இணையத்தின் சமூகப் பயன்பாடு

இணையத்தின் சமூகப் பயன்பாடு:

சமூகமும், இணையமும்:

சமூகம் என்பது தனிமனிதர்களால் ஆனது என பொதுவாக கூறிவிட முடியும். தனிமனிதர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு இருப்பியல் பிரச்சினைகளைக் கையாள்வதே சமூகம் என்றொரு கருத்தும் உண்டு. சூழலின் பொருட்டும், வாழ்வியல் முறைகளின் சமீபத்திய மாற்றத்தின் பொருட்டும்  தற்போதைய சமூகம் இணையத்தினை அதிகளவில் பயன்படுத்துகிறது. பெரும்பாலும் இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்கிறபோதும், சமூகத்தின் பல்வேறுநிலைகளில் உள்ளவர்களும் அன்றாடம் இணையத்தினை பயன்படுத்தியாக வேண்டிய சூழல் வலுப்பெறும் காலம் இது.

கல்வித் தேடலுக்கு, அறிவுத் தேடலுக்கு, வணிக விருத்திக்கு, நண்பர் குழாமோடு பேச, சமூக-வலைதளங்களில் பொழுதுபோக்க, இன்னும் இன்னும் எத்தனையோ வடிவங்களில் இன்றைய சூழலில் இணையம் பயன்பட்டு வருகிறது.

அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கத்திற்கும், அழிவிற்குமாய்  பயன்படுவதைப் போலவே அறிவியல் வளர்ச்சியின் ஒரு அங்கமான இணையத்தின் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும்.

இணையம் என்றால் இணைப்பது என்று பொருள் கொண்டோமேயானால், சாட்சாத் இன்றைய சமூகத்தினை, அதன் மாந்தர்களை எப்படியேனும் இணைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளது இணையம்.

உரையாடும் களம்:

தனிமனித உரையாடல் கிட்டத்தட்ட மறைந்துவரும் சமூகத்தில், முக்கியமாக இளைஞர்களுக்கு அதற்கான வடிகாலாக இணையம் மாறியிருக்கிறது. மணிக்கணக்கில் நேரத்தை இணையத்தில் செலவிடும் இளைஞர்களின் மனப்போக்கில் இதை எளிதாக அறிய முடியும். ஆம். உலகளவில் சமூக வலைத்தளங்களுள் முதன்மையானதாக கருதப்படும் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் உலக நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. அதே நேரம் இந்தியாவில் 8 முதல் 12 வயது வரையிலான 89 சதவீதம் குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அணுகுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது  ஆறுதலான விஷயமாகும்.  

ஏதோ தூர தேசத்தில் இருக்கும் மகனிடமோ, உறவினரிடமோ நாம் உரையாடுவதற்கான வாய்ப்பையும் இணையம் வழங்குகிறது. அருகில் அமர்ந்து பேசும் வாய்ப்பினை, உரையாடல்கள் நீர்த்துப் போன இக்காலத்தில் இணையம் எளிய முறையில் பக்கத்தில் அமர்ந்து பேசுவதுபோல் உணரும் வகையில் Skype முதலான பலவழிகளைக் காட்டுகிறது.

அலுவல்:

வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக அலுவலகப் பணிகளை முடித்துவிடுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. பிரபலமான பெருநிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இதனைப் பரிந்துரைக்கின்றன. இதன்மூலம் நிறுவனத்தின் பணிகள் விரைவாக முடிந்துவிடுவதுடன், ஊழியர்களுக்கு காலம், பணம், பயண அலைச்சல் மிச்சமாவதுடன் மனநிறைவும் ஏற்படுகிறது.

தேடல்:

மனித மூளையானது எல்லாத் தகவல்களையும் சேகரித்து தன்னகத்தே அழியாமல் பாதுகாக்கக் கூடியதல்ல. இதன் காரணமாக, நம்முடைய ஞாபக மறதிகளுக்கான மருந்தாக வாய்த்திருக்கிறது இணைய தேடுபொறிகள் (Search engines).

எதுவானாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும் என்கிற அளவு நம்பிக்கையை அந்நிறுவனம் மக்களிடையே, பல்வேறு துறைசார்ந்தவர்களிடையே ஏற்படுத்துகிறது. மறந்து போன ஏதோ ஒரு கவிதை வரியின் ஒரு வாக்கியத்தை உள்ளிட்டால் மொத்தக் கவிதைத் தொகுப்பையும் கண்முன் நிறுத்துகின்றன இணைய தேடுபொறிகள். அவ்வகையில் இணையத் தமிழ் முன்னெப்போதும் அடையாத வளர்ச்சியை கடந்த சில ஆண்டுகளில் பெற்றுள்ளது. தமிழில் உள்ள  வளங்கள் யாவும் மின்வடிவில் சேகரிக்கப்படுவதன் மூலமாக எதிர்காலத் தலைமுறையினருக்குமாக தொண்டாற்றுகிறது இணையம். இதற்கு உறுதுணையாக இயங்கும் பல இலட்சக்கணக்கான தமிழர்களும் நன்றிக்குரியவர்கள்.

வலைப்பூக்கள்வலைத்தளங்கள்:

யார் வேண்டுமானாலும் எழுதலாம். எந்தப் பிரிவின் கீழும் எழுதலாம். நாமே அதனை வெளியிடலாம். நம்முடைய கருத்துகளுக்கு, பதிவுகளுக்கு உடனடியாக எதிர்வினையைப் பெறலாம் என்கிறபடியாக பல்வேறு நல்லியல்புகளைக் கொண்டிருப்பதாலோ என்னவோ தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கையும், அதில் இயங்குபவர்களின் பங்களிப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சாமானியர்களும் இதில் பங்களிக்கத் துவங்கியிருப்பதால், தமிழ்ச்சமூகத்தின் வாசிப்பு வளம் பெருகத் தொடங்கியிருப்பதை உணரலாம். அத்தோடு, புதிய எழுத்தாளர்கள் பலரும் உருவாகிவருவதும் மறுக்க முடியாதது.

மின்வாசிப்புக் களம்:
சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம் வரும் 2015 ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. அதற்குள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்கி ஆவணப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியின் பிரபல எழுத்தாளர்களாகக் கருதப்படும் பலருடைய படைப்புகளும் இணையத்தில் மின் நூல்களாகக் கிடைக்கின்றன என்றபோதிலும் முழுமையாக இதுவரை இல்லை என்பது வருத்தத்திற்குரியது. ஓலைச்சுவடிகளை அச்சுநூல்களாக மாற்றிய சென்ற நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாக, காலத்தால் அழியாத வகையில் முக்கியமான படைப்புகளை மின்வடிவில் ஆவணப்படுத்துவது இப்போது முக்கியமானதாகும். முக்கியமாக நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளை முழுமையாக ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. இது அடுத்த தலைமுறையினருக்கான அறிவுத் தொண்டாகும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

மின்வழிக் கற்றல்

 இணைய வழிக் கற்றல் பெருகத் தொடங்கியிருப்பதன் மூலம், மாணவர்களுக்கும், கற்றலின்பால் ஆர்வங்கொண்ட பலருக்கும் இணையம் ஆசானாக விளங்கத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைகழகங்கள், கல்வி அமைப்புகள் இணையவழி கற்றலை சான்றிதழ்கள் மூலம் அங்கீகரிப்பதும், தொடர்ச்சியாக அதை முன்னெடுப்பதும் ஆரோக்கியமான நிகழ்வுகள். இதன்மூலம், இருந்த இடத்தில் இருந்தே, வீட்டிலிருந்தே கல்வி பயில்வதற்கான வாய்ப்பை ஆர்வமுள்ள எல்லோருக்கும் வழங்குகிறது இணையம்.

வணிகபொருளாதார பயன்பாடுகள்:

வணிக ரீதியாகவும் இணையத்தினை பயன்படுத்தி இலாபம் ஈட்ட முடியும். இணையவழி வணிக பரிவர்த்தனைகளின் தாக்கம் தற்போது சாதாரண மக்களையும் எட்டியுள்ளதால், மின் வணிகம் நல்ல மதிப்பையும், வளர்ச்சியையும் பெற்றுள்ளது. அதிலும் தற்போதைய இளைஞர் சமுதாயத்தின் தேவைகள் அனைத்தும் இணையத்தின் மூலமாக எளிதில் கிடைக்கின்றன. சலுகை விலையில் சகலவிதமான பொருட்களும் (அன்றாடத் தேவைக்கான பொருட்கள், அழகுசாதன/அலங்காரப் பொருட்கள், புத்தகங்கள், ஒலி/ஒளி குறுந்தகடுகள், இன்னும் இன்னும் நிறைய பொருட்கள்) மின்வணிக நிறுவனங்கள் மூலமாக இணையத்தில் கிடைக்கிறது. இவ்வாறாக வாங்கப்படும் பொருட்களின் தரமும், விலையும் வாடிக்கையாளர்களிடையே நம்பகத்தன்மையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இணையத்தில் இவ்வகை வணிகங்களின் எதிர்காலம் வளமாகவே உள்ளது. மக்களின் நேரத்தினையும், பணத்தினையும் மிச்சப்படுத்துவதற்கு இவை உதவியாக உள்ளன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பிரபல அமெரிக்க மின்வணிக நிறுவனமான அமேசான் ஆளில்லா விமானங்களின் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலைக்களஞ்சியங்கள்அகராதிகள்:

இணையவெளியின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் தமிழ்ப் பக்கத்திற்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் நெடும் பங்களிப்பின் மூலமாக, ஆரம்பிக்கப்பட்டே பத்தே ஆண்டுகளில் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் விக்கிபீடியாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 57 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளை எழுதியுள்ளனர். உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் தமிழ் விக்கிபீடியா உள்ளது.

இணையத்தில் உள்ள மின் அகராதிகள், மொழிமாற்றிகள் மூலமாக பல்வேறு மொழிகளையோ, அல்லது குறிப்பிட்ட வேற்றுமொழிச் சொல்லுக்கான பொருளையோ உடனடியாக அறிய முடிகிறது.

சமூக மாற்றங்கள்:

சமீப ஆண்டுகளில் ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் நடைபெற்ற விரைவான தகவல் பரிமாற்றங்களின் காரணமாய் எகிப்து, துனீஷியா முதலான சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்தியாவிலும் சமூகவலைதளங்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பல்வேறு இந்திய அரசியல் மற்றும் சமூக  நிகழ்வுகளின் பின்னணியில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களின் தாக்கங்கள், எதிரொலிகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு சமூகவலைதளங்கள் பெருமளவு உதவும். சில அரசியல் கட்சிகள் இணையப் பிரச்சாரத்தினை வலுப்படுத்த இவற்றையே நம்பியிருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் இவற்றைப் பயன்படுத்துவதும், உடனடியாக எதிர்வினை தருவதுமாய் இருப்பதால் சமூக நிகழ்வுகள் இதில் முக்கியத்துவப்படுத்துகிறது. ஆனாலும் ஆழமான விவாதங்கள் அதிகளவில் இப்போதுவரை இல்லாமல்தான் இருக்கிறது. அடுத்துவரும் காலங்களில் ஆழமான சமூக விவாதங்களுக்கு சமூக வலைதளங்களின் மூலமாக இணையம் களம் அமைக்கக் கூடும்.

 

இறுதியாக:

சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தைத் தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும். சமூகத்தின் பார்வையில் இணையம் இருமுனையிலும் கூரானக் கத்தியாகவே பெரும்பாலும் அணுகப்படுகிறது. அப்படியே வைத்துக் கொண்டாலும், அதை பாதுகாப்பாக கையாளுபவர்களுக்கு யாதொரு அழிவுமில்லை. இதே எண்ணத்தை இணையவெளியில் உலவும் அனைவரும், இணையத்தை அன்றாடம் பயன்படுத்தும் அனைவரும் மனதில் நிறுத்தினால் அனைத்தும் நலமே.

குறிப்பு:

*-பல்வேறு இணையதளங்கள், வார/மாத/நாளிதழ்களில் வெளியான தகவல்கள், புள்ளிவிபரங்கள் இங்கு உதாரணத்திற்காக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.