என் மொழி!

வணக்கம்.

இன்று உலக தாய்மொழி தினம். தெரிந்திருக்கும் எனில் வாழ்த்துகள். இல்லையேல் இப்போது அறிந்திருப்பீர்கள். நம் தாய்மொழி உலகில் சிறந்த மொழி என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொள்ள ஏதுவாக நமக்கெல்லாம் பிறமொழியினருக்கு வாய்க்காத அளவில் இலக்கிய, இலக்கண செல்வங்கள் இறைந்து கிடக்கின்றன.

நான் அறிந்த, நமக்கெல்லாம் தெரிந்த சில தகவல்களை இங்கே, இந்நாளில் பகிர ஆவல்.

நம் தாய்மொழி தமிழ். அதை உயர்தனிச் செம்மொழி எனலாம். மற்ற மொழிகளினின்று உயர்ந்த மொழி. தனித்து இயங்கும் மொழி. செம்மையான மொழி என எளிதாக இதன் பொருளை அறியலாம்.

தமிழ் – என்றால் அழகு. தமிழ் –என்றால் இனிமை. தமிழ் என்றால் இளமை. தேன் தமிழ், தீந்தமிழ் முதலான சொற்களின் பொருளால் இதை உணரலாம்.

தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்தால் தம்மிடத்தில் ’ழ்’ ழைக் கொண்ட மொழி என பொருள்படும்.

தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.

தமிழின் இனிமையைச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப சரியான சொற்கள் தமிழில் புகுந்து தொடர்ந்து இன்றும் இயங்கி வருகின்றது.

தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.

நிலவில் மனிதன் இருந்தால் பேசியிருக்கக் கூடிய சாத்தியமுள்ள மொழிகளுள் தமிழும் ஒன்று. உலகளவில் அதிக மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட பைபிள் இந்தியாவில் முதன்முதலில் தமிழில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. அதிலும் மொழிபெயர்த்தவர் (பார்த்தலோமியு சீகன்பால்க் – Bartholomaus Ziegenbalg) பிறப்பால் தமிழர் இல்லை என்பதும் ஆச்சர்யம்.

ஜி.யு. போப்பும், கான்ஸ்டாண்டைன் ஜோசப் பெஸ்கியும் (வீரமாமுனிவர்) தமிழுக்குத் தொண்டாற்றிய மேனாட்டவர்கள். வீரமாமுனிவர் தமிழில் 5 எழுத்துக்களை சீரமைத்துள்ளார். இலக்கண நூல் (சதுரகராதி) ஒன்றையும், பிற இலக்கண, இலக்கியப் படைப்புகளையும் தந்துள்ளார் (தேம்பாவணி, பரமார்த்தகுரு கதைகள்….). ஜி.யு.போப் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவரின் கல்லறை வாசகம் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என அறிகிறேன். (”இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்.”)

தமிழ்த் தாத்தா உ.வே.சா, பரிதிமாற்கலைஞர், முனைவர். கால்டுவெல் மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான அறிஞர்களின் அபாரமான ஈடுபாட்டின் காரணமாகவே இன்று நம் மொழி தொடர்ந்து உயிர்பெற்று இயங்குவதையும் எக்காலத்திலும் மறக்கக் கூடாது.

இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் நம் மொழியும் இருக்கிறது.

தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு என கொண்டாடுகிறோம்.

தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு  எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே.

சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.

தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள், இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை. தமிழ்மொழியிலே நிறைவாக உள்ளன என்பதையே தமிழின் தனிச்சிறப்பு எனக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றோம்.

ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் இது திருநாள்தான் என நம்புகிறேன். எல்லோருக்கும் தாய்மொழி கண்டிப்பாக இருக்கும்தானே!

எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் இனிய தமிழ்ச்சொற்களை பேசியும், எழுதியும் நம் மொழியின் இனிமையை நம்மால் கொண்டாட முடியுமே!

பெருமைப்பட காரணங்கள் எண்ணில் அடங்காமல் இருக்கின்றன. நம் தாய்மொழியின் சிறப்பை எண்ணி மகிழ்ந்து கொண்டாடுவோம்.

தேனொக்கும் தமிழே! நீ கனி. நான் கிளி. வேறென்ன வேண்டும் இனி?

தமிழுக்கு அமுதென்று பேர்- இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!

தமிழா! நீ தமிழ் வாழப் பணியாற்று- தமிழல்லவா உனை இயக்கும் உயிர்க்காற்று!

தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்- எங்கள் இனம் காக்கும் வாளாகும், வேலாகும்.

மேலும் படிக்க (பழைய பதிவு):  தமிழே உயர்வ