திரைப்படங்கள்

புதுப்பாட்டு!

வணக்கம்.

வேறு வேலையே இல்லாமல், வாளாதிருக்கும் காலங்களில் திரையிசைப்பாடல்களின் அடியொற்றி என் வரிகளை இட்டு எழுதிப்பார்ப்பேன். எப்போது பாட்டு எழுதினாலும் சந்தம் தட்டி தட்டி விழுவேன். அதை மிஞ்ச என்னால் ஆகாது. ஏதோ பரவாயில்லை என்றே தோன்றும். அதிலும் ஏற்கனவே எழுதிய வரிகளின் தாக்கம் இல்லாமல் எழுத முனைவேன்.

இப்போதும் பாட்டுதான்!

இது சிறப்புப் பாட்டாச்சே!

கடந்த வாரத்தில் ஒருநாள் எழுதிய பாட்டு இது. இந்த நாள் வாழ்வின் இனியநாட்களில் ஒன்று. எனவே இன்று பொதுவில் வைக்கிறேன். 

என்ன பாட்டு என்பதை அண்ணன் ஓஜஸ் முதல் வரி படிக்கையில் கண்டுபிடித்து விடுவார். முதல் இரு வரிகள் அவர் சொன்னதுதான். எழுதியது கவிஞர் வைரமுத்து!

இப்பாடலின் மூலத்திற்கு இசை(ப்புயல்!) முதன் முதலாக இந்த Combo-ல் முயன்றிருக்கிறேன். கடைசி சரணம் ரொம்ப Bend வாங்கியது.. அதுதான் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

இப்போது வசிக்கும் இடம் என்னுயிரை கொஞ்சம் கொஞ்சமாய் உறைய வைக்கிறது. வெயிலையே சமாளித்துப் பழகிய நான் குளிரை எதிர்கொள்ளத் திணறி, உடல்நலங்கெட்டு, மீண்டு நிதானமாக எழுதியது இப்பாடல். 

 எழுதியதை கற்பனை என்றே கருதவும்..

சில்காற்று உரசிப் போகிறது
உடலை அல்ல – உயிரை!

-தமிழ்

பாட்டு!

விடை- இறுதியில்

______________________

 

இது காஷ்மீரமா?
இது கார்காலமா?
இது கொண்டாட்டமா?
இல்லை திண்டாட்டமா?

உடல் எந்நாளும் பனிக்குள்ளே வீழ்கின்றது
உயிர் எப்போதும் வெப்பத்தில் தாழ்கின்றது

(இது காஷ்மீரமா?)

கதகதப்பை உண்டாக்கி குளிர் நீங்கு
பரபரப்பை தொலைத்து நீ தூங்கு

(இது காஷ்மீரமா?)

தண் என்றொரு சொல்லையெ
புதிதாய் உணர்ந்தேனே நானே
தண் என்றாலே குளிர்ச்சிதான்
புதிதாய் இங்கோர் அலர்ஜி

என் மண்ணில் காணாத தண்மையை 
இம்மண்ணில் கண்டேனே
புது  சில்காற்று எனைவந்து தீண்டையில்
ஏதோர் உணர்ச்சியும் எனை தாக்குதே

(இது காஷ்மீரமா?)

பண் ஒன்றினைப் பாடிட
என் பேனாவும் ஏங்கி அலையும்
உன் அணைப்பென்னை தீண்டிட
என்னுயிர்  தேடி ஓடும்
 
கொஞ்சம் வெப்பம் கொண்டென்னை சூழ்ந்திடு
கெஞ்ச வைக்காதே நீ என்றுமே!
அட! இன்னும் நீ என்னைக் கெஞ்சிடு  
உன் கெஞ்சலுக்கு கால் முளைக்குதே!

(இது காஷ்மீரமா?)

 

பாடலின் மூலம்: புது வெள்ளை மழை 
படம்: ரோஜா

பாடலின் சந்தம் கெடவில்லை என்றே நம்புகிறேன். பிழை இருப்பின் பொறுத்தருள்வது உம் கடன்!

#SeptemberBliss

Advertisements

நாலு வரியில் நான்!

வணக்கம்.
விரும்பி எடுத்துக்கொண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பதிவு. இது சற்றே பழைய விஷயம்! (தமிழ்) இணையத்தில் அன்றாடம் வாசிப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு தளம் நாலு வரி நோட்டு. நச்ன்னு நாலு வரி, நாள்தோறும் எனும் இலக்கோடு (!) 365 நாட்கள் இயங்கி வந்த தளம். ஏறக்குறைய 400 பதிவுகளையும், எண்ணற்ற பாடல் குறிப்புகளையும் கொண்ட தளம். இப்போது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
அதற்காக இப்பதிவா? இல்லை இல்லை.. அதே தளத்தில் விருந்தினர் பதிவாக நானும் எழுதியிருந்தேன். அதன் முழுமையான வடிவம் இங்கே!
தாமரை இலை-நீர் நீதானா?
தனியொரு அன்றில் நீதானா?|
புயல் தரும் தென்றல் நீதானா?
புதையல் நீதானா?

பாடல்: கருகரு விழிகளால்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்: கார்த்திக் 

தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

தனியொரு அன்றில் என்றால்?

இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்

(நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)

“அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே..விட்டுப்பிரியாதே”

என்று எழுதியிருக்கிறார்.
சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
(நாலுவரி நோட்டு – நவம்பர்-10-2013)
இத்தோடு கதை நிற்கவில்லை! இன்னொரு பதிவும் அனுப்பியிருந்தேன். தவிர்க்கமுடியாத சூழல் காரணமாக அது பதிவாகவில்லை. எனவே வெளிவராத அந்த பதிவும் இங்கே!
********************************************************************
பயணங்கள் எல்லாமே சுவாரசியமானவைதான். ஆனாலும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொன்றும் சுவாரசியமானது.

நடந்து செல்வது, வண்டிகளில், சாலைகளில் செல்வது, கப்பலில், வானத்தில் என எப்படியெல்லாமுமே பயணப்படுவது இப்போதுள்ள வளர்ச்சி நிலையில் சாத்தியமாகிறது.
ஆனால் பயண தூரத்தை நம்மால் குறைக்க முடியுமா? அதிலும் நெடுந்தூர பயணத்தை எப்படிக் குறைப்பது?
பழங்கதை ஒன்று உண்டு.
ஒரு தந்தை மகனிடம் இதே கேள்வியைக் கேட்பார். வீடு திரும்ப நிறைய தூரம் நடக்க வேண்டும். எனவே பயண தூரத்தைக் குறைத்துவிடு என்பார். மகன் புரியாமல் விழிப்பான். அவனை அதைச் சொல்லி அடித்தபடியே வீடு வந்து சேர்வார். மறுநாள் மனைவியின் ஆலோசனையைக் கேட்டு பயணதூரத்தைக் குறைத்து விடுவான்.
எப்படி?
திரும்பி வருகிற வழியெல்லாம், ஏதாவது சுவாரசியமாக உரையாடியபடியே வருவான். அதனால் நடந்த களைப்பு தெரியாமல் இருவரும் வீடு வந்து சேருவர். இப்படிப் போகும் கதை…
அதே போலான உணர்வைச் சொல்லும் ஒரு பாடல்…

பாடல்: பூங்காற்றே பூங்காற்றே
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்: பென்னி தயாள் 

மொழி தெரியாப் பாதையிலும்
அர்த்தங்கள் இன்று புரிகிறதே!
 வழித்துணையாய் நீ வந்தால்
போகும் தூரம் குறைகிறதே!
 
மனதுக்குப் பிடித்தவளோ, காதலியோ, யாரோ,எப்படியோ விருப்பமானவர் ஒருவர் உடன் வந்தால், வழித்துணையாய் வந்தால்  போகும் தூரம் குறையாதா என்ன?

நன்றி: என்.சொக்கன்
நாலுவரிநோட்டு

குறிப்பு-2

சென்ற பதிவின் தொடர்ச்சி…

வழக்கம் போல முதலில் புத்தகங்கள்.

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் என்று நினைக்கிறேன். அண்ணன் ஓஜஸ் மூலமாக மலைக்கள்ளன் நூல் எனது வாசிப்புக்குக் கிடைத்தது. நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் எழுதிய நாவல் என்பதை விட எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த திரைப்படமாக மலைக்கள்ளன் பெரும்பாலானோருக்கு அறிமுகம் ஆகியிருக்கும்.

அவர் என்னிடம் 2-3 நாட்களுக்குள் இந்நூலைப் படித்து முடித்துவிடுவாய் எனக் கூறியிருந்தார். முதலில் நான் ஏற்கவில்லை. ஆனால் முடிவில் அதன்படியே இரு நாட்களில் அந்தநூலை முடித்துவிட்டேன். வாய்ப்பு கிடைப்பின் அடுத்த ஆண்டில் மலைக்கள்ளன் திரைப்படத்தையும் பார்க்க விருப்பம்.

மே மாதவாக்கில் சில குறுநூல்கள் படித்த நினைவு இருக்கிறது. ஆனால் பெயர் மறந்துவிட்ட்து. வெ.இறையன்பு எழுதிய சில கட்டுரை நூல்களையும் படித்துக் கொண்டிருந்தேன். அவற்றை முழுமையாக முடிக்காமல் இப்போதும் என்னருகே அவையும் உறங்குகின்றன!

பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாறு பற்றிய குறுநூல் ஆர்.முத்துக்குமார் எழுதியது. ஒரு பயணத்தின் முடிவில் மே மாதத்தில் ஒரே நாளில் ஒரு நண்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க 2 மணிநேரத்திற்கும் குறைவான இடைவெளியில் படித்து முடித்தேன். (80 சிறிய பக்கங்கள் மட்டுமே ! (Prodigy வெளியீடு!))

ஜூன் மாதம் வலுக்கட்டாயமாக, நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி எழுதிய வீரம் விளைந்தது (தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்) நாவலின் இரண்டாம் பாகத்தை முடித்தேன். அதன் தொடர்ச்சியாக சோவியத் ரஷ்யாவின் அதிபரான ஜோசப் ஸ்டாலின் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல் (சர்வம் ஸ்டாலின் மயம் / மருதன்/ கிழக்கு பதிப்பகம்) ஆகியவற்றைப் படித்தேன். இவை இரண்டினையும் பற்றி ஏற்கனவே இங்கு சில குறிப்புகளைத் தந்துள்ளேன்.

பிற்பாடு பாலைவன சாகசங்கள் ( /NBT வெளியீடு) எனும் குறுநூலையும் படித்தேன். அதுகுறித்த கவலை தோய்ந்த பதிவையும் முன்னமே எழுதினேன். அது 13-14 வயதுக்காரர்கள் படிக்க ஏற்புடைய நூல். தலைப்பைப் பார்த்து ஏமாந்த நூல்!  

இதுகுறித்த பதிவினையும் இங்கேயே குறிப்பிடுகிறேன்..

பாலைவனத்தில் சாகசங்கள் என்றொரு புத்தகம். தலைப்பைப் பார்த்து ஏதோ adventure வகை புத்தகமாய் இருக்குமோ என்றெண்ணி  (மொக்கையான திரைப்படங்களின் தலைப்பைப் பார்த்து ஏமாறுவதுபோல்  ) வியந்தேன். பக்கங்கள் வேறு வெகு குறைவாக (80 மட்டுமே.) இருந்தபடியால் படிப்பது சுலபம் என்று நினைத்தேன்.

என் நினைப்பில் மண்ணை வாரி தூற்றியது புத்தகம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அப்புத்தகத்திலும் மணற்புயல் குறித்து ஆங்காங்கே எழுதியிருக்கிறார்கள். அப்புத்தகம் என் போன்ற ஆசாமிகளுக்கானதல்ல. 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கானதாயிருக்குமோ? என்றொரு சந்தேகம் வந்தது.

Adventures in the desert என்கிற ஆங்கில நூலை தமிழில்  பாலைவனத்தில் சாகசங்கள் என்ற பெயரில் வெளியிட்டிருப்பது NBT. விலை: 14 ரூபாய்கள் (இப்போது விலை மாறுபடலாம். புத்தகம் அச்சில் இல்லாமலும் இருக்க வாய்ப்புண்டு.)

எக்ஸ்ட்ரா:

விலை : ரூ 17, மறுபதிப்பு 2010, National Book Trust of India. ஆங்கிலத்தில் – செரில் ராவ், தமிழில் – ஆர்.ஷாஜஹான்

சுஜாதா சொல்லியிருந்தார் என்கிற ஒரே காரணத்தின் பேரில் எழுத்தாளர் லா.ச.ரா (லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்)-வின் புத்தகங்களை தேடத் துவங்கினேன். சிறுகதைத் தொகுதியின் விலை பயம் காட்டியதால் குறுநாவலான கேரளத்தில் எங்கோ –வை வாங்கினேன். நூல் இணையத்தில் கிடைக்கிறது. (நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்) விருப்பமுள்ளவர்கள் tamilvu.org-ல் படிக்கலாம்.

அடுத்தது.. பார்த்தவை,

இவ்வாண்டு பார்த்த இன்னொரு வேற்று மொழிப்படம் தட்டத்தின் மறையத்து (Behind the Veil என்று பொருள்.) உம்மாச்சிக் குட்டியை பிரேமிச்ச நாயருடைய கத! என அறிமுகம் செய்யப்படும் படம் தமிழில் ஆண்டாண்டு காலமாய் அரைத்துச் சொல்லப்பட்ட கதை என்றாலும், ஏதோ புதிதான கதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. சென்ற ஆண்டில் கேரளாவின் வெற்றிப்படங்களுள் ஒன்றான இப்படம் இளைஞர்களால் உருவாக்கப்பட்டதாலோ என்னவோ ரொம்பவும் இயல்பாக, நேர்த்தியாக அழகாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கதை யதார்த்தமாக இருந்தால் காண்பதற்கு என்ன குறைச்சல்?

அடுத்தது ஒரு ஆங்கிலப் படம். 2000களின் துவக்கத்தில் வந்த Ocean’s 11 படமே அது. கொள்ளையை மையப்படுத்தியான  செம த்ரில்லர். அதிலும் இறுதி காட்சிகள் நச்! இதே படத்தை தழுவி தமிழிலும் ஒரு படம் வந்ததாக கேள்வி..

படம் வெளிவந்து இந்த ஆண்டோடு 25 ஆண்டுகளாகிறது என்ற ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய தகவலின் பேரில் பாலு மகேந்திரா இயக்கிய வீடு படத்தினை பார்த்தேன். இதுபற்றி விரிவாக இங்கே ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மிகமிக இயல்பான படம்.

எம்.ஜி.ஆரின் மெகா ஹிட்களில் ஒன்றான எங்க வீட்டுப் பிள்ளை படத்தை முழுமையாக இவ்வாண்டு பார்த்தேன். மூன்று மணிநேரங்களை சாதாரணமாகத் தாண்டிய இப்படம் ரொம்பவே பிடித்திருந்தது. பலருக்கும் பிடித்த படம்தானே! இப்பவும் ரசிக்க முடிகிறது என்றால் அப்போது கொண்டாடியிருப்பார்கள் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது.

ரஜினியும், கமலும் இணைந்து நடித்த கடைசி படம் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இவ்வருடம்தான் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தை காண நேர்ந்தது. இதிலும் யதார்த்தம்தான் என்றாலும் பாடல்கள் தனிரகம்!  

 -படித்தவையும் பார்த்தவையும் தொடரும்..

குறிப்பு-1

தலைப்பு சற்று வித்தியாசமாகத் தோன்றினால் பொறுத்தருள்க. இப்பதிவு புத்தகங்கள் பற்றியது. முழுக்கவே புத்தகங்கள் பற்றியதா? என்றால் இல்லவே இல்லை என்பதே பதில்.

இவ்வருட துவக்கம் முதலாகவே படித்து முடித்த புத்தகங்கள் பெயரைக் குறித்துவைத்துக் கொண்டே வந்தேன். மாதம் ஒன்று என்ற இலக்கை வெற்றிகரமாகத் தாண்டியதே போதுமானதாக இருந்தது. புதிதாக எதிர்பார்த்த நூல்களைக் காட்டிலும் அதிகமாகவே படிக்க முடிந்தது. அதில் சில நூல்கள் பற்றிய குறிப்புகளே இப்பதிவு.

இவ்வருடம் முதலில் படித்து முடிக்க வேண்டும் என்கிற இலக்கோடுதான் ‘தாய்’ நாவலைக் கையில் எடுத்தேன். ஆனால் நாகமாணிக்க வேட்டை முந்திக்கொண்டது. இருந்தாலும் தாய் நாவலை (மாக்ஸிம் கார்க்கி (தமிழில்: தொ.மு.சி. இரகுநாதன்) பாரதி புத்தகாலயம்/ரூ.190) ஜனவரி மாதமே முடித்துவிட்டேன். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது குறித்த முழுமையான பதிவும் வெளியிட்டிருந்தேன். பலரும் பாராட்டியதும் மகிழ்ச்சியே.

அடுத்ததாக பிப்ரவரி மாதத்தில், தேவன் எழுதிய ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ நூலை படித்து முடித்தேன். இதுபற்றி இங்கே எதுவும் அப்போது எழுதவில்லை. இப்போது எழுதுகிறேன்.

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் அத்தனை விறுவிறுப்பாக நகர்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வார்த்தையிலும் கூர்மை பொருந்திய எழுத்துநடை.
சுட்டுப் போட்டாலும், இப்படிப்பட்ட காட்சியமைப்புகளோடு எழுத எனக்கு வரவே வராது. படிக்க, படிக்க இனிக்கிறது. படிக்க, படிக்க பிரமிப்பு கூடிக் கொண்டே போகிறது.
ஒருமுறையாவது நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் வாதாடுவதைக் கேட்க வேண்டும் என்கிற ஆவல் மேலிடுகிறது.
நாவலில் ப்ராஸிக்யூஷன் பலம் கூடி இறங்குவதும், பின் மீண்டும் கூடுவதும் அபாரம்.
இன்னும் நிறைய சொல்ல ஆசை. வேண்டாம். இனி புதிதாகப் படிப்பவர்களது ஆர்வம் குன்றிப் போக நான் காரணமாகக் கூடாது.
கடைசியாக இப்புத்தகத்தை எனக்கு படிக்க தந்த நண்பருக்கும், பொறுமையாக படிக்கச் ’சொன்னவருக்கும்’ அநேக கோடி நமஸ்காரங்கள்.

சில துளிகள்:

வக்கீலுக்கு வெறும் சட்ட ஞானம் இருந்தால் மட்டும் போதாது. அலங்காரம் செய்து வேஷம் போட்டு வரும் பொய்களைத் தேடித் துரத்தி, விரட்டிப் பிடித்து, அம்பலப்படுத்தும் சாமர்த்தியம் வேண்டும்; சாட்சிகளைத் திக்குமுக்காடச் செய்து, உளற அடித்து, எத்தனை தந்திரமாக எதிர்க்கட்சி வேலை செய்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து, நிர்ப்பயமாக முன்னேறும் ஆற்றல் வேண்டும். அசடுகளை அதட்டியும், துஷ்டனை மிரட்டியும், இரண்டுங்கெட்டான்களை குஷிப்படுத்தியும், பொய்யர்களைக் கிழித்துப் போட்டும் வேலை செய்து வெற்றி காண வேண்டும்.

சாமான்யமா இது?

************************

ஒன்று மட்டும் நிச்சயம். mathematics-ல் மோகங்கொண்ட எவனும் வேறெதிலும் கொள்ளமாட்டான்.

**************

இந்த பாழான உலகில் ஒருவன் ‘குற்றவாளி’ என்று சரியானபடி அகப்பட்டுக் கொண்டுவிட்டால், அவனை நசுக்க எத்தனை பேர் ஒன்றுசேர்கிறார்கள்!

 ***********

இவ்வாண்டு நான் முழுமையாகப் படித்த ஒரே ஆங்கில நூல் என்கிற பெருமையைப்(!) பெறுகிறது Roald Dahl எழுதிய The Magic Finger என்கிற ’குறு’நூல். அது 10++ வயதுக்காரர்கள் படிக்க ஏற்புடையது என்பது வேறு விடயம்.

தொ.மு.சி ரகுநாதன் எழுதிய பாரதியும் தாகூரும் எனும் குறுநூல். மிகவும் சிறிய நூலென்றாலும், பல விதங்களில் பாரதியைப் பற்றிய தகவல்களைத் தந்த நூல். இதன் விரிவுபடுத்தப்பட்ட நூலே கங்கையும் காவிரியும்!

மற்ற நூல்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன். அடுத்த ஆண்டிற்கான நூல்களையும் ஓரளவில் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அடுத்ததாக சமீப வருடங்களில் இவ்வருடம்தான் அதிக திரைப்படங்களை நான் பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். ஒருகட்டத்திற்கு மேல் அவற்றைக் குறித்து வைப்பதையே தனிப்பட்ட காரணங்களுக்காக தவிர்த்துவிட்டேன்.

அப்படி இவ்வருடம் பார்த்த முதல் திரைப்படம் பொங்கல் வெளியீடாக தமிழில் வந்த படங்களுள் ஓரளவேனும் பாராட்டைப் பெற்ற படம். போர்வீரன் எனும் பொருள் பொதிந்த படம்!

நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த Pixar குறும்படங்கள் சிலவற்றை பார்த்தேன். எல்லாமே 3-4-5 நிமிடப்படங்கள். வித்தியாசமான ரசனை கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக, இவ்வருடம் பார்த்த முதல் அயல்மொழிப் படம் ‘Cheeni Kum’ (Hindi). இசைக்காகவும், ஒளிப்பதிவுக்காகவும் பார்க்கத் துவங்கினேன். இறுதியில் பால்கியின் வசனங்கள் ரொம்ப பிடித்தது. இதுபோக ஹைதராபாத் ஜெஃப்ரானி புலாவும், பின்னே ராஜாவின் மயக்கும் மெலடிகளுமாய் படம் ரொம்பவே டீஸண்ட்!

 சதுரங்கம் என்ற த்ரில்லர். மிகவும் தாமதமாக வெளிவந்த தமிழ்ப் படம். வித்தியாசமான கதைக்களம் காரணமாக எனக்கு(ம்) பிடித்த படம்!

இவ்வருடம் திரையரங்கு சென்று கண்ட முதல் படம் விஸ்வரூபம்-1!

இதை திரையரங்கில்தான் பார்க்க வேண்டும் என்கிற தோழரின் யோசனைக்காக காத்திருந்து பார்த்த படம். அதற்காக விமர்சனம் கூடப் படிக்காமல் நண்பர் காத்திருந்தார். எனக்கு ஓரளவில் கதை தெரிந்திருந்தது.  இருந்தாலும் திரையரங்கில் காண்கையில் புதுவித அனுபவங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அவையெல்லாம் சஸ்பென்ஸ்! இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு தகவல் இப்படத்தைப் பார்க்க செல்லும் நாளன்று நாங்கள் சில ”தடைகளை வென்று” போக வேண்டியிருந்ததுதான்!

படித்தவையும், பார்த்தவையும் தொடரும்.

 

இரவுக்காட்சி!

ஒரு இனிமையான விடுமுறை நாளின் மாலையில் குட்டித்தூக்கத்தில் இருந்து எழுந்து மணியைப் பார்த்தேன்.

5.50.

சற்றே சோம்பல் நீங்கி வீட்டைச் சுற்றி ஒரு நடை போய் வந்தேன். தம்பி எனக்கு முன்னமர்ந்து தொலைக்காட்சியை இயக்கிக் கொண்டிருந்தான். திடீரென ஒரு திரைப்பட விளம்பரம் தொலைக்காட்சியில் வந்தது. என்னைப் பார்த்துக் கேட்டான்.

“என்ன, இன்னைக்கு போவமா?”

”இனி கிளம்பிப் போகனும்னா நைட் ஷோ தான் போகணும்டா!”

”சரி. அப்ப நைட் ஷோவே போவோம்!”

அவன் சொல்லிய அடுத்த பத்தாவது நிமிடத்தில் வானம் இருளத் தொடங்கியது. மழைத் தூறல்கள் மண்ணில் ஆங்காங்கே வீழ்ந்தன. குளிர் கலந்த காற்று பலமாக வீசத் தொடங்கியது. அப்பா வந்தார் 7 மணிவாக்கில். இன்று வெளியூர் பயணம் போவதாய் சொன்னார். அவருக்கு ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பையை சரிபார்த்து வழியனுப்ப முனைகையில், அனுமதி கேட்டோம்.

மழை தூறப்போவது போல் தெரிகிறது. ஜாக்கிரதையாகப் போய்வாருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். மழை சற்றுநேரத்தில் வேகம் பிடித்தது. 8 மணியளவில் நான் இரவு உணவை உண்ணத் தொடங்கிவிட்டேன். நண்பன் ஒருவனுடன் தம்பி உரையாடி முடிக்க மணி 8.30 ஆகிவிட்டது.  அப்போதுதான் வெளியே கவனிக்க நேர்ந்தது. மழையின் வேகம் முன்போலில்லை. இறங்கி விளாசத் துவங்கிய மழையின் தாக்குதலில் வீட்டின் பின்புறத்தில் சில அசௌகரியங்கள் ஏற்பட்டன. சிறுபாடுபட்டு அதைச்  சமாளித்து   குடை ஒன்றை ஏற்பாடு செய்து வீட்டைவிட்டுக் கிளம்ப மணி 9-20 ஐத் தொட்டது. மழையோ நிற்கிற பாடாகத் தெரியவில்லை.

இன்றே பார்த்தால்தான் ஆச்சு என்கிற நிலைமை எங்கள் இருவருக்கும். சரி ஆனது ஆச்சு! என்று கிளம்பினோம். குடையை ‘பேலன்ஸ்’ செய்வதில் இருவரும் சற்றே தடுமாறினோம். யாரேனும் ஒருவர் நனைவது அவசியமாய்ப் போனது. இருவரும் விட்டுக்கொடுக்காமல் சென்று மாறிமாறி கொஞ்சம்-கொஞ்சமாய் நனைந்தோம். சாலைகளை, வீதிகளை, தெருவோரங்களைக் காணச் சகிக்க முடியாதபடிக்கு மழையின் குரூரம் இருந்தது. இன்னும் பெருந்தூறல் தொடர்ந்துகொண்டே இருந்தது.

தெருவோரத்தில் இருந்த ஒரு வீட்டின் முன்பகுதியில் சிறு குட்டை போலத் தேங்கிக் கிடந்த மழைநீரை பெரும்பாடுபட்டு ஒரு பெரியவர் வெளியேற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே 2-3 பேர் குழந்தைகள், பெண்கள் இருந்தனர். அதே குடும்பத்தினராய் இருக்கலாம். இன்றைக்கு அவர்கள் பாடு அதோகதிதான். சாலையின் ஓரத்தில் இருக்கிற சாக்கடைகள் நிரம்பி மழைநீரோடுக் குழாவி நடுசாலைக்கு அழுக்கு நீரை அனுப்பிக் கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் ஆச்சர்யத்தோடு கடந்து நாங்களிருவரும் போய்க்கொண்டிருக்கிறோம்.

எங்களூரா இது? என்று மழையைப் பார்த்து ஆச்சர்யமடைந்து இதோடு 8 வருடங்கள் கடந்துவிட்டன.  இதோ இவ்வருடம் ஆச்சர்யம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. நடக்கிற தூரமாய் இல்லாவிட்டாலும் நடந்து செல்வது எனக்குப் பிடிக்கும். இருவரும் நடந்து போகிற சாலையில் ஓரிடத்தில் கால் வைக்க இயலாதபடிக்கு (மழைக்)கழிவுநீர் போய்க் கொண்டிருந்தது. தேங்கி நின்ற அதைக் கடக்க சுலபமான வழி தேடுவதற்குள் தூரத்தில் வந்த கார்க்காரன் ஒருவன் அந்த மழைநீரின் மேல் வேகமாய் காரின் சக்கரங்களைப் பாய்ச்சினான். அதுவரை திரைப்படங்களில் மட்டுமே அவ்வாறான காட்சிகளைப் பார்த்துவந்த நான் சற்றே தாவினேன். முழங்காலுக்குக் கீழே கழிவுநீர் என்மேல்  வாரியிறைக்கப்பட்டது.

தம்பி என்னைப் பார்த்து சிரித்தான். நான் சற்றே கோபமடைந்து சொன்னேன்.

“உன்னாலதான் இதெல்லாம்…”

“சரி..சரி ரோட்ட பாத்து வாடா!”

மழையின் தாக்கம் ஓரளவில்  குறைகிற நேரத்தில் திரையரங்கை நெருங்கினோம். வழியில் தேங்கி நின்ற மழைநீரினைக் கடக்க சில உபாயங்களைத் தம்பியே சொன்னான்.

“எல்லாத்திலும் சயின்ஸ் இருக்குடா!” என்றவன் பரப்பு இழுவிசையில் தொடங்கி இயற்பியல் பாடம் எடுக்க ஆரம்பித்தான். (பொருளின்) இயல்பை அறிவதுதான் இயற்பியல் என்று தொடங்கிய அவனிடம் நான் சமாளிக்கத் தொடங்கினேன். ”இதெல்லாம் எனக்கு தேவையில்லைனு சொல்லாத.” என்று முடித்துவைத்தான் தம்பி.

திரையரங்கை நெருங்கிவிட்டோம்.

இந்த படம்தான் இப்போது ஓடுகிறது என்று விளக்கம் சொன்ன தம்பியை நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். பெருமழை பெய்த விடுமுறைநாளின் இரவுக்காட்சிக்கு அது ஒன்றும் குறைவான கூட்டம் இல்லை என்றே பட்டது. டிக்கெட் கவுண்டரில் போய்க் கேட்டோம்.

65/85

சிறுவிவாதத்திற்குப் பிறகு இரண்டு 85 ரூபாய் டிக்கெட்களைப் பெற்றோம். உள்ளே போய் அமர்கையில் மணி 9.50. பிரபல பாடகரின் சமீபத்திய ஹிட் பாடலொன்று ஒலிபரப்பாகியது. தம்பி கேட்டான்.

“இந்த பாட்ட நீ கேட்ருக்கியா?”

”இல்லியே” என்றேன். அவன் மைண்ட் வாய்ஸ் வேறுவிதமாக  எண்ணியிருக்கலாம்!!

சற்றுநேரத்தில் எங்களுக்குப் பின் மொத்தமாய் 10 பேர் அமர்ந்திருப்பார்கள். இதில் ஒருவர் குடும்பத்தோடு வந்திருந்தார். இப்படிப்பட்ட சூழலிலும் குடும்பத்தோடு வந்ததை எண்ணி ஆச்சர்யப்படுகையில் திரை ஒளிர்ந்தது.

தமிழ்நாடு அரசு செய்திப்படம்! நெய்வேலி சுரங்கப் பங்குகளில் 5% பங்கை தமிழக அரசே வாங்கியதன் முன்+பின் கதைகளை படங்கள், வீடியோக்கள், எதுகை, மோனை, இயைபு கலந்த தமிழ்ச் சொற்றொடர்களால் அள்ளி விளாசிக் கொண்டிருந்தனர். என் கவனமெல்லாம் யார் இந்த வசனங்களை எழுதித் தந்திருப்பார் என்றே சென்றது.

பின்னர் கரம், சிரம், கால் நீட்டாதீர், புகை பிடிக்காதீர் உள்ளிட்ட “நல்லெண்ணங்களை” விதைக்கக் கூடிய ஸ்லைடுகள் வந்தன. ஒருவழியாக படம் திரையிடப்பட்டது.

இயக்குனர் பேர் வரும்போது தம்பி சொன்னான். ”இவன் பேருக்காகத்தான் இந்த “font”-ல் டைட்டில் கார்டு போட்டிருப்பார்கள் போல. ஆனாலும் நல்லாருக்கு”. எனக்கும் அது சரியெனப்பட்டது.

ஒருவழியாக இடைவேளை வந்தது. உடனே ஒரு ட்ரெய்லர் என்று சொல்லி ஒரு படத்தை திரையிட்டார்கள். கீழே இருந்து தலைவா! என்றொரு குரல். அந்நடிகரின் பெயரைச் சொல்லி வாழ்க என்று கோஷமிட்டார். அந்தப் படம் நல்லாருக்கோ, இல்லையோ ஒட்டிவிடுவார்களோ என்றொரு ஐயம் ஏற்பட்டது. இன்னொன்று டீஸரை ஏன் ட்ரெய்லராக பெயரிட்டு வெளியிட்டார்கள் என்றொரு ஐயம். சர்தான் போடா! என்று இருவரும் எழுந்து வெளிவந்தோம். என்ன வாங்கலாம் என்ற யோசனையில் தம்பி இருந்தான் .

“பாப்கார்ன் வாங்கலாமா?”

“பாப்கார்ன் வேண்டாம். உடலுக்குக் கேடு என்று கேள்விப்பட்டிருக்கேன்.” என்றேன்.

”அப்ப ஸ்வீட் கார்ன் வாங்கலாம்” என்றவனின் மனநிலையைப் புரிந்துகொள்ளமுடியாமல் பொறுப்பை அவன்வசம் கொடுத்து டாய்லெட்டை நோக்கி விரைந்தேன். எது ஆண்களுக்கு, எது பெண்களுக்கு என்ற குழப்பத்தில் அலைந்து ஒருவழியாக உள்சென்றேன். சுத்தமென்றால் சுத்தம்… என்று மெச்சுகிற அளவில் இருந்த கழிப்பறை அது.  பிற்பாடு இருவரும் அரங்கினுள் சென்று அமர்ந்தோம். கைகளில் சூடான ஸ்வீட் கார்ன்.

அந்த படத்துக்குப் போயிருக்கலாம் என்ற மனநிலையில் இருந்த எனக்கு அவ்விளம்பரம் கண்ணில் பட்டது. இளையராஜாவின் ஹிட் பாடல்களில் ஒன்றான அப்பாடலை அப்படியே எடுத்து ஒரு விளம்பரம் போட்டார்கள். பின்னர் மீண்டும் திரைப்படம்.

அதற்கு மேல் ஆங்காங்கே சிரிப்பூட்டினாலும், ஒரு லாஜிக்கான மிஸ்டேக்கை கொஞ்சமாய் திருத்தியிருந்தார்கள். படத்தில் ஓரிடத்தில் வருடமொன்றைக் குறிப்பிடுகையில் தம்பி சொன்னான். அந்த வருடத்தைப் பார்த்துக்கோ.. என்றான். பிற்பாடு அந்த பிழையை சொல்லிக்காட்டினான் அவன்.

”படம் ஏற்கனவே பாத்துட்டியா?”

“இல்ல. சில சீன்கள் தெரியும்.”

ஒருவழியாக படம் முடிகையில் மனம் நிறையாமல் திரையரங்கை விட்டு வெளியே வந்தோம். இதுக்காகவா வந்தோம் என்று இருவருமே நினைத்தது உண்மை. இருந்தாலும் பொழுதுபோக்கு என்று சொல்லி ஆறுதல் அடையலாம். இதுக்கு அந்த படத்துக்கே போயிருக்கலாம் என்ற என் மனசாட்சி மேலும் உறுதியானது.

”டிக்கெட்ட பத்திரமா வச்சுக்கோ.”

”ஏன்?”

“போலிஸ் செக்கிங் இருக்கலாம்!”

“அப்படியா?”

“மணி 1 ஆயிடுச்சு. பின்ன?”

வழியில் பூராம் சில கேள்விகள் கேட்டுக்கொண்டே வந்தான் தம்பி.

“டேய்! இதுல இப்படி ஆராய்ச்சி பண்ண வேணாமே?”

“நீ முன்ன மாதிரி இல்ல!”என்று சொல்லிவிட்டு அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாட்டை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே வந்தான். உடல் முழுக்க எரிச்சலோடு நான் உடைமாற்றிவிட்டு உறங்கச் செல்கையில் மணி ’அதிகாலை’ 1.40.

இந்தப் படத்தையா இவ்வளவு இடைஞ்சல்களுக்கிடையே பார்த்தேன் என்று நான் பெற்ற அதே உணர்ச்சிகளை நீங்களும் இந்தப் பதிவையா இவ்வளவு நேரம் படித்தோம் என்று நினைத்துப் பெற்றிருந்தீர்களேயானால், எனது ஆழ்ந்த நன்றிகள்!!!

அனுபவங்களைப் பகிர
ஓர் விருப்பம்!
அவ்வளவே.