வேர் (சிறுகதை)

நீர்ச் சொட்டும் சத்தம் கேட்டு எதிர்ப்பக்கம் திரும்பினான் வியன். அவ்வளவு நேரமும் மெல்லிய சலசலப்புடன் சத்தமே எழும்பாமல் ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையில் நின்றபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான் அவன். ஒரு மனிதனுக்கு கடல் உண்டாக்கும் சுவாரசியத்தைக் காட்டிலும் ஆறு அப்படி ஒன்றும் சுவாரசியமில்லை. ஆனால் ஆறு எப்படி கடல் இல்லையோ அதேபோல் கடல் ஒருபோதும் ஆறாகாது. அவன் யோசனையை வளர்த்தெடுக்க எண்ணினான். ஆனால் இப்போது நீர்ச் சொட்டும் சத்தம் கேட்டு எதிர்ப்பக்கம் திரும்பினான். வயதான பெரியவர் ஒருவர் ஒரு மரக்கன்றுக்கு நீருற்றிக் கொண்டிருந்தார். முதற்பார்வைக்கு அந்த பெரியவரை எங்கோ பார்த்ததைப் போல தோன்றியது. இவனே இந்த ஊருக்குப் புதியவன் என்பதால் அந்த எண்ணத்தைப் புறந்தள்ளி அவரையே கவனிக்கத் தொடங்கினான். சட்டென்று அவனைக் கண்ட பெரியவர் மீண்டும் வேலையில் மூழ்கினார். மீண்டுமொருமுறை அவனைப் பார்த்து யார் நீ? என்பது போல சைகை காட்டினார் . அவன் அசையாமல் நின்றான்.

சற்று நேரத்தில் அவர் அவனை நோக்கி வந்தார். அதுவரை அவன் பெரியவரையே பார்த்தபடி நின்றிருந்தான்.

யார் நீ? ஊருக்கு புதுசா?

ஆமா. இந்த ஊர்ல கேம்ப் போட்ருக்கோம். சோசியல் ஒர்க் பண்றோம். பத்து நாள் இங்க இருப்போம். நான் என் ப்ரெண்ட்டோட வீட்லதான் தங்கியிருக்கேன். ப்ரெண்ட் பேரு விக்னேஷ்.

அவர் எதையோ நினைத்துச் சிரித்தபடி நடக்கத் துவங்கினார். அவர் கையில் இருந்த பையில் கொஞ்சம் இலைகள் இருந்தன. அவை என்ன இலைகளாக இருக்கும் என யோசித்தபடி அவருடனே அவனும் நடந்தான்.  யார் நீ எனக் கேட்டவருக்கு தன்னுடைய பெயரைக் கூட அவன் சொல்லாததை அப்போதுதான் யோசித்தான். அவரும் வேறெதுவும் பேசவில்லை. இன்னொரு முறை அவரைப் பார்க்க நேர்ந்தால் தன்னுடைய பேரைச் சொல்லிக் கொள்ளலாம். அவருடைய பேரையும் அப்போது கேட்டுக் கொள்ளலாம் என்றபடி அவனுடைய யோசனை எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் கால்கள் அந்தப் பெரியவரைப் பின் தொடர்ந்தபடி இருந்தன.

அந்த மண் சாலையில் இவ்விருவரின் காலடி ஓசைகள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன. இடப்பக்கம் சத்தமில்லாமல் நகரும் ஆறும், வலப்பக்கம் காற்றுக்காக ஆங்காங்கே காத்துக்கொண்டிருக்கும் மரங்களுமாக எல்லாவற்றையும் ஒருமுறை பார்த்துக்கொண்டே நடந்தான். மறுபடியும் அதே அமைதி.

ஊருக்குள் நுழைந்துவிட்டதை உணர்த்தும் சந்தடிகள் தென்பட்டதும் இருவருமே வேகத்தைக் கூட்டி நடந்தனர்.

*

வியன். அவனை அவனென்று அடையாளமாய்ச் சொல்லிக்கொள்ள அவனுக்கென்று எத்தனையோ அடையாளங்கள் இருந்தன. அவன் பெற்றோர், படித்த இடம், வேலை எல்லாமே அதில் அடக்கம். அந்த அடையாளங்களைப் பற்றி துளியும் பொருட்படுத்தாத எத்தனையோ சிற்றூர்களுக்கு வியன் பயணமாகியிருக்கிறான். வெவ்வேறு  நிலப்பரப்புகள், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவங்கள் என அவனுக்கு ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன. அதிலும் தமிழ்நாட்டுக்கு வர வெகு அரிதாகவே வாய்ப்புகள் வரும். இம்முறை அவனுக்கு பிடித்தமான பணி. பிடித்தமான பணியிடம். ஆகவே புதிதாகப் பழக எத்தனையோ பேர் இந்த பத்து நாட்களில் அமையலாம்.

வியன் அதைப் பழகிக் கொள்ளத் தயாராக இருந்தான். விக்னேஷ் வீட்டு மொட்டை மாடி அப்போதைக்கு சொர்க்கம் போலத் தோன்றியது. அங்கிருந்து பார்த்தால்  மொத்த ஊருமே தெரிவது போல இருந்தது. ஆனால் வீட்டுக்கு நேரெதிராக ஒரு பழைய வீடு. யாரும் சீண்டாமல், சிதிலமாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்பது போல இருந்தது. அவன் சட்டென்று விக்னேஷுக்கு அழைத்தான். இன்றிரவு பக்கத்து ஊருக்கு திருவிழா பார்க்கச் செல்ல வேண்டும். மூன்று நாள் திருவிழா. அதைப் பார்க்க இரண்டு நாட்கள் முன்னாடியே வந்துவிடச் சொல்லி அழைத்தார்கள்.  வேலைகள் ஓய்ந்த வேளைகளில் எல்லாம் வண்டியெடுத்துக் கொண்டு பக்கத்து ஊர் வரை போய் வரலாம். ஒரு ஊரே எப்படி திருவிழாவிற்கு தயாராகி வருகிறது என்பதை அருகிலிருந்து பார்க்க வேண்டுமென அடிக்கடி வியன் சொல்லிக் கொண்டிருந்தான். அது தொடர்பாக சில குறிப்புகளையும் தொகுக்க ஆரம்பித்திருந்தான். விக்னேஷின் வீட்டில் அப்போது யாருமில்லை. பத்து நாட்களும் நினைத்ததை நினைத்தபடி செய்ய ஓரிடம். அங்கு ஒரு நண்பன்.

*

தெரு முடியும் இடத்தில் குறுக்காக சாலை இருந்தது. அங்குதான் ஊருக்குள் ஆங்காங்கே கடைகளைக் காண முடிந்தது. ஊர்த் தெருவிற்குள் கொஞ்சமும் இல்லாத பரபரப்பு கடைத் தெருவிற்குள் இருந்தது. காலையில் அவன் பார்த்த பெரியவர் ஒரு கடையில் இருந்தார்.அது ஒரு டீக்கடை போல தோன்றவே, அங்கு சென்றான்.

இன்னும் பத்து நிமிடங்களில் விக்னேஷ் வந்துவிடுவதாய் சொன்னான். அந்த ஊரில் அவனுக்காக காத்திருப்பதைத் தவிர வேறு கதியில்லை என்பது வியனுக்குத் தெரியும். பத்து நிமிடங்கள். கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டான். அவனைப் பார்த்து அந்த பெரியவர் மீண்டுமொருமுறை புன்னகைத்தார். யோசிக்காமல் அவரருகே சென்றான் வியன்.

உங்க பேர் என்ன?

அந்த கடையில் அப்போது யாருமில்லை. ஆனாலும் பால் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் வேலையில் கவனமாய் இருந்தார். வியன் கடையை ஒருமுறை சுற்றிப் பார்த்தான். அது டீக்கடை மட்டுமில்லை. ஒரு பழைய இரும்பு அயர்ன் பாக்ஸ், ஒரு தையல் மெஷின் எல்லாமே உள்ளடங்கி இருந்தது. கடைக்குப் பெயரே இல்லை என்பதையும் கவனித்தான்.

அவர் நிதானமாக அவனைப் பார்த்ததும், இல்ல! உங்க பேரைக் கேட்டேன் என்றான்.

நீ வடக்குல இருந்தியா?

அவன் பதிலேதும் சொல்லவில்லை.

இல்ல நார்த்ல இருந்தியா-னு கேட்டேன்.

ஆமா. பிறந்தது அகோலா..

ம்ம்..மஹாராஷ்ட்ரா தானே.

உங்களுக்குத் தெரியுமா?

நான் ஆர்மில இருந்திருக்கேன். அதனால தெரியும். சரி உன் பேர் என்ன?

வியன்.

அவ்வளவுதானா? என்னப்பா இப்படிலாமா பேர் வைப்பாங்க. சொல்றதுக்குள்ள முடிஞ்சிடுச்சே!

தாங்க்ஸ். ஆனா முதல்ல நான் உங்க பேரைத்தானே கேட்டேன்.

பைரவநாதன்.

உங்க பேரையும் கேட்ட மாதிரி எனக்குத் தெரியல. ஆனா உங்க முகம் எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது. அதுவும் அந்த சிரிப்பு. கண்டிப்பா எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு.

உன்னைப் பார்த்தாலும் எனக்கு அப்படித்தான் தோணிச்சு. எங்கயாவது பார்த்திருப்போம். இந்த ஊருக்கு வந்து அஞ்சு-பத்து வருஷந்தான் ஆகுது. அதுக்கு முன்ன நானும் நார்த்லதான் இருந்தேன். வேற வேற ஊர்ல இருந்திருக்கேன். உங்க அப்பாவையோ, உன்னையோ பார்த்திருக்கலாம். நீ உங்க அப்பா ஜாடையா?

இருக்கலாம். சரி நாளைக்கு இங்கதானே இருப்பீங்க. உங்ககிட்ட அப்புறமா பேசிக்கிறேன். ப்ரெண்ட் கூப்பிடறான். அப்புறம் பார்க்கலாம். பை!

கையசைத்தபடி இருவருமே தத்தமது வேலைகளுக்குத் திரும்பினர்.

*

பைரவநாதன். அந்த ஊருக்குள் பெரியவர் போலிருக்கும் புதியவர். அதே ஊரில் அவருக்கென்று ஒரு பூர்விகம், வரலாறு எல்லாமே இருந்தாலும் அவர் அவ்வூருக்கு புதியவர் போலவே இருந்தார். ஊருக்கு மீண்டும் வந்து எட்டாண்டுகளுக்கு மேலான போதும், அவர் இருந்தது மிகச் சாதாரண ஒற்றை வீடு.  அவ்வீட்டைப் பயன்படுத்தவே தேவையில்லாதபடிக்கு ஒரு சிறிய கடை. அதனூடே அன்றாட வழக்கங்களை அமைத்துக் கொண்டார் அந்த பெரியவர்.

*

முந்தைய நாள் திருவிழாவில் சுற்றிய அலைச்சல் ஓய்ந்த சமயத்தில் காலையிலேயே மீண்டும் பெரியவர் கடைக்கு வந்தான் வியன். அதே புன்னகை.

திருவிழா எப்படியிருந்தது?

நேற்றைக்கு அவ்வளவு சுவாரசியமில்லை. அதை விடுங்க. நேத்து காலைல உங்கள பார்த்ததிலிருந்தே கேட்கணும்னு நினைச்சிருந்தேன். உங்ககிட்ட ஏதும் மரக்கன்னு இருக்கா? நீங்களும் எங்க டீமோட சேர்ந்து நடலாமே?

பெரியவர் அவனுக்கு டீயை நீட்டிவிட்டுச் சொன்னார். உனக்கு ஒரு மரக்கன்னு நடுறது வேலையோ, திருப்தியோ எனக்கு தெரியாது. ஆனா எனக்கு அது நிம்மதியைத் தரும். அந்த மரம் பெரிசா வளந்து வரும்போது நான் இருப்பேனோ இல்லையோ தெரியாது. அது வளர்ந்திடுச்சுனாலே எனக்கு அது எதையோ சாதிச்ச சந்தோஷம்.

வியன் ஆச்சர்யமாகப் பார்த்தான். இதுக்கு பின்னாடி பெரிய கதையே இருக்கும்போல நான் தெரிஞ்சிக்கலாமா? ஏதும் பெர்சனலா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க. இந்த டீ குடிச்ச உடனே நான் கிளம்பிக்கிறேன்.

அவர் இயல்பாக சிரித்தார். உன்னைப் பார்த்தா ஏதோ ஞாபகம் வந்து வந்து போகுது. உன்னோட சிரிப்பு எனக்கு ரொம்ப நெருக்கமானதா தோணுது. அதனால உன்கிட்ட கோபப்படவோ, பேசாம இருக்கவோ எனக்கு காரணமே இல்லை.

வியனை கடைக்கு உள்புறம் அழைத்தார். தையல் மெஷினுக்கு எதிராக இருந்த ஒரு இருக்கையில் அமரச் சொன்னார். அவர் பாய்லர் அருகேயே அமர்ந்தார்.

இப்ப நீ தங்கி இருக்கறது உன் ப்ரெண்ட் வீடு தானே.

ஆமா.

அதுக்கு எதிர்த்த மாதிரி ஒரு பெரிய வீடு இருக்குல அது எனக்கு மனசுக்கு நெருக்கமான வீடு. எங்க அப்பா பிறந்த வீடு அது. ஆனா நான் அங்க பிறக்கல.

எங்க தாத்தாவுக்கு ரெண்டு பொண்ணு, ரெண்டு பையன். பொண்ணுக பிறந்து சில வருஷம் தள்ளிதான் ரெண்டு பையனும் பிறந்தாங்க. அதுல இளையவரு எங்க அப்பா. எங்க அப்பாவுக்கு படிப்புல ஆர்வம் அதிகம். ஆனா அவரோட அண்ணனுக்கு அவ்வளவு ஆர்வம் கிடையாது. ஆனா எங்க தாத்தா ரெண்டு பேரையும் நல்லா படிக்க வச்சிடணும்னு ரொம்ப மெனக்கெட்டாரு. அவரு அதிகம் படிச்சதில்ல. ஆனா பிள்ளைகள படிக்க வைக்க ஆசைப்பட்டாரு.

நீங்க சொல்றது அப்டியே எங்க வீட்லயும் பொருந்துது. எங்க தாத்தா அதிகம் படிச்சவர் இல்லை. அதனாலேயே எங்க அப்பாவை அதிகம் படிக்கச் சொன்னதா கேள்விப்பட்டிருக்கேன். நீங்க மேல சொல்லுங்க. குறுக்க நான் இனி பேசல.

பெரியவர் மறுபடியும் மெல்லிதாக சிரித்தபடி தொடர்ந்தார்.

வீட்ல எல்லாரும் எங்க தாத்தாவுக்கு பயப்படுவாங்க. அவர் சொன்னா சொன்னபடி எல்லாமே நடக்கணும்னு அவருக்கு ஆசை அதிகம். ஆனா எங்க பெரியப்பா வீட்லயே வேற ரகம். விடிஞ்சு போய் அடஞ்சு வர்ற ஆள். ஆனாலும் எங்க தாத்தாகிட்ட நிறைய முறை மாட்டிக்காம தப்பிச்சிக்கிட்டாரு.

ஒருநாள் பக்கத்து ஊர்ல மாடுபிடி திருவிழா நடந்துச்சு. அதைப் பார்க்கப் போய் திரும்பி வரும்போது எங்க தாத்தாகிட்ட மாட்டிக்கிட்டாரு. அன்னைக்கு அவர் மேல மொத்த கோபத்தையும் காமிச்சிட்டாரு. அப்ப அவர் கையில இருந்த பெரிய சாவிய வச்சு பெரியப்பாவோட தலை மேலேயே அடிக்க ஆரம்பிச்சாரு. யாராலயும் தடுக்க முடியலை. இத்தனைக்கும் அவர் வேடிக்கை பார்க்கப் போனதாதான் சொன்னாராம். தாத்தாவுக்கு நம்பிக்கை இல்லை. இவரு மாடு பிடிக்கத்தான் போய் வந்துட்டு இப்ப பொய் சொல்றாரோனு கோபம் கொறையாம அடிச்சிட்டே இருந்தாராம். மண்டை பிளந்து இரத்தம் சொட்டும் போதும் அவருக்கு ஆத்திரம் குறையல. மயக்கம் வர்ற மாதிரி அவர் சாயவும் பாட்டி வந்து தடுத்து நிறுத்தி தலையச் சுத்தி துணியக் கட்டி அப்புறமா மருந்து போட்டாங்களாம்.

எங்க தாத்தாவுக்கு ஏன் அவ்வளவு கோபம் அன்னைக்கு வந்துச்சுனு யாருக்குமே புரியல. ஆனா காயம் ஆறுற வரைக்கும் யார்கிட்டயும் ஒரு சொல்லும் பேசாம எங்க பெரியப்பா உண்ண, உறங்கனு வீட்லயே கிடந்திருக்காரு. எங்க அப்பாதான் தாத்தாகிட்ட சொல்லிருப்பாரோனு ஒரு சந்தேகம் அவருக்கு இருந்திருக்கு. ஆனா உண்மையா எங்க அப்பா அப்படி ஏதும் சொல்லல. ஆனா இந்த வீட்ல இருக்க பிடிக்கலனு சொல்லிட்டு இருந்தவரு காயமெல்லாம் ஆறுன பிறவு ஒருநாள் செலவுக்கு கொஞ்சம் காச எடுத்துக்கிட்டு வீட்டை விட்டு கிளம்பிட்டாரு.

எப்படியும் ஒன்னு ரெண்டு நாள்ல திரும்பி வந்திடுவார்னு அக்கம்பக்கத்தில தேடிட்டு குடும்பமே அவருக்காக காத்திருந்தாங்களாம். வாரம் மாசமாகி, மாசம் வருசமாகியும் அவர் யார் கண்ணுக்கும் தென்படல. அவரைத் தேடாத இடமில்லைனு தேடுறாங்க. ஆனாலும் அவர் யார் தேடியும் கிடைக்கல. ஒண்ணு ரெண்டு முறை வேற வேற ஊர்கள்ல இருந்து வீட்டுக்கு அவர் லெட்டர் போட்டதா சொல்லி ஒரு ஞாபகம் இருக்கு. அதுல என்ன எழுதியிருந்ததுனு இப்ப ஞாபகம் இல்லை. அதுக்கு பிறகு எங்க அப்பாவுக்கு வேலை கிடைச்சி, வேற வேற ஊர்ல இருந்து தேடிருக்காங்க. அவர் கிடைக்கல. இந்த நிமிஷம் வரைக்கும்  அவரைப் பத்தின நினைவு எனக்கு இருக்கு. எங்க அப்பா அவரைச் சொல்லாத நாள் கிடையாது.  

எங்க அப்பாவுக்கு நாங்க மூணு பிள்ளைங்க. ஆளுக்கொரு பக்கமா வேலைக்கு போனோம். போன இடத்தில் எல்லாம் விசாரிச்சுப் பார்த்தோம். அப்படியும் அவர் கிடைக்கல. ஒரு வேளை அவரோட குடும்பத்துல யாரையாவது ஒருத்தர பாத்துட மாட்டமானு எங்க அப்பாவுக்கு ஒரு ஆசை.  அந்த ஆசை அவருக்கு நிறைவேறலை. அந்த வருத்தம் அவருக்கு கடைசி வரைக்கும் இருந்தது. இதனால எங்க தாத்தாவுக்கும், எங்க அப்பாவுக்குமே ஒரு மனவருத்தம் இருந்ததாம். எங்க தாத்தா அதுக்கு பிறகு யார்கிட்டயும் ஓங்கிப் பேசவே இல்லனு சொல்வாங்க. எங்க தாத்தாவோட ஒரு நிமிசக் கோபம் இப்படி மாறும்னு யாருக்கும் தோணியிருக்காது. அதுனாலயே அந்த வீட்ல யாரும் ரொம்ப வருஷம் தங்கல. இப்பவும் அந்த வீட்டைச் சொந்தம் சொல்லி எங்க உறவுக்காரங்க யாரும் வரல. அந்த வீட்டைச் சரி பண்ணி குடிபோகணும்னா அதுக்கு எங்க பெரியப்பா வழில யாராவது வரட்டும்னு காத்திருக்காங்க. எங்க பெரியப்பாவுக்கு இந்த ஊர்ல ஒரு தோட்டம் வைக்கணும்னு ஆசையாம். அதை ஞாபகத்தில வச்சுதான் இந்த ஊருக்கு நான் திரும்பி வந்தேன். எங்க இடத்தில ஒரு பாகம் பிரிச்சு தோட்டம் வைக்க ஆரம்பிச்சேன். இப்ப வரைக்கும் நல்ல படியா போய்கிட்டிருக்கு.

எங்க பெரியப்பாவோட சின்ன வயசு போட்டோவை நான் பாத்திருக்கேன். ஒரு சாயல்ல உன்னோட முகம்போல இருக்கும். அந்த போட்டோ இப்ப யார்கிட்ட இருக்குனு தெரியல. நீ சிரிக்கும்போது அந்த உருவம் எனக்கு ஞாபகம் வருது. அதுனாலதான் உன்கிட்ட இதைச் சொல்லணும்னு தோணுச்சு. நீயும் சோசியல் ஒர்க்தானே பண்ற. உனக்கு புரியும். ஒரு வேர் மண்ணைப் பிடிக்க எவ்ளோ நாளாகும். அந்த மரம் பெரிசாக எவ்ளோ காலமாகும். அப்படினா ஒரு தோட்டம் வைக்கணும்ங்கிறது எவ்வளவு பெரிய கனவு.  ஆனா அதை வெட்றது சிலருக்கு ரொம்ப ஈஸியா இருக்கு இல்ல.

பெரியவர் ஒரு சில நொடிகள் மவுனமானார். பழைய நினைவுகளை மறுபடியும் சொல்வதில் இருந்த நிம்மதி அந்த மவுனத்தில் கலந்திருந்தது.

வியன் தன்னையே மறந்தபடி யோசித்துக் கொண்டிருந்தது போல தோன்றியது. பைரவநாதன் மறுபடியும் அவனைப் பார்த்து என்னப்பா யோசிக்குற என்றபடி புன்னகைத்தார்.

நீங்க சொல்ற அந்த வீட்டை நானும் தினமும் கவனிச்சிக்கிட்டேதான் இருந்தேன். அதுக்கு பின்னால இப்படி ஒரு கதை இருக்குறது எனக்கு தெரியாது. ஆனா என்னோட கதை என்னானு நானும் கேட்டுத் தெரிஞ்சிக்கணும்னு ஒரு ஆசை இப்போ இருக்கு. எங்க அப்பாவோட வாழ்க்கை எப்படி இருந்துச்சு. நான் நேர்ல பார்க்க முடியாத என்னோட தாத்தாவோட வாழ்க்கை எப்படி இருந்துச்சுனு தெரிஞ்சுக்கப் போறேன். அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். இன்னொரு முறை உங்க தோட்டத்தை ஒருமுறை நான் பார்க்கணும். அந்த ஆத்தங்கரைக்கு எதிர்த்த மாதிரி இருந்த தோட்டம்தானே நீங்க சொன்ன தோட்டம்..

பெரியவர் ஆம் என்பது போல தலையசைத்தார்.

*

மழை வருவது போலிருந்த அந்த மாலையில் வியனும், பைரவநாதனும் அந்த தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தனர்.   

இன்னைக்கு நீங்க பேசின ஒவ்வொரு விஷயமும் தலைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. எங்க அப்பா என்கிட்ட சொல்லாததை நீங்க எனக்கு சொன்ன மாதிரி ஒரு பீலிங். ஆனாலும் அதைவிட நீங்க சொன்னது ரொம்ப பெரிய விஷயம் இல்லையா? ஒரு வேர்  மண்ணைப் பிடிச்சு மரமா வளர எவ்வளவு காலமாகும். அதுவரைக்கும் ஒரு பொறுமை வேணும். அதை கவனிச்சுக்க ஒரு அக்கறை வேணும். அதே அளவு அக்கறையும், பொறுமையும் சக மனுசங்ககிட்ட நாம காட்டிடணும் இல்லையா. எனக்கு அந்த அக்கறையும், பொறுமையும் இருக்குனு நான் நம்புறேன். இன்னைக்கு நீங்க பேசின பிறகு அது இன்னும் அதிகமாகியிருக்குனு நினைக்கிறேன்.

பெரியவர் அவனையே பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்.

நான் இங்க இருந்து போயிட்டாலும் உங்க கூட டச்ல இருப்பேன். மறக்காம இந்த தோட்டத்தைப் பத்தி, உங்க பூர்விக வீட்டைப் பத்தி என்ன அப்டேட் ஆனாலும் குடுங்க. நான் தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். சரியா?

சரி. நான் ஒன்னு கேட்கட்டுமா?

கேளுங்க.

உன்னை இனி அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமானு எனக்குத் தெரியல. உன் முகம் எனக்கு அவ்வளவு நெருக்கமா படுது. இன்னும் ஒரு முறை நல்லா சிரி. அதை நான் மனசுல வச்சுக்குறேன்.

வியன் ஒருமுறை சிரித்தான். பைரவநாதனும் அவனைப் பார்த்தபடி புன்னகைத்தார்.

இதமாக வீசிய காற்றில் நதியின் சலசலப்பு இன்னும் அதிகமானது.

***

Advertisement

ஆசிரியர்: தமிழ்

எழுத்து, வாசிப்பு இரண்டும் பிடிக்கும். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் படிப்பதை விரும்புவேன். எப்போதாவது இவற்றை எழுதுவேன். மொழியியல், வரலாறு, தொழில்நுட்பம் இவற்றில் இப்போதைக்கு ஆர்வம். இனி எப்போதைக்குமே!

One thought on “வேர் (சிறுகதை)”

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: