மொழி

பாரதியார்- சில குறிப்புகள்

பாரதியார் குறித்து எழுதுவதென்றால், நிறைய எழுதுவதுதான் உத்தமம். முறையும் கூட. இன்றைய நாளில் எண்ணற்ற பதிவுகள் பலராலும் எழுதப்பட்டிருக்கும் என்பதால் சில தகவல்களை, குறிப்புகளை உங்கள் தேடுதலின் பொருட்டு இங்கே பகிர்கிறேன். மேலும் விரிவாக அறிய குறிப்பிடப்பட்டுள்ள தளங்கள், புத்தகங்களை வாசிப்பிற்கு உட்படுத்துவதே நலம்.

40 வயது கூட முழுமையாக வாழ்ந்திராதவர். 20 ஆண்டு இளமைக்குள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். மகாகவி எனும் பட்டத்திற்குப் பொருத்தமானவர். குறிப்பிட்ட தளத்திற்குள் அடங்கிப் போகாத இவருடைய எழுத்தின் வீச்சு நாமெல்லாம் அறிந்ததே.

இந்திய அளவில் மகாகவி எனுமாறு குறிப்பிடத்தக்கவர்கள் இருவரே. தாகூரும், பாரதியுமே அவ்விருவருமாவர். 1905-ம் ஆண்டு வங்கப் பிரிவினை நிகழ்ந்தது. அதன்பொருட்டு அப்போது தாகூர் எழுதிய கவிதை ஒன்றில் இந்தியர்களாகிய நாமெல்லோரும் ஒன்றுபட்டவர்கள் என்ற கருத்தில் பாட்டமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட அதே சூழலில், பாரதியார் சுதேசமித்திரனில் முதல்  கவிதையாக (15-09-1905) ‘வங்க வாழ்த்துக் கவிகள்’ என்ற தலைப்பில் எழுதுகிறார்.

பல்வேறு கருத்துகளில் இரு கவிஞர்களும் ஒரே மாதிரியாக சிந்தித்தும், பாடியும் வந்துள்ளனர். இருவருக்கும் கொள்கை அளவிலான வேறுபாடுகளும் அதிகம்தான். குறிப்பாக சொல்லப் போனால், பாரதியார் குறித்து தாகூர் அறிந்திருந்தாரா? என்பதே நமக்குத் தெரியாது. ஆனால், பாரதியார் தாகூர் குறித்து அறிந்திருக்கிறார். அவரைப் பாராட்டி எழுதியுள்ளார். அவரின் படைப்புகள் சிலவற்றை தமிழாக்கம் செய்துள்ளார்.

தமிழில் தொ.மு.சி. ரகுநாதன் பாரதி குறித்த சில நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை இங்கே படிக்கலாம்.

பாரதி – சில பார்வைகள்
பாரதியும் ஷெல்லியும்

கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)

தமிழின் கவிதை உலகிற்கு மறுமலர்ச்சி தந்த கவிஞராகத் திகழ்ந்த பாரதியார். பின்னாட்களில் பல்வேறு கவிஞர்கள் தோன்றவும் காரணாமாயிருக்கிறார். பாரதிதாசனும், அவருக்குப் பின்வந்த பாரதிதாசன் பரம்பரை எனும் பெயர் பெற்ற கவிஞர்களும் நாம் அறிந்தவர்களே.

பெருங் கவிஞராக அறியப்படும் பாரதியாரின் முப்பெரும் படைப்புகளாகக் குறிப்பிடப்படுபவை. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியனவாகும். இதில் பாஞ்சாலி சபதம் என்பது மகாபாரதக் கதையாக பாரதியார் வடிக்கவில்லை.

இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத மாதாவாகவும், கௌரவர்களை வெள்ளையர்களாகவும், பாண்டவர்களை இந்திய மக்களாகவும்  உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது.

இறுதியாக ஒரு துளி!

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

மேலும் படிக்க:

முப்பெரும் படைப்புகள்

பெரும்பாலும் கவிஞராகவே அறியப்பட்டாலும், பாரதியார் உரைநடையும் நன்கு எழுதக்கூடியவர்.

பாரதியாரின் உரைநடைச் செல்வங்கள்

Advertisements

நூல் பல வாசி!

சில புத்தகங்களை எந்த பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என்று அடித்து சொல்லலாம். விறுவிறுப்பான நாவல்களை வேண்டுமானால், சரியான இடத்தில் இண்டர்வெல் போல நிறுத்திப் படிக்கலாம். மற்றபடி பல புத்தகங்கள் இந்த வகையில் சேராது. அதிலும், சிலரின் இயல்பு வேறு. தொடர்ச்சியாக புத்தகங்களைப் படிக்க ஏதுவாக நேரம் அமையாது போகலாம். அதே நேரம், தொடர்ந்து புனைவுகளாகப் படிக்கிறவர்களுக்கும் ஒரு மாறுதல் தேவையெனில் மாற்று தேடலாம்.

அவர்களுக்கு மாற்றாக நான் பரிந்துரைப்பது கட்டுரை நூல்கள். கட்டுரைத் தொகுப்புகள் நிறைந்த நூலைப் படிக்கத் தேர்ந்தெடுக்க பல காரணங்களைச் சொல்லலாம். சிலவற்றை இங்கே எடுத்துக் கொள்கிறேன்.

எப்போது வேண்டுமானலும் படிக்கலாம். எவ்வித தயக்கமும் இல்லாமல், படிக்கலாம். எங்கிருந்து வேண்டுமானாலும், எந்தப் பக்கத்திலிருந்தும் தொடங்கலாம். நாவல்களில் ’இவ்வசதி’ அறவே இல்லை. சிறுகதைத் தொகுப்புகள் தனி.

ஏனென்றால் அவற்றை படிக்கவும் உணரவும் ஒரு காலமும், சூழலும் தேவை. குறிப்பாக என்னைப் போன்றவர்கள் அந்த ரகம்தான். எனக்கு ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படிக்க சில சூழல்கள் அமைய வேண்டுமென்பேன். அதனாலேயே, பல புத்தகங்களைத் தாமதமாக, சில புத்தகங்களை மிகத் தாமதமாக, படிக்க நேரிட்டது.

சரி கதைக்கு இல்லையில்லை, கட்டுரைக்கு வருவோம்.

கட்டுரைத் தொகுப்புகளில் என்ன படித்தாலும் ஏதாவது ஒரு விடயம் நம் சிந்தனைக்குள் சிக்கி மூளைக்கு வேலை வைக்கும் இப்படி நமக்கு நடந்திருக்கிறதே என்றோ, ஓகோ, இப்படியெல்லாம் நடக்கிறதா என்றும் தோன்றும், இதில் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தனி. என்னைக் கேட்டால் தமிழில் நூற்றுக்கு எண்பது தன்னம்பிக்கை புத்தகங்கள் குப்பையான நடையில், எழுதப்படுகின்றன. சாதித்தவன் இப்படி செய்தேன் என்று எழுதலாம். தோற்றவன் கூட இப்படி செய்யக் கூடாது என்று எழுதலாம். ஆனால்.. சரி விடுங்கள். இங்கேயும் சில தன்னம்பிக்கை நூல்களைத் தருகிறேன். அவற்றை உங்கள் own risk-ல் படியுங்கள். இல்லையேல், பொதுவான நூல்களைத் தைரியமாக படிக்கத் தொடங்குங்கள்.

வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தொடர்ந்து பல கட்டுரை நூல்களை எழுதியிருக்கிறார் என நம்புகிறேன்., கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 எழுதியிருப்பார். இப்போது கூட தினத்தந்தியில் எழுதி வருகிறார்.

அவர் எழுதிய சில நூல்கள் எங்கள் வீட்டு நூலக அலமாரியையும் அலங்கரிக்கின்றன. படிப்பது சுகமே! என்ற புத்தகத்தைப் படிக்க சுகமாகவே இருக்கும். தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த கட்டுரைகள்/ வழிமுறைகள் அடங்கிய நூல். தற்போதைய மதிப்பெண்/மனப்பாட கல்விமுறைக்கு இப்புத்தகம் ஒத்துவராது. இது அதிக மதிப்பெண் வாங்க உதவும் நூல் அல்ல என்றும் அந்நூலிலேயே எழுதியிருப்பார்கள்.

அடுத்ததாக ஏழாவது அறிவு என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் 3 பாகங்கள் கொண்ட தனித்தனி நூல்கள். எளிய வாசிப்புக்கு எனது பரிந்துரை மூன்றாம் பாகம். கூர்ந்த வாசிப்புக்கு முதல் பாகத்தை எடுக்கலாம். எந்த பாகத்தையும், எந்த அத்தியாயத்திலும் படிக்கலாம். தொடர்ச்சி என்று கிடையாது. குறைந்த அளவு சிந்தனை தெளிவு கிடைக்கலாம்.

அவரின் அனுபவங்களும் உரையாடல்களும் நிரம்பிய ஓடும் நதியின்  ஓசை (2 பாகங்கள்) நூலும் இதே வகை. ஆனாலும் தங்குதடையற்ற நடை. இறுதியாக, முத்தாய்ப்பாக ஒரு சொல்லாடல் என வசீகரிக்கும் கட்டுரை புத்தகம். இதுதவிர ..எஸ் தேர்வு அணுகுமுறைகள் நூலையும் அதைகுறித்து அறிய விரும்புபவர்கள் வாங்கலாம். இவையனைத்தும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) வெளியீடு.

சிபி. சாலமன் எனக்கு மிஸ்டர் பாப்புலர் நூலைப் படித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பின் 3 நூல்கள் படித்துவிட்டேன். தன்னம்பிக்கை நூல்களுக்கான நடையில் சற்று தூக்கலான நடை அமைத்து படிக்கும்படி எழுதியிருப்பார். மிஸ்டர் பாப்புலர் நூல் எல்லோருக்கும் படிக்க வேண்டியதன் தேவை இருக்காது என்பது என் கருத்து. இதே ஆசிரியர் எழுதிய குஷி-100 நூலை எல்லோரும் படிக்கலாம். 100 குட்டி, குட்டி வழிமுறைகள் அடங்கிய சுவாரசியமான புத்தகம். இதுதவிர நான் படித்து ஓரளவில் ’செயல்படுத்திப்’ பார்த்த புத்தகம் இவர் எழுதிய 5S! ஜப்பானிய சூத்திரங்கள் ( செய்ரி, செய்டன், செய்சோ, செய்கெட்ஸு, ஷுஸுகே ) பற்றிய அறிமுக நூல். இந்த 3 நூல்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு.

ஈழம் குறித்து அறிவதற்கு எண்ணற்ற நூல்கள் உண்டு. தற்போதைய தமிழ் வாசிப்புச் சூழலில் நிறைய நூல்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும் தரம் சிறப்பாகவே உள்ளது. அதில் ஒரு நூல் இது. 2009-க்கு சற்று முன் இலங்கை சென்றுவந்த ஓவியர் புகழேந்தி அவர்கள் எழுதிய பயணக்கட்டுரை வடிவிலான புத்தகமே, தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும். கவித்துவமான தலைப்பு என்றாலும் நூலுக்குள் சொல்லவந்த கருத்துகள் வன்மை மாறாமல் சரியாக எழுதப்பட்டிருப்பதாக படித்தவர்கள் எனக்கு பரிந்துரைத்த நூல் இது. தமிழீழத்தில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைக்கச் சென்ற ஓவியரின் பார்வையில் மன உணர்வுகளை அப்படியே தந்துள்ளார். “தமிழீழத்திற்குச் சென்று உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் துடிப்பவர்கள், இந்நூலைப் படிப்பார்களானால், நிச்சயம் மனநிறைவு அடைவார்கள்” என்று பழ. நெடுமாறன் அவர்களால் பாராட்டப்பட்ட நூல். நூலின் உள்ளேயே இதன் விமர்சனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு ஆட்டோ ஓட்டுநரும் அடக்கம். தோழமை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

கடிதங்களைச் சேகரிப்பது என்பது சுவாரசியமான ஒன்று. கடிதங்களைப் படிப்பதில் எல்லோருக்கும் உவகை இருக்கும்தான். வரலாற்றில் எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகள் இருந்திருக்கின்றன. மூதறிஞர் வெ. சாமிநாதசர்மா அவர்கள் எழுதிய வரலாறு கண்ட கடிதங்கள் என்ற சிறுநூல் சில கடிதங்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. நூல் இப்போது அச்சில், வெளியீட்டில் உள்ளதா? என்று தெரியவில்லை. எனக்குக் கிடைத்த பிரதி 1998-ம் வருடப் பதிப்பு. பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலை நூலகங்களில் கிடைத்தால் வாசிக்க மறவாதீர்.

கடிதங்களை விட பேச்சுக்கு மதிப்பு அதிகம். அதிலும் செயல்மிகு தலைவர்கள் பல்வேறு தருணங்களில் ஆற்றிய உரைகள் இன்னும் பிரசித்தம். பொன்.சின்னத்தம்பி முருகேசன் எழுதிய உலகப் பேருரைகள் எனும் நூல் அந்த வாய்ப்பை நமக்குத் தரும். கி.மு 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் பெரிக்கில்ஸ் முதல் நெல்சன் மண்டேலா வரையான 25 பேரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள் இப்புத்த்கத்துள் இருக்கின்றன. இந்தியக் கவிஞர் தாகூர் அமெரிக்காவில் இந்திய தேசியவாதம் குறித்து 1925-ல் ஆற்றிய உரையும் இதில் அடக்கம். சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

சுஜாதா அவர்களின் அணிந்துரை மூலமாக எனக்கு எழுத்தாளர் லா.ச.ரா அவர்களின் நூல்கள் மேல் ஒரு விருப்பம் இருந்தது. அவரின் குறுநாவல் ஒன்றைப் படித்திருக்கிறேன். கேரளத்தில் எங்கோ ஓரிடத்தில் வசிக்கும் ஒரு முதியவரின் நினைவுகளும், வாழ்வும், அனுபவங்களும், சமூக நிலைகளும் குறித்த நூலே கேரளத்தில் எங்கோ
எதிர்பாராத நடை, பாத்திர அறிமுகங்கள், சுளீர் உரையாடல் என நான் படித்த அவரின் முதல் புத்தகத்திலேயே ஈர்த்துவிட்டார். உயிர்மை பதிப்பக வெளியீடு இந்நூல்.

பெங்களூரில் (1916) பிறந்து 18 வயதில் எழுதத் தொடங்கிய இவரின் முதல் சிறுகதை ஆங்கிலத்தில் வெளிவந்தது. 90 வயது வரை வாழ்ந்த இவர் சென்னையில் (2007) மரணம் அடைந்தார். இவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை.

இந்நூலின் மின்பிரதி இதோ: கேரளத்தில் எங்கோ
இன்னும் இன்னும் நிறைய வாசிக்க காத்திருப்பும் அவசியமானதே!

தாய் நாவல்

இன்று புத்தக தினம். புத்தகங்கள் குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். இங்கே இந்த இனிய நாளில் நான் ஒரு உலகப்புகழ்பெற்ற புத்தகத்தை அறிமுகம் செய்கிறேன். நான் கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து சொல்லி வருகிற புத்தகம்தான் அது.

உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட, பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் பதிப்பிக்கப்பட்ட நூல். மாக்ஸிம் கார்க்கி எழுதிய  தாய் நாவல்தான் அது. ஆங்கிலத்தில் The Mother. ருஷ்ய மொழியில் Мать.

சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும், இளைஞர்களும் கொஞ்சங்கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு, ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதைத் தீட்டியிருக்கிறார்.

புரட்சி என்கிற நிகழ்வில் (ரஷ்யப் புரட்சியை மனதில் கொண்டு எழுதப்பட்டது. 1906-ல் இந்நூல் வந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் ரஷ்யாவில் புரட்சி வெடித்து கம்யூனிசம் வந்தது.) பெண்களின் பங்கைப் பளீரென வெளிக்காட்டுகிறது. பேச்சு, நடை என ஒவ்வொன்றிலும் அடக்குமுறையை நொறுக்கும் நடாஷா. மகனுக்காக முதலில் பரிதாபத்தாலும், பயத்தாலும் உறைந்து, பின் புரட்சியை முன்னெடுக்கும் ’தாய்’ நீலவ்யா பெலகேயா, புரட்சியாளர்களுக்கு உதவும் சோபியா என நாவல் நெடுகிலும் பெண்களின் ஆட்சி.

இந்நாவல் மனிதனை மானுடப்படுத்தி, ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதில் இலக்கியம் வகிக்கிற மகத்தான பாத்திரத்தை நமக்கு உணர்த்துகிறது.

கலைநயமும், கருத்துநுட்பமும் ஒருங்கே அமைந்த நாவல். உழைக்கும் மக்களுக்கான இந்நாவலினை ஒரு தாயின் குரலாக பதிவு செய்த கார்க்கியின் எழுத்துதான் இந்நாவலை உலகத்தரத்தில் பதிய வைக்கிறது. இது காலங்கள் கடந்து நிலைப்பதன் இரகசியமும் இதுதான்.

உலகளவில் சிறந்த இலக்கிய படைப்பாளராக அறியப்படுகிற கார்க்கியின் இயற்பெயர் அலெக்ஸி. 16-03-1868-ல் ரஷ்யாவில் பிறந்த இவர் தாய்வழிப்பாட்டியால் வளர்க்கப்பட்டு, வறுமை காரணமாக கப்பலில் வேலை செய்து பின் தப்பியோடியவர்தான் கார்க்கி.

தமிழில் இந்நூல் 1950-ல் ப.இராமசாமி என்பவரால் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. அது ‘அன்னை’ என்கிற பெயரில் வெளிவந்தது. பின்னர் சோவியத் வெளியீடாக 1975-ல் தொ.மு.சி. இரகுநாதன் எழுதி வந்தது. இப்போது சமீபத்தில் பாரதி புத்தகாலயம் வெளியீடாக இப்புத்தகம் (டிசம்பர்-2012) வெளியானது. மேலும் சுவையான தகவல்களுக்கு இணையத்தில் ஆராயலாம். இப்புத்த்கத்தை மின்புத்தகமாக இங்கே பதிவிறக்கி படிக்கலாம்.

நூலில் கார்க்கியின் நெருப்பு பறக்கும் சில உரையாடல்துளிகள் இங்கே.

“ஒரு பெண் சங்கீதத்தைக் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் அவள் துக்கமாயிருக்கும்போது……”

-சோபியா தாயிடம் சொன்னது.

“ஒரு தாய்க்கு எதற்கும், எத்தனை தடவை வேண்டுமானாலும், சிந்தித் தீர்க்க கண்ணீர் உண்டு. உங்களுக்கு ஒரு தாய் இருந்தால் அப்போது தெரியும்!”

– தாய் விசாரணை அதிகாரிகளிடம் சொன்னது.
“பெண்களுக்கு அழுவதில் பிரியம்” என்று வழிந்த கண்ணீரை வெட்க உணர்ச்சியோடு துடைத்துக் கொண்டே பேசத்தொடங்கினாள் தாய்.
 ”அவர்கள் ஆனந்தம் வந்தாலும் அழுவார்கள், துக்கம் பொங்கினாலும் அழுவார்கள்….”

-ஹஹோல் மற்றும் பாவெலிடம் தாய் சொன்னது.

“முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது”

-ஹஹோல் தாயிடம் சொன்னது.

“நல்லவர்கள் என்றுமே அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை; நல்லவர்களோடு மற்ரவர்கள் வந்து எப்போதுமே ஒட்டிக் கொள்வார்கள்”.

-தாய் நதாஷாவிடம் சொன்னது.

“நாம் மட்டும் நம்மிடமுள்ள சகலமானவற்றையும், நம்மையுமே கொடுக்க, தியாகம் செய்யத் தயாராய் இருந்தால் நம்மால் செய்ய முடியாத காரியம் எதுவுமே இருக்க முடியாது”-தாய் மற்றும் சோபியாவுக்கு ரீபின் சொன்னது.

இளம் இதயங்கள்தான் உண்மையைச் சட்டென்று எட்டிப் பிடித்துக் கொள்கின்றன.

“மக்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. ஆனால் ஒரு தாய்க்குத் தேவையான பொருள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். பாசம். “

எந்த மனிதன் சிரித்துச் சிரித்து விளையாட்டாய்ப் பேசுகிறானோ, அவனது இதயத்தில்தான் வேதனை இருந்துகொண்டே இருக்கிறது.

நூலை இயன்றால் படிக்கத் துவங்குங்கள். உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். ஏற்கனவே படித்து ருசித்தவர்கள் அனுபவங்களைச் சொன்னால் நலம். இனிய புத்தகத்திருநாள் வாழ்த்துகள்.

ருசித்த அனுபவம் ஒன்று:

r.janakiraman 

44 வருடங்களுக்கு முன் படித்த புத்தகம்.எனது இடதுசாரி சிந்தனைகளுக்கு
உரம் இட்ட புத்தகங்களுள் ஒன்று.தாயின் மீது பாசமும் அன்பும் இருந்தாலும்
அதன் ஆழத்தை புரிய வைத்த புத்தகம்.உணர்ச்சியின் வசம் என்னை இழந்தவனாக ஆக்கிய வரிகளை உடைய புத்தகம்.மனித குலத்தின்மேன்மைக்காக போராடும் போராளிகளை மதிக்க கற்று கொடுத்த புத்தகம்.
இன்றளவும் உண்மைக்காக என்னால் தைரியமாக குரல் கொடுக்கஉந்து சக்தியாக இருக்கும் ஆதார சுருதி . எல்லா இளைஞர்களும் எத்தகைய கருத்து உடையவர்களாக இருந்தாலும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்களில் இதற்கு முதல் இடம் தருவேன் .

********

நன்றி.

என் மொழி!

வணக்கம்.

இன்று உலக தாய்மொழி தினம். தெரிந்திருக்கும் எனில் வாழ்த்துகள். இல்லையேல் இப்போது அறிந்திருப்பீர்கள். நம் தாய்மொழி உலகில் சிறந்த மொழி என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொள்ள ஏதுவாக நமக்கெல்லாம் பிறமொழியினருக்கு வாய்க்காத அளவில் இலக்கிய, இலக்கண செல்வங்கள் இறைந்து கிடக்கின்றன.

நான் அறிந்த, நமக்கெல்லாம் தெரிந்த சில தகவல்களை இங்கே, இந்நாளில் பகிர ஆவல்.

நம் தாய்மொழி தமிழ். அதை உயர்தனிச் செம்மொழி எனலாம். மற்ற மொழிகளினின்று உயர்ந்த மொழி. தனித்து இயங்கும் மொழி. செம்மையான மொழி என எளிதாக இதன் பொருளை அறியலாம்.

தமிழ் – என்றால் அழகு. தமிழ் –என்றால் இனிமை. தமிழ் என்றால் இளமை. தேன் தமிழ், தீந்தமிழ் முதலான சொற்களின் பொருளால் இதை உணரலாம்.

தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்தால் தம்மிடத்தில் ’ழ்’ ழைக் கொண்ட மொழி என பொருள்படும்.

தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.

தமிழின் இனிமையைச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப சரியான சொற்கள் தமிழில் புகுந்து தொடர்ந்து இன்றும் இயங்கி வருகின்றது.

தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.

நிலவில் மனிதன் இருந்தால் பேசியிருக்கக் கூடிய சாத்தியமுள்ள மொழிகளுள் தமிழும் ஒன்று. உலகளவில் அதிக மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட பைபிள் இந்தியாவில் முதன்முதலில் தமிழில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. அதிலும் மொழிபெயர்த்தவர் (பார்த்தலோமியு சீகன்பால்க் – Bartholomaus Ziegenbalg) பிறப்பால் தமிழர் இல்லை என்பதும் ஆச்சர்யம்.

ஜி.யு. போப்பும், கான்ஸ்டாண்டைன் ஜோசப் பெஸ்கியும் (வீரமாமுனிவர்) தமிழுக்குத் தொண்டாற்றிய மேனாட்டவர்கள். வீரமாமுனிவர் தமிழில் 5 எழுத்துக்களை சீரமைத்துள்ளார். இலக்கண நூல் (சதுரகராதி) ஒன்றையும், பிற இலக்கண, இலக்கியப் படைப்புகளையும் தந்துள்ளார் (தேம்பாவணி, பரமார்த்தகுரு கதைகள்….). ஜி.யு.போப் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவரின் கல்லறை வாசகம் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என அறிகிறேன். (”இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்.”)

தமிழ்த் தாத்தா உ.வே.சா, பரிதிமாற்கலைஞர், முனைவர். கால்டுவெல் மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான அறிஞர்களின் அபாரமான ஈடுபாட்டின் காரணமாகவே இன்று நம் மொழி தொடர்ந்து உயிர்பெற்று இயங்குவதையும் எக்காலத்திலும் மறக்கக் கூடாது.

இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் நம் மொழியும் இருக்கிறது.

தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு என கொண்டாடுகிறோம்.

தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு  எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே.

சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப் பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.

தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள், இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை. தமிழ்மொழியிலே நிறைவாக உள்ளன என்பதையே தமிழின் தனிச்சிறப்பு எனக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றோம்.

ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் இது திருநாள்தான் என நம்புகிறேன். எல்லோருக்கும் தாய்மொழி கண்டிப்பாக இருக்கும்தானே!

எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் இனிய தமிழ்ச்சொற்களை பேசியும், எழுதியும் நம் மொழியின் இனிமையை நம்மால் கொண்டாட முடியுமே!

பெருமைப்பட காரணங்கள் எண்ணில் அடங்காமல் இருக்கின்றன. நம் தாய்மொழியின் சிறப்பை எண்ணி மகிழ்ந்து கொண்டாடுவோம்.

தேனொக்கும் தமிழே! நீ கனி. நான் கிளி. வேறென்ன வேண்டும் இனி?

தமிழுக்கு அமுதென்று பேர்- இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!

தமிழா! நீ தமிழ் வாழப் பணியாற்று- தமிழல்லவா உனை இயக்கும் உயிர்க்காற்று!

தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும்- எங்கள் இனம் காக்கும் வாளாகும், வேலாகும்.

மேலும் படிக்க (பழைய பதிவு):  தமிழே உயர்வ

ஆனந்தமும், இன்னும் கொஞ்சமும்…

இந்த ஆண்டு துவங்கியதிலிருந்தே நான் குறைவாக எழுதுவதாக இங்கு  தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே அதிகமாகத் தான் எழுதுகிறேன்.

இசைப்பா தொடர்ந்து இயங்க எங்களால் ஆனமட்டும் முயன்றுகொண்டிருக்கிறோம். அண்ணன் கூட தனது நாற்சந்தியில் நெடுங்காலமாய் எழுதாமல் இருக்கிறார். ஆனாலும் நான் தொடர்ந்து இயங்குகிறேன்.

ஆம். நண்பர்கள் தரும் ஒத்துழைப்பின் காரணமாக தொடர்ந்து கூகுள் ப்ளஸ்-ல் குறும்பதிவுகள்-நடப்புகள்-அனுபவங்கள் ஆகியவற்றை மிகக் குறுகிய வட்டத்திற்குள் (Circles) எழுதி வருகிறேன். அவையெல்லாம் எனக்கே எனக்கானவை. பொதுவான பதிவுகள் அல்ல.

அங்கே இயங்குவதன் காரணமாய் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நண்பர்களுக்கு நன்றி. உரைநடை மேல் தான் ஈர்ப்பு அதிகம் இருக்கிறது. ஓரளவில் எழுதவும் இலகுவாய் உள்ளது. ஆனால் ஆசை யாரை விட்டது.

எங்கோ விட்ட குறை தொட்ட குறை இருந்திருக்கும் போல. பல வருடங்களாகவே, உரைநடையின் Cousin Brother என அழைக்கப்படும் கவிதை மேல் ஒரு பிரியம். அவ்வப்போது யோசித்து குட்டி குட்டி வார்த்தைகளில் எழுதிய அனுபவங்கள் இருக்கின்றன.

சமீபமாக இரண்டாண்டுகளாக கிட்டத்தட்ட தினமும் பாடல்கள் கேட்கிற வாய்ப்பு கிடைக்கிறது. கவிதை புத்தகங்களும் கைக்கு கிடைக்கின்றன. எப்படியோ கவிதை தோன்றுவதற்கான சூழலையும் உருவாக்கினேன்.

தமிழ் மொழி அழகிய மொழி. அழகிய வார்த்தைகளின் களஞ்சியம். இதமான வார்த்தைகளைத் தன்னகத்தே கொண்ட தனிப்பெரும் மொழி. தேனினும் இனிய மொழி. இவற்றில் எவருக்கும் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை என்பதும் உண்மை.

தமிழ்க் கவிதைகளில் புதுக் கவிதைகள் தவிர்த்து பிறவற்றில் மென்மையாக அல்லது வன்மையாகவே இலக்கணம் வழிந்தோடும். அது ஒன்றும் தவறில்லை. அதில்தான் அழகியல் பிறக்கும். அந்த வகையில் எனக்கு எதுகைப் பாடல்கள் மேல் பிரியம்.

இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பதுதான் எதுகை.

நேற்று (20-01-2013) மாலை வானிலை மாற்றம் காரணமாக மழைக்கான அறிகுறி தென்பட்டது. மழை எப்போதுமே, பொதுவாக கவிதைக்கான அறிகுறி! நானும் கவிதை எழுத ஆசைப்பட்டு மூன்று வரிகள் எழுதினேன். தமிழ் மொழி அழகிய மொழி என்று சொன்னேன் அல்லவா! அந்த அதிசயம் என்னை இழுத்துச் சென்றது. வார்த்தைகளை மாற்றி மாற்றி எதுகையில் 150க்கும் அதிகமான வார்த்தைகளில் எழுதி,  முடிக்க மனமே இல்லாமல் முடித்தேன்.

முழுமையாக எழுதிய பின் ஓரளவு திருப்தி ஏற்பட்டது. பரவாயில்லை. ஏதோ எனக்கு  எழுத வருகிறது எனத் தோன்றியது. இனி அவ்வப்போது எழுத முயற்சி நடக்கும். வெவ்வேறு இலக்கணங்களை மையப் படுத்தி.

எனது குட்டி-குட்டி கவிதைகளையும் (!) கவிதையாக மதித்து (!!) அவற்றையும் பாராட்டி ஊக்குவித்த அனைத்து தோழர்களுக்கும் எனது இதயத்திலிருந்து நன்றி.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஆனந்தம் எற்படுகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே ஆனந்தம் ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. இதில் நானும் ஆனந்தம் குறித்து நான் உணர்ந்தவற்றில் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் ஏதேனும் தோன்றலாம்.

 மழை நேரத்து தேநீர் ஆனந்தம்!

குடையிருந்தும் நனைந்தால் ஆனந்தம்!
மடை தாண்டும் வெள்ளம் ஆனந்தம்!
விடை சொல்லும் கேள்விகள் ஆனந்தம்!

குயில் பாடும் கீதம் ஆனந்தம்!
மயில் ஆடும்போதும் ஆனந்தம்!

தாகம் தீர்க்கும் தண்ணீர் ஆனந்தம்!
தேகம் குளிரும் காற்றும் ஆனந்தம்!
மேகம் மேல்படரும் வானவில் ஆனந்தம்!

மீளாத கனவுகள் ஆனந்தம்!
மூளாத போர்கள் ஆனந்தம்!
வாளாத நேரங்கள் ஆனந்தம்!

பசிக்கிற நேரத்து உணவுகள் ஆனந்தம்!
ருசிக்கிற வேளையில் இன்னும் ஆனந்தம்!
வசிக்கிற வீட்டின் சூழல் ஆனந்தம்!

பேசுகிற வார்த்தைகள் ஆனந்தம்!
கூசுகிற வெளிச்சம் ஆனந்தம்!
வீசுகிற தென்றல் ஆனந்தம்!
ஏசுகிற எதிரியும் ஆனந்தம்!

கண்டிக்கும் நண்பன் ஆனந்தம்!
தண்டிக்கும் அன்னை ஆனந்தம்!
துண்டிக்கும் மின்சாரம் ஆனந்தம்!
வேண்டிக் கொள்ளும் வரங்கள் ஆனந்தம்!

கரை தொடும் கடலும் ஆனந்தம்!
நுரை பொங்கும் அலையும் ஆனந்தம்!
இரை தேடும் பறவைகள் ஆனந்தம்!

பனி விழும் புல்வெளி ஆனந்தம்!
கனி தரும் மரங்கள் ஆனந்தம்!
இனி வரும் காலங்கள் ஆனந்தம்!

கொட்டுகிற மேளம் ஆனந்தம்!
திட்டுகிற தம்பியும் ஆனந்தம்!
மீட்டுகிற இசையும் ஆனந்தம்!

கதை சொல்லும் குழந்தை ஆனந்தம்!
அதைக் கேட்கும் பொழுதே ஆனந்தம்!
விதை வளரும் செடிகள் ஆனந்தம்!

சிந்திக்கிற எண்ணங்கள் ஆனந்தம்!
சந்திக்கிற உறவுகள் ஆனந்தம்!
நிந்திக்கிற துன்பங்கள் ஆனந்தம்!

வண்ணம் தீட்டும் மழலை ஆனந்தம்!
எண்ணம் வளர்க்கும் சிந்தனை ஆனந்தம்!
மண்ணைத் தொடும் வியர்வை ஆனந்தம்!
விண்ணைத் எட்டும் வெற்றி ஆனந்தம்!

எதுகையில் எழுதினால் ஆனந்தம்!
அதுவரை அனைத்தும் ஆனந்தம்!
இதுவும் கவிதையென்றால் இன்னும் இன்னும் ஆனந்தம்!

இன்றைய நாள் இன்னொரு வகையில் எனக்கு சிறப்பான நாள். ட்விட்டர் தளத்தில் இன்று எனக்கு மூன்றாம் ஆண்டு துவங்குகிறது. இதுவரை துணைநின்ற தோழர்கள், வழிகாட்டிகள் அனைவருக்கும் நன்றி.

எனக்கு தளத்தை அறிமுகம் செய்த அண்ணன் ஓஜஸிற்கும், எப்போதும் வழிகாட்டுகிற மதிப்பிற்குரிய பாலா சாருக்கும் நன்றி.

இதுவும் ஆனந்தம்தான்!

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா?
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா?
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்!
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்!
குயில்களும், மலர்களும் அதிசயம்!
கனவுகள், கவிதைகள் இரகசியம்!!