தீராக் கனா-05

#05

ரவாகி விட்டது. நேரம் ஓடியதே தெரியவில்லை. உறக்கம் வந்த மாதிரியே உணர்வில்லை. அறையை விட்டு வெளியேறி நடந்தேன். அந்த நிசப்தம் ஒரு வகையில் பிடித்திருந்தது. ஆனால் என் பாத ஒலிகள் எனக்கே சங்கடமாய் இருந்தன. அந்த நிசப்தத்தில் என் காரணமாய் ஏற்பட்ட அதிர்வுகள் தனியே ஒலித்தன. என்னால் மற்றவர்கள் உறக்கம் பாதிக்கப்படக் கூடாதென மீண்டும் அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தேன். அலைபேசியில் பாட்டு கேட்க முடிவெடுத்து இசை என் காதுக்குள் மட்டும் மெலிதாக ஒலிக்கத் தொடங்கியது.

மணி மூன்று – நான்கு என ஓடத் தொடங்கியது. வானம் எவ்வித மாறுதலும் இன்றி கருமை பூசிக் கிடந்தது. எங்கோ இருந்து சோடியம் விளக்குகளின் ஒளிவெள்ளம் மெலிதாக உணர முடிந்தது.

புரண்டு புரண்டு படுத்தும் ஒரு மணி நேரம் கூட முழுமையாக உறங்கியதாகத் தோன்றவில்லை. ஆனாலும் அவ்வப்போது விழி உறங்கியது. ஆனாலும் விழிப்பு மிச்சமிருந்தது. ஏதாவதொரு கணம் சட்டென்று எழுந்து கொள்வது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது. போர்வையால் உடலைச் சுற்றிக்கொண்டு எழுந்து சன்னலைப் பார்த்தபடி கட்டிலில் அமர்ந்தேன்.

சன்னல் வழி நோக்கினால் மேகத்தை காற்று நகர்த்துவது ஸ்லோ மோஷன் GIF காட்சி போல கண்களில் விழுகிறது. மணி ஐந்தைக் கடந்ததும், சாலைக்கு வந்துவிட்டேன். மெல்லியதாக வானத்து நிறம் மாறத் தொடங்கியது. அருகிலிருந்த சிமெண்டு திட்டு மேல் அமர்ந்து வேறு வேலையே தோன்றாமல், வானத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தேன்.

வானத்தின் நிறமாற்றத்தில் சிந்தனை லயித்திருந்தது. மனம் கொஞ்சம் ஆறுதலானது. மீண்டும் ஒருமுறை உள்ளுக்குள் புத்துணர்ச்சி பரவியது. ஆனாலும் உடல் கொஞ்சம் வலியெடுப்பது போல இருந்தது. விடியலில் அறையிலிருந்து வெளியே சென்று வர எண்ணம் வந்தது.

சாலை பரபரப்பு ஏதுமின்றிக் காணப்பட்டது. குளிர்காற்று அவ்வப்போது தொட்டுச் சென்றது. அத்தனை குளிரில்லை என்றாலும் அந்த நேரம் அங்கனம் நடப்பது பரம சுகமாய் இருந்தது.

விடியலில் எழுவதே ஒரு சுகானுபவம். அனுபவிக்கையில் அது போலொரு இன்பம் வேறேதும் அமையாது. சோம்பலும், அலட்சியமும்தான் அந்த அனுபவத்தைப் பெற முடியாமல் எத்தனையோ நாட்களைக் கழித்து விடுகிறது. சாலையின் பரபரப்பின்மை ஒரு விதத்தில் ஆறுதல் என்றாலும் இன்னொரு பக்கம் புன்னகைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் விடியலில் எழுந்தால், உலகமே சோம்பேறியாகி விட்டதாகப் படுவதேன்?

வீதி மிகவும் அமைதியாக இருந்தது. ஆங்காங்கே சின்னச் சின்னதாய் சப்தங்கள். அதெல்லாம் பெரிதாகப் படவே இல்லை. தெருநாய்கள் கூட சுருண்டு படுத்திருந்தன. வீதியின் அமைதிக்கு நிகராக அழுக்கும் இருந்தது. கண்களை எல்லாப் பக்கங்களிலும் சுழல விட்டேன்.

யாரோ ஒரு முகம் காட்டாத மாடி வீட்டுப் பெண், மாடியிலிருந்தபடியே படிக்கட்டுகளில் நீரூற்றிக் கொண்டிருந்தாள். அது வழிந்து வழிந்து மாடிப்படிகளையெல்லாம் நனைத்தபின் மீதம் வாசலுக்கும், அதையும் மிஞ்சியது சாலையிலும் வழிந்தோடத் தொடங்கியது.

வாசல் தெளிக்கும் கலாச்சாரம் எங்கிருந்து தொடங்கியது? அதெல்லாம் தமிழ்நாட்டுக்கே மாத்திரம் உரிய ஒன்று என்றல்லவா நினைத்திருந்தேன்.

ஒரு சிற்றங்காடிக்குப் போனேன். அந்த நேரத்திலும் வியாபாரம் சற்று பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. தேநீர் கேட்டேன். ஒற்றை ப்ளாஸ்க்கில் ஏற்கனவே ஊற்றி வைத்த தேநீர். அதிகாலை என்பதால் சூடு குறையாமல் இருந்தது.

அந்த நேரத்தில் வீசிய கூதிர் காற்றுக்கு இதமாக ஒவ்வொரு தேநீர் துளியும் தொண்டைக்குள் இறங்கும் வரை சூடேற்றிக் கொண்டே இருந்தது. அத்தனை காலையிலும் கொஞ்சமும் குறைவின்றி புகையிலைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருந்தது.

எனக்கு நேரம் மெல்ல ஊர்வது போலிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் நடக்க எண்ணம் வந்தது. உடல் மொத்தமும் இல்லாவிட்டாலும், முகம் முழுக்க குளிர்ச்சி ஏறியிருந்தது. கையால் தொட்டு உணர்கையில் அத்தனை ஜில்லிப்பு.

இன்னும் சாலை தூய்மை செய்யப்படவில்லை. இரவின் அழுக்கு மிச்சமிருந்தது. அப்படியே இன்னும் கொஞ்சம் தொலைவு நடந்ததும், இன்னொரு சிற்றங்காடி வந்தது. நாளிதழ் வாங்க விரும்பிப் போனேன்.

குறிப்பிட்ட நாளிதழ் வர நேரமாகும் என்றார். நான் அமைதியாக நின்றிருந்தேன். யாரோ ஒரு அம்மணி வந்து விஜயவாணி நாளிதழ் வாங்கினார். ஆமாம். கன்னட நாளிதழ்களெல்லாம் எத்தனை பிரதிகள் தினசரி விற்கிறது?

காத்திருந்து நாளிதழை வாங்கி வந்தேன். நிதானமாக அறைக்கு வந்து படித்து முடிக்கையில் மணி ஏழு. யாருமே நம்ப மாட்டார்கள். ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் நடந்தது அதுதான்.

சடாரென தூங்க முனைந்தேன். நானி இன்னும் விழிக்கவே இல்லை. அடுத்து என்ன? என்கிற நினைப்பே இல்லை. இப்போதைக்கு உறக்கம். அவ்வளவுதான். இரவெல்லாம் உறங்காமல் இருந்ததன் பொருட்டு உறக்கம் வருகிறது என்று சொன்னால் ஒரு நம்பகத்தன்மை வரும். ஆனால் அதிகாலையில் நான் குடித்த தேநீருக்கு என்ன மாதிரியான எதிர்வினை இது?

நன்றாக தூங்க வாய்ப்பது ஒருவனுக்கு கிடைப்பதற்கரிய வரமாம். எனக்கு இங்கே சாபமாகிறது.

Advertisements

தீராக் கனா -04

#04

நிதானமாக நடந்து வந்து ஒரு பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன். வெயில் உச்சியில் நின்ற மாதிரி இருந்தது. மணி இரண்டை நெருங்கியது. ரொம்ப சொற்பமானவர்களே அங்கு நின்றிருந்தார்கள். நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன். காற்று அவ்வப்போது வந்து தழுவியது. வியர்வை மேல் பட்ட காற்று கொஞ்சம் குளிர்ச்சி தந்தது. ஆனாலும் நா வறண்டதை உணர்ந்தேன். கைவசம் கொஞ்சம் தண்ணீர் இருந்தது.

ஒன்றிரண்டு சிவப்பு நிற ஏசி பேருந்துகள் வந்தன. அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாக இருக்கும்தான். ஆனால் டிக்கெட் விலை அசரடிக்குமே! நான் இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்தேன்.

முழுவதும் காலியாக ஒரு பேருந்து வந்தது. மெஜெஸ்டிக் போகுமென்றார். ஐயா! எனக்கு நான் இறங்க வேண்டிய இடம் வரை வண்டி போனால் போதுமே.

அமர இடம் வாய்த்தது. கால்கள் கொஞ்சம் இளைப்பாறின. ஒற்றை ஆங்கிலச் சொற்களை வைத்தே பேருந்துகளில் பயணிப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. நடத்துநர் கேட்கையில், பேருந்து நிறுத்தத்தின் பெயரை மட்டும் சொல்லினால் டிக்கெட் கிடைக்கும். எப்போதாவது நடத்துநரிடம் வழி கேட்கையில்தான் சிக்கல் வரக்கூடும். அதிலும் கூட அரிதாக ஏதேனும் ஒரு நடத்துநர் க்யா பாஷ மாத்தாட? என்பார். தமிழ் என்று சொல்லி மொழிபெயர்ப்பு கேட்கும் வாய்ப்பு பெறுவேன்.

அறைக்கு வந்து சேர்ந்த பின் உண்ணத் தோன்றியது. மணி மூன்றானாலும், நான்கு ஆனாலும் சாப்பாடு சில வேளைகளில் மிச்சமிருக்கும். இல்லையென்றால் வெளியே சென்று வேறு கடைகளில் சாப்பிட்டாலும் தேவலாம் என்கிற அளவில் கொடூரமாக வயிறு கத்தியிருந்தது. காலையிலும் சாப்பிடவில்லை. உடல் சோர்வாக இருந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தின்ன வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி என் வாழ்நாளில் ஒருபோதும் உண்டதாக எனக்கு நினைவே இல்லை.

எதிர்பார்த்தபடியே உணவு இருந்தது. தொட்டுக்கொள்ளத்தான் ஏதுமில்லை. ஆனாலும் தேவையான அளவை எடுத்து உண்டு முடித்தவுடன் சற்று நேரத்தில் உறங்க முடிவெடுத்தேன்.

கொஞ்சமாய் அழுத்திய சோர்வின் பலன் மதிய உறக்கம். உறங்க எத்தனிக்கையில் நானி கேட்டான்.

‘ஏமாயிந்தி?’

‘வெயிட்டிங் ஃபார் தி ரிசல்ட்.’

போர்வையைக் கொண்டு மூடிக்கொண்டேன். கொஞ்சமாய் இருள் சூழ்ந்த மாதிரி தோற்றம். தூங்குவதற்கு அதுதான் கொஞ்சம் வசதி.

அசதியாகவே எழுந்தாலும் களைப்பை மீறி ஒரு உற்சாகம் எனக்குள் தெரிந்தது. கனவே வரவில்லை. ஆம். முழுமையாக உறங்கியது போலவே தோன்றியது.

இப்போதைய மனநிலைக்கு ஒரு தேநீர் போதுமானதாக இருக்கும். மாலையில் ஒரு தேநீர். அதுவும் மதிய உறக்கம் கழிந்த பின் என்றால் அது ஒரு சுகம். கானல் நீர் போல ஒரு புத்துணர்ச்சி. அவ்வளவுதான்.

மனதுக்குள் சின்னதாக உற்சாகம் வந்தவுடன், கால் போன போக்கில் நடந்தேன். அப்படி நடப்பதென்பது என்னளவில் வழக்கமான ஒன்றுதான். அருகிலிருந்த பேருந்து நிறுத்தம் வரை சென்றதும் திடீரென ஒரு எண்ணம். பேருந்துக்காக நானும் காத்திருந்தேன். எதுவரை போகப் போகிறேன் என்று யோசனையே இல்லை. நான் எங்காவது போக வேண்டும். எப்படியும் அறையில் தேமே என்று அமர்ந்திருப்பதற்கு பதில் இப்படிப் போனால் ஏதேனும் தேறும். குறைந்தபட்சம் உற்சாகம் குன்றாமல் இருக்கும். நாலு கன்னட வார்த்தைகள் கற்கலாம். இது போதாதா?

சில பேருந்துகளில் ஒலி வசதி உண்டு. ‘முந்தின நில்தானா இந்திரா நகரா’ என்று ஆண்/பெண் குரலில் ஒலிக்கும். அடுத்த நிறுத்தம் இந்திரா நகர் என்பதை கன்னடத்தில் அப்படிச் சொல்வார்கள். தமிழில் ’முந்தின’ என்பதன் பொருள் வேறல்லவா!

ஒரு பேருந்து வந்தது. ஏறிக்கொண்டு எங்கோ சுற்றினேன்.

திரும்பி வருகையில் நானி சொன்னான். ஒரு மணி நேரமாய் பவர் கட். கொஞ்சம் முன்னர்தான் பவர் வந்தது. மனதுக்குள் சிறிய மகிழ்ச்சி. மின் தடை நேரத்தில் எங்கோ ஒரு உலா சென்ற திருப்தி.

இரவு உணவு உண்டு முடித்து உறங்க முயற்சித்தேன். உறக்கம் வர நேரமெடுக்கும் போல. மதியம் உறங்கியதன் பலன். டிவியில் ஏதோ ஒரு தெலுங்கு படம் பார்த்துக் கொண்டிருந்தான் நானி. நானும் அவனுடன் சேர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

மணி பன்னிரண்டை நெருங்கியது. எனக்கு உறக்கம் வரவில்லை. உறங்க வேண்டுமென்கிற நினைப்பு ஏதோ ஆழத்தில் இருந்திருக்க வேண்டும். மடிகணினியை எடுத்தேன். அதனுள் பார்க்காமலே சேகரித்து வைத்த திரைப்படங்கள் நிறைய கிடந்தன. ஏதோ ஒன்றைத் தொட்டு எண்டர் பட்டனை அழுத்தினேன்.

தீராக் கனா – 3

#03

விடியலுக்கு முன்னரே பெங்களூருவுக்குள் வண்டி நுழைந்து விட்டது. ஒவ்வொரு நிறுத்தமாக நின்று நின்று ஊர்ந்தது. எங்கெங்கோ நின்று நின்று வந்தாலும், பின்னர் வேகம் கூட்டி புலியின் பாய்ச்சலில் ஓசூர் வரைக்கும் விரையும் வண்டிகள் அதற்குப் பிறகு அவ்வப்போது உறுமிக் கொண்டு நகரும். பெங்களூருவிற்குள் அப்படித்தான்.

விடிகாலையில் பெங்களூருவிற்குள் நுழைகையில் வீசுகிற குளிர்காற்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. எல்லோரும் அதை அனுபவிக்கத் தயாரில்லை அல்லது அவரவர் அதனை அனுபவிக்கும் முறை வித்தியாசமானது.

எனக்கும் இன்றைக்கு அப்படியில்லை. குளிர்காற்று பற்றிய நினைப்புகளைப் புறந்தள்ளியாயிற்று.

எங்கே இறங்க வேண்டும்? எங்கே செல்ல வேண்டும்? எல்லாம் தயார்தான். இறங்கிய பின் இன்னொரு பேருந்து பிடித்து, வேண்டிய நிறுத்தத்தில் இறங்கி, சில தொலைவு நடந்து செல்கையில் விடியல் முடிந்து வெளிச்சம் பரப்பியது சூரியன்.

நேராக நானியின் அறைக்கதவைத் தட்டினேன்.

முன்னமே பதிந்து வைத்த அறை. ஏற்கனவே நான் தங்கி, இப்போது மீண்டும் தங்குவதற்கு அதே அறைக்கு வந்துள்ளேன்.

எப்புடு இண்டர்வ்யூ?

வெட்னஸ்டே.

இன்றைக்கு தேதி வெள்ளிதான். ஆகவே அவன் அதிர்ச்சியாகி, ’ஏன் இவ்ளோ சீக்கிரம்?’ – தெலுங்கில் கேட்டான்.

நேர்காணலுக்கு தயார் ஆக. – ஆங்கிலத்தில் நான் சொன்னேன். தூக்கக் கலக்கத்திலும் கொஞ்சமாய் சிரித்து விட்டான்.

‘தூங்குறியா?’

‘இல்லடா’

 

அவன் தூங்கப் போனான். நான் என் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைத்தேன். பிறகு கொஞ்சம் நிதானித்துக் கொண்டேன். பல நூறு கி.மீகள் பயணம் செய்து இவ்விடம் வந்துள்ளேன். களைப்பு என்பதைத் தாண்டி, அடுத்து என்ன என்கிற கேள்வியும் உள்ளுக்குள் நின்றது. மூச்சினை ஒருமுறை நிறுத்தி வைத்து, சற்று நேரம் தள்ளி வெளியேற்றினேன்.

குளித்து முடித்து, காலை உணவு முடிந்தபின் ஜாவா புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஏதோ நினைவு தாக்க ஸர்வ்லெட் பற்றி படிக்க ஆரம்பித்தேன். நானி என்னமோ கிண்டலாகச் சொன்னான்.

இன்னும் நான்கைந்து நாட்கள் உள்ளன அல்லவா! பெரும்பாலும் தேர்வுக்கு முதல்நாள் படிக்கிறவன்தான் தேர்வுகளை சுலவில் எதிர்கொண்டு அதை வென்றும் விடுகிறான். நமக்குக் கிடைக்கிற பெரும்பாலான புள்ளி விபரங்களும் அதையேதான் சொல்கின்றன.

கூகுள் உதவியால் சில பல பக்கங்களுக்கு நேர்காணலுக்குத் தேவையான தகவல்களை திரட்டிக் கொண்டேன்.

நாட்கள் ஓடியதே தெரியவில்லை என்று யாரேனும் என்னிடம் சொன்னால் உனக்கென்ன பார்வைக் கோளாறா? என்று கேட்டு விடுவேன். என்னைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விஷயம் இருக்கிறது. நமக்கு முக்கியமானது மட்டும் நினைவில் நிற்கிறது அவ்வளவே.

ஒரு நாள் மாலையில் செடி, கொடிகளை, பூக்களை, கிளைகளை, இலைகளைத் தொட்டுத் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னதுதான் என விளக்க முடியாத என்னமோ ஒரு நினைப்பு. பச்சை வண்ணம் அத்தனை ஈர்க்கிறது. சிவப்பு வண்ண பூ ஒன்று யாரும் சீண்டாமல் தரையில் வீழ்ந்தது. கையில் எடுத்து அதன் உட்புறம், வெளிப்புறம் என உற்று நோக்கினேன். ஒன்றும் பிடிபடவில்லை. தாவரவியல் படித்திருக்கலாம் என்று தோன்றியது..

பள்ளிப்படிப்பு படிக்கிற காலத்தில் தாவரவியல் படிக்க வாய்ப்பிருந்தும் வீணாக்கியவன் அதையெல்லாம் எண்ணலாமா என்றொரு எண்ணம் தோன்றியது. தாவரவியல் படித்தவனெல்லாம் பூக்களில் என்ன இருக்கிறது என எப்போது உற்று நோக்குகிறானா? கண்டிப்பாக கிடையாது என ஒரு எதிர் எண்ணம்.

இவைகளோடு விளையாடியதால், விரலெல்லாம் பச்சை வாசம். வாசம் போக்க சோப்பு கொண்டு கழுவி மீண்டும் முகர்ந்தேன். கை முழுக்க சோப்பு வாசம்.

ஒரு வாசம் இன்னொன்றின் மேல் அமர்கிறது. அதை மறைக்கிறது. ஆகப்பெரிய மாற்றமில்லை. ஒன்றுக்கு பதில் இன்னொன்று. ஆனால் சோப்பு வாசம் ஒரு திருப்தி தருகிறது. அது செயற்கையானதாக இருந்த போதிலும். அது தற்காலிகமாகவே இருந்த போதிலும்.

இனி எப்போது பசுமையை நோக்கினாலும், சோப்பு வாசமும் எனக்குத் தோன்றிவிடும். பச்சை வாசமும் மூக்கிலேறும். நினைவு அத்தனை நேர்த்தியாக பின்னே சென்று வரும்.

ஒவ்வொரு நாளுக்கும் நமக்கு ஏதேனும் ஒரு நினைவு அமைந்து விடுவதே ஒரு இலக்காக மாறினால் என்ன? கடினம்தான். ஆனால் அப்படி மாறிவிட்டால் வாழ்வு இனிக்குமே! வேறென்ன வாழ்வின் பலன்?

செவ்வாய்க்கிழமை இரவில் மறுநாள் செல்ல வேண்டிய பயணம் குறித்த தகவல்களை நண்பர்கள் மூலம் பெற்றேன். கூகுளே! வழி காட்டு எனக்கு

வழியில் சந்தித்த பலரிடமும் வழி கேட்டு கேட்டு கேட்டு ஒரு வழியாக நேர்காணல் நடக்கவிருக்கும் அலுவலகம் சென்றுவிட்டேன்.

நிறுவனத்தின் வெளித் தோற்றம் முதல் பார்வையில் அசரடித்தது. சுற்றிலும் கண்ணாடியால் எதிரொலிக்கப்பட்ட காட்சிகள் கண்களை என்னமோ செய்தன. விந்தையான அல்லது வித்தியாசமான வடிவமைப்பில் அங்கே எக்கச்சக்கமான நிறுவனங்கள் இருந்தன. இரு வழிச்சாலைகள், பூங்கா மாதிரியான அமைப்பு, எதையும் கண்டுகொள்ளாதபடிக்கு தங்களுக்குள் பேசிக் கொண்டோ, அமைதியாக நடந்து சென்ற பிற மனிதர்கள் என தனி உலகமே வடிவமைக்கப்பட்டது போலான பிரம்மையே தோன்றியது.

நண்பர்களோடு ஒருமுறை ஒரு மாலுக்குச் சென்றிருக்கையில் அதன் உள் தோற்றம் பற்றி நண்பரொருவர் சொன்னார். ’ஏதோ புது வீதிக்கு வந்தது போலிருக்கே!’

நேர்த்தியான நகர அமைப்புகளைப் போலவே இப்போதெல்லாம் ஒவ்வொரு கட்டிடங்களும் கட்டப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சி என்று ஒற்றை பதிலில் திருப்தி கொள்ளவோ, இதையெல்லாம் கண்டவுடன் மெய் மறக்கவோ நான் ஆளில்லை. இப்போது அதை சிந்திக்க நேரமும் இல்லை.

நிறுவனத்தில் சில சோதனைகளைச் செய்தார்கள்.

நான்தான் நானா? வேறொருவனா? என சோதித்தார்கள். தத்துவார்த்தமாக அல்ல தர்க்கமாக. மகிழ்ச்சி.

அடுத்து என்ன?

இத்தனை சோதனைகளுக்கும் ஊடே, கண்கள் அந்த கான்டாக்ட் பெர்சனைத் தேடின. காணவே இல்லை. அவர் பெயரும் கூட யாரும் உச்சரிக்கவில்லை.

பலகட்ட அடையாளப் பரிசோதனைகளுக்குப் பிறகு வரவேற்பறையை அடைந்தேன்.

ப்ளீஸ் வெயிட் இன் தட் ரூம் சார்.

எனக்கு அதிர்ச்சி பலமாக இருந்தது. என்னைக் காட்டிலும் வயதில் பல ஆண்டுகள் மூத்தவர் என்னை சார் என்று சொன்னதற்கல்ல. என் கனவில் வந்த மாதிரியே சுற்றிலும் அறைகள். ஒரே ஒரு மாற்றம் இங்கே நான்கு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு மேசையும், இரு நாற்காலிகளுமாய் இருந்தன. தவிர்த்து இதர பொருட்களும் உள்ளிருந்தன.

நான் அமர்ந்திருந்த இடமும் குளுமையாக இருந்தது. ஏசி எங்கிருக்கிறது என கண்கள் சில நொடிகளில் தேடிக் கண்டன. முதல் மூன்று வரிசைகளில் இடமே இல்லை. நான்காவது வரிசைதான் கிடைத்தது. இருக்கையில் சரியாக அமர்ந்த பின் கொஞ்சம் நிதானித்தேன்.

தூரத்தில் என் வயதுக்காரர்கள் சிலர் கலகலப்பாக என்னமோ உரையாடிக் கொண்டிருந்தார்கள். என் கணிப்பு சரியாக இருக்குமானால் அவர்கள் இந்நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள். அடையாள அட்டையை கவனித்ததும் கணிப்பு உறுதியானது. அழைப்பிற்காக நான் காத்திருந்தேன்.

அதே போல் அழைப்பு வந்தது.

‘செழியன்.’

இம்முறை தாமதிக்காமல் எழுந்து அறைக்குள் நுழைந்துவிட்டேன்.

’ட்டெல் மீ அபவுட் யுவர்செல்ஃப்?’

பழக்கப்பட்ட கேள்வி. முன் தயாரிப்பில் இருந்த பதிலை அட்சரம் பிசகாமல் சொன்னேன். ப்ராஜெக்ட் குறித்து கேட்டார். அதுவும் அப்படியே. அடுத்து ஸர்வ்லெட். அதுவும் நல்லபடியாக. ஒவ்வொரு கணமும் கவனமாக கடந்தது. ஒவ்வொரு கேள்வியும் நிதானித்து வந்தது.

என்னளவில் எதிர்பார்த்தபடியே நல்லபடியாக நேர்காணல் முடிந்தது. மதிய வேளை நிதானமாக கடந்துகொண்டிருந்தது. இனி நடக்க வேண்டியதுதான். நடப்பதற்கு மனம் அஞ்சியதே இல்லை. மூன்று கி.மீகள் நடந்தாயிற்று. காலையிலிருந்து உண்ணவில்லை. வெறும் தண்ணீர்தான் உள்ளே இருந்தது. அதுவும் வேர்வையாக வெளியேறிக் கொண்டிருந்தது. ஏதாவது சாப்பிட்டால் தகும்.

ஆனாலும் ஏதோ ஒரு எண்ணம் உள்ளுக்குள் நடக்கச் சொல்லி வற்புறுத்தியது. கால்கள் இரண்டும் எங்கேனும் கொஞ்ச நேரம் அமர்ந்தால் போதும் என்று கெஞ்சினாலும், கணுக்காலுக்கும், முழங்காலுக்கும் இடையே ஓர் வலி மெல்ல உருவெடுத்து அச்சுறுத்திய போதும் நான் நடந்து கொண்டே இருந்தேன்.

சற்று நேரம் கழித்து, வீட்டிற்கு அழைத்து தகவல் சொன்னேன். ’நேர்காணல் நல்லபடியாக முடிந்துவிட்டது’.

நேர்காணல் முடிவு உடனடியாக வரவில்லை. விரைவில் மெயில் அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிதானமாக அனுப்பட்டுமே! என்ன கெட்டு விட்டது?

நான் எப்படி பதிலளித்தேன் என்பதை இதற்கு முன் பங்கேற்ற எத்தனையோ நேர்காணல்களின் முடிவில் யோசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் மற்றவர்கள் எப்படி பதிலளித்திருப்பார்கள் என யோசித்தேன். வயிறு பசித்தும் கூட உண்ண மனமே வரவில்லை. இது விடை தெரியாத கேள்வி ஆயிற்றே.

தீராக் கனா – 2

#02

நான்காண்டுகள் பொறியியல் படித்து முடித்தாயிற்று.

படிப்பு முடிந்து விட்டது. இனி வேலைதான். ஆனால் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் செல்லாமல் நாட்கள் கழிந்து விட்டபடியால், எப்படியாவது வேலையில் அமர வேண்டும். இல்லையேல் மேற்கொண்டு மேற்படிப்பு ஏதாவது படிக்க வேண்டும் என்கிற முஸ்தீபுகளில் நானும் இறங்கவே செய்தேன்.

கல்லூரிப் படிப்பையே உள்ளூரில் படிக்காமல் வெளியூரில்தான் படித்தவன் என்பதால், மேற்படிப்பையும் வெளியூரில் படிக்கலாம் என உறுதியாக முடிவெடுத்த தருணத்தில் பெங்களூரில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. பிடித்துக் கொண்டாயிற்று. அதையும் படித்து முடித்தாயிற்று.

மீண்டும் துவங்கிய இடத்திலேயே வந்து நின்றேன். படிப்பு முடிந்து விட்டது. இனி வேலைதான்.

அதற்கு பின்னும் கூட வேறேதும் கூடுதலாக, சிறப்புப் படிப்புகள் படிக்க வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இது போதுமெனப் பட்டது. அவ்வளவுதான். இப்போது ஒரே குறிக்கோள். வேலை.

பெங்களூருவில் அமைந்து விடாதா என்ன?

மாக்ஸிம் கார்க்கி எழுதிய ’தாய்’ நாவலில் ஒரு வாக்கியம் இப்படி வரும். “பாசிமணிகள் பல சேர்ந்து மாலையாவது போல, நாட்கள் இணைந்து இணைந்து வாரங்களாய், மாதங்களாய் மாறிக் கொண்டிருந்தன”. அதேதான்! சில மாதங்கள் அங்குமிங்கும் அலைந்த பின் வீட்டில் வந்தடைந்து கிடந்த சில நாட்களில் ஒரு எண்ணம். பெங்களூர் என்ன பெரிய பெங்களூர். முயற்சித்தால் சென்னையில் வேலை அமைந்து விடாதா என்ன?

முயற்சிக்க வேண்டும். அவ்வளவுதானே. ஆம் அவ்வளவே தான்.

இதுதான் முன் கதை. இன்றைக்கு வரைக்கும் இதுதான் கதை.

காலை உணவு முடித்தவுடன், மின்னஞ்சல்கள் பார்க்க அமர்ந்தேன். முன்னெல்லாம் ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரி வைத்திருந்தேன். சகட்டுமேனிக்கு பல தளங்களில் முகவரியைக் கொடுத்து மின்னஞ்சல் சேவையை திடக்கழிவு மேலாண்மை சேவையைப் போல மாற்றி விட்டேன். ஆயிரக்கணக்கில் குப்பைத் தொட்டிக்கு மெயில்களைத் தேர்ந்தெடுத்து தள்ளி, அதையெல்லாம் ஒரு வழியாக சரிகட்டி, இப்போது சில மின்னஞ்சல் முகவரிகளில் வந்து நிற்கிறேன்.

முழுப் பெயரில் ஒன்று, முன்னெழுத்தோடு ஒன்று, அண்டர்_ஸ்கோர் வைத்து என விதவிதமாக கணக்கு ஏற்படுத்திக் கொண்டாயிற்று. எண்கணிதத்தில் ஆர்வமில்லாதபடியால் எண்கள் சேர்த்து ஒன்று மட்டும் ஏற்படுத்திக் கொள்ள எண்ணமில்லை. இருப்பதை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் அல்லவா!

வேலை தேடுகிற ஒருவன் எந்தெந்த இணையதளங்களில் பதிந்து வைப்பானோ, அத்தனையிலும் பதிந்தாயிற்று. அவ்வகையில் தினமும் காலையில் மின்னஞ்சல்கள் படிப்பதென்பது ஒரு பொழுதுபோக்காகவே மாறி விட்டதெனக்கு!  

எதிர்பாராத விதமாகவோ அல்லது எதிர்பார்த்த விதமாகவோ ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. சில தினங்கள் முந்தி எழுதியிருந்த ஒரு ஆன்லைன் தேர்வில் தேறியிருந்தேன். எதிர்பார்த்தபடியே அழைத்து விட்டார்கள்.

எதிர்பார்த்தபடியே பெங்களூர் கிளைதான். எதிர்பாராத ஒன்று அதன் நேர்காணல் தேதியும், தொடர்பு கொள்ளும் நபரும்தான்.

தேதி ஒரு விஷயமே இல்லை என்று ஒதுக்கினாலும், காண்டாக்ட் பெர்சன் ரொம்பவே துரத்துகிறார். விஷயம் இதுதான். ஏற்கனவே அந்த நிறுவனத்தின் நேர்காணலுக்குச் சென்று வெற்றி இல்லாமல் திரும்பியாயிற்று. அதே காண்டாக்ட் பெர்சன் என்பதால் ஒரு பயம். அதையெல்லாம் ’சட்டப்படி’ உடைக்கத்தான் வேறொரு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்திருந்தேன்.

வீட்டில் தெரியப்படுத்தினேன். நான் பெங்களூர் செல்ல வேண்டும். அம்மாவும், அப்பாவும் இரண்டே இரண்டு விஷயங்களைத் தெளிவாகச் சொன்னார்கள். ஒன்று இப்போதே ஊருக்குத் திரும்ப டிக்கெட் போட வேண்டாம்.

ரெண்டாவது? அதுதான் எனக்கே தெரியுமே. எப்பவுமே தூங்கிட்டே இருக்காதே! முக்கியமா பயணம் செய்யும் போது. இரவு பயணங்களில் தூங்கித்தான் ஆக வேண்டும். ஆனாலும் விழிப்போடு இரு என அறிவுறுத்தினார்கள்.

இப்போதெல்லாம் அதிகமாக அவர்கள் அறிவுரை சொல்வதே இல்லை. தேவையான அளவு ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். அதை எந்நாளும் மதித்து நடப்பதே பெரும்பாடு.

*

பேருந்து நிறுத்தம் மாதிரியே தெரியவில்லை. இருளும், பகலும் இணைந்தாற்போல வெளிச்சம் குறைவாக இருந்த இடத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன். ஒரு பெண் சற்று தள்ளி நின்றிருந்தார். வயது என்னைக் காட்டிலும் அதிகமாகவே இருக்க வேண்டும். ஏதோ கேட்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்ற, அருகில் போய் ‘ஹலோ’ என்று சொல்லப் போக, அவளே திரும்பி ‘எக்ஸ்யூஸ் மீ’ என்றாள்.

கண் விழித்துவிட்டேன்.

மீண்டும் ஒரு கனவு. ச்சை. பேருந்தில் பெங்களூரு செல்கிறேன். யாரோ என்னை எழுப்புகிறார்கள். கண் விழித்தேன். பேருந்தின் உள்ளிருந்த விளக்கொளிகள் முகத்தில் அடித்தன.

தம்பி கொஞ்சம் எழுந்திரிங்க.. வேற சீட் தரேன். லேடீஸ் தனியா இருக்காங்க…

அவரே வேறொரு இருக்கை மாற்றித் தந்தார்.

படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் இந்த பிரச்சினையே வராது. செமி ஸ்லீப்பரில் எப்போதாவது இப்படி இடமாற்றங்கள் அமைந்து விடுகின்றன. சமயங்களில் எரிச்சல்கள் ஏற்படத்தான் செய்யும்.

உறங்குகிறவனை எழுப்புவது பாவமய்யா! என்னால் உனக்கு புதிதாய் ஒரு பாவம் எதற்கு?

ஒரே நல்ல விஷயம். இனி நிம்மதியாக தூங்கிவிட வேண்டும். இல்லையேல் தூங்காமலே வர வேண்டும். இரண்டாவது அத்தனை சாத்தியமில்லைதான்.

 

தீராக் கனா – 01

  • தொடரும் முன்..
  • இதை நெடுங்கதையாகத் தொடர விருப்பம். நாளொரு அத்தியாயமாகக் கொண்டு வர எண்ணம். தகவல் பிழைகள் ஏதுமிருப்பின் சொல்லுங்கள். திருத்தம் செய்யத் தயார்.

#001

வரை எதற்காக சந்திக்க வந்தேன் என்பதை யோசித்தபடியே வராந்தாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவரிடம் சொன்னால் எனக்கு தீர்வு கிட்டுமா என்பதையெல்லாம் இப்போது வரை யோசிக்கவில்லை. அவர் ஒரு மருத்துவர். ஒருவேளை அவரால் எனக்கு தீர்வு கிடைக்கலாம். கிடைக்காமல் போகவும் ஒரு வாய்ப்பு உண்டு. எனக்கு உடலில் பிரச்சினை இல்லை. ஒருவேளை மனதில் இருக்கலாம் என்றொரு ஐயம். அதுவும் அத்தனை உறுதியில்லை.

உறுதியே இல்லாமல்தான் அவருடைய வீட்டில், அவருடைய அறையில் காத்திருந்தேன். ஒரு விடுமுறை நாளின் காலை நேரத்து தேநீர் கோப்பை ஒன்று எனக்கு முன் இருந்தது.

டாக்டர்! அதிகபட்சம் கால்மணிநேரம் எடுத்துக்குவேன். நான் கடகடனு எனக்கு மனசில பட்டத இங்க சொல்லிடறேன். அது பிரச்சினைனா அதுக்கு தீர்வு சொல்லுங்க.

அவர் நிதானமாக தலையசைத்தார்.

நான் அவரிடம் முழுமையாக மனதில் தோன்றிய ஒரு வார்த்தையையும் விட்டுவிடாமல் விவரித்து சொல்லத் துவங்கினேன்.


#01

து ஒரு பெரிய வரவேற்பறை. அதாவது ஒரு பெரிய வரவேற்பறை போல காட்சி தந்தது. அந்த அறை முழுக்க குளுமை நிரம்பியிருந்தது. அதைச் சுற்றிலும் மூன்று சிறிய அறைகள். மூன்று அறைகளிலும் ஒரே நேரத்தில் மூவருக்கு நேர்காணல்கள் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் நேர்காணல் முடிந்து ஒரு அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தார். எனக்கு முன்னிருந்த வரிசையில் அவரின் எனக்கு முன்னிருக்கும் ஒருவர், அவரிடம் கேட்டார்.

’உள்ள என்ன கேள்வி கேட்டாங்க?’

‘ஜேஎஸ்பி சர்வ்லெட் பத்தி கேட்டாங்க.. அப்புறம் ப்ராஜெக்ட்..’

வேறென்னமோ உரையாடல் அவர்களிருவருக்கும் இடையே நடந்தது. ஆனால் எனக்கு அது ஏதும் செவியில் விழவே இல்லை.

சட்டென அவர் வெளியேறிவிட்டார்.

சர்வ்லெட் குறித்து என் நினைவில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என யோசிக்கத் துவங்கினேன். முன்னவர் வெளியேறும் அறைக்குள் நான் நுழையக் கூடாது என்றொரு பயம். அந்த அறைக்குள் இருந்த நேர்காணல் செய்யும் அதிகாரியை நோக்கினேன். வயதானவர். தொலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். கண்ணாடிக் கதவு. வெளியே ஒலி கேட்கவில்லை. எந்த அறைக்கதவு எப்போது திறக்குமென ஒவ்வொரு நொடியும் வெப்பம் கூட்டியது. யாருடைய பெயரை எப்போது அழைப்பார்கள் என்கிற அச்சம் உள்ளுக்குள் இருந்தது. அங்கு காத்திருந்த ஒவ்வொருவருமே அந்த எண்ணத்தில் இருந்திருக்கலாம். நிலைமை அப்படித்தான் இருந்தது.

’செழியன்…’

என் பெயரேதான். நான் உடனே எழ வேண்டும். எழ வேண்டும் என நினைக்கிறேனே தவிர என்னால் எழ முடியவில்லை. அதற்குள் என் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்கள். சுற்றி அமர்ந்த பிறரும் என்னையே பார்க்கிறார்கள். என்னால் எழவே முடியவில்லை. கால்கள் இறுகிக்கொள்கின்றன. கண்கள் திறக்க முடியவில்லை.

‘எழுந்திருடா…’

இம்முறை என்னால் தாங்கமுடியாமல் எழுந்தே விட்டேன்.

அறை குளுமையாகவே இருந்தாலும் இருள் கவிந்து கிடந்தது. உடல் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன்.

அடச்சே.. இது கனவா?

அம்மாதான் அழைத்துக் கொண்டிருக்கிறார். ‘எழுந்திரிடா செழியா.. எவ்ளோ நேரம் தூங்குவ?’

இன்னொரு முறை கண்ணை மூடி சற்று நேரம் கழித்து திறந்தேன். கனவின் எச்சங்கள் கண்ணுக்குள் மாறி மாறி எழுந்தன. சட்டென்று அழிந்து விட்டன. நேர்காணல் மட்டும் நினைவிற்குள் நின்றது. ஒருமுறை ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன்.

கொஞ்சம் தடுமாற்றத்துடன் வீட்டின் வெளிப்புறத்தை வந்தடைந்தேன். நிகழ்காலம் புரிய எப்போதும் கொஞ்சம் நேரமெடுக்கிறது. கனவில் எதிர்காலம் என்பது அற்ப சந்தோஷமாகவே நிகழ்கிறது. கண் விழித்த சில நொடிக்குள் காற்றுடைத்த சோப்புக் குமிழாகி விடுகிறது கனவின் எதிர்காலம்,

முகம் கழுவி விட்டு, அன்றைய நாளிதழைப் புரட்டினேன். அம்மா தேநீர் கொண்டு வந்து வைத்தார். வீட்டில் எனக்கு மட்டுமே தேநீர் என்பதால் காலையில் சீக்கிரம் எழச் சொல்லி அம்மா தினமும் எழுப்புகிறார்.

எந்தவொரு நாளிலும் உறக்கத்தில் இருப்பவனை அதனின்று எழுப்பி விடுவது ஒரு கஷ்டமான விஷயம்தான். அப்படி ஒருவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது பாவமென்றும் கூட கருத்து உண்டு. அம்மாக்கள் மட்டும் அதில் விதிவிலக்கு. மகனை எப்படி எழுப்புவது என்பதை எல்லா அம்மாக்களும் அறிவர். என்ன ஒன்று, எல்லா அம்மாக்களின் வியூகங்கள்தான் வேறு வேறாக இருக்கும். ஆனால் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்.

ரொம்ப நாள் தள்ளி இன்னைக்கு ஒரு கனவும்மா.. இண்டர்வியூக்கு வெயிட் பண்ணும்போது நீ எழுப்பிட்டம்மா… பகல் கனவு பலிக்கும்ல..

அம்மா சிரித்துக் கொண்டார்.

என் நிலைமை அப்படியாகி விட்டது.

-தொடரும்