பொது

புரிந்தவையும், புரியப்போகிறவையும்…

பேசுவது என்று முடிவாகிவிட்டால், எதை வேண்டுமானாலும் பேசுகிற ஆள் நான் இல்லை. எனக்கென்று சில வரைமுறைகள், வரையறைகள் இருக்கின்றன. அதற்காக நான் வள்ளுவர் வழியில் நா காத்து பேசுபவன் எனக் கூறவில்லை. எப்போதாவது தவறுதலான பிரயோகங்கள் தவறான சூழல்களில் வந்திருக்கலாம். இப்போது என் கவலை இதுதான்.

எதைப் பேசுவது?

இதென்ன முட்டாள்தனமான கேள்வி?  என நீங்கள் எண்ணினால் இதோ உங்களுக்கான தெரிவுகள்:

 • உண்மை
 • பொய்

உண்மைதான் என்று ஆணித்தரமாக நம்பும் ஆதரவாளர்கள் இப்போதே இந்த Tab-ஐ மூடிவிட்டு பயனுள்ள வகையில் நேரத்தை செலவிடலாம்.

பொய்தான் என்று உடனே எண்ணும் அயோக்கியர்களும் இப்போதே…..ப்ளா..ப்ளா…ப்ளா…

இரண்டுக்கும் நடுவே நின்று
எப்பக்கம் செல்வது என்று
தடுமாறிப் போனேன் இன்று…..

உணர்ச்சிவசப்படும் ஆட்கள் தொடர்ந்து படிக்கலாம்.

உண்மையும், பொய்யும் கலந்து பேசிதான் எல்லா நாட்களையும் நகர்த்த வேண்டியிருக்கிறது. இதில் என் கவலை இதுதான். எந்நேரத்தில் எதைப் பேசுவது?

என்னளவில் உணர்ந்தவை இனி:
உண்மையையும், பொய்யையும் பேசுவதில் எப்போதும் பிரச்சினை ஏற்படுவது இல்லை. (அல்லது பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு அரிது.) இந்த பாழாய்ப் போன உண்மையையும், பொய்யையும் எந்த கணத்தில் உளறத் துவங்குகிறோமோ அப்போதிருந்து பிரச்சினைகளின் மூலங்கள் உடைபட்டு பரவத் தொடங்கிவிடுகின்றன.

உளறல் என்பதில் கொஞ்சம் விளக்கம் கொடுத்து விடுகிறேன்.

அதாவது, யாரிடம் எப்போது எந்த விடயத்தைச் சொல்கிறோம்?, எந்த தருணத்தில் சொல்கிறோம்? எந்தளவுக்கு சொல்கிறோம்? என்பதையெல்லாம் பொறுத்ததாக அமைகிறது.
பொய்யை சுவாரசியமாக அவிழ்க்க வேண்டும். உண்மையைப் பதறாமல் முடிக்க வேண்டும்  என்றெல்லாம் புத்திக்கு படுகிறது. ஆனால் சூழல் மாற்றிவிடுகிறது.

யார் யாரிடமோ உண்மையைச் சொல்லி வருத்தப்படுவதும், சிலரிடம் உண்மையைத்தவிர எல்லாம் பேசி அவர்களைக் குழப்பியும் காலம் நகர்கிறது.

இப்போதைக்கு குறைந்தபட்ச புரிதல் பொய்-உண்மை இவற்றின் மேல் இருந்தாலும் சூழல்தான் அப்போதைய மனப்போக்கை நிர்ணயிப்பதாக படுகிரது. இவரிடம் இதைச் சொல்லிவிட வேண்டாம் என எண்ணுகையில், வாய் உண்மைகளை உளறிவிட்டு பின் மன்னிக்க வேண்டுகிறது.

அதிகம் எழுத விருப்பம் இல்லை. உணரவே விருப்பம்.

இதுகுறித்து இன்னும் சிலரிடம் பயிற்சி பெற வேண்டும். அண்ணே உங்கள்ட்ட தான்!

Advertisements

வீடு

சுவாரசியம் என்பதும், அசுவாரசியம் என்பதும் நம் புரிதலில் இருக்கிறது. நம் ரசனையில் இருக்கிறது.

நான் உடல்நலம் குன்றி இருந்த தருணங்களில் இருந்து மீண்டு சில நாட்கள் ஓய்வும் எடுக்க நேர்ந்தது. அதுசமயம் நேரங்களை நகர்த்த சில திரைப்படங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று வீடு.

இன்றைக்கு சரியாக (அதாவது இந்த வருடம்) 25 வருடங்களுக்கு முன் பாலுமகேந்திரா அவர்கள் இயக்கத்தில்* வந்த திரைப்படம்தான் வீடு (1988).

அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு, இயக்கம் எல்லாமே அவர்தான். தயாரிப்பும் அவராகத்தான் இருக்க வேண்டும். வேறு பெயர் (கலாதாஸ்) திரையில் வருகிறது.

படத்தின் கதை தலைப்பிலிருந்து துவங்குகிறது. வீடு. அதுதான் கதையே! கதை பாலு மகேந்திரா அவர்களின் மனைவி அகிலா மகேந்திரா எழுதியிருக்கிறார். 1980-1990 களில் நடுத்தர வர்க்கம் அல்லது எளிய மக்கள் சொந்த வீடு கட்ட என்னென்ன இன்னல்கள் இருக்கின்றன என்பதாக மேலோட்டமாகச் சொல்லிவிடலாம்.

பாடலாசிரியர் யுகபாரதியின் ஒரு கவிதை குறிப்பிடுவதுபோல ‘வாடகை வீட்டில் வசிக்கலாம் ஆனால் வாழ முடியாது’ என்கிற கவிதை வரி எத்தனை உண்மை என்பது வாடகை வீட்டுக்காரர்களுக்குத்தான் தெரியும். இன்றைய சூழலிலும், அதாவது 25 ஆண்டுகளுக்கு பிறகும் கூட நிலை அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை. சில நரகக்குழிகள் வாடகை வீடுகளாக இருந்ததை நேரில் கண்டவன் நான்.

வாடகை அதிகமானதால் வேறுவீடு பார்க்க முடிவு செய்கின்றனர். அதாவது ஒரு வயதான தாத்தா (சொக்கலிங்க பாகவதர்), அவரின் இரு பேத்திகள் (பானு சந்தர், இந்து) இவ்வளவுதான் குடும்பம்.

தாத்தாவின் ஓய்வூதியம், மூத்த பேத்தியின் சொற்பமான சம்பளத்தினைக் கொண்டு இயங்கும் இக்குடும்பம் இன்னொரு வாடகை வீட்டைத் தேடுகிறது. பானு சந்தரின் காதலனும் சேர்ந்து உதவுகிறான். ஆனால் வாடகை எதிர்பார்த்ததை விட அதிகம் என்ற சூழலில் அவர்களுக்கென்று சொந்த நிலம் இருப்பதை அறிகிறார்கள். அங்கே எப்படி வீடு கட்ட முனைகிறார்கள்? சாதாரணமான எந்தவித பொருளாதார பலமும் இல்லாத குடும்பத்தினரின் சொந்த வீட்டு ஏக்கங்களையும், அதன் பொருட்டு அவர்களின் தியாகங்களையும் கண் முன் நிறுத்துகிறது படம். முடிந்தால் படத்தை நீங்களும் பாருங்கள்.

இதில் குறிப்பிட வேண்டியதாக நான் நினைக்கிறவை இவைதான்:

 • 25 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பாடல்களே இல்லை. இன்றைய காலத்தில் 8-10 பாடல்கள் படங்களில் வருகின்றன.
 • படத்தின் மொத்த நீளம் 117 நிமிடங்கள் (01.47). இப்போது 2-30 மணிநேரத்துக்கு படம் எடுக்கிறார்கள்.

அத்தனை வருடங்களுக்கு முன் பாடல்கள் இல்லாமல், எந்தவிதமான வணிக சமரசங்களுக்கும் இடம்கொடுக்காமல் யதார்த்தமான ஒரு கதையை எடுத்திருப்பதை பிரமிப்பான யோசனையாகவும் பார்க்கலாம் அல்லது துணிவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

யதார்த்தம் என்கிற வார்த்தைக்கான பொருள் (எனக்கு) படத்தில் கிடைக்கிறது. எடுத்துக்கொண்ட கருப்பொருளை எந்த இடத்திலும் தவறவிடாத திரைக்கதையும், வசனமும் பட்த்தின் பெரும்பலம்.

பெரும்பாலான பாலுமகேந்திரா படங்களைப் போலவே இதற்கும் இசை இளையராஜா அவர்கள்தான். How to Name it? ஆல்பத்தில் கேட்ட இசைபோல தோன்றுகிறது. இருந்தாலும் பல இடங்களில் இசையாலும் (Do Anything ), மௌனத்தாலும் வசீகரிக்கிறார். இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ? என்றும் தோன்றியது.

சமகால தமிழ் சினிமாக்களில் வழக்கு எண் 18/9 திரைப்படமும், மதுபானக்கடை திரைப்படமும் இதோடு சேர்த்துப்பார்க்கலாம் என்றாலும் நிறைய வேறுபாடுகள் (வணிக சமரசங்கள், பாடல்கள்) இருப்பினும் ஒற்றுமை கொஞ்சம் ( படத்தின் நீளம், மக்களின்/சமூகத்தின் அன்றாட வாழ்வோடு பொருந்திப் போகிற கதைக்களம், etc) இருக்கத்தான் செய்கிறது.

நீங்களும் படத்தைப் பாருங்கள். உங்களுக்குள்ளும் கருத்துக்கள், ஏக்கங்கள் எழலாம். படத்தை முன்னமே பார்த்திருந்தால் உங்கள் எண்ணங்களை இங்கே பதியலாம். வித்தியாசமான சினிமா பார்க்க விரும்புகிறவர்கள் தைரியமாகப் பார்க்கலாம்.

 Youtube-ல் வீடு: 

இவை முழுக்க, முழுக்க எனது கருத்துகளே. மாற்றுக்கருத்துகள் எப்போதும் போல வரவேற்கப்படுகின்றன. நன்றி.

கடைசிக் குறிப்பு: இதுதான் எனது முதல் திரைப்படம் சார்ந்த பதிவு. இனி எழுதுவது என்பதையும் அத்தனை உறுதியாகச் சொல்ல இயலாது.

பயணத்தில் சில புரிதல்கள்:

ஏறத்தாழ கடந்த 3-4 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செல்ல வேண்டியிருந்தது. தனியே பயணக்கட்டுரைகளாக  எழுதியிருக்கலாம். இப்போதைக்கு தொடர்கள் எதையுமே தொடுவதாக இல்லை! ஆனாலும் சில தனிப்பட்ட விருப்பங்கள் உண்டு. விரைவில் சொல்வேன்!

கடந்த 2010-ல் எனது தந்தையும் நானும் ரயிலில் பயணப்பட்டோம். சற்றே வித்தியாசமான அனுபவங்கள் வழிநெடுகவும் கிடைத்தது. கடந்த ஆண்டு நான் மட்டும் தனியே ஆயிரக்கணக்கான கி.மீகள் பயணப்பட நேர்ந்தது. கடந்த அக்டோபர் மாதத்து இறுதியில் சிறப்பான பயணம் மதுரையில் நிகழ்ந்தது. அதைப்பற்றி எழுத கொள்ளை ஆசை. ஆனாலும் இப்போது வேண்டாம்.!

எனது ஒவ்வொரு பயணங்களின் முடிவிலும் புதிதாக நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமான அனுபவங்களை எனக்காக தந்து சென்றனர். அவர்களுக்கெல்லாம் நான் கடன்பட்டவன்!

கடந்த பிப்ரவரி மாதத்தின் குறிப்பிட்ட வாரம் எனக்கு கடும் வேலைப்பளுவிற்கு மத்தியில் கிட்டத்தட்ட 40 மணிநேரத்துக்குள் 400 கிமீகளை கடந்து பயணப்பட வேண்டிய அவசியம் வந்தது. சரியான அளவில் உறக்கம் இல்லாமல் கிட்டத்தட்ட அடுத்து வந்த 2-3 நாட்களையும் அப்பயணம் விழுங்கிவிட்டது. ஆனால் அது ஒரு சுகமான பயணம்!

அந்த சனிக்கிழமையின் மாலையில் பேருந்தைப் பிடித்தேன். கிட்டத்தட்ட நூறு கி.மீக்கும் அதிக தொலைவு பயணம் சென்றேன். அப்பயணத்தை தொடங்கும் முன் பேருந்தில் ஒரு பிரச்சாரம். புரட்சிகரமான கருத்துகளைத் தாங்கிய ஒரு பத்திரிகையினை விற்பதற்காக ஒருவர் எல்லா பயணிகளின் கவனத்தையும் தன்வயப்படுத்தினார். அந்த இதழின் அட்டைப்படத்திலேயே பெண் வன்கொடுமைக்கு எதிராக நாம் என்ன செய்யலாம்? என விளக்குவதைப்போல் ஒரு படம். அந்த மனிதர் அத்தனை அற்புதமாக தன் கருத்தை பயணிகளிடம் சென்று சேர்த்தார் என்றே நான் சொல்வேன்.

அவர் கூறியதிலிருந்து சில கருத்துகளை நான் இங்கே வாக்கியங்களாகப் பதிகிறேன்.

 •   நம் வீட்டுப் பெண்களை/ குழந்தைகளை நமது அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாது. அதன் அவசியம் அரசிற்கும் இதுவரை இருந்ததில்லை. சமூக அக்கறையோடு நாமேதான் நம் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்.
 •   தொலைக்காட்சிதான் சமூகத்தைக் கெடுக்கிறது. அதில் போடப்படும் விளம்பரங்களை விட மோசமானது எதுவுமில்லை.
 • குறிப்பிட்ட “Perfume” அடித்தால் பெண்கள் மயங்குவர்!

 • குறிப்பிட்ட “Toothpaste” கொண்டு துலக்கினால் பெண்கள் ரசிப்பர்! (மேலே கூட விழலாம்!)

 •  குறிப்பிட்ட வண்டியை வாங்கினால் “ஃபிகரைப் (!!)” பிக்கப் (?) செய்யலாம்!

இப்படித்தான் பல விளம்பரங்களில் காட்டுகிறார்கள். இதிலெல்லாம் அரசு தலையிடாது. எனவே நம் கையில்தான் எல்லாமே இருக்கிறது. என்றெல்லாம் இன்னும் இன்னும் பரபரப்பாக பேசினார். மொத்தமாய் 4-5 நிமிடங்களுக்குள் சொல்ல வந்ததை சரியே சொல்லி முடித்தார். இதழையும் விற்க முன்வந்தார். விளம்பரங்களே இல்லாத இதுபோன்ற இதழ்களை ஊக்குவிக்கவாவது நான் அவ்வப்போது வாங்குவது வழக்கம். அப்போது என்னிடம் சரியான அளவில் பணம் இல்லை. (10 ரூபாய்!) சில்லரைக்காசுகளை தேடிக்கொண்டிருக்கையில் அருகிலிருந்த 50 வயதைத் தாண்டிய பெரியவர் எனக்காக ஒரு பிரதி சேர்த்து வாங்கிக் கொடுத்தார். பின்னர் அவருக்கு நான் அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு மனதார நன்றி சொல்லிவிட்டேன். ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். வழியில் நண்பர்களைத் தேடினால் யாரும் கண்ணில் சிக்கவில்லை.

மறுநாள் காலை பள்ளித்தோழன் ஒருவன் வந்து சிறிதுநேரம் உரையாடினான். மீண்டும் ஒரு பயணம். கிட்டத்தட்ட 80 கி.மீக்கும் அதிக தூரம். சமீபகாலப் பயணங்களில் நான் காதில் headset மாட்டாமல் சென்றது அப்போதுதான்! என் பயணங்கள் எப்படியும் இசையோடுதான் இருக்கும்!!

வேறு நிமித்தமாக சென்ற பயணத்தில் பள்ளிகாலத்தோழன் ஒருவனை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவனைப் பார்த்ததுமே அவன் பெயர் என் மனதில் பாய்ந்து நின்றது. இருப்பினும் ஒரு ஐயம் அவன்தானா இவன்? வேறு ஆளாய் இருந்தால் என்ன செய்வது?? சில தயக்கங்களைத் தாண்டி மெல்ல அவன் அருகில் போனவுடன் நீ தமிழ்தானே என்றான் அவன். நானும் அவன் பெயரைச் சொன்னவுடன் அவனும் ஆம் என்றான். தொடர்ந்து கொஞ்சம் உரையாட நேரம் வாய்த்தது.

அப்டியே இருக்கியே!

இதுதான் என் நண்பர்கள் என்னைப் பற்றி சொல்லும் ஆகச் சிறந்த கருத்து! அதன் பொருள் எனக்கு மட்டுமே சரியான அளவில் விளங்கும். நல்லா சாப்பிடுடா! என்று இறுதியாக சில அறிவுரைகளைச் சொல்லி விடைபெற்றார் அந்நண்பர். நல்லபடியாக நாங்கள் படித்த காலத்தின் குறும்புகள் எதையும் அவர் சொல்லவில்லை! இன்னுமொரு ஆச்சர்யமான தகவலும் அப்போது கிடைத்தது. அதாவது எங்கள் இருவரின் தம்பிகளும் ஒன்றாகப் படித்தவர்களாம்!

அங்கேயே 2 பயண அலுவல்களை முடித்து மாலை மீண்டும் வேறுபகுதிக்கு பயணம் தொடங்கினேன். அதாவது கிழக்கு நோக்கி. கிட்டத்தட்ட 200 கி.மீக்கும் அதிக தொலைவு. மோசமான சாலைகள், இரவு, குளிர், மண்புழுதிகள், 3-4 பேருந்துகள் மாறிமாறி ஒருவழியாக இருப்பிடம் சேர்ந்து மணி பார்க்கும்போது இரவு 11-ஐ நெருங்கியிருந்தது. அப்போதே இதையும் ட்விட்டரில் பதிந்துவிட்டேன்!

ஒரு வழியாக ட்வீட் embed செய்த பதிவு எழுதியாக வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் நிறைவேறியது. இனியும் இதுபோல பயணப் பதிவுகளையும், ட்வீட் embed -களையும் தொடர்ந்து எழுத விருப்பம் மறுப்பு இருக்காது என நம்புகிறேன். சொன்னபடி நான் என்னைப்பற்றிய அறிமுகத்தில் சில திருத்தங்களைச் செய்துள்ளேன். ஓரளவு புரியும் (!) எனவும் நம்புகிறேன்.

வண்ணங்களில் இருக்கிறது வாழ்க்கை…

வாழ்க்கை என்பதே வண்ணங்களால் ஆனது.

வண்ணமும்-வாழ்க்கையும்

ரசனை என்கிற பொருள் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் விருப்பம் என்கிற வகையில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இதில் யாரையும் குறையாகச் சொல்வதும் தவறுதான். மற்ற விஷயங்களை விட வண்ணங்களில் எல்லோருக்கும் விதவிதமான ரசனைகள் இருக்கும்.

உனக்கு என்ன கலர் (வண்ணம்) பிடிக்கும்? இந்த கேள்வியை நாம் பல இடங்களில் எதிர்கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது. நமது ஆடைகள், அலங்காரங்கள் நமது வண்ணங்களின் விருப்பத்தில் அமைவது நடைமுறையான ஒரு விடயம்தான்.

இந்த ஆடைகள் தேர்ந்தெடுப்பதில்தான் வண்ணம் முக்கியத்துவம் பெறும். குறிப்பாக விழாக்காலங்களில்.

சிறுவயதில் தீபாவளி பண்டிகைக்காக என் உறவினர் ஒருவர் எனக்கு ஆடை வாங்கித்தருவதாகக் கூறி கடைக்குப் போனோம்.

’கோட்’ வகை ஆடையைத் தேர்ந்தெடுத்தேன். வண்ணம் கருப்பு! விற்பனை செய்தவர் தடுமாறிவிட்டார். அவரே ஒரு Grey வண்ணத்தில் ஒரு கோட் (Coat) எடுத்து தீபாவளிக்கெல்லாம் கருப்பு கலர்ல ட்ரெஸ் போட்டா நல்லாருக்காது னு விளக்கம் சொல்லி மாத்த வைச்சுட்டார்!

பொதுவாக கருப்பு பலருக்கும் பிடிக்காத வண்ணமாகிப் போனதன் காரணம் எனக்குப் புரியவில்லை. என்னிடம் ஒருவர் இப்படி கேட்டார்.

“தமிழ், உங்களுக்கு எந்த வண்ணம் பிடிக்கும்?”

“கருப்பு. எப்பவுமே!”

“கருப்பா?? உங்களைப் பார்த்தா கலர்ஃபுல்லா சொல்ற மாதிரி இருக்கு. ஆனா….”

எனக்கென்னமோ, சிறு வயதில் இருந்தே கருப்பு ஆடைகளின் மேல் விருப்பம். இப்போதும் கருப்பு நிற பேண்ட்கள் எனக்கு விருப்பமான ஒன்று. ஆனாலும் மற்ற வண்ணங்கள் மேல் வெறுப்பு இல்லை. இப்போது சில வண்ணங்களில் பேண்ட் இருந்தாலும் அவ்வளவு உபயோகிப்பதில்லை!!

அதையெல்லாம் விடுங்கள். தலைப்பின் காரணத்தில் கொஞ்சம் எழுதிவிடுகிறேன்.

வீட்டின் ஒவ்வொரு அறைக்கும், குறிப்பிட்ட வண்ணம் இருந்தால் அறிவியல்பூர்வமாக, விஞ்ஞானப்பூர்வமாக (உடல்/மன நலத்திற்கு) நல்லது என்கிறார்கள். அதை கொஞ்சம் சுருக்கமாக எழுதிவிடுகிறேன்.

 • அலுவலக அறைகள் நீல வண்ணத்தில் இருந்தால் உற்பத்தியோ/ வருமானமோ செழிப்பாக இருக்குமாம்.
 • படுக்கையறை பச்சை வண்ணத்தில் இருப்பது உடல்நலத்திற்கு உகந்ததாகும் என மருத்துவ அடிப்படையில் காரணங்கள் இருக்கின்றன.
 • பெண்களுக்கென வீட்டில் தனி அறை இருந்தால் அது இளஞ்சிவப்பு (Pink) வண்ணத்தில் இருப்பது சிறப்பு. காரணம் தனியே சொல்ல அவசியம் இருக்காது!
 • சமையலறை, அடுப்பங்கரை ….ம்ம்ம் எப்படி வைத்துக் கொண்டாலும் அதன் நிறம் மஞ்சளாகக் கடவது. மஞ்சள் பளபளப்பான நிறம் என்கிற காரணத்தால், உள்ளே நுழைந்தவுடன் உற்சாகத்தை அளிக்கும் என அறியப்படுகிறது.
 • வரவேற்பறை லேவண்டர் வண்ணத்தில் இருக்க வேண்டும். குளிர்ச்சி, மனதின் அமைதியை வெளிப்படுத்தும் என்று அதற்கும் காரணங்கள் உண்டு.
 • சாப்பிடுவதற்கென்று தனி அறை பொதுவாக எல்லோர் வீடுகளிலும் இருப்பதில்லை என்றாலும், ஒருவேளை இருந்தால் அதற்கு சிவப்பு வண்ணம்தான் சரியான தேர்வாகும். இதுவும் உற்சாகம் வரவழைக்கக் கூடிய வண்ணம்தான்.

இதெல்லாமே ஒரு தகவலுக்காகத்தான். இதுதான் சரியான தேர்வு என்றெல்லாம் சொல்வதற்கோ, குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களுக்கான விளம்பரமோ அல்ல. உங்கள் விருப்பம்தான் முதன்மையானது.

இதில் ஆச்சர்யப்பட வைக்கிற விடயம், இப்பதிவைக் காரணமாய் வைத்து ஒருபக்க அளவில் சொந்தக்கதை எழுதிவிட்டேன். மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் உண்மைத்தன்மைக்கு கம்பெனி நிர்வாகம் எந்தவிதமான பொறுப்பும் கொள்ளவில்லை என்பதை மிக்க மகிழ்ச்சியோடு எழுதிக் கொள்கிறேன். இதைக் காரணம் வைத்து இப்படியெல்லாம் நடக்கவில்லை என்று விற்பனையாளரோ, அந்த நபரோ Comment செய்தால் மிக்க மகிழ்ச்சி! (2 கமெண்ட் வந்திடும்ல!)

நானும் கூட தளத்தின் வடிவமைப்பில் சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். (வண்ணங்களில் வாழ்க்கை!) எனது பதிவுகளுக்கு 50-க்கும் அதிகமான விருப்பங்கள் (Likes) வந்துள்ளதாக அறிய நேர்ந்தது. மிக்க மகிழ்ச்சி.

சில சுவாரசியமான பதிவுகள் தயார் நிலையில் பல மாதங்களாக இருக்கின்றன. ஒவ்வொன்றாக வெளிவரும் என நம்புகிறேன்.

இன்னொரு வாய்ப்பில் சிறப்பான பதிவை எழுதிவிடுகிறேன். இம்முறை பொறுத்தருள்வது உங்கள் கடன்.

சுஜாதா சொல்கிறார்!

ரிச்சயம் இல்லாதவர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்களைப் பெரும்பாலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

 1. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். உங்கள் கையெழுத்திட்ட போட்டோ ஒன்று அனுப்புவீர்களா?
 2. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் எழுதியுள்ள கள்ளும் முள்ளும் என்கிற காவியத்தை உங்கள் மேலான பார்வைக்கு அனுப்ப விரும்புகிறேன். அனுப்பலாமா?
 3. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் ஆண்டிப்பட்டி இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் இன்ஸ்டியூட்டில் ஃபிட்டர் தொழில் பரீட்சை பாஸ் பண்ணிவிட்டு வேலையில்லாமல் இருக்கிறேன். உங்கள் தொழிற்சாலையில்….

பரிச்சயம் இல்லாதவர்கள் நேரில் வந்து சந்திக்கும்போது அவர்கள் கேட்கும் கேள்விகளும் பெரும்பாலும் மூன்று வகைப்படும்.

 1. உங்களுக்கு எல்லாம் எப்படி ஸார் டயம் கிடைக்கிறது எழுதுவதற்கு?
 2. இதுக்கெல்லாம் எவ்வளவு கொடுப்பான் உங்களுக்கு?
 3. நான் படிக்கிறதில்லை. என் ஒய்ஃப்தான் படிப்பாள், இதெல்லாம்…

உண்மையான ரசிகர்கள் கடிதம் எழுதுவது அல்லது நேரில் வந்து சந்திக்கிற ஜாதியில்லை.

எக்ஸ்ட்ரா:

சுஜாதா அவர்கள் கணையாழி இதழில் (கிட்டத்தட்ட) தொடர்ந்து 35 ஆண்டுகள்  கடைசிப் பக்கம் எனுமாறு தொடர் கட்டுரை எழுதினார் என அறிகிறேன்.

அதில் சில கட்டுரைகளை மட்டும் விசா பப்ளிகேஷன்ஸ் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.(பழைய பதிப்புதான். தற்போது புதிய பதிப்பு இருக்கிறதா? எனத் தெரியவில்லை.)

அதில் வேறொரு கட்டுரையைத் தேடிக் கொண்டிருந்தபோது மேற்கண்ட கட்டுரை சிக்கியது. படிக்க சுவாரசியமாக (எனக்கு) இருந்தது. குறிப்பாக கடைசி வாக்கியம்!

உங்களுக்கு எப்படியோ?