பயணங்கள்

சில குறிப்புகள்

திடீரென இந்த வரி நினைவுக்குள் வந்தது. ஏன் என்று கேட்டால் சில கேள்விகளுக்கு பதில் வராதுதான்.

பள்ளியில் படிக்கிற போது, சில பாடல்களை சிறப்பான விளக்கங்கள் மூலம் நடத்திய ஆசிரியர்கள் எல்லோருக்கும் நினைவில் இருப்பார்கள். விளக்கங்கள் உதாரணங்கள் மூலம் மனதில் காலத்திற்கும் நின்றிருக்கும்.
எங்கிருந்தோ வந்து காதில் விழுந்தது.

“போடா! சொன்னப்பயலே”.

எந்த வார்த்தை இப்படி திரிந்து வந்தது என யோசனை போனது. இப்போதெல்லாம் நிறைய வார்த்தைகள் திரிந்துகொண்டே போகின்றன அல்லவா! டங்கா மாரி என்கிற வார்த்தையின் மூலம் அடங்கா மாரி – யா? இடங்கா மாரி- யா? என்றொரு பதிவைக் காண நேர்ந்தது.
பாரதிதாசனுக்கு அறிமுகம் தேவைப்படாது. அவரெழுதிய பாடல் ஒன்றின் ஒற்றை வரி ரொம்ப காலமாக மனதில் இருக்கிறது.

”தொன்னை யுள்ளம் ஒன்றுண்டு – தன்னாட்டு சுதந்தரத்தால் பிறநாட்டை துன்புறுத்தல்”

சொன்னப்பயல் என்கிற வார்த்தை என்னை தொன்னையுள்ளம் வரை கொண்டு சென்றது.
பாரதிதாசனுக்கு அவர் எழுதியதிலேயே பிடித்த பாடல் என்று

”எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்.. ” பாடலைச் சொல்வார்கள். அதில் பாருங்கள்.. ஈனுவது என்பது தாய்க்குரியது. அதில் தந்தை முன்னால் எப்படி வருவார்? இது என் தமிழாசிரியர் ஒருமுறை எழுப்பிய கேள்வி.

இலக்கண வரைமுறைகளின் படி வந்திருக்கலாம் என்பது என் துணிபு. எனை ஈன்ற தாய்க்கும் தந்தைக்கும் என்பதில் ஏதோ குறை இருப்பது போல வாசிக்கையிலேயே தோன்றுகிறது.

சமீபத்தில் அடிக்கடி கேட்ட பாடலென்று சொல்லச் சொன்னால் நிறையவே சொல்லலாம். அதில் இங்கு குறிப்பிட வேண்டியது பாரதியாரின் “ஆசை முகம் மறந்து போச்சே” முழுப்பாடல் ஒலி வடிவில் இல்லையென நினைக்கிறேன். வரி வடிவில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 

”பறவையா பறக்குறோம்..”  பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? பலமுறை நானும் அப்பாடலைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் தோணவில்லை. சமீபத்தில் திடீரென தோன்றியது இப்படி..
அப்பாடலின் ஒரு வரி இப்படிப் போகும்..
”சூரியன் போல நாங்க சுழலுவோம்!”
அறிவியல் படி சுழல்வது பூமிதான். சூரியன் அல்ல!
பாரதிதாசன் – பாரதி – யுகபாரதி என ஒரு சுற்று வந்தாயிற்று அல்லவா!

*
வீட்டுக்கு இம்மாத தொடக்கத்தில் சென்று திரும்பினேன். குறுகிய இப்பயணத்தின் சில மணிநேரங்களை மதுரையில் செலவிட்டேன். மாலை நேரம்தான் சென்றேன் என்றாலும் வெப்பம் அதிகம்.

சீமாந்திரா, தெலுங்கானா மாநிலத் தோழர்கள் சிலரோடு உரையாடினேன். தமிழ்நாட்டை விட ஆந்திரப் பிரதேசம் வெப்பம் அதிகம் என்றே நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் மதுரை அதிகம் சுடுவதாகச் சொன்னார்கள்.

உணவு முறையும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வித்தியாசமாக இருப்பதாகச் சொன்னார்கள். மதியம் மட்டும்தான் சோறு கிடைக்கிறது. காலையும், இரவும் இட்லி, தோசை மட்டும் எப்படி சாப்பிடுவது என்றார்கள். சில உணவுகளை பழகிக் கொள்ளச் சொன்னேன்.

டவுன் ஹால் ரோட்டில், பஞ்சாபி தாபாக்களைக் குறித்து வைத்திருக்கிறார்கள். வாரம் ஒருமுறை தாபாவில் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொன்னார்கள். அதே சாலையில் நான்கு தாபாக்கள் இருப்பதைக் கண்டேன். தமிழ் எழுத்துருக்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்கிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் தமிழ் கற்றுவிடுவார்கள் என நம்புகிறேன். உதவி தேவை என்றால் அழைக்கிறோம் என்றார்கள்.
*
ஒன்றிரண்டு தோழர்கள் சில வருடங்கள் முன்பு குறும்படம் எடுப்பது பற்றி பேசினார்கள். அவ்வப்போது சில உரலிகளை மின்னஞ்சல் செய்வார்கள். பெரும்பாலும் அவர்களின் நண்பர்கள் எடுத்தவை.
காசநோய் விழிப்புணர்வு குறும்படமெல்லாம் பார்க்க வைத்துவிட்டார்கள். அதுவும் எனக்கு டிபி என்று மட்டும்தான் தெரியும். அக்குறும்படம் பார்த்த பிறகுதான் Tuberculosis என்ற முழுப்பெயர் தெரியும். குறும்படங்கள் பார்ப்பதில் இப்படியும் ஒரு நன்மை! இன்னுமொரு தோழர் தன் குறும்படத்துக்கு திரைக்கதையே தயார் செய்திருந்தார் குறும்படம் எடுக்கும் யோசனை இருக்கிறதா என தெரியவில்லை.

நண்பர் நவபாரத் எனக்கு சில ஆண்டுகள் முன்பிலிருந்து பழக்கம். புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். பல்கலைக்கழக அளவில் பரிசெல்லாம் வாங்கியவர். சில குறும்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இன்று காலை அலைபேசி மூலம் அழைத்தேன்.

ஏறக்குறைய இரண்டாண்டுகள் கழித்து வேறொரு எண் மூலம் அழைத்தேன். ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டு பேசினார். வாழ்த்துகள் சொல்லிவிட்டு படம் குறித்த என் புரிதலைச் சொன்னேன். அவர் என்ன நினைத்து எடுத்தார் என்பதைச் சொன்னார். ஒரு ரொமாண்டிக் படம் எடுக்க வேண்டியதுதானே என்றால், அதற்கும் பதில் வைத்திருந்தார். தொழில்முறை ஒளிப்பதிவாளராக இன்னும் அவர் மாறவில்லை. அதற்கான முயற்சிகளில் உள்ளார். ஆனால், ஒளிப்பதிவில் அவருடையஆர்வம் நான் அறிவேன். அவருடைய ஐந்தாவது குறும்படம் இப்போது வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=nUmSkiwsLtc


*

பாரதிதாசன் பாடல் –

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்,
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்,
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்.

Advertisements

இடைவெளிக்குப் பின்…

நீண்ட நெடும் ஓய்வு காலத்திற்குப் பிறகு புத்துணர்ச்சியோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் களைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு-மூன்று மாதங்களாகக் குறிப்பிட்ட வேலை எதுவும் இல்லை. ஆனாலும் இது கடினமான தருணம். 2014 கடினமாக அமையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு கடினமாக அமையும் என்றுதான் எதிர்பார்க்கவில்லை. அந்த கடினத்தை எதிர்கொண்டதன் களைப்புதான் இப்போது எஞ்சியிருக்கிறது.

வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்துவிட்டேன் (என்று நினைக்கிறேன்!). இனி என்ன நடக்கவேண்டும் என்பதையும் நானேதான் தீர்மானித்தாக வேண்டும். இந்த வாய்ப்பைக் கோட்டைவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்கிறேன். அதற்கான பயிற்சிகளிலேயே கடந்த காலமும் கடந்து விட்டது.

கிட்டத்தட்ட பயிற்சி முகாமில் கலந்துகொண்டவனைப் போலவே இருக்கிறேன். காலநேரம் பார்க்காமல் கிடைத்த அறிவுரைகள் ஏராளம். நடுநிசியோ, அதிகாலையோ என்னிடம் என்னைப் பற்றி உரையாட ஏராளமான நலவிரும்பிகள் இருந்தனர்.

இதுவரையிலான நாட்களில் நடந்த தவறுகள் என்னென்ன? நான் எனக்காக மாற்றிக்கொள்ள வேண்டிய திருத்தங்கள், உணர்ந்துகொள்ள வேண்டிய சமுகச்சூழல்கள் என பலதரப்பட்ட வடிவங்களில் என்னைக் கூர்தீட்டிக் கொள்ள ஏதுவாக பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களின் அனுபவங்களை எனக்குச் சொல்லித் தந்தார்கள். இந்த வருடத்தை மறக்கமுடியாதபடிக்கு நிறையவே நிகழ்ந்து விட்டது.

என்ன செய்வது என்கிற குழப்பமே பெரும் கவலையைத் தந்தது. புத்தகங்களையும் ஒரே ஒழுங்கில் படிக்க இயலவில்லை. ஒரு பெருநாவல் ஒன்றினை நடுநிசியில் வாசிக்க முற்பட்டால் உறக்கம் வந்துவிடுகிறது. இன்னொரு நாள் எட்கர் தோர்ப் கொடுத்த கணக்குகளைத் தீர்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாமல் போட்டுக்கொண்டிருந்தேன். என்ன செய்ய தலைவிதி!!

நூலகங்களுக்குப் போனாலும் தலைவலியோ, உடல்சோர்வோ ஏற்படுகிறது. உடல் எடை சற்றே உயர்ந்திருக்கக் கூடும். இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

சுயபுராணங்களை இங்கு தவிர்க்கவே பார்க்கிறேன். ஆனாலும் அவ்வப்போது மட்டும் இடுவதில் ஒரு ஆனந்தம். புத்தகங்கள் குறித்தும், மற்ற இயல்பான பகிர்வுகள் பற்றியும் மட்டும் இனி இங்கு எழுத ஆசை. எவ்வளவு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் படிக்கவும், எழுதவும் மட்டும் ஆசை விட்ட பாடில்லை.

படித்தவை!

 • மாணாக்கர்களுக்கு மட்டும் – தேவன்
 • சாயாவனம் -சா கந்தசாமி
 • மைதிலி -தேவன்
 • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் -நாவல் வடிவில் – கே.ஜி.ஜவர்லால்
 • ஃபெலூடாவின் சாகசங்கள்-2 -மகாராஜாவின் மோதிரம் – சத்யஜித் ரே
 • மூன்று விரல் -இரா. முருகன்
 • ஒரு லோட்டா இரத்தம் – பேயோன்
 • விஷ்ணுபுரம் தேர்தல் – இரா.முருகன்
 • இளவரசனும் ஏழையும் – சுருக்கப்பட்ட தமிழ்ப் பதிப்பு -மார்க் ட்வைன்
 • கிறிஸ்துமஸ் கீதம் – சுருக்கப்பட்ட தமிழ்ப் பதிப்பு -சார்ல்ஸ் டிக்கன்ஸ்
 • ஒரு கவிஞனின் கதை -கவியரசர் கண்ணதாசன்

இத்தோடு 

 • யாமம் -எஸ்.ராமகிருஷ்ணன் – முற்றுப்பெறவில்லை…

நூல்களில் சிலவற்றைப் பற்றிய என்னுடைய புரிதல்களையும், அனுபவங்களையும், அறிமுகத்தையும் விரைவில் பகிர முடியும் என நம்புகிறேன். இன்னும் சில நூல்கள் விட்டுப்போயிருக்கலாம். ஏனென்றால் இம்முறை நான் ஏதும் கணக்கு வைத்துக் கொண்டு படிக்கவில்லை. கிடைத்ததையெல்லாம் படித்தேன்.பல நூல்கள் ஒரே நாளில் சில மணிநேரங்களில் முடிக்கப்பட்டவை. (அவ்வளவு சிறிய நூல்கள்.)

இந்நூல்களில் ஏதேனும் ஒன்றையாவது நீங்களும் படித்திருப்பீர்களானால் மறுமொழியில் குறிப்பிடுங்கள்.

வாசித்ததில் உள்ளத்தோடு ஒன்றி அடிக்கடி தற்போது உச்சரிப்பது இவ்வரிகள் தான்:

வாழ்க்கை நிற்காது. அவ்வப்போது சண்டித்தனம் செய்யும்.

கன்ட்ரோல் – ஆல்ட்டர் – டெலிட்

திரும்ப இயக்கம்.

ஏதேதோ இழந்துபோயிருக்கலாம். ஆனால் என்ன? முதலில் இருந்து தொடங்க வேண்டியதுதான்.

மற்ற கதையெல்லாம் அடுத்த பதிவில்…

புத்தகம்-தேர்தல்-பிரசாரம்

நெடுநாள் நண்பர் ஒருவரோடு உரையாட நேர்ந்தது. உரையாடலின் ஊடே நான் யாருக்கு ஓட்டு போடுவேன் என்று நான் சொல்ல மாட்டேன் என்றார். நான் அதைக்  கேட்கவில்லை என்றேன். பிற்பாடு உரையாடல் இனிதே நிறைவுற்றது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இல்லையில்லை இரு வாரங்களுக்குப் பிறகு புத்தகக் கடையொன்றில் புத்தகம் வாங்கச் சென்றேன். அங்கிருந்த விற்பனையாளர் நான் புத்தகம் தேர்ந்தெடுக்க பெரிதும் உதவியாய் இருந்தார்.மொத்தமாய் இரு நிமிடங்களுக்குள் நினைத்த புத்தகத்தை நான்  வாங்கிய பின் என்னிடம் கேட்டார்.

 

இம்முறை கட்டாயம் வாக்களிப்பீர்கள் தானே?

ஆமாம். உறுதியாக.

நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனால் சிந்தித்துப் போடுங்கள். நீங்கள் ஓட்டுக்குப் பணம் வாங்குவீர்களா?

கண்டிப்பாக வாங்க மாட்டேன்.

ரொம்ப நல்லது.

…..

அதன்பின் எல்லாக் கட்சிகளின் குறைகளையும் (கிட்டத்தட்ட எல்லா கட்சிகளையும்..) முக்கியமாக ஊழல் குற்றச்சாட்டுகள். இங்கே எல்லா கட்சிகளின் பேரிலும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொன்னார்.

அதற்காக இவருக்கு அவர் பரவாயில்லை என்கிற மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது ரொம்ப மோசம் என்றே நான் கருதுகிறேன்.

விற்பனையாளர் கொஞ்சம் மேம்போக்காகவே பேசினார். ஒன்று என் வயதைக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம்.அல்லது எனக்கு அரசியல் குறித்து ஒன்றும் தெரியாது என்று எண்ணி இருக்கலாம். அதெல்லாம் பெரிதல்ல. ஆனால் கொஞ்சம் தெளிவாகப் பேசினார். பிரசார தொனி வந்துவிடக் கூடாது என்பதற்காக கவனமாகப் (இன்னும் சொல்லப் போனால் மிகக் கவனமாகப்) பேசினார்.

அவர் எந்தக் கட்சிக்கு ஆதரவாகப் பேசினார் என்பது எனக்குத் தெரிந்தும், தெரியாமலும் இருக்கவேண்டும் என்று எண்ணியிருப்பார் போல. நானும் புரிந்தும் புரியாததைப் போல இருந்துகொண்டேன். ஆனால் யூகிக்க கடினமாக இல்லை. எனக்கு அவர் பேசத் துவங்குவதற்கு முன்பே தெரியும். அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பது. ஏனென்றால் நான் நின்றுகொண்டிருந்த இடம் பாரதி புத்தகாலயத்தின் விற்பனை மையம்.

இப்போதும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக ஒரு குறிப்பு. அவர் பேச்சின் ஊடே மதிப்பிற்குரிய ஜோதிபாசு அவர்களைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டார். (அவரைப் பற்றி அவதூறாகக் குறிப்பிட ஏதும் இருக்கிறதா?)

நான் என் தோழரிடம் உரையாடுகையில் சொன்னது இதுதான்.

எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம்? என்பதைவிட யாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது என்பதை முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். நண்பனும் கிட்டத்தட்ட அதை ஏற்றுக்கொண்டான்.

ஆனாலும் சாமானியமா அது!

உரையாட ஆர்வமாய் இருப்பவர்களிடம் உரையாட ஆசை. யாரும் இல்லாவிட்டால், வாய்ப்பு கிடைத்தால் இன்னொரு முறை  அந்த விற்பனையாளரைச் சந்தித்துப் பேச வேண்டும்.

சில நேரங்களில் சிலர்!

எதிர்பாராத விதமாக, முன் திட்டமிடாத சில நிகழ்வுகளின் மூலமாக சிலரைச் சந்திக்க நேர்ந்தது. அதைக் குறித்துக் கொள்ளவே இப்பதிவு. கூடவே இன்னும் இன்னும் கொஞ்சம்….

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்கிற முறைக்குட்பட்ட ஒரு வரிசையில் சில நிமிடங்கள் (ஏறத்தாழ 30-லிருந்து 45 நிமிடங்களுக்குள்..!) நிற்க வேண்டியதாயிற்று. நின்று கொண்டிருக்கையில் தோழர் ஒருவர் அழைத்தார். குரல் தாழ்த்தியே பேசினேன். மகிழ்ச்சியான செய்திதான் சொன்னார். எனக்குப் பின் இரண்டு-மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் பக்கவாட்டில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார்.

மேற்படி பக்கவாட்டில் நின்றவர் எதிர் வரிசையில் நின்றிருந்த ஒரு பெண்ணோடு வெகு சுவாரசியமாக உரையாடிக்கொண்டிருந்தார். சுவாரசியம் என்றால் அவர்களுக்குத்தானே? நமக்கில்லையே! பல நிமிடங்களுக்குப் பிறகு அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். எனக்குப் பின் வந்து நின்றார். அவ்வளவு நேரம் மற்றவர்களும் அமைதியாக இருக்க வேண்டிய ஒரு மோசமான சூழல்.

எனக்குப் பின் நின்றிருந்தவர்கள் கல்லூரி மாணவர்கள். ஒரே கல்லூரியினராகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் நண்பர்கள் என்பது மட்டும் நிச்சயம். கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை அவர்களின் உரையாடல் வழக்கு தெளிவாக உணர்த்தியது. அது கிடக்கட்டும்… முதல் தலைமுறை பட்டதாரிகளாகக் கூட அவர்கள் இருக்கலாம். அவர்களில் ஒருவர் ஃபேஸ்புக்கை விட்டு வெளியே வரவில்லை.
நான் கவனித்த சில நொடிகளிலும் கூட அவரின் கை அலைபேசி மேலேயேதான் இருந்தது. அவ்வப்போது அவன் லைக் பண்ணிட்டாண்டா! என்ற சற்றே உரத்த குரலில் உரையாடிக் கொண்டிருந்தார். போதாக்குறைக்கு வெகு நேரம் நின்றிருந்ததன் பொருட்டு அதற்கு காரணமானவர்களை சபித்துக் கொண்டிருந்தார்.

இன்னும் சிலர்…

ஒருவர் கணிப்பொறியில் தட்டச்சு செய்கையில் சற்றே வேகமான நடையைக் கையாண்டார். அதற்கும் பின்னிருந்தவர் வியந்தார். ”இவன் எப்படி இவ்ளோ வேகமா டைப் பண்றான்?”
எனக்கு “அவர் படித்த கல்லூரி என்னத்தைக் கற்றுக் கொடுத்திருக்கும் ?” என்று தோன்றியது.
அதேபோல் முன்னால் இருந்த ஒருவர் குறிப்பிட்ட பகுதியின் பின்கோடு தெரியவில்லை என்கிறார். பிறகு தகவல் தொழில்நுட்பப் புரட்சியினால் அக்குறை களையப்பட்டது.
இப்போதுள்ள மின் -படிவங்களில் mandatory வகையில் கட்டாயம் நிரப்ப வேண்டிய இடங்கள் சிவப்பு நிற உடுக் (நட்சத்திரக் ) குறி இடப்பட்டிருக்கும். நாம் நிரப்பவில்லையெனில் அது அனுப்பப்படாது. இது தெரியாத சிலரை அங்கேயே காண நேர்ந்தது.
நண்பர் ஒருவர் அது மாதிரியான படிவம் ஒன்றை வடிவமைத்தார். Mandatory வச்சா நல்லாருக்குமே? என்றேன். வெளிப்பார்வைக்கு அவ்வாறு தெரியும்படி குறிப்பிட்ட பெட்டிகளின் பக்கத்தில் ஒரு உடுக்குறி வைத்தார். அது அப்படியொன்றும் மோசமான பலனைத் தரவில்லை என்பதால் நிம்மதி!

முக்கியத்துவம் வாய்ந்த அப்பேருந்து நிலையத்தில் முப்பது நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தது. ஒரு காலணி விற்பவர்/தைப்பவரின் அருகே அமர்ந்திருந்தேன். சற்று நேரத்தில் ஒருவர் குடும்பத்தோடு வந்தார். காலில் செருப்பில்லை.

குறிப்பிட்ட செருப்பு ஒன்றை எடுத்தார். விலையைக் கேட்டார். நூறு ரூபாயென்றார் இவர். அவர் மறுத்துவிட்டு எழுபது ரூபாய்க்குக் கேட்டார். இவர் மறுத்தார்.பேசிப்பார்த்தார். பிறகு அவர் உடனே வேண்டாமென்று வெற்றுக் காலோடு கிளம்பினார்.

மீண்டும் கடைக்காரர் (!) எழுந்து சென்று அவரிடம் பேசி வரவழைத்தார். நூறு ரூபாய் நோட்டை அவர் நீட்டினார். இவர் இருபது ரூபாயைத் திருப்பித் தந்தார். அவர் மறுக்கவே, இன்னும் ஐந்து ரூபாயைத் தந்தார். அவர் கிளம்பிவிட்டார்.

இதுவே இவருக்கு இலாபம்தானா? இல்லை நட்டமா? என்று என் மனம் சிந்தித்தது. சற்று நேரம் கழித்து இன்னொருவர் வந்தார். சற்றே முதியவர். நோயாளிக்கான முஸ்தீபுகளோடு வந்தார். கரகரப்பானக் குரல், கம்பளி ஆடை, மேலே சால்வை வேறு.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் செருப்பைக் கேட்டார். நூற்று அறுபது ரூபாய் என்றார். அவரும் ஒத்துக்கொள்ளவில்லை. நூற்று இருபது ரூபாய்க்கு கேட்டு பின் இருவரும் விவாதித்தனர். அவரும் கிளம்புகையில் இவரே சென்று பேசி வரவழைத்தார்.

கடைசியாக நூற்றிருபது ரூபாய்க்கு வெற்றிகரமாக விற்பனை ஆனது அந்த காலணி….அதில் ஏதோ மர்மம் இருப்பதாக இப்போதும் எனக்கு தோன்றுகிறது.

என் சிந்தனை இப்படி போனது.

தென்னங்கன்றை நட்டுவைத்து, நீரூற்றி வளர்த்து, இளநீர்க் காய்களை விற்கும் ஒருவரிடம் நாம் பேரம் பேசி விலையை வெற்றிகரமாகக் குறைக்கிறோம். ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானத்திற்கு மறுப்பேதும் இன்றி வாங்கிப் பருகுகிறோம். அங்கெல்லாம் பேரம் பேச முடியாது என்பது வேறு கதை.

இதேதான் காலணிக்கும். காலணி தைப்பவரிடம் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பேரம் பேசிக் குறைக்கலாம். ஒரு குறிப்பிட்ட நிறுவனம் செருப்புக்கு,பெட்டிக்கு, அதை வைத்துத் தரும் உறைக்கு என வகைவகையாக பணம் வாங்குவார்கள். இதில் 199.50, 299, 399 என்கிற அளவில்தான் விலையே இருக்கும். கைக்கு ஒரு மிட்டாய் கொடுத்து அனுப்புவது தனிக்கதை!

அக்கடைக்காரர் வியாபாரம் நிகழ்ந்த மகிழ்ச்சியிலோ என்னவோ புகைக்கத் துவங்கினார். எனக்கும் அழைப்பு வரவே அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

கடைசியாக:
இசைப்பா தளம் 50,000 பார்வைகளைக் கடந்துவிட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்று. பங்களித்தவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றி…

நாலு வரியில் நான்!

வணக்கம்.
விரும்பி எடுத்துக்கொண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பதிவு. இது சற்றே பழைய விஷயம்! (தமிழ்) இணையத்தில் அன்றாடம் வாசிப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு தளம் நாலு வரி நோட்டு. நச்ன்னு நாலு வரி, நாள்தோறும் எனும் இலக்கோடு (!) 365 நாட்கள் இயங்கி வந்த தளம். ஏறக்குறைய 400 பதிவுகளையும், எண்ணற்ற பாடல் குறிப்புகளையும் கொண்ட தளம். இப்போது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
அதற்காக இப்பதிவா? இல்லை இல்லை.. அதே தளத்தில் விருந்தினர் பதிவாக நானும் எழுதியிருந்தேன். அதன் முழுமையான வடிவம் இங்கே!
தாமரை இலை-நீர் நீதானா?
தனியொரு அன்றில் நீதானா?|
புயல் தரும் தென்றல் நீதானா?
புதையல் நீதானா?

பாடல்: கருகரு விழிகளால்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்: கார்த்திக் 

தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

தனியொரு அன்றில் என்றால்?

இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்

(நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)

“அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே..விட்டுப்பிரியாதே”

என்று எழுதியிருக்கிறார்.
சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
(நாலுவரி நோட்டு – நவம்பர்-10-2013)
இத்தோடு கதை நிற்கவில்லை! இன்னொரு பதிவும் அனுப்பியிருந்தேன். தவிர்க்கமுடியாத சூழல் காரணமாக அது பதிவாகவில்லை. எனவே வெளிவராத அந்த பதிவும் இங்கே!
********************************************************************
பயணங்கள் எல்லாமே சுவாரசியமானவைதான். ஆனாலும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொன்றும் சுவாரசியமானது.

நடந்து செல்வது, வண்டிகளில், சாலைகளில் செல்வது, கப்பலில், வானத்தில் என எப்படியெல்லாமுமே பயணப்படுவது இப்போதுள்ள வளர்ச்சி நிலையில் சாத்தியமாகிறது.
ஆனால் பயண தூரத்தை நம்மால் குறைக்க முடியுமா? அதிலும் நெடுந்தூர பயணத்தை எப்படிக் குறைப்பது?
பழங்கதை ஒன்று உண்டு.
ஒரு தந்தை மகனிடம் இதே கேள்வியைக் கேட்பார். வீடு திரும்ப நிறைய தூரம் நடக்க வேண்டும். எனவே பயண தூரத்தைக் குறைத்துவிடு என்பார். மகன் புரியாமல் விழிப்பான். அவனை அதைச் சொல்லி அடித்தபடியே வீடு வந்து சேர்வார். மறுநாள் மனைவியின் ஆலோசனையைக் கேட்டு பயணதூரத்தைக் குறைத்து விடுவான்.
எப்படி?
திரும்பி வருகிற வழியெல்லாம், ஏதாவது சுவாரசியமாக உரையாடியபடியே வருவான். அதனால் நடந்த களைப்பு தெரியாமல் இருவரும் வீடு வந்து சேருவர். இப்படிப் போகும் கதை…
அதே போலான உணர்வைச் சொல்லும் ஒரு பாடல்…

பாடல்: பூங்காற்றே பூங்காற்றே
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்: பென்னி தயாள் 

மொழி தெரியாப் பாதையிலும்
அர்த்தங்கள் இன்று புரிகிறதே!
 வழித்துணையாய் நீ வந்தால்
போகும் தூரம் குறைகிறதே!
 
மனதுக்குப் பிடித்தவளோ, காதலியோ, யாரோ,எப்படியோ விருப்பமானவர் ஒருவர் உடன் வந்தால், வழித்துணையாய் வந்தால்  போகும் தூரம் குறையாதா என்ன?

நன்றி: என்.சொக்கன்
நாலுவரிநோட்டு