பொழுதுபோக்கு

சில குறிப்புகள்

திடீரென இந்த வரி நினைவுக்குள் வந்தது. ஏன் என்று கேட்டால் சில கேள்விகளுக்கு பதில் வராதுதான்.

பள்ளியில் படிக்கிற போது, சில பாடல்களை சிறப்பான விளக்கங்கள் மூலம் நடத்திய ஆசிரியர்கள் எல்லோருக்கும் நினைவில் இருப்பார்கள். விளக்கங்கள் உதாரணங்கள் மூலம் மனதில் காலத்திற்கும் நின்றிருக்கும்.
எங்கிருந்தோ வந்து காதில் விழுந்தது.

“போடா! சொன்னப்பயலே”.

எந்த வார்த்தை இப்படி திரிந்து வந்தது என யோசனை போனது. இப்போதெல்லாம் நிறைய வார்த்தைகள் திரிந்துகொண்டே போகின்றன அல்லவா! டங்கா மாரி என்கிற வார்த்தையின் மூலம் அடங்கா மாரி – யா? இடங்கா மாரி- யா? என்றொரு பதிவைக் காண நேர்ந்தது.
பாரதிதாசனுக்கு அறிமுகம் தேவைப்படாது. அவரெழுதிய பாடல் ஒன்றின் ஒற்றை வரி ரொம்ப காலமாக மனதில் இருக்கிறது.

”தொன்னை யுள்ளம் ஒன்றுண்டு – தன்னாட்டு சுதந்தரத்தால் பிறநாட்டை துன்புறுத்தல்”

சொன்னப்பயல் என்கிற வார்த்தை என்னை தொன்னையுள்ளம் வரை கொண்டு சென்றது.
பாரதிதாசனுக்கு அவர் எழுதியதிலேயே பிடித்த பாடல் என்று

”எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்.. ” பாடலைச் சொல்வார்கள். அதில் பாருங்கள்.. ஈனுவது என்பது தாய்க்குரியது. அதில் தந்தை முன்னால் எப்படி வருவார்? இது என் தமிழாசிரியர் ஒருமுறை எழுப்பிய கேள்வி.

இலக்கண வரைமுறைகளின் படி வந்திருக்கலாம் என்பது என் துணிபு. எனை ஈன்ற தாய்க்கும் தந்தைக்கும் என்பதில் ஏதோ குறை இருப்பது போல வாசிக்கையிலேயே தோன்றுகிறது.

சமீபத்தில் அடிக்கடி கேட்ட பாடலென்று சொல்லச் சொன்னால் நிறையவே சொல்லலாம். அதில் இங்கு குறிப்பிட வேண்டியது பாரதியாரின் “ஆசை முகம் மறந்து போச்சே” முழுப்பாடல் ஒலி வடிவில் இல்லையென நினைக்கிறேன். வரி வடிவில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 

”பறவையா பறக்குறோம்..”  பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? பலமுறை நானும் அப்பாடலைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் தோணவில்லை. சமீபத்தில் திடீரென தோன்றியது இப்படி..
அப்பாடலின் ஒரு வரி இப்படிப் போகும்..
”சூரியன் போல நாங்க சுழலுவோம்!”
அறிவியல் படி சுழல்வது பூமிதான். சூரியன் அல்ல!
பாரதிதாசன் – பாரதி – யுகபாரதி என ஒரு சுற்று வந்தாயிற்று அல்லவா!

*
வீட்டுக்கு இம்மாத தொடக்கத்தில் சென்று திரும்பினேன். குறுகிய இப்பயணத்தின் சில மணிநேரங்களை மதுரையில் செலவிட்டேன். மாலை நேரம்தான் சென்றேன் என்றாலும் வெப்பம் அதிகம்.

சீமாந்திரா, தெலுங்கானா மாநிலத் தோழர்கள் சிலரோடு உரையாடினேன். தமிழ்நாட்டை விட ஆந்திரப் பிரதேசம் வெப்பம் அதிகம் என்றே நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் மதுரை அதிகம் சுடுவதாகச் சொன்னார்கள்.

உணவு முறையும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வித்தியாசமாக இருப்பதாகச் சொன்னார்கள். மதியம் மட்டும்தான் சோறு கிடைக்கிறது. காலையும், இரவும் இட்லி, தோசை மட்டும் எப்படி சாப்பிடுவது என்றார்கள். சில உணவுகளை பழகிக் கொள்ளச் சொன்னேன்.

டவுன் ஹால் ரோட்டில், பஞ்சாபி தாபாக்களைக் குறித்து வைத்திருக்கிறார்கள். வாரம் ஒருமுறை தாபாவில் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொன்னார்கள். அதே சாலையில் நான்கு தாபாக்கள் இருப்பதைக் கண்டேன். தமிழ் எழுத்துருக்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்கிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் தமிழ் கற்றுவிடுவார்கள் என நம்புகிறேன். உதவி தேவை என்றால் அழைக்கிறோம் என்றார்கள்.
*
ஒன்றிரண்டு தோழர்கள் சில வருடங்கள் முன்பு குறும்படம் எடுப்பது பற்றி பேசினார்கள். அவ்வப்போது சில உரலிகளை மின்னஞ்சல் செய்வார்கள். பெரும்பாலும் அவர்களின் நண்பர்கள் எடுத்தவை.
காசநோய் விழிப்புணர்வு குறும்படமெல்லாம் பார்க்க வைத்துவிட்டார்கள். அதுவும் எனக்கு டிபி என்று மட்டும்தான் தெரியும். அக்குறும்படம் பார்த்த பிறகுதான் Tuberculosis என்ற முழுப்பெயர் தெரியும். குறும்படங்கள் பார்ப்பதில் இப்படியும் ஒரு நன்மை! இன்னுமொரு தோழர் தன் குறும்படத்துக்கு திரைக்கதையே தயார் செய்திருந்தார் குறும்படம் எடுக்கும் யோசனை இருக்கிறதா என தெரியவில்லை.

நண்பர் நவபாரத் எனக்கு சில ஆண்டுகள் முன்பிலிருந்து பழக்கம். புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். பல்கலைக்கழக அளவில் பரிசெல்லாம் வாங்கியவர். சில குறும்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இன்று காலை அலைபேசி மூலம் அழைத்தேன்.

ஏறக்குறைய இரண்டாண்டுகள் கழித்து வேறொரு எண் மூலம் அழைத்தேன். ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டு பேசினார். வாழ்த்துகள் சொல்லிவிட்டு படம் குறித்த என் புரிதலைச் சொன்னேன். அவர் என்ன நினைத்து எடுத்தார் என்பதைச் சொன்னார். ஒரு ரொமாண்டிக் படம் எடுக்க வேண்டியதுதானே என்றால், அதற்கும் பதில் வைத்திருந்தார். தொழில்முறை ஒளிப்பதிவாளராக இன்னும் அவர் மாறவில்லை. அதற்கான முயற்சிகளில் உள்ளார். ஆனால், ஒளிப்பதிவில் அவருடையஆர்வம் நான் அறிவேன். அவருடைய ஐந்தாவது குறும்படம் இப்போது வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=nUmSkiwsLtc


*

பாரதிதாசன் பாடல் –

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்,
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்,
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்.

Advertisements

புதுப்பாட்டு!

வணக்கம்.

வேறு வேலையே இல்லாமல், வாளாதிருக்கும் காலங்களில் திரையிசைப்பாடல்களின் அடியொற்றி என் வரிகளை இட்டு எழுதிப்பார்ப்பேன். எப்போது பாட்டு எழுதினாலும் சந்தம் தட்டி தட்டி விழுவேன். அதை மிஞ்ச என்னால் ஆகாது. ஏதோ பரவாயில்லை என்றே தோன்றும். அதிலும் ஏற்கனவே எழுதிய வரிகளின் தாக்கம் இல்லாமல் எழுத முனைவேன்.

இப்போதும் பாட்டுதான்!

இது சிறப்புப் பாட்டாச்சே!

கடந்த வாரத்தில் ஒருநாள் எழுதிய பாட்டு இது. இந்த நாள் வாழ்வின் இனியநாட்களில் ஒன்று. எனவே இன்று பொதுவில் வைக்கிறேன். 

என்ன பாட்டு என்பதை அண்ணன் ஓஜஸ் முதல் வரி படிக்கையில் கண்டுபிடித்து விடுவார். முதல் இரு வரிகள் அவர் சொன்னதுதான். எழுதியது கவிஞர் வைரமுத்து!

இப்பாடலின் மூலத்திற்கு இசை(ப்புயல்!) முதன் முதலாக இந்த Combo-ல் முயன்றிருக்கிறேன். கடைசி சரணம் ரொம்ப Bend வாங்கியது.. அதுதான் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

இப்போது வசிக்கும் இடம் என்னுயிரை கொஞ்சம் கொஞ்சமாய் உறைய வைக்கிறது. வெயிலையே சமாளித்துப் பழகிய நான் குளிரை எதிர்கொள்ளத் திணறி, உடல்நலங்கெட்டு, மீண்டு நிதானமாக எழுதியது இப்பாடல். 

 எழுதியதை கற்பனை என்றே கருதவும்..

சில்காற்று உரசிப் போகிறது
உடலை அல்ல – உயிரை!

-தமிழ்

பாட்டு!

விடை- இறுதியில்

______________________

 

இது காஷ்மீரமா?
இது கார்காலமா?
இது கொண்டாட்டமா?
இல்லை திண்டாட்டமா?

உடல் எந்நாளும் பனிக்குள்ளே வீழ்கின்றது
உயிர் எப்போதும் வெப்பத்தில் தாழ்கின்றது

(இது காஷ்மீரமா?)

கதகதப்பை உண்டாக்கி குளிர் நீங்கு
பரபரப்பை தொலைத்து நீ தூங்கு

(இது காஷ்மீரமா?)

தண் என்றொரு சொல்லையெ
புதிதாய் உணர்ந்தேனே நானே
தண் என்றாலே குளிர்ச்சிதான்
புதிதாய் இங்கோர் அலர்ஜி

என் மண்ணில் காணாத தண்மையை 
இம்மண்ணில் கண்டேனே
புது  சில்காற்று எனைவந்து தீண்டையில்
ஏதோர் உணர்ச்சியும் எனை தாக்குதே

(இது காஷ்மீரமா?)

பண் ஒன்றினைப் பாடிட
என் பேனாவும் ஏங்கி அலையும்
உன் அணைப்பென்னை தீண்டிட
என்னுயிர்  தேடி ஓடும்
 
கொஞ்சம் வெப்பம் கொண்டென்னை சூழ்ந்திடு
கெஞ்ச வைக்காதே நீ என்றுமே!
அட! இன்னும் நீ என்னைக் கெஞ்சிடு  
உன் கெஞ்சலுக்கு கால் முளைக்குதே!

(இது காஷ்மீரமா?)

 

பாடலின் மூலம்: புது வெள்ளை மழை 
படம்: ரோஜா

பாடலின் சந்தம் கெடவில்லை என்றே நம்புகிறேன். பிழை இருப்பின் பொறுத்தருள்வது உம் கடன்!

#SeptemberBliss

இனிப்பான பாக்கள்!

பாடல்(கள்) கேட்பதில் இருக்கிற சுகமே தனி. எழுதி உணர்த்த முடியாத ஒன்றை இசை உணர்த்தி விடும். அப்படித்தான் பாடல்களை/இசையைக் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்கள் கண்டிப்பாக சில தருணங்களை உணர்ந்திருப்பார்கள்.

சரி. இது என் தருணம்.

சீனி கம் படத்தில் 3+1+1+2 பாடல்கள். 2 பாடல்கள் தீம் வகை.

3 பாடல்கள் தமிழில் ரசிக்கப்பட்ட பாடல்களின் இந்தி வடிவம். அவை போக அவற்றுள் ஒன்று சோக வடிவம். அவற்றுள் இன்னொன்று சிறிய மாறுதல் கொண்ட வடிவம். இதுதான் 3+1+1+2 .

Cheeni Kum என்ற பாடல் ’மன்றம் வந்த தென்றலுக்கு’ -ன் இந்தி வடிவம்.
Baatein Hawaa என்ற பாடல் ‘குழலூதும் கண்ணனுக்கு’ -ன் இந்தி வடிவம்.
Jaane Du Na என்ற பாடல் ‘விழியிலே மணி விழியிலே’ -ன் இந்தி வடிவம்.

இப்பதிவில் நான் சொல்லப்போவது இந்த 3 பாடல்கள் பற்றிதான்.

ஷ்ரேயா கோஷல் குரலில் ஒலிக்கும் Cheeni Kum பாடல் தந்த உணர்வைச் சொன்னால் உங்களால் உணர முடியுமா? என்று தெரியாது. பயணம் செய்து களைத்துப் போய் நடக்கையில் காதுக்குள் ஒலிக்கத் தொடங்கியது இப்பாடல். இப்பாடல் தந்த உணர்வின் ஒரு கி.மீ தூரத்தை பாடல் முடிவதற்குள் கடந்தேன். முடிந்ததும்தான் கவனித்தேன். இவ்வளவு தூரம் இவ்வளவு வேகமாக வர எது என்னை உந்தியிருக்கும்?

குழலூதும் கண்ணன் பாட்டில் இருக்கும் அதே உணர்வை புது வடிவத்தில் தரும் பாட்டு Baatein Hawaa. குறிப்பாக தமிழில் இரண்டு இடையிசையும் அட்டகாசமாக இருக்கும். இந்தியில் கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் குரலுக்காக எனக்கு ரொம்ப பிடிக்கும். பல்வேறு இனிய தருணங்களுக்கு முன்பு இப்பாடல் என் காதில் ஒலித்திருக்கிறது.

விழியிலே மணி விழியிலே பாடல்தான் Jaane Du Na -வின் மூலம் என்று தெரியாது. ஏதோ ஒரு மதிய நேர பயணத்தில் பேருந்து ஓட்டுநர் புண்ணியத்தில் இப்பாடல் கேட்டது. எங்கேயோ கேட்ட பாடலாயிற்றே என கவனிக்க எண்ணி ஹெட்செட்டை கழற்றினேன். எனக்கு எந்த வரிகளும் நினைவில்லை.. இசை.. இசை மட்டும் மீண்டும் ஒருமுறை நினைவில் நின்றது.
அதே பேருந்தில் இன்னொரு முறை கேட்டிருக்கிறேன். அப்போது இன்னும் அனுபவித்து கேட்டேன். சில நாட்கள் முந்தி பல கி.மீகள் தாண்டி வந்து நிற்கையிலும் இப்பாடலின் கரோக்கி ஒரு தொடர்வண்டி நிலையத்தில் ஒலித்தது. அந்த உள்ளக்களிப்பை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.

நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புவது இதுதான். இப்பாடல்களை தமிழிலும், இந்தியிலுமாக மாறி மாறி கேளுங்கள். இப்போதெல்லாம் தமிழ்ப்படங்கள் சில நேரடியாக இந்தியிலும் வெளியாகின்றன. ஆனாலும் அந்த பாடல்கள் ஏற்படுத்தாத உணர்வை இப்பாடல்கள் ஏற்படுத்தும்.

ஏனென்றால் இது புது மொந்தையில் பழைய கள்! ஓஓ! Old wine in new bottle!

தலைப்பின் காரணம் அறிவீர்கள் என நம்புகிறேன்.

இதுவும் பாடல் சொன்ன கதைதானே!

தமிழ்
30-08-2014

நாலு வரியில் நான்!

வணக்கம்.
விரும்பி எடுத்துக்கொண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பதிவு. இது சற்றே பழைய விஷயம்! (தமிழ்) இணையத்தில் அன்றாடம் வாசிப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு தளம் நாலு வரி நோட்டு. நச்ன்னு நாலு வரி, நாள்தோறும் எனும் இலக்கோடு (!) 365 நாட்கள் இயங்கி வந்த தளம். ஏறக்குறைய 400 பதிவுகளையும், எண்ணற்ற பாடல் குறிப்புகளையும் கொண்ட தளம். இப்போது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
அதற்காக இப்பதிவா? இல்லை இல்லை.. அதே தளத்தில் விருந்தினர் பதிவாக நானும் எழுதியிருந்தேன். அதன் முழுமையான வடிவம் இங்கே!
தாமரை இலை-நீர் நீதானா?
தனியொரு அன்றில் நீதானா?|
புயல் தரும் தென்றல் நீதானா?
புதையல் நீதானா?

பாடல்: கருகரு விழிகளால்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்: கார்த்திக் 

தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

தனியொரு அன்றில் என்றால்?

இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்

(நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)

“அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே..விட்டுப்பிரியாதே”

என்று எழுதியிருக்கிறார்.
சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
(நாலுவரி நோட்டு – நவம்பர்-10-2013)
இத்தோடு கதை நிற்கவில்லை! இன்னொரு பதிவும் அனுப்பியிருந்தேன். தவிர்க்கமுடியாத சூழல் காரணமாக அது பதிவாகவில்லை. எனவே வெளிவராத அந்த பதிவும் இங்கே!
********************************************************************
பயணங்கள் எல்லாமே சுவாரசியமானவைதான். ஆனாலும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொன்றும் சுவாரசியமானது.

நடந்து செல்வது, வண்டிகளில், சாலைகளில் செல்வது, கப்பலில், வானத்தில் என எப்படியெல்லாமுமே பயணப்படுவது இப்போதுள்ள வளர்ச்சி நிலையில் சாத்தியமாகிறது.
ஆனால் பயண தூரத்தை நம்மால் குறைக்க முடியுமா? அதிலும் நெடுந்தூர பயணத்தை எப்படிக் குறைப்பது?
பழங்கதை ஒன்று உண்டு.
ஒரு தந்தை மகனிடம் இதே கேள்வியைக் கேட்பார். வீடு திரும்ப நிறைய தூரம் நடக்க வேண்டும். எனவே பயண தூரத்தைக் குறைத்துவிடு என்பார். மகன் புரியாமல் விழிப்பான். அவனை அதைச் சொல்லி அடித்தபடியே வீடு வந்து சேர்வார். மறுநாள் மனைவியின் ஆலோசனையைக் கேட்டு பயணதூரத்தைக் குறைத்து விடுவான்.
எப்படி?
திரும்பி வருகிற வழியெல்லாம், ஏதாவது சுவாரசியமாக உரையாடியபடியே வருவான். அதனால் நடந்த களைப்பு தெரியாமல் இருவரும் வீடு வந்து சேருவர். இப்படிப் போகும் கதை…
அதே போலான உணர்வைச் சொல்லும் ஒரு பாடல்…

பாடல்: பூங்காற்றே பூங்காற்றே
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்: பென்னி தயாள் 

மொழி தெரியாப் பாதையிலும்
அர்த்தங்கள் இன்று புரிகிறதே!
 வழித்துணையாய் நீ வந்தால்
போகும் தூரம் குறைகிறதே!
 
மனதுக்குப் பிடித்தவளோ, காதலியோ, யாரோ,எப்படியோ விருப்பமானவர் ஒருவர் உடன் வந்தால், வழித்துணையாய் வந்தால்  போகும் தூரம் குறையாதா என்ன?

நன்றி: என்.சொக்கன்
நாலுவரிநோட்டு

அந்த 365 நாட்கள்!

இதே நவம்பர் 4-ம் தேதி.சென்ற ஆண்டு. ஒரு இனிமையான ஞாயிற்றுக்கிழமை. நீண்ட நாட்களாக இல்லையில்லை.. மாதங்களாக மனதில் இருந்த ஒரு திட்டம் உருப்பெற்றது. திரைப்பாடல்களை எடுத்து அதிலிருந்து சில நயங்களைத் தொட்டு எடுத்துப் பதிவாக்க வெகு காலமாக எண்ணம் இருந்தது. ஆனால் துணிவு வரவில்லை. ஏற்கனவே தொடங்கிய தொடர்களையே நடத்தத் திணறியவன் நான். இது ஆகாது என மனம் ஒதுக்கிய தருணத்தில், நினைவில் வந்தார் ஓஜஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்பே ப்ளாக்கர் தளத்தில் தமிழ் திரைப்பட பாடல்வரிகளுக்கென தளம் தொடங்கியிருந்தார் ஓஜஸ். அதன்பின் ப்ளாக்கரை கைகழுவி (!) வேர்ட்ப்ரஸ் -ல் பிரவேசித்து விட்டார். அது எனக்குத் தெரியும் என்பதால், அவரிடமே சாட்டில் தொடர்பு கொண்டேன். சில நாட்கள் முன்பு அது பற்றி நாங்கள் உரையாடியும் இருக்கலாம்.. ஆனால் நினைவில்லை.
சாட்டில் வந்தார் ஓஜஸ்.
முதலில் எவ்வளவு வேகமாக பெயரை பதிவு செய்கிறமோ, அவ்வளவு நல்லது எனப்பட்டது. பல்வேறு பெயர்களுக்குப் பிறகு வேர்ட்பிரஸில் இருந்த ஒரு பெயர்தான் இசைப்பா…!
அதுவே போதுமானதாகப் பட்டதால் இருவருக்கும் பிடித்துப்போனது. உடனடியாக ஒரு அறிமுகப்பதிவு எழுதினோம். உடனடியாக முதல் பதிவை ஜிமெயில் இன்பாக்ஸில் எழுதி, அதை word-க்கு மாற்றி அனுப்பினேன்.
பவர் கட்!

பின்னர் ஓஜஸுடைய திருத்தங்களைப் பார்த்து மீண்டும் சிறிய திருத்தம் செய்து அனுப்பினேன். பின்னர் அவர் மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்து அனுப்பினார். என்ன திருத்தம் செய்திருக்கிறான் என்பது எனக்கு விளங்க சற்று நேரம் பிடித்தது. கடைசி வாக்கியத்தில் சிறிய திருத்தம் செய்திருந்தான். அதை நான் ஏற்கனவே திருத்தி அனுப்ப, மீண்டும் திருத்தி வைத்திருந்தார்.

முதல் பாடல் என்ன பதிவாக்கலாம் என்று விவாதித்தோம்…

மிக மிக மிக பிரபலமான கவிஞரின் கடைசிப் பாடலை இடலாமா? என்றொரு யோசனை. பின்னர் தன்னம்பிக்கை விதைக்கும் அந்த பாடலை இடலாம் என்று இருவருமே தீர்மானிக்கையில் ஒரு எண்ணம்.

எல்லோரும் சினிமாப் பாடல்களை பதிவாக்குகிறார்கள். நாம் வித்தியாசத்தை இங்கிருந்து துவங்கினால் நலமே என்று தோன்றியது. தெய்வீகமான பாடல் இடலாம் என்றொரு எண்ணம். ஓஜஸ் ஆரம்பித்தார். அமரர் கல்கி எழுதிய ஒரு பாடலை பதிவாக்கச் சொன்னார். சரியென ஆரம்பித்தோம். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றொரு நம்பிக்கையில் நாங்களாகவே ஒரு format-ல் எழுதினோம்.

அப்புறம் ஓரளவு தேறி எப்படி எழுதலாம் என்கிற கருத்து இருவருக்கும் வருவதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது. 4 பதிவுகள் இருவருமாக எழுதியிருந்தோம் (என்று நினைக்கிறேன்!). டிசம்பரில் குளிர்கால விடுமுறைக்கு நான் சென்றுவிட்டேன்.. அதில் ஒன்றோ, இரண்டோ பாடல்கள் வெளியிட்டிருந்தார். அதற்கு ரஞ்சனி அவர்களின் பதிலுரையும் கிட்டியது.

ஜனவரி முதல் வாரத்தில் ஒரு காலைப் பொழுதின் வசீகரத்தில் ஓஜஸே தொடங்கினார். விஸ்வரூபம் பாடல்களை பதிவாக்கினால் என்ன?

படமே வரல! என்ற என் வாதத்தையும் தாண்டி செயலில் இறங்கினார். சின்னச் சின்ன திருத்தங்களோடு துவங்கிய அப்பணியில், இரு சிக்கல்கள் இருந்தன. வரிகளின் நம்பகத்தன்மையும், எப்படி வெளியிடுவது என்கிற ஐயமும் இருந்தது. மாலையில் முன்னோட்டமாக பதிவை அனுப்பினார். அழகாக பாடலின் அதிகாரப்பூர்வ காணொளியையும், அருமையான படங்களையும் இணைத்து அழகுபடுத்தியிருந்தார்.

நடிகர் கமல் ஹாசனின் வாழ்க்கையை விஸ்வரூபத்திற்கு முன் – பின் என்று பிரிக்க முடியுமோ என்னவோ ஆனால் இசைப்பா-வின் வெற்றியை அப்படி பிரிக்கலாம். அத்தனை பகிர்வுகளும், கருத்துகளும், பார்வைகளும் வந்து விழுந்தன. தொடர்ந்து பவானி, குழலினி, ரஞ்சனி என பங்களிப்பாளர்கள் கிடைத்தது எங்கள் பாக்கியம்.

பெரும்பாலான பங்களிப்பாளர்கள் பெண்களாகவே அமைந்ததும், பெயரின் கடைசி எழுத்து ஒரே மாதிரி அமைந்ததும் நாங்கள் எதிர்பாராதவை. பாலா சார் ட்விட்டர் மூலமாக கேட்ட ஒரு வாசகர் விருப்ப பாடல் அவரையும் இசைப்பா-வுக்குள் இழுத்தது. இசைப்பா-வின் அதிகாரப்பூர்வமான முதல் எடிட்டராக இயங்கிவருகிறார்!!

தங்கமீன்கள் படப்பாடல்கள் வெளிவந்த அன்றே கேட்டு ரசித்த ஓஜஸ் அதை பதிவாக்க எண்ணினார். மறுநாள் என்னையும் ரசிக்க வைத்து, அப்பதிவுக்கு முன்னுரை (மாதிரி) எழுதச் சொன்னார். அதுவும் ஹிட்!

கும்கி பாடல்கள் முழுத்தொகுப்பை ஜனவரி மாதத்தில் எழுதி அனுப்பினார் பவானி. எப்போ வெளியிடுவீங்க? என்று கேட்கும் அளவுக்கு தள்ளிப்போன அப்பதிவு மே இரண்டாம் வாரத்தில் வெளிவந்தது. இசைப்பாவின் தேடல்களிலும், கூகுள் தேடல்களிலும் முன்னணியில் இருக்கும் பதிவு இப்போதுவரை அதுதான்.

ஜூன் மாதத்தை இளையராஜா மாதமாகவே கிட்டத்தட்ட மாற்றிவிட்டார் ஓஜஸ்! வேறென்ன சொல்ல? இதுதவிர செப்டம்பர் முழுக்க நீஎபொவ பாடல்களாக நிரப்பியிருந்தோம். அதில் ஓஜஸுடைய பங்கு மிக முக்கியமானது. ஒரு மாதம் முழுக்க என்வசம் இருந்தது.

தனிப்பட்ட முறையில் சொல்வதானால் பதிவான பல பாடல்களில் சின்னச் சின்ன திருத்தங்களையும் கருத்துகளையும் எழுதியிருக்கிறோம். துவக்கத்தில் திரைப்பாடல்களில் உள்ள பா நயங்களையும், மொழி நயங்களையும் எடுத்துக் காட்டியிருந்தோம். பிற்பாடு தவறிவிட்டது. பிரிவோம் சந்திப்போம் படப்பாடல்கள் நல்ல உதாரணம். அதைத் தாண்டி பெரும பாடல்களில் அவ்வாறு இயல்பாக அமையவில்லை. அது தவிர பாடல் உண்டாக்கிய அனுபவம், சமூகத் தாக்கம் என்று சற்று தடம் மாறி பயணித்தது இசைப்பா.

மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளோம். ஒராண்டில் பெரும்பாலான திரைக் கலைஞர்களின் பாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம். தவறிவிட்டது. நிறைய பாடல்கள் ட்ராஃப்ட்-ல் தூங்குகின்றன. அவையெல்லாம் வெளிவரும் பட்சத்தில் நிலைமை சரியாகும்.

ஒரு தளம் எத்தனை இன்பம், அனுபவம் தர வேண்டுமோ அதை இசைப்பா எனக்குத் தர முயன்றிருக்கிறது. இனியும் அப்படித்தான்.

இன்றோடு இசைப்பாவுக்கு ஒரு வயது.

உங்கள் விருப்பமான பாடல்களுள் ஒன்றேனும் இங்கு உள்ள 65+, பதிவுகளில் இருக்கும். ஏதேனும் ஒன்றேனும் உங்களுக்கும் பிடிக்கும்.

எனக்கோ இதைப்பற்றியெல்லாம் அதிகம் எழுதப் பிடிக்கவில்லை.. எழுதிய வேண்டியவை ஏதேனும் விட்டுப்போயிருக்கலாம். இருக்கட்டும்… இதுவரை இசைப்பா தளத்தையே பார்த்திராதவர்கள் தைரியமாக சென்று ஒருமுறை பார்க்கலாம்.

முகவரி: isaipaa.wordpress.com

அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் இனிய அனுபவங்களைத் தந்துவிடும் எங்கள் இசைப்பா…
பங்களிப்பாளர்கள், பார்வையாளர்கள், உதவிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி.