந்துகொண்ட ஷ்ரவன் பளீரென ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு கொஞ்சமாய் நீர் அருந்தினான்.  

சாப்பாடே சுமாராக இருந்தபடியால் மேலும் ஏதும் உண்ண எண்ணமில்லாமல் இருவரும் கிளம்பினோம்.

நெக்ஸ்ட் வீக் வீ வில் மீட் அகெய்ன் என்றதும் என்னோடு கைகுலுக்கிவிட்டு ஷ்ரவன் சொன்னான்.

ஐ வில் கால் யூ லேட்டர்!

ஷ்யர். பை!

மணி இரண்டைக் கடந்து நகர்ந்து கொண்டிருந்தது. கிளம்பும் முன் வானத்தைப் பார்த்தேன். இப்போதும் நல்ல வெயில். ஆனால் வயிறு நிறைந்திருந்தது.


கிண்டில் வாசிப்பாளர்கள் தீரா வானம் நூலை 29-01-2022 01:30 pm IST  முதலாக 31-01-2022 12:30 pm IST  வரையாக இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். வாசித்த பின் அதன் தொடர்பில் எனக்கு குறிப்புகள், அனுபவம், விமர்சனம் என எதைச் சொன்னாலும் நான் மகிழ்வேன்.

கிண்டில் மூலம் வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.

https://www.amazon.in/dp/B08T35Y46L

தீரா வானம் -1

01

இந்த ஊர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த ஊரில் இப்போது வீசும் காற்றில் மிஞ்சியிருக்கும் குளிர்ச்சி இதமாக இருக்கிறது. இதே ஊர் கோடைகாலத்திலும் பெரும்பாலும் வசீகரிக்கிறது. ஆனால் இதிலெல்லாம் இருக்கிற இன்பத்தை மனம் முழுக்க நிறைக்க முடியவில்லை. இதோ இந்த மொட்டை மாடியில் இருந்தபடி நகரத்தைப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் முழுமையாக ரசிக்க முடியவில்லை. ஏதோ ஒன்று தடுக்கிறது. 

குமரன். அது என்னை அழைக்கும் பெயர். ஆனால் வேறொரு வார்த்தை என்னை நோக்கி வந்தது.  

‘சின்னப்பையா!’

கண்டிப்பாக அது மிகவும் வியப்பாக இருந்தது. அந்தப் பெரியவர் எப்போது என்னைக் கண்டாலும் இப்படித்தான் அழைப்பார். வெகு சரளமாக தெலுங்கு விளையாடும் அவரது நாக்கில் அரிதாக வந்த எளிய தமிழ் வார்த்தை அநேகமாக இது மட்டும்தான். நல்லாருக்கியா?, சாப்டியா? என்று அவ்வப்போது கேட்பதுண்டு. அதெல்லாம் சரி. எதற்காக இவர் ஒரு இளைஞனை சின்னப்பையனாக்க வேண்டும்?

‘பார்த்ததும் தோணுச்சு. கூப்பிட்டேன். தப்பா?’

வேறென்ன பேச? பெரியவருக்கு நான் ஒரு சிறுவன்தான். சின்னப்பையனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கான  சமாதானங்கள் என்னோடு மட்டும் இருக்கட்டும்

அந்த மனுஷன் ரொம்ப நாட்களாக கண்ணில் படவே இல்லை. தினந்தோறும் இல்லாவிட்டாலும், எப்போதாவது பார்த்துப் பேச, சிரிக்க, முகமன் சொல்ல இருந்த ஆள் இல்லாமல் கொஞ்சம் கவலை. உண்மையில் அதையெல்லாம் கவலையில் சேர்த்துக் கொள்ளலாமா? விளங்கவில்லை. ஆனாலும் நாட்கள் அவ்வளவு ஒன்றும் மோசமில்லை. யாரை நம்பியும் நாமில்லை என்கிற நினைப்பு.

ஒரு வாரம் தள்ளி அவரைக் காண நேர்ந்தது.

நாளையோடு ஊருக்கு போகிறேன்.

ஏன்? என்னாச்சு? திடீர்னு…

அவர் நிதானமாகச் சொன்னார்.

சொந்த வீடு ஆந்திராவுல இருக்குடா. அங்க இனி பொழைக்கணும்னு ஆசை. இந்த பிஜி ஓனர் இருக்கானே அவன் மோசமான ஆளு. ரொம்ப நாளு இங்க நான் காலம் தள்ள முடியாது. பெரிய ஆளு அவன். அவன் நெனச்சா என்னை கொன்னே போட்டுடுவான்.

உங்கள ஏன் அவர் கொல்லணும்?

ஹ்ம்ம்ம்.. ஒரு பேச்சுக்கு சொன்னேன். அவர் அவ்ளோ பயங்கரமான ஆளு. செல்வாக்கு ஜாஸ்தி. கறாரான பேர்வழி. எனக்கு எங்க ஊர்ல பொழப்பு பாக்கணும்னு ஆச. சரி வரேன்.

அவர் சென்றுவிட்டார்.

முன்பு நான்கு நபர்களோடு தங்கியிருந்த அந்த அறையில் இப்போது நான் மட்டும் தனியாக இருந்தேன்.

ஒரே ஒருமுறைதான் நான் அந்த ஓனரைப் பார்த்திருக்கிறேன். அதுவும் இங்கு வந்து அறையெடுத்து தங்கிய முதல் நாள். நன்றாக இன்னும் மனதில் இருக்கிறது. அடர்த்தியாக மீசை வைத்த முகம். முன்வழுக்கை சற்று அடையாளம் கூட்டியது. உதிர்க்கும் சொற்களைக் கூட கொஞ்சம் அளந்து அளந்து பேசக்கூடிய ஆள். அதற்கு மேல் என்னால் எதுவும் ஊகிக்க இயலவில்லை. ஆனால் என்னைத் தவிர ஆளாளுக்கு அந்த ஓனர் பற்றி கதை சொல்கிறார்கள்.

’இந்த ஏரியாவுல நிறைய பில்டிங்ஸ் அந்த ஆளோடதுதான். பசங்க நாலு பேரு. எல்லாருமே பிஸ்னஸ்னு செட்டில் ஆயிட்டானுங்க. பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது தெரியுமா?’

அந்தாளு பணத்திமிர் பிடிச்சவன். அவங்கூட ரொம்ப நாளு யாரும் காலம் தள்ள முடியாது. இப்பக்கூட அவங்க ஊட்ல ஒரு கல்யாணம் நடந்துச்சு தெரியுமா? எவ்ளோ செலவுனு நினைக்கிற? சொன்னா நம்பமாட்ட. ஷாக்காயிடுவ

ஆம். கண்டிப்பாக எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. யாரென்றே தெரியாத என் பேருக்கெல்லாம் அந்த ஓனர் ஒரு அழைப்பிதழ் வைத்திருந்தார். கெட்டி அட்டை போட்ட அழைப்பிதழ். அந்தப் பக்கம் முழுமையுமே பந்தல் கட்டி மூன்று பேருந்துகள் நிறைய ஆட்கள் வந்திறங்கி கோலாகலமாக நடந்தேறிய திருமணம் அது. இரண்டோ, மூன்றோ நாட்கள் நானும் கல்யாண சாப்பாடு சாப்பிட்டிருந்தேன். சைவமும், அசைவமும் போட்டிபோட்ட விருந்து அது. ஷ்ரவன்தான் வரவில்லை. பாவம் கொடுப்பினை இல்லை என்று  நினைத்துக் கொண்டேன்.

ஷ்ரவன் என்றொருவன் இங்கே தங்கியிருந்தான். அவன்தான் முதலில் இங்கு  என்னைக் கூப்பிட்டான். உடன் நீ தங்கியிருந்தால் நல்லாயிருக்குமென்றான். அப்படித்தான் நான் இங்கே தங்க வந்தேன். அங்கிருந்து என்னுடைய அலுவலகமும் அணுகுகிற தூரத்தில் இருந்ததால் சரியென்றேன்.  எனக்கும், ஷ்ரவனுக்குமான தொடர்பு ஓராண்டுக்கு மேல் நீளும். இருவரும் ஒருவரை ஒருவரை நன்கறிவோம்.   அங்கு தங்கிய சில மாதங்கள் கழிந்ததும் ஒரு சேதி வந்தது. ஷ்ரவனின் அலுவலகத்தை மொத்தமாக இன்னொரு பக்கம் மாற்றிக் கொண்டார்கள். ஆக பணி செய்யும் அலுவலகம் இடம் மாறினால் இவனும் இடம் மாறுவதுதான் வசதி. இல்லாவிட்டால் அலைச்சல் அதிகம். அடுத்த வாரமே இன்னொரு பக்கம் அவனது அலுவலகத்துக்கு நடந்தே செல்லுகிற தூரத்தில் ஒரு அறையை தேடிக்கண்டு வாடகை கட்டி அறை புகுந்துகொண்டான்.

இந்த அறை இப்போது வெறுமையாய் இருக்கிறது.

அப்போது நான்கு பேர் இருந்தார்கள். அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே மனம் விட்டு நன்றாக சிரித்துப் பேசும், ஆட்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையாய் பறந்துவிட்டார்கள். இது இனிமேல் தாங்காது. ஒரு வாரம் முன்பு கூட வசீகரித்த ஓரிடம் இப்போது துளி வசீகரமும் இல்லாமல் வெறுப்பூட்டுகிறது. இரவாகிவிட்டால் அடுத்த நாள் எப்போது வருமென கடிகாரத்தை அடிக்கடி நோக்க வைக்கிறது. இரவெல்லாம் முழு உறக்கம் வராமல் வாட்டுகிறது. வெளியில் சென்று சுற்றவும் தோணவில்லை. கூட ஆளில்லாமல் எங்கு சுற்றுவது? அலுவலக நேரம் ஓய்ந்தால் கவலையாகிறது.  

அந்த வெறுமை நகர நாட்கள் பிடித்தது.  

பேசாமல் ஷ்ரவன் இருக்கும் அறைக்கே மாறினால் தேவலாம் என்று தோன்றியது. தினமும் அலுவலகம் செல்வதில் குறை ஏதும் இல்லை. எல்லாம் ஒரே தூரம்தான் வரும். ஒரு வாரம் தள்ளி நானும் கிளம்ப முடிவெடுத்தேன். முதலில் அறையைப் பார்க்கலாம். பிறகு தங்குவதை உத்தேசிக்கலாம். ஷ்ரவன்தான் சொல்லியிருந்தான்..

கம் பிஃபோர் டூ ஓ க்ளாக் ஆன் கம்மிங் சண்டே. வீ வில் ஹேவ் அ லஞ்ச் டூகெதர். டோண்ட் பீ லேட்.

பிரியாணியா?

சிரித்தபடியே ஷ்ரவன் ஃபோனை வைத்துவிட்டான்.

இதோ அவன் சொன்ன ஞாயிறு. மணி பன்னிரண்டைக் கடந்து நகர்ந்து கொண்டிருந்தது. கிளம்பும் முன் வானத்தைப் பார்த்தேன். நல்ல வெயில்.


கிண்டில் வாசிப்பாளர்கள் தீரா வானம் நூலை 29-01-2022 01:30 pm IST  முதலாக 31-01-2022 12:30 pm IST  வரையாக இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். வாசித்த பின் அதன் தொடர்பில் எனக்கு குறிப்புகள், அனுபவம், விமர்சனம் என எதைச் சொன்னாலும் நான் மகிழ்வேன்.

கிண்டில் மூலம் வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.

https://www.amazon.in/dp/B08T35Y46L

விலையில்லா மின்னூல்

கடந்த ஆண்டின் பொங்கல் விழா நாட்களில் நான் ஒரு மின்னூலை அமேசான் கிண்டிலில் பதிவேற்றியிருந்தேன். தீரா வானம் எனும் அந்த மின்னூல் வெளியாகி ஓராண்டு கடந்திருக்கிறது. நண்பர்களிடமிருந்து மிகச்சில சொற்களே அந்நூல் குறித்து எனக்கு கிடைத்தது. வாசிக்கும் பழக்கம் கொண்ட என் நண்பர்கள் மிகக் குறைவு. அதிலும் கிண்டிலில் வாசிக்கும் பழக்கம் எத்தனை பேருக்கு உண்டு என என்னிடம் தரவுகள் ஏதுமில்லை.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நண்பர்களுக்கு ஏதாவதொரு மின்னூலை அனுப்பி வைப்பதுண்டு. கதையாக இல்லாமல், முழுமையற்ற தொகுப்பாக ஒரு மின்னூலை அனுப்புவதுண்டு. மின்னூல் என்றாலே பிடிஎஃப் தான் என்ற ஆழமான எண்ணம் கொண்ட தோழர்களும் உண்டு.

இம்முறை கிண்டில் வாசிப்பனுபவம் வழியாக என் கதை குறித்து அறிய விரும்பினேன்.    

தீரா வானம் கதை அதை எழுதத் தொடங்கி, பல மாதங்கள் கழித்து வளரத் தொடங்கிய கதை. எழுதும்போதே தனிப்பட்ட முறையில் எனக்கு பல ஆச்சர்யங்களைத் தந்த கதை. சில உரையாடல்கள், நிகழ்வுகளை எழுதி முடித்த சில நாட்களில் அதே போலான நிகழ்வுகளை நேரடியாகக் காண்பதோ, கேள்விப்படுவதோ எனக்கு நிகழ்ந்து கொண்டே இருந்தது.

கதையில் வரும் குமரன் எனும் பாத்திரம் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வமுடையதாக இருப்பான். அதை எழுதிய சில வாரங்களில் நண்பரொருவர் வாட்ஸப் ஸ்டேடஸில் அவரது சைக்கிள் பயணம் குறித்து சில படங்களைப் பகிர்ந்திருந்தார். அதன் தொடர்பில் இன்னொரு ஆச்சர்யம் எனக்கு மட்டுமேயானது.

ஷ்ரவன் எனும் பாத்திரம் குமரனின் தமிழ்ச் சொற்களை வியக்கும் வண்ணம் ஒரு உரையாடல் ஒன்றை எழுதிய பல மாதங்கள் கழித்து நர்சிம் எழுதிய கதையொன்றில் (நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன்) ஏறக்குறைய அதே அளவில் ஒரு உரையாடலை நான் படித்து வியக்க நேர்ந்தது.

இன்னும் இன்னும் சொல்லலாம். உங்களுக்கும் ஏதேனும் ஒரு நிகழ்வு இதே கதைக்குள் பொருந்திப் போகலாம். இக்கதையின் முதல் இரு அத்தியாயங்கள் இங்கேயே அடுத்தடுத்து வெளிவரும்.

கிண்டில் வாசிப்பாளர்கள் தீரா வானம் நூலை 29-01-2022 01:30 pm IST  முதலாக 31-01-2022 12:30 pm IST  வரையாக இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். வாசித்த பின் அதன் தொடர்பில் எனக்கு குறிப்புகள், அனுபவம், விமர்சனம் என எதைச் சொன்னாலும் நான் மகிழ்வேன்.

கிண்டில் மூலம் வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.

https://www.amazon.in/dp/B08T35Y46L

தீரா வானத்தின் கதை -3

1

2

எவ்வளவும் எழுதலாம். சில கதைகள் தீருவதே இல்லை.

முதலிரு அத்தியாயங்களை மனம் போன போக்கில்தான் எழுதத்தொடங்கினேன். கதைக்கான நடை அதுவாக வெளிப்படும்போது மறுபடியும் திருத்திக் கொள்ளலாம் என்பதே திட்டம்.
மூன்றாம் அத்தியாயம் எழுதும்போது ஒரு யோசனை வந்தது. கி.ரா எழுதிய ‘கன்னிமை’ சிறுகதையின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை இதே கதையில் வேறு மாதிரி பயன்படுத்திக் கொண்டேன். எழுத எழுத அந்த முறை மிகவும் எளிதாக்கியது. Narrative முறையில்தான் எப்போதும் கதை சொல்ல எனக்குப் பிடிக்கும். இக்கதையின் நடை ஒரு விதத்தில் சிறப்பாகவே அமைந்து கொண்டது.

அசோகமித்திரன் அவர்களின் கடைசி நேர்காணல் தடம் இதழில் வெளிவந்திருந்தது. அதில் அவர் குறிப்பிட்டிருந்த “Possibilities” எனும் முறை எனக்கு எழுத உதவியாய் இருந்தது. கதை நகர மறுத்த இடங்களில் எல்லாம் அதன்மேல் கேள்விகளை எழுப்பி எழுப்பி அதன் விடைகள் கதை வளர உதவின.

எவ்வளவு எழுதியபோதும் ஒவ்வொரு அத்தியாயமும் A4 அளவில் 3 பக்கங்கள் வரை மட்டுமே பெரும்பாலும் வந்தது. கதைக்குள் வருணணைகளை முடிந்தமட்டும் தவிர்த்தேன். அதனால் ஒரு கட்டத்தில் 100 பக்கங்களில் நாவல் எனும் எண்ணம் அதுவாகவே மறைந்தது.

Google docs தன்னாலான எல்லா சிக்கல்களையும் எனக்களித்தது. அதன் ஒரே பயன் எழுதிய வரை சேமித்து வைத்துக்கொண்டது மட்டும்தான். பொதுவாக அருகில் யாருமில்லா சூழல்களில் மட்டுமே நான் எழுத நினைப்பவன். ஆகவே அதுவும் எழுதும் வேகத்தை கணிசமாக குறைத்தது.

கதை மாந்தர் பெயர்கள் ஒவ்வொன்றும் மிக கவனமாக வைத்தேன். அதன் வாயிலாக சில தோழர்களின் குணங்களும் அந்தந்த பாத்திரங்களுக்கு வலு சேர்த்தன. 2015 காலகட்டத்தில் எழுதி வைத்த சில பத்திகளும் இக்கதையில் அப்படியே பொருந்திக் கொண்டன. கதையின் ஒரு அத்தியாயம் நான் எழுத நினைத்த விதத்தில் எழுத வரவேயில்லை. வேறு யாரிடமும் உதவி கேட்க தோணாமல் எழுதுவதை நிறுத்தி வைத்தேன்.

அட்டைப்படம் 2018-ம் ஆண்டிலேயே தயாராகிவிட்டது. ஆனாலும் 2020 ஊரடங்கு காலத்தில்தான் தினம் ஒரு அத்தியாயமாக எழுதி முடிக்க இயன்றது.

அமேசான் மின்னூல்கள் 3 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் விற்ற காலத்தில் இக்கதை வெளியாகி இருந்தால் நிறைய பேர் வாங்கியிருக்கக் கூடும். இப்போதைய குறைந்தபட்ச விலை நிறைய பேரை பயமுறுத்துவதை நன்கு உணர முடிகிறது.

இனி எழுத நினைக்கும் கதைகளை விரைவாக எழுதவேண்டும். எழுத நினைக்கையில் கைவசம் பேனாவும், காகிதமும் இருப்பது மிகவும் நல்லது. இது தான் இப்போது தோன்றுகிறது.

– அவ்வளவே.

தீரா வானம் – தமிழ்

என்னுடைய முதல் அமேசான் கிண்டில் மின்னூல் வெளியாகி இருக்கிறது.
குறுநாவல் வடிவிலான கதை இது.

கிண்டில் மூலம் வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.

https://www.amazon.in/dp/B08T35Y46L/ref=cm_sw_r_wa_apa_MkvaGbPCMXHJE

தீராக் கனா – வாசிக்க

https://thamizhg.wordpress.com/2018/03/13/theer/

தீரா வானத்தின் கதை -2

எவ்வளவும் எழுதலாம். சில கதைகள் தீருவதே இல்லை.

தீராக் கனா கதை யோசித்த காலத்திலேயே நிறைய கதாபாத்திரங்கள் வைத்து எழுதும் யோசனை இருந்தது. அந்த கதைக்கு அது அவசியமற்றது என புரிந்ததுமே இரண்டே பாத்திரங்கள் கொண்டு சிறியதாக எழுதி முடித்தேன்.

தீரா வானம் தொடங்கியபோதே அதை பெரிதாக எழுதிப் பார்க்கும் எண்ணம் இருந்தது. நிறைய கதை மாந்தர்களை இக்கதை தாங்கும் என தோன்றியது. நாவல்களில் கதை மாந்தர்களை பயன்படுத்தும் விதம் பற்றி சற்றே படித்தேன். கி.ரா எழுதிய முன்னுரை ஒன்று நல்ல யோசனைகளுக்கு அடிகோலியது.

ஒரு கதையின் துவக்கமும், தொடர்ச்சியும் மகிழ்ச்சியாக இருந்தால் அக்கதையின் முடிவு அதற்கு நேர்மாறாக இருக்கும் என்ற காரணத்தால் கதை இயல்பாகத் துவங்கி நடக்க வேண்டும் என தீர்மானித்துக் கொண்டேன். முதலில் நிறைய நகைச்சுவையான உரையாடல்களை யோசித்து வைத்திருந்தேன். பல உரையாடல்கள் முற்றுப்பெறாமலே போயின.

முதல் அத்தியாயம் முடித்து இரண்டாம் அத்தியாயம் எழுதும்போது தோழர் ஒருவர் சொன்னார்.

MS வேர்ட்-ல எழுதாதப்பா… லேப்டாப் எப்ப வேணா காலி ஆகிடும். ஆன்லைன்ல Copy வச்சுக்கோ.

நல்ல யோசனை. offline – online – offline என பயன்படுத்த எது உதவும்?

Google keep – கதை எழுத தோதானது அல்ல.

எனக்கு அப்போது தெரிந்த ஒரே இடம் Google docs. 25 அத்தியாயங்கள். ஒரு அத்தியாயம் 4 பக்கங்கள். 100 பக்கங்களில் ஒரு நாவல்.

யோசனை சிறப்பாகவே இருந்தது.

-இன்னும் எழுதுவேன்.

தீரா வானம் – தமிழ்

என்னுடைய முதல் அமேசான் கிண்டில் மின்னூல் வெளியாகி இருக்கிறது.
குறுநாவல் வடிவிலான கதை இது.

கிண்டில் மூலம் வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.

https://www.amazon.in/dp/B08T35Y46L/ref=cm_sw_r_wa_apa_MkvaGbPCMXHJE

தீராக் கனா – வாசிக்க

https://thamizhg.wordpress.com/2018/03/13/theer/

தீரா வானத்தின் கதை

எவ்வளவும் எழுதலாம். சில கதைகள் தீருவதே இல்லை.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் சில பத்திகள், சில உரையாடல்கள் மட்டும் எழுதி தீரா வான் என்று தலைப்பு யோசித்தேன். அதற்கு சில வாரங்கள் முன்பு தீராக் கனா எனும் நீள்கதை ஒன்றை எழுதி முடித்திருந்தேன். அம்மின்னூல் 2018 பிப்ரவரியில் வெளியானது.

இனி எழுதும் கதை குறைந்தது 100 பக்கங்கள் இருக்க வேண்டும். அதற்கேற்ற கதையொன்று யோசிப்போம் என்று முடிவு செய்து கொண்டேன். அப்போதைய மனநிலை அப்படி. அதே காலத்தில் படித்த 18-வது அட்சக்கோடு, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் முதலான கதைகள் உண்டாக்கிய பிரமிப்புகள் ஏராளம்.

கதை மாந்தர் பெயர்கள் யாவும் தமிழில் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆங்கில உரையாடல்கள் தவிர்ப்பது/தமிழில் ஆங்கிலத்தை கலக்காமல் எழுதுவது என்பதும் என் விருப்பம். இவ்விரண்டையும் முற்றிலும் ஒதுக்கி வைத்து எழுதலாம் என்று கதையாக சில வரிகள் தோன்றியதும் முடிவெடுத்தேன்.

ஒரு பெரு நகரம். அதில் வாழ முற்படும் சில இளைஞர்கள். அவர்களின் இயல்பான அன்றாட வாழ்வை எழுத முற்படலாம் என்பது அப்போதைய எண்ணம்.

ஒரு நாயை மையப்படுத்தி ஒரு சிறுகதை எழுத வேண்டுமென்று 2015-ல் முடிவு செய்திருந்தேன். அதையும் இக்கதைக்குள் கொண்டு வருவது எளிதாக இருந்தது.

குமார் எனுமாறு பெயர் கொண்ட கதை மாந்தர்களை உன் கதையில் எழுது. நீ வைக்கும் பெயர்கள் இயல்பாக இல்லை என எனக்கு நெருக்கமான ஒருவர் முன்னர் சொன்னது நெஞ்சில் பதிந்திருந்தது.

ஒருவன் குமரன். இன்னொருவன் ஷ்ரவன். இரு கதை மாந்தர்கள். இனி கதை தொடருவதுதான் முறை என முடிவெடுத்தேன்.

– இன்னும் எழுதலாம்.


என்னுடைய முதல் அமேசான் கிண்டில் மின்னூல் வெளியாகி இருக்கிறது.
குறுநாவல் வடிவிலான கதை இது.

கிண்டில் மூலம் வாசிக்கும் பழக்கம் உள்ள நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.

https://www.amazon.in/dp/B08T35Y46L/ref=cm_sw_r_wa_apa_MkvaGbPCMXHJE

தீரா வானம்
தீரா வானம் – தமிழ்

உருப்படியாய் எழுதுவது

இவ்வருடம் தொடங்கியதில் இருந்தே அதிகம் அழைப்புகள் வருகின்றன. என்ன காரணமாய் இருக்குமெனத் தெரியவில்லை. ஆனாலும் இது நல்லதுதான். நம்மை விசாரிக்கச் சிலர் இருக்கிறார்கள். நமக்கு ஆறுதலாய் சிலர் இருக்கிறார்கள். நம் மேல் அக்கறையாய் சிலர் இருக்கிறார்கள்.

கொரோனா காலம் முழுக்கவே நிறைய நேரம் கைவசமிருந்தது. ஆனால் உருப்படியாய் செய்த விஷயங்கள் குறைவுதான். புதிதாய் கற்றுக்கொண்டதும் குறைவுதான். ஆனாலும் ஏதோ சில விஷயங்கள் சாதகமாய் அமைந்தன.

வேறென்ன படிக்கிற? புதுசா எதுவும் எழுதுறியா? இவ்விரண்டுக் கேள்விகளும் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தருணங்களில் இரு கைகளும் போதாமல் எண்ணிச் சொல்லுமளவு கேட்கப்பட்டது. அதற்கான பதில்களில் ஒன்று இவ்வாண்டின் துவக்கத்தில் இறுதியானது.

புதிய கதை எழுதியாயிற்று. விரைவில் வெளிவரும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே புள்ளிக்கு நண்பரொருவர் வருகிறார். நீ தினமும் எழுதினால் என்ன?

கண்டிப்பாக முன்பைப் போல அப்படி என்னால் எழுத முடியாது என்பது அவருக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியும். ஆனாலும் தினமும் படி. எழுத முயன்று பார் என்று கட்டளையாய் சொன்னார். இரு நாட்களுக்குப் பின் மீண்டுமொருமுறை அலைபேசியில் வந்து சொன்னதும் பகீரென்றிருந்தது.

‘ஒரு மனுஷன் உனக்காக உன் நல்லதுக்காக ஒரு விஷயம் சொன்னா, அதை செய்யவே மாட்டியா?’ இதே டோனில் காதில் வந்து ஒலித்தது. கடந்த பத்தாண்டுகளில் இதுபோல நிறைய பேரின் அக்கறையை நான் பெற்றிருக்கிறேன்.

தினமும் எழுதுவது நல்ல பயிற்சி. ஆனாலும் உருப்படியாய் எழுதுவதுதான் முறை. கதை மாதிரி எதையாவது எழுதினால் எனக்கே பிடிக்கவில்லை. சமீபத்தில் ஒரு தோழர் என்னிடம் கேட்டு தீராக் கனா PDF வாங்கிக் கொண்டுபோனார் ஒரே இரவில் படித்துவிட்டு (38 பக்கங்கள் படிக்க அரை மணியே அதிகமன்றோ!) மறுநாளில் சில நிமிடங்கள் மனம் திறந்து பாராட்டினார். வழக்கமான கதை மாதிரி இல்லை. இன்னும் நல்லா எழுது என்றார்.

நல்ல மடிகணினி ஒன்று தேவை. இப்போது இருப்பது நன்றாகவே ஒத்துழைக்கிறது என்றபோதிலும் அதன் இறுதிக்காலத்தை எட்டிவிட்டதை உணர முடிகிறது.  நான் இந்த மடிகணினியை வாங்கிய அதே காலகட்டத்தில் வாங்கிய தோழர் ஒருவரின் மடிகணினியை ஒன்றரை ஆண்டுகள் முன்பு பார்த்தேன். புதிது இன்னும் புதிதாகவே இருந்ததைப் போலவே ஓர் எண்ணம். இத்தனைக்கும் அவர் என்னைப் போல பல மாதங்கள் மடிகணினியைத் தொடாமல் விடுபவர் அல்ல. ஒருவேளை தினமும் துடைப்பவராக இருக்கலாம். அது என் கதையில் இல்லை. புதிய மடிகணினிகள் கடந்த ஆண்டின் மத்தியில் திடீர் திடீரென ஆன்லைன் ஸ்டோர்களிலும், அருகாமை கடைகளிலும் மாயமாகின. சாதாரண (கணினி) டேப்லெட்களும் வாங்க வாய்ப்பே இல்லை. ஆகஸ்ட்டிலோ, செப்டம்பரிலோ ஒரு மடிகணினியை சரியான பட்ஜெட்டில் கண்டேன். அப்போது வாங்க இயலவில்லை. இப்போது மனம் மாறி Ryzen Processor-கள் பக்கம் தலை திருப்பியிருக்கிறேன். நல்ல மாடலும், கையில் பணமும் தங்கினால் புதியது இனி நம் வசம்.

புதிய கதை நாவலாக எழுத திட்டமிடப்பட்டது. எழுதும் வேகம் குறையக் குறைய அதன் நீளத்தைக் குறைத்து வைத்தாயிற்று. ஆக அது குறுநாவலாக வரக்கூடும். அதன் பின்கதைகள் ஏராளம் உண்டு. அதில் சிலவற்றை மின்னூல் வெளியான பின்னர் இனி தொடர்ந்து எழுதுவேன்.

ஏன் சிக்னலுக்கு வர வேண்டும்? இந்தக் கேள்வியை சிலர் கேட்டிருந்தனர். இப்போதைக்கு ஒரே பதில்தான். எதுவா இருந்தாலும் பிப்ரவரி எட்டாம் தேதிக்குப் பிறகு நான் சொல்றேன் சார். இளவலும் சிக்னலில் இருப்பதைக் கண்டதும் அவனை அழைத்தால், நான் மூணு வருஷமா இங்க இருக்கேன்.. நீயெல்லாம் என்ன Open Source பத்தி படிக்கிற? என்று துவங்கிவிட்டான்.

என் கவலையெல்லாம் இரண்டே இரண்டுதான். நான் பெரும்பாலும் வாட்ஸப்பில் உலவுகிற நேரம் குறைவு. புழங்குகிற ஆட்கள் அதிலும் குறைவு. அந்த நபர்களில் பெரும்பாலானோர் வந்துவிட்டால் ஒரு கதை தீரும். மற்றொன்று ரொம்ப முக்கியம்.

பல மாதங்கள் யோசனைகளும், பிரயத்தனங்களும் போட்டிபோட்டு உருவாக்கிய கல்லூரித் தோழர்கள் குழு ஒன்றை இப்போது என்ன செய்வது என்பதுதான் பெரிய கதை.

எவ்வளவும் எழுதலாம். சில கதைகள் தீருவதே இல்லை.

புனைவு என்னும் புதிர்

முன் குறிப்புகள்:

இந்த ஆண்டு புத்தக காட்சியில் வாங்கிய நூல்களுள் ஒன்று புனைவு என்னும் புதிர். நல்ல அட்டைப்படம். போதாக்குறைக்கு சுற்றிலும் பாலித்தீனால் மூடப்பட்ட புத்தகம். ஆகவே இன்னும் பிரிக்கவே இல்லை!

தொகுப்பாசிரியர் அமேசான் கிண்டில் பதிப்பை இலவசமாக தந்த சமயம் தரவிறக்கினேன். ஒரு வகையில் இது நான் முழுமையாகப் படித்த முதல் கிண்டில் நூல். கிண்டில் அனுபவங்கள் பற்றி இன்னொரு பதிவில் இயன்றால் சொல்கிறேன்.

**

2016-ல் புனைவு என்னும் புதிர் நாளிதழில் வந்த தருணத்தில் நான் சில வாரங்கள் கணினியில் படித்தேன். மூன்று கதைகள் மட்டுமே படித்தேன். நன்றாக நினைவிருக்கிறது. கி.ரா. – மின்னல், கு.ப.ரா – சிறிது வெளிச்சம், அசோகமித்திரன் – விரிந்த வயல்வெளிகளுக்கப்பால்.

வேறு கதைகளைப் படிக்கவோ, கட்டுரைகளைக் கூர்ந்து வாசிக்கவோ அப்போது காலம் அமையவில்லை. ஆகவே புத்தகம் வெளியானபோதே வாங்க வேண்டிய உத்தேசப் பட்டியலில் குறித்துக் கொண்டேன்.

பணி நேரம் தாண்டி புத்தகம் வாசிக்க முற்பட்டால், அதிலும் ஏதாவது தடை விழுந்துகொண்டே இருந்தது. ஆக, தினமும் படிக்கக் கிடைத்த சிறுசிறு இடைவெளிகளைப் பயன்படுத்த ’கிண்டில் ஃபார் ஆன்ட்ராய்ட்’ உதவியது.

முதல் கதை சிறிய கதை. வண்ண நிலவன் எழுதிய ‘மிருகம்’. கதை முதல் வாசிப்பில் வெறுமையாகத்தான் இருந்தது. அதற்கான விளக்கம் படித்ததும் அடுத்தடுத்த கதைகளை இன்னும் கூர்மையாக கவனித்துப் படிக்க வேண்டுமென தோன்றியது.

ஜி.நாகராஜனின் கதைத் தலைப்பு பல முறை பல பேர் குறிப்பிட்ட தலைப்பு. மிக கவனமாகப் படித்ததில் ஒரு நிறைவு. அதே மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு கதை எனும் வேகத்தில் (?) படித்தேன். நாள் முழுக்க அசைபோட அதுதான் வசதியாகவும் இருந்தது.

மின்னல் கதையை பலமுறை நானே படித்துவியந்திருக்கிறேன். எந்தப்புள்ளியில் ஒரு சாதாரணக் கதை இலக்கியமாகிறது என விளக்கும் நுட்பம் அருமை. தி.ஜானகிராமனின் (சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்) கதை அத்தனை பெரிதாக, அத்தனை விவரணைகளோடு இருப்பினும் ஏன் அது சிறப்பான கதையாகிறது ? கி. ராஜநாராயணன் கதை பெரும்பாலும் ஒரே சூழலின் வருணனைகளும், உரையாடல்களுமாய் இருப்பினும் அது ஏன் சிறப்பான கதையாகிறது ?

சுந்தர ராமசாமியின் கதை (பள்ளம்) வெவ்வேறு புள்ளிகளாக கதையை நீட்டித்து கோர்த்த விதம் அருமையானது. இத்தொகுப்பில் மௌனியின் கதை (மாறாட்டம்) இருப்பதிலேயே எனக்கு ஆச்சர்யமூட்டிய கதை. முதல் வாசிப்பில் எனக்கு முழுமையாக விளங்காமல் மீண்டுமொருமுறை சில பத்திகளை வாசித்து விளங்கிக் கொள்ள இயன்றது.

ஷோபாசக்தியின் கதை (வெள்ளிக்கிழமை) அதன் நிகழிடம், அது சொல்லப்பட்ட தொனி, அதன் முடிவை நிறுத்திய விதமென முழுமையாக ஈர்த்தது.

எல்லா கதைகளும் அதனதன் அளவில் சிறப்பான கதைகள்தாம். ஒவ்வொரு ஆசிரியர் பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னால் கட்டுரையின் நீளம்தான் அதிகரிக்கும். அதை தவிர்க்கிறேன். இறுதியில் கதைகளின் தலைப்புகளை குறிப்பிடுகிறேன்.

தொகுப்பிலுள்ள கதைகளின் தேர்வு கண்டிப்பாக வாசிப்போரை ஈர்க்கும். கிண்டில் பதிப்பின் புதிய அட்டை இன்னும் அழகு!

எப்போது அச்சு வடிவில் கிடைக்குமென தெரியவில்லை.

பல பேர் சொன்ன அதே மதிப்புரைதான்.

இந்நூல் துவக்க நிலை வாசகர்களுக்கு எளிமையாக தமிழ்ச்சிறுகதைகளின் வெவ்வேறு நுட்பங்களை, வெவ்வேறு காலச்சூழல்களிடையே நிகழும் கதைவெளிகளை அறிமுகம் செய்கிறது.

மதிப்பான நூல். தவற விட வேண்டாம்!

**

தொகுப்பின் கதைகள்

  • மிருகம் – வண்ண நிலவன்.
  • டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி. நாகராஜன்.
  • சிறிது வெளிச்சம் – கு.ப.ரா
  • முருங்கை மர மோகினி – கு. அழகிரிசாமி
  • மாறாட்டம் – மௌனி
  • மின்னல் – கி. ராஜநாராயணன்
  • விரிந்த வயல்வெளிக்கப்பால் – அசோகமித்திரன்
  • நிலை – பூமணி
  • பள்ளம் – சுந்தர ராமசாமி
  • வெள்ளிக்கிழமை – ஷோபாசக்தி
  • சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் – தி. ஜானகிராமன்
  • உபதேசம் – புதுமைப்பித்தன்

தொகுத்தவர் – விமலாதித்த மாமல்லன்.

பின் குறிப்புகள்:

ஷோபாசக்தியின் கதைகளுக்கென தனியாக ஒரு தொகுப்பு வருமென மாமல்லன் முன்னர் சொல்லியிருந்தார். அது வருமுன் ஷோபா சக்தியின் கதைகளை படித்துவிட வேண்டுமென விரும்புகிறேன்.

நீங்களும் படிப்பீர்களென நம்புகிறேன்.

குட்டி இளவரசன் நூலைப் படித்து முடித்து எழுதவே எண்ணம் இருந்தது. அதை முழுமையாகப் படிக்கும் முன்னர் தோழர் ஒருவர் கைக்குச் சென்றுவிட்டது. அந்நூல் குறித்து கண்டிப்பாக சம்பிரதாயமில்லாமல் எழுதுவேன். கடைசியாக சில ஆண்டுகள் முன்பு தாய் நாவல் குறித்து ’புத்தக நாளில்’ எழுதினேன். இப்போதுதான் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

புத்தக நாள் வாழ்த்துகள்.

தீராத நினைவு

மூன்று – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளத்தில் நான் எழுதி வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அதே காலகட்டத்தில்தான் நான் முன்னெப்போதையும் விட அதிகமாக எழுதத் துவங்கினேன். நிறைய தோழர்கள் வாசித்தார்கள். அவர்களுக்காகவே எழுதி எழுதி, அதெல்லாம் ஓய்ந்த தருணத்தில் நானும் எழுதுவதையே குறைத்துக் கொண்டேன். அப்படி குறைத்துக் கொண்ட தருணத்தில் எழுதியதுதான் இந்த கதை.

எட்டு பக்க அளவில் தலைப்பே இல்லாத கதையைப் படித்த யாருக்குமே அதில் விருப்பமில்லை. ஆளாளுக்கு குறை சொன்னார்கள். முதலில் எழுதிய கதையில் அத்தியாயமே கிடையாது.
ஏறக்குறைய ஓராண்டு காலம் அந்த கதையையே நான் தொடவில்லை. அதன் பின் எழுதிய இரண்டு அல்லது  மூன்று சிறிய கதைகளையும் நான் பதிவிடவில்லை. நெல்லிமரம் எனும் கதை மட்டும் இங்கே பகிர்ந்தேன்.
கிடைத்த சொற்பமான நேரங்களில் கொஞ்சம் வாசித்தேன். மீண்டும் இக்கதையை அத்தியாயம் பிரிக்குமளவு கொஞ்சம் விவரித்து எழுதினேன். எழுத எழுதத்தான் கதையின் மையம் எனக்கே விளங்கியது. ஆக, முன்னர் எழுதியது வீண் என அப்போதுதான் புரிந்தது. தோழர்களுக்கு நன்றி.
க்ளைமாக்ஸ் இல்லாத கதையைப் படித்து முடித்ததும் என் நண்பன் அர்ஜூன் முதலில் கேட்டது – தலைப்பு எங்க?
அப்புறம்தான் தலைப்பு யோசித்தோம். எனக்கு இந்த தலைப்பு  (தீரா கனா) சரியாக இருக்குமெனத் தோன்றியது. அப்புறம் இலக்கணமாய் யோசித்து ’க்’ சேர்த்துக் கொண்டோம்!
நிறைய திருத்தங்களை அர்ஜூன் சொன்னான். அத்தியாய எண் ஒவ்வொன்றிற்கும் # வை என்றான். ஏன் இப்போதெல்லாம் மேற்கோள் குறிகளுக்குள் உரையாடல்கள் எழுதுவதே இல்லை என்று கேட்டான். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருக்கு என்றான்.
அவன் மகிழ்ந்து சொன்னான் என்பதாலேயே உடனே ஒவ்வொரு அத்தியாயமாக இதே தளத்தில் பதிவிட்டேன்.
அவன் இதை மின்னூலாக்கினால் நன்றாக இருக்குமென்றான். கண்டிப்பாக செய்யலாம் என நானும் சொன்னேன்.
கடந்த ஆண்டு  இவ்வுலக வாழ்விலிருந்து உதிர்ந்துவிட்டான்.
இன்றைக்கு இந்த நூலைப் படிக்க அவனில்லை என்பதே பெரும் வலிதான். ஆனாலும் நான் எழுதுவதைப் படித்து, தட்டிக்கொடுத்தவன் அவன். என்னைக் காட்டிலும் என்னை நம்புகிற தோழர்கள் என்னைச் சுற்றி எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவன் அர்ஜூன். இந்நேரம் அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். குறைந்தபட்சம் ஏண்டா க்ளைமாக்ஸை இப்படி எழுதியிருக்கிறாய்? என்று திட்டியேனும் எழுதியிருப்பான்.
அவனுக்காக சமர்பிக்கும் அளவு இந்நூல் உசத்தி இல்லை. நியாயமாக நான் எழுத நினைக்கும் ஒவ்வொரு நூலும் அவனுக்கானதும் கூட .
கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டு அட்டைப்படம் தந்த நண்பன் அருணுக்கு நன்றி. சந்தித்த நாள் முதலாக நான் கேட்காமலேயே எனக்கு உதவும் தோழர் அரவிந்த்-க்கு வெறும் நன்றிகள் போதாது.
Miss You Arjun.