ட்விட்டர்

முதல் புத்தகம் [மின்னூல்]

முதல் புத்தகம் வெளியாகியிருக்கிறது.

முதல் மின் புத்தகம். பெயர் யோசிக்க ரொம்ப சிரமப்படக்கூடாது என்று எண்ணியிருந்தபடியால் அப்படியே முதல் புத்தகம் என்றே நூலுக்குப் பெயரும் வைத்தாயிற்று.

சொல்லப்போனால் இது அதிகாரப்பூர்வமான முதல் மின்னூல். இதற்கு முன்பு இரு மின்னூல்களை தொகுத்து நண்பர்களின் வாசிப்புக்காக அனுப்பியிருந்தேன். அதெல்லாம் முழுக்கவே சுயபதிவுகள் என்பதால் பொதுவெளியில் வைக்கவில்லை.

மின்னூல் வெளியிட வேண்டுமென்று கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே விருப்பம் இருந்தது. அதற்காக நண்பர்கள் சிலர் எவ்வளவோ உழைப்பைக் கொட்டினார்கள். அத்தனையும் கிட்டத்தட்ட வீணாகிவிட்டது. அதற்காக அவர்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.

கணியம் வலைத்தளம் தொடங்கிய ஓராண்டின் இறுதியில் அதில் ஒரே ஒரு பதிவு எழுதியிருந்தேன். பின்னர் அதன் ஆசிரியரான திரு. த. ஸ்ரீனிவாசன் அவர்களிடம் வேறேதேனும் எழுத யோசனைகள் தேவையெனக் கேட்டேன். அவர் ஒரு பெரும் வாய்ப்பைக் கொடுத்திருந்தார். அதை முழுக்க முடித்திருந்தால், அதுவே என்னுடைய முதல் மின்னூலாக  கணியம் குழு மூலமாக வந்திருக்கும்.

அந்த காலகட்டத்தில் துவங்கப்பட்ட திட்டமே free tamil ebooks திட்டம். ஒன்றிரண்டு நூல்கள் வெளியிட்ட காலத்திலேயே அக்குழுவிலிருந்து அழைப்பு கிடைத்தது. என்னுடைய தளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வலைப்பதிவுகளின் இணைப்புகள் கேட்டிருந்தனர்.

அப்போதிருந்த மனநிலையில் அது எனக்கு உவப்பானதாகப் படவில்லை. நான் உருப்படியாக ஒன்றும் எழுதியிருக்கவில்லை என்று என் ஆழ்மனதில் ஒரு எண்ணம் இப்போது வரையுமே இருக்கிறது.

மதிப்பில் இனிய ரஞ்சனி நாராயணன் அவர்களும் இதே போல் ஒரு தொகுப்பு மின்னூல் வெளியிட்ட காலத்தில் அவருக்கு எழுதிய மின்னஞ்சலில் சொல்லியிருப்பேன். நீங்கள் ஏதேனும் புனைவு எழுதியிருக்கலாம் என்று.

அப்போதைய மனநிலை அப்படித்தான் இருந்தது.

அதுதான் இணையத்தில் தளத்திலேயே இருக்கிறதே.. அதை ஏன் மீண்டும் தொகுத்து மின்னூல் ஆக்க வேண்டுமென்ற எண்ணம். பிறரது முயற்சிகளைப் படிக்கையில்தான் அந்த திட்டம் சிறப்பானதாகப் பட்டது.

ஆனால் இப்போதும் என் தளத்தில் உருப்படியான கட்டுரைகள் என்று எடுத்தால் எத்தனை தேறுமென்று தோன்றவில்லை.

சில மாதங்கள் முன்பு தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்நூல். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 09 2015) வெளியாகியுள்ளது. (இணைப்பு இறுதியாக உள்ளது.)

முதல் புத்தகம் இருபத்து ஐந்து பக்க அளவில் இருந்தால் போதுமென விரும்பியிருந்தேன். ஆனாலும் நாற்பது பக்க அளவில் இருந்தால் நன்றாக இருக்குமென வெளியீட்டாளர் விருப்பம் கொண்டார். சில பதிவுகள் புதிதாக எழுதி, சிலவற்றை கூடுதலாகச் சேர்த்து நாற்பது பக்கங்கள் கொண்டு வந்தேன்.

பல நண்பர்களின் வாழ்த்துகள் கிடைத்தன. ஒரே ஒரு மின்னஞ்சல் (இதுவரைக்கும்) அறியாத ஒருவரிடமிருந்து வந்தது. இத்தளத்தைக் கூட புதிதாக நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். இன்னொரு தளத்தில் கூட இந்நூலில் அறிமுகம் காணக் கிடைக்கிறது. சில மின்னஞ்சல் குழுக்களில் இப்புத்தகத்தை எடுத்துச் சென்று அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

நிறைய பேர் வாசித்தால் மிக்க மகிழ்ச்சிதான்.

பிழைகள் ஏதும் இருப்பின் பொறுத்தருள்க. நானே மெய்ப்பு பார்த்ததால் இப்படித்தான் இருக்கும். என் கண்ணில் என் பிழைகள் படாது அல்லது தாமதமாகக் கண்ணில் தெரியும். இதே புத்தகத்தை நண்பர் ஓஜஸ் எழுதியிருந்தார் என்றால்  என் கண்ணில் பிழைகள் சுலபமாகப் பட்டிருக்கும். ராசி அப்படி!

முதல் புத்தகம் cover image

முதல் புத்தகம்

நண்பர்களின் பங்களிப்போடு என் நூல் வர வேண்டுமென விரும்பினேன். அட்டைப்படம் என் தோழர் மூலமாக வரையப்பட வேண்டுமென விரும்பியிருந்தேன். பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நானே உருவாக்கி விட்டேன்.

வழக்கமான அட்டைப்படம் மாதிரி இல்லவே இல்லை. அதன் காரணம் நானேதான். இன்னுமொரு புத்தகம் இதைவிடச் சிறப்பாக நான் எழுதினால் அப்போது வேறு கதை சொல்கிறேன். அதுவரைக்கும் இதுதான்.

முன்னுரை படிக்க, வெவ்வேறு வடிவங்களில் தரவிறக்க…
http://freetamilebooks.com/ebooks/first-book/
பரவலாக என் நூல் செல்லுமாறு வெளியிட்ட free tamil ebooks குழுவினருக்கு நன்றி திரு, ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு என் நெகிழ்ச்சியான வணக்கம்.

தமிழ்
அக்டோபர் 12 2015

Advertisements

கற்றதனாலாயப் பயன்!

இது முழுக்கவே பயணங்களும், அவற்றின் அனுபவங்களும் கொண்ட பதிவு.
நிறைய திட்டங்களைக் கலைத்துப் போட்ட விடுமுறையாகிப் போயிருக்கிறது கடந்த வாரம். இருந்தாலும் சில பயணங்களும், உரையாடல்களும் இதம் தந்த விடுமுறை இது. அதுவரையில் மகிழ்ச்சியே!
பொங்கலன்று இனிமையான சம்பவங்களைக் கடந்து சில நிகழ்வுகள் ஆக்கிரமித்து விட்டன. என் மேல்தான் தவறென்றாலும் அதை என்னாலேயே தவிர்க்க முடியவில்லை. அதன்பின் கொஞ்சம் உருப்படியாக வாசித்தேன். அப்பாவோடு எக்கச்சக்கமான உரையாடல் வாய்த்தது. நான் அதிகம் பேசவில்லை.

கேரளாவின் ஒரு மாவட்டம் முழுக்க அமிலங்களால் சிதைந்து போயிருக்கிறது. ஆனால் அரசோ வருவாயைக் காரணம் காட்டுவதாய் ஒரு கட்டுரை படித்தேன். அதிர்ச்சிதான்.

நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். உரையாடுகையில் ஊடே அவரின் தோழர்கள் சிலர் வந்திருந்தனர். வீட்டுக்கு வெளியே நின்றபடியே உரையாடிக் கொண்டிருந்தோம். தன்னுடைய பணி அனுபவங்களைப் பற்றி சொன்னார் நண்பரின் நண்பர். (நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே!) திடீரென பள்ளி அனுபவங்கள் பக்கம் உரையாடல் திரும்பியது. இன்னொருவரை சுட்டிக் காட்டி இவரும் உங்க பள்ளிதான் என்றார்.
“நான் பத்தாம் வகுப்புவரைதான் அங்க படிச்சேன்”
“பத்தாவதில் எந்த பிரிவு?”
சொன்னார்.
எனக்கும் என் தோழருக்கும் அதிர்ச்சி. காரணம் அது நான் படித்த பிரிவு. நான் தொடர்ந்தேன்.
“நானும் அதே பிரிவுதான்! ”
“தெரியும். தமிழ்தானே உம்பேரு!”
“ம்ம்ம்.. ஆமா உன் பேரு *** தானே! முன்னமே தோணுச்சு…… என்ன எப்படி அடையாளம் கண்டுபிடிச்ச!”
அவர் சொன்ன பதில் எதிர்பார்த்த ஒன்றுதான்!
“பார்த்த உடனே…..”
பெரும்பாலான பள்ளித் தோழர்கள் என்னை அடையாளம் காண்பதில் சிரமப்படுவதே இல்லை. மாறாக நான் அவர்களைக் கண்டுபிடிப்பதற்குள் ”அவனா இருக்குமோ? இவனா இருக்குமோ?” என்று தாவு தீர்கிறது.

கரும்பு மட்டும்தான் இந்த பொங்கலை மறக்க முடியாதபடிக்குச் செய்தது. முடிந்தமட்டும் விருப்பம்போல கரும்பு தின்ன முடிந்தது (கரும்பு தின்னக் கூலியா!)! சன் டிவியில் ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் ஒன்று நீண்ட இடைவெளிக்குப் பின் ஒளிபரப்பானது. அதன் பின்னணி குறித்து அப்பா சொன்னார். சிரித்தபடியே ஆமோதித்தேன்! விடுமுறை நாட்கள் முழுக்க  படங்கள், பாடல்கள் என்றெல்லாம் பெரிதாக அமர்க்களப்படவில்லை. அத்தோடு வீட்டிற்குள் நுழையும் முன்பே அந்த மூன்றெழுத்துப் படம் குறித்த போஸ்டர்களும், படம் பார்க்க காத்திருந்த ரசிகர்கூட்டமும் ஆச்சர்யம்தான்! நாடோடிகள் படத்தில் ஒரு வசனம் வரும்.

”இந்த வசனம்-லாம் யார் எழுதுறா?
”அதுக்கு பதினைந்து பேர் கொண்ட குழு இருக்கே!”

அந்த பதினைந்து பேர் கொண்ட குழுவினர்தான் என் கண்ணில் படவில்லை. ’சிலர்’ அரசியலுக்குள் வர மறுப்பதன், அல்லது வரத் துடிப்பதன் பின்னணி ஓரளவேனும் புரிந்தது.

வாசித்தவற்றையெல்லாம் முதலில் மனதினின்று எடுக்க வேண்டும். பல சிறுகதைகளையும், சில கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கத் திட்டம்! டான் நதி புத்தகத்தைத் தொடவே இல்லை. தொட்டால் முடிக்கிற வேகம் வாய்க்க வேண்டும். சும்மா சும்மா அந்த புத்தகத்தை துன்புறுத்துவது நியாயமாகப்படவில்லை.

ஒரு சுகமான பேருந்துப் பயணம் வாய்த்தது. காதில் மாட்டிய ஹெட்போனை கடைசிவரை கழட்டவில்லை. இதில் சில ஆச்சர்யங்கள் நிகழ்ந்தன.

 1. முதல் பாடல் இளையராஜா, அடுத்து கார்த்திக் ராஜா, அடுத்து யுவன் ஷங்கர் ராஜா என முதன்முறையாக பாடல்கள் வரிசையாக ஒலித்தது.
 2. எனக்கருகில் அமர்ந்திருந்த நபர் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பொறுத்துப்பார்த்தார். கடைசியாக அவரும் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பண்பலை வானொலியை இயக்கி ரசித்தார்.
 3. ஒரு குழந்தை எனக்கு எதிரே (அம்மாவின் மடியினின்று இறங்கி) நின்றிருந்தது. வெகுநேரமாக என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தது. அவ்வப்போது நானும். திடீரென என் தொடை யைத் (அதாவது பேண்ட்ஸை) தொட்டது அக்குழந்தை. இருமுறைகள் தடுத்த அதன் அம்மாவுக்கு (என் அனுமானத்தில் ) வயது இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் இருக்கும். இருமுறைகளுக்குப் பின் அந்தப் பெண் அக்குழந்தையைத் தடுக்கவில்லை. அது என் காதுகளையே பார்த்துக்கொண்டிருப்பதாகப் பட்டது. என் ஐயம் வீணாகவில்லை. சற்றுநேரத்தில் மூன்று முயற்சிகளுக்குப் பின், என் தோளைக் கொஞ்சம் சாய்த்து, அப்படி-இப்படி என அசைந்து ஒருபக்க ஹெட்போனை கழற்றிவிட்டது. இன்னொரு காதில் எனக்கு பாட்டு கேட்டுக்கொண்டிருந்தது. அக்குழந்தையின் தாய், எனக்கு அருகில் இருந்தவர், எனக்கு முன் -பின் அமர்ந்திருந்த சிலரும் ஒரே நேரத்தில் அதிசயித்தனர். (ஓஓஓ!)(பார்ரா!)

  ”அவங்கப்பாவிடமிருந்து தொற்றிய பழக்கம் இது” பூரிப்புடனே அந்த தாயார் கணநேரத்தில் பகிர்ந்த தகவல் இது. எனக்கோ அக்குழந்தையிடம் ஹெட்செட்டைக் கொடுக்க மனமில்லை.

  இது இளம்பருவம்; அதன் காது மிகச் சிறியது; என்னிடம் ஓடிய பாடலின் டெம்போ; நான் கேட்டுக்கொண்டிருந்த ஒலியின் அளவு; பாடல் குழந்தையிடம் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என பல எண்ண மின்னல்கள் என்னைச் சுற்றின. கடைசியாக மீண்டும் ‘இயல்பு நிலை’க்குத் திரும்பினேன். 

பொங்கலன்று காலை இனிதே விடிந்தது. தோழர்கள் சிலருக்கு வாழ்த்து சொல்ல அழைத்தால் நான்கு விதமான மறுமொழிகள் கிடைத்தன.

1. பிஸி
2. அரைகுறையாக உரையாடல் கேட்டது. பின்னர் சிக்னலில் பிரச்சினை
3. ஸ்விட்ச்டு ஆஃப்
4. முழுமையாக ரிங் மட்டும் போய் முடிந்தது.
இதன் பின் எதிர்பாராத விதமாக வகையாக ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன். அதனின்று மீள்வதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

*******************

கடைசியாக:

2011 ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். தலைவர்கள் சிலரின் தத்துவங்களை ’சிறப்பு’ ட்வீட்டாக இடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட ஒரு தத்துவத்தை ’அவர்’ எனக்கு முன்பே இட்டுவிட்டார். ஓஜஸிடம் இதைச் சொன்னவுடன்.

“யோசிக்கிற ட்வீட்லாம் அப்பப்போ எழுதிடணும். வெயிட் பண்ணினா அவ்ளோதான்!”

 என்றார். இப்போது வரை புத்திக்கு உறைப்பேனா என்கிறது. இதன் காரணமாய் நான் இழந்தவையும் இருக்கிறது. அதை விடுங்கள். இன்றோடு நான் ட்விட்டருக்குள் நுழைந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. வேறென்ன சொல்வேன்?

தோழர்களுக்கு நன்றி. 

நிறைய!

அனைவருக்கும் வணக்கம்.

கிட்டத்தட்ட 2 மாதங்களை நெருங்குகிறது. பதிவுகள் எழுதி. புள்ளிவிபரங்களின்படி மாறுபடலாம் என்றாலும். ஓரளவில் உண்மை இதுதான். நிறைய பயணப்படவும், படிக்கவுமாக இருந்ததால் இந்த இடைவெளி உண்டாகிவிட்டது.

எழுதினால் உருப்படியாக மட்டும்தான் எழுதுவேன் என்றெல்லாம் யோசித்து வைக்கவில்லை. எழுதுவதையே கொஞ்சம் நிறுத்திவிட்டு, வாசிப்பிலும், பயணத்திலுமாக இருந்தேன்.அதிகாலை நகரம், காலைநேரத்து சந்தை, கிராமத்து விடியல், அதிகாலைப் பயணம், நள்ளிரவு பயணம், வரலாற்று நூல்களின் அணிவகுப்பு, ம்ம்ம்ம் இன்னும் நிறைய இருந்தன.

மே இறுதி வாரத்தின் மாலையில் நண்பன் ஒருவனை அலைபேசியில் அழைத்தேன்.

“நாளை மதியம் __________ படத்திற்கு போகலாம். தயாராக இரு. பிற நண்பர்களிடத்தும் சொல்லி வை”

சரி என்றான்.

அன்று இரவு என் ஊரைச் சென்றடைந்தேன்.

அடுத்த நாள் மதியம் அந்த படத்திற்குப் போனோம். அதுவும் இன்றே கடைசி என்கிற ரீதியில். இடைவேளை வந்தது. நண்பன் ஃபேஸ்புக்கை திறந்தான்.

“ஓஜஸ் இருக்கிறான்!”

அதன் பின்னர் ஃபேஸ்புக் வரை நான் படம் பார்க்கிற விடயம் பரவியதும் தனிக்கதை.

இந்த 40 நாட்களில் குறைந்தது 50 பாராட்டுகளும், ஆயிரம் திட்டுகளும் வாங்கியிருப்பேன். ஒன்றும் மோசமில்லை.

ஆயிரக்கணக்கான கி.மீகள் பயணம் போனேன். தொடர்வண்டிப் பயணம் வாய்க்கவில்லை. சில நேரம் பைக்குகளிலும் நெடுந்தூரம் போனது இந்த ஆண்டில்தான்.

நிறைய புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது. சில புத்தகங்கள் வாசிக்க முடிந்தது. வழக்கம்போல அவற்றை உங்களுக்கும் அறிமுகம் செய்வேன்.

மதுரையும் மதுரை சார்ந்ததுமான தென் மாவட்டங்களுக்கு இம்முறை பயணம் போனேன்.

புதிதாக ஏராளமானவர்களுடன் உரையாட, பழக வாய்ப்பு கிடைத்தது. இங்கே ஒரு துளி.

”ஏம் பாட்டி இந்த பஸ் _____________-க்கு போகுமா?”

“போகும். ஆனா நிக்குமா-னு கண்டக்டர்ட்ட கேளு”

இன்னொரு முதிய பெண்மணி எனக்கு அக்காவோ, தங்கையோ இல்லை என்று வருத்தப்பட்டார். இன்னும் நிறைய அனுபவங்கள் கிடைத்தன.

மதுரையைப் பற்றியே நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. புதிதாக அறிந்து கொண்ட பெயர்கள், பழைய வரலாறுகள், நிகழ்வுகள் நிறைய உள்ளன.

13 ஆண்டுகள் என்னை அறிந்த ஒருவர் என் பதிவுகளைப் படித்துவிட்டு வீட்டுக்கு வந்து வாழ்த்தினார். நன்றி.  ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் எழுதச் சொல்லியிருக்கிறார். இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இதுதவிர புதிதாக பதிவு எழுதியிருக்கியா? என்று தொலைபேசியில் கூட ஒருவர் விசாரித்தார்.

ட்விட்டரில் ”காணவில்லை- வருந்துகிறோம்” அளவுக்கு வருத்தப்பட்டார்கள். எனக்கே எனக்காக இந்த நாட்களை முடிந்தமட்டும் செலவிட்டுள்ளதாக நம்புகிறேன்.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நான் படித்து வந்த புத்தகம். வீரம் விளைந்தது. இந்த புத்தகம் படிக்கையில் வந்த தடைகளைப் போல, விமர்சனங்களைப் போல இதுவரை வேறு எந்த புத்தகத்துக்கும் வந்ததில்லை.

“தினமும் அஞ்சு-அஞ்சு பக்கமா படிக்கிறியா?”

”டெய்லி ஏன் இந்த புத்த்கத்தை வச்சுக்கிட்டு சீன் போடற?”

இந்த புத்தகத்தைப் படித்து முடித்த பிறகுதான் ஒரு ஆசுவாசம் வந்தது.

அடுத்ததாக சர்வம் ஸ்டாலின் மயம் நூலை 2 மணிநேரத்தில் முடித்தேன். ஏனென்றால் 4-வது முறையாக அப்புத்தகத்தைப் படித்தேன்.

அப்பா-அம்மா இருவருக்கும் பரிசளிக்க புத்தகங்கள் வாங்க முடிவெடுத்தேன். இரண்டு நாவல்கள் அல்லது சிறுகதைத் தொகுப்புகளை வாங்குவது என்கிற எண்ணத்துடன் கடைக்குள் நுழைந்தேன்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சுற்றிசுற்றி, அந்த கடையையே 3 முறை வலம்வந்து இரு புத்தகங்களை வாங்கினேன். அவை தோட்டியின் மகன், கேரளத்தில் எங்கோ.. (கேரளத்தில் எங்கோ.. நூலை வாங்கியதே ஒரு வித்தியாசமான அனுபவம்தான். அதுபற்றி விரிவாக இன்னொரு பதிவில் சொல்கிறேன்.).

இந்த பயணம் முழுக்க கிடைத்த அனுபவங்கள் நிறைய இருக்கிறது. இதெல்லாம் அனுபவத்தின் சிதறல்களாக எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய அனுபவங்களைச் சொல்லி குழப்பாமல், நிறைவான அனுபவங்களை மட்டும் முழுமையாய் பகிர்கிறேன்.

உருப்படியாக படித்த சில நூல்கள்:

 • வீரம் விளைந்தது – நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி*
 • சர்வம் ஸ்டாலின் மயம் – மருதன்
 • கேரளத்தில் எங்கோ… -லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்
 • தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை**

#இதுதவிர இன்னும் 3 புத்தகங்கள் வாசிப்பில் உள்ளன. அதைப் பற்றிய அறிமுகத்தையும், மேற்கண்ட நூல்களுக்குமான அறிமுகத்தையும் தந்துவிடுகிறேன்.

இவ்வருடம் இதுவரை சிறப்பான நூல்களினால் நகர்கிறது. நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.

* தமிழில் எழுதியவர்- எஸ்.இராமகிருஷ்ணன்
** தமிழில் எழுதியவர்- சுந்தர ராமசாமி

பயணத்தில் சில புரிதல்கள்:

ஏறத்தாழ கடந்த 3-4 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செல்ல வேண்டியிருந்தது. தனியே பயணக்கட்டுரைகளாக  எழுதியிருக்கலாம். இப்போதைக்கு தொடர்கள் எதையுமே தொடுவதாக இல்லை! ஆனாலும் சில தனிப்பட்ட விருப்பங்கள் உண்டு. விரைவில் சொல்வேன்!

கடந்த 2010-ல் எனது தந்தையும் நானும் ரயிலில் பயணப்பட்டோம். சற்றே வித்தியாசமான அனுபவங்கள் வழிநெடுகவும் கிடைத்தது. கடந்த ஆண்டு நான் மட்டும் தனியே ஆயிரக்கணக்கான கி.மீகள் பயணப்பட நேர்ந்தது. கடந்த அக்டோபர் மாதத்து இறுதியில் சிறப்பான பயணம் மதுரையில் நிகழ்ந்தது. அதைப்பற்றி எழுத கொள்ளை ஆசை. ஆனாலும் இப்போது வேண்டாம்.!

எனது ஒவ்வொரு பயணங்களின் முடிவிலும் புதிதாக நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமான அனுபவங்களை எனக்காக தந்து சென்றனர். அவர்களுக்கெல்லாம் நான் கடன்பட்டவன்!

கடந்த பிப்ரவரி மாதத்தின் குறிப்பிட்ட வாரம் எனக்கு கடும் வேலைப்பளுவிற்கு மத்தியில் கிட்டத்தட்ட 40 மணிநேரத்துக்குள் 400 கிமீகளை கடந்து பயணப்பட வேண்டிய அவசியம் வந்தது. சரியான அளவில் உறக்கம் இல்லாமல் கிட்டத்தட்ட அடுத்து வந்த 2-3 நாட்களையும் அப்பயணம் விழுங்கிவிட்டது. ஆனால் அது ஒரு சுகமான பயணம்!

அந்த சனிக்கிழமையின் மாலையில் பேருந்தைப் பிடித்தேன். கிட்டத்தட்ட நூறு கி.மீக்கும் அதிக தொலைவு பயணம் சென்றேன். அப்பயணத்தை தொடங்கும் முன் பேருந்தில் ஒரு பிரச்சாரம். புரட்சிகரமான கருத்துகளைத் தாங்கிய ஒரு பத்திரிகையினை விற்பதற்காக ஒருவர் எல்லா பயணிகளின் கவனத்தையும் தன்வயப்படுத்தினார். அந்த இதழின் அட்டைப்படத்திலேயே பெண் வன்கொடுமைக்கு எதிராக நாம் என்ன செய்யலாம்? என விளக்குவதைப்போல் ஒரு படம். அந்த மனிதர் அத்தனை அற்புதமாக தன் கருத்தை பயணிகளிடம் சென்று சேர்த்தார் என்றே நான் சொல்வேன்.

அவர் கூறியதிலிருந்து சில கருத்துகளை நான் இங்கே வாக்கியங்களாகப் பதிகிறேன்.

 •   நம் வீட்டுப் பெண்களை/ குழந்தைகளை நமது அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாது. அதன் அவசியம் அரசிற்கும் இதுவரை இருந்ததில்லை. சமூக அக்கறையோடு நாமேதான் நம் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்.
 •   தொலைக்காட்சிதான் சமூகத்தைக் கெடுக்கிறது. அதில் போடப்படும் விளம்பரங்களை விட மோசமானது எதுவுமில்லை.
 • குறிப்பிட்ட “Perfume” அடித்தால் பெண்கள் மயங்குவர்!

 • குறிப்பிட்ட “Toothpaste” கொண்டு துலக்கினால் பெண்கள் ரசிப்பர்! (மேலே கூட விழலாம்!)

 •  குறிப்பிட்ட வண்டியை வாங்கினால் “ஃபிகரைப் (!!)” பிக்கப் (?) செய்யலாம்!

இப்படித்தான் பல விளம்பரங்களில் காட்டுகிறார்கள். இதிலெல்லாம் அரசு தலையிடாது. எனவே நம் கையில்தான் எல்லாமே இருக்கிறது. என்றெல்லாம் இன்னும் இன்னும் பரபரப்பாக பேசினார். மொத்தமாய் 4-5 நிமிடங்களுக்குள் சொல்ல வந்ததை சரியே சொல்லி முடித்தார். இதழையும் விற்க முன்வந்தார். விளம்பரங்களே இல்லாத இதுபோன்ற இதழ்களை ஊக்குவிக்கவாவது நான் அவ்வப்போது வாங்குவது வழக்கம். அப்போது என்னிடம் சரியான அளவில் பணம் இல்லை. (10 ரூபாய்!) சில்லரைக்காசுகளை தேடிக்கொண்டிருக்கையில் அருகிலிருந்த 50 வயதைத் தாண்டிய பெரியவர் எனக்காக ஒரு பிரதி சேர்த்து வாங்கிக் கொடுத்தார். பின்னர் அவருக்கு நான் அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு மனதார நன்றி சொல்லிவிட்டேன். ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். வழியில் நண்பர்களைத் தேடினால் யாரும் கண்ணில் சிக்கவில்லை.

மறுநாள் காலை பள்ளித்தோழன் ஒருவன் வந்து சிறிதுநேரம் உரையாடினான். மீண்டும் ஒரு பயணம். கிட்டத்தட்ட 80 கி.மீக்கும் அதிக தூரம். சமீபகாலப் பயணங்களில் நான் காதில் headset மாட்டாமல் சென்றது அப்போதுதான்! என் பயணங்கள் எப்படியும் இசையோடுதான் இருக்கும்!!

வேறு நிமித்தமாக சென்ற பயணத்தில் பள்ளிகாலத்தோழன் ஒருவனை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவனைப் பார்த்ததுமே அவன் பெயர் என் மனதில் பாய்ந்து நின்றது. இருப்பினும் ஒரு ஐயம் அவன்தானா இவன்? வேறு ஆளாய் இருந்தால் என்ன செய்வது?? சில தயக்கங்களைத் தாண்டி மெல்ல அவன் அருகில் போனவுடன் நீ தமிழ்தானே என்றான் அவன். நானும் அவன் பெயரைச் சொன்னவுடன் அவனும் ஆம் என்றான். தொடர்ந்து கொஞ்சம் உரையாட நேரம் வாய்த்தது.

அப்டியே இருக்கியே!

இதுதான் என் நண்பர்கள் என்னைப் பற்றி சொல்லும் ஆகச் சிறந்த கருத்து! அதன் பொருள் எனக்கு மட்டுமே சரியான அளவில் விளங்கும். நல்லா சாப்பிடுடா! என்று இறுதியாக சில அறிவுரைகளைச் சொல்லி விடைபெற்றார் அந்நண்பர். நல்லபடியாக நாங்கள் படித்த காலத்தின் குறும்புகள் எதையும் அவர் சொல்லவில்லை! இன்னுமொரு ஆச்சர்யமான தகவலும் அப்போது கிடைத்தது. அதாவது எங்கள் இருவரின் தம்பிகளும் ஒன்றாகப் படித்தவர்களாம்!

அங்கேயே 2 பயண அலுவல்களை முடித்து மாலை மீண்டும் வேறுபகுதிக்கு பயணம் தொடங்கினேன். அதாவது கிழக்கு நோக்கி. கிட்டத்தட்ட 200 கி.மீக்கும் அதிக தொலைவு. மோசமான சாலைகள், இரவு, குளிர், மண்புழுதிகள், 3-4 பேருந்துகள் மாறிமாறி ஒருவழியாக இருப்பிடம் சேர்ந்து மணி பார்க்கும்போது இரவு 11-ஐ நெருங்கியிருந்தது. அப்போதே இதையும் ட்விட்டரில் பதிந்துவிட்டேன்!

ஒரு வழியாக ட்வீட் embed செய்த பதிவு எழுதியாக வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் நிறைவேறியது. இனியும் இதுபோல பயணப் பதிவுகளையும், ட்வீட் embed -களையும் தொடர்ந்து எழுத விருப்பம் மறுப்பு இருக்காது என நம்புகிறேன். சொன்னபடி நான் என்னைப்பற்றிய அறிமுகத்தில் சில திருத்தங்களைச் செய்துள்ளேன். ஓரளவு புரியும் (!) எனவும் நம்புகிறேன்.

ஆனந்தமும், இன்னும் கொஞ்சமும்…

இந்த ஆண்டு துவங்கியதிலிருந்தே நான் குறைவாக எழுதுவதாக இங்கு  தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே அதிகமாகத் தான் எழுதுகிறேன்.

இசைப்பா தொடர்ந்து இயங்க எங்களால் ஆனமட்டும் முயன்றுகொண்டிருக்கிறோம். அண்ணன் கூட தனது நாற்சந்தியில் நெடுங்காலமாய் எழுதாமல் இருக்கிறார். ஆனாலும் நான் தொடர்ந்து இயங்குகிறேன்.

ஆம். நண்பர்கள் தரும் ஒத்துழைப்பின் காரணமாக தொடர்ந்து கூகுள் ப்ளஸ்-ல் குறும்பதிவுகள்-நடப்புகள்-அனுபவங்கள் ஆகியவற்றை மிகக் குறுகிய வட்டத்திற்குள் (Circles) எழுதி வருகிறேன். அவையெல்லாம் எனக்கே எனக்கானவை. பொதுவான பதிவுகள் அல்ல.

அங்கே இயங்குவதன் காரணமாய் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நண்பர்களுக்கு நன்றி. உரைநடை மேல் தான் ஈர்ப்பு அதிகம் இருக்கிறது. ஓரளவில் எழுதவும் இலகுவாய் உள்ளது. ஆனால் ஆசை யாரை விட்டது.

எங்கோ விட்ட குறை தொட்ட குறை இருந்திருக்கும் போல. பல வருடங்களாகவே, உரைநடையின் Cousin Brother என அழைக்கப்படும் கவிதை மேல் ஒரு பிரியம். அவ்வப்போது யோசித்து குட்டி குட்டி வார்த்தைகளில் எழுதிய அனுபவங்கள் இருக்கின்றன.

சமீபமாக இரண்டாண்டுகளாக கிட்டத்தட்ட தினமும் பாடல்கள் கேட்கிற வாய்ப்பு கிடைக்கிறது. கவிதை புத்தகங்களும் கைக்கு கிடைக்கின்றன. எப்படியோ கவிதை தோன்றுவதற்கான சூழலையும் உருவாக்கினேன்.

தமிழ் மொழி அழகிய மொழி. அழகிய வார்த்தைகளின் களஞ்சியம். இதமான வார்த்தைகளைத் தன்னகத்தே கொண்ட தனிப்பெரும் மொழி. தேனினும் இனிய மொழி. இவற்றில் எவருக்கும் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை என்பதும் உண்மை.

தமிழ்க் கவிதைகளில் புதுக் கவிதைகள் தவிர்த்து பிறவற்றில் மென்மையாக அல்லது வன்மையாகவே இலக்கணம் வழிந்தோடும். அது ஒன்றும் தவறில்லை. அதில்தான் அழகியல் பிறக்கும். அந்த வகையில் எனக்கு எதுகைப் பாடல்கள் மேல் பிரியம்.

இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பதுதான் எதுகை.

நேற்று (20-01-2013) மாலை வானிலை மாற்றம் காரணமாக மழைக்கான அறிகுறி தென்பட்டது. மழை எப்போதுமே, பொதுவாக கவிதைக்கான அறிகுறி! நானும் கவிதை எழுத ஆசைப்பட்டு மூன்று வரிகள் எழுதினேன். தமிழ் மொழி அழகிய மொழி என்று சொன்னேன் அல்லவா! அந்த அதிசயம் என்னை இழுத்துச் சென்றது. வார்த்தைகளை மாற்றி மாற்றி எதுகையில் 150க்கும் அதிகமான வார்த்தைகளில் எழுதி,  முடிக்க மனமே இல்லாமல் முடித்தேன்.

முழுமையாக எழுதிய பின் ஓரளவு திருப்தி ஏற்பட்டது. பரவாயில்லை. ஏதோ எனக்கு  எழுத வருகிறது எனத் தோன்றியது. இனி அவ்வப்போது எழுத முயற்சி நடக்கும். வெவ்வேறு இலக்கணங்களை மையப் படுத்தி.

எனது குட்டி-குட்டி கவிதைகளையும் (!) கவிதையாக மதித்து (!!) அவற்றையும் பாராட்டி ஊக்குவித்த அனைத்து தோழர்களுக்கும் எனது இதயத்திலிருந்து நன்றி.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஆனந்தம் எற்படுகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே ஆனந்தம் ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. இதில் நானும் ஆனந்தம் குறித்து நான் உணர்ந்தவற்றில் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் ஏதேனும் தோன்றலாம்.

 மழை நேரத்து தேநீர் ஆனந்தம்!

குடையிருந்தும் நனைந்தால் ஆனந்தம்!
மடை தாண்டும் வெள்ளம் ஆனந்தம்!
விடை சொல்லும் கேள்விகள் ஆனந்தம்!

குயில் பாடும் கீதம் ஆனந்தம்!
மயில் ஆடும்போதும் ஆனந்தம்!

தாகம் தீர்க்கும் தண்ணீர் ஆனந்தம்!
தேகம் குளிரும் காற்றும் ஆனந்தம்!
மேகம் மேல்படரும் வானவில் ஆனந்தம்!

மீளாத கனவுகள் ஆனந்தம்!
மூளாத போர்கள் ஆனந்தம்!
வாளாத நேரங்கள் ஆனந்தம்!

பசிக்கிற நேரத்து உணவுகள் ஆனந்தம்!
ருசிக்கிற வேளையில் இன்னும் ஆனந்தம்!
வசிக்கிற வீட்டின் சூழல் ஆனந்தம்!

பேசுகிற வார்த்தைகள் ஆனந்தம்!
கூசுகிற வெளிச்சம் ஆனந்தம்!
வீசுகிற தென்றல் ஆனந்தம்!
ஏசுகிற எதிரியும் ஆனந்தம்!

கண்டிக்கும் நண்பன் ஆனந்தம்!
தண்டிக்கும் அன்னை ஆனந்தம்!
துண்டிக்கும் மின்சாரம் ஆனந்தம்!
வேண்டிக் கொள்ளும் வரங்கள் ஆனந்தம்!

கரை தொடும் கடலும் ஆனந்தம்!
நுரை பொங்கும் அலையும் ஆனந்தம்!
இரை தேடும் பறவைகள் ஆனந்தம்!

பனி விழும் புல்வெளி ஆனந்தம்!
கனி தரும் மரங்கள் ஆனந்தம்!
இனி வரும் காலங்கள் ஆனந்தம்!

கொட்டுகிற மேளம் ஆனந்தம்!
திட்டுகிற தம்பியும் ஆனந்தம்!
மீட்டுகிற இசையும் ஆனந்தம்!

கதை சொல்லும் குழந்தை ஆனந்தம்!
அதைக் கேட்கும் பொழுதே ஆனந்தம்!
விதை வளரும் செடிகள் ஆனந்தம்!

சிந்திக்கிற எண்ணங்கள் ஆனந்தம்!
சந்திக்கிற உறவுகள் ஆனந்தம்!
நிந்திக்கிற துன்பங்கள் ஆனந்தம்!

வண்ணம் தீட்டும் மழலை ஆனந்தம்!
எண்ணம் வளர்க்கும் சிந்தனை ஆனந்தம்!
மண்ணைத் தொடும் வியர்வை ஆனந்தம்!
விண்ணைத் எட்டும் வெற்றி ஆனந்தம்!

எதுகையில் எழுதினால் ஆனந்தம்!
அதுவரை அனைத்தும் ஆனந்தம்!
இதுவும் கவிதையென்றால் இன்னும் இன்னும் ஆனந்தம்!

இன்றைய நாள் இன்னொரு வகையில் எனக்கு சிறப்பான நாள். ட்விட்டர் தளத்தில் இன்று எனக்கு மூன்றாம் ஆண்டு துவங்குகிறது. இதுவரை துணைநின்ற தோழர்கள், வழிகாட்டிகள் அனைவருக்கும் நன்றி.

எனக்கு தளத்தை அறிமுகம் செய்த அண்ணன் ஓஜஸிற்கும், எப்போதும் வழிகாட்டுகிற மதிப்பிற்குரிய பாலா சாருக்கும் நன்றி.

இதுவும் ஆனந்தம்தான்!

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா?
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா?
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்!
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்!
குயில்களும், மலர்களும் அதிசயம்!
கனவுகள், கவிதைகள் இரகசியம்!!