பெரியார்

சாதாரணம் மகத்தானது!

ஒரு இளவரசனுக்கான ஆடைகளையும், விலை உயர்ந்த அணிகலன்களையும் அணிந்தபடி விளையாடும் ஒரு குழந்தை, தான் விளையாடுவதில் உள்ள அத்தனை மகிழ்ச்சியையும் இழந்துவிடுகிறது. அந்த உடையும். அணிகலன்களும் அக்குழந்தை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் இம்சையாக இருக்கின்றது. எங்கே தனது ஆடை புழுதியில் பட்டுவிடுமோ என்கிற பயத்தில் அசைவதற்குக் கூட அச்சப்பட்டு  அக்குழந்தை இவ்வுலகத்தினின்று விலகியே நிற்கின்றது.

தாகூருடைய இக்கவிதை மகத்தானது.

மனிதன் தனக்காக பல்வேறு அலங்காரங்களை அணிந்துகொள்கிறான். அதன் காரணமாய்ப் பெருமிதப்படுகிறான். ஆனால், ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு அலங்காரத்தின் போதும் அவனுடைய சுதந்திரம் பறிபோகிறது என்பதை அவன் உணர்கிறானோஒ, இல்லையோ மறந்துபோகிறான். அவனால் இயல்பு வாழ்க்கைக்குள் வாழ முடியவில்லை.

எது அழகோ அதுவே ஆபத்தாகிறது.
எது அலங்காரமோ அதுவே இடைஞ்சலாகிறது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பொருட்களில் இல்லை. இயல்பாய் வாழ்வதில் இருக்கிறது மகிழ்ச்சி.

மகத்தான வாழ்க்கை என்பது சாதாரணமாக வாழ்வது. சாதாரணம் என்றால் இயல்பு. இயல்பே அழகு அல்லவா!

************

கூடுதலாக

பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய நூல் ஒன்றைப் படித்தேன். அதில் பல்வேறுவிதமான கருத்துகள் இருந்தன. கடவுள் மறுப்பைத் தாண்டிய பல்வேறு பெரியார் கொள்கைகளைத் தொகுக்கவும் விருப்பம் உள்ளது. ஆகட்டும் பார்க்கலாம்! இப்போது இங்கே ஒரு சிறு பகிர்வு.

புத்தக வாசிப்பில் ஒரு யோசனை சொல்கிறார் தந்தை பெரியார்.

அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ள வேண்டுமென்பது அர்த்தமல்ல. மாறாக, வாங்கிப் படித்துவிட்டுப், படித்து முடித்தவுடன் முக்கால் விலைக்கு, அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்கவேண்டும். புத்தக வியாபாரியும் தான் விற்ற புத்தகத்தை அரை விலைக்குக் கொண்டுவந்து கொடுத்தால், நலுங்காமலிருந்தால் வாங்கிக் கொள்ள வேண்டும்.

அடிப்படையில் பெரியார் சிக்கனக்காரர். ஆகவே அவர் இவ்வாறான யோசனை சொல்லியிருக்கலாம். நமக்கு தக்கபடி இக்கருத்தை சற்றே வளைக்கலாம் என்று கருதுகிறேன். இந்த யோசனையின் மையக் கருத்து இப்படியும் இருக்கக்கூடும்.

சிந்தனை நூல்கள் அதிகளவு வாங்கி வீட்டில் அடையாமல், அதை ஒவ்வொன்றாகப் படித்து மற்றொருவருக்கு அதைப் பகிர்வதே நலம். குறிப்பாக இதை சமகால பேட்டி ஒன்றில் படித்தேன். சே குவேரா, காஸ்ட்ரோ உள்ளிட்டோரின் நூல்கள் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டாலும் அவற்றை வாங்கிச் செல்ல சிலர் இருக்கிறார்கள். ஆனால் அப்புத்தகங்களையெல்லாம் முறையாக படிக்கிறார்களா என்பது அவரவர் மனசாட்சிக்கு உட்பட்டது.

என்னதான் சொல்லி முடித்திருக்கிறேன் என்பது புரிந்தால் எனக்கும் நலம்.

பதிவின் மையக்கருவும், கவிதையும் வெ. இறையன்பு அவர்கள் எழுதிய ஏழாவது அறிவு (முதல் பாகம்) நூலில் இருந்து கையாளப்பட்டுள்ளது.

Advertisements

தந்தை

பெரியார்

இன்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் . சென்ற வருடம் இதே நாளில் பதிவுகள் ஏதும் எழுதாது இருந்தமைக்கு சிலர் ஏன் பதிவொன்றும் இடவில்லை என்று கேட்டனர். இம்முறை சற்றே பெரியாரை உங்களுக்கு என் அளவில் அறிமுகம் செய்கிறேன்.

மிகவும் கோபமூட்டும் ஒரு விடயம் என்னவென்றால், பெரியார் வெறுமனே கடவுள் எதிர்ப்பாளராக அறியப்படுவதுதான். அதைத் தாண்டி, அவருடைய பல புரட்சிகரமான கருத்துகள் பல சமூகத்தில் பரவலாக அறிமுகப்படுத்தப்படக் கூட இல்லை என்பது வேதனையானது. அதற்கு ஒருவிதத்தில் அவர் துவங்கிய இயக்கத்தினரே காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

கடவுள் மறுப்பைத் தாண்டி அப்படி என்ன செய்திருக்கிறார்? சொல்லியிருக்கிறார்? என்பதெல்லாம் மிதமான வாசிப்பின் ஊடே அறியக்கூடிய உண்மைகளாகும். பெயருக்குப் பின்னே சாதி அடையாளம் இருக்க வேண்டாம் என்று சொல்லி, அதை செயல்படுத்தியவர் பெரியார்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை-பகுத்தறிவு இயக்கத்தால் கவரப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதக அடிப்படையில் அல்லாமல் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் புரட்சிகரமான பெயர்களையும் வைத்தனர். இன்றைக்கு அந்தப் போக்கு முற்றிலும் மாறி வருவதும், அதன் விளைவுகளும் கண்கூடு.

உங்கள் வாரிசு யார் என்று கேட்கப்பட்டபோது பெரியார் அளித்த பதில் இது. என் சிந்தனைகள். பெரியாரின் சிந்தனைகள் விலைமதிப்பற்றவை.

முன்னெப்போதையும்விட பெரியாரின் தேவை இப்போது அதிகரித்திருக்கிறது. அவருக்குப் பிறகு, நாத்திகவாதத்தை சீற்றத்துடன் பிரசாரம் செய்த இன்னொரு தலைவர் இங்கே தோன்றவே இல்லை. இந்த நிமிடம் வரை.

நமக்கு முன் வாழ்ந்தவன் எவனாக இருந்தாலும்,குருவாக இருந்தாலும், மதத்தலைவனாக இருந்தாலும், மற்றவனாக இருந்தாலும் அவன் கருத்து களை அப்படியே ஏற்கக் கூடாது. அவன் கருத்துகள் எவ்வளவு உயர்ந்தனவாக இருந்தாலும் அதனை நம் அறிவைக் கொண்டு சிந்தித்து அவை தற்காலத்திற்கு ஏற்றதா என்று பார்த்து ஏற்கவேண்டும்.

நம் பெண்கள் குறைந்த பட்சம் 20 வயது வரை படிக்க வைக்க வேண் டும். அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும்.வாழ்விற்கு ஏற்ற வருவாயுள்ள தொழிலை அவர்களுக்குக் கற்பிக்கவேண்டும். அதன்பின்            அவர்களாகத் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். வாழ்க்கையில் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும். மனிதன் என்றால்-பகுத்தறிவுள்ளவன் என்றால், அதற்குப் பொருள் கவலையற்று வாழ்வதேயாகும்!

மக்களை ஒன்றாக்குவதற்காக என்று ஏற்பட்டதுதான் மதங்களாகும் என்கிறார்கள். ஆனால், இதன் பலன் என்னவாயிற்றென்றால் மனிதன் ஒற்றுமையாக வாழ முடியவில்லை. பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

  • இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்மற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது

’பெரியாரும் நானும் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்திருக்கிறோம் என்று சொல்வது சரியல்ல! பெரியாரை நான் ஒருபோதும் பிரிந்தது கிடையாது! நான் எங்கிருந்தேனோ, அங்கெல்லாம்  என் உள்ளத்திலே பெரியார் இருப்பார். அவர் உள்ளத்தில் நான் இருப்பேன்!’

‘இந்த ஆட்சி, தந்தை பெரியாருக்கு எங்களுடைய காணிக்கை!’.

  -பேரறிஞர் அண்ணாத்துரை

சீரார் ஈ.வெ.ரா அவர்களுக்கும் எனக்கும் உள்ள அக நகும் நட்பு யார் என்ன சொன்ன போதிலும் என்றும் குறையாது.

                                          – இராஜகோபாலாச்சாரி (கவர்னர் ஜெனரலாக இருந்த போது எழுதியது)

தமிழ்நாட்டில் இராமசாமியின் பிரசங்கம் ஒன்றைமட்டுந்தான், என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். -எழுத்தாளர் கல்கி

பெரியாரே சொன்னது.

நான் யார்?

ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு “யோக்கிதை” இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதி மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத் தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்.

பெரியார் குறித்து இதே தளத்தில் உள்ள பிற கட்டுரைகள்:

தந்தையோடு…

தந்தையோடு…-02

தந்தையோடு..-03

பெரியார் பற்றி கல்கி சொன்னவை

மின் நூல்களாகப் படிக்க நான் பரிந்துரைப்பவை:

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியாரே எழுதிய தன் வரலாறு (சிறுநூல்)

உயர் எண்ணங்கள்

அச்சு நூல்களில் நான் பரிந்துரைப்பவை:

தமிழர் தந்தை -சாமி. சிதம்பரனார்

மிக விரைவில் இன்னும் சில நூல்களையும் இதே இடத்தில் பரிந்துரைக்கிறேன்.

பதிவில் இடம்பெற்ற கருத்துக்கள் யாவும், பல்வேறு புத்தகங்கள், தளங்கள், பதிவுகளில் இருந்து எடுத்தாளப்பட்டவையே. பெரியாரை முடிந்தமட்டும் மாற்றுக்கோணத்தில் அறிமுகம் செய்ய வேண்டி அன்றி வேறெதுவும் இல்லை.

“தொண்டு செய்து பழுத்த பழம்.
தூய தாடி மார்பில் விழும்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும்.
மனக் குகையில் சிறுத்தை எழும்.”
-பாவேந்தர் பாரதிதாசன் பெரியார் குறித்து பாடியது