நினைவுகள்

பாரதியார்- சில குறிப்புகள்

பாரதியார் குறித்து எழுதுவதென்றால், நிறைய எழுதுவதுதான் உத்தமம். முறையும் கூட. இன்றைய நாளில் எண்ணற்ற பதிவுகள் பலராலும் எழுதப்பட்டிருக்கும் என்பதால் சில தகவல்களை, குறிப்புகளை உங்கள் தேடுதலின் பொருட்டு இங்கே பகிர்கிறேன். மேலும் விரிவாக அறிய குறிப்பிடப்பட்டுள்ள தளங்கள், புத்தகங்களை வாசிப்பிற்கு உட்படுத்துவதே நலம்.

40 வயது கூட முழுமையாக வாழ்ந்திராதவர். 20 ஆண்டு இளமைக்குள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். மகாகவி எனும் பட்டத்திற்குப் பொருத்தமானவர். குறிப்பிட்ட தளத்திற்குள் அடங்கிப் போகாத இவருடைய எழுத்தின் வீச்சு நாமெல்லாம் அறிந்ததே.

இந்திய அளவில் மகாகவி எனுமாறு குறிப்பிடத்தக்கவர்கள் இருவரே. தாகூரும், பாரதியுமே அவ்விருவருமாவர். 1905-ம் ஆண்டு வங்கப் பிரிவினை நிகழ்ந்தது. அதன்பொருட்டு அப்போது தாகூர் எழுதிய கவிதை ஒன்றில் இந்தியர்களாகிய நாமெல்லோரும் ஒன்றுபட்டவர்கள் என்ற கருத்தில் பாட்டமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட அதே சூழலில், பாரதியார் சுதேசமித்திரனில் முதல்  கவிதையாக (15-09-1905) ‘வங்க வாழ்த்துக் கவிகள்’ என்ற தலைப்பில் எழுதுகிறார்.

பல்வேறு கருத்துகளில் இரு கவிஞர்களும் ஒரே மாதிரியாக சிந்தித்தும், பாடியும் வந்துள்ளனர். இருவருக்கும் கொள்கை அளவிலான வேறுபாடுகளும் அதிகம்தான். குறிப்பாக சொல்லப் போனால், பாரதியார் குறித்து தாகூர் அறிந்திருந்தாரா? என்பதே நமக்குத் தெரியாது. ஆனால், பாரதியார் தாகூர் குறித்து அறிந்திருக்கிறார். அவரைப் பாராட்டி எழுதியுள்ளார். அவரின் படைப்புகள் சிலவற்றை தமிழாக்கம் செய்துள்ளார்.

தமிழில் தொ.மு.சி. ரகுநாதன் பாரதி குறித்த சில நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றை இங்கே படிக்கலாம்.

பாரதி – சில பார்வைகள்
பாரதியும் ஷெல்லியும்

கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)

தமிழின் கவிதை உலகிற்கு மறுமலர்ச்சி தந்த கவிஞராகத் திகழ்ந்த பாரதியார். பின்னாட்களில் பல்வேறு கவிஞர்கள் தோன்றவும் காரணாமாயிருக்கிறார். பாரதிதாசனும், அவருக்குப் பின்வந்த பாரதிதாசன் பரம்பரை எனும் பெயர் பெற்ற கவிஞர்களும் நாம் அறிந்தவர்களே.

பெருங் கவிஞராக அறியப்படும் பாரதியாரின் முப்பெரும் படைப்புகளாகக் குறிப்பிடப்படுபவை. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியனவாகும். இதில் பாஞ்சாலி சபதம் என்பது மகாபாரதக் கதையாக பாரதியார் வடிக்கவில்லை.

இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத மாதாவாகவும், கௌரவர்களை வெள்ளையர்களாகவும், பாண்டவர்களை இந்திய மக்களாகவும்  உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்பு இது.

இறுதியாக ஒரு துளி!

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

மேலும் படிக்க:

முப்பெரும் படைப்புகள்

பெரும்பாலும் கவிஞராகவே அறியப்பட்டாலும், பாரதியார் உரைநடையும் நன்கு எழுதக்கூடியவர்.

பாரதியாரின் உரைநடைச் செல்வங்கள்

Advertisements

ஆசிரியர் ஒரு வாழ்க்கை!

எப்போதோ, எழுதித் திளைத்திருக்க வேண்டிய ஒரு பதிவு. இருந்தாலும் , இப்போதும் ஒன்றும் காலம் போய்விடவில்லை என்ற நம்பிக்கையுடன் இப்பதிவை எழுதத் துவங்குகிறேன். ஆசிரியர் தினத்திற்கான பதிவுகளில் ஒன்றாக இதை என்னால் சேர்க்க முடியாது. அதைத் தாண்டிய ஒரு நினைவிற்கான, ஒரு நன்றிக்கான பதிவு.

குறிப்பு:
பதிவின் நீளத்தை ஒரு நொடி முழுதும் கண்டுவிட்டு மேலும் படிக்கலாமா? என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவும். முழுக்கவே எனது நினைவுகளின் பதிவு. உங்கள் அறிவினை உயர்த்தும் நோக்கம் அறவே கிடையாது.

பல்வேறு ஆசிரியர்களின் தனிப்பட்ட தனித்தனியான முயற்சியினால் மெருகேறியவன் என்கிற முறையில் நிறைய பேரின் முகங்கள் மனதினுள் வந்துபோகின்றன. இதை ஓரளவில் தவிர்ப்பதற்காக ஆசிரியர் என்றால் அவர் பள்ளி ஆசிரியர் என்ற கருத்தை எடுத்துக் கொள்கிறேன். (கல்லூரியில் பேராசிரியர், விரிவுரையாளர், etc (ஹேஹே!!   🙂 )  (# நியாயமாகப் பார்த்தால் முன்னாள் குடியரசுத்தலைவர் முனைவர்.இராதாகிருஷ்ணனே கல்லூரி பேராசிரியர்தான்!! 🙂 🙂 )

பள்ளியில் மட்டும் என்ன வாழ்ந்தது? அங்கேயும் எக்கச்சக்கமான நினைவுகள் சூழத்தான் செய்கின்றன. எழுதினால் ஒரே ஒருவர் குறித்து எழுதியாக வேண்டும் என்று யோசித்ததில் ஒரே ஒரு பெயர்தான் வந்து நின்றது.

கடந்த ஜூன் மாதம் நானும்  என் தோழர்களும் அதிகாலையில் ஒரு நடை போனோம். அதில் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் ஒருவர் சொன்னார்.

” நம்மால எட்டாவது படிச்சத மறக்க முடியாதுல!”

நான் மட்டுமல்ல, என்னுடன் எட்டாம் வகுப்பு படித்த எந்தவொரு நண்பனாலும் அதை மறக்க முடியாது. பெருமைக்கு சொல்லவில்லை. நான் வாழ்ந்த, உணர்ந்த வாழ்க்கை அது. அந்த ஒருவருடம் எங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு திருப்பத்தைக் கொடுத்திருக்கும்.

பள்ளியில் எப்போது பார்க்கையிலும், முழுக்கை சட்டையும், இன்-செய்த நேர்த்தியான பேண்ட்ஸ்-சுமாய் பார்வைக்கு கம்பீரம் தருவதிலும் சரி. வகுப்பு தொடங்கும் 5 நிமிடங்கள் முன் வகுப்பின் வாயில் முன் அதே கம்பீரத்துடன் கையைப் பின்புறம் கட்டியபடி நிற்பதிலும் அவருக்கு நிகர் அவரேதான்.

சில நிகழ்வுகளை மட்டும் இந்நாளில் பதிய விருப்பம்.

எட்டாம் வகுப்பில் தனியாக ஒரு பெரிய நோட் போட சொல்லி English grammar நடத்தினார். இன்றும் அந்த நோட்டு சற்றே சேதமடைந்து பத்திரமாக என்னிடம் உள்ளது. பெரும்பாலான தோழர்களிடத்தும் அந்த நோட்டு உள்ளது. அத்தனை சுவாரசியமாக ஆங்கில இலக்கணம் நடத்தியவர் அவர்.

என்னிடம் உள்ளதாக இன்று பிறர் நினைக்கும் திறமைகள் சிலவற்றை வெளிக் கொண்டுவந்ததில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு.  வகுப்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு வண்ணப்படத்தைக் கொடுத்து, அதனின்று குறைந்தபட்சம் 5 வாக்கியங்கள் எழுதச் சொன்னார்.

இன்றைய காலத்தில் நகைப்பிற்கிடமாகும் இந்த செயல், அன்றைக்கு எத்தனை பேருக்கு புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்தியதென்பது எனக்குத் தெரியாது. பள்ளியில் எந்த போட்டி நடந்தாலும், அதில் எங்கள் வகுப்பில் இருந்து பெரும்படையே செல்லும் அளவிற்கு ஆட்களைத் தயார் செய்த உன்னதமான ஆசிரியர்.

இன்றைக்கு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் செயல்வழி-கற்றல் முறையின் சில கருத்துருக்களை அப்போதே நாங்கள் நடைமுறையில் செய்தோம்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அம்மோனியம் நைட்ரேட்டை நுகர்ந்து நெடியேறி தவித்து உணர்ந்திருக்கிறேன்.  ஹைட்ரோ குளோரிக் (HCl)  அமிலம், சுண்ணாம்புச் சுவரையும் அரிக்கும், இரும்பு மேசையையும் உருக்கிவிடும் என்பதையெல்லாம் பார்த்தும் கேட்டும் தெரிந்திருக்கிறோம். உயிரியியலிலும் பல்வேறு வகை உயிரினங்கள் ஃபார்மால்டிஹைடில் (formaldehyde)  மிதந்திட்டதைக் கண்டு சிலிர்த்திருக்கிறோம். அப்போது எங்களைத் தவிர எந்த எட்டாம் வகுப்புக்காரர்களும் நினைத்தும் பார்க்க முடியாத ஒரு வாழ்வியலை வாழ்ந்தவர்கள் நாங்கள்.
 
பள்ளியில் பொங்கல், தீபாவளிக்கு விடுப்பு விடுவதும், முந்தியநாள் கலைநிகழ்ச்சி நடத்துவதும் எல்லோரும் அறிந்த ஒன்று. நாங்கள் அதிலும் வித்தியாசப்பட்டோம். ஒவ்வொரு பண்டிகை முடிந்த அடுத்த வாரத்தின் செவ்வாய் அன்று எங்கள் வகுப்பிற்குள்ளேயே கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அதில் பள்ளியில் நடைபெறுவது போன்றே, கடவுள் வாழ்த்து, மும்மதங்கள் சார்ந்த சிந்தனைப் பகிர்வுகள், வரவேற்புரை, கவிதை, பேச்சு, நன்றியுரை என தொடரும் விழா இறுதியாக எப்படி நிறைவுறும் தெரியுமா?
 
ஒவ்வொருவரும் எங்களுக்குள்ளேயே உணவுப்பொருட்களைப் (மிக்சர், முறுக்கு, ஜிலேபி, etc) பரிமாறிக் கொண்டு உண்டு, களித்து நிறைவு செய்வோம்.
 
நிறைய நிகழ்வுகள் சொல்லலாம். அத்தனை இருக்கிறது. அவர் பெருமை சொல்ல. இறுதியாக இன்னும் கொஞ்சம் (மட்டும்) சொல்லிவிடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் எங்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி (Science Exhibition) நடக்கும் நான் ஏழாம் வகுப்பில் அதில் முதல் முறையாக பங்கேற்றேன். அதற்கான பங்கேற்பு சான்றிதழ் (Participation Certificate) கூட என்னால் வாங்க இயலாதபடி சூழ்நிலை வந்தது. அது ஒன்றும் தவறில்லை என்றாலும் வருத்தம் பெரிதும் இருந்தது. அடுத்த ஆண்டில் இவரது வகுப்பில் இருந்து நாங்கள் மொத்தமாய் ±40 பேர் (வகுப்பிலிருந்த மாணவர் எண்ணிக்கை மொத்தம் 61 பேர் என்று நினைக்கிறேன்!) அறிவியல் கண்காட்சிக்குப் போனோம். அதில் நானும் ஒருவன். இயற்பியலில் ஒத்த அதிர்வு என்றொரு கருத்துரு இருக்கும்.  ஆங்கிலத்தில் சரியான பதம் நினைவில் இல்லை. அதில் நான் மாதிரி செய்து எடுத்துக் கொண்டுபோனேன். எப்படியோ, கடினப்பட்டுதான் கண்காட்சிக்குத் தேர்வு ஆனேன். பிற்பாடு தொடர்ந்து இருநாட்கள் ”கத்தோ கத்து”  என்று கத்தி எல்லோருக்கும் அதன் செயல்முறையை விளக்கினேன். எப்படியோ, என்னையும் பரிசுக்கு உரியவனாக தேர்ந்தெடுத்து பரிசும் தந்தார்கள்.
இதெல்லாம் பெரிதில்லை. இதன் பிறகு வகுப்பிற்கு வந்த ஆசிரியரும் என்னைப் பாராட்டிவிட்டு மேலும் சொன்னார். தமிழகத்தின் பிரபல கல்லூரி ஒன்றின் இயற்பியல் பேராசியர் என்னைக் குறிப்பிட்டு பாராட்டினார் என்றும் சொன்னார். உண்மையிலேயே நெகிழ்ந்துவிட்டேன். அதற்கு முன்பே அந்த செயல்முறையின் வடிவத்தை எனக்கு சொல்லியிருந்தார். அதையும் இங்கே சொல்கிறேன்.
திருச்சிக்குப் போயிருக்கிறீர்களா?
அங்கே விமான நிலையம் அருகே கோளரங்கம் இருக்குமே! அங்கு போயிருக்கிறீர்களா?
இல்லையென்றாலும் இனி போய்ப்பாருங்கள். அங்கே சிறுவர் பூங்காவில் இரட்டை ஊஞ்சல் ஒன்று இருக்கும். அதன் தத்துவம் என்னவென்று இருவராகச் சென்று ஆடிப்பாருங்கள். அப்போது புரியும். (அங்கேயே விளக்கம் எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.)
 
நண்பர்கள் பலர் எனது குறையாகவும், சிலர் எனது நிறையாகவும் சொல்லும் ஒரு விடயம் இது. நான் சாதாரணமாக மற்றவர்களைக் காட்டிலும் வேகமாக நடப்பேன் (ஓடுவதாய்க் கூட குற்றச்சாட்டு உண்டு 🙂 ). அதெல்லாமுமே அவரை இமிடேட் செய்து, இமிடேட் செய்து இன்றும் உடல்விட்டுப் போகாத பழக்கம்தான். அவரின் முழுக்கை சட்டைக்கும் காரணம் சொல்லியிருக்கிறார்.
போதும். நிறைய எழுதிவிட்டேன். என் ஞாபகங்களை மீண்டும் நினைவூட்ட இவ்வளவே போதும்.
என் வாழ்க்கை எனக்கு ஆசிரியரா? என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.  ஆனால் என் ஆசிரியர்(கள்) என் வாழ்க்கையை
 வளமாக்கினார்(கள்) என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. என் பெயரையும், என்னையும் அவரும் மனதில் வைத்திருப்பாரென்று நம்புகிறேன். அப்படி இல்லையென்றாலும், அவர் நினைவு கூட என்னை விட்டு அகலாது என்பதையும் அழுத்தமாக எழுதிவைத்துவிட விருப்பம். 
இறுதியாக, சில நாட்களுக்கு முன் தற்செயலாக வார்த்தைகளோடு விளையாடுகையில் பிடிபட்ட வாக்கியம் இது. வேறு யாரும் இதை இப்படியே சொல்லி இருக்கிறார்களா? என்று தெரியாது. இல்லையென்றால் நான் சொல்லியதாகவே வைத்துக் கொள்ளுங்கள். 
அன்னைக்கும், பிதாவுக்கும் அடுத்து,
ஆசிரியரை மனதில் நிறுத்து.
##எவ்வளவோ எழுத நினைத்தும் இவ்வளவோடு நான் நிறுத்தியமைக்கு நீங்களும் ஒரு காரணம். உங்கள் உயிர் போன்ற நேரத்தை செலவழித்துப் படிக்கிறீர்கள். அதை நீளமான இதுபோன்ற பதிவால் கொல்ல விருப்பம் இல்லை. நான் என் நினைவுகளை, என் ஆசிரியர்களை, என்  பள்ளியை நினைத்துப் பார்த்ததைப் போல நீங்களும் சில நிமிடங்களாவது உங்கள் பள்ளியை, ஆசிரியரை நினைக்க இப்பதிவு உதவினால் அதுவே மகிழ்ச்சி.
 
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.
எனது ஆசிரியர்களுக்கும், ஆசிரியரைக் காட்டிலும் அதிகம் கற்றுக்கொடுக்கிற மேன்மையாளர்களுக்கும் 🙂 🙂 

இழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல.

பிறப்பு எப்போது தொடங்குகிறதோ, அப்போதே இறப்பும் தொடங்கிவிடுகிறது.

எங்கேயோ படித்ததாக மனதில் நிற்கிற வாசகம் இது. உறவிலும், உள்ளத்திலும் நெருக்கமானவர்களாகவும், விருப்பமானவர்களாகவும் இருந்த இருவர் சமீபத்தில் இறந்துவிட்டனர். என்றைக்காயிருந்தாலும் இதனைப் பார்க்கையிலும், படிக்கையிலும் என்  மனம் சற்று ஆறுதல் அடையட்டும் என்ற எண்ணத்தில் இங்கே பதிவிடுகிறேன். வேறெந்த நோக்கமும் இப்பதிவில் இல்லை. முழுக்கவே சொந்த விடயங்கள் அடங்கிய பதிவு.

கடந்த மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில் என் தாத்தா ஒருவர் இறந்து போனார். இப்போது ஜூலை இரண்டாம் வாரத்தில் ஒரு பெரியப்பா இறந்து போயிருக்கிறார். எழுதுகையிலே கொஞ்சம் கடினமாக இருக்கிறது. தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருவதாய் ஒரு உணர்வு.

என் தாத்தா இறந்து போன தருணம் மிக நெருக்கடியான நிலையில் போன தருணம். அவரின் உயிரற்ற உடலைக் கண்ட நொடியில் என் மனதுக்குள் எவ்வித சலனங்களையும் நான் ஏற்றிக்கொள்ளக் கூடாது என முடிவெடுத்திருந்தேன். நான் அன்றைக்கு இருந்த நிலையும் ஒரு காரணம். மிகக் குறைவான பயணநேரத்திலேயே அங்கே சென்றாலும், அடுத்தடுத்த நாட்களின் வேலைப்பளு காரணமாய் என் மனம் சற்றே தவிப்பில் இருந்தது.

அன்றைக்கு ஏறக்குறைய 10 மணிநேரம் மட்டுமே என்னால் செலவிட முடிந்தது. அதன் பின் அவர் பயன்படுத்திய சைக்கிள் (ஆம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவர் சைக்கிள்தான் வைத்திருந்தார். ) என்வசம் வந்தது. சில வாரங்கள் கழிந்து வீட்டில் ஓய்வில் இருக்கையில், அந்த சைக்கிளில் சில கி.மீகள் பயணித்தேன்.

அப்பப்பா! என்னால் அன்றைக்கு ஏற்பட்ட உணர்ச்சிகள் என்றைக்கும் மறக்க முடியாதது. அத்தனை சீராக, வேகமாக, துளி இரைச்சலோ இல்லாமல் சென்று கொண்டிருந்தது. தாத்தாவிடம் இருந்து கற்கவேண்டிய சிறந்த அனுபவம் அது. தினமும் அவர் சைக்கிளை தானே துடைத்து எண்ணெயிட்டு சீர் செய்வார். அதன் ஃபோர்க் கம்பிகளில் தோன்றும் பளபளப்பு அந்த வண்டியின் வயது 10 + ஆண்டுகளா? என ஆச்சர்யப்படுத்தும்.

பொறுமை என்கிற விடயம் இன்றளவில் என்னை ஒரு நல்லவனாக இச்சமூகத்தில்  காட்டிக்கொள்ள பயன்படுகிறது. அதையும் அவரிடத்தே கற்றுக்கொண்டேன். அவரில்லாத இப்பொழுதுகள்தான் அவரின் நினைவுகளையும், அவரின் இல்லாமையையும் எனக்குள் உட்செலுத்துகின்றன.

இதோ என் பெரியப்பாவும் இறந்து போய்விட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லை, மோசமாயிருப்பதாய் எனக்கு தகவல் வந்தது மதியம் 3 மணிவாக்கில். அவர் இல்லத்தை நான் சென்றடைந்தது நள்ளிரவு மூன்று மணிவாக்கில். இந்த 12 மணிநேரமும் எனக்கு அவ்வளவு பெரிய கவலையாயில்லை. ஒரே வருத்தம்தான். அவருக்கு இது இரண்டாம் முறையாக உடல் பாதிப்பிற்குள்ளாகிறது மே மாதம்தான் ஓரளவு தேறி வந்தார். அப்போதே இவருக்கான முடிவு தெரிந்துவிட்டதாக இப்போது சொன்னார்கள்.

கவலைகள் அதிகம் இல்லாமல்தான் நானிருந்தேன். என் உடன் என் அக்கா (அவரின் மகள்) அதீதமான வருத்தக் களையோடு வந்தார். எனக்கு அப்போதும் புரியவில்லை. அவர் வீட்டில் கால் வைக்க எத்தனிக்கையில்தான் மூளைக்குள் உறைத்தது. இப்போது அவர் இல்லை.

அடுத்த 3-4 நிமிடங்கள் முழுக்க அக்காவும், பெரியம்மாவுமாக வருத்தங்களையும், அழுகைகளையும், துக்கங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். நான் நின்ற இடத்திலேயே அசையாதிருந்தேன். பக்கவாட்டில் அவர் முகம் பார்த்த என் கண்கள் என்னையும் மீறி நனையத் துவங்கியது. அப்போதுதான் உணர்ந்தேன். எத்தனையோ, இறப்புகளைக் கண்டிருக்கிறேன். ஒன்றில் கூட  என் அழுகைக்கு இடம் தந்ததே இல்லை.

என் பாட்டி கூட என்னிடம் கேட்டிருக்கிறார்.

நான் செத்துட்டா அழுவியா?

அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னால் அப்போதும் கூட தெளிவான விடை சொல்ல முடியாவிட்டாலும் ஆம் என்றே சொன்னேன். ஆனால் அழவே இல்லை. அவர் மனம் நிறையும்படி ஒரு செயலும் நானறிய  செய்ததில்லை. ஆனாலும் என் மேலான அவர் பாசம் கொஞ்சமும் குறையவில்லை. நிறைய சொல்லியிருக்கிறார்.

ஆனால் பெரியப்பாவின் மரணம் கொஞ்சநேரத்தில் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது. நெடும் பயணமும், முன்பைக் காட்டிலும் பக்குவப்பட்ட என் மனமும் அதில் ஒரு காரணம். ஒவ்வொரு நிகழ்வாக நினைக்க நினைக்க என் கண்ணில் கண்ணீர் பெருகிக் கொண்டே சென்றது.

எனது தன்னம்பிக்கையை என்னுள் இருந்து எடுத்துக்காட்டியவர் பெரியப்பாதான். நானறிய என் தந்தைக்கு முன்பே என்னைக் கொஞ்சம் மெருகேற்றியது அவர்தான் என்று நம்புகிறேன். அவர் ஒருவரைக் கூட (பிள்ளைகள் உட்பட) கை நீட்டி அடித்ததே இல்லை என்று சொன்னார்கள். அண்ணன் (அவர் மகன்) என்னிடம் சொன்னார். அவர் அடித்த ஒரே ஆள் நான்தான். அவரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக வாழ்ந்துவிட்ட எனக்கு மட்டுமே அப்பாக்கியம் கிடைத்தது. நன்றி பெரியப்பா!

என்னோடு எவ்வளவோ பேசியிருக்கிறார். எனக்கு மொபெட் (Moped) ஓட்டக் கற்றுக் கொடுத்தவரும், மதுரையின் நெரிசலான வீதிகளில் என்னை நம்பி பின் அமர்ந்து வந்தவரும் அவர் ஒருவர்தான். வேகமாக புத்தகங்கள் படிப்பவர் என அறிமுகம் செய்யப்பட்டு என்னையும் படிக்கத் தூண்டியவர். எந்த முடிவு எடுப்பது என திணறிய காலங்களில் பெரியப்பாவின் ஆலோசனைகள்தான் கரம்பிடித்து அழைத்துப் போயின. புதுக்கோட்டை என்பது வெறும் ஊரல்ல. எனது இளமைக் காலங்களின் வண்ணப் பக்கங்களை எழுதிய புண்ணிய தலம். இப்போது தான் பிறந்த ஊரிலேயே சொந்தமாக வீடும் கட்டிவிட்டார்.

தாத்தாவும் சரி, பெரியப்பாவும் சரி இருவருமே நானறிய பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்கள்தாம். 70-ஐக் கடந்த வயதிலும் தினமும் மிதிவண்டி மிதித்து வேலைக்குப் போனார் தாத்தா. யார் சொல்லியும் கேட்கவில்லை. உடல் நலம் கெட்ட பின்னரே வீட்டில் ஓய்வெடுத்தார். பெரியப்பாவின் ரசனை அவர் வீட்டுச் சுவற்றில்கூட எதிரொலிக்கும் ஆர்பாட்டமில்லாத, அழகான வண்ணக்கலவையில் அவர் வீடு இருக்கும். அவர் சாப்பிடும் தட்டு எப்போதும் சுத்தமாகவே இருக்கும். எல்லா காய்கறிகளையும் சாப்பிட வற்புறுத்துவார்.

நானும் அவரும் கடந்த அக்டோபர் இறுதியில் போட்டிபோட்டு புத்தகங்கள் படித்தோம். அப்போதைக்கு கொஞ்சம் பேசியதாய் நினைவு. விட்டுக் கொடுத்து போகும் குணத்தை என்னுள் என் தந்தைக்கு அடுத்து அதிகம் வளர்த்தவர் பெரியப்பாதான்.

கிட்டத்தட்ட 4-5 ஆண்டுகளாகவே நானும் பெரியப்பாவும் நெருக்கமாகவே உரையாடி வந்ததாக நினைவு. அவரிடம் நிறைய பேச வேண்டும் என்ற உணர்வு மிகுத்திருந்த வேளையில் அவரின் மரணம் நிகழ்ந்துவிட்டது. அவரிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இன்னும் எனக்குள் மட்டும் மிச்சமிருக்கின்றன.

கடைசியாக என்னிடம் அவர் கேட்டது.

(புது) வீடு நல்லாருக்கா, பிடிச்சிருக்கா?

கடைசியாக சொன்ன அறிவுரை.

சாண்டில்யன் புத்தகம்லாம் இந்த வயசுல படிக்க சுவாரசியமா இருக்கும். இன்னும் நல்லா செலக்ட் பண்ணி படி.

பெரியப்பா மூலம்தான் நான் எரிகாடுகள், இறந்தபின்னர் செய்யக்கூடிய நிகழ்வுகளையெல்லாம் கண்ணால் கண்டு, செயல்களிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அவர் இறந்தும் கூட எனக்கு அனுபவங்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

இன்னும் நிறைய சொல்லலாம்.  இப்போதைக்கு அதிகம்  எழுத மனம் ஒப்பவில்லை.

இருவரிடமும் கேட்கவும், பேசவும் என்னிடம் சொற்கள் இருந்தன. இருவர் மட்டும் இப்போது இல்லை. என் சொற்கள் கனவுகளாயும், இலக்குகளாயும் உருவெடுத்தே தீரும். என் இலக்கை நோக்கிய பயணத்தில் வழிகாட்டும் இரு துடுப்புகளைத் தான் இழந்திருப்பதாய் கருதுகிறேன். இலக்குகளை அல்ல. அவை யாவும் இலக்கினைத் தொடுகையில் உலகிற்கு புரியட்டும்.

என் போன்ற ஒவ்வொருவர் வாழ்க்கையும், இவர்களைப் போன்றவர்களால்தான் நகர்கிறது. இவர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றாலும் நான் இருந்திருக்கலாம். ஆனால் இந்த இடத்தில், இந்த உயரத்தில் இருந்திருப்பேனா? என்பது உறுதி இல்லை. இருவரின் உள்ளத்திலும் செல்லப் பிள்ளையாய் நான் இருந்திருக்கிறேன். இந்த ஒற்றை வாக்கியமே வாழ்நாளுக்குமான ஆறுதலைத் தந்து விடட்டும்.

நம்பிக்கையுடனும், மனம் நிறைந்த நினைவுகளுடனும்,

தமிழ்