மானுடப் பண்ணை – வாசிப்பனுபவம்

மாலை ஐந்து மணி. ஆளரவமற்ற தி.நகர் ரங்கநாதன் தெரு. அவன் அவளுடைய வீட்டுக்கு எதிரே வந்தான். வீட்டு வாசல் அருகே அவள் இருப்பது தெரிந்தது. அவளுடைய கவனத்தை ஈர்க்கும் விதமாக தன் சட்டைப் பையில் இருந்த எட்டணா காசைத் தெருவிலே போட்டான். அது டணங், டணங் என்ற சப்தத்தோடு உருண்டோடி, அவள் அவனைப் பார்த்தாள்.

இது எழுத்தாளர் எஸ்.வி.வி எழுதிய சிறுகதையில் வரும் காட்சி. இது 1960-களில் வந்த கதை. மாலை ஐந்து மணிக்கு தி.நகர் ரங்கநாதன் தெரு ஆள் அரவம் அற்றுப் போய்விடும் என்பது ஆச்சர்யமான சரித்திரக் குறிப்பாகிவிடுகிறது.

– இது எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய மானுடப் பண்ணை நாவலின் முன்னுரையில் சில வரிகள்.
நாவல் எழுதப்பட்ட காலத்தின் சில குறிப்புகள் பின்னாளில் வரலாற்று முக்கியத்துவமாகி விடுவதைக் காண முடிகிறது.
கதை நாயகனின் கோபமான மனநிலையிலேயே நாவலின் துவக்கம் அமைகிறது. படித்து முடித்து வேலை தேடும் இளைஞன். அவனுக்கு வேலை கிடைக்காமல் போனதன் பின்னணி நாவலின் முக்கியப் புள்ளி. கிடைக்கிற சொற்ப சம்பளத்திற்காக ஒப்பந்த வேலைகள் சிலவற்றை செய்து வருகிறான். எப்படியாவது இருக்கிற தகுதிக்கு நல்ல சம்பளத்தில் வேலையில் அமரத் துடிக்கிறான்.
அது நிறைவேற காலம் அவ்வளவு எளிதில் அனுமதிக்க மறுக்கிறது. இடைப்பட்ட காலம் முழுக்க அந்த இளைஞனின் வாழ்வியலைப் புரட்டும் நிகழ்வுகளே நாவல்.

தனக்கு விருப்பமானதைச் செய்ய இயலாமல், மற்றவர்கள் சொல்கிற வேலைகளை மறுக்க இயலாமல், அப்படி மறுத்தால் – ‘வேலையில்லாமதானே இருக்க.. இதைச் செய்ய வேண்டியதுதானே?’ என்கிற அலட்சியமான மிரட்டல் என்பதே வேலையில்லாதவர்கள் மீது சமூகம் காட்டும் முகம்.

குடும்பத்திற்குள்ளும் இதே போன்றதொரு அவமதிப்புகளும், அலட்சியங்களும் தொடர்கின்றன.

தான் விரும்பிய பெண்ணிடம் என்ன சொல்லி பேசத் தொடங்குவது? பதிலுக்கு அவள் ஏதேனும் கேட்டுவிட்டால்? அல்லது சொல்லி விட்டால்? இது காதல் மயக்கத்திலும் தன் இருப்பு குறித்த பயம்.

போதாமல் அரசியல் குறித்து அறிகிறான். படிக்கிறான். விவாதிக்கிறான். நாவலின் இறுதி அத்தியாயம் அப்படித்தான் தொடர்ந்து முடிகிறது.

நாவலின் பெரும்பலம் நாவலின் மையப்புள்ளி. அதைச் சுற்றி நகரும் நிகழ்வுகள். யதார்த்தமான கதை மாந்தர்கள். சுவாரசியத்துக்கு குறைவில்லாமல் இயல்பாக நகரும் உரையாடல்கள்.

”ரெண்ட் ரூபா… ரெண்டு ரூபால பானை வருமா சார்? ” எனும் மேஸ்திரி.
”You are a technical man.. வாழைப்பழம் வாங்கத் தெரியலையே உனக்கு?” என சீறும் ஐயர்.
”இதோ இருக்குதே வடபழனிக் கோயில், அதை யார் கட்டினது தெரியுமா? ” என சாதி பேசும் பரமசிவம்.
பொதுவுடைமை, பெரியாரியம் என அரசியல் பேசும் அசோகன், பாலகிருஷ்ணன்.

 

“மார்க்ஸு எந்த ஊர்க்காரு?”
“ஜெர்மன்.”
“அந்த ஊர்ல ஜாதி இருந்துதா?”
“ஏன் அங்கயும்தான் செருப்பு தைக்கிறவன், தச்சன், கருமான் எல்லாம் இருக்காங்க.”
”சரி அங்கெல்லாம் செருப்புத் தைக்கிறவன் புஸ்தகத்தைத் தொட்டா கைய வெட்டுவாங்களா? ஈயத்தக் காய்ச்சி அவன் காதுல ஊத்துவாங்களா?”
”தி.க….வுல நல்லாதான் தயார் பண்ணி உட்டுருக்காங்க.”
”இதப் பாருங்க சார்… நான் தி.க.வே இல்லை. பொதுவாக் கேக்குறேன்……..”

 

நாவலின் இறுதி அத்தியாயம் ஒன்றில் விவேகானந்தர் சொன்ன கிணற்றுத்தவளை உவமை இடம்பெறுகிறது. அதன் கீழே ஆசிரியர் குறிப்பும் கூடுதலாக இருந்தது. ஒருவேளை குறிப்பில்லாமல் இருந்தால் நூலை எரித்து விடுவார்களோ என்கிற படியாகவும் இருக்கலாம்.
உயிர்மை பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2014-ல் வெளியாகியுள்ள இந்நாவல் 1980-களின் இளைஞனைப் பற்றியது. தமிழ்மகன் 1985-ல் எழுதி, 1989-ல் வெளிவந்த இந்நூல் 1996-ல் தமிழக அரசின் விருது பெற்றது.
பின்னட்டையில்:

அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைகழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, லாதல், வேலைவாய்ப்பு, அரசியல், அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பது இந்த நாவலை இப்போது படிக்கும்போதும் தோன்றுகிறது.

தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில், இதுவும் ஒன்று. லட்சக்கணக்கான இளைஞர்களின் ‘சோக ’ வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது.
என இந்நாவலின் முதல் பதிப்பிற்கு எழுதிய முன்னுரையை நிறைவு செய்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

சென்ற ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தை பார்க்க என்னுடைய சில தோழர்கள் சென்று வந்ததைச் சொன்னார்கள். இறுதிக்காட்சி முடிந்த பின் எழும்பிய பேரொலி குறித்து சொன்னார்கள்.

இந்த நாவலுக்கு இப்போது வயது முப்பது. காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பது இந்த நாவலை இப்போது படிக்கும்போது எனக்கும் தோன்றுகிறது.
தமிழ்
ஜூலை 6 2015