புத்தகங்கள்

எளிய தமிழில் சொல்வது…

வணக்கம்.

புதிய மின்னூல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம். நான் எழுதிய மின்னூல் ஒன்று வெளியாகியுள்ளது. (தரவிறக்க இணைப்பு பதிவின் இறுதியில் உள்ளது.)

எளிய தமிழில் WordPress.

மின்னூல்

எளிய தமிழில் WordPress

ஏறக்குறைய மூன்றாண்டுகளாய் நீடித்த மின்னூல் உருவாக்கம் இது. ஆகவே ஒருவகையில் இது மகிழ்ச்சியான செய்தி. மூன்று ஆண்டுகள் என்றாலும் புத்தகம் சிறிய புத்தகம்தான். அதை ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு எனக்கான சூழல் கடைசிவரை அமையவே இல்லை. ஆகவே இது ஒரு பெரும் தாமதம்.

கணியம் தொடங்கப்பட்ட காலத்திலேயே (அதன் முதன்முதல் இதழ் முதலாகவே) அதை அறிந்து வியந்தோம் நானும் என் நண்பர் ஓஜஸும். நான் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை எழுத விரும்பி கணியம் பொறுப்பாசிரியரை அணுகினேன். இதை எழுதுறீங்களா? என சுலபமாக அவர் கொடுத்த வாய்ப்பு இப்போது அனைவருக்குமான இம்மின்னூலாக மாறியுள்ளது.

உண்மையில் இம்மாதிரி மின்னூல்கள் எழுதுவது சுலபம். ஆனால் அதை எழுத நேரம் சரியாக அமைவது ஒருவகை அதிர்ஷ்டம். அதேசமயம் தமிழில் கணினி தொடர்பான நூல்களை எழுதுபவர்களை விட அதிக சிரமம் அடைபவர்கள் அதைப் படிக்கிறவர்கள்தான்.

நான் அடிப்படையில் தமிழ்வழியில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் படித்தவன். ஆகவே தமிழில் கணினி தொடர்பான கலைச்சொற்களைப் படிப்பது ஒருவகை சவால்!

பள்ளியில் உயிரியியல் படித்த பலருக்கும் கணிப்பொறி படிப்பவர்களைக் கண்டால் சின்னதாக பொறாமை கூட இருக்கும். நாங்கள் எளிதாக மதிப்பெண் பெறுகிறவர்கள் என்பார்கள்.

எங்கள் பாடத்திட்டம் அப்படி! அதைத் திருத்த முயல வேண்டியது கல்வித்துறைதான்.

வேர்ட்பிரஸ் குறித்து எழுத எவ்வளவோ விஷயங்கள் உண்டு. தொடர்ச்சியாக மேம்பாட்டில் இருக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள் அது.

நான் இந்நூலில் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாமே அடிப்படையானவை. இந்த அடிப்படை விஷயங்களையும் நூலாக்குவதில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. சாதாரண வேர்ட்பிரஸ் மென்பொருளுக்கும், வலைப்பூவாக நாம் பயன்படுத்தும் வேர்ட்பிரஸ் தளங்களுக்கும் இடையேயான வித்தியாசங்களினால் சில சமயம் நானே குழம்பிவிட்டேன் என்பதே உண்மை.எதை நோக்கி எழுதுவது என்கிற குழப்பத்தில் இரண்டிற்கும் பொதுவான விஷயங்களை மட்டும் எழுதியிருக்கிறேன்.

இருமுறை நானே எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஒருமுறை கணியம் பொறுப்பாசிரியர் த.சீனிவாசன் அவர்கள்தான் வேர்ட்பிரஸ் தொடர்பான நூலுக்கான தேவை குறித்து மேலும் சொன்னார். போதாமல் யாரோ ஒருவர் வேர்ட்பிரஸ் குறித்த மின்னூலைக் கேட்டு கணியம் குழுவினருக்கு மின்னஞ்சல் வேறு அனுப்பியிருந்தார்.

அவ்வளவுதான். விரைவாக மீண்டும் எழுதத் துவங்கிவிட்டேன்.

இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. A4 PDF மின்னூல் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. நானே மின்னூல் வடிவமைப்பு செய்ய வேண்டியது. ஆனால் என்னிடம் முழுமையான Content இல்லை. சில மாதிரி படங்கள் அழிந்துபோய் விட்டன.

மீண்டும் கணியம் தளத்திலிருந்து எடுத்து ஒட்டினாலும், தகவல்பிழைகள் ஏதும் வரக்கூடும் என்கிற பயம் வேறு. பொறுப்பாசிரியரிடமே பொறுப்பை ஒப்படைத்து நகர்ந்து கொண்டேன்.

ஒரு விஷயம் மட்டும் உறுதி.

தமிழில் கணினி தொழில்நுட்ப நூல்களை எல்லோரும் படிக்கும்படி எழுதுவது ஒரு சவால். அதை ஓரளவு நான் வென்றிருக்கிறேன் என நம்புகிறேன். தனிப்பயனாக்குதல் என்று ஒரு சொல் பயன்படுத்தியிருப்பேன். Customization என்பதன் தமிழாக்கம் அது. எத்தனை பேருக்கு அதெல்லாம் புரியுமோ தெரியாது! மற்ற இடங்களிலெல்லாம் முடிந்த மட்டும் தமிழும், ஆங்கிலமும் கலந்து நெருடல் இல்லாமல் எழுதியிருக்கிறேன்.

[விஷயம் என்ற சொல்லை முன்பு விடயம் என்றே நான் பயன்படுத்தினேன். அதுவும் இம்மின்னூலில் அப்படியே இருக்கிறது. இப்போது நான் விஷயமாகத்தான் எழுதுகிறேன் விடயமாக அல்ல!]

தற்போதைய வேர்ட்பிரஸ் வசதிகள் முழுமையாக இம்மின்னூலில் ஒருவேளை இருக்காது. அடிப்படையில் குழப்பம் இல்லை. மாதிரிப் படங்கள் மாறியிருக்கலாம்!

இதை மேம்படுத்தி எழுத வேண்டிய தேவை மீண்டும் எழும். அப்போது குறைகளை நானே களைவேன் என நம்புகிறேன்.

தமிழில் தொழில்நுட்ப நூல்களுக்கான தேவை அதிகம் உண்டு. அதில் என் பங்கில் ஒரு துளி இது.

இம்மின்னூல் உருவாக்கத்தில் பங்கு கொண்ட த.சீனிவாசன், பிரசன்னா, லெனின் குருசாமி ஆகியோருக்கு என் நன்றிகள் எப்போதும் உண்டு.

வரும் காலங்களில் நிறைய பேர் கணியம், Free tamil ebooks திட்டங்களில் செயலாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

தரவிறக்க இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/learn-wordpress-in-tamil/

நன்றியுடன்

தமிழ்

Advertisements

மானுடப் பண்ணை – வாசிப்பனுபவம்

மாலை ஐந்து மணி. ஆளரவமற்ற தி.நகர் ரங்கநாதன் தெரு. அவன் அவளுடைய வீட்டுக்கு எதிரே வந்தான். வீட்டு வாசல் அருகே அவள் இருப்பது தெரிந்தது. அவளுடைய கவனத்தை ஈர்க்கும் விதமாக தன் சட்டைப் பையில் இருந்த எட்டணா காசைத் தெருவிலே போட்டான். அது டணங், டணங் என்ற சப்தத்தோடு உருண்டோடி, அவள் அவனைப் பார்த்தாள்.

இது எழுத்தாளர் எஸ்.வி.வி எழுதிய சிறுகதையில் வரும் காட்சி. இது 1960-களில் வந்த கதை. மாலை ஐந்து மணிக்கு தி.நகர் ரங்கநாதன் தெரு ஆள் அரவம் அற்றுப் போய்விடும் என்பது ஆச்சர்யமான சரித்திரக் குறிப்பாகிவிடுகிறது.

– இது எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய மானுடப் பண்ணை நாவலின் முன்னுரையில் சில வரிகள்.
நாவல் எழுதப்பட்ட காலத்தின் சில குறிப்புகள் பின்னாளில் வரலாற்று முக்கியத்துவமாகி விடுவதைக் காண முடிகிறது.
கதை நாயகனின் கோபமான மனநிலையிலேயே நாவலின் துவக்கம் அமைகிறது. படித்து முடித்து வேலை தேடும் இளைஞன். அவனுக்கு வேலை கிடைக்காமல் போனதன் பின்னணி நாவலின் முக்கியப் புள்ளி. கிடைக்கிற சொற்ப சம்பளத்திற்காக ஒப்பந்த வேலைகள் சிலவற்றை செய்து வருகிறான். எப்படியாவது இருக்கிற தகுதிக்கு நல்ல சம்பளத்தில் வேலையில் அமரத் துடிக்கிறான்.
அது நிறைவேற காலம் அவ்வளவு எளிதில் அனுமதிக்க மறுக்கிறது. இடைப்பட்ட காலம் முழுக்க அந்த இளைஞனின் வாழ்வியலைப் புரட்டும் நிகழ்வுகளே நாவல்.

தனக்கு விருப்பமானதைச் செய்ய இயலாமல், மற்றவர்கள் சொல்கிற வேலைகளை மறுக்க இயலாமல், அப்படி மறுத்தால் – ‘வேலையில்லாமதானே இருக்க.. இதைச் செய்ய வேண்டியதுதானே?’ என்கிற அலட்சியமான மிரட்டல் என்பதே வேலையில்லாதவர்கள் மீது சமூகம் காட்டும் முகம்.

குடும்பத்திற்குள்ளும் இதே போன்றதொரு அவமதிப்புகளும், அலட்சியங்களும் தொடர்கின்றன.

தான் விரும்பிய பெண்ணிடம் என்ன சொல்லி பேசத் தொடங்குவது? பதிலுக்கு அவள் ஏதேனும் கேட்டுவிட்டால்? அல்லது சொல்லி விட்டால்? இது காதல் மயக்கத்திலும் தன் இருப்பு குறித்த பயம்.

போதாமல் அரசியல் குறித்து அறிகிறான். படிக்கிறான். விவாதிக்கிறான். நாவலின் இறுதி அத்தியாயம் அப்படித்தான் தொடர்ந்து முடிகிறது.

நாவலின் பெரும்பலம் நாவலின் மையப்புள்ளி. அதைச் சுற்றி நகரும் நிகழ்வுகள். யதார்த்தமான கதை மாந்தர்கள். சுவாரசியத்துக்கு குறைவில்லாமல் இயல்பாக நகரும் உரையாடல்கள்.

”ரெண்ட் ரூபா… ரெண்டு ரூபால பானை வருமா சார்? ” எனும் மேஸ்திரி.
”You are a technical man.. வாழைப்பழம் வாங்கத் தெரியலையே உனக்கு?” என சீறும் ஐயர்.
”இதோ இருக்குதே வடபழனிக் கோயில், அதை யார் கட்டினது தெரியுமா? ” என சாதி பேசும் பரமசிவம்.
பொதுவுடைமை, பெரியாரியம் என அரசியல் பேசும் அசோகன், பாலகிருஷ்ணன்.

 

“மார்க்ஸு எந்த ஊர்க்காரு?”
“ஜெர்மன்.”
“அந்த ஊர்ல ஜாதி இருந்துதா?”
“ஏன் அங்கயும்தான் செருப்பு தைக்கிறவன், தச்சன், கருமான் எல்லாம் இருக்காங்க.”
”சரி அங்கெல்லாம் செருப்புத் தைக்கிறவன் புஸ்தகத்தைத் தொட்டா கைய வெட்டுவாங்களா? ஈயத்தக் காய்ச்சி அவன் காதுல ஊத்துவாங்களா?”
”தி.க….வுல நல்லாதான் தயார் பண்ணி உட்டுருக்காங்க.”
”இதப் பாருங்க சார்… நான் தி.க.வே இல்லை. பொதுவாக் கேக்குறேன்……..”

 

நாவலின் இறுதி அத்தியாயம் ஒன்றில் விவேகானந்தர் சொன்ன கிணற்றுத்தவளை உவமை இடம்பெறுகிறது. அதன் கீழே ஆசிரியர் குறிப்பும் கூடுதலாக இருந்தது. ஒருவேளை குறிப்பில்லாமல் இருந்தால் நூலை எரித்து விடுவார்களோ என்கிற படியாகவும் இருக்கலாம்.
உயிர்மை பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2014-ல் வெளியாகியுள்ள இந்நாவல் 1980-களின் இளைஞனைப் பற்றியது. தமிழ்மகன் 1985-ல் எழுதி, 1989-ல் வெளிவந்த இந்நூல் 1996-ல் தமிழக அரசின் விருது பெற்றது.
பின்னட்டையில்:

அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைகழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, லாதல், வேலைவாய்ப்பு, அரசியல், அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பது இந்த நாவலை இப்போது படிக்கும்போதும் தோன்றுகிறது.

தமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில், இதுவும் ஒன்று. லட்சக்கணக்கான இளைஞர்களின் ‘சோக ’ வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால், தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளங்குகிறது.
என இந்நாவலின் முதல் பதிப்பிற்கு எழுதிய முன்னுரையை நிறைவு செய்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

சென்ற ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தை பார்க்க என்னுடைய சில தோழர்கள் சென்று வந்ததைச் சொன்னார்கள். இறுதிக்காட்சி முடிந்த பின் எழும்பிய பேரொலி குறித்து சொன்னார்கள்.

இந்த நாவலுக்கு இப்போது வயது முப்பது. காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பது இந்த நாவலை இப்போது படிக்கும்போது எனக்கும் தோன்றுகிறது.
தமிழ்
ஜூலை 6 2015

மூன்று விரல்- ஒரு பேரனுபவம்!

வாழ்க்கை நிற்காது. அவ்வப்போது சண்டித்தனம் செய்யும்.

கன்ட்ரோல் – ஆல்ட்டர் – டெலிட்

திரும்ப இயக்கம்.

ஏதேதோ இழந்துபோயிருக்கலாம். ஆனால் என்ன? முதலில் இருந்து தொடங்க வேண்டியதுதான்.

 

மூன்று விரல்

இரா.முருகன்

நூலாசிரியர் பெயரைப் பார்த்ததுமே, புத்தகத்தை கீழே வைக்க மனம் ஒப்பவில்லை. பக்கங்கள் 360 இருந்தது. சரி முயற்சித்துப் பார்க்கலாம். சமயங்களில் இரண்டு நாட்களில் கூட படித்து முடிக்கிற வல்லமை வரக்கூடும் என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன். எப்படியானாலும் அந்த புத்தகத்தை கீழே வைக்க மனம் இல்லை. இரண்டு காரணங்கள் அதற்குண்டு.

 1. 1.அரசூர் வம்சம் நூலை அதன் அளவைப் பார்த்து சில ஆண்டுகளுக்கு முன் படிக்காமல் விட்டதன் பொருட்டு இன்றளவும் வருத்தம் உண்டு.
 2. மென்பொருள் துறை சார்ந்து தமிழில் வெளிவரும் முதல் நூல் என்று அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எடுத்தேன். மூன்றோ, நான்கோ நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இதோ நிதானமாக சில மாத இடைவெளிக்குப் பின்னர் இப்பதிவை எழுதுகிறேன்.

மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்கள் பற்றிய பார்வை சில ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தது என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும். இப்போது நிலைமை பெரும்பாலும் மாறிவிட்டது. பரிதாப பார்வை தான் மிச்சம்.

கதை நிகழும் காலகட்டம் ஆரம்பத்தில் நேரடியாக சொல்லப்படவில்லை. 2000-கள் என்று மறைமுகமாக உணரலாம். கதை நாயகன் சுதர்சன் இலண்டனில் தனது க்ளையண்ட்களுக்கு ஒரு மென்பொருளை இயக்கிக் காட்டுவதில் இருந்து கதை துவங்குகிறது.

இலட்சங்களில் சம்பளம் பெறுபவர்கள், பணத்தை தண்ணி மாதிரி செலவழிக்கிறவர்கள் என்கிற மாதிரியான பிம்பங்கள் எல்லாமே துறைக்கு வெளியில் இருப்பவர்கள் சொல்வதுதான். ஆனால் துறைக்குள் இருப்பவர்களின் வாழ்வியல் எப்படிப்பட்டது என்பதுதான் கதைக்கரு என்று உணர்கிறேன்.

இரா.முருகனின் கதை சொல்லும் யுக்தி ரொம்ப அலாதியான அனுபவம். படிக்கும் போதே காட்சிகளில் ஓட்டிப்பார்க்க வைக்கும் இலாவகமான எழுத்து நடை. சுவாரசியமான உரையாடல்கள், சிரிக்கவைக்கும் ஒப்பீடுகள் என அலுப்பில்லாமல் கதை சொல்லுகிறார்.

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது! நான் பணம் தர்றேன். எனக்கு வேணுங்கிற மாதிரி நீ ஒரு மென்பொருள் தரணும் என்கிற மாதிரியான சூழல்கள் நிதர்சனமானவை.

வேலைப்பளு அழுத்தும்போதெல்லாம் எம்.டியை மனதாரத் திட்டித் தீர்ப்பதெல்லாம் ரொம்பவே இயல்பாக நம்மைக் கதைக்குள் இழுத்துக்கொண்டு நகர்கிறது.

பிக்கடலித் தெருவினைச் சுற்றுவதில் இருந்து இலண்டன், சென்னை, மாயவரம், தாய்லாந்து, மோர்ச்சித் மோய், மலேசியா, அமெரிக்கா என உலகம் முழுக்க பயணிக்கிறது கதை.

கதையில் மாயவரத்தில் நிகழும் காட்சிகள் யாவும் ரொம்ப யதார்த்தமாக இருக்கின்றன. சுதர்சன் தன் அம்மாவைப் பார்க்கிறபோது அவனுள் எழும் உணர்வுகளை வார்த்தைகளில் தருகிறார் இப்படி.

…கண்ணில் களைப்பு மீறி கொண்டு ஓர் உற்சாகம். என்னை மீறி என்ன நடக்கப் போகிறது என்ற தைரியம்.

எல்லோருக்கும் அம்மா என்றால் அப்படித்தானே!

கதை நெடுக யாரும் வில்லன் ஹீரோ என்றெல்லாம் கிடையாது. எனக்கு ரொம்ப பிடித்ததே ஜெப்ரி, அவ்தார் சிங் சபர்வால் என பெரிய மனிதர்கள் யாவரும் சுதர்சனோடு பழகும் விதம்தான்.

நமக்கும்கூட நம்மை விட பெரியவர்கள் நம்மிடம் அணுக்கமாக, இணக்கமாக, இயல்பாகப் பழகுகையில் அப்படித்தான் இருக்கும்!

சந்தியா வாரியர் மாதிரி ஒரு காதலி கிடைத்தால் சுகம் என்று எண்ண வைக்கும்படி அந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

தாய்லாந்து என்றாலே வெள்ளை யானைகளுக்குத்தான் பிரசித்தம் என்று நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் வரை நினைத்திருந்தேன். சரி விடுங்கள்! அதே கதைதான் இங்கும் தொடர்கிறது. தெருவுக்கு தெரு, கடைக்கு கடை தாய்லாந்தில் சுதர்சனை துரத்திக்கொண்டே இருக்கிறது.

500 பாட் ஒரு நைட் வர்றியா? 2000 பாட் ரெண்டு பேர் ஒரு நைட் வர்றியா? என திரும்பும் திக்கெல்லாம்  மசாஜ் பார்லர் பார்ட்டிகளின் குரல்களாக ஒலிக்கிறது.

மென்பொருள் உருவாக்கம் என்பது ஏதோ கம்ப்யூட்டரில் சில வரிகள் தட்டினால் வந்துவிடும் என நினைக்கிறவர்களுக்கு ஏதுவாக ஒரு உரையாடல் அமைகிறது.

  ’ரேஷனல் ரோஸ் இல்லாம எப்படி யு.எம்.எல் மாடலிங் பண்ண முடியும்? விசியோ வச்சுக்கிட்டு எல்லாம் கோடு இழுத்துப் படம் வரஞ்சு ஒப்பேத்த முடியாது’

கதையை முழுசாகவோ, சுருக்கமாகவோ சொல்ல விரும்பவில்லை. முதன்முதலாக அப்புத்தகத்தைப் படிக்கையில் உங்களின் வாசிப்பு அனுபவம் மிகவும் அலாதியானதாக இருக்கும். அதை நீங்கள் தவற விடக்கூடாது.

பத்துப் பக்கங்களில் இருபது-முப்பது முறை சிரிக்க வைக்கிற அசாத்தியமான இரா.முருகனின் நடையை கவனிக்கையில் எனக்கு தோன்றியது இதுதான்.

ஏன் இந்த மனுசனை சீரியஸான படங்களுக்கு (மட்டும்) வசனம் எழுத வைக்கிறார்கள்?

தான் சார்ந்திருந்த இணையதளம் ஒன்றில் கணினி தொடர்பாக ஒரு தொடர் எழுதுமாறு எழுத்தாளர் பா.ராகவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இரா.முருகன் இதை எழுதியதாக முன்னுரையில் சொல்கிறார்.

நாவலின் குறைகள் ஏதும் இருக்கலாம். இருந்துவிட்டு போகட்டுமே என்றுதான் இந்நாவலின் மற்ற வாசகர்களைப் போலவே நானும் சொல்வேன்!

ஒரு உரையாடல்:

தாய்லாந்தில் பாஸ்போர்ட் தொலைந்துவிடுகிறது. அவனுக்கு உதவ சுதர்சனும் செல்கிறான். பாஸ்போர்ட் அதிகாரியை பார்த்து பேசும்போது…

‘பொறுப்பா இருக்க வேண்டாமா? மதராஸிகளுக்கு இதெல்லாம் கூடவா சொல்லித் தரணும். இட்லி சாம்பார் சாப்பிட உனக்கு யாராவது சொல்லிக் கொடுத்தாங்களா என்ன? ’

என்ன செய்ய? மதராஸிகளுக்கு மூளையை வைத்த ஆண்டவன், அந்நிய நாட்டுத் தூதராலயங்களில் அவர்களை உட்காரவைக்கவில்லையே? ஹிந்தியில் மூச்சுவிட்டு, ஹிந்தியில் ரொட்டி சாப்பிட்டு, ஹிந்தியில் சிறுநீர் கழிக்கிறவங்களுக்குத்தானே அந்த மாதிரி கவுரவப்பட்ட உத்தியோகங்கள்? 

‘நாயை மேட்டிங் விடக் கூட்டிப் போய்ட்டு இருக்கேன். இப்போ வந்து தொந்தரவு பண்ணறியே.. நாளைக்கு ஆபிஸுக்கு எப்ஐஆரோட வா… ஏதாவது முடியுதான்னு பார்க்கலாம்…’

சரி ப்ரபோ. நீங்கள் நாய்க்கு முறைமாமனாக உங்கள் கடமையை ஆற்றுங்கள். நாளை பிழைத்துக் கிடந்தால் வந்து உங்களைச் சேவிக்கிறோம். ஹூக்கா நிறையப் புகையிலையும், சாப்பிட தால் ரொட்டியும் உங்களுக்கு பகவான் புண்ணியத்தில் தடையேதும் இல்லாமல் கிடைக்கட்டும். இன்னொரு சின்னக் கடவுள் புண்ணியத்தில் உங்கள் பெண் நாயும் இந்த புண்ணிய தினமான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ராகுகாலம் கழிந்து சகல சௌபாக்கியங்களோடும் சினையாகட்டும்.

முன்னுரையின் இறுதியில்:

எல்லா படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்துவிடுகிறது.

மற்றொரு விமர்சனத்தில் இருந்து:

‘திடீரென்று இயக்கம் மறந்து உறைவதும், திரும்பச் செயல்படத் தொடங்குவதும் கம்ப்யூட்டர் குணாதிசயம் மட்டுமில்லை, அதோடு சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கை நியதியும் கூட’ என்பதை இந்நாவலின் மூலம் முருகன் உணர்த்துகிறார். கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள் நம்மில் பெரும்பாலோர் நினக்கிறபடி தலையில் கொம்பு முளைத்த, சட்டைபையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும், நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம் மென்றபபடி தரைக்கு மேலே சரியாகப் பத்து செண்டிமீட்டர் உயரத்தில் பறக்கிற’ அசாதாரண மனிதர்கள் இல்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள் தாம்; மென்பொருள் பிழைப்பு என்பது நாய் படாத பாடு என்று நமக்குத் தெரியப்படுத்துகிறது நாவல்.

‘ஒரு விபத்தின் பயங்கரத்தை அசலாக உணர வேண்டுமென்றால் விபத்து நடந்த வண்டிக்குள் நீங்கள் இருந்தாக வேண்டும்’ என்று காண்டேகர் சொன்னது போல – ‘வரிக்கு வரி நகைச்சுவையும், மனதைச் சுண்டுகிற உவமைகளுமாய் நிறைந்திருக்கிற இந்நாவலைப் படிப்பதே தனி சுகம்தான்’ என்று நான் என்னதான் திருப்பித் திருப்பிச் சொன்னாலும். அதை நீங்கள் திகட்டத் திகட்ட அனுபவிக்க நாவலை முழுதுமாய்ப் படிப்பதுதான் ஒரே வழி!

 

என் கருத்து:

நாவல் குறித்த விமர்சனங்கள் இணையம் முழுக்க கிடைக்கின்றன. நாவலைப் படிக்காமல் அதைப் படித்தால் நீங்கள் ஒரு நல்ல அனுபவத்தை தவற விடப்போகிறீர்கள். நூல் கிழக்குப் பதிப்பக வெளியீடு. இப்போது நூலின் விலை ரூ.215. அதிகம் என நினைப்பவர்கள் புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் பிற நண்பர்கள் மூலமாகவோ, நூலகம் மூலமாகவோ படிக்கலாம். நானே நூலகத்தில் தான் இதைப் படித்தேன் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்   

 

சாயாவனம் -அறிமுகம்

சாயாவனம்

சாயாவனம் படிக்க நம்மை உந்தக்கூடிய முதல் கூறு சா.கந்தசாமியின் எழுத்து நடைதான். சுகமான வாசிப்பு அனுபவத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும் நடை. தஞ்சை வட்டாரத்தில் நடக்கிற கதை. வட்டார வழக்கில் அமைந்த உரையாடல்கள்தாம் நாவலின் பெரும்பலம்.

’ஆமாங்க’ ‘சரிங்க’ என்று சின்னச் சின்ன வார்த்தைகளிலும் மரியாதையோடு அழைக்கும்படியாகவே அனைத்து பாத்திரங்களும் பேசிக் கொள்கின்றனர். சுற்றுச்சுழல் குறித்த எந்தவிதமான அச்சமும் இல்லாத காலத்தில் (1960-கள்) சிறிய தொழிற்சாலைகள் அமைத்தவர்கள், அமைக்க முயற்சித்தவர்களின் கதையை நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்துரைக்கிறது கதை. அக்காலகட்டத்தில் அமைந்த சாதியமுறைகள் குறித்த சிறிய பதிவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

சிதம்பரம் என்கிற முதன்மைக் கதாபத்திரத்தில் இருந்து கதை துவங்குகிறது. சாயாவனம் எனும் பகுதியை தஞ்சையில் வாங்குகிறான் சிதம்பரம். அங்கு கரும்பு ஆலை துவங்குவதாகத் திட்டம். சுற்றிலும் இருப்பவர்கள் நெல் விவசாயிகள். யாரும் கரும்பு போடமாட்டார்கள் என்கிற நிலையில் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்காமல் சாயாவனத்தை அழித்து ஆலை அமைக்க முயற்சிக்கிறான். அதில் வெற்றி பெற்றானா? இல்லையா? என்பதை நிதானமாக எடுத்துரைக்கிறது கதை.

புளியந்தோப்பின் முகப்பில் நின்று வானத்தை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம். என்று முதல் வரி துவங்குகிறது. அதற்கு நாவலின் கடைசி வரிகள் பதிலாக முடிகின்றன.

நாவலின் துவக்கம் முழுக்க இயற்கை மண்டிக் கிடக்கிறது. சாயவனம் எவ்வளவு அடர்ந்த பகுதி என்பதை நிதானமாக எடுத்துரைக்கிறது.

கிளாஸிக் பதிப்பிற்காக எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய முன்னுரையிலிருந்து சில வரிகள்:

’சாயாவனம்’ நாவலில் சா.கந்தசாமி காட்டியுள்ள நுட்பம் தமிழின் முக்கியமான ஒரு சாதனை. …

………… ஒன்றை அழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது.

தன்னால் மறுபடியும் உருவாக்கித்தர முடியாத ஒன்றை மனிதன் அழிப்பது துயரமானது. ஆனால் வெற்றியைச் சுவைக்கும் ஆசைத்தீ அவன் கண்களை மறைத்து விடுகிறது.

இறுதியாக:

நாவல் எந்த இடத்திலும் வர்ணனைகளால் நிரம்பாமல் இயல்பாக நகர்கிறது. மொத்தமாய் இருநூறு பக்கங்களுக்குள் ஒரு அருமையான, சுகமான வாசிப்பைத் தரும் நாவல். நேர்த்தியாக செல்லும் கதை முடிவை நோக்கிச் செல்லுகையில், சிவனாண்டித் தேவர் வீட்டுக் கல்யாண நிகழ்வுகளை நிதானமாக எடுத்துரைக்கையில் கொஞ்சம் நீள்வது போல் இருக்கிறது. மற்றபடி கதையும் வேகமான கதை. அதே சமயம் ஆழமான சிந்தனையைக் கிளறும் நூல். தேர்ந்த எழுத்தாற்றல் கொண்ட சா. கந்தசாமியின் முதல் நாவல் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

பணம் என்கிற விஷயத்தைப் பெரிதாக எண்ணாத கதை மாந்தர்கள் இப்போது வாசிக்கையில் வியப்பில் ஆழ்த்துகிறார்கள். வீடு கட்டுகையில், கூலியாக பணம் தர எண்ணுகையில் அதை மறுத்து அரிசி கேட்கும் இடம் ரொம்ப ஈர்த்தது. இன்னும் இன்னும் ரசிக்க, உணர, சிந்திக்க ஏராளமான இடமுள்ள சிறந்த நாவல்.

 சா.கந்தசாமி (1940-)

தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர். தனது 25-வது வயதில் இவர் எழுதிய நாவலே சாயாவனம். இது 1969-ல் வெளிவந்தது. இதுவரை 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 11 நாவல்களையும் எழுதியுள்ளார். ஆவணப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர் எடுத்த சுடுமண் சிலைகள் தொடர்பான ஆவணப்படம் சர்வதேச விருதுகளைப் பெற்றது.

இவர் எழுதிய சாயாவனம், சூரிய வம்சம், விசாரணைக் கமிஷன் ஆகிய நாவல்கள் ஆங்கிலம் உள்பட இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக் கமிஷன் எனும் நாவலுக்காக 1998-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.

அப்பா இதே நூலை 1980-களில் படித்து முடித்ததாகச் சொன்னார். சாயாவனம் என்ற தலைப்பே மிகச்சிறப்பான சொல்லாட்சி. அழியாத காடு என்று பொருள்படும்.

அடுத்ததாக சூர்ய வம்சம் நாவலை படிக்க விருப்பம். வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன். காலச்சுவடு கிளாஸிக் வரிசையில் என்னென்ன நூல்கள் வந்துள்ளன என யாரேனும் குறிப்பிட்டால் நலம். கிளாசிக் வரிசையில் அடுத்து சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளியமரத்தின் கதை படிக்க விருப்பம்.

ஆகட்டும் பார்க்கலாம்.

இன்னொரு இனிய நூலை அடுத்து அறிமுகம் செய்கிறேன்.

இடைவெளிக்குப் பின்…

நீண்ட நெடும் ஓய்வு காலத்திற்குப் பிறகு புத்துணர்ச்சியோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் களைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு-மூன்று மாதங்களாகக் குறிப்பிட்ட வேலை எதுவும் இல்லை. ஆனாலும் இது கடினமான தருணம். 2014 கடினமாக அமையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு கடினமாக அமையும் என்றுதான் எதிர்பார்க்கவில்லை. அந்த கடினத்தை எதிர்கொண்டதன் களைப்புதான் இப்போது எஞ்சியிருக்கிறது.

வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்துவிட்டேன் (என்று நினைக்கிறேன்!). இனி என்ன நடக்கவேண்டும் என்பதையும் நானேதான் தீர்மானித்தாக வேண்டும். இந்த வாய்ப்பைக் கோட்டைவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்கிறேன். அதற்கான பயிற்சிகளிலேயே கடந்த காலமும் கடந்து விட்டது.

கிட்டத்தட்ட பயிற்சி முகாமில் கலந்துகொண்டவனைப் போலவே இருக்கிறேன். காலநேரம் பார்க்காமல் கிடைத்த அறிவுரைகள் ஏராளம். நடுநிசியோ, அதிகாலையோ என்னிடம் என்னைப் பற்றி உரையாட ஏராளமான நலவிரும்பிகள் இருந்தனர்.

இதுவரையிலான நாட்களில் நடந்த தவறுகள் என்னென்ன? நான் எனக்காக மாற்றிக்கொள்ள வேண்டிய திருத்தங்கள், உணர்ந்துகொள்ள வேண்டிய சமுகச்சூழல்கள் என பலதரப்பட்ட வடிவங்களில் என்னைக் கூர்தீட்டிக் கொள்ள ஏதுவாக பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களின் அனுபவங்களை எனக்குச் சொல்லித் தந்தார்கள். இந்த வருடத்தை மறக்கமுடியாதபடிக்கு நிறையவே நிகழ்ந்து விட்டது.

என்ன செய்வது என்கிற குழப்பமே பெரும் கவலையைத் தந்தது. புத்தகங்களையும் ஒரே ஒழுங்கில் படிக்க இயலவில்லை. ஒரு பெருநாவல் ஒன்றினை நடுநிசியில் வாசிக்க முற்பட்டால் உறக்கம் வந்துவிடுகிறது. இன்னொரு நாள் எட்கர் தோர்ப் கொடுத்த கணக்குகளைத் தீர்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாமல் போட்டுக்கொண்டிருந்தேன். என்ன செய்ய தலைவிதி!!

நூலகங்களுக்குப் போனாலும் தலைவலியோ, உடல்சோர்வோ ஏற்படுகிறது. உடல் எடை சற்றே உயர்ந்திருக்கக் கூடும். இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

சுயபுராணங்களை இங்கு தவிர்க்கவே பார்க்கிறேன். ஆனாலும் அவ்வப்போது மட்டும் இடுவதில் ஒரு ஆனந்தம். புத்தகங்கள் குறித்தும், மற்ற இயல்பான பகிர்வுகள் பற்றியும் மட்டும் இனி இங்கு எழுத ஆசை. எவ்வளவு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் படிக்கவும், எழுதவும் மட்டும் ஆசை விட்ட பாடில்லை.

படித்தவை!

 • மாணாக்கர்களுக்கு மட்டும் – தேவன்
 • சாயாவனம் -சா கந்தசாமி
 • மைதிலி -தேவன்
 • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் -நாவல் வடிவில் – கே.ஜி.ஜவர்லால்
 • ஃபெலூடாவின் சாகசங்கள்-2 -மகாராஜாவின் மோதிரம் – சத்யஜித் ரே
 • மூன்று விரல் -இரா. முருகன்
 • ஒரு லோட்டா இரத்தம் – பேயோன்
 • விஷ்ணுபுரம் தேர்தல் – இரா.முருகன்
 • இளவரசனும் ஏழையும் – சுருக்கப்பட்ட தமிழ்ப் பதிப்பு -மார்க் ட்வைன்
 • கிறிஸ்துமஸ் கீதம் – சுருக்கப்பட்ட தமிழ்ப் பதிப்பு -சார்ல்ஸ் டிக்கன்ஸ்
 • ஒரு கவிஞனின் கதை -கவியரசர் கண்ணதாசன்

இத்தோடு 

 • யாமம் -எஸ்.ராமகிருஷ்ணன் – முற்றுப்பெறவில்லை…

நூல்களில் சிலவற்றைப் பற்றிய என்னுடைய புரிதல்களையும், அனுபவங்களையும், அறிமுகத்தையும் விரைவில் பகிர முடியும் என நம்புகிறேன். இன்னும் சில நூல்கள் விட்டுப்போயிருக்கலாம். ஏனென்றால் இம்முறை நான் ஏதும் கணக்கு வைத்துக் கொண்டு படிக்கவில்லை. கிடைத்ததையெல்லாம் படித்தேன்.பல நூல்கள் ஒரே நாளில் சில மணிநேரங்களில் முடிக்கப்பட்டவை. (அவ்வளவு சிறிய நூல்கள்.)

இந்நூல்களில் ஏதேனும் ஒன்றையாவது நீங்களும் படித்திருப்பீர்களானால் மறுமொழியில் குறிப்பிடுங்கள்.

வாசித்ததில் உள்ளத்தோடு ஒன்றி அடிக்கடி தற்போது உச்சரிப்பது இவ்வரிகள் தான்:

வாழ்க்கை நிற்காது. அவ்வப்போது சண்டித்தனம் செய்யும்.

கன்ட்ரோல் – ஆல்ட்டர் – டெலிட்

திரும்ப இயக்கம்.

ஏதேதோ இழந்துபோயிருக்கலாம். ஆனால் என்ன? முதலில் இருந்து தொடங்க வேண்டியதுதான்.

மற்ற கதையெல்லாம் அடுத்த பதிவில்…