விளையாட்டு

கடந்த வாரமும், கவிதையும்….!

வணக்கம்.

கடந்த வியாழனன்று நண்பர்கள் சேர்ந்து வார்த்தைகளைக் கொண்டு ட்விட்டரில் விளையாடினோம். அவர்களின் தூண்டுதலில் கொஞ்சம் கொஞ்சமாய் எனக்கும் வார்த்தைகளின் போக்கு பிடிபட்டு ஓரளவு எழுதிவிட்டேன். அதையெல்லாம் கவிதை என்று சேர்த்துவிடக்கூடாது. குறும் பா (குறும்புப் பா!) என்று சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவே!

  • தொகுப்புகள் என்ற பெயரில் தளத்தின் கட்டுரைகள்/பதிவுகளைத் தொகுத்துள்ளேன். இன்னும் கொஞ்சம் சீரமைக்க வேண்டியிருக்கிறது. டெமுஜின் குறித்த ஆவணப்படம் தொலைந்து விட்டது. எனவே மீண்டும்  தொடர்கள் கொஞ்சம் தாமதமாகலாம். பரவாயில்லை. சிதறல் வகைப் பதிவுகளைத் தொடர்ந்து இடவும் என நண்பர்கள் சொன்னபடியால் அதையும் தொடர்வேன்.
  • அண்ணன் மலைக்கள்ளன் குறித்து பதிவு எழுதி இருந்தார். அதில் நான் இரண்டு நாட்களுக்குள் புத்தகத்தை முடிப்பேன் என உறுதியாகக் கூறினார். அவர் உறுதியைப் பொய்யாக்காமல், இரு நாட்களில் படித்து முடித்துவிட்டேன். சரியான வேகத்தில் கதை பறக்கிறது. கதை குறித்த சுவாரசியங்களைச் சொல்லிவிட விருப்பம் இல்லை. 2 நாட்களில் சுலபமாக முடிக்கக்கூடிய நாவல்தான். நாமக்கல் கவிஞர் நூல்களை இதுவரைப் படித்தது கிடையாது. எனவே இப்புத்தகம் நன்றாக என்னை ஈர்த்தது.

கவிதைகள் பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன். முன்னர் கோவர்த்தனுக்காக ஒரு தழுவல் பாடல் தயார் செய்து வெளியிட்டேன். அது ஒரு மலையாள பாடலின் இசையை/இராகத்தை  மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. அதேபோல் இன்னொரு தருணத்தில் ஒரு இந்திப் பாடலைக் கேட்டுவிட்டு ஒரு கற்பனையான கருப்பொருளைக் கொண்டு ஒரு பாடலை தயார் செய்தேன். பாடலை ஓடவிட்டு 5-6 முறை இவ்வரிகளை பாடிப்பார்த்து (அதாவது வாசித்துப் பார்த்து) உறுதி செய்த பாடல். இப்பாடலை ஓரிடத்தில் சேமித்து வைத்திருப்பதாக எண்ணி இத்தனை நாள் மறந்துவிட்டேன். இன்று நினைவு வந்து தேடினால் பாடல் அம்போ!

அடித்துப் பிடித்து, இணையத்தில் இன்னோர் இடத்தில் கண்டு எடுத்துவிட்டேன். இனியும் விட்டால் இது தொலைந்தால் என் செய்வது? அதான்! இங்கே ஒரு பிரதி கிடக்கட்டுமே என்று அதையும் இங்கே பதிந்துவிட்டேன்.

உன்னால்தானோ…..உன்னால்… உன்னால்தானோ
நானும் மாறிப் போனேன்!
உன்னால் நானே தினம் தினம் மாறிப்போனேன்!
நானே நானாய் இங்கில்லையே!
நீ இன்றி உயிரில்லையே!
உன் வனத்தினில் வாழும் சிறுசெடியாவேனே!
***********************************************
நீண்டு செல்லும் வழியினில்-கிடந்தேனே
நானும் பழியினில்!
உன் நினைவுகள் என்னை மீட்குதே!
உன் மௌனமும் வழி காட்டுதே!
உன் கால்கள் செல்லும் பாதையில்
என் பயணம் இனிமேல் செல்லுமே!
ஆதலால் ஆதலால்…. (உன்னால்தானோ….)
*********************************************
பரந்து விரிந்த வானத்தில்- சிறு விண்மீனாய்
நானும் இருந்தேனே!
உந்தன் வார்த்தைகள் என்னைச் செதுக்குதே!
என் மனமெங்கோ இன்று பறக்குதே!
எந்நாளும் உன்னை மறவேனே!
இந்நாளும் உன்னைத் தொழுவேனே!
ஆதலால் ஆதலால் (உன்னால்தானோ….)
**************************************

முக்கியமான பின்குறிப்பு:

இப்பதிவிற்குப் பின் பெரிய பதிவுகள் எழுதும் முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி ஓரளவு சிறிய அடக்கமான, எளிய பதிவுகள் எழுதுவேன். உங்களுக்கும், எனக்கும் நேரம் மிச்சம்! மகிழ்ச்சிதானே!!

முன்னர் சொன்ன ட்விட்டர் சொல் விளையாட்டு சிறுபதிவுகளாய் விரைவில் வரும்!

கடைசிக் குறிப்பு:

 தலைப்பை பார்த்து ஏமாந்திருந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

Advertisements

ஓ! ஒலிம்பிக்!!

மிக விரைவில் வர இருக்கிறது உலகின் மிக நீண்ட விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் போட்டிகள். பங்கேற்கும் ஒவ்வோர் நாடுமே பதக்கப் பட்டியலில் முன்னிலை பெறும் முனைப்பில்தானிருக்கும். இருந்தபோதிலும் சிறந்த வீரர்கள் அடிப்படையில் சில நாடுகள் தங்கம் வெல்வதற்கான அதிக வாய்ப்பைப் பெறுகின்றன.

சைக்கிள் பந்தயத்தையும், படகுப் போட்டியிலும் பதக்கத்தை உறுதியாக இங்கிலாந்து எதிர்பார்க்கிறது.

வில் எய்தலில் தென் கொரியா பலம்வாய்ந்த போட்டியாக இருக்கும். இந்தியாவும் இப்பிரிவில் முன்பை விட பலமாக உள்ளது. நமக்கும் வாய்க்கும்.

தடகளப் போட்டிகளைப் பொறுத்தவரை அமெரிக்கா யாராலும் அசைக்க முடியாத அணியாகவே இருந்து வருகிறது. அநாசயமாக பதக்கங்களைக் கைபற்றிவிடும். சில பிரிவுகளில் மற்றவர்கள் வெல்லவும் வாய்ப்புண்டு.

1992 லிருந்தே பேட்மிட்டன் போட்டிகளில் ஆசிய நாடுகளே போட்டி தருகின்றன. இந்தியாவின் பதக்க வாய்ப்பில் முன்னணியில் உள்ள சாய்னாவிற்கு சீனாவில்தான் போட்டி.

கூடைப்பந்து போட்டியிலும் அமெரிக்கா அசுரத்தனமாக உள்ளது.

குத்துச்சண்டை என்றாலே நேராக தங்கப் பதக்கத்தை கியூபா வீரர்களிடம் தந்துவிட்டு மற்ற பதக்கங்களுக்காக பிறர் போட்டியிடலாம். ஆனாலும் இந்தியாவும் நம்பிக்கையோடு களம் காண்கிறது.

சைக்கிள் பந்தயத்தில் இங்கிலாந்திற்கு சரியான போட்டியாக ஃபிரான்ஸ் அணி விளங்கக் கூடும்.

பெல்ப்ஸ் என்கிற ஒற்றை மனிதனை மலைபோல் நம்புகிறது, ஒட்டுமொத்த அமெரிக்காவும். சென்ற ஒலிம்பிக்கில் எட்டுக்கு எட்டு தங்கப் பதக்கங்களையும் நீச்சல் பிரிவுகளில் வென்றார் பெல்ப்ஸ். இம்முறை 7 பதக்கங்களுக்கு குறிவைத்திருக்கிறார். டைவிங் பிரிவில் சீனா போட்டியாக இருக்கும். இன்னும் 4 பதக்கங்கள் பெற்றால் அதிக பதக்கங்கள் பெற்ற வீரர்களின் பட்டியலில் முதலிடம் பெல்ப்ஸுக்குதான்.

கால்பந்து போட்டிகளில் தற்போதைக்கு ஸ்பெயின் தான். ஐயமே வேண்டாம்.

ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் சீனாவின் கொடி உயரே பறக்கிறது.பலமான வீரர்கள் படையோடு தயாராகியுள்ளது சீனா. ரஷ்யாவையும், கனடாவையும் ஆட்டத்தில் சேர்க்கலாம்.

பெண்கள் பிரிவில் கைபந்து போட்டியில் நார்வே அணி தைரியமாக இருக்கிறது. ஃப்ரான்ஸ் அணி ஆண்கள் பிரிவில் பதக்கத்தை எதிர்பார்க்கிறது.

லண்டன் 2012

ஐரோப்பிய அணிகள் அனைத்துமே இப்பிரிவில் போட்டியாளர்கள்தான்.

london-2012

ஹாக்கியில் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் தங்கம் தட்ட முயற்சிக்கும். அதிக முறை வென்ற இந்தியாவும் பதக்கம் பெற போராடும்.

ஜூடோ போட்டிகளில் ஜப்பான் பதக்கங்களைத் தட்டிவிடும் என்றாலும் சீனாவும், கியூபாவும் போட்டி தருமென நம்புவோம்.

துப்பாக்கி சுடுதலில் சீனா பதக்கங்களை அள்ளினாலும் இந்தியாவும் அதிர்ச்சி அளித்தால் சிறப்பு.

அதிக போட்டிகளில்வெல்லும் வாய்ப்புகள் அமெரிக்காவிற்கும், சீனாவிற்குமே இருக்கிறது. போட்டியை நடத்தும் நாடு என்கிற முறையில் இங்கிலாந்து 95 மொத்த பதக்கங்களுக்கு குறி வைத்துள்ளது. இந்திய அணி அதிக பதக்கங்களை வென்றாலே போதும்.

அதிக படங்களுடன் இப்பதிவை வெளியிடும் எண்ணமில்லை. மேலும் விபரமறிய இணையத்திலே தேடிப் பார்க்கவும். நாட்கள் நெருங்க நெருங்க ஒலிம்பிக் காய்ச்சல் அதிகமாகும் என நம்புவோமாக!

ஓ! ஒலிம்பிக்!!

ஒலிம்பிக் இவ்வருடம் நடைபெறப் போகிறது.அதற்காக ஒரு பதிவு எழுதினால் என்ன என தோன்றியது.அதான் இந்த பதிவு! 205 நாடுகளிலிருந்து வீரர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

மொத்தம் 26 வகை போட்டிகள் நடைபெற உள்ளது. தவிர 20 பாராலிம்பிக் (மாற்று திறனாளிகளுக்கானது.) போட்டிகளும் நடைபெற உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் 27 ஜூலை முதல் 12 ஆகஸ்ட் வரை நடைபெற உள்ளது.
பாராலிம்பிக் போட்டிகள் 29 ஆகஸ்ட் முதல் 09 செப்டம்பர் வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டிகள் மூலம் லண்டனின் பொருளாதாரம், சுற்றுலா,வேலைவாய்ப்பு பன்மடங்கு உயரும் என்பதில் சந்தேகமில்லை. லண்டன் நகரம் தற்போது எப்படி உள்ளது என படங்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்து விடும்.
இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது.
குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல்,மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் வலுவுடனே இருக்கிறது.
எப்படியும் இம்முறையும் நமக்கு ஏமாற்றம் இருக்காது என்றே நம்புகிறேன். இன்னும் நாட்கள் இருக்கிறது. இன்னும் பேசலாம் நிறைய!