சுஜாதா

சில கதைகள்!

 

மீண்டும் கதைகள்!

எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் புதியவர்களின் கதைகள் பிரிவில் போகன் எழுதிய ’பூ’ -வைப் படிப்பதற்காக கடந்த ஆண்டே தனியே எடுத்து வைத்திருந்தேன். ஐந்து அல்லது ஆறு முறை முயற்சித்தும் முழுமையாகப் படிக்க நேரமின்றி அவதியுற்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் வியப்பில் ஆழ்த்திய கதை. ஏறக்குறைய 14 A4 தாள்களை விழுங்கிய அக்கதையை சமீபத்தில்தான் மீண்டும் எடுத்து முழுமையாகப் படித்து முடித்தேன்.

இந்த ஆண்டு நான் படித்த மிகச்சிறந்த சிறுகதைகளில் அதற்கு கண்டிப்பாக இடம் தருவேன். அவ்வளவு விரிவாக கதை சொன்னவிதம் ரொம்பவே பிடித்திருந்தது. நாஞ்சில் தமிழும், மலையாளமும் இணைந்த உரையாடல்கள். அப்புறம் கதையின் அமானுஷ்யம்!

அதெல்லாம் தவிர்த்துவிட்டு கடந்த வாரம் வீட்டில் இரண்டு மூன்று ஆனந்த விகடன்களை கையில் எடுத்துவைத்து புரட்டியபோது சிறுகதைப் பக்கங்களில் போகன் பெயர் வந்தது. ’யாமினி அம்மா’ என்றொரு கதை.

முதல் வாசிப்பில் எனக்கு கதை இன்னும் முழுமையாக பிடிபடவில்லை. ஆனாலும் இரண்டு கதைகளும் ஒரு சில புள்ளிகளில் இணைகின்றன.

அம்மா கதாபாத்திரத்தை முன்னிறுத்தியே இரு கதைகளும் இருக்கின்றன. யாமினி அம்மா-விலும் கதாபாத்திரங்கள் மலையாளம் பேசுகின்றன. கதையே கேரளாவில்தான்! போகன் நாகர்கோயிலைச் சார்ந்த மருத்துவர் என்பதும், அவர் பெரும்பாலும் கவிதை எழுதுபவராக அறியப்படுவதும் இதையெல்லாம் படிப்பதற்கு முன்பே நான் அறிந்த தகவல்கள்.

ஆனந்த விகடனில் இரண்டாவது 3D  பதிப்பின் முதல் இதழில் எழுத்தாளர் காமுத்துரை எழுதிய ’மிகினுங் குறையினும்’ செம வேகமான த்ரில்! சாதாரணமான நிகழ்வுகள் சமயங்களில் எப்படியெல்லாம் எவருக்கெல்லாம் சவால் ஆகின்றன என்பதைச் சொல்லும் கதை. உப்பு தான் மிகவும் கூடாது… குறையவும் கூடாது!

இரா முருகன் எழுதிய பகல் பத்து இராப் பத்து படித்து முடித்தேன். குறுநாவல்களைப் படிப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. அதிலும் இது போன்ற கதைகள் தனிரகம். ஒரு படம் பார்த்த மாதிரி விறுவிறுவென்று நகரும் கதை மும்பையின் மூன்று மாந்தர்களின் 12 மணிநேர வாழ்வியலைச் சொல்லுகிறது. பத்திலிருந்து பத்து வரை! இரா. முருகன் தளத்திலேயே வாசிக்கக் கிடைக்கிறது.

அதன் பின் சுஜாதா எழுதிய ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் படித்து முடித்தேன். அப்படியென்னதான் அந்த கதைகளில் இருக்கிறது? இப்படி கொண்டாடுகிறார்கள்.. என்றொரு தோழர் கேட்டிருந்தார். சுஜாதா எழுதியதில் பலருக்கும் பளிச்சென்று நினைவில் வரும் கதைகள் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தான்! நான் மட்டும் படிக்காமல் என்ன?

சரியாக சுஜாதா இறந்த ஒரு வாரத்தில் ஆனந்த விகடனில் பேப்பரில் பேர் கதை வந்தது. அப்போதே கேவி-யும், ரங்கு கடையும் எனக்குள் வந்துவிட்டது. மீண்டுமொரு முறை சாகா வரம் பெற்றவர்களாய் அந்த கதாபாத்திரங்கள் வந்து சென்றனர். தங்கைக்கும் சுஜாதாவுக்குமான புரிதல்கள், பாட்டியின் வளர்ப்பு என ஆங்காங்கே தொட்டுக் காட்டியிருந்தாலும் உண்மைத்தன்மை குறித்த ஐயம் எழுதுகிறது. அதையும் சுஜாதாவே இப்படிச் சொல்லுகிறார். 

ஏறக்குறைய ஜீனியஸ், கிருஷ்ண லீலா, பாம்பு, மறு, எதிர் வீடு, பேப்பரில் பேர், உள்பட சில கதைகள் ரொம்பவே பிடித்திருந்தது. மாஞ்சு கதை மட்டும் கிடைக்கவில்லை. எங்கோ தவற விட்டுவிட்டேன்…

 அடுத்ததாக நெம்பர் 40 ரெட்டைத் தெரு படிக்க விருப்பம். இரா. முருகன் எழுதிய இப்புத்தகம் இரண்டாண்டுகளுக்கு முன்பே படித்திருக்க வேண்டியது. தவறிவிட்டது. அதற்கு கிரேஸி மோகன் முன்னுரை எழுதியிருப்பார். இன்னும் பல வரிகள் நினைவில் இருக்கிறது.

தாயைப் போல பிள்ளை என்பதைப் போல அசப்புல பாத்தா ஸ்ரீரங்கத்து தேவதைகளும், ரெட்டைத் தெருவும் ஒண்ணு!

ஒரு அத்தியாயம் கூட படித்ததாக ஞாபகம். ஆனாலும் முதலில் இருந்து படிக்க விருப்பம்… பார்க்கலாம்!!

Advertisements

கதை படி

கதைகளைப் படிப்பதில் அதிக ஆர்வம் எப்போதுமே பலருக்கும் உண்டு. சிலருக்கு கேட்பதில், சிலருக்கு எழுதுவதில் கூட ஆர்வம் இருக்கலாம். இங்கு நான் பகிரப்போவது கதைகளைப் பற்றி. கதை என்றால் இங்கே சிறுகதை.

கதைகள் வெறும் கதைகள் அல்ல.

கதைகள் வெறும் கதைகள் அல்ல.

வாசிக்க வாசிக்கத்தான் எழுதுவதற்கான உத்வேகம் வருமென்று நம்புகிறேன். கடந்த சில மாதங்களாகவே சிறுகதைகளைத் தேடித்தேடி படிக்க முயற்சித்தேன். எப்படியெல்லாம் கட்டமைக்கிறார்கள்? கரு எப்படி எடுக்கிறார்கள்? வாக்கிய அமைப்பு, சொற்களின் தேர்வு என கொஞ்சம் நுண்ணியமாகவும் ஆராய நேரம் கிட்டியது. கதைகள் வெறும் கதைகள் அல்ல. அவை யாவும் ஏதோ ஒரு உணர்வின் வெளிப்பாடுகள், வெளியிடாத நினைவின் சிதறல்கள்.

இதற்காக  சிறிய/பெரிய எழுத்தாளர்கள் என்கிற பாகுபாடின்றி சில கதைகள் படித்தேன். அப்படி படித்த சிறுகதைகளில் ஒன்று சிவசங்கரி அவர்கள் எழுதிய இராட்சஸர்கள் என்கிற கதையும் ஒன்று. படித்த மாத்திரத்தில் ஏதோ ஓரு உணர்வு முதுகை முன்னிருந்து தள்ளியது.

தேவதைகளுக்கும், இராட்சஸர்களுக்கும் இடையே நடக்கும் கதை. யார் தேவதை, இராட்சஸர் என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எழுத்தாளர் என்பவருக்கு சமூகத்தின் மீதான அக்கறையும், அதற்கான பொறுப்புணர்ச்சியும் எப்படி இருக்கிறது என்பதை அத்தனை துல்லியமாக எடுத்துக்காட்டியது அச்சிறுகதை. நம் நாட்டில் சமீபகாலமாக தொடர்ந்து வரும் சீரழிவை எவ்வித தயக்கமுமின்றி வார்த்தைகளில் இயம்புகிறது கதை.

நான் இதுதான் சிறுகதை என்று சொல்ல வரவில்லை. இது மிகமிகச் சிறப்பான சிறுகதை என்றும் சொல்ல வரவில்லை. இதைப் படிக்கையில் ஏதோ உணர்வு உந்தித் தள்ளியது. முகத்தில் அடித்தாற்போல் உண்மையை எழுதவும் ஒரு வலிமை வேண்டும் என்று தோன்றியது.

அவரது வலைதளத்தில் தேடியதில் கதை கிடைக்கவில்லை. இணையத்திலும் நான் தேடிய அளவில் கிடைக்கவில்லை. இந்த சிறுகதை  ஜூன் மூன்றாம் வாரம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் சிறுகதைப் பகுதியில் படித்தேன். அதில் படித்தவர்கள் தங்களது கருத்துக்களை இங்கேயும் பகிர்ந்தால் நலம்.  மற்றபடி மற்றவர்கள் எங்காவது கிடைத்தால் படிக்கலாம்.

எஸ்.இராமகிருஷ்ணன் எழுதிய காந்தியோடு பேசுவேன் கதையும் இதே போல் இன்னொரு பரிமாணத்தை முன்னெடுத்தாலும் எனக்கொரு உணர்வு வரவில்லை. சிறுகதை என்பது படிக்கிற வரையிலாவது மனதை ஆக்கிரமிக்கும்படியாக இருக்க வேண்டும் என்று ஒரு விருப்பம். சில இடங்களில் உரையாடல்களும், கதையை நகர்த்தியிருந்த விதமும் அருமையாக இருந்தது. எனவே இது மோசமான சிறுகதையில்லை. மற்றவர்களுக்குப் பிடிக்கலாம்.

புத்தக விற்பனை நிலையம் ஒன்றில், லா.ச.ரா அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றைக் கண்டேன். விலை 400. திக்கென்றிருந்தது. என்னிடம் அப்போது இருந்ததே 400+ சில சில்லறைகளும்தான். பின்னட்டையில் சுஜாதாவின் அறிமுகத்தை எழுதியிருந்தார்கள். கடைசி வரிகளில் கண்கள் நின்றன.

லா.ச.ரா வின் சிறுகதைகளைப் படிக்காதவன் சிறுகதைகளை விமர்சனம் செய்ய லாயக்கற்றவன்.

எப்பாடுபட்டாவது சின்னதாக விலை 300-க்குள்ளாகவாவது லா.ச.ரா சிறுகதை புத்தகம் ஒன்றை வாங்கிவிடலாம் என்கிற ஆர்வத்தில் கடையை மூன்று முறை சுற்றிக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு புத்தகமாகப் புரட்டி புரட்டி கடைசியில் ’கேரளத்தில் எங்கோ’ குறுநாவலை ( 70 ரூபாய் ) வாங்கினேன். இதோடு சேர்த்து வாங்கிய இன்னொரு நாவல் தோட்டியின் மகன். இரண்டையும் படித்து முடித்தாயிற்று. அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

கேரளத்தில் எங்கோ நூல் நாட்டுடைமை ஆக்கப்பட்டிருந்தாலும், அதன் சிறப்பான பிரதி இணையத்தில் இல்லை. ஒரு ஸ்கேன் செய்யப்பட்ட வெர்சன் இங்கே இருக்கிறது.

இப்பதிவில் தவறுகள் ஏதும் இருப்பின் பொறுத்தருள்க. எனது தனிப்பட்ட கருத்துக்களே இவை. இது வேறு யாருடைய கருத்தையும் பிரதிபலிக்கவில்லை.

சுஜாதாவின் நினைவு

இந்த நாளில் நான் ஒரு பதிவு எழுதுவேன் என சில தினங்களுக்கு முன்புவரை எண்ணமே இல்லை. ஆனாலும் இந்த நாளின் ஒரு நினைவை நான் கேள்விப்பட்ட மறுநொடியே எழுதியாக வேண்டும் என தீர்மானித்து எழுதியிருக்கிறேன்.

இந்தப் பதிவின் துவக்கம் எனது  பள்ளிகாலத்தில்  இருந்து துவங்குகிறது. நண்பன் ஆண்டனிதான் அந்த புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தான். அன்று வகுப்புகள் ஏதும் நடக்காது என அறிந்தபடியால் நானும் என்ன புத்தகம் என விசாரித்தேன். அவனுக்கும் என்னை நன்றாகத் தெரிதிருந்தபடியால் இது சுஜாதா எழுதிய புத்தகம் எனச் சொல்லி அந்த நூலைக் காண்பித்தான்.

சுஜாதாவை அவ்வப்போது ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன். சில கேள்வி-பதில் பகுதிகள், கட்டுரைகள் அவ்வளவுதான் அப்போது எனக்குப் பரிச்சயம். பின்னாட்களில் அவர் குறித்து அறிந்த தகவல்கள் எல்லாமே பிரமிப்பாகவே இருந்தன.

சுஜாதா-தான் முதன்முதலில் கணினியில் சிறுகதை எழுதிய (டைப்) எழுத்தாளர்.

இன்று நாம் பயன்படுத்துகிற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வடிவமைப்பாளர்……இன்னும் நிறைய சொல்லலாம்.

எந்த நூலில் படித்தேன் என்கிற நினைவு எனக்கு இல்லை. இருந்தாலும் இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. சுஜாதாவால் குவாண்டம் பிஸிக்ஸ் பற்றியும் எழுதமுடியும். வஸந்த்-கணேஷ் வகையில் கதைகளும் எழுத முடியும்.

சிறிய நினைவு

சிறிய நினைவு

நான் அறிந்தவரையில் அவர் குறிப்பிட்ட வாசகர்களுக்காக எழுதியதில்லை. அவர் பல பிரிவுகளில் எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றுக்குமே தனிப்பட்ட ரசிகர்வட்ட்த்தினைப் பெற்றிருக்கிறார். நவீன தமிழ் எழுத்தாளர்களுக்கான இருப்பை உறுதி செய்தவர்களுள் இவரும் ஒருவர்.

வஸந்த்-கணேஷ் வகையில் எக்கசக்கமான துப்பறியும் கதைகளை எழுதியதன் மூலமாக தமிழில் ஒரு துப்பறியும் கதைகளுக்கான இடைவெளியை நிரப்பியிருக்கிறார். இப்போதைக்கு ராஜேஷ்குமார் மட்டுமே தமிழில் எழுதிவருகிறார்.

இவர் எழுதிய நகரம் சிறுகதை தமிழின் சிறந்த 10 சிறுகதைகளுள் ஒன்று. சுஜாதாவைப் பற்றி ஏதாவதொன்றை நான் படித்துக் கொண்டேதான் இருக்கிறேன். அதுவும் அவரின் மறைவிற்குப் பின் ஏராளமான தகவல்கள் வாசிக்கக் கிடைத்தன.

எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் புகழ்பெற்றிருந்த சமயத்தில்தான் இவரும் எழுதத் துவங்கியிருக்கிறார். எனவே பெயர்க்குழப்பத்தைத் தவிர்க்க தனது மனைவி பெயரில் எழுதத் துவங்கியுள்ளார். இவருக்குப் பின் இப்படி பெண்கள் பெயர்களைப் புனைப்பெயராக வைத்து நிறைய பேர் எழுதியிருக்கிறார்களாம்.

சுஜாதா ஒருமுறை ஒரு நண்பருக்கு கதை எழுதித் தந்திருக்கிறார். அவர் இவர்தான் எழுதியது எனக் கூறாமல் பாராட்டுகளை வாங்க, சுஜாதா அதன்பின் தனியே அவரே எழுதத் துவங்கியதாகவும் படித்திருக்கிறேன். சொந்த ஊரான ஸ்ரீரங்கம் மேல் விருப்பம் அதிகமாய் வைத்திருப்பாராம். சொந்த லேப்டாப்பில் ஸ்ரீரங்கத்து இராஜகோபுரம்தான் வால்பேப்பர்!

அவரின் நூல்களை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் படிக்க விருப்பம். கம்ப்யூட்டர் கிராமம் என்றொரு நூலை ஒரே நாளில் படித்தேன். சில சிறுகதைகள் படித்திருக்கிறேன். அதைத்தவிர முன் சொன்ன நூல் முக்கியமானது.

ஆண்டனியும் நானும் படித்துக் கொண்டிருந்த நூல் “மேகத்தைத் துரத்தினவன்” 1985-ல் எழுதியது. அதன் கிளைமாக்ஸ் மட்டும் என்னால் அப்போது படிக்க முடியாமல் போய்விட்டது. பிறகு ஆண்டனியிடம் கேட்டு சற்றே ஆறுதலடைந்தேன். 2 ஆண்டுகளுக்கு முன் நினைவு வந்து ஒரு புத்தகக் கண்காட்சியில்  அலைந்து, திரிந்து வதங்கி ஒரு வழியாக வாங்கினேன். அடுத்த நாளே முழுக்கதையையும் படித்து ஆனந்தம் அடைந்தேன்.

தொடர்ந்து நண்பர்களின் வாசிப்பிற்காக பகிர்ந்தேன். அதில் யாரோ ஒரு நபர் புத்தகத்தைத் திருப்பி இப்பதிவு பதிவாகி, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இக்கணம் வரையில் தரவில்லை. இனியும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இல்லை.

கிழக்கு பதிப்பகம் ’கொஞ்சம் அதிக’ விலையில் சுஜாதாவின் புத்தகங்களை விற்கிறது. விசா பதிப்பகம் மலிவு விலையில் சாதாரண தரத்தில் விற்கிறார்கள். இதுதவிர அவரின் நூல்களை மின்வடிவில் காலத்திற்கும் அழியாதபடிக்கு இணையத்தில் வைத்திருக்கிறார்கள்.

மொத்தமாக 100-க்கும் அதிகமான நாவல்களையும், 250-க்கும் அதிகமான சிறுகதைகளையும், சில அறிவியல் நூல்களையும் எழுதிருக்கிறார். இதுதவிர கட்டுரைகள், கேள்வி-பதில்கள் தனி…

நூலகங்களில் அடிக்கடி அவரின் நூல்களைக் கடக்க நேரிடும். இப்போதெல்லாம் படிப்பதற்கான சூழல் குறைகிறது. ஆனால் ஆர்வம் முன்னெப்பொழுதும் இல்லாதபடிக்கு அதிகமாக இருக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது.

உன்னால் இலக்கியம் படைக்க முடியாது  என்பதுதான் சுஜாதா அதிகம் எதிர்கொண்ட கருத்து. அவருக்கான ரசிகர்களுக்காகத்தான் அவர் எழுதியிருக்கிறார்.

வாசிப்பின் மகத்துவம் பெறத் துடிக்கிற காரணத்தால் இப்பதிவு இங்கே நிறைவுறுகிறது. பதிவில் தவறுகள் இருந்தால் கூறலாம்.

பிப்ரவரி 27 – (2008) அமரர். எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாள்.