வாசிப்பு

தீராத நினைவு

மூன்று – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளத்தில் நான் எழுதி வெளியிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அதே காலகட்டத்தில்தான் நான் முன்னெப்போதையும் விட அதிகமாக எழுதத் துவங்கினேன். நிறைய தோழர்கள் வாசித்தார்கள். அவர்களுக்காகவே எழுதி எழுதி, அதெல்லாம் ஓய்ந்த தருணத்தில் நானும் எழுதுவதையே குறைத்துக் கொண்டேன். அப்படி குறைத்துக் கொண்ட தருணத்தில் எழுதியதுதான் இந்த கதை.

எட்டு பக்க அளவில் தலைப்பே இல்லாத கதையைப் படித்த யாருக்குமே அதில் விருப்பமில்லை. ஆளாளுக்கு குறை சொன்னார்கள். முதலில் எழுதிய கதையில் அத்தியாயமே கிடையாது.
ஏறக்குறைய ஓராண்டு காலம் அந்த கதையையே நான் தொடவில்லை. அதன் பின் எழுதிய இரண்டு அல்லது  மூன்று சிறிய கதைகளையும் நான் பதிவிடவில்லை. நெல்லிமரம் எனும் கதை மட்டும் இங்கே பகிர்ந்தேன்.
கிடைத்த சொற்பமான நேரங்களில் கொஞ்சம் வாசித்தேன். மீண்டும் இக்கதையை அத்தியாயம் பிரிக்குமளவு கொஞ்சம் விவரித்து எழுதினேன். எழுத எழுதத்தான் கதையின் மையம் எனக்கே விளங்கியது. ஆக, முன்னர் எழுதியது வீண் என அப்போதுதான் புரிந்தது. தோழர்களுக்கு நன்றி.
க்ளைமாக்ஸ் இல்லாத கதையைப் படித்து முடித்ததும் என் நண்பன் அர்ஜூன் முதலில் கேட்டது – தலைப்பு எங்க?
அப்புறம்தான் தலைப்பு யோசித்தோம். எனக்கு இந்த தலைப்பு  (தீரா கனா) சரியாக இருக்குமெனத் தோன்றியது. அப்புறம் இலக்கணமாய் யோசித்து ’க்’ சேர்த்துக் கொண்டோம்!
நிறைய திருத்தங்களை அர்ஜூன் சொன்னான். அத்தியாய எண் ஒவ்வொன்றிற்கும் # வை என்றான். ஏன் இப்போதெல்லாம் மேற்கோள் குறிகளுக்குள் உரையாடல்கள் எழுதுவதே இல்லை என்று கேட்டான். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருக்கு என்றான்.
அவன் மகிழ்ந்து சொன்னான் என்பதாலேயே உடனே ஒவ்வொரு அத்தியாயமாக இதே தளத்தில் பதிவிட்டேன்.
அவன் இதை மின்னூலாக்கினால் நன்றாக இருக்குமென்றான். கண்டிப்பாக செய்யலாம் என நானும் சொன்னேன்.
கடந்த ஆண்டு  இவ்வுலக வாழ்விலிருந்து உதிர்ந்துவிட்டான்.
இன்றைக்கு இந்த நூலைப் படிக்க அவனில்லை என்பதே பெரும் வலிதான். ஆனாலும் நான் எழுதுவதைப் படித்து, தட்டிக்கொடுத்தவன் அவன். என்னைக் காட்டிலும் என்னை நம்புகிற தோழர்கள் என்னைச் சுற்றி எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவன் அர்ஜூன். இந்நேரம் அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். குறைந்தபட்சம் ஏண்டா க்ளைமாக்ஸை இப்படி எழுதியிருக்கிறாய்? என்று திட்டியேனும் எழுதியிருப்பான்.
அவனுக்காக சமர்பிக்கும் அளவு இந்நூல் உசத்தி இல்லை. நியாயமாக நான் எழுத நினைக்கும் ஒவ்வொரு நூலும் அவனுக்கானதும் கூட .
கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டு அட்டைப்படம் தந்த நண்பன் அருணுக்கு நன்றி. சந்தித்த நாள் முதலாக நான் கேட்காமலேயே எனக்கு உதவும் தோழர் அரவிந்த்-க்கு வெறும் நன்றிகள் போதாது.
Miss You Arjun.
Advertisements

கி.ரா – சில கதைகள்

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விஷயம் இது.

அன்றொரு நாள் எதேச்சையாக ஒரு இணைப்பிதழைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் வாசகர்களுக்கு நேர்ந்த உண்மையான நிகழ்வுகளை வெளியிட்டிருப்பார்கள். அதிலொன்றை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தது. ஒரு ஊரில் வசித்த பெரியவரும், அவரின் மனைவியும் தங்கள் பிள்ளைகளுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பதாகத் துவங்கி பின்னாளில் அவர்கள் அவதிக்குறுவது போல் நிகழ்வை எழுதியிருந்தார். முழுவதையும் படித்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டேன். அதைப் படிக்கத் துவங்கிய சில வரிகளில் நான் கண்டுபிடித்துவிட்டேன். அது கி.ரா. எழுதிய கதையொன்றின் தழுவல். கண்டிப்பாக உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. (உண்மையில் இப்போதெல்லாம் அம்மாதிரியான நிகழ்வுகள் நடப்பது சாதாரணம் ஆகிவிட்டது)

நிம்மாண்டு நாயக்கர், பேரக்காள் எனும் இரு வயசாளிகளின் வாழ்ந்து கெட்ட கதை அது. காய்ச்ச மரம் எனும் அக்கதையின் தலைப்பே கதையை சொல்லிவிடும். ஆனால் கி.ராவின் கதை சொல்லும் உத்திகள் நம்மை ஒரு கிராமத்து பெரிய வீட்டில் உலவவிட்டு கதை சொல்லாது. அம்மாதிரியான பெரிய வீட்டின் திண்ணையில் நம்மை அமரவைத்து யாரோ ஒரு பெரியவர் சொல்வது போலவே இருக்கும். அநேகமாக அதுதான் நான் படித்த கி.ராவின் முதல் கதை. இன்னும் மனதுக்குள் நிழலாடும் கதைகளுள் அதுவும் ஒன்று.

அதன் பின் கி.ரா எழுதிய கதைகள் எதையும் படிக்க எனக்கு வாய்ப்பே இல்லை. அபுனைவு நூல்களைத் தேடித் தேடி படித்த ஆண்டுகள் அவை. பின்னர் ஈராண்டுகளுக்கு முன் அழியாச் சுடர்கள் தளத்தில் சில கதைகளை எடுத்து வைத்தேன்.

கன்னிமை:

இதுவும் படித்து முடித்த மாத்திரத்தில் நம்மை ஈர்த்துக்கொள்கிற கதைளுள் ஒன்று. வெகு இயல்பாக ஒரு பெண்ணை நமக்கு அறிமுகப்படுத்தி அவளின் கதையை சொல்லியிருப்பார். நாச்சியாரம்மா எனும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை இது. கதையின் பாதி தூரத்துக்கு வந்த பிறகு முதல் ஆச்சர்யம் எனக்கு.

ஆம். இதில் கி.ரா கையாண்டிருந்த கதை சொல்லும் உத்தி எனக்கு முதல் ஆச்சர்யம். அது சரியாக கதையின் நடுவே எடுபடுகிறது. அதையெல்லாம் விட முக்கியம் தலைப்பிற்கும் கதைக்குமான சரியான உறவு. எளிய தலைப்புகளில் அத்தனை பொருத்தமான கதைகள்.

கோமதி:

சரியாக கன்னிமை கதையை படித்த மறுநாள் இக்கதையை படித்தேன். இக்கதையை படிக்கும் முன் சில நாட்கள் முன்பு ஜெயகாந்தன் எழுதிய அக்கினிப் பிரவேசம் கதையைப் படித்தேன்.

அக்கினிப் பிரவேசம், கோமதி போன்ற கதைகளெல்லாம் 1960களில் தமிழில் எழுதப்பட்ட கதைகள். 2015-ல் கூட எப்படித்தான் சினிமாவிலும், சீரியல்களிலும் காட்சி எழுதுகிறார்கள் என்று தலையில் அடிக்காத குறை.

-இது நான் அப்போதே எங்கள் வட்டத்திற்குள் பகிர்ந்துகொண்ட ஒரு வரி.

கோமதி கதை ஓரிடத்தில் கூட சிறு உறுத்தல் கூட நேராமல் நம்மைக் கையில் பிடித்துக்கொண்டு நடக்கிற மாதிரி சொல்லிக் கொண்டு போவார். படித்து முடித்ததும் அன்றைய தினம் வேறு வேலை கிடையாது.

கதவு:

சரியாக மூன்றாவது நாள். கன்னிமை, கோமதி கதைகளை படித்து முடித்த அடுத்த நாள் படித்த கதை இது. மிகச் சிறிய கதை. ஆனால் வலுவான கதை. சிறுவர்கள் இருக்கும் கதை எப்போதும் அழகு. தொலைந்து போன பால்யங்களை மீண்டும் நினைவுபடுத்தும் இக்கதைக்குள் சொல்லாமல் சொல்லிய விஷயங்கள் ஏராளம்.

நிறைய பேர் இக்கதையை மையப்படுத்தி ஆராய்ச்சிக் கட்டுரைகளும், குறும்படங்களும் எடுத்திருக்கிறார்கள் என சமீபத்தில் அறிய நேர்ந்தது. குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான். ஆனால் இது பெரியவர்களுக்கான கதைதான்.

மின்னல்:

புனைவு எனும் புதிர் பத்திகள் மூலமாக எனக்கு அறிமுகமான கதை இது. அலுவலகத்தில் வேலைநேரத்தில் அமர்ந்து படித்து முடித்தேன். அன்றைய நாள் அத்தனை குதூகலமாக நகர்ந்தது. ஒரு நல்ல சிறுகதை வாசிப்பு நமக்கு தரக்கூடிய உச்சமான மகிழ்ச்சி இதுதான்.

முன்னமே சொன்னதுதான். எளிய வார்த்தைகளில் அமைந்த தலைப்புகளில் நுட்பமாக, எளிமையாக, தெளிவாக சொல்லப்பட்ட இக்கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். படிக்கப் படிக்க மீண்டும் படிக்கத் தூண்டும் கதைகள் இவை. தமிழின் மிக முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான கி.ராஜநாராயணன் எழுதிய எல்லா கதைகளையும் படித்துவிட வேண்டுமென்ற ஆர்வம் உண்டு. சூழல் அமைய வேண்டும். பார்க்கலாம்.

செப்டம்பர் பதினாறாம் தேதி எழுதி பதிவாகியிருக்க வேண்டிய இப்பதிவு இத்தனை தாமதமாய் வந்தமைக்கு வருத்தங்கள். அதே நேரம் இப்பதிவு மூலம் என்னாலான அளவில் இக்கதைகளை நான் இன்னும் சிலருக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். அவர்கள் படிப்பார்கள். என்னோடு கண்டிப்பாக விவாதிப்பார்கள். அப்போது இக்கதைகள் குறித்தெல்லாம் முழுமையாக பேசலாம். கதைகளையும், கதைகளை எழுதிய கி.ரா – வையும் அறியாதவர்களுக்கு கதைகளை அறிமுகம் செய்வதுதான் இப்பதிவின் நோக்கமே தவிர கதைகளை முழுக்கச் சொல்லி ஒரு வாசகரை யோசிக்கவிடாமல், முழுமையான வாசிப்பனுபவம் கிடைக்கவிடாமல் செய்வதல்ல.

மின்னல் எனும் கதை நேர்த்தியான தரத்தில் இணையத்தில் இல்லை. ஆகவே அக்கதையின் நேர்த்தியான பிரதி இங்கே.

எளிய தமிழில் சொல்வது…

வணக்கம்.

புதிய மின்னூல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம். நான் எழுதிய மின்னூல் ஒன்று வெளியாகியுள்ளது. (தரவிறக்க இணைப்பு பதிவின் இறுதியில் உள்ளது.)

எளிய தமிழில் WordPress.

மின்னூல்

எளிய தமிழில் WordPress

ஏறக்குறைய மூன்றாண்டுகளாய் நீடித்த மின்னூல் உருவாக்கம் இது. ஆகவே ஒருவகையில் இது மகிழ்ச்சியான செய்தி. மூன்று ஆண்டுகள் என்றாலும் புத்தகம் சிறிய புத்தகம்தான். அதை ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு எனக்கான சூழல் கடைசிவரை அமையவே இல்லை. ஆகவே இது ஒரு பெரும் தாமதம்.

கணியம் தொடங்கப்பட்ட காலத்திலேயே (அதன் முதன்முதல் இதழ் முதலாகவே) அதை அறிந்து வியந்தோம் நானும் என் நண்பர் ஓஜஸும். நான் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை எழுத விரும்பி கணியம் பொறுப்பாசிரியரை அணுகினேன். இதை எழுதுறீங்களா? என சுலபமாக அவர் கொடுத்த வாய்ப்பு இப்போது அனைவருக்குமான இம்மின்னூலாக மாறியுள்ளது.

உண்மையில் இம்மாதிரி மின்னூல்கள் எழுதுவது சுலபம். ஆனால் அதை எழுத நேரம் சரியாக அமைவது ஒருவகை அதிர்ஷ்டம். அதேசமயம் தமிழில் கணினி தொடர்பான நூல்களை எழுதுபவர்களை விட அதிக சிரமம் அடைபவர்கள் அதைப் படிக்கிறவர்கள்தான்.

நான் அடிப்படையில் தமிழ்வழியில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் படித்தவன். ஆகவே தமிழில் கணினி தொடர்பான கலைச்சொற்களைப் படிப்பது ஒருவகை சவால்!

பள்ளியில் உயிரியியல் படித்த பலருக்கும் கணிப்பொறி படிப்பவர்களைக் கண்டால் சின்னதாக பொறாமை கூட இருக்கும். நாங்கள் எளிதாக மதிப்பெண் பெறுகிறவர்கள் என்பார்கள்.

எங்கள் பாடத்திட்டம் அப்படி! அதைத் திருத்த முயல வேண்டியது கல்வித்துறைதான்.

வேர்ட்பிரஸ் குறித்து எழுத எவ்வளவோ விஷயங்கள் உண்டு. தொடர்ச்சியாக மேம்பாட்டில் இருக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள் அது.

நான் இந்நூலில் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாமே அடிப்படையானவை. இந்த அடிப்படை விஷயங்களையும் நூலாக்குவதில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. சாதாரண வேர்ட்பிரஸ் மென்பொருளுக்கும், வலைப்பூவாக நாம் பயன்படுத்தும் வேர்ட்பிரஸ் தளங்களுக்கும் இடையேயான வித்தியாசங்களினால் சில சமயம் நானே குழம்பிவிட்டேன் என்பதே உண்மை.எதை நோக்கி எழுதுவது என்கிற குழப்பத்தில் இரண்டிற்கும் பொதுவான விஷயங்களை மட்டும் எழுதியிருக்கிறேன்.

இருமுறை நானே எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஒருமுறை கணியம் பொறுப்பாசிரியர் த.சீனிவாசன் அவர்கள்தான் வேர்ட்பிரஸ் தொடர்பான நூலுக்கான தேவை குறித்து மேலும் சொன்னார். போதாமல் யாரோ ஒருவர் வேர்ட்பிரஸ் குறித்த மின்னூலைக் கேட்டு கணியம் குழுவினருக்கு மின்னஞ்சல் வேறு அனுப்பியிருந்தார்.

அவ்வளவுதான். விரைவாக மீண்டும் எழுதத் துவங்கிவிட்டேன்.

இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. A4 PDF மின்னூல் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. நானே மின்னூல் வடிவமைப்பு செய்ய வேண்டியது. ஆனால் என்னிடம் முழுமையான Content இல்லை. சில மாதிரி படங்கள் அழிந்துபோய் விட்டன.

மீண்டும் கணியம் தளத்திலிருந்து எடுத்து ஒட்டினாலும், தகவல்பிழைகள் ஏதும் வரக்கூடும் என்கிற பயம் வேறு. பொறுப்பாசிரியரிடமே பொறுப்பை ஒப்படைத்து நகர்ந்து கொண்டேன்.

ஒரு விஷயம் மட்டும் உறுதி.

தமிழில் கணினி தொழில்நுட்ப நூல்களை எல்லோரும் படிக்கும்படி எழுதுவது ஒரு சவால். அதை ஓரளவு நான் வென்றிருக்கிறேன் என நம்புகிறேன். தனிப்பயனாக்குதல் என்று ஒரு சொல் பயன்படுத்தியிருப்பேன். Customization என்பதன் தமிழாக்கம் அது. எத்தனை பேருக்கு அதெல்லாம் புரியுமோ தெரியாது! மற்ற இடங்களிலெல்லாம் முடிந்த மட்டும் தமிழும், ஆங்கிலமும் கலந்து நெருடல் இல்லாமல் எழுதியிருக்கிறேன்.

[விஷயம் என்ற சொல்லை முன்பு விடயம் என்றே நான் பயன்படுத்தினேன். அதுவும் இம்மின்னூலில் அப்படியே இருக்கிறது. இப்போது நான் விஷயமாகத்தான் எழுதுகிறேன் விடயமாக அல்ல!]

தற்போதைய வேர்ட்பிரஸ் வசதிகள் முழுமையாக இம்மின்னூலில் ஒருவேளை இருக்காது. அடிப்படையில் குழப்பம் இல்லை. மாதிரிப் படங்கள் மாறியிருக்கலாம்!

இதை மேம்படுத்தி எழுத வேண்டிய தேவை மீண்டும் எழும். அப்போது குறைகளை நானே களைவேன் என நம்புகிறேன்.

தமிழில் தொழில்நுட்ப நூல்களுக்கான தேவை அதிகம் உண்டு. அதில் என் பங்கில் ஒரு துளி இது.

இம்மின்னூல் உருவாக்கத்தில் பங்கு கொண்ட த.சீனிவாசன், பிரசன்னா, லெனின் குருசாமி ஆகியோருக்கு என் நன்றிகள் எப்போதும் உண்டு.

வரும் காலங்களில் நிறைய பேர் கணியம், Free tamil ebooks திட்டங்களில் செயலாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

தரவிறக்க இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/learn-wordpress-in-tamil/

நன்றியுடன்

தமிழ்

முதல் புத்தகம் [மின்னூல்]

முதல் புத்தகம் வெளியாகியிருக்கிறது.

முதல் மின் புத்தகம். பெயர் யோசிக்க ரொம்ப சிரமப்படக்கூடாது என்று எண்ணியிருந்தபடியால் அப்படியே முதல் புத்தகம் என்றே நூலுக்குப் பெயரும் வைத்தாயிற்று.

சொல்லப்போனால் இது அதிகாரப்பூர்வமான முதல் மின்னூல். இதற்கு முன்பு இரு மின்னூல்களை தொகுத்து நண்பர்களின் வாசிப்புக்காக அனுப்பியிருந்தேன். அதெல்லாம் முழுக்கவே சுயபதிவுகள் என்பதால் பொதுவெளியில் வைக்கவில்லை.

மின்னூல் வெளியிட வேண்டுமென்று கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே விருப்பம் இருந்தது. அதற்காக நண்பர்கள் சிலர் எவ்வளவோ உழைப்பைக் கொட்டினார்கள். அத்தனையும் கிட்டத்தட்ட வீணாகிவிட்டது. அதற்காக அவர்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.

கணியம் வலைத்தளம் தொடங்கிய ஓராண்டின் இறுதியில் அதில் ஒரே ஒரு பதிவு எழுதியிருந்தேன். பின்னர் அதன் ஆசிரியரான திரு. த. ஸ்ரீனிவாசன் அவர்களிடம் வேறேதேனும் எழுத யோசனைகள் தேவையெனக் கேட்டேன். அவர் ஒரு பெரும் வாய்ப்பைக் கொடுத்திருந்தார். அதை முழுக்க முடித்திருந்தால், அதுவே என்னுடைய முதல் மின்னூலாக  கணியம் குழு மூலமாக வந்திருக்கும்.

அந்த காலகட்டத்தில் துவங்கப்பட்ட திட்டமே free tamil ebooks திட்டம். ஒன்றிரண்டு நூல்கள் வெளியிட்ட காலத்திலேயே அக்குழுவிலிருந்து அழைப்பு கிடைத்தது. என்னுடைய தளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வலைப்பதிவுகளின் இணைப்புகள் கேட்டிருந்தனர்.

அப்போதிருந்த மனநிலையில் அது எனக்கு உவப்பானதாகப் படவில்லை. நான் உருப்படியாக ஒன்றும் எழுதியிருக்கவில்லை என்று என் ஆழ்மனதில் ஒரு எண்ணம் இப்போது வரையுமே இருக்கிறது.

மதிப்பில் இனிய ரஞ்சனி நாராயணன் அவர்களும் இதே போல் ஒரு தொகுப்பு மின்னூல் வெளியிட்ட காலத்தில் அவருக்கு எழுதிய மின்னஞ்சலில் சொல்லியிருப்பேன். நீங்கள் ஏதேனும் புனைவு எழுதியிருக்கலாம் என்று.

அப்போதைய மனநிலை அப்படித்தான் இருந்தது.

அதுதான் இணையத்தில் தளத்திலேயே இருக்கிறதே.. அதை ஏன் மீண்டும் தொகுத்து மின்னூல் ஆக்க வேண்டுமென்ற எண்ணம். பிறரது முயற்சிகளைப் படிக்கையில்தான் அந்த திட்டம் சிறப்பானதாகப் பட்டது.

ஆனால் இப்போதும் என் தளத்தில் உருப்படியான கட்டுரைகள் என்று எடுத்தால் எத்தனை தேறுமென்று தோன்றவில்லை.

சில மாதங்கள் முன்பு தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்நூல். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 09 2015) வெளியாகியுள்ளது. (இணைப்பு இறுதியாக உள்ளது.)

முதல் புத்தகம் இருபத்து ஐந்து பக்க அளவில் இருந்தால் போதுமென விரும்பியிருந்தேன். ஆனாலும் நாற்பது பக்க அளவில் இருந்தால் நன்றாக இருக்குமென வெளியீட்டாளர் விருப்பம் கொண்டார். சில பதிவுகள் புதிதாக எழுதி, சிலவற்றை கூடுதலாகச் சேர்த்து நாற்பது பக்கங்கள் கொண்டு வந்தேன்.

பல நண்பர்களின் வாழ்த்துகள் கிடைத்தன. ஒரே ஒரு மின்னஞ்சல் (இதுவரைக்கும்) அறியாத ஒருவரிடமிருந்து வந்தது. இத்தளத்தைக் கூட புதிதாக நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். இன்னொரு தளத்தில் கூட இந்நூலில் அறிமுகம் காணக் கிடைக்கிறது. சில மின்னஞ்சல் குழுக்களில் இப்புத்தகத்தை எடுத்துச் சென்று அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

நிறைய பேர் வாசித்தால் மிக்க மகிழ்ச்சிதான்.

பிழைகள் ஏதும் இருப்பின் பொறுத்தருள்க. நானே மெய்ப்பு பார்த்ததால் இப்படித்தான் இருக்கும். என் கண்ணில் என் பிழைகள் படாது அல்லது தாமதமாகக் கண்ணில் தெரியும். இதே புத்தகத்தை நண்பர் ஓஜஸ் எழுதியிருந்தார் என்றால்  என் கண்ணில் பிழைகள் சுலபமாகப் பட்டிருக்கும். ராசி அப்படி!

முதல் புத்தகம் cover image

முதல் புத்தகம்

நண்பர்களின் பங்களிப்போடு என் நூல் வர வேண்டுமென விரும்பினேன். அட்டைப்படம் என் தோழர் மூலமாக வரையப்பட வேண்டுமென விரும்பியிருந்தேன். பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நானே உருவாக்கி விட்டேன்.

வழக்கமான அட்டைப்படம் மாதிரி இல்லவே இல்லை. அதன் காரணம் நானேதான். இன்னுமொரு புத்தகம் இதைவிடச் சிறப்பாக நான் எழுதினால் அப்போது வேறு கதை சொல்கிறேன். அதுவரைக்கும் இதுதான்.

முன்னுரை படிக்க, வெவ்வேறு வடிவங்களில் தரவிறக்க…
http://freetamilebooks.com/ebooks/first-book/
பரவலாக என் நூல் செல்லுமாறு வெளியிட்ட free tamil ebooks குழுவினருக்கு நன்றி திரு, ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு என் நெகிழ்ச்சியான வணக்கம்.

தமிழ்
அக்டோபர் 12 2015

தமிழ் வளர்க்க

தமிழை வளர்க்க என்ன வழி?
முதல் வழி பேசுவது. நல்ல தமிழை எழுதவும் பேசவும் செய்தாலே அது வளரும். ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசப் பழக வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது கொஞ்சம் கடினமாகக் கூட இருக்கலாம். இது எல்லோருக்குமானது.
ஆனால் வளரும் தலைமுறைக்காரர்களிடம் நல்ல தமிழை விதைத்தால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். நல்ல தமிழ்நூல்களை வாசிக்கப் பழக்கினால், அதன் சுவையில் அவர்களாகவே தமிழை உணர்ந்து படிப்பார்கள்.

குறளைச் சொல்லித் தருகையில் அதன் பொருளை நிதானமாக, அதன் பொருட்சுவையை அழகாக எடுத்துரைக்கும் தமிழாசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் பாடத்திட்டம் அதனை அனுமதிப்பதில்லை. அங்குதான் முதல் அடி விழுகிறது.

திருக்குறள் என்பது ஏதோ மனப்பாடம் செய்ய முடியாத கடினமான ஒன்றாக மாணவர்கள் முன் நிற்கிறது. இதர செய்யுள்களுக்கும் அதே நிலைமை. உரைநடைப் பாடமென்பது தமிழின் உரைநடையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதாக அமைய வேண்டும். அங்கும் குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதிலாகவே அவை இருக்கின்றன.

அடிப்படையில் கேள்வித்தாள் என்பது மிகவும் நேரடியாக இருக்கிறது. மறைமுகமான கேள்விகளும், சிந்தித்து சுயமான விடையளிக்கும் வகையிலும் அமைய வேண்டும்.

துணைப்பாடம் என்றொரு பகுதி உண்டு. சுவையான கதைகள் கொண்ட பகுதி.
தமிழ் இரண்டாம் தாளில் ஒரு வினா வரும். கற்பனையாக யோசித்து எழுதக் கூடிய பகுதி. ஒன்பதாம், பத்தாம் வகுப்பில் கவிதை எழுதக் கூட கேள்விகள் உண்டு. ஆனால் அவற்றுக்கெல்லாம் பதிலாக இன்னொரு கேள்வி(கள்) இருக்கும். அவற்றிற்கான நோக்கமே அழிந்திடும்.

இளவல் ஒருமுறை அந்த கற்பனையான கேள்விக்கு பதில் எழுதியமைக்கு ஆசிரியர் கண்டித்திருக்கிறார். அதற்கு பதிலாக நேரடியான கேள்விக்குப் பதில் எழுதப் பணித்திருக்கிறார். நானும் கற்பனையான கேள்விகளைத் தவிர்த்திருக்கிறேன். ஒரே காரணம் மதிப்பெண்.

தமிழை வளர்க்க நிறையவே வழிகள் உண்டு. அவை இப்போது அடைபட்டு நிற்கின்றன. ஒரு இரவில், ஒரு நாளில் மாற்றம் நிகழ்ந்து விடாதுதான். நாம் சிறிய அளவில் முயற்சியெடுத்தால் போதும். ஒவ்வொருவரின் பங்களிப்பால்தான் இது சாத்தியமாகும். இங்கே நிறைய பழமைவாதிகள் உண்டுதான். அவர்களை மீறிக்கொண்டுதான் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.

பள்ளிகள் தமிழைப் பேசவும், எழுதவும், வாசிக்கவும் பழக்கும் இடமாக இருப்பின் நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். பள்ளிப்படிப்பை முடிக்கிறவர்கள் துளியும் தமிழ் தெரியாமல் வெளிவருகிற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் இப்போதைக்கு போதுமானது. அடுத்தது மதிப்பெண் குறித்த கவலைகள்.

 

**

நண்பரொருவர் கேட்ட கேள்விக்கு என்னளவில் யோசிக்கத் தொடங்கி எழுதியதை அப்படியே பதிந்துவிட்டேன். இன்னும் யோசனைகள் இருக்கலாம். இது என்னுடைய யோசனை அவ்வளவே.

-தமிழ்.