தம்பி

தமிழ் வளர்க்க

தமிழை வளர்க்க என்ன வழி?
முதல் வழி பேசுவது. நல்ல தமிழை எழுதவும் பேசவும் செய்தாலே அது வளரும். ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசப் பழக வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது கொஞ்சம் கடினமாகக் கூட இருக்கலாம். இது எல்லோருக்குமானது.
ஆனால் வளரும் தலைமுறைக்காரர்களிடம் நல்ல தமிழை விதைத்தால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். நல்ல தமிழ்நூல்களை வாசிக்கப் பழக்கினால், அதன் சுவையில் அவர்களாகவே தமிழை உணர்ந்து படிப்பார்கள்.

குறளைச் சொல்லித் தருகையில் அதன் பொருளை நிதானமாக, அதன் பொருட்சுவையை அழகாக எடுத்துரைக்கும் தமிழாசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் பாடத்திட்டம் அதனை அனுமதிப்பதில்லை. அங்குதான் முதல் அடி விழுகிறது.

திருக்குறள் என்பது ஏதோ மனப்பாடம் செய்ய முடியாத கடினமான ஒன்றாக மாணவர்கள் முன் நிற்கிறது. இதர செய்யுள்களுக்கும் அதே நிலைமை. உரைநடைப் பாடமென்பது தமிழின் உரைநடையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதாக அமைய வேண்டும். அங்கும் குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதிலாகவே அவை இருக்கின்றன.

அடிப்படையில் கேள்வித்தாள் என்பது மிகவும் நேரடியாக இருக்கிறது. மறைமுகமான கேள்விகளும், சிந்தித்து சுயமான விடையளிக்கும் வகையிலும் அமைய வேண்டும்.

துணைப்பாடம் என்றொரு பகுதி உண்டு. சுவையான கதைகள் கொண்ட பகுதி.
தமிழ் இரண்டாம் தாளில் ஒரு வினா வரும். கற்பனையாக யோசித்து எழுதக் கூடிய பகுதி. ஒன்பதாம், பத்தாம் வகுப்பில் கவிதை எழுதக் கூட கேள்விகள் உண்டு. ஆனால் அவற்றுக்கெல்லாம் பதிலாக இன்னொரு கேள்வி(கள்) இருக்கும். அவற்றிற்கான நோக்கமே அழிந்திடும்.

இளவல் ஒருமுறை அந்த கற்பனையான கேள்விக்கு பதில் எழுதியமைக்கு ஆசிரியர் கண்டித்திருக்கிறார். அதற்கு பதிலாக நேரடியான கேள்விக்குப் பதில் எழுதப் பணித்திருக்கிறார். நானும் கற்பனையான கேள்விகளைத் தவிர்த்திருக்கிறேன். ஒரே காரணம் மதிப்பெண்.

தமிழை வளர்க்க நிறையவே வழிகள் உண்டு. அவை இப்போது அடைபட்டு நிற்கின்றன. ஒரு இரவில், ஒரு நாளில் மாற்றம் நிகழ்ந்து விடாதுதான். நாம் சிறிய அளவில் முயற்சியெடுத்தால் போதும். ஒவ்வொருவரின் பங்களிப்பால்தான் இது சாத்தியமாகும். இங்கே நிறைய பழமைவாதிகள் உண்டுதான். அவர்களை மீறிக்கொண்டுதான் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.

பள்ளிகள் தமிழைப் பேசவும், எழுதவும், வாசிக்கவும் பழக்கும் இடமாக இருப்பின் நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். பள்ளிப்படிப்பை முடிக்கிறவர்கள் துளியும் தமிழ் தெரியாமல் வெளிவருகிற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் இப்போதைக்கு போதுமானது. அடுத்தது மதிப்பெண் குறித்த கவலைகள்.

 

**

நண்பரொருவர் கேட்ட கேள்விக்கு என்னளவில் யோசிக்கத் தொடங்கி எழுதியதை அப்படியே பதிந்துவிட்டேன். இன்னும் யோசனைகள் இருக்கலாம். இது என்னுடைய யோசனை அவ்வளவே.

-தமிழ்.

Advertisements

மென் தூறல் -1

பதிவாக இதைப் போடலாமே? என்று கேட்ட தோழரிடம் தனிப் பக்கமாகவே இதை எழுதுகிறேன் என்றுதான் சொன்னேன். இப்போது ஏனோ ஒரு மனமாற்றம் என்று வைத்துக் கொள்ளலாம். இப்பதிவு(களு)க்குக் கிடைக்கும் கருத்துக்களைப் பொறுத்தே தொடர்ந்து வெளியிடுவதா இல்லையா என தீர்மானிப்பேன். மற்றபடி எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எதிலாவது எழுதி வைத்துக் கொள்வது என்றே முடிவு.

அதுதவிர மென் தூறல் பக்கத்தில் இவற்றையெல்லாம் மொத்தமாய் தொகுத்து வைக்கவும் தவற மாட்டேன். வேறென்ன சொல்ல?

இவையெல்லாம் பல நேரங்களில், பல்வேறு சூழல்களில், உணர்ந்தவை, உணராதவை, கேட்டவை, பார்த்தவை என வகைதொகை இல்லாமல் நான் எழுதியவையே. கவிதைகள் என்றெல்லாம் எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியாதென்றாலும் சில அந்த வகைக்குள் அடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  

மழையல்ல இது. மழைக்கு முந்திய மென் தூறல்.
பெருமழையில் நனைதலில் சுகம் கண்டவர்கள் இங்கேயே வெளியேறிவிடலாம்.

முதல் பதிவில் இது மட்டும்!
முடிந்த மட்டும் சந்தச் சுவையை மட்டும் மனதில் கொண்டு நான் எழுதியிருக்கிறேன். பொருட்சுவை குறைவெனில் பொறுத்தருள்வது உம் கடன்.

அவனுக்கு அண்ணன் எழுதியது:

இறுகிய மனதும் உருகும்- அவன் மொழி கேட்டால்.
கடக்கின்ற தூரங்கள் குறையும்- அவன் வழி நடந்தால்.
சுமக்கின்ற பாரங்கள் குறையும்- அவன் துணை கிடைத்தால்.

உச்சத்தில் கொதித்த கோபத்தையும், உற்சாகமாய் மாற்றியது நீயல்லவா!
மிரட்டினாலும், விரட்டினாலும் நானா பணிவேன்?
உன் அன்பை மட்டுமே நகையாய் அணிவேன்!
அவனுக்காக நான் எழுதிய சொற்களுக்கான
அர்த்தங்கள் அவனாலேயே சிறப்பிக்கப்பட்டன.

அவன் உதிர்க்காத சொற்களின் நீளம் நான்.
நான் பறிக்காத மலர்களின் வாசம் அவன்.

கடல் தாண்டி, மலை தாண்டி செல்வேன்.
உனக்காக எதையும் நான் வெல்வேன்.
#நீ சொன்னால்

கனவிலும் நிச்சயம் தோன்றுவான்.
மனதிலே கால்தடம் ஊன்றுவான்.
உலவிடும் தென்றலாய்த் தீண்டுவான்.
பகலிலும் நிலவென சீண்டுவான்.
மௌனங்கள் தாண்டி பேச வைத்தான்.
சலனங்கள் காட்டி கூச வைத்தான்.
##இப்போதைக்கு இது போதுமே!

ஆனந்தமும், இன்னும் கொஞ்சமும்…

இந்த ஆண்டு துவங்கியதிலிருந்தே நான் குறைவாக எழுதுவதாக இங்கு  தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே அதிகமாகத் தான் எழுதுகிறேன்.

இசைப்பா தொடர்ந்து இயங்க எங்களால் ஆனமட்டும் முயன்றுகொண்டிருக்கிறோம். அண்ணன் கூட தனது நாற்சந்தியில் நெடுங்காலமாய் எழுதாமல் இருக்கிறார். ஆனாலும் நான் தொடர்ந்து இயங்குகிறேன்.

ஆம். நண்பர்கள் தரும் ஒத்துழைப்பின் காரணமாக தொடர்ந்து கூகுள் ப்ளஸ்-ல் குறும்பதிவுகள்-நடப்புகள்-அனுபவங்கள் ஆகியவற்றை மிகக் குறுகிய வட்டத்திற்குள் (Circles) எழுதி வருகிறேன். அவையெல்லாம் எனக்கே எனக்கானவை. பொதுவான பதிவுகள் அல்ல.

அங்கே இயங்குவதன் காரணமாய் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நண்பர்களுக்கு நன்றி. உரைநடை மேல் தான் ஈர்ப்பு அதிகம் இருக்கிறது. ஓரளவில் எழுதவும் இலகுவாய் உள்ளது. ஆனால் ஆசை யாரை விட்டது.

எங்கோ விட்ட குறை தொட்ட குறை இருந்திருக்கும் போல. பல வருடங்களாகவே, உரைநடையின் Cousin Brother என அழைக்கப்படும் கவிதை மேல் ஒரு பிரியம். அவ்வப்போது யோசித்து குட்டி குட்டி வார்த்தைகளில் எழுதிய அனுபவங்கள் இருக்கின்றன.

சமீபமாக இரண்டாண்டுகளாக கிட்டத்தட்ட தினமும் பாடல்கள் கேட்கிற வாய்ப்பு கிடைக்கிறது. கவிதை புத்தகங்களும் கைக்கு கிடைக்கின்றன. எப்படியோ கவிதை தோன்றுவதற்கான சூழலையும் உருவாக்கினேன்.

தமிழ் மொழி அழகிய மொழி. அழகிய வார்த்தைகளின் களஞ்சியம். இதமான வார்த்தைகளைத் தன்னகத்தே கொண்ட தனிப்பெரும் மொழி. தேனினும் இனிய மொழி. இவற்றில் எவருக்கும் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை என்பதும் உண்மை.

தமிழ்க் கவிதைகளில் புதுக் கவிதைகள் தவிர்த்து பிறவற்றில் மென்மையாக அல்லது வன்மையாகவே இலக்கணம் வழிந்தோடும். அது ஒன்றும் தவறில்லை. அதில்தான் அழகியல் பிறக்கும். அந்த வகையில் எனக்கு எதுகைப் பாடல்கள் மேல் பிரியம்.

இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பதுதான் எதுகை.

நேற்று (20-01-2013) மாலை வானிலை மாற்றம் காரணமாக மழைக்கான அறிகுறி தென்பட்டது. மழை எப்போதுமே, பொதுவாக கவிதைக்கான அறிகுறி! நானும் கவிதை எழுத ஆசைப்பட்டு மூன்று வரிகள் எழுதினேன். தமிழ் மொழி அழகிய மொழி என்று சொன்னேன் அல்லவா! அந்த அதிசயம் என்னை இழுத்துச் சென்றது. வார்த்தைகளை மாற்றி மாற்றி எதுகையில் 150க்கும் அதிகமான வார்த்தைகளில் எழுதி,  முடிக்க மனமே இல்லாமல் முடித்தேன்.

முழுமையாக எழுதிய பின் ஓரளவு திருப்தி ஏற்பட்டது. பரவாயில்லை. ஏதோ எனக்கு  எழுத வருகிறது எனத் தோன்றியது. இனி அவ்வப்போது எழுத முயற்சி நடக்கும். வெவ்வேறு இலக்கணங்களை மையப் படுத்தி.

எனது குட்டி-குட்டி கவிதைகளையும் (!) கவிதையாக மதித்து (!!) அவற்றையும் பாராட்டி ஊக்குவித்த அனைத்து தோழர்களுக்கும் எனது இதயத்திலிருந்து நன்றி.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஆனந்தம் எற்படுகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே ஆனந்தம் ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. இதில் நானும் ஆனந்தம் குறித்து நான் உணர்ந்தவற்றில் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் ஏதேனும் தோன்றலாம்.

 மழை நேரத்து தேநீர் ஆனந்தம்!

குடையிருந்தும் நனைந்தால் ஆனந்தம்!
மடை தாண்டும் வெள்ளம் ஆனந்தம்!
விடை சொல்லும் கேள்விகள் ஆனந்தம்!

குயில் பாடும் கீதம் ஆனந்தம்!
மயில் ஆடும்போதும் ஆனந்தம்!

தாகம் தீர்க்கும் தண்ணீர் ஆனந்தம்!
தேகம் குளிரும் காற்றும் ஆனந்தம்!
மேகம் மேல்படரும் வானவில் ஆனந்தம்!

மீளாத கனவுகள் ஆனந்தம்!
மூளாத போர்கள் ஆனந்தம்!
வாளாத நேரங்கள் ஆனந்தம்!

பசிக்கிற நேரத்து உணவுகள் ஆனந்தம்!
ருசிக்கிற வேளையில் இன்னும் ஆனந்தம்!
வசிக்கிற வீட்டின் சூழல் ஆனந்தம்!

பேசுகிற வார்த்தைகள் ஆனந்தம்!
கூசுகிற வெளிச்சம் ஆனந்தம்!
வீசுகிற தென்றல் ஆனந்தம்!
ஏசுகிற எதிரியும் ஆனந்தம்!

கண்டிக்கும் நண்பன் ஆனந்தம்!
தண்டிக்கும் அன்னை ஆனந்தம்!
துண்டிக்கும் மின்சாரம் ஆனந்தம்!
வேண்டிக் கொள்ளும் வரங்கள் ஆனந்தம்!

கரை தொடும் கடலும் ஆனந்தம்!
நுரை பொங்கும் அலையும் ஆனந்தம்!
இரை தேடும் பறவைகள் ஆனந்தம்!

பனி விழும் புல்வெளி ஆனந்தம்!
கனி தரும் மரங்கள் ஆனந்தம்!
இனி வரும் காலங்கள் ஆனந்தம்!

கொட்டுகிற மேளம் ஆனந்தம்!
திட்டுகிற தம்பியும் ஆனந்தம்!
மீட்டுகிற இசையும் ஆனந்தம்!

கதை சொல்லும் குழந்தை ஆனந்தம்!
அதைக் கேட்கும் பொழுதே ஆனந்தம்!
விதை வளரும் செடிகள் ஆனந்தம்!

சிந்திக்கிற எண்ணங்கள் ஆனந்தம்!
சந்திக்கிற உறவுகள் ஆனந்தம்!
நிந்திக்கிற துன்பங்கள் ஆனந்தம்!

வண்ணம் தீட்டும் மழலை ஆனந்தம்!
எண்ணம் வளர்க்கும் சிந்தனை ஆனந்தம்!
மண்ணைத் தொடும் வியர்வை ஆனந்தம்!
விண்ணைத் எட்டும் வெற்றி ஆனந்தம்!

எதுகையில் எழுதினால் ஆனந்தம்!
அதுவரை அனைத்தும் ஆனந்தம்!
இதுவும் கவிதையென்றால் இன்னும் இன்னும் ஆனந்தம்!

இன்றைய நாள் இன்னொரு வகையில் எனக்கு சிறப்பான நாள். ட்விட்டர் தளத்தில் இன்று எனக்கு மூன்றாம் ஆண்டு துவங்குகிறது. இதுவரை துணைநின்ற தோழர்கள், வழிகாட்டிகள் அனைவருக்கும் நன்றி.

எனக்கு தளத்தை அறிமுகம் செய்த அண்ணன் ஓஜஸிற்கும், எப்போதும் வழிகாட்டுகிற மதிப்பிற்குரிய பாலா சாருக்கும் நன்றி.

இதுவும் ஆனந்தம்தான்!

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா?
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா?
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்!
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்!
குயில்களும், மலர்களும் அதிசயம்!
கனவுகள், கவிதைகள் இரகசியம்!!

அன்புள்ள தம்பிக்கு…

அன்புள்ளதம்பிக்கு,

அண்ணன் எழுதியது. உனக்காக நான் ஒரு கடிதம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணித் துவங்குகிறேன். எவராலும் சுலபமாக புரிந்துகொள்ளப்படாத சகோதரர்கள் நாம் என்று நினைக்கிறேன். நாம் உண்மையிலேயே நல்ல சகோதரத் தன்மையோடு இத்தனைகாலமும் வாழ்ந்துள்ளோமா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன்.

இருவருக்குமே முதிர்ச்சியில்லை என்று சொன்னால் அது கொஞ்சம்தான் உண்மை. காரணம் இணக்கமான சகோதரர்களை நம் வாழும் காலத்திலேயே கண்டுள்ளோம். நம் இருவர் மீதும் நம் பெற்றோர் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நம்முடைய ஒவ்வோர் வெற்றிக்கும் பின்னால் அவர்களின் புன்னகையும், கண்ணீரும் நமக்கு அத்தனை துல்லியமாகப் புரிவதில்லை என்று நினைக்கிறேன்.

நம் அளவிற்கு சண்டையிட்டு அடிக்கடி குலாவுகிற சகோதரர்கள் சொற்பம்தான் என்று நான் நம்புகிறேன். அடக்க இயலாத கோபங்களை உன் மீது நான் கொண்டிருந்த தருணங்களும் உண்டு. அளவில் அடங்காத அன்பை உன் மீது கொண்ட காலங்களும் உண்டு.

உன் அளவிற்கு என்னைப் புரிந்துகொண்டவர்கள் இவ்வுலகில் எனக்குத் தெரிந்து எவருமில்லை. அத்தனை துல்லியமாக என் எண்ண ஓட்டங்களைப் புரிந்தவன் நீ. நீ இல்லாத தருணங்கள் இரணமாகியபோதுதான் இதை உணர முடிந்தது. உன் உணர்வுகளின்பால் எனக்கு அத்தனை நாட்டம் இல்லை.

சமீப காலங்களில் என்னை அடிக்கடி கோபம் செய்யும்போதும் கூட அத்தனை வெறுப்பு கண்டதில்லை என் மனம். காரணம் நீ இல்லாது நான் தவித்த தருணங்கள்தான்.

நீ சரியாக கணிப்பாய். என்னை மற்றவர் முன்னிலையில் உயர்த்திட, என்னை நானே செதுக்கிட உன் அறிவுரைகள் பயன்பட்டன. பல தருணங்களில் நான் பெறவேண்டிய புகழ்களை நீ அறிந்தும்-அறியாமலும் தட்டிச் சென்றிருக்கிறாய். பரவாயில்லை. நான் வருத்தம் கொள்ளவில்லை. ஏனென்றால் நீ என் தம்பி!

நான் எப்போது சிறப்பாக செயல்படுகிறேனோ அப்போது மட்டுமே உன் பாராட்டு கிடைக்கும். சமீபத்திய திட்டுகள்  அனைத்தையும் இப்படி நினைத்து கொள்கிறேன். நன்றி.

நான் அவசரத்தில் வார்த்தைகளை உதிர்த்தாலோ, தவறுகள் ஏதும் நேர்ந்தாலோ என்னை என்னுள் இருந்து மீட்கிற இரட்சகன் நீ. பெருமைக்கு சொல்லவில்லை. என்னைப் பற்றி அறிந்தவன் நீ.

என் நண்பர்களை உன் நண்பர்களாய் பாவித்தவன் நீ. அவர்களுக்கும் நன்றி சொல். உன் அனுபவங்களையெல்லாம் என்னோடு பகிர்ந்து வழி சொன்னவன் நீ. மிக்க நன்றி.

அக்காள் கூட சொன்னாள். இப்போதெல்லாம் அவனைப் பேர் சொல்லாமல் தம்பி என்றே சொல்கிறாய். இக்குணம் எப்படி வந்தது.?  அட! ஆமாம்!!   என்று எனக்கே தோன்றியது. அப்படிப்பட்டவன் நீ!

உன்னைப் பற்றி என் ஆசிரியர்கள் என்னிடம் விசாரித்த தருணங்கள் பெருமையானவை. நம் பாட்டிக்கும் உள்ளூர புன்னகை தரும் அளவிற்கு உன் கல்வித்தரத்தை உயர்த்திக் கொண்டாய். எனக்கு அந்த தருணம் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்காது. வாழ்த்துகள் தம்பி!

எத்தனைப் பெருமையாய் உன்னை நான் சொன்னாலும் நான்தான் உன்னை விடச் சிறப்பானவன் என்கிற கருத்து பிறரிடத்து வந்துள்ளது. இனியும் வந்தால் கொஞ்சம் மகிழ்வேன். உனக்கு அதற்காகவும் நன்றி!

எப்போதும் எனக்குள் தோன்றக்கூடிய தலைக்கனங்கள், பிறர் உண்டாக்குகிற தேவையற்ற வீண் புகழ்கள் யாவையும் அழிக்கிற சக்தி எப்போதும் உனக்குண்டு. மிக்க நன்றி. எப்போதும் எனக்கானவன் நீ! வாழ்வின் எந்த தருணங்களிலும் என்னைப் பிரியாதே தம்பி!

உனக்கும், எனக்கும் பல்வேறு விடயங்களில் வேறுபட்ட விருப்பங்கள் இருக்கலாம். அதனாலென்ன? என் பிரியம் என்றும் உன்னோடுதான்!

எனக்கு ஒரு அசட்டுத்தனமான எண்ணம்  இருக்கிறது. உன்னிடம் கூட சொல்லியிருந்தேன். அதேதான் இப்போதும்!!!

“நீ பெற்ற வெற்றிகளை விட என் தோல்விகளின் எண்ணிக்கை அதிகம். நீ பலமுறை வெற்றியின் ருசி கண்டவன். அதனால் உன் போராட்டம் வெற்றி நோக்கியதாய் இருக்கும். நீ தோல்வி காணவும் போவதில்லை. ஆனால் நான் பெறும் ஒற்றை வெற்றி கூட உன் வெற்றியைவிட வலியதாய்த் தோன்றுகிறது எனக்கு.

வெற்றியை மட்டுமே ருசிக்கிற வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன் நீ. தவறாகச் சொல்லவில்லை. தோல்விகளுள் மூழ்கியவனைப் போய்க் கேள்! வெற்றியின் ருசியை முழுதாய் அறிந்தவன் அவன்தான்!!

அதிகம் எழுத வேண்டும். பலவற்றையும் பகிர வேண்டும். ஆனால் நீயும் எழுத விருப்பம் கொண்டால்..? என்ன செய்வது? நீ ஏதேனும் சொல்ல விரும்பினால் எனக்கு அடுத்த கடிதத்தில் எழுதவும்.

உன் கடிதம் காண விரும்பும் ,

உன் அண்ணன்.