வரலாறு

நல்லதோர் வீணை செய்து…

தஞ்சை வீணை:
தஞ்சாவூரில் தலைமுறை தலைமுறையாக வீணைகளை உருவாக்கி வருகிறார்கள் நாராயணன் (65) குடும்பத்தினர். அவருடைய பணிக்கூடம் தஞ்சை தெற்கு மூல வீதியில் இருக்கிறது. அவர்கள் அங்கு மாதம்தோறும் நான்கு அல்லது ஐந்து வீணைகளை உருவாக்குகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் பல்வேறு திறன்வாய்ந்த கைவினைஞர்களின் உழைப்பு தேவைப்படுகிறது.

வீணை இந்தியாவின் தேசிய இசைக்கருவி. பழமையான ஒன்றும் கூட. ஆனால் தற்போது வீணை உருவாக்குபவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் குறைந்துகொண்டே வருகிறார்கள். தஞ்சையில் இப்போது ஏறத்தாழ பதினைந்து குடும்பங்கள் வீணையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அடுத்த தலைமுறையில் இது பாதியாக குறையக் கூடும்.

மூன்றாவது தலைமுறையாக வீணை ட்யூன் செய்து வரும் கோவிந்தராஜன் (55) தனக்கு அந்தளவு கல்வியறிவு இல்லாவிட்டாலும் (இசை)சுருதி குறித்த ஞானம் உண்டு என்கிறார். இவர் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இப்பணியில் இருக்கிறார். இவரோடு இத்துறை அறிவு மங்கிவிடுமென சொல்கிறார். காரணம் – இவருக்கு மகன்கள் இல்லை. கற்றுக்கொடுக்க இவருக்கு விருப்பம் இருப்பினும், புதிதாக இதைக் கற்றுக்கொண்டு தொடர யாருக்கும் ஆர்வமில்லை.

வீணைகள் எப்பொழுதும் பலா மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்படும். பழமையான வயது முதிர்ந்த கட்டைகளைக் கொண்டே செய்யப்படும். கட்டைகள் குறிப்பிட்ட வடிவில் தஞ்சையில் உள்ள சிவகங்கை தோட்டத்தில் அறுக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன.

செந்தில்குமார் (34) எனும் ஐந்தாம் தலைமுறை கைவினைஞர் தனக்கு கிடைத்து வரும் வருவாய் தன் தாத்தாவின் கிடைத்த வருவாயைக் காட்டிலும் பத்து விழுக்காடு குறைவு என்கிறார். பணவீக்கம், விலைவாசி உயர்வு என காரணங்கள் உண்டு. மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம் என அனைத்துமே இருமடங்காகி விட்டது. ஆனால் வீணையின் விலை அப்படியில்லை.

வீணையை உருவாக்குவதென்பது உடனடியாக கற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பார்வைத் துல்லியமும், அனுபவமும் இரண்டறக் கலக்க வேண்டியது முக்கியம்.
நாராயணின் அப்பாவின் காலத்தில் பலாமரக்கட்டைகள் சுலபமாக கிடைத்து வந்துள்ளது. இப்போது அனைத்தும் வெட்டப்பட்டு ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது பலா மரக்கட்டைகள் வாங்க பண்ருட்டி வரை பயணிக்கிறார்கள். அதிலும் முப்பது முதல் நாற்பது வருடங்களான பலா மரக்கட்டைகளே தேவை.
அப்போதைக்கும் இப்போதைய காலத்துக்குமான ஒரே வித்தியாசம் அதன் தேவை. நிறைய இளைஞர்கள் இசைக்கருவிகள் கற்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் எங்களை எப்படி கண்டுபிடித்து வருவார்கள்? எங்களின் பணிக்கூடங்கள் சிறியது. இன்னும் சிலர் இதை குடிசைகளில் உருவாக்குகிறார்கள். ஆனால் வீணை வாங்குகிறவர்கள் குளிரூட்டப்பட்ட கடைகளில் வாங்குகிறார்கள். அங்குதான் வீணைகளை தேர்வு செய்யவும் முடிகிறது.

வீணை 12,000 ரூபாய் முதலாக 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கைவினைஞர் தோராயமாக நாள் ஒன்றுக்கு முன்னூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை ஈட்ட முடிகிறது. அது அவர்களின் அன்றாட செலவுகளை சமாளிக்கவே போதுமானதாக இருக்கிறது.

வீட்டிலிருந்து இத்தொழிலை நடத்துவது பெரும் கடினமான ஒன்று. தொழிலாளருக்கான சம்பள உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு தவிர, வணிக ரீதியான மின் கட்டன உயர்வும் கூட வரும் இலாபத்தில் கை வைக்கிறது.

நாராயணின் ஒரு சிறிய நம்பிக்கை, சமீபத்தில் தஞ்சை வீணைக்கு கிடைத்த புவிசார் குறியிட்டு விருதுதான். தஞ்சை வீணைதான் அரசின் புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக்கருவி. இவ்விருது வீணை உருவாக்குபவர்களின் வாழ்க்கைத்தரம் உயர உதவுமென நம்புகிறார்கள். வீணை என்றில்லாமல் இவ்விருது மூலமாக தஞ்சை வீணை என்கிற பெயர் உலகளாவிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.

ஆனால் மேற்கொண்ட வளர்ச்சிக்கு மாநில அரசை நாடுகிறார்கள். இப்போது சேவை வரி இல்லை. அதேபோல் அரசு இசைக்கல்லூரிகளின் மூலமாக ஓரளவு தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை. மூத்த கைவினைஞர்களுக்கான உதவித்தொகை, புதிய பயிற்சி நிலையங்கள் ஆகியனவும் முக்கியமானவை. அப்போதுதான் இக்கலையையும், தலைமுறையையும் பாதுகாக்க இயலும்.

சிறப்புத்தன்மை வாய்ந்த சில வீணைகள் 35,000 முதலாக 40,000 வரையாக விறபனையாகின்றன. ஆனால் இவற்றை வாங்குவது வெளிநாட்டினர் மட்டுமே. அவர்கள் நம்முடைய கைத்தொழியையும், தலைமுறைகள் கடந்து வீணைகளை முன்னெடுக்கும் நம் உழைப்பையும் பாராட்டுகிறார்கள். அது பாராட்டாக மட்டுமே இருக்கிறது. உண்மையில் இக்குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேலாக உயர்த்தினால் மட்டுமே இக்கலை உயிர்ப்புடன் இயங்கும்.

இன்றைய (12-07-2015) தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவந்த, அபர்ணா கார்த்திகேயன் என்பவர் எழுதிய தொடர் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் தமிழில்.
முழுமையான ஆங்கில மூலக்கட்டுரை மற்றும் படங்களில்.

Advertisements

பாரதியார்- சில குறிப்புகள்

பாரதியார் குறித்து எழுதுவதென்றால், நிறைய எழுதுவதுதான் உத்தமம். முறையும் கூட. இன்றைய நாளில் எண்ணற்ற பதிவுகள் பலராலும் எழுதப்பட்டிருக்கும் என்பதால் சில தகவல்களை, குறிப்புகளை உங்கள் தேடுதலின் பொருட்டு இங்கே பகிர்கிறேன். மேலும் விரிவாக அறிய குறிப்பிடப்பட்டுள்ள தளங்கள், புத்தகங்களை வாசிப்பிற்கு உட்படுத்துவதே நலம்.

40 வயது கூட முழுமையாக வாழ்ந்திராதவர். 20 ஆண்டு இளமைக்குள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். மகாகவி எனும் பட்டத்திற்குப் பொருத்தமானவர். குறிப்பிட்ட தளத்திற்குள் அடங்கிப் போகாத இவருடைய எழுத்தின் வீச்சு நாமெல்லாம் அறிந்ததே.

இந்திய அளவில் மகாகவி எனுமாறு குறிப்பிடத்தக்கவர்கள் இருவரே. தாகூரும், பாரதியுமே அவ்விருவருமாவர். 1905-ம் ஆண்டு வங்கப் பிரிவினை நிகழ்ந்தது. அதன்பொருட்டு அப்போது தாகூர் எழுதிய கவிதை ஒன்றில் இந்தியர்களாகிய நாமெல்லோரும் ஒன்றுபட்டவர்கள் என்ற கருத்தில் பாட்டமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட அதே சூழலில், பாரதியார் சுதேசமித்திரனில் முதல்  கவிதையாக (15-09-1905) ‘வங்க வாழ்த்துக் கவிகள்’ என்ற தலைப்பில் எழுதுகிறார்.

பல்வேறு கருத்துகளில் இரு கவிஞர்களும் ஒரே மாதிரியாக சிந்தித்தும், பாடியும் வந்துள்ளனர். இருவருக்கும் கொள்கை அளவிலான வேறுபாடுகளும் அதிகம்தான். குறிப்பாக சொல்லப் போனால், பாரதியார் குறித்து தாகூர் அறிந்திருந்தாரா? என்பதே நமக்குத் தெரியாது. ஆனால், பாரதியார் தாகூர் குறித்து அறிந்திருக்கிறார். அவரைப் பாராட்டி எழுதியுள்ளார். அவரின் படைப்புகள் சிலவற்றை தமிழாக்கம் செய்துள்ளார்.

தமிழில் தொ.மு.சி. ரகுநாதன் பாரதி குறித்த சில நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை இங்கே படிக்கலாம்.

பாரதி – சில பார்வைகள்
பாரதியும் ஷெல்லியும்

கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)

தமிழின் கவிதை உலகிற்கு மறுமலர்ச்சி தந்த கவிஞராகத் திகழ்ந்த பாரதியார். பின்னாட்களில் பல்வேறு கவிஞர்கள் தோன்றவும் காரணாமாயிருக்கிறார். பாரதிதாசனும், அவருக்குப் பின்வந்த பாரதிதாசன் பரம்பரை எனும் பெயர் பெற்ற கவிஞர்களும் நாம் அறிந்தவர்களே.

பெருங் கவிஞராக அறியப்படும் பாரதியாரின் முப்பெரும் படைப்புகளாகக் குறிப்பிடப்படுபவை. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியனவாகும். இதில் பாஞ்சாலி சபதம் என்பது மகாபாரதக் கதையாக பாரதியார் வடிக்கவில்லை.

இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத மாதாவாகவும், கௌரவர்களை வெள்ளையர்களாகவும், பாண்டவர்களை இந்திய மக்களாகவும்  உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது.

இறுதியாக ஒரு துளி!

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

மேலும் படிக்க:

முப்பெரும் படைப்புகள்

பெரும்பாலும் கவிஞராகவே அறியப்பட்டாலும், பாரதியார் உரைநடையும் நன்கு எழுதக்கூடியவர்.

பாரதியாரின் உரைநடைச் செல்வங்கள்

புயலின் மூலம் தோன்றியவர்!

”இந்நாவலை எழுதி முடித்ததும், என்னைச் சுற்றிவளைத்திருந்த இரும்பு வளையமொன்றிலிருந்து விடுபட்ட உணர்வு பெற்றேன். அசைய முடியாமை என்ற துன்பத்தை வென்றேன். மறுபடியும் போர்வீரர்களில் ஒருவனாக மாறிவிட்டேன்.” 

நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி

நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி

வீரம் விளைந்தது (How the Steel Was Tempered?) எனும் நூலினைப் படிக்கத் துவங்கியதில் இருந்து மனதுக்குள் இருந்த எண்ணற்ற பெயர்களுள் ஒன்று நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி  – Nikoloi Ostroveysky.. ஆம். அந்நூலை படைத்த ஆசிரியர் அவர்தான். அக்கதையின் நாயகனான பாவெல் கர்ச்சாகின் எனும் கதாபாத்திரம் ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் வாழ்வில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அக்கதையில் வரும் அனைவருமே உண்மையான கதாபாத்திரங்கள் என்றும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1904-ம் ஆண்டு பிறந்த இவர் 32 வயது வரை வாழ்ந்தவர். அதில் போர்முனையில் படுகாயமுற்றதால் தன் வாழ்வின் கடைசி 12 வருடங்களை பார்வையில்லாமல் கழித்துள்ளார். 1931-ல் வீரம் விளைந்தது என்கிற நூலை எழுதி முடிக்கிறார்.

இந்நாவலின் முதல் வாசகருமாகவும் இருந்து, அவருக்கு கடைசிவரை ஆதரவு தந்தவர் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி ஆவார்.

1934-ல் இந்நூல் முழுமையாக வெளியானது. ரஷ்யாவில் வெளிவந்த Young Guard எனும் இதழில் தொடராக வந்தது. பின்னர் இரு பாகங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு புத்தகமாக 1936-ல் வெளியானது.

நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, ரஷ்யாவின் மாஸ்கோ நகரின், முக்கிய வீதிகளில் ஒன்றான கோர்க்சி வீதியில் அவர் வாழ்ந்த 14-ம் எண் வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் How the Steel Was Tempered? நூலின் பல நாட்டு பதிப்புகளும் சேகரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சோவியத் ரஷ்யாவில் இந்நாவலை மையப்படுத்தி இரு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை,

  • How the Steel Was Tempered, 1942 
  • Pavel Korchagin, 1956

இதன் பின்னர் ஆசிரியர் புயலின் மூலம் தோன்றியவர்கள் (Born of the Storm) எனும் நூலை எழுதத் துவங்கினார். ஆனால் அந்நூலை எழுதி முடிக்கும் முன்பே வாழ்வை முடித்துக்கொண்டார்.

வீரம் விளைந்தது நூலை முடித்தவுடன் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி கூறியவையே இப்பதிவின் துவக்கத்தில் உள்ளன.

நூலின் ஆங்கில மூலம், மற்றும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.

நூல் பல வாசி!

சில புத்தகங்களை எந்த பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என்று அடித்து சொல்லலாம். விறுவிறுப்பான நாவல்களை வேண்டுமானால், சரியான இடத்தில் இண்டர்வெல் போல நிறுத்திப் படிக்கலாம். மற்றபடி பல புத்தகங்கள் இந்த வகையில் சேராது. அதிலும், சிலரின் இயல்பு வேறு. தொடர்ச்சியாக புத்தகங்களைப் படிக்க ஏதுவாக நேரம் அமையாது போகலாம். அதே நேரம், தொடர்ந்து புனைவுகளாகப் படிக்கிறவர்களுக்கும் ஒரு மாறுதல் தேவையெனில் மாற்று தேடலாம்.

அவர்களுக்கு மாற்றாக நான் பரிந்துரைப்பது கட்டுரை நூல்கள். கட்டுரைத் தொகுப்புகள் நிறைந்த நூலைப் படிக்கத் தேர்ந்தெடுக்க பல காரணங்களைச் சொல்லலாம். சிலவற்றை இங்கே எடுத்துக் கொள்கிறேன்.

எப்போது வேண்டுமானலும் படிக்கலாம். எவ்வித தயக்கமும் இல்லாமல், படிக்கலாம். எங்கிருந்து வேண்டுமானாலும், எந்தப் பக்கத்திலிருந்தும் தொடங்கலாம். நாவல்களில் ’இவ்வசதி’ அறவே இல்லை. சிறுகதைத் தொகுப்புகள் தனி.

ஏனென்றால் அவற்றை படிக்கவும் உணரவும் ஒரு காலமும், சூழலும் தேவை. குறிப்பாக என்னைப் போன்றவர்கள் அந்த ரகம்தான். எனக்கு ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படிக்க சில சூழல்கள் அமைய வேண்டுமென்பேன். அதனாலேயே, பல புத்தகங்களைத் தாமதமாக, சில புத்தகங்களை மிகத் தாமதமாக, படிக்க நேரிட்டது.

சரி கதைக்கு இல்லையில்லை, கட்டுரைக்கு வருவோம்.

கட்டுரைத் தொகுப்புகளில் என்ன படித்தாலும் ஏதாவது ஒரு விடயம் நம் சிந்தனைக்குள் சிக்கி மூளைக்கு வேலை வைக்கும் இப்படி நமக்கு நடந்திருக்கிறதே என்றோ, ஓகோ, இப்படியெல்லாம் நடக்கிறதா என்றும் தோன்றும், இதில் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தனி. என்னைக் கேட்டால் தமிழில் நூற்றுக்கு எண்பது தன்னம்பிக்கை புத்தகங்கள் குப்பையான நடையில், எழுதப்படுகின்றன. சாதித்தவன் இப்படி செய்தேன் என்று எழுதலாம். தோற்றவன் கூட இப்படி செய்யக் கூடாது என்று எழுதலாம். ஆனால்.. சரி விடுங்கள். இங்கேயும் சில தன்னம்பிக்கை நூல்களைத் தருகிறேன். அவற்றை உங்கள் own risk-ல் படியுங்கள். இல்லையேல், பொதுவான நூல்களைத் தைரியமாக படிக்கத் தொடங்குங்கள்.

வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தொடர்ந்து பல கட்டுரை நூல்களை எழுதியிருக்கிறார் என நம்புகிறேன்., கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 எழுதியிருப்பார். இப்போது கூட தினத்தந்தியில் எழுதி வருகிறார்.

அவர் எழுதிய சில நூல்கள் எங்கள் வீட்டு நூலக அலமாரியையும் அலங்கரிக்கின்றன. படிப்பது சுகமே! என்ற புத்தகத்தைப் படிக்க சுகமாகவே இருக்கும். தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த கட்டுரைகள்/ வழிமுறைகள் அடங்கிய நூல். தற்போதைய மதிப்பெண்/மனப்பாட கல்விமுறைக்கு இப்புத்தகம் ஒத்துவராது. இது அதிக மதிப்பெண் வாங்க உதவும் நூல் அல்ல என்றும் அந்நூலிலேயே எழுதியிருப்பார்கள்.

அடுத்ததாக ஏழாவது அறிவு என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் 3 பாகங்கள் கொண்ட தனித்தனி நூல்கள். எளிய வாசிப்புக்கு எனது பரிந்துரை மூன்றாம் பாகம். கூர்ந்த வாசிப்புக்கு முதல் பாகத்தை எடுக்கலாம். எந்த பாகத்தையும், எந்த அத்தியாயத்திலும் படிக்கலாம். தொடர்ச்சி என்று கிடையாது. குறைந்த அளவு சிந்தனை தெளிவு கிடைக்கலாம்.

அவரின் அனுபவங்களும் உரையாடல்களும் நிரம்பிய ஓடும் நதியின்  ஓசை (2 பாகங்கள்) நூலும் இதே வகை. ஆனாலும் தங்குதடையற்ற நடை. இறுதியாக, முத்தாய்ப்பாக ஒரு சொல்லாடல் என வசீகரிக்கும் கட்டுரை புத்தகம். இதுதவிர ..எஸ் தேர்வு அணுகுமுறைகள் நூலையும் அதைகுறித்து அறிய விரும்புபவர்கள் வாங்கலாம். இவையனைத்தும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) வெளியீடு.

சிபி. சாலமன் எனக்கு மிஸ்டர் பாப்புலர் நூலைப் படித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பின் 3 நூல்கள் படித்துவிட்டேன். தன்னம்பிக்கை நூல்களுக்கான நடையில் சற்று தூக்கலான நடை அமைத்து படிக்கும்படி எழுதியிருப்பார். மிஸ்டர் பாப்புலர் நூல் எல்லோருக்கும் படிக்க வேண்டியதன் தேவை இருக்காது என்பது என் கருத்து. இதே ஆசிரியர் எழுதிய குஷி-100 நூலை எல்லோரும் படிக்கலாம். 100 குட்டி, குட்டி வழிமுறைகள் அடங்கிய சுவாரசியமான புத்தகம். இதுதவிர நான் படித்து ஓரளவில் ’செயல்படுத்திப்’ பார்த்த புத்தகம் இவர் எழுதிய 5S! ஜப்பானிய சூத்திரங்கள் ( செய்ரி, செய்டன், செய்சோ, செய்கெட்ஸு, ஷுஸுகே ) பற்றிய அறிமுக நூல். இந்த 3 நூல்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு.

ஈழம் குறித்து அறிவதற்கு எண்ணற்ற நூல்கள் உண்டு. தற்போதைய தமிழ் வாசிப்புச் சூழலில் நிறைய நூல்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும் தரம் சிறப்பாகவே உள்ளது. அதில் ஒரு நூல் இது. 2009-க்கு சற்று முன் இலங்கை சென்றுவந்த ஓவியர் புகழேந்தி அவர்கள் எழுதிய பயணக்கட்டுரை வடிவிலான புத்தகமே, தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும். கவித்துவமான தலைப்பு என்றாலும் நூலுக்குள் சொல்லவந்த கருத்துகள் வன்மை மாறாமல் சரியாக எழுதப்பட்டிருப்பதாக படித்தவர்கள் எனக்கு பரிந்துரைத்த நூல் இது. தமிழீழத்தில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைக்கச் சென்ற ஓவியரின் பார்வையில் மன உணர்வுகளை அப்படியே தந்துள்ளார். “தமிழீழத்திற்குச் சென்று உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் துடிப்பவர்கள், இந்நூலைப் படிப்பார்களானால், நிச்சயம் மனநிறைவு அடைவார்கள்” என்று பழ. நெடுமாறன் அவர்களால் பாராட்டப்பட்ட நூல். நூலின் உள்ளேயே இதன் விமர்சனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு ஆட்டோ ஓட்டுநரும் அடக்கம். தோழமை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

கடிதங்களைச் சேகரிப்பது என்பது சுவாரசியமான ஒன்று. கடிதங்களைப் படிப்பதில் எல்லோருக்கும் உவகை இருக்கும்தான். வரலாற்றில் எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகள் இருந்திருக்கின்றன. மூதறிஞர் வெ. சாமிநாதசர்மா அவர்கள் எழுதிய வரலாறு கண்ட கடிதங்கள் என்ற சிறுநூல் சில கடிதங்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. நூல் இப்போது அச்சில், வெளியீட்டில் உள்ளதா? என்று தெரியவில்லை. எனக்குக் கிடைத்த பிரதி 1998-ம் வருடப் பதிப்பு. பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலை நூலகங்களில் கிடைத்தால் வாசிக்க மறவாதீர்.

கடிதங்களை விட பேச்சுக்கு மதிப்பு அதிகம். அதிலும் செயல்மிகு தலைவர்கள் பல்வேறு தருணங்களில் ஆற்றிய உரைகள் இன்னும் பிரசித்தம். பொன்.சின்னத்தம்பி முருகேசன் எழுதிய உலகப் பேருரைகள் எனும் நூல் அந்த வாய்ப்பை நமக்குத் தரும். கி.மு 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் பெரிக்கில்ஸ் முதல் நெல்சன் மண்டேலா வரையான 25 பேரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள் இப்புத்த்கத்துள் இருக்கின்றன. இந்தியக் கவிஞர் தாகூர் அமெரிக்காவில் இந்திய தேசியவாதம் குறித்து 1925-ல் ஆற்றிய உரையும் இதில் அடக்கம். சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

சுஜாதா அவர்களின் அணிந்துரை மூலமாக எனக்கு எழுத்தாளர் லா.ச.ரா அவர்களின் நூல்கள் மேல் ஒரு விருப்பம் இருந்தது. அவரின் குறுநாவல் ஒன்றைப் படித்திருக்கிறேன். கேரளத்தில் எங்கோ ஓரிடத்தில் வசிக்கும் ஒரு முதியவரின் நினைவுகளும், வாழ்வும், அனுபவங்களும், சமூக நிலைகளும் குறித்த நூலே கேரளத்தில் எங்கோ
எதிர்பாராத நடை, பாத்திர அறிமுகங்கள், சுளீர் உரையாடல் என நான் படித்த அவரின் முதல் புத்தகத்திலேயே ஈர்த்துவிட்டார். உயிர்மை பதிப்பக வெளியீடு இந்நூல்.

பெங்களூரில் (1916) பிறந்து 18 வயதில் எழுதத் தொடங்கிய இவரின் முதல் சிறுகதை ஆங்கிலத்தில் வெளிவந்தது. 90 வயது வரை வாழ்ந்த இவர் சென்னையில் (2007) மரணம் அடைந்தார். இவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை.

இந்நூலின் மின்பிரதி இதோ: கேரளத்தில் எங்கோ
இன்னும் இன்னும் நிறைய வாசிக்க காத்திருப்பும் அவசியமானதே!

போர்!

மீண்டும் சில புத்தகங்கள்…

ஒவ்வொரு புத்தகத்தை வாசிக்கையிலும், ஏதோ ஒரு அனுபவம் நமக்குக் கிடைக்கிறது. எல்லோருக்கும் கிடைக்கவில்லையென்று வாதம் இருப்பின், எனக்குக் கிடைக்கிறது எனக் கொள்க. பெரும்பாலும் வரலாற்று நாவல்கள் படிப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கும். என் பள்ளி ஆசிரியர்கள் யாரும் தூண்டியதாக எனக்கு இதுவரை நினைவில்லை. ஏதோ ஜீன் சம்பந்தப்பட்ட விடயமாகவும் இது இருக்கலாம். எப்படியோ, வரலாறு மேல் ஒரு ஈர்ப்பு.

நாவல் எழுதுகிறவர்கள் ஆங்காங்கே சலிப்பில்லாதபடி, வரலாற்று நிகழ்வுகளைத் தொட்டுக் காண்பிப்பார்கள். அந்த நூலைப் பிடித்து நாமும் கொஞ்சம் அறிய ஏதுவாக இருக்கும். மாறாக Non-Fiction வகை எழுத்துக்களில் அதிலும் வரலாற்று நூல்களை (குழப்பிட்டேனா? ) படிப்பதில் நாம் அதிகம் சலிப்படையக் கூட நேரலாம்.

அண்ணன் ஒருவர் சமீபத்தில் TET தேர்வு எழுதினார். அவருக்கு உதவும் வண்ணம் என்னையும் அவர் வீட்டுக்கே வரச் சொன்னார். போனேன். பள்ளிக்கல்வியில் சமச்சீராக மாற்றம் நடந்த பிறகு, நான் (கிட்டத்தட்ட) எல்லா புத்தகங்களையும் கண்டது அங்கேதான். நானெல்லாம் 1947++ வரைதான் வரலாறு படித்திருந்தேன். அதிலும் பெரும்பாலும் இந்திய வரலாறு.  இப்போது 10-ம் வகுப்பு படிக்கிறவர்களுக்கே, உலக வரலாறை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். இதில் என் கருத்தை அழுத்தமாகவே சொல்லிவிடுகிறேன். படிப்பதற்கு சற்றே கடினமான வரலாறு பகுதிதான் அது.  அதிலெப்படி ஆளாளுக்கு 100/100 வாங்க முடியும்? என்று யோசித்து, விசாரித்ததில், வினாத்தாள் அமைப்பு முறையில் பெரும் வித்தியாசம் இருப்பதாக அறிந்தேன். எப்படியோ? அது போகட்டும் கதை.

அங்கே அண்ணனுக்கு வரிவரியாகப் படித்து, பத்திபத்தியாக கதை சொல்லி வரலாறு பாடம் படித்தேன். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் திடீரென நினைவு கிளறியது. அதில் உள்ள தகவல்கள் எல்லாமே பெரும்பாலும் எனக்குத் தெரிந்தவை. ஆனால் நடை சற்று கண்டிப்பாக இருந்தது. (பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக இல்லாமல் என்ன? )

நான் சில ஆண்டுகளுக்கு முன்புதான், எழுத்தாளர் மருதன் எழுதிய இரண்டாம் உலகப் போர் நூலைப் படித்தேன். அந்நூலின் அட்டையும் கதை சொல்லும்! முதல் உலகப் போர் என்கிற நூலையும் அவரே எழுதியிருக்கிறார் என்பதை பின்னர் அறிந்தேன்.

பொதுவாக இந்தப் போர்களை எங்காவது எடுத்துக் காட்டினால், ஹிட்லரின் பெயரையும் சேர்த்து எழுதாமல் போனால், தெய்வக்குத்தம் ஆனாலும் ஆகிவிடும்! அந்தளவு நிறைய நூல்களில் ஹிட்லர்தான் நிற்கிறார். அதாகப்பட்ட ஹிட்லர், முதல் உலகப் போரில் கடைநிலை சிப்பாய்களில் ஒருவராக இருந்தார். அதே ஹிட்லர்தான், இரண்டாம் உலகப் போரின் நாயகன் (துவக்கப் புள்ளி என்றும் படிக்கலாம்!) என்று பல்வேறு நூல்களில் படித்த நினைவு. இதில் சில புத்தகங்களில் தமிழ்ப்படுத்துகிறேன் என நினைத்தோ, என்னமோ, முதல் மற்றும் இரண்டாம் நாடுபிடிச் சண்டைகள் என்று கூட எழுதியிருந்தார்கள். முதல் உலகப் போரில் அதிகம் அடிபட்டது ஜெர்மனி. பிராய்சித்தம் அடைய எண்ணி இரண்டாம் உலகப்போரில் இரண்டாகவே பிரிந்து விட்டது வேறு கதை. அதெல்லாம் விடுங்கள்….

எனக்கு மருதன் எழுத்தின் மேல் கொஞ்சம் ஈர்ப்பு உண்டு. வரலாற்று விடயங்களை  (நான் படிக்கையில் எனக்கு ) சலிப்பு ஏற்படுத்தாமல் எழுதியவர்களுள் இவர் முதன்மையானவர். அதற்கும் வரலாற்று ரீதியான காரணங்களை நான் தருவேன். ஆனால் அது இப்போது அல்ல.

”தரையைக் காட்டி இதோ நம் அதிபர் என்றார்”

“ஒப்பந்தமாவது புடலங்காயாவது என்று  போரில் குதித்தது……. ”

இப்படி நிறைய இடங்களில் அலுக்காமல்,  எழுத்துக்களைக் கொண்டே வரலாறு சொல்வார் அவர். சற்றே மலிவான முறை என்றாலும், மேற்படி அதிகம் அறிந்துகொள்ள அவரின் நூல்கள் என்னைத் தூண்டியிருக்கின்றன. வரலாறைப் படிக்க நினைப்பவர்கள் 6-10 வரை உள்ள சமச்சீர் கல்வி புத்தகங்களில் சமூக அறிவியல் பாடத்தை மட்டும் படிக்க முயற்சிக்கலாம். நல்ல பொழுதுபோக்கு!

ட்விட்டரில் ஒரு ட்வீட் படித்தேன். வைரமுத்து மூன்றாம் உலகப் போர் நாவலை விகடனில் துவக்கியபோது. அதை எழுதியது @sanakannan என்று நினைக்கிறேன்.

”மூன்றாம் உலகப் போர் எழுதுகிறார் வைரமுத்து. முதல் இரண்டு உலகப் போர்களையும் மருதன் எழுதிவிட்டதால் .” என்கிற பொருளில் எழுதியிருந்தார். சற்று வார்த்தைகள் மாறி இருக்கலாம். பொறுத்தருள்க.

நட்பில் இனிய தோழர் அர்ஜூன் அவர்கள் மூலமாக இரண்டாம் உலகப் போர் நூலைப் படித்தேன். அவரே ஆர்வங்கொண்டு தேடி, எனக்கு இப்புகைப்படங்களை அனுப்பினார்.  இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட போர் விமானங்களுள் சிலவற்றை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

தோழருக்கு நன்றி.

This slideshow requires JavaScript.