சிறுகதைகள்

தீராக் கனா – 3

#03

விடியலுக்கு முன்னரே பெங்களூருவுக்குள் வண்டி நுழைந்து விட்டது. ஒவ்வொரு நிறுத்தமாக நின்று நின்று ஊர்ந்தது. எங்கெங்கோ நின்று நின்று வந்தாலும், பின்னர் வேகம் கூட்டி புலியின் பாய்ச்சலில் ஓசூர் வரைக்கும் விரையும் வண்டிகள் அதற்குப் பிறகு அவ்வப்போது உறுமிக் கொண்டு நகரும். பெங்களூருவிற்குள் அப்படித்தான்.

விடிகாலையில் பெங்களூருவிற்குள் நுழைகையில் வீசுகிற குளிர்காற்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. எல்லோரும் அதை அனுபவிக்கத் தயாரில்லை அல்லது அவரவர் அதனை அனுபவிக்கும் முறை வித்தியாசமானது.

எனக்கும் இன்றைக்கு அப்படியில்லை. குளிர்காற்று பற்றிய நினைப்புகளைப் புறந்தள்ளியாயிற்று.

எங்கே இறங்க வேண்டும்? எங்கே செல்ல வேண்டும்? எல்லாம் தயார்தான். இறங்கிய பின் இன்னொரு பேருந்து பிடித்து, வேண்டிய நிறுத்தத்தில் இறங்கி, சில தொலைவு நடந்து செல்கையில் விடியல் முடிந்து வெளிச்சம் பரப்பியது சூரியன்.

நேராக நானியின் அறைக்கதவைத் தட்டினேன்.

முன்னமே பதிந்து வைத்த அறை. ஏற்கனவே நான் தங்கி, இப்போது மீண்டும் தங்குவதற்கு அதே அறைக்கு வந்துள்ளேன்.

எப்புடு இண்டர்வ்யூ?

வெட்னஸ்டே.

இன்றைக்கு தேதி வெள்ளிதான். ஆகவே அவன் அதிர்ச்சியாகி, ’ஏன் இவ்ளோ சீக்கிரம்?’ – தெலுங்கில் கேட்டான்.

நேர்காணலுக்கு தயார் ஆக. – ஆங்கிலத்தில் நான் சொன்னேன். தூக்கக் கலக்கத்திலும் கொஞ்சமாய் சிரித்து விட்டான்.

‘தூங்குறியா?’

‘இல்லடா’

 

அவன் தூங்கப் போனான். நான் என் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைத்தேன். பிறகு கொஞ்சம் நிதானித்துக் கொண்டேன். பல நூறு கி.மீகள் பயணம் செய்து இவ்விடம் வந்துள்ளேன். களைப்பு என்பதைத் தாண்டி, அடுத்து என்ன என்கிற கேள்வியும் உள்ளுக்குள் நின்றது. மூச்சினை ஒருமுறை நிறுத்தி வைத்து, சற்று நேரம் தள்ளி வெளியேற்றினேன்.

குளித்து முடித்து, காலை உணவு முடிந்தபின் ஜாவா புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஏதோ நினைவு தாக்க ஸர்வ்லெட் பற்றி படிக்க ஆரம்பித்தேன். நானி என்னமோ கிண்டலாகச் சொன்னான்.

இன்னும் நான்கைந்து நாட்கள் உள்ளன அல்லவா! பெரும்பாலும் தேர்வுக்கு முதல்நாள் படிக்கிறவன்தான் தேர்வுகளை சுலவில் எதிர்கொண்டு அதை வென்றும் விடுகிறான். நமக்குக் கிடைக்கிற பெரும்பாலான புள்ளி விபரங்களும் அதையேதான் சொல்கின்றன.

கூகுள் உதவியால் சில பல பக்கங்களுக்கு நேர்காணலுக்குத் தேவையான தகவல்களை திரட்டிக் கொண்டேன்.

நாட்கள் ஓடியதே தெரியவில்லை என்று யாரேனும் என்னிடம் சொன்னால் உனக்கென்ன பார்வைக் கோளாறா? என்று கேட்டு விடுவேன். என்னைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விஷயம் இருக்கிறது. நமக்கு முக்கியமானது மட்டும் நினைவில் நிற்கிறது அவ்வளவே.

ஒரு நாள் மாலையில் செடி, கொடிகளை, பூக்களை, கிளைகளை, இலைகளைத் தொட்டுத் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னதுதான் என விளக்க முடியாத என்னமோ ஒரு நினைப்பு. பச்சை வண்ணம் அத்தனை ஈர்க்கிறது. சிவப்பு வண்ண பூ ஒன்று யாரும் சீண்டாமல் தரையில் வீழ்ந்தது. கையில் எடுத்து அதன் உட்புறம், வெளிப்புறம் என உற்று நோக்கினேன். ஒன்றும் பிடிபடவில்லை. தாவரவியல் படித்திருக்கலாம் என்று தோன்றியது..

பள்ளிப்படிப்பு படிக்கிற காலத்தில் தாவரவியல் படிக்க வாய்ப்பிருந்தும் வீணாக்கியவன் அதையெல்லாம் எண்ணலாமா என்றொரு எண்ணம் தோன்றியது. தாவரவியல் படித்தவனெல்லாம் பூக்களில் என்ன இருக்கிறது என எப்போது உற்று நோக்குகிறானா? கண்டிப்பாக கிடையாது என ஒரு எதிர் எண்ணம்.

இவைகளோடு விளையாடியதால், விரலெல்லாம் பச்சை வாசம். வாசம் போக்க சோப்பு கொண்டு கழுவி மீண்டும் முகர்ந்தேன். கை முழுக்க சோப்பு வாசம்.

ஒரு வாசம் இன்னொன்றின் மேல் அமர்கிறது. அதை மறைக்கிறது. ஆகப்பெரிய மாற்றமில்லை. ஒன்றுக்கு பதில் இன்னொன்று. ஆனால் சோப்பு வாசம் ஒரு திருப்தி தருகிறது. அது செயற்கையானதாக இருந்த போதிலும். அது தற்காலிகமாகவே இருந்த போதிலும்.

இனி எப்போது பசுமையை நோக்கினாலும், சோப்பு வாசமும் எனக்குத் தோன்றிவிடும். பச்சை வாசமும் மூக்கிலேறும். நினைவு அத்தனை நேர்த்தியாக பின்னே சென்று வரும்.

ஒவ்வொரு நாளுக்கும் நமக்கு ஏதேனும் ஒரு நினைவு அமைந்து விடுவதே ஒரு இலக்காக மாறினால் என்ன? கடினம்தான். ஆனால் அப்படி மாறிவிட்டால் வாழ்வு இனிக்குமே! வேறென்ன வாழ்வின் பலன்?

செவ்வாய்க்கிழமை இரவில் மறுநாள் செல்ல வேண்டிய பயணம் குறித்த தகவல்களை நண்பர்கள் மூலம் பெற்றேன். கூகுளே! வழி காட்டு எனக்கு

வழியில் சந்தித்த பலரிடமும் வழி கேட்டு கேட்டு கேட்டு ஒரு வழியாக நேர்காணல் நடக்கவிருக்கும் அலுவலகம் சென்றுவிட்டேன்.

நிறுவனத்தின் வெளித் தோற்றம் முதல் பார்வையில் அசரடித்தது. சுற்றிலும் கண்ணாடியால் எதிரொலிக்கப்பட்ட காட்சிகள் கண்களை என்னமோ செய்தன. விந்தையான அல்லது வித்தியாசமான வடிவமைப்பில் அங்கே எக்கச்சக்கமான நிறுவனங்கள் இருந்தன. இரு வழிச்சாலைகள், பூங்கா மாதிரியான அமைப்பு, எதையும் கண்டுகொள்ளாதபடிக்கு தங்களுக்குள் பேசிக் கொண்டோ, அமைதியாக நடந்து சென்ற பிற மனிதர்கள் என தனி உலகமே வடிவமைக்கப்பட்டது போலான பிரம்மையே தோன்றியது.

நண்பர்களோடு ஒருமுறை ஒரு மாலுக்குச் சென்றிருக்கையில் அதன் உள் தோற்றம் பற்றி நண்பரொருவர் சொன்னார். ’ஏதோ புது வீதிக்கு வந்தது போலிருக்கே!’

நேர்த்தியான நகர அமைப்புகளைப் போலவே இப்போதெல்லாம் ஒவ்வொரு கட்டிடங்களும் கட்டப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சி என்று ஒற்றை பதிலில் திருப்தி கொள்ளவோ, இதையெல்லாம் கண்டவுடன் மெய் மறக்கவோ நான் ஆளில்லை. இப்போது அதை சிந்திக்க நேரமும் இல்லை.

நிறுவனத்தில் சில சோதனைகளைச் செய்தார்கள்.

நான்தான் நானா? வேறொருவனா? என சோதித்தார்கள். தத்துவார்த்தமாக அல்ல தர்க்கமாக. மகிழ்ச்சி.

அடுத்து என்ன?

இத்தனை சோதனைகளுக்கும் ஊடே, கண்கள் அந்த கான்டாக்ட் பெர்சனைத் தேடின. காணவே இல்லை. அவர் பெயரும் கூட யாரும் உச்சரிக்கவில்லை.

பலகட்ட அடையாளப் பரிசோதனைகளுக்குப் பிறகு வரவேற்பறையை அடைந்தேன்.

ப்ளீஸ் வெயிட் இன் தட் ரூம் சார்.

எனக்கு அதிர்ச்சி பலமாக இருந்தது. என்னைக் காட்டிலும் வயதில் பல ஆண்டுகள் மூத்தவர் என்னை சார் என்று சொன்னதற்கல்ல. என் கனவில் வந்த மாதிரியே சுற்றிலும் அறைகள். ஒரே ஒரு மாற்றம் இங்கே நான்கு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு மேசையும், இரு நாற்காலிகளுமாய் இருந்தன. தவிர்த்து இதர பொருட்களும் உள்ளிருந்தன.

நான் அமர்ந்திருந்த இடமும் குளுமையாக இருந்தது. ஏசி எங்கிருக்கிறது என கண்கள் சில நொடிகளில் தேடிக் கண்டன. முதல் மூன்று வரிசைகளில் இடமே இல்லை. நான்காவது வரிசைதான் கிடைத்தது. இருக்கையில் சரியாக அமர்ந்த பின் கொஞ்சம் நிதானித்தேன்.

தூரத்தில் என் வயதுக்காரர்கள் சிலர் கலகலப்பாக என்னமோ உரையாடிக் கொண்டிருந்தார்கள். என் கணிப்பு சரியாக இருக்குமானால் அவர்கள் இந்நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள். அடையாள அட்டையை கவனித்ததும் கணிப்பு உறுதியானது. அழைப்பிற்காக நான் காத்திருந்தேன்.

அதே போல் அழைப்பு வந்தது.

‘செழியன்.’

இம்முறை தாமதிக்காமல் எழுந்து அறைக்குள் நுழைந்துவிட்டேன்.

’ட்டெல் மீ அபவுட் யுவர்செல்ஃப்?’

பழக்கப்பட்ட கேள்வி. முன் தயாரிப்பில் இருந்த பதிலை அட்சரம் பிசகாமல் சொன்னேன். ப்ராஜெக்ட் குறித்து கேட்டார். அதுவும் அப்படியே. அடுத்து ஸர்வ்லெட். அதுவும் நல்லபடியாக. ஒவ்வொரு கணமும் கவனமாக கடந்தது. ஒவ்வொரு கேள்வியும் நிதானித்து வந்தது.

என்னளவில் எதிர்பார்த்தபடியே நல்லபடியாக நேர்காணல் முடிந்தது. மதிய வேளை நிதானமாக கடந்துகொண்டிருந்தது. இனி நடக்க வேண்டியதுதான். நடப்பதற்கு மனம் அஞ்சியதே இல்லை. மூன்று கி.மீகள் நடந்தாயிற்று. காலையிலிருந்து உண்ணவில்லை. வெறும் தண்ணீர்தான் உள்ளே இருந்தது. அதுவும் வேர்வையாக வெளியேறிக் கொண்டிருந்தது. ஏதாவது சாப்பிட்டால் தகும்.

ஆனாலும் ஏதோ ஒரு எண்ணம் உள்ளுக்குள் நடக்கச் சொல்லி வற்புறுத்தியது. கால்கள் இரண்டும் எங்கேனும் கொஞ்ச நேரம் அமர்ந்தால் போதும் என்று கெஞ்சினாலும், கணுக்காலுக்கும், முழங்காலுக்கும் இடையே ஓர் வலி மெல்ல உருவெடுத்து அச்சுறுத்திய போதும் நான் நடந்து கொண்டே இருந்தேன்.

சற்று நேரம் கழித்து, வீட்டிற்கு அழைத்து தகவல் சொன்னேன். ’நேர்காணல் நல்லபடியாக முடிந்துவிட்டது’.

நேர்காணல் முடிவு உடனடியாக வரவில்லை. விரைவில் மெயில் அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிதானமாக அனுப்பட்டுமே! என்ன கெட்டு விட்டது?

நான் எப்படி பதிலளித்தேன் என்பதை இதற்கு முன் பங்கேற்ற எத்தனையோ நேர்காணல்களின் முடிவில் யோசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் மற்றவர்கள் எப்படி பதிலளித்திருப்பார்கள் என யோசித்தேன். வயிறு பசித்தும் கூட உண்ண மனமே வரவில்லை. இது விடை தெரியாத கேள்வி ஆயிற்றே.

Advertisements

நெல்லி மரம் [சிறுகதை]

எங்கள் வீட்டின் கொல்லைப்புறம் நான் சிறுவனாக இருந்த காலத்தில் மரங்களும், செடிகளும் அடர்ந்திருந்தது. சமயங்களில் ஏதாவதொரு ஓணாணோ, வேறேதோ நான் பெயரறியா சிறு உயிரினமோ சட்டென எங்காவது இலைகளின் ஊடே அல்லது காய்ந்த சருகுகளின் ஊடே தாவியோடும்.  இந்த நகரிலேயே கொல்லை இருக்கும் வெகு சொற்பமான வீடுகளுள் எங்கள் வீடும் ஒன்று. அப்படியே கொல்லை இருக்கும் சொற்பமான வீடுகளில் கூட எங்கள் வீட்டைப் போல அடர்த்தியாக மரங்களோ, பூச்செடிகளோ இருந்திருக்காது.

வீட்டின் கொல்லை முகப்பிலிருந்த தென்னை அத்தனை செழிப்பில்லாமல் கிடக்கும். அதில் இளநீர் என்கிற அற்புதம் நாகலிங்கப்பூ, குறிஞ்சிப்பூ மாதிரி எப்போதேனும் வருடங்கள் சில கழிந்தபின் வரும். அதனருகில் இருந்த கொய்யா மரம் ஒவ்வொரு பருவத்திலும் சுவை மிகுந்த கொய்யாக்கனிகள் தந்திடும். ஆகவே எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கொய்யா மரம் மேல் ரொம்பவே விருப்பமுண்டு. விருந்தினர்கள் யார் வந்தாலும் பருவ காலத்தில் அவர்கள் கையோ, பையோ நிரம்ப கொய்யாக்கனிகள் கிடைக்கும்.

எங்கள் வீட்டின் தளம் வித்தியாசமான அமைப்பிலானது. திரையரங்கின் இருக்கை அமைப்புகளைப் போல வீட்டைத் தாண்டியதும் படிப்படியாக கொல்லைப்புறம் படியிறங்கும். தென்னையும், கொய்யாவும் ஒரே சமதளத்தில் இருக்கும். அதைத்தாண்டி சற்று இறக்கத்தில் சில பூச்செடிகள் அலங்கரிக்கும். அதன் இறுதியில் முருங்கை மரமொன்றும், மாமரமொன்றும் உயர்ந்து நிற்கும். பூக்களின் வரிசையில் பக்கவாட்டில் சீத்தாப்பழ மரமும், பப்பாளி மரமும் இருக்கும். அதைத்தாண்டி சற்று தள்ளி பள்ளமான இன்னொரு பகுதி வெகு காலம் ஏதும் நடப்படாமலே இருந்தது.

சில காலம் தள்ளி, அப்பா ஒரு மரக்கன்றைக் கொண்டு வந்தார். பார்ப்பதற்கு புளியங்கன்றைப் போல இருந்தது. நான் முழுமையான நகரச் சிறுவனாக மாறிக்கொண்டிருந்த காலம் அது. அப்பாவிடம் கேட்டேன். ‘ஏம்பா அது புளிய மரமா?’

‘இல்லடா. இது நெல்லிக்கன்னு.’

’இல்லப்பா.. நான் நெல்லி மரம் பார்த்திருக்கேன்பா. இலை கொஞ்சம் பெருசா இருக்கும்’.

’அது அர நெல்லிடா! இது முழு நெல்லி’

ஓ! என வியந்தேன்.

நடப்படாமல் கிடந்த வெறும் நிலத்தில் கொஞ்சமாய் இடம் எடுத்துக்கொண்டது அந்த நெல்லிக் கன்று. அத்தோடு அதை நான் கிட்டத்தட்ட மறந்தே விட்டேன். தென்னையும், கொய்யாவும் குறிப்பிட்ட இடைவெளியில் வீட்டருகே இருப்பதால் மதிய வேளைகளுக்கான நிழலும் கிடைத்து விடும். மாமரத்தருகே போனால் அதன் அடர்த்தியினால் ஏதேனும் பூச்சியோ, ஓணானோ தாவும். பூச்செடிகளுக்கும் எனக்கும் துளி சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என்பது கொள்கை முடிவு.

இத்தனை ஒத்திவைப்புகள் இருப்பதால், நெல்லி மரத்தருகே விளையாட்டாகக் கூட போகாமல் இருந்தேன். அதற்கொரு நாளும் வந்தது.

விளையாட்டாக போகாமலிருந்த நான் விளையாட்டுக்காக போனபோது பார்த்தேன். நெல்லிக் கன்று நட்டது நட்டபடி அப்படியே இருந்தாற்போல இருந்தது.

இது வளர்கிறதா இல்லையா என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. ஆனாலும் அதில் அத்தனை சுவாரசியம் காட்டாமல் நான் விளையாடப் போனேன்.

எப்போதேனும் பொழுதுபோகாத காலங்களில் மர இலைகளை வைத்து ஏதேனும் செய்துகொண்டிருப்பேன். ஏதேனும் என்றால் ஏதும் கலைப்பொருளோ, வீட்டு உபயோகப் பொருளோ அல்ல. விளையாட்டாகவே மர இலைகளைப் பிய்த்து அதை கிழித்து வைப்பேன். தென்னை இலைகளைப் பொறுத்தமட்டில் அதுவாக கீழே விழுந்தாலோ, யாரேனும் மரம் ஏறி இறங்குகையில் தவறுதலாக கீழே விழும் ஒன்றிரண்டு கீற்றுகளே அதிகம். சில பல வருட இடைவெளிகளில் ஏதேனும் கிளையையே வெட்ட நேர்ந்தால் அன்றைக்கு சாகவாசமாக கீற்றைக் கிழிக்க இயலாமல் போய்விடும்.

ஆகவே எனக்கு விருப்பமான மரம் கொய்யாவாக இருந்தது. ஏற இறங்க எளிதான வடிவமைப்பில் வளர்ந்து செழித்த மரம் அது. இலைகளும் கையடக்கமாக இருக்கும். விளையாட்டாக எத்தனையோ இலைகளை பிய்த்து அதை நுண்ணியமாக கீறி, கிழித்துப் பார்ப்பேன். கிழித்த பிறகு கையில் இலை வெகு நேரம் தங்காது. தூக்கி எறிந்து விடுவேன். அநேகமாக எங்கள் வீட்டு மரங்களில் எனக்கு விருப்பமானதாகவும் வசதியானதாகவும் கொய்யா மரமே இருந்தது. வெகு மாதங்கள் கழித்து கொய்யா மர இலைகளின் பின்புறம் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு வெண்மை பூசிக் கிடந்தது. இலைகளை தொட்டாலே அது ஒருவகை ஒவ்வாமையைக் கொண்டு வருவதாய் தோன்றியது. அதன் பின் கொய்யா மரம் அத்தனை இன்பம் தரவில்லை. பூச்சிகளை ஒழிக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அது ஏதும் பயனில்லை.

இத்தனை காலமும் கழிந்த பிறகு, ஒரு எதேச்சையான மாலை நேரத்தில் நான் நெல்லி மரத்தைப் பார்த்தேன். சற்றே கொஞ்சம் உயரமாக வளர்ந்திருந்தது. இலைகள் பொடிசாக இருந்ததால் அதை அதிகம் கவனிக்கவே இல்லை. ஆனாலும் மாதக்கணக்கில் வளராமல் கிடந்த அந்த நெல்லி மரத்தின் மீது இனம் புரியாத வெறுப்பு வந்தது.

எப்போதேனும் மரங்களுக்கோ, செடிகளுக்கோ நான் நீரூற்றுகையில் வேண்டுமென்றே நெல்லிக்கு ஊற்றாமல் நகர்வதோ, அல்லது ஒரே முறையில் செடிக்கு மூச்சு திணறுமளவு நீரை அழுத்தமாக கொட்டிவிட்டு நகர்வதோ உண்டு. எப்படியாவது அந்த நெல்லிக் கன்று வளராமல் போனால் நல்லதெனத் தோன்றியது. அதன்பின்பு நான் நெல்லிக்கன்றை பார்ப்பதையே தவிர்த்தேன்.

சில பல வருடங்கள் கழிந்த பின்பு நானும் பதின்பருவம் வந்த காலத்தில் எங்கள் வீட்டைப் புனரமைக்க அப்பா திட்டமிட்டார். நகரின் பெரும்பான்மையான வீடுகளுள் நாங்களும் ஒன்றென மாறினோம். கொல்லைப்புறத்தின் பெரும்பகுதி மாறுதலுக்கு உள்ளானது. தென்னை மரமும், கொய்யா மரமும் தன் நிலத்தை இழந்து வெளியேறின. மாமரம் அதற்கு முன்பே எதிர்பாராமல் தன் வாழ்நாளை முடித்துக் கொண்டது. பல பூச்செடிகளும், சில மரங்களும் இதில் பிழைத்துக் கொண்டன.

ஆச்சர்யமாக நெல்லி மரம் தப்பிப் பிழைத்தது. ஆனாலும் கிட்டத்தட்ட அபாய கட்டத்தில்தான் கிடந்தது. நெல்லி மரம் இருந்த பகுதி வீட்டுக் கொல்லையின் மிகத் தாழ்வான நிலம். புனரமைப்பின் முதல் திட்டமே, கொல்லையை வீட்டுத் தளத்திற்கு நிகரான சமநிலைக்கு கொண்டு வருவதுதான். அவ்வாறாக மேடாக்கி சமப்படுத்திய பின்பு நெல்லி மரம் ஏதோ சின்னதாக மண்ணிலிருந்து தென்பட்டது. அநேகமாக இன்னும் சில வாரங்கள் போக்கு காட்டி மறையக்கூடும் என்று நான் எண்ணினேன்.

வீடு கிட்டத்தட்ட புதிதாகி விட்டது. கொஞ்சம் விரிவடைந்தும் விட்டது. கொல்லைப்புறம்தான் இருந்த தடமே இல்லாமல் கண் முன் அழிந்து போயிற்று. அதை மீட்டெடுக்க சீத்தாப்பழ மரமும், பப்பாளி மரமும் தங்களாலான வளர்ச்சி எடுத்தன. அம்மா பூச்செடிகள் வைக்க விருப்பமெடுத்துக் கொண்டார். கனகாம்பரமும், செம்பருத்தியும் செம்மண்ணில் புதிதாய் வளர முனைப்பெடுத்தன.

சில மாதங்களில் ஆச்சர்யங்கள் தரத் தொடங்கியது நெல்லி மரம். தடிமன் அதிகரித்த தண்டுகளும், அபாரமான உயர வளர்ச்சியும் ஒரு வகையில் அதிர்ச்சிதான். சில மாதங்களில் என் உயரத்தையெல்லாம் சுலவில் தாண்டி உயரத் தொடங்கியது. அருகே அணில்களுக்கு அவ்வப்போது உணவளித்த சீத்தா மரத்தை தாண்டி உயர்கையில் எங்கள் எல்லோருக்கும் ஆச்சர்யம்தான். பப்பாளி மரமெல்லாம் பந்தயத்துக்குள்ளேயே வரவில்லை. ஓரளவில் தன் வளர்ச்சியை நிறுத்திக் கொண்டது.

ஆனால் பப்பாளிதான் பிரச்சினையைத் துவங்கியது. சுமாரான உயரத்தில் இருக்கும் பப்பாளியே அதன் கொள்ளளவைத் தாண்டி பழங்களையும், காய்களையும் தன்னிடத்தே கொண்டிருந்தது. சீத்தாப் பழங்களையும் அவ்வப்போது நாங்கள் சுவைத்தோம். இந்த நெல்லிக்கு என்ன ஆயிற்று?

யாரேனும் எப்போதாவது கொண்டு வந்து தரும் முழு நெல்லிகளை வாங்கி மெல்ல மெல்லக் கடித்துச் சுவைத்து பின் உடனே ஓடிப்போய் தண்ணீர் அருந்துகையில் ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. அந்த மகிழ்ச்சியை எங்கள் வீட்டு நெல்லி மூலம் பெற விருப்பம் கொள்ளத் துவங்கினேன். அடேய்! நெல்லி எப்போது எங்கள் வீட்டுக்கு சுவைமிகு கனிகளைத் தருவாய்?

புதிய கொல்லைப்புறத்திற்கு நாயகனாக மாறியது நெல்லி மரம். கிட்டத்தட்ட புதிய சிறிய கொல்லைப்புறம் முழுமைக்குமான நிழலை ஒற்றை ஆளாகத் தருமளவு அதன் வளர்ச்சி இருந்தது. நல்ல உயரத்திற்குப் பிறகே பக்கவாட்டுக் கிளைகள் வளர்ந்து அகலத் தொடங்கியதன் விளைவு அது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் அதன் சிறிய இலைகளும், கொஞ்சம் கிளைகளுமே தென்படும். இன்னும் எத்தனை உயரம் வளருமோ என்கிற அச்சமும் எங்களுக்குள் வந்தது.

அவ்வப்போது நெடுநேரம் உற்று நோக்கிவிட்டு அம்மா சொல்வார் இப்படி. ‘டேய்! நெல்லி மரத்துல பூ விட்ருக்குடா’

எங்கே எனக் கேட்டால் அங்கே என உயரே கை நீளும். நான் பார்க்கையில் இலைகளையும், கிளைகளையும் மீறி ஏதும் என் கண்ணில் புலப்படாது. இப்படியே இரண்டு மூன்று முறைகள் வெறும் ’பூ’க்காட்சி மட்டும் நெல்லி மரம் தந்ததில் வீட்டில் நெல்லி மரம் மீதான ஆர்வமும், அது குறித்த பேச்சுக்களும் குறைந்தன.

அப்புறமாய் ஒரு சிறு இரும்புக்கம்பியை நெல்லி மரத்தண்டில் அடித்து வைத்தார் அப்பா. நெல்லி உண்டாக்குகிற பூக்களைக் காப்பாற்றும் கடைசி உத்தியாகவே நான் அதைப் பார்த்தேன். அதற்கும் பயனில்லாமல் நீண்ட வாரங்கள் போக்கு காட்டியது இதனிடையே புதியதாக இன்னுமொரு பிரச்சினை வந்தது.

பூக்களை மட்டும் அவ்வப்போது உதிர்த்து வந்த நெல்லி மரம் அதன் வளர்ச்சியை மட்டும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இல்லை. வளர்ந்த உயரம் போதாமல் பக்கவாட்டுக் கிளைகளும் பருத்து, செழித்து வளர்ந்ததில் அண்டை வீட்டை நெருங்கி முட்டத் தொடங்கியது. இப்போது வேறு வழியில்லாமல் ஒரு பக்கவாட்டுக் கிளையை மரத்தினின்று முறித்தோம். சில காலம் சென்ற பின் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவருக்கு இந்த நெல்லி மரத்தின் நீண்ட நெடிய வரலாற்றைச் சுருக்கமாகத் தெரியப்படுத்தியதன் பின்னர் அவர் மரத்தைப் பார்த்தார். இன்னுமொரு பூ துளிர்ந்திருந்தது. அவர் அதைப் புறந்தள்ளி இம்மரத்தை கிட்டத்தட்ட வெட்டி வீழ்த்துவதே ஆகக் கூடிய சிறந்த செயல் என்றார்.

நாங்களும் கிட்டத்தட்ட முழுமையாக வெட்டி வீழ்த்தினோம். அடித்தண்டு மட்டும் எஞ்சிய நிலையில் பரிதாபமாக காட்சி தந்தது நெல்லி மரம். அடித்தண்டை நீக்க வேண்டுமானால் வேரோடுதான் நீக்க வேண்டும். அதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம். அது கிட்டத்தட்ட உயிரிழந்ததைப் போலதான்.

சில வாரங்களில் மீண்டும் அடித்தண்டின் மீதிருந்து ஒரு நெல்லிச் செடி புறப்பட்டது. எனக்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை. நெல்லிச் செடியை சில நிமிடங்கள் உற்றுப்பார்த்த அப்பாதான் சொன்னார். ‘இந்த நெல்லி மரத்துக்கு வைராக்கியம் அதிகம்டா! எத்தனை முறை வேணும்னாலும் நீ வெட்டிக்கோ.. நான் முளைச்சு வருவேன்னு சொல்லாம சொல்லிக் காட்டுது.’

நானும் அதை ஆமோதித்தேன்.

சில நாட்களில் அந்த சின்னஞ்சிறு நெல்லிச்செடியிலும் பூச்சி பாதித்தது. சில இலைகள் சுருங்கி வீழ்ந்தன. மீண்டுமொரு முறை முழுமையாக செடி அகற்றப்பட்டது. மீண்டும் அடித்தண்டு மட்டும் பரிதாபமாக காட்சி தந்தது.

பிறிதொரு நாள் கொல்லையிலிருந்த செடிகளுக்கெல்லாம் நான் நீர் பாய்ச்சினேன். எல்லாப் பக்கமும் பாய்ச்சிய பின்பு ஏனோ அந்த நெல்லி மரத்தின் சிதிலமான அடித்தண்டைப் பார்த்தேன், அப்பாவின் வார்த்தைகள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நெல்லி மரம் பற்றி அப்பா சொன்ன வார்த்தைகள் எனக்கு நினைவில் வந்தது.

அடித்தண்டிற்கு கொஞ்சம் நீர் விட்டேன். மீண்டுமொரு முறை அது பிறந்து வர வேண்டுமென விரும்பினேன்.

கோண்டு

‘ஏய்! பையை கழட்டி வச்சுட்டு, கால் – கையைக் கழுவிட்டு வா!’

அம்மாவின் அதட்டல் அவனை ஒன்றுமே செய்யவில்லை. சமையல் கட்டிலிருந்து அம்மா வெளியே வந்து பார்க்கையில் அவன் நடமாட்டம் வீட்டில் எங்குமே இல்லை.

‘டேய் கோண்டு! ஏண்டா லேட்டு?’

கோண்டுவைப் பிடித்து நிறுத்தினான் சீனி.

சீனிக்கும் கோண்டுவுக்கும்தான் ராசி. ஒரே பள்ளியில் படிக்கிறவர்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள்.

’என்ன ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?’ என்றபடி ஓடத் தொடங்கினார்கள். சூரியன் மறைந்து, இருள் தொடங்கும் வேளையில் வீட்டுக்கு வந்தான் கோண்டு.

‘போய் ஸ்கூல் பையைக் கொண்டா..’

அவனுடைய புத்தகப் பையை ஒருமுறை சரிபார்த்தார் அம்மா. எல்லாமே சரியாக இருந்தது.

கோண்டு அலட்சியமாக பாட புத்தகம் ஒன்றை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.

’ம்மா!’

‘என்னடா?’

‘நாளையிலிருந்து நான் வேணா பால்பாயிண்ட் பேனாவுல எழுதட்டுமா?’

‘ஏண்டா?’

‘கை முழுக்க மசியா ஒட்டுதும்மா.. கொரகொரனு எழுதுது..’

‘வர்ற பரிட்சையில நீ நல்ல மார்க் வாங்கினினா, ஒனக்கு நல்ல பேனா வாங்கித் தரேன்.. இப்ப இதுல எழுது.’

’ம்ம்மா…’

டேய்! மை பேனால எழுதினாதான் கையெழுத்து நல்லா வரும்.. மார்க் நிறைய போடுவாங்க..குட் பாய்னு பேர் வாங்கலாம்!’

‘அடப் போம்மா! பால் பாயிண்ட்ல இன்னைக்கு எழுதிப் பாத்தேன். என்னமா இருக்கு.. வழுக்கிட்டு போவுது தெரியுமா?’

‘பாக்ஸை எடேன்’

அம்மா, அந்த பாக்ஸைத் திறந்து உள்ளிருந்த பால் பாயிண்ட் பேனாவை எடுத்து வெளியே வீசியெறிந்தார்.

‘’இனிமே மை பேனாவை விட்டு, வேறெதுலயாவது எழுதின.. எழுதின கைய சுட்டுப் புடுவேன்! நாளைக்கு நான் ரெண்டு கோடு, நாலு கோடு நோட்டு வாங்கித் தரேன்.. அதுல எழுதிப் பழகு’

’வெவ்வேவே.. நான் பென்சில்ல எழுதுவேன் என்ன பண்ணுவ!

எழுந்து வீட்டுக்குள் ஓடினான் கோண்டு.

*

மறுநாள் சீனியிடம் கேட்டான்.

’நீ பேனாலயா எழுதுற?’

’ஆமா ஏண்டா கேக்குற?’

‘உன் ஹோம் ஒர்க் நோட்ட எடு’

ஏண்டா?

’கையெழுத்து பார்க்கத்தான்’

‘அவ்ளோ நல்லா இருக்காதே’

‘நானும் அதைத்தாண்டா சொன்னேன். எங்கம்மாதான் பேனால எழுதினா அழகா வரும்னு சொன்னாங்க.. அப்படியா? ’

’எங்கூட்டு பக்கத்துல ஒரு ட்யூசன் இருக்குதுடா.. அங்க இருக்குற அண்னன்லாம் பேனாலதான் எழுதுவாங்க’

‘அப்டியா?’

‘இப்பதானே பேனாவுல எழுதுறோம்.. அப்புறம் ஏண்டா’

‘சரி நான் க்ளாஸுக்குப் போறேன்.’

வகுப்புகள் முடிந்ததும், பென்சில் பாக்ஸைத் திறந்தான் கோண்டு. பேனாவைக் காணவில்லை. யார் எடுத்திருப்பார்களென்று தெரியவில்லை. சீனியாக இருக்குமோ? கண்டிப்பாக கிடையாது. அவன் இதைவிட ஒசத்தியான பேனா வைத்திருக்கிறான். இது பத்து ரூபாய் பேனா. நீலக்கலர். அவனுடையது செவப்பு கலர்.

வேறு யாரோ எடுத்திருப்பார்கள். யாரென்று தெரியவில்லை. ரெண்டு வாரத்தில் இது மூணாவது பேனா.. பால் பாயிண்டில் எழுதியிருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. அம்மாகிட்ட எப்படி சொல்றதுனே தெரில.

 

வீட்டுக்குப் போனவுடன் பையை வைத்துவிட்டு, சீனியுடன் போய் விளையாடினான்.

சீனி, இன்னைக்கு ஹோம் ஒர்க் ஏதும் இருக்கா?

இல்லடா! நாளைக்கு திருக்குறளும், சயன்ஸ் மொத பாடமும் டெஸ்ட்.. படிக்கணும் அவ்ளோதான்’

சரி நான் வரேன்!

வீட்டிற்குள் நுழைந்தபின், அம்மா அழைத்துப் போய் குளியலறைக்குள் தள்ளினார். கை, காலை கழுவிட்டு வீட்டுக்குள்ள வா!

வழக்கம்போல புத்தகப் பையை எடுத்து பாட புத்தகத்தை மட்டும் எடுத்துவிட்டு மூலையில் சாத்தினான்.

மறுநாள் காலையில், அம்மா அவனை அழைத்து, இங்க பாரு புதுப் பேனா.. மைப் பேனாதான்… நீ எழுதிப் பழகணும். இது ஒசத்தியான பேனா. தொலைக்காம பத்திரமா வச்சுக்கணும்.. இல்லாட்டி அடுத்த முறை பேனா வாங்கித் தர மாட்டேன் என்றார்.

கோண்டு தலையை மட்டும் ஆட்டினான். வகிடு எடுத்து சீவிவிட்டார் அம்மா.

போயிட்டு வரேம்மா.. வரேம்ப்பா.. என்றபடி வீட்டிலிருந்து வெளியேறினான் கோண்டு.

ஆமா! ரெண்டு வாரத்துல மூணு பேனா தொலைச்சுட்டானு அவனைத் திட்டுவனு பார்த்தா, இன்னொரு பேனா வாங்கித் தர்றியே.. அதுவும் ஒசத்தியா? என்றார் அப்பா.

நேத்து அவன் தூங்கினப் பிறவு அவன் பையை எடுத்துப் பாத்தேன். பேனாவைக் காணோம். அதான் பையன் நேத்து முழுக்க கத்தாம இருந்திருக்கானு தெரிஞ்சுச்சு.. இனிமே அவன் நிம்மதியா ஸ்கூலுக்குப் போவான்ல.. அவன் தொலைப்பான்னு எனக்குத் தெரியும். அதனாலதான் எப்பவுமே ரெண்டு ரெண்டு பேனாவா வாங்கி வைப்பேன். அவனுக்குத் தெரியாது.

அவன் எத்தனை முறை தொலைத்தாலும் நான் மறுபடியும் வாங்கித் தருவேன். அவன் எதைத் தொலைத்தாலும் நான் அவனுக்கு அதை மறுபடியும் வாங்கித் தருவேன்.

அவன் என் மகன்.. அவனுக்காக நான் எவ்வளவும் செய்வேன். ஆனா அவன் அடிக்கடி தொலைக்கிறானேங்கிற வருத்தம் மனசுக்குள்ள இருக்கும். நான் அதைக் காட்டிக்க மாட்டேன். அவன் பெரியவனான பின்னாடி அவனாவே புரிஞ்சுக்குவான்.

வெயிலேறத் துவங்க, அம்மா துவைக்க வைத்திருந்த துணிகளை அள்ளி வாளியில் போட்டார்.

பாங்கன் என்றொரு காகலி

”பெரிதாக எழுதி விடுவதனால் ஒரு சிறுகதை என்பது குறுநாவலோ, ஒரு நாவலின் சுருக்கமோ ஆகிவிடாது.”
-ஜெயகாந்தன்

”சிறுகதை என்பது ஏதேனும் ஒரு நிகழ்வை விவரிப்பதாக இருக்க வேண்டும்”
-ஸோமர்செட்

”முழுவதும் கற்பனைக் கதையை யாராலும் எழுத முடியாது. அதேபோல் டெலிபோன் டைரக்டரி, ரயில்வே டைம்டேபிள் தவிர, முழுவதும் உண்மையும் சாத்தியமில்லை. உண்மை, சொல்லும்போதே சற்றுப் பொய்யாகிவிடுகிறது”
-சுஜாதா

 

நன்றி

ரஞ்சனி நாராயணன்

பாங்கன் என்றொரு காகலி

அந்த நாள் அவ்வளவு சுலபத்தில் நெஞ்சை விட்டு அகலாது. எல்லோருக்குமே அந்த நாள் கொஞ்சம் வித்தியாசமாக, குதூகலமாக இருந்திருக்கும். எனக்கும்தான். அது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வை எழுதி முடித்த தருணம். ஏதோ விண்ணின் நுனியைத் தொட்டுத் திரும்பியது போல ஒரு உணர்ச்சி.

இப்போது அப்படியில்லை. அந்த நாள் முடிந்து இதோ 60 நாட்களைக் கடந்தாயிற்று. புதிதாக நாளை கல்லூரி வகுப்பிற்குள் அடியெடுத்து வைக்கப்போகிறேன். ஏராளமான அறிவுரைகள் வந்து விழுந்தன.

“நல்லாப் படிக்கணும்யா!”
“நல்லாப் படிச்சாதான்……”
“புது வாழ்க்கை இங்க தொடங்கும். அதை வாழ்றது உன் கையில இருக்கு.”
“நல்ல விஷயங்கள பழகிக்கோ. கெட்டதுல இருந்து விலகிக்கோ.”
“நல்ல பசங்களோட மட்டும் பழகு!”
“தெனமும் கொஞ்ச நேரம் ஏதாவது விளையாடணும்”

இப்படியாக ஏகப்பட்ட அறிவுரைகளைக் கடந்து எனது கல்லூரியை வந்தடைந்தேன். முதன்முதலாக விடுதி வாழ்க்கை. நாளை எனது கல்லூரியின் முதல் நாள். வகுப்புகள் துவங்கும். பள்ளிகாலத் தோழர்கள் யாருமே இல்லாமல், புதிதாகப் பழக ஆட்களை, நண்பர்களைத் தேடியாக வேண்டும். அத்தனை எண்ணங்களையும் மனதில் சுமந்தபடி, என் உறவினர்கள் சிலர் சூழ எனது விடுதி அறையை வந்தடைந்தேன்.

சில வழக்கமான சம்பிரதாயமான உரையாடல்கள் முடிந்தவுடன், அவர்கள் என்னைத் தனியாக அறையில் விட்டுவிட்டுச் சென்றனர். அது மாலைப் பொழுது. கொஞ்சம் பொழுதுபோக்க எண்ணி மொட்டை மாடியை அடைந்தேன். தூரத்தில் ஒருவன் நிற்பது போல் தெரிய, அருகில் போய்ப் பார்த்தேன். யாருமில்லை.

‘என்னடா! முதல்நாளே இப்படி பயமுறுத்தும்படியான சம்பவங்கள் நடக்கிறதே’ என எண்ணிக்கொண்டிருக்கையில் ‘ஹாய்!’ என்றொரு குரல் பின்னாலிருந்து கேட்டது. தலையை மட்டும் திருப்பியபடி பார்த்தேன். அடுத்த நொடியே முழுதும் திரும்பி விட்டேன்.

என்னை விட சில செ.மீகள் உயரம் அதிகமாக, வெண்ணிறத்தில் கொஞ்சம் மாநிறம் கலந்தாற்போல் பார்ப்பதற்கு எடுப்பான, வர்ணிப்பதற்குத் தோதான ஒருவன் என் முன் நின்றான்.. ஆங்கிலத்தில்தான் பேசத் தொடங்கினான். எனக்குப் புரியும்படி நிதானித்து அவன் பேசுவதாகப் பட்டது.

“மை நேம் இஸ் அருண்பிரசாத். ஃபர்ஸ்ட் இயர் பி.எம்.எஸ். ஐயம் கம்மிங் ஃப்ரம் சிக்மகளூர் நியர் பை பெங்களூரு.” என்று சொல்லிவிட்டு வலது கையை என்னை நோக்கி நீட்டினான்.

அதுவரைக்கும் அதிர்ச்சியில் உறைந்தவன் போலான என் முகபாவத்தைக் கண்டவன் வாய் திறக்காதபடிக்கு சிறிதாகப் புன்னகைத்தான். அப்போதுதான் எனக்கு உறைத்தது.

நானும் கைகுலுக்கினேன். சற்றே ஆங்கிலமும், தமிழும் கலந்தபடிக்கு என்னையும் அறிமுகம் செய்தேன்.

அவன் எனக்கு இரண்டு அறைகள் தள்ளி இன்னொரு அறையில்தான் இருந்தான். அன்று மாலை மங்கும் வரைக்கும் பேசினோம். தொடர்பு எண்களைப் பகிர்ந்துகொண்டோம்.

எனக்கு அதன் பிற்பாடு நம்மூர் ஆட்கள் பலரும் நண்பர்களாகக் கிட்டினாலும், அவன் நினைவு அகலவில்லை. தொடர்ச்சியாக அடிக்கடி சந்திப்பதும், உரையாடுவதும் அளவலாவுவதும் தொடர்ந்தது.

ஒரு மாதம் கழிந்திருக்கும். அவன் என் அறைக்கு வந்தான். சற்று தமிழ் கலந்த ஆங்கிலத்தில் என்னிடம் கேட்டான்.

”எனக்கு தமிழ் சொல்லித் தர்றியா?”

“ஏன்?”

“பேசக் கத்துக்கலாம். உன்கிட்ட பேசணும்…. ம்ம்ம்ம் வேற என்ன இன்னொரு மொழி தெரிஞ்சுக்கிறது எப்பவுமே நல்லதுதானே?”

“சரி. அப்ப நானும் உன்கிட்ட இங்லிஷ் கத்துக்குவேன். ஓகேயா?”

“ஹேய்! இதென்ன! உனக்குத்தான் இங்லிஷ் தெரியுமே?” என்று ஆங்கிலத்திலேயே சொன்னான்.

“அவ்ளோ ஃப்ளூயென்ஸி பத்தாது.”

என் தமிழ் அவனுக்கும், அவன் ஆங்கிலம் எனக்கும் எளிதில் புரிந்தது. புன்னகைத்தபடி அவன் சரி என்று சொல்லிவிட்டு கேட்டான்.

“நீ கன்னடம் கத்துக்குடு-னு என்கிட்ட கேப்ப-னு நினைச்சேன்!”

“அதனாலென்ன! அதையும் சொல்லிக் குடு! நான் கண்டிப்பா கத்துக்குறேன்.“ என்றேன்.

இருவருமே உற்சாக மனநிலையில் சுற்றி வந்தோம். பல்வேறு சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்தோம்.

விடுதியில் மாணவர் கூட்டம் நடந்தது. மாணவர்களுக்குள்ளேயே பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடிவானது. ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாணவர்கள் முன்வர வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்கள் எல்லோரும் அமைதியாக இருந்தனர். எனக்கேன் வம்பு என்பதுபோல் ஒவ்வொருவரும் இருந்தனர்.

பிரசாத்தைப் பார்த்தேன். வலது பக்கம் தலையைச் சாய்த்து, இடது பக்கத்து புருவத்தை உயர்த்தினான். ம்ஹும் என்று சைகை செய்தேன். எழுந்திரு என அழுத்தமாக சைகை செய்தான். சில நொடிகளில் சரியெனத் தீர்மானித்து எழுந்தேன். அதற்காகவே காத்திருந்தது போல மற்றவர்கள் கைத்தட்டும் ஓசை காதைத் தாக்கியது.

பிறிதொரு நாள் கல்லூரி விடுதியில் சில மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டதாகக் கூறி விடுதி அலுவலகத்தில் விசாரணை நடந்தது. மேற்படி சம்பவம் இரண்டு குழுவினருக்கு இடையே நள்ளிரவுக்கு சற்று முந்தி நிகழ்ந்தது. வழக்கமாக பிற மாணவர்கள் விழித்தபடியே சுற்றித் திரிந்தாலும், நானெல்லாம் பத்து மணிக்கெல்லாம் தலையணையில் சாய்கிற ஆள். மணி இரவு பதினொன்றைக் கடந்த நிலையில் திடீர்க் கூச்சல். ஆட்கள் நடமாட்டம் அதிகரித்தது. என் அறைக் கதவை டமார்! டமார்! என்று தட்டினர். கதவைத் திறந்தேன்.

மூன்று-நான்கு பேர் எனக்கு முன்னால் நின்றார்கள். அவர்களில் பிரசாத்தும் ஒருவன். அரைகுறையாக முழித்த என்னை அறைக் கதவை பூட்ட பணித்துவிட்டு அவனே அழைத்துச் சென்றான்.

நடந்து கொண்டிருந்ததைச் சொன்னார்கள். போர் நிகழ்ந்த களத்திற்குள் செல்வது போன்ற கம்பீரத்தில் நான் நடக்கத் தொடங்கினேன். சிலருக்கு நெற்றி, தொண்டை, முழங்கை, முழங்கால் என ஆங்காங்கே காயங்கள் இருந்தன. இரத்தம் உறைந்த நிலையில் அவர்களை சிலர் சுற்றி நின்றிருந்தார்கள். காயமடைந்தவர்கள் ஜூனியர்கள், அடித்தவர்கள் சீனியர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான் சக மாணவன் ஒருத்தன்.

“அவங்க ஜூனியர்னா அப்ப நாம யாருடா?” என்றபடி நான் அவனிடம் கேட்க.. சிலருக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டனர். அவன் முறைத்தபடி “நமக்கு அவங்க சீனியர். அடிச்சவங்களுக்கு அவங்க ஜூனியர்” என்றான். ஒருவாறாகப் புரிந்தது.

சுற்றி நின்ற அனைவரின் பார்வைக்கும் புலப்படுமாறு உயரத்தில் நின்ற ஒரு சீனியர் மத்தியஸ்தம் செய்வதுபோல் பேசிக் கூட்டத்தைக் கலைத்தார்.

”எதுவா இருந்தாலும் நாளைக்கு காலைல பாக்கலாம்! இப்ப எல்லோரும் ரூமுக்கு போங்க!“

பலத்த சலசலப்புக்கிடையே அனைவரும் கலைந்தோம்.

”வந்த கொஞ்ச நேரத்துல கலைக்குறதுக்கு எதுக்கு வரச் சொல்லணும்?”

”எல்லாம் ஒரு சப்போர்ட்டுக்குதான்!”

“இப்ப போய் நிம்மதியா தூங்கலாம்ல!”

இப்படியாக உரையாடிக்கொண்டே அவரவர் அறைகளுக்குத் திரும்பினோம். மறுநாள் காலைப் பொழுது முந்திய நாள் இரவு நிகழ்ந்தவற்றை எல்லோருக்கும் மறக்கடித்திருக்கும் என நம்பினேன். அப்படியிருக்காது என்று எண்ணினாலும் அப்படி நிகழ்ந்தால் நல்லதென்றே மனம் சொல்லிற்று. உண்மையில் அப்படியெல்லாம் நடக்கவில்லை. வன்மம் யாரை விட்டது?

மதிய உணவு இடைவேளையில் விடுதிக்கு வரும் வழியில் இரண்டு மூன்று கார்கள் பறந்து வந்தன. கல்லூரி நிர்வாகத்தினரும், விடுதிக் கண்காணிப்பாளரும் தான். கூடவே போலீஸும் விரைவில் வரும் என பேசிக் கொண்டார்கள்.

சற்று நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது.

“தம்பி எங்க இருக்கீங்க?”

“சாப்பிட்டுக்கிட்டு இருக்கேண்ணே!”

“வெளிய வெயிட் பண்றோம். வேமா சாப்பிட்டுட்டு வா!”

விடுதி மாணவப் பொறுப்பாளர்களில் (சீனியர்) ஒருவர்தான் என்னை அழைத்திருந்தார். சென்றேன். ஐந்து பொறுப்பாளர்களில் நானும் ஒருவனுமாய் விடுதி கண்காணிப்பு அலுவலகத்தில் நுழைந்தோம். அங்கு ஏற்கனவே விடுதி மேற்பார்வையாளரும் இருந்தார்.

நாங்கள் உள்ளே சென்ற சில நிமிடங்கள் கழித்து விடுதி கண்காணிப்பாளர் வந்தார். உடன் இன்னும் சில பேராசிரியர்களும். விசாரணை நடந்தது. சீனியர்களும், அவர்களின் ஜூனியர்களும் தத்தமது வாத-பிரதி வாதங்களைக் கூறிக் கொண்டிருந்தனர். சக மாணவ பொறுப்பாளர்களும் சற்று பதற்றமாக இருந்தனர். அங்கு இருந்தவர்களில் என் நிலை மட்டும் தனியே இருந்தது. வகுப்புக்கு செல்லவில்லையே? என்ன செய்வது? எப்போது விடுவார்கள்? ஓடி (On Duty) கிடைக்குமா? என்றெல்லாம் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது. இதற்கெல்லாம் காரணமானவன் நானா? இல்லை பிரசாத்தா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒருமணிநேரத்தைக் கடந்து விவாதம் போய், கடைசியாக இனி இவ்வாறு நடந்துகொள்ள மாட்டோம். மீறினால்…. என்கிற மாதிரி ஒரு கடிதத்தில் கையொப்பம் இட்டனர். பின்னர் அடையாள அட்டைகளில் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தார். அருகிலிருந்த விடுதி மேற்பார்வையாளர் என்னிடம் சில அட்டைகளைக் காட்டினார். ஏறத்தாழ ஒரே மாதிரியான உருவ அமைப்பு கொண்ட இரு பெண்களின் அடையாள அட்டைகளைக் காட்டினார். இரட்டையர்கள் என்றாலே ஏதோ ஒரு அமானுஷ்யம் போன்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் துறையைப் பார்த்தேன். எனக்குள் சிரித்து வைத்தேன். நான் மேற்பார்வையாளரோடு உரையாடியதைக் கவனித்த கண்காணிப்பாளர் என்னைப் பற்றி விசாரித்தார். அரியணையில் அமர்ந்த மன்னன் போல உள்ளம் பெருமிதம் கொண்டது. இன்னொரு சமயம் வா! புதுப்பையன் தானே! என்றும் சொல்லிச் சென்றார். இப்போது மனம் மீண்டும் தடுமாற்றம் கண்டது. இதற்கெல்லாம் காரணமானவன் நானா? இல்லை பிரசாத்தா?

அன்று மாலை விடுதி அறையில் பிரசாத்தை சந்தித்தேன். உன் பேச்சைக் கேட்டுத்தான் இப்பொறுப்பை ஒப்புகொண்டேன். இது சிக்கலில் முடியுமா? இல்லை நல்ல பேரை வாங்கித்தருமா? என்றெல்லாம் தெரியவில்லை. இன்னும் என்னன்னமோ கேட்டேன்.

பொறுமையாக பதில்கள் தந்தான். நாட்கள் பசுமையாகவே நகர்ந்தன. கல்லூரி நூலகத்தை முதன்முதலாகச் சென்று பார்த்தேன். எண்பதாயிரம் புத்தகங்கள் கொண்ட பெரும் நூலகத்துக்குள் ஒரு எறும்பினைப் போல மெல்ல நுழைந்தேன். ஸ்டேக் அறைக்குள் போனேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் புத்தக அலமாரிகளும், படிக்க உகந்த மேசைகளும், ஆங்காங்கே அமர்ந்த நிலையில், தலை குனிந்த நிலையில் சிலரைப் பார்க்க முடிந்தது. பல்துறை நூல்களும் நிரம்பிய அந்நூலகத்துள் மெதுவாக சத்தம் செய்யாமல் நடக்க வேண்டுமே என்கிற பதைபதைப்புடன் நான் செல்ல ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு துறையையும் கடந்து தமிழ் புத்தகங்களைக் கண்டு அதற்குள் நுழைந்தேன். ஆச்சர்யத்தோடு சில நூல்களைக் கண்டுகொண்டிருக்கையில் பிரசாத்தைப் பார்த்தேன். அவன் ஏதோ ஒரு குண்டு புத்தகத்தைக் கையில் கொண்டு வந்தான். அவன் புன்னகையோடு என்னைப் பார்த்தான்.

புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கா? என ஆங்கிலத்தில் கேட்டான். ஆம் என்றேன். என் கண்ணுக்கெட்டிய தூரத்தில் “கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு” என்றொரு புத்தகம் இருந்தது. நூலகத்தை விட்டு வெளியில் வந்தவுடன் அவனிடம் கேட்டேன்.

“எனக்கு கன்னடம் கத்துக் குடேன்!”

அவன் ஒருமாதிரி என்னைப் பார்த்தான். நான் விடுவதாயில்லை.

”சில வார்த்தைகளாவது சொல்லேன்! வணக்கம், சாப்பிட்டீங்களா? நன்றி இப்படி ஏதாவது? “

கொஞ்ச தூரம் நடந்தான். இன்னும் பத்து நிமிட நடை இருந்தது. அவனுக்கு ஏற்கனவே சில தமிழ் வார்த்தைகளை நான் சொல்லித் தந்திருந்தேன். அவனும் மற்றவர்களிடம் சில வார்த்தைகளைக் கற்றிருப்பதையும் அறிந்தேன். இப்போது என் முறை.

”வணக்கம் –னா?” என்று ஆரம்பித்தேன்.

“”நமஸ்கார”

“ஓ! எப்படி இருக்க? ஹவ் ஆர் யூ –னா?”

“ஹேகிதியா?” ஆர் யூ ஃபைன்? –னா ”சென்னாகிதியா?”

வார்த்தைகளை ஒருமுறை சொல்லிப் பார்த்தேன்.

”வாட் ஆர் யூ டூயிங்? –னா ஏன் மாட்தாயித்யா?” மரியாதையா சொல்வதற்கு தனி என்றான்.

”அங்கே, இங்கே, எங்கே –னு சொல்ல அல்லி, இல்லி, எல்லி” ஈஸியா இருக்குல்ல! என்று சிரித்தான்.

வீட்டுக்கு மனே-னு சொல்லணும் என்றான். தமிழில் மனை-னு ஒரு பொருள் இருக்கு என்றேன்.

பேக்கு-னா வேணும். பேடா-னா வேணாம்-னு அர்த்தம் என்றவனைப் பார்த்து பேக்கு-னா எங்கூர்ல வேற அர்த்தமும் இருக்கு என்று சிரிக்கையில் எனக்கும் தெரியும் என்று அவனும் சிரித்தான். அன்றைய கன்னட வகுப்பு பெரும் சிரிப்போடு முடிந்தது.

அடுத்த சில நாட்களில் அறையிலிருந்த தோழரிடம், நியூஸ் பேப்பர் படிக்கப் போகலாமா? என்றேன். விடுதிக்கு நாள்தோறும் ஐந்து நாளிதழ்கள் வருவதை அறிந்ததன் பொருட்டு அவரிடம் கேட்டேன்.

“பேப்பரா? அதை எதுக்கு படிக்கணும்?….” என்கிற ரீதியில் பதில் தந்தவனை, எதிர்கொள்ளாமல் அறையை விட்டு வெளியேறினேன்.

எதிரே அருண் பிரசாத் வந்தான். அவனிடம் கேட்டேன். “கம் லெட்ஸ் கோ” என்றான். அவனோடு மலர்ச்சியுடன் சென்றேன்.

“இங்லீஷ் பேப்பர் படிக்குற பழக்கம் இருக்கா? ”

“பாத்திருக்கேன். ஆனா படிச்சது ரொம்ப இல்ல!”

குழப்பரேகைகள் முகத்தில் தோன்ற என்னைப் பார்த்தான். “புரியல!”

“ஒண்ணு ரெண்டு தடவ படிச்சிருக்கேண்டா!”

இன்னும் குழப்பம் நீங்காமல் பார்த்தான்.

“இனிமே படிக்கிறேன் போதுமாடா!”

ஒருவிதத்தில் அமைதியானான். கடைசி பக்கத்திற்கு முந்திய பக்கத்தை எடுத்தேன். ஒழுங்கா முதல் பக்கத்தில் இருந்து படி என்று கட்டளையாகவே வந்தது. அவன் சொன்னால் மீறவா முடியும் என்று ஏதோ ஒரு குரல் தூண்டியது. அவன் சொல்படி கேட்டேன்.

எப்போது அவன் என்னிடம் பேச வந்தாலும், மலர்ச்சியான முகத்தோடே வருவான். என்னையும் மலர வைத்தான். ஏதோ ஒரு தகவலை தினமும் பரிமாறிச் சென்றுகொண்டே இருந்தோம்.

எனக்குத் தெரியாதவையெல்லாம் அவனுக்கும், அவனுக்குத் தெரியாதவை எல்லாம் நானும் அறிந்திருந்தோம். எங்கள் நட்பு ஆழமாக வேர்விட அதுவே போதுமானதாயிருந்தது.

ஒருநாள் என் வீட்டு அழைப்பு எண்களைப் பெற்றுக் கொண்டு, அவன் வீட்டு எண்களைத் தந்து சென்றான். வீட்டு முகவரிகளையும் அவ்வாறே பரிமாறிக்கொண்டோம். ஏன் என்ற கேள்வி இப்போது எழவில்லை. ஆனால் ஒவ்வொன்றாக விளங்க ஆரம்பித்தது.

இன்னொரு நாள் எதேச்சையான உரையாடலின் போது பயணங்கள் குறித்து சொன்னான். ”சுற்றுலாவாக எங்கெல்லாம் சென்றிருக்கிறாய்?” என்ன கேட்கிறான் என்பது புரிந்தும் அதற்கு பதில் சொல்லாமல் நடந்தேன். என் நிலை புரிந்தவன் போல் அவன் பேச ஆரம்பித்தான். நான் கேட்க ஆரம்பித்தேன்.

ரெண்டு வருஷம் முன்னாடி சித்ரகூட் அருவிக்கு போனதைப் பற்றி சொன்னான். அருவி அவ்வளவு அழகாக இருக்குமாம். இப்போதுதான் அப்படி ஒரு அருவியையே கேள்விப்படுகிறேன் என்றேன். மத்தியப் பிரதேசத்தில் ரஜத் என்றொரு அருவி அதுவும் அருமையான அனுபவம் என்றான். எப்படியெல்லாம் பயணப்பட்டோம் என்பதை அவன் சொல்ல சொல்ல என் கண்களுக்குள் காட்சிகள் உருவாகிக் கொண்டே சென்றன. கர்நாடகாவைப் பற்றி சொல்லும்போது இன்னும் உற்சாகமானான்.

கோகர்ண கடற்கரை, அப்புறம் தண்டேலினு ஒரு இடம். ஒரு நாள் பார்த்து சொல்லு! கூட்டிட்டு போறேன். எதேச்சையாக அவன் சொல்லிவிட்டான். எனக்கு ஜிவ்வென்று கால்கள் தரையினின்று எழும்பியது போலத் தோன்றியது. முகத்தில் குளிர்ந்த காற்று தழுவியது போல உணர்ந்தேன். சட்டென்று இயல்பு நிலைக்கு மாறினேன்.

பெங்களூர் எப்படியிருக்கும் என்று என்னுடைய கற்பனையில் மட்டுமே யோசித்திருக்கிறேன். அவ்வப்போது ஏதாவது புத்தகங்கள், செய்திகளில் படிக்கவும், பார்க்கவும் செய்த இடம். லால் பாஹ், கப்பன் பார்க், விதான்….ஓஓ….!

ஓ! பிரசாத்!! நீ பெங்களூர் இல்லியே! ம்ம்ம்ம்ம்ம்… சி… சிக்மகளூர்தானே! ஆங்! அதேதானே!!

ஆமா… சிக்மகளூர் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?

ம்ம்ம்… இந்தியாவுல முதன்முதலா காப்பி பயிரிட்ட இடம்…

ஹா! எப்படி தெரியும்…?

நீ உங்க ஊர் பேரைச் சொன்ன கொஞ்ச நாள்ல கண்டுபிடிச்சுட்டேன்…

ஓகோ! உங்க ஊரைப் பத்தி நான் சொல்லட்டுமா?

கையெடுத்துக் கும்பிட்டுவிட்டேன். எங்கள் ஊரைப் பற்றி அவனும் சொல்லிய பின்பு.

ஒருநாள் அறைக்கு வந்த பிரசாத்திடம் ஒரு படத்தைக் காண்பித்து இவர் யார் தெரியுமா? என்றேன். கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொண்டும் அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்த படத்துல இருக்குறது இளையராஜாடா!

ஓ! நான் அவர் முடி இல்லாம இருக்குற படம்தான் பாத்திருக்கிறேன்.

அது மொட்ட!

நல்லவேளையாக இளையராஜா என்றால் யாரென்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. நம்ம ஊர்க்காரர்கள் பலர் ராஜா என்றாலே யாரென்று என்னிடம் கேட்டு என்னை ஏற்கனவே அதிர்ச்சியில் வைத்திருந்தனர்.

சில கன்னடப் பாடல்கள் குறித்து கேட்டேன். கொடுப்பதாய் சொன்னான். ஆப்தமித்ரா படம் இருக்கிறதா? என்றேன். பாத்திருக்கிறியா? என்றான். பார்க்கத்தான் என்று பதில் சொன்னேன். விரைவில் தருவதாய் சொல்லிச் சென்றான்.

முதல் பருவம் முடிந்து குளிர்கால விடுமுறை முடிந்து, மீண்டும் வரும்போது நிறைய ஆச்சர்யங்களைத் தந்தான். கையோடு ஒரு கேமரா! மழைத்துளிகளின் வசீகரத்தை படம்பிடித்து ரசித்துக்கொண்டோம். டேவிட் காப்பர்ஃபீல்டு என்றொரு புத்தகம் படிக்கச் சொல்லிக் கொடுத்தான். நானும் என் பங்குக்கு ஒரு தமிழ் புத்தகத்தைக் கொடுத்தேன். சிரித்துக்கொண்டான்.

குளிர்பருவம் கடந்து வெயில் எட்டிப்பார்க்கத் தொடங்கியதில் இருந்து எங்களுக்கு நெருக்கடியான காலகட்டம் தொடங்கியது. தேர்வுக்கான ஆயத்தங்கள் நடந்த அதே சமயம் மீண்டும் விடுதியில் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கத் தொடங்கின.

விடுதியில் ஸ்ட்ரைக் செய்வதாக முடிவு. என்ன பிரச்சினை என்று விசாரிக்கக் கூட பலரும் தயாரில்லை. காரணம் இல்லாமல் கூட ஸ்ட்ரைக் செய்யத் தயாராயிருந்தவர்களுக்கு மத்தியில் நானோ, பிரசாத்தோ எம்மாத்திரம்? கோடை மழை பொழிந்த ஒரு நாளில் விடுதி அலுவலகத்தை நெருங்கிய பெருங்கூட்டத்தின் முன்னால் நின்றிருந்த சீனியர் ஒருவர் சொன்னார்.

அங்க போனவுடனே நாலு பேர பேசவிட்டுட்டு மத்தவங்கல்லாம் அமைதியா இருக்கக்கூடாது. உடனுக்குடனே பிரச்சினைகள ஒவ்வொருத்தரா சொல்லிக்கிட்டே இருக்கணும். புரிஞ்சுதா?

நீங்க சீனியர் பேசலாம். நாங்க என்ன சொல்றது? என்றபடி ஒருவன் கேட்டான்.

நாங்க மட்டும் பேசினா பிரச்சினை எங்களுக்குதான். மொத்தமா பேசினா பிரச்சினை வராது. இல்லாட்டி பாயிண்ட் பண்ணிடுவாங்க. நாங்க மாட்டிக்கிட்டா நீயா டிகிரி வாங்கித் தருவ? சொல்லு.. சொல்லு…

அவர் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். அதில் கொஞ்சம் எங்கள் மேலும் படர்ந்துவிட்டது. அவரைத் தொடர்ந்து பெரும் கூட்டம் மீண்டும் நடையைத் தொடர்ந்தது. நாங்கள் சிலர் முன்னாலும் இல்லாமல், பின்னாலும் இல்லாமல் ’நடுநிலை’யில் சென்றோம்.

ஆனால் விதி வேறு வழியில் சென்றது. அலுவலகத்தின் உள்ளே ஐந்தாறு பேர் மட்டுமே அனுமதி என்று உத்தரவு வந்தது, பெரும் ஏமாற்றத்தின் ஊடே ஐந்தாறு பேர் மட்டும் உள்ளே சென்றனர். நான் செல்லவில்லை. யாருக்கும் அந்நேரத்தில் நினைவில்லையோ என்னவோ எனக்கு ஒருபுறம் திருப்திதான்!

ஒருவழியாக பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்கிற அறிவிப்பை மட்டுமே வெற்றியாக அவர்களால் சொல்லமுடிந்தது. மற்றவர்களுக்கோ ஒருநாள் கல்லூரிக்குச் செல்லாமல் இருந்ததே வெற்றியாக இருந்தது.
பருவத்தேர்வுகள் இனிதே முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் கழித்து நானும் அருண் பிரசாத்தும் பேருந்து நிலையத்தில் ஒன்றாக நின்றிருந்தோம். பேருந்து வந்ததும் ஏறிக் கொண்டோம். வண்டி புறப்பட்டுவிட்டது.

பெங்களூர் செல்லும் அந்தப் பேருந்தில் நகரம் பின்னோக்கி நகரும் காட்சியை ரசித்தபடியும், சில்லென்ற தென்றலின் தீண்டலில் லயித்தபடியும் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டு உரையாடலைத் தொடங்கினோம்.பின்னணியில் ஏதோ ஒரு பாடலை எஸ்.பி.பி பாடிக்கொண்டிருந்தார். தாளம் அந்தப் பயணத்துக்கு ரம்மியம் தந்தது. அவன் தான் கேட்டான்.

”அப்புறம் அடுத்த ப்ளான் என்ன?”

பெரும் சிரிப்பு அந்த பயணத்திலும், அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்துகொண்டே இருந்தது.


பாங்கன் என்ற சொல்லிற்கு நண்பன், தோழன் என்று பொருள்.
காகலி என்ற சொல்லிற்கு தேன் போன்ற வார்த்தை என்பது பொருள்.

ஆதாரம்: நா. கதிரைவேற் பிள்ளை தொகுத்த தமிழ்ப் பேரகராதி

தமிழ்

இரகுவும், ராபியும்!

சில மாதங்களுக்குப் பிறகு இவ்வருடம் வெளிவரும் எனது மூன்றாவது சிறுகதை. முந்தைய இரு சிறுகதைகளில் முதலாவது என் ஆத்ம திருப்திக்காக. அதில் எந்த குறையோ, நிறையோ நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் கதைக்கு முடிவு சரி இல்லை என்றார்கள் சிலர். கதையின் முடிவு மோசமாயிருக்கிறதென்றும், சரியாக எழுத பயிற்சி தேவை என்றும் வந்தது. ஏகப்பட்ட கதைகளைத் தழுவியிருப்பதாக நெருக்கமான அன்பர் சொன்னார்.

 இதன் பின் நெருங்கிய நலவிரும்பிகள் இருவர் தொடர்ச்சியாக எனக்குத் தேவையான அறிவுரைகள், ஆலோசனைகள் எல்லாம் தந்து கதையென்றால் எப்படியெல்லாம் இருக்கலாம். என்று பலவாறாக உரையாடி தெளிவுபடுத்தினர். அதன் விளைவாக ஒரு நாள் யோசித்த சில நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதி முடித்த கதை. இந்த கதைக்குள் ஒரு கதை இருக்கிறது. அதாவது அந்தக் கதையாவது  உங்களை திருப்தி செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கதை முடிந்ததும் இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

சமர்ப்பணம்

என்னால் (லும்) ஒரு சிறுகதை சிறப்பாக எழுதிவிட முடியும் என நம்பிக்கை வைத்து ஆலோசனை கூறிய அந்த ’இருவருக்கு’.

********************************************************************************

பசி என்றுகூட ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அகோரப் பசி என்றோ, இல்லையென்றால் வேறு ஏதாவது பொருத்தமான வார்த்தையில்தான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக எனக்கு பசி இல்லை. அதற்கும் மேலான அதீத உணர்வு என் உடலின் செல்களை அரிக்கத் தொடங்கிவிட்டது.

எதுவெல்லாம், எப்போதெல்லாம் நடக்க வேண்டாம் என எண்ணுகிறோமோ, அவையெல்லாம் அவ்வப்போதே நிகழ்ந்துவிடுகின்றன. இன்றைக்கு முழுக்க வேலைப்பளுவில் சிக்காமலிருந்தால் நல்லது என எண்ணினேன். அது நடக்கவில்லை. காலையிலேயே அலுவலகப்பணியாக தொலைதூரப் பயணம். அதிலும் பேருந்துகளே தடம் பதிக்கத் தயங்கும் சில சிற்றூர்களில் ஒன்றான அந்த ஊருக்கு என்னை அனுப்பினார்கள்.

ம்ம்ம்.. இதுதான் விடயம்.

இடைவிடாத பணிகளின் பொருட்டால் இயல்பாகத் துவங்கிய மதிய நேரத்துப் பசி மாலை வேளையாகிப் போனதால் வயிற்றைக் கிள்ளத் தொடங்கிவிட்டது. திடீரென்று எங்கிருந்தோ ஒலித்த மயிலின் அகவல் காதில் விழ இன்னும் வலியோடு வயிற்றை அரித்தது ஹைட்ரோகுளோரிக். எல்லாவற்றையும் கடந்து ஒரு உணவகத்துக்குள் நுழைந்த என்னை சப்பாத்தி மட்டும்தான் இருக்கு! என்றபடி ஒரு சர்வர் வரவேற்றார். கடிகாரத்தை பார்த்தேன்.  மணி ஐந்தை தொட எத்தனித்தது.

“புரோட்டா இல்லியா?” என்றேன்.
“இன்னைக்கு லேட்டாகும் சார். அரை மணிநேரமாகும்.” என்று பதில் வந்தது.

சர்வர்களே அரைமணிநேரம் என்று சொன்னால், எவ்வளவு நேரமாகும் என்பதை நானே கணித்து, 4 சப்பாத்திகள் போதுமென்று சொன்னேன்.

சர்வர் சொல்லிவிட்டுப் போன தொனியை ஆராய்ந்தேன்.

“இன்னைக்கு லேட்டாகும் சார். அரை மணிநேரமாகும்.”

இன்னைக்குதான் லேட்டாகணுமா? என்று மனம் வயிற்றை இன்னொரு முறை பிராண்டியது. நல்ல வேளையாக சப்பாத்திகள் வந்து சேர்ந்தன.

இரண்டு முழு சப்பாத்திகளை விழுங்கியப் பின் ஒரு உணர்வு வந்தது. அப்போதென்று அடித்த காற்றின் ’ஜிலீர்’ தன்மை உடலெங்கும் பரவியது. இன்று காலையும் சரியாகச் சாப்பிடவில்லை. மதியம் சுத்தமாக ஒன்றும் சாப்பிடவில்லை. தொடர்ந்து உடல் நோகும் அளவு அலைச்சலில் உழன்றவனால்தான் அந்த சப்பாத்தியும், காற்றும் தந்த ஜிலிர்ப்பை உணர முடியும்.

சற்று நேரத்தில் காற்றின் உஷ்ணம் ஏறத் தொடங்கியது. என்ன காரணம் என்பதை உணரத்தொடங்கிய தருணத்தில் இருந்து உஷ்ணம் என்னையும் தாக்கத் தொடங்கியது.

என்ன செய்வதென்றே புரியாத வண்ணம் ஒருமாதிரி விழிக்கத் துவங்கினேன்! ஆம். அப்போதுதான் உணரத் தொடங்கியிருந்தேன். என் பர்ஸைக் காணவில்லை. எவனாவது திருடியிருப்பானோ? இல்லை… இல்லை. தவறுதலாக அலுவலக மேசையினுள் வைத்திருப்பேன் என்றொரு ஞாபகம். ஓ! ஒரு மங்கலான நினைவு வருகிறது. இரகுதான் என்னிடம் பர்ஸை வாங்கினான். அவன்தானே வாங்கினான்? ஆம். அவனேதான். அவனைத் தவிர வேறு யாரிடமும் தந்திருக்க வாய்ப்பும் இல்லை. சூழ்நிலையும் இல்லை. பாவிப்பயல்! என் செல்போனை வேறு வாங்கிக்கொண்டான். இப்போது அவசரத்துக்கு அழைக்கலாம் என்றாலோ, போன் வேறு இல்லை.

இவ்வளவு நேரமும் யோசித்ததில், அடங்கியது போலிருந்த பசி மீண்டும் எட்டிப்பார்த்தது. தட்டில் இரண்டு சப்பாத்திகள் மிச்சமிருக்கின்றன. பொறுமையாக சாப்பிட்டேன். பேசாமல், சர்வரிடம் போன் வாங்கி இரகுவை அழைக்கலாமா? இல்லை இன்னும் கொஞ்சநேரம் பொறுத்திருந்தால் இரகுவே வந்துவிடுவான் என்றெல்லாம் தோன்றியது.

ரெண்டுமே மோசமான யோசனைகள்தான் என்றும் தோன்றியது. என்ன செய்யலாம் என்றபடி சப்பாத்தியைக் கிள்ளி வாயில் வைத்தேன். அவ்வளவு நேரமாய் உணராத இன்னொன்றை அப்போது உணர்ந்தேன். காலில் என்னமோ தட்டுபட்டாற்போல இருந்தது. என்னதான் என்று பார்க்கலாமென்று, ஷூவை (ஷூ அணிந்த காலை) சற்றே நகர்த்தினேன். கொஞ்சம் முந்தி அதைப் பார்த்திருந்தேனேயானால், ஏதோ ஹோட்டல் பில் போல என நினைத்திருப்பேன்.

பர்ஸ் தொலைத்தவன் கண்ணுக்கு, பார்க்கிறதெல்லாம் பணமாய்த் தெரியும் என்பதைப் போல எனக்கு அது ஏதோ ரூபாய் நோட்டாய் இருக்கலாம் என்று பட்டது. மிகவும் சிரத்தை எடுத்து கவனமுடன் அந்த பணத்தை எடுத்துப்பார்த்தேன் ஆனந்தமும், அதிர்ச்சியும் ஒருசேரத் தாக்கினாற்போல அதைக் கையில் எடுத்துப் பார்த்தேன்.

முழுதாக ஐம்பது ரூபாய். என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. அந்த நேரம் எனக்கு என் நிலைதான் பெரிதாகத் தெரிந்தது. மறுநொடி எனக்கு பணத்தை எடுக்கத் தோணவில்லை. இத்தனை நாட்கள் இல்லையில்லை இத்தனை வருடங்கள் நல்லவனாக எடுத்த பேரெல்லாம், வீணாகி விடுமே? மனம் களங்கம் அடையாதா? என்றொரு உறுத்தல். அடுத்த நொடி இங்கிருந்து கவுரவமாக வெளியேற வேறு வழி உள்ளதா? இல்லையே! என்று ஒரு எண்ணம். ஒருவேளை இது ஆண்டவன் கிருபை என்று எடுத்துக் கொள்ளலாமா? ச்சீச்சீ… யாரோ ஒரு வறியவரின் பணம்தான் இது. எந்தப் பணக்காரன் இங்கு உண்டுவிட்டு பணத்தைத் தொலைக்கிறான்? அதுவும் அழுக்கேறிய பழைய நோட்டு.

சில நிமிடங்களில் மனம் மாறி சாப்பிட்டு முடித்தவுடனே “இலைய எடுத்துட்டு போங்க சார்” என்ற சர்வரின் உத்தரவுக்கு இணங்கி, அதைத் தொட்டியில் வீசிவிட்டு கை கழுவினேன். முகம் சற்று மலர்ந்தாற்போல இருந்தது. என்னுடைய பில்லை அந்த ஐம்பது ரூபாயைக் கொண்டு கட்டிவிட்டு கடையைவிட்டு வெளியேறினேன். வயிற்றில் பசி இல்லாததால், ஒருபக்கம் நிறைவு இருந்தாலும், அடுத்தவர் பணம் நமக்கேன்? என்றொரு வாட்டலும் மனதை மீண்டும் அரித்தது.

அலுவலகத்தில் இரகுவின் இடத்துக்குப் போனேன். என் போனில் ஃப்ரூட் நிஞ்சா விளையாடிக் கொண்டே,  “என்னடா! சாப்பிட்டு முடிச்சிட்டியா?”  என்றான். நடந்ததையெல்லாம் அவேஸமாக ச்சை ஆவேசமாக  சொல்லிவிட்டு உர்ரென அவனைப் பார்த்தபடியே பேச்சைத் துவக்கினேன்.

”எல்லாமே உன்னாலதாண்டா! ஒழுங்கா பர்ஸையும் வச்சுக்க விடல.. செல்போனையும் எடுத்துக்கிட்ட..”

”இப்ப… உனக்கு என்ன பிரச்சினைனு சொல்லு. நல்லா திருப்தியாதானே சாப்பிட்ட?”

“அடுத்தவன் காசுல, அவன் அனுமதியில்லாம…….”

“டேய்…டேய் நிறுத்து… பொறுமையா நான் சொல்றத காதுல வாங்குறியா?”

“சொல்லு.”

இருவரும் மேசையின் எதிரெதிரே அமர்ந்தோம். இரகு ஆரம்பித்தான்.

“ஒரு கதை சொல்றேன். குட்டிக்கதைதான். அவசரப்படாம கேட்டுட்டு சொல்லு”

“ஒரு ராபி… துறவினு வச்சுக்கோ… அவர் ஒரு இளைஞனிடம் கேட்கிறார். “நீ தெருவில் போகிற வழியில் ஒரு பணப்பையைப் பார்க்கிறாய். அப்போது என்ன செய்வாய்? –னு கேக்குறார். அவன் இப்படி சொல்றான்…”

“அந்தப் பையை ஒரு நிமிடம் நான் வைத்திருப்பதும் தவறுதான். அதை உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுவேன்-ங்கிறான். ”

“அதுக்கு துறவி சொல்றார். நீ ஒரு முட்டாள்!”

“இப்ப நீ முட்டாள்னு நினைச்சுக்காத! இன்னும் இருக்கு.”

“இன்னொருத்தன் அதே கேள்விக்கு, மற்றவர்கள் யாரும் கவனிக்கலைனா, நானே எடுத்துக்குவேன் –னு சொல்றான். ”

“அதுக்கு அவர் “நீ ஒரு பேராசைக்காரன்”னு சொல்லியனுப்புறார். ”

“இன்னொருத்தன் அதே கேள்விக்கு, கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு,  நானே எடுத்துக்குவேன் இல்லாட்டி சில சமயம் உரியவர்களிடம் கொடுப்பேன். அது அந்த சூழலைப் பொறுத்த்து –னு சொல்றான். ”

”ராபி எதிர்பார்த்ததும் அதுமாதிரியான  பதிலைத்தான். அவர் பாராட்டி அவனை அனுப்பிட்டார்.”

நான் புரிந்தும், புரியாதவன்போல் அவனைப் பார்த்தேன். அவனே தொடர்ந்தான்.

இங்க பார். அந்த பணத்தை நீ எடுத்து சரியான ஆளிடம் கொடுப்பது அவ்ளோ சாத்தியமானது இல்ல. தெரிஞ்சுதா? பேஸிக்கா நீ அவ்ளோ நல்லவனும் இல்ல.. முட்டாளும் இல்ல” என்றான்.

“ம்ம்” என்றேன்.

“அதேபோல் அதை உடனே உனக்கு அபகரிக்கணும்னு தோணல. ஸோ, நீ பேராசைக்காரனும் இல்ல” என்றான்.

சற்று தெளிவுடன் அவன் சொல்வதைக் கவனித்தேன்.

”கடைசியா அந்த சூழல்ல உனக்கு அந்த பணம் தேவைப்பட்டுச்சு. அதனால அதை உனக்கு சாதகமாக்கிக் கிட்ட அவ்ளோதானே! நீதாண்டா உண்மையான மனுஷன்”

ஒரு நீண்ட பிரசங்கம் நிகழ்த்தி முடித்தவன்போல் என் முன்னே பெருமிதமாக அமர்ந்திருந்தான் இரகு. எனக்கும் உள்ளம் கொஞ்சம் ஆறுதலடைந்தது. சற்று நேரத்தில் புத்தி யோசித்தது.

”நான் மனுஷனா மாறுறதெல்லாம் இருக்கட்டும். இனிமே என் அனுமதியில்லாம என் போனையும், பர்ஸையும் எடுக்காதடா! நான் சாதாரணனாவே இருந்துட்டு போறேன்.” என்றபடி படாரென பேசி நகர்ந்தேன்.

இரகுவின் முகத்தில் ஈயாடவில்லை. எனக்குள்ளிருந்த ராபி சத்தமாகச் சிரிக்கத் தொடங்கியிருந்தார்.

*****************************************************************

ராபி என்றால். யூத மதத்தில் துறவி, தலைவர் போன்றவர். அவர்களைப் பற்றிய கதை ஒன்றையும் இதில் இணைத்தேன். இக்கதை கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் படித்த ஒரு கதை. ஏதாவது கதை எழுதலாம் என்று தீர்மானிக்கையில் என் எண்ண ஓட்டங்களுக்கு வலு சேர்ப்பதாய் வந்து நின்ற கதை அது. உரையாடல் வடிவில் எளிமையாகவே அக்கதையை எடுத்தாண்டுள்ளேன்.