தேவன்

குறிப்பு-1

தலைப்பு சற்று வித்தியாசமாகத் தோன்றினால் பொறுத்தருள்க. இப்பதிவு புத்தகங்கள் பற்றியது. முழுக்கவே புத்தகங்கள் பற்றியதா? என்றால் இல்லவே இல்லை என்பதே பதில்.

இவ்வருட துவக்கம் முதலாகவே படித்து முடித்த புத்தகங்கள் பெயரைக் குறித்துவைத்துக் கொண்டே வந்தேன். மாதம் ஒன்று என்ற இலக்கை வெற்றிகரமாகத் தாண்டியதே போதுமானதாக இருந்தது. புதிதாக எதிர்பார்த்த நூல்களைக் காட்டிலும் அதிகமாகவே படிக்க முடிந்தது. அதில் சில நூல்கள் பற்றிய குறிப்புகளே இப்பதிவு.

இவ்வருடம் முதலில் படித்து முடிக்க வேண்டும் என்கிற இலக்கோடுதான் ‘தாய்’ நாவலைக் கையில் எடுத்தேன். ஆனால் நாகமாணிக்க வேட்டை முந்திக்கொண்டது. இருந்தாலும் தாய் நாவலை (மாக்ஸிம் கார்க்கி (தமிழில்: தொ.மு.சி. இரகுநாதன்) பாரதி புத்தகாலயம்/ரூ.190) ஜனவரி மாதமே முடித்துவிட்டேன். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது குறித்த முழுமையான பதிவும் வெளியிட்டிருந்தேன். பலரும் பாராட்டியதும் மகிழ்ச்சியே.

அடுத்ததாக பிப்ரவரி மாதத்தில், தேவன் எழுதிய ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ நூலை படித்து முடித்தேன். இதுபற்றி இங்கே எதுவும் அப்போது எழுதவில்லை. இப்போது எழுதுகிறேன்.

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் அத்தனை விறுவிறுப்பாக நகர்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வார்த்தையிலும் கூர்மை பொருந்திய எழுத்துநடை.
சுட்டுப் போட்டாலும், இப்படிப்பட்ட காட்சியமைப்புகளோடு எழுத எனக்கு வரவே வராது. படிக்க, படிக்க இனிக்கிறது. படிக்க, படிக்க பிரமிப்பு கூடிக் கொண்டே போகிறது.
ஒருமுறையாவது நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் வாதாடுவதைக் கேட்க வேண்டும் என்கிற ஆவல் மேலிடுகிறது.
நாவலில் ப்ராஸிக்யூஷன் பலம் கூடி இறங்குவதும், பின் மீண்டும் கூடுவதும் அபாரம்.
இன்னும் நிறைய சொல்ல ஆசை. வேண்டாம். இனி புதிதாகப் படிப்பவர்களது ஆர்வம் குன்றிப் போக நான் காரணமாகக் கூடாது.
கடைசியாக இப்புத்தகத்தை எனக்கு படிக்க தந்த நண்பருக்கும், பொறுமையாக படிக்கச் ’சொன்னவருக்கும்’ அநேக கோடி நமஸ்காரங்கள்.

சில துளிகள்:

வக்கீலுக்கு வெறும் சட்ட ஞானம் இருந்தால் மட்டும் போதாது. அலங்காரம் செய்து வேஷம் போட்டு வரும் பொய்களைத் தேடித் துரத்தி, விரட்டிப் பிடித்து, அம்பலப்படுத்தும் சாமர்த்தியம் வேண்டும்; சாட்சிகளைத் திக்குமுக்காடச் செய்து, உளற அடித்து, எத்தனை தந்திரமாக எதிர்க்கட்சி வேலை செய்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து, நிர்ப்பயமாக முன்னேறும் ஆற்றல் வேண்டும். அசடுகளை அதட்டியும், துஷ்டனை மிரட்டியும், இரண்டுங்கெட்டான்களை குஷிப்படுத்தியும், பொய்யர்களைக் கிழித்துப் போட்டும் வேலை செய்து வெற்றி காண வேண்டும்.

சாமான்யமா இது?

************************

ஒன்று மட்டும் நிச்சயம். mathematics-ல் மோகங்கொண்ட எவனும் வேறெதிலும் கொள்ளமாட்டான்.

**************

இந்த பாழான உலகில் ஒருவன் ‘குற்றவாளி’ என்று சரியானபடி அகப்பட்டுக் கொண்டுவிட்டால், அவனை நசுக்க எத்தனை பேர் ஒன்றுசேர்கிறார்கள்!

 ***********

இவ்வாண்டு நான் முழுமையாகப் படித்த ஒரே ஆங்கில நூல் என்கிற பெருமையைப்(!) பெறுகிறது Roald Dahl எழுதிய The Magic Finger என்கிற ’குறு’நூல். அது 10++ வயதுக்காரர்கள் படிக்க ஏற்புடையது என்பது வேறு விடயம்.

தொ.மு.சி ரகுநாதன் எழுதிய பாரதியும் தாகூரும் எனும் குறுநூல். மிகவும் சிறிய நூலென்றாலும், பல விதங்களில் பாரதியைப் பற்றிய தகவல்களைத் தந்த நூல். இதன் விரிவுபடுத்தப்பட்ட நூலே கங்கையும் காவிரியும்!

மற்ற நூல்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன். அடுத்த ஆண்டிற்கான நூல்களையும் ஓரளவில் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அடுத்ததாக சமீப வருடங்களில் இவ்வருடம்தான் அதிக திரைப்படங்களை நான் பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். ஒருகட்டத்திற்கு மேல் அவற்றைக் குறித்து வைப்பதையே தனிப்பட்ட காரணங்களுக்காக தவிர்த்துவிட்டேன்.

அப்படி இவ்வருடம் பார்த்த முதல் திரைப்படம் பொங்கல் வெளியீடாக தமிழில் வந்த படங்களுள் ஓரளவேனும் பாராட்டைப் பெற்ற படம். போர்வீரன் எனும் பொருள் பொதிந்த படம்!

நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த Pixar குறும்படங்கள் சிலவற்றை பார்த்தேன். எல்லாமே 3-4-5 நிமிடப்படங்கள். வித்தியாசமான ரசனை கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக, இவ்வருடம் பார்த்த முதல் அயல்மொழிப் படம் ‘Cheeni Kum’ (Hindi). இசைக்காகவும், ஒளிப்பதிவுக்காகவும் பார்க்கத் துவங்கினேன். இறுதியில் பால்கியின் வசனங்கள் ரொம்ப பிடித்தது. இதுபோக ஹைதராபாத் ஜெஃப்ரானி புலாவும், பின்னே ராஜாவின் மயக்கும் மெலடிகளுமாய் படம் ரொம்பவே டீஸண்ட்!

 சதுரங்கம் என்ற த்ரில்லர். மிகவும் தாமதமாக வெளிவந்த தமிழ்ப் படம். வித்தியாசமான கதைக்களம் காரணமாக எனக்கு(ம்) பிடித்த படம்!

இவ்வருடம் திரையரங்கு சென்று கண்ட முதல் படம் விஸ்வரூபம்-1!

இதை திரையரங்கில்தான் பார்க்க வேண்டும் என்கிற தோழரின் யோசனைக்காக காத்திருந்து பார்த்த படம். அதற்காக விமர்சனம் கூடப் படிக்காமல் நண்பர் காத்திருந்தார். எனக்கு ஓரளவில் கதை தெரிந்திருந்தது.  இருந்தாலும் திரையரங்கில் காண்கையில் புதுவித அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அவையெல்லாம் சஸ்பென்ஸ்! இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு தகவல் இப்படத்தைப் பார்க்க செல்லும் நாளன்று நாங்கள் சில ”தடைகளை வென்று” போக வேண்டியிருந்ததுதான்!

படித்தவையும், பார்த்தவையும் தொடரும்.

 

Advertisements

தேவன் ‘மகா’ தேவன்

சில மாதங்களுக்கு முன்புதான் இந்த ஆண்டு அமரர். எழுத்தாளர் தேவன் அவர்களின் நூற்றாண்டு (1913-2013) என்று தெரியும். அவருக்கு நான் தான் அறிமுகம் கொடுக்கவேண்டியது என்றில்லை. அவரின் புத்தகங்களே அவருக்கான மரியாதையையும், புகழையும் காலந்தோறும் தரும். ஒரு எழுத்தாளன் விரும்புவதும் அதுதானே!

சில ஆண்டுகளுக்கு முன் பாலா சாரை அவருடைய அலுவலகத்தில் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். உரையாடலின் ஊடே, உன் Blog பேர் என்னவென்று கேட்டார். சொன்னேன். முதல் கட்டுரையாக ‘தேவன் “மகா”தேவன்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருந்தது. முழுக்கவே விக்கிபீடியாவில் இருந்து தொகுத்த தகவல்கள். அதற்கே அவர் பாராட்டினார். இதோ, இப்போது தேவனின் நூல்கள் சிலவற்றைப் படித்தவன் என்கிற முறையில் எனது இந்தப்பதிவை அழுத்தமாக, மகிழ்ச்சியாக எழுதுகிறேன்.

அப்போது நூலகத்தில் தோழர் அர்ஜூனோடு உலாவுகையில் நூலகத்தின் புதுவரவுகளாக துப்பறியும் சாம்பு புத்தகம் நேர்த்தியான வடிவமைப்பில் காட்சியளித்தது. அவ்வளவுதான்! புத்தகத்தைக் கைப்பற்றிய நாங்கள் அடுத்த 50 நாட்களுக்கு நூலகத்தில் வைக்கவே இல்லை. தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தோம். பளபளவென்றிருந்த அந்நூல் சற்றே பழுப்பேறியிருந்தது. 50 கதைகளையும் சுவைத்துப் படித்தோம், தொலைக்காட்சியில் தொடராக, மேடை நாடகங்களாகவும் வந்துள்ளதாம். வேறென்ன சொல்ல?

அதே நூலகத்தில் மிஸ்டர் வேதாந்தம் நூலையும் எடுத்து மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறோம். அதுகுறித்து, அதில்வரும் கேரக்டர்கள் பற்றி, (குறிப்பாக மிஸ்டர்.சுவாமி பற்றி) அடிக்கடி உரையாடியுள்ளோம். அதில்வரும் கடித சம்பாஷணைகள், ஹாஸ்யங்கள், திடுக் திருப்பங்கள் எல்லாவற்றோடும் நிதானமாக நீந்தியுள்ளோம். அது ஒரு தொடர்கதையாக தொலைக்காட்சியில் கூட வந்துள்ளதாம்.

மாலதி என்கிற சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும் வாய்ப்பு தோழர் சிதம்பரம் மூலமாக எனக்கு கிடைத்தது. சின்னச் சின்ன இடைவெளிகளில் எதிர்பாராத கேரக்டர்கள் மூலமாக கலீரென சிரிக்க வைக்கும் வித்தை அவர் பேனாவுக்குள் எப்படி வந்ததோ தெரியவில்லை. வெவ்வேறு கதைமாந்தர்களின் ஊடே மெலிதான நகைச்சுவை மிளிர எப்படி எழுதினாரோ? என்று பலமுறை எண்ண வைக்கிறார்.

அண்ணன் ஓஜஸ் மூலமாக ஜஸ்டிஸ் ஜகந்நாதன் படித்தேன். ஒரே ஒரு வழக்கு. அதிலும் கொலைவழக்கு. அதில் ஆங்காங்கே சிரிக்க, புன்னகைக்க வைக்கும்படி நேர்த்தியான எழுத்து நடை. தேவனின் பெரும்பலம் அவருடைய அசாத்தியமான எழுத்துநடைதான் என்பது என் கருத்து. நீண்ட நேரம் படித்தது போலான உணர்வும், அதிக பக்கங்களைப் படித்து முடித்தது போலான உணர்வும் எழும்பும். ஆனால் நேரமோ சிற்சில நிமிடங்களையே கடந்திருக்கும். நேரங்களை மறந்து ரசிக்க வைக்கக்கூடிய ஒப்பற்ற எழுத்து தேவனுடையது.

மிகச்சமீபத்தில் பாலா சார், மற்றும் அண்ணன் ஓஜஸ் மூலமாக சி.ஐ.டி சந்துரு நாவலையும் படித்து முடித்தேன். காட்சியோடு நம்மையும் ஒன்ற வைக்கும் எழுத்து. அதிலும் சந்துருவின் உரையாடல் ஒவ்வொன்றும் அட! அட! அட! படிக்கையில் தோன்றும் உணர்ச்சிகள் தனி. பளீரென உடைத்துப் பேசும் வேகம் நச்! ஆனால் என்ன? #MMKR படம் பார்த்தாற்போல ஆளாளுக்கு தலையில் தாக்கிக்கொண்டு மயக்கமுறுகிறார்கள் J

இது தேவனின் கடைசி நாவலாம்! இப்போதைக்கு நான் படித்த அவரின் கடைசி நாவலும் இதுதான்.

ஒரே ஒரு வருத்தம் மிஞ்சுகிறது. அவர் எழுதிய இன்னொரு சிறப்பான நாவலான லஷ்மி கடாட்சம் புத்தகத்தின் தோற்றத்தைப் பார்த்து மலைத்துப் போய் படிக்காமல் தவறவிட்டுவிட்டேன். இன்னும் சிறப்பான நூல்களை நான் பார்த்தது கூட கிடையாது. அதையெல்லாம் படிக்க எனக்கு இனியொரு தருணம் அமையும்… காத்திருக்கிறேன்.

சனியன் பிடித்த கடியாரம்! அதைக் கண்டுபிடித்தவன் 12.30 க்கும் ,1.00 க்கும், 1.30 க்கும் ஒரே அடிதான் வைத்தான். முட்டாள்! 12.30 என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போது, 1.30 யே ஆகியிருக்கலாம்.

-தேவன் எழுதிய ’மாலதி’ சிறுகதை தொகுப்பில்      

வக்கீலுக்கு வெறும் சட்ட ஞானம் இருந்தால் மட்டும் போதாது. அலங்காரம் செய்து வேஷம் போட்டு வரும் பொய்களைத் தேடித் துரத்தி, விரட்டிப் பிடித்து, அம்பலப்படுத்தும் சாமர்த்தியம் வேண்டும்; சாட்சிகளைத் திக்குமுக்காடச் செய்து, உளற அடித்து, எத்தனை தந்திரமாக எதிர்க்கட்சி வேலை செய்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து, நிர்ப்பயமாக முன்னேறும் ஆற்றல் வேண்டும். அசடுகளை அதட்டியும், துஷ்டனை மிரட்டியும், இரண்டுங்கெட்டான்களை குஷிப்படுத்தியும், பொய்யர்களைக் கிழித்துப் போட்டும் வேலை செய்து வெற்றி காண வேண்டும்.

சாமான்யமா இது?

தேவனின் ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நூலில் இருந்து

நிறைய எழுதலாம். ஒன்று. உங்களுக்கும் இதே மாதிரியான/ இதைவிட சிறப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கலாம். இரண்டு. இதுவரை படித்திராதவர்களின் அனுபவங்களைக் கெடுக்க விரும்பவில்லை.