சிறப்புக் கட்டுரை

நல்லதோர் வீணை செய்து…

தஞ்சை வீணை:
தஞ்சாவூரில் தலைமுறை தலைமுறையாக வீணைகளை உருவாக்கி வருகிறார்கள் நாராயணன் (65) குடும்பத்தினர். அவருடைய பணிக்கூடம் தஞ்சை தெற்கு மூல வீதியில் இருக்கிறது. அவர்கள் அங்கு மாதம்தோறும் நான்கு அல்லது ஐந்து வீணைகளை உருவாக்குகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் பல்வேறு திறன்வாய்ந்த கைவினைஞர்களின் உழைப்பு தேவைப்படுகிறது.

வீணை இந்தியாவின் தேசிய இசைக்கருவி. பழமையான ஒன்றும் கூட. ஆனால் தற்போது வீணை உருவாக்குபவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் குறைந்துகொண்டே வருகிறார்கள். தஞ்சையில் இப்போது ஏறத்தாழ பதினைந்து குடும்பங்கள் வீணையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அடுத்த தலைமுறையில் இது பாதியாக குறையக் கூடும்.

மூன்றாவது தலைமுறையாக வீணை ட்யூன் செய்து வரும் கோவிந்தராஜன் (55) தனக்கு அந்தளவு கல்வியறிவு இல்லாவிட்டாலும் (இசை)சுருதி குறித்த ஞானம் உண்டு என்கிறார். இவர் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இப்பணியில் இருக்கிறார். இவரோடு இத்துறை அறிவு மங்கிவிடுமென சொல்கிறார். காரணம் – இவருக்கு மகன்கள் இல்லை. கற்றுக்கொடுக்க இவருக்கு விருப்பம் இருப்பினும், புதிதாக இதைக் கற்றுக்கொண்டு தொடர யாருக்கும் ஆர்வமில்லை.

வீணைகள் எப்பொழுதும் பலா மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்படும். பழமையான வயது முதிர்ந்த கட்டைகளைக் கொண்டே செய்யப்படும். கட்டைகள் குறிப்பிட்ட வடிவில் தஞ்சையில் உள்ள சிவகங்கை தோட்டத்தில் அறுக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன.

செந்தில்குமார் (34) எனும் ஐந்தாம் தலைமுறை கைவினைஞர் தனக்கு கிடைத்து வரும் வருவாய் தன் தாத்தாவின் கிடைத்த வருவாயைக் காட்டிலும் பத்து விழுக்காடு குறைவு என்கிறார். பணவீக்கம், விலைவாசி உயர்வு என காரணங்கள் உண்டு. மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம் என அனைத்துமே இருமடங்காகி விட்டது. ஆனால் வீணையின் விலை அப்படியில்லை.

வீணையை உருவாக்குவதென்பது உடனடியாக கற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பார்வைத் துல்லியமும், அனுபவமும் இரண்டறக் கலக்க வேண்டியது முக்கியம்.
நாராயணின் அப்பாவின் காலத்தில் பலாமரக்கட்டைகள் சுலபமாக கிடைத்து வந்துள்ளது. இப்போது அனைத்தும் வெட்டப்பட்டு ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது பலா மரக்கட்டைகள் வாங்க பண்ருட்டி வரை பயணிக்கிறார்கள். அதிலும் முப்பது முதல் நாற்பது வருடங்களான பலா மரக்கட்டைகளே தேவை.
அப்போதைக்கும் இப்போதைய காலத்துக்குமான ஒரே வித்தியாசம் அதன் தேவை. நிறைய இளைஞர்கள் இசைக்கருவிகள் கற்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் எங்களை எப்படி கண்டுபிடித்து வருவார்கள்? எங்களின் பணிக்கூடங்கள் சிறியது. இன்னும் சிலர் இதை குடிசைகளில் உருவாக்குகிறார்கள். ஆனால் வீணை வாங்குகிறவர்கள் குளிரூட்டப்பட்ட கடைகளில் வாங்குகிறார்கள். அங்குதான் வீணைகளை தேர்வு செய்யவும் முடிகிறது.

வீணை 12,000 ரூபாய் முதலாக 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கைவினைஞர் தோராயமாக நாள் ஒன்றுக்கு முன்னூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை ஈட்ட முடிகிறது. அது அவர்களின் அன்றாட செலவுகளை சமாளிக்கவே போதுமானதாக இருக்கிறது.

வீட்டிலிருந்து இத்தொழிலை நடத்துவது பெரும் கடினமான ஒன்று. தொழிலாளருக்கான சம்பள உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு தவிர, வணிக ரீதியான மின் கட்டன உயர்வும் கூட வரும் இலாபத்தில் கை வைக்கிறது.

நாராயணின் ஒரு சிறிய நம்பிக்கை, சமீபத்தில் தஞ்சை வீணைக்கு கிடைத்த புவிசார் குறியிட்டு விருதுதான். தஞ்சை வீணைதான் அரசின் புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக்கருவி. இவ்விருது வீணை உருவாக்குபவர்களின் வாழ்க்கைத்தரம் உயர உதவுமென நம்புகிறார்கள். வீணை என்றில்லாமல் இவ்விருது மூலமாக தஞ்சை வீணை என்கிற பெயர் உலகளாவிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.

ஆனால் மேற்கொண்ட வளர்ச்சிக்கு மாநில அரசை நாடுகிறார்கள். இப்போது சேவை வரி இல்லை. அதேபோல் அரசு இசைக்கல்லூரிகளின் மூலமாக ஓரளவு தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை. மூத்த கைவினைஞர்களுக்கான உதவித்தொகை, புதிய பயிற்சி நிலையங்கள் ஆகியனவும் முக்கியமானவை. அப்போதுதான் இக்கலையையும், தலைமுறையையும் பாதுகாக்க இயலும்.

சிறப்புத்தன்மை வாய்ந்த சில வீணைகள் 35,000 முதலாக 40,000 வரையாக விறபனையாகின்றன. ஆனால் இவற்றை வாங்குவது வெளிநாட்டினர் மட்டுமே. அவர்கள் நம்முடைய கைத்தொழியையும், தலைமுறைகள் கடந்து வீணைகளை முன்னெடுக்கும் நம் உழைப்பையும் பாராட்டுகிறார்கள். அது பாராட்டாக மட்டுமே இருக்கிறது. உண்மையில் இக்குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேலாக உயர்த்தினால் மட்டுமே இக்கலை உயிர்ப்புடன் இயங்கும்.

இன்றைய (12-07-2015) தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவந்த, அபர்ணா கார்த்திகேயன் என்பவர் எழுதிய தொடர் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் தமிழில்.
முழுமையான ஆங்கில மூலக்கட்டுரை மற்றும் படங்களில்.

Advertisements

இந்நாள்!

வணக்கம்.

இன்று வரலாற்றில் முக்கியமான நாள். இந்திய வரலாறு எனக் கொள்வோம். அது என்ன என்பதை இந்த தளத்தின் முதல் பதிவிலேயே எழுதியிருந்தேன். இன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள். இதே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேர்ட்பிரஸ் மூலமாக இத்தளத்தைத் தொடங்கினேன்.

இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கிக் கொண்டே இருந்தேன். அப்பாவோடு உரையாட நேரம் வாய்த்தது. உரையாடல் என்றாலும் என்னால் சரிப்பா! என்றுதான் சொல்ல முடிந்தது.

நீ உழைக்கிறாய் தமிழ். ஆனால் அது போதாது. அக்கறையோடு உழைக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு வழி!

இன்றைக்கு அப்பா சொன்னது. சில மாதங்கள் முன்பிருந்தே, ஏன் பல வருடங்கள் முன்னரே இதைத்தான் சொல்லியிருக்கிறார். கடினம் என்பதை எட்டுவதே கடினமாக இருக்கிறது.

தளத்தை ஆரம்பிக்கையில் என்னவெல்லாம் எழுத நினைத்தேனோ அதில் ஒரு பத்து விழுக்காடு எழுதியிருப்பேன். அதிலும் எழுத நினைக்காதவற்றைதான் அதிகம் எழுதினேன். 120 பதிவுகளைத் தாண்டி எழுதியிருக்கிறேன். 2013 ஆண்டின் துவக்கத்தில் தினம் ஒரு பதிவு எழுதலாம் என்று திட்டமிட்டேன். இரண்டோ, மூன்றோ தொடர் பதிவுகள் எழுதிய தருணம். நான்காவது நாள் பல் துலக்கும்போது நண்பர் வந்தார். இன்னைக்கு என்ன போஸ்ட் என்றார். நாளொரு பதிவு திட்டம் இனிதே கைவிடப்பட்டது. மாறாக இன்னொரு தோழர் சொல்லியதன் பேரில் இன்னொரு பக்கம் எழுதி வருகிறேன்.

இனிமேல் என்னுடைய பரிசோதனை முயற்சிகளும், சொற்பமான-நீளமான அனுபவங்களும், ஓரளவேனும் தேர்ந்த (நேர்த்தியான தமிழ்க்) கட்டுரைகளும் மட்டுமே* இங்கே இடுவதாக உத்தேசம். *- மாறுதலுக்குட்பட்டது.

எல்லோருக்கும் நன்றி. இதைத் தாண்டி விரிவாகச் சொல்லும் மனநிலையில் நான் இல்லை. தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டியவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பரிசோதனை முயற்சிகள் என்று சொன்னேன் அல்லவா!

மொத்தமாய் 4-5 சிறுகதைகள் கைவசம் உள்ளன. கவிதை முயற்சிகள், சந்தப் பாடல்கள் என தனிப்பிரிவுகள் உண்டு. குறுநாவல், கட்டுரைத் தொகுப்புகள், தொழில்நுட்பம், வரலாறு, மொழியியல் எதையும் விடுவதாயில்லை. ஆனால் காலம் அதிகமாகத் தேவைப்படுகிறது.

அதிகம் என்பதைக் காட்டிலும் மிக அதிகம் தேவைப்படுகிறது!

சரி விடுங்கள்….

வழக்கம்போல என்னுடைய பரிசு இம்முறை (யும்) பாடல் வடிவில்!

வழக்கம்போல (இதுவும்) ராஜாவின் பாடல். (க்ளூ: இரு பாடகர்களில் ஒருவர் ஸ்ரேயா கோஷல்! )

என்னை அதிகம் வேலை வாங்கிய பாடல். ஏறத்தாழ அரை மணிநேரம் எழுதியிருப்பேன். ஆனால் மூன்று- நான்கு வாரங்கள் எடுத்துக்கொண்டேன். இசைக்கேற்ற வார்த்தைகள் அமைவதில் சில சிக்கல்கல் இருந்தன. பாடலின் இசையை  மட்டும் எடுத்துக்கொண்டு தீம் நானே எழுதியது. பாடலைக் கண்டுபிடித்தால் பாட இனிமையாக இருக்கும். வெறுமனே படித்தாலும், இனிமையாகவே (எனக்கு) இருக்கிறது.

பாடலைக் கண்டுபிடித்தவர்கள்.. கருத்தாக குறிப்பிடலாம்.

உந்தன் எண்ணத்தில்
வண்ணம் சேர்க்கிறாய்
சொந்தம் யாவையும்
ஒன்று சேர்க்கிறாய்  எப்படி?

பழைய நினைவுகள்
புதிய கனவுகள்
இவை யாவும் ஒன்றென
மாற்றிச் செல்கிறாய் எப்படி?

கனிச் சுவை போல
மெல்லச் சிரிப்பாயே!
தனித் திறனாலே
உளம் ஈர்ப்பாயே!
இந்த இன்பம் போதுமே வாழ்வு முழுமைக்கும் தோழனே!

சொற்கள் யாவிலும்
உள்ளம் தொடுகிறாய்! –இனித் தேனாய் வா!

(உந்தன் எண்ணத்தில்…)

இனியன சொல்லிச் சென்றாய்
புதியன கற்றுத் தந்தாய்
மறந்திடும் நினைவு யாவும்
மனதினில் பதியச் செய்தாய்

ஒரு குன்றின் மீது
இரவு இட்ட ஒளியாய்
பெரு மரத்தின் மீதில்
உள்ள ஒற்றைக் கனியாய்

தன்னிலை மறந்தெனை
உவகையில் கொல்கிறாய்
என்னிலை சொல்லவே
வார்த்தைகள் இல்லையே

புது காற்றாக பெரும் ஊற்றாக
மனங்கள் யாவிலும் மலர்ச்சி செய்கிறாய் தோழனே!

(உந்தன் எண்ணத்தில்…)

கணிப்புகள் கடந்து சென்றாய்
பணித்திடும் நிலையைக் கொண்டாய்
சினத்தினைப் போக்கி வைத்தாய்
மனத்தினில் உயரே நின்றாய்

மலர்ந்த பூவைப் போல
உன் உள்ளம் என்றும்
முதிர்ந்த கனியைப் போல
உன் சொற்கள் போதும்

பாதைகள் யாவிலும்
வழிகளைத் தருகிறாய்
பயணங்கள் யாவிலும்
துணையென வருகிறாய்

மழைத் துளியாக தேன் சுவையாக
இந்த இன்பம் போதுமே வாழ்வு முழுமைக்கும் தோழனே!

(உந்தன் எண்ணத்தில்… )
   

மூன்றால் ஆண்டில் தமிழ்!

வாழ்த்துங்கள் -வளர்கிறேன்!

நன்றி.

தோழர் ஒருவரின் கடிதம் ஒன்றை மீண்டும் படித்தேன். புத்தக வாசிப்பு அனுபவம் ஒன்றினை எழுதச் சொல்லியிருக்கிறார். அடுத்த பதிவாகக் கொண்டுவரத் திட்டம்.

பெண்கள் -ஆண்கள் ஒரு பகிர்வு.

இந்த தளத்தில் நான் பதிகிற ஒவ்வொரு பதிவும் சிறப்பானதாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு கருத்தை, கொள்கையை அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும் என்றே விரும்புவேன். அவ்வப்போது சில புத்தகங்கள், என் பயணங்கள், அனுபவங்கள் பற்றிய குறிப்பும், நானே எனக்காக எழுதி அழகு பார்த்த கதைகளும், கவிதைகளும், கொஞ்சமே கொஞ்சமாய் எனக்கே எனக்கான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளடக்கியதாக இந்த தளத்தை மாற்றிக் கொள்ள பிரயதனப்படுகிறேன்.

கடந்த (பிப்ரவரி இரண்டாம் வாரத்தில்!) இரு நாட்களாக  கவிதைகளை முயற்சிக்கிறேன். சூழலும் தோதாக இருக்கிறது. அதற்கான தேடலில் சுழல்கையில்  கிடைத்த ஒரு கட்டுரை எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டது. மிக நீண்ட கட்டுரை என்பதாலே கிட்டத்தட்ட மூன்று அமர்வுகளாக அதைப் படித்தேன். இதே கருத்துக்களை உள்ளடக்கிய சில  கட்டுரைகளை இதற்கு முன் நான் படித்திருப்பினும் இக்கட்டுரை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து முழுமையாக தந்து இறுதியாக ஒரு தீர்வுமாக இருக்கிறதாக முதல் வாசிப்பில்  படுகிறது.

இக்கட்டுரை குறித்த எனது கருத்துகளை இன்னொரு தனிப்பதிவில் சொல்வதுதான் நலம். கட்டுரை சற்றே நீளமானது. கட்டுரையின் தலைப்பிலேயே பொருள் விளங்கிவிடும்.  முழுதும் படிக்க விருப்பமே இல்லாவிட்டாலும் கடைசி வாக்கியத்தை மட்டும் படித்தாலே போதும். இதே பொருளில் என் தளத்தில் வெளிவந்த சில பதிவுகளையும் இறுதியில் தந்துள்ளேன்.

எழுதியது: யமுனா ராகவன்.

மதிப்பிற்குரிய ஆண்களே இதைப் படிப்பீராக – யமுனா ராகவன்

http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_22.html

நான் பல வேளைகளில் யோசித்தது உண்டு, என்ன தான் செய்யவேண்டும் நான், மனம் புழுங்கி, வருந்தி சொல்லவரும் விஷயங்கள் உங்கள் காதில் விழ, அங்கீகரிக்கப்பட, மாற்றம் வரும்படியான மனநிலை உருவாக என்று. இதுவரை பிடிப்படவில்லை, இனியாவது பிடிபடுமா எனவும் தெரியாது எனக்கு.

என்னையோ, இல்லை என்னை போலவே தொலைந்த முகங்கள் கொண்ட பெண்களையோ நீங்கள் கட்டாயம் பார்த்திருக்கலாம், பார்த்திருப்பீர்கள், பார்க்க நேரலாம். கடக்கும் நிமிடங்களை இறுகப்பற்றி, நேற்றைகளையும் நாளைகளையும் மறந்த எங்களுக்கு இன்னும் பேர் வைக்கப்படவில்லை. எங்களை கண்டுப்பிடிப்பது அத்தனை கஷ்டமில்லை. நாங்கள் அசின்களோ, தமன்னாக்களோ, ஐஷ்வர்யா ராய்களோ நிச்சயம் இல்லை. Matrimonial column தாங்கி வரும் Tall, Fair and Pretty பெண்கள், ஒரு 85% நாங்களாக இருக்க வாய்ப்பில்லை. சுமார் அழகாய், சுமார் புத்தியோடு, சுமார் பணத்தோடு, சுமார் படிப்போடு, சுமார் வேலையோடு எங்கள் வாழ்க்கையை கடந்து, வந்த வழி திரும்பிப் பார்த்து வெதும்பி குமுற மட்டுமே தெரிந்த இந்த முதுகெலும்பில்லா கூட்டத்தில் நானும் ஒருத்தி. பேச்சு வழக்கிற்கு நாங்களை நான் என்றே வைத்துக்கொள்ளலாமா… புரிந்து கொள்வீர்கள் என்று நம்புவோமாக!

மூலக்கடையில் நீங்கள் விட்ட சிகரெட் புகையின் ஊடே, நான் உங்களை கடந்திருப்பேன். வெண்டைக்காய், தக்காளி பார்த்து வாங்குவதில் முனைப்பாய் இருந்தப்போது தெரிந்த என் இடுப்பை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பஸ்ஸில் இடிபட்டு இடமின்றி நிற்க, என் பின்பகுதியை தேய்த்துக்கொண்டு உங்கள் உறுப்புகளின் வேட்கையை சிலநிமிடம் தீர்த்துக்கொள்ள, அருவெறுப்பாக உணர்ந்தாலும், வீட்டில் நேற்று என்னை அடித்ததில் வலித்த கன்னத்தையும் உடைந்த தன்மானத்தையும் யோசித்து கொண்டு ஒன்றும் சொல்லாது வந்ததில், பஸ் விட்டு இறங்கி, உங்கள் நண்பர்களிடம், “மாம்ஸ்! இன்னைக்கு பஸ்ல ஒரு Aunty செமயா company குடுத்தாடா!“ என்று பீற்றிக்கொள்ள வைத்தது நானாக இருக்கலாம். பல சமயங்களில் வெறும் மார்பகமாகவோ, பிட்டமாகவோ, இடுப்பாகவோ கூட நான் உங்களுக்கு தெரிந்திருப்பேன். “காலைலயே என்னமோ புருஷன் செத்தாப்புல எப்புடி இருக்குது பாரு, விடியாமூஞ்சி!“ என்று வாய் விட்டோ, மனத்திற்குள்ளேயோ திட்டினாலும், ஒன்றுமே உறைக்காது காப்பி போட்டு, காலை சமையல் செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுப்பவள் நானாக இருக்கலாம். அலுவலகத்தில் நேரத்திற்கு வந்து வேலையை மட்டுமே கவனித்து, பாராட்டப்பட்டால், “இதையும் அதையும் காட்டியே வேலை முடிச்சிக்கிறாளுங்க“ என்று சொன்னதும் என்னை பற்றி இருக்கும். ஆக மொத்தம் இப்படி நீங்கள் காணும் திசை, ஊர், நாடு முழுக்க இருப்பினும், அரூபமான என்னை நீங்கள் உற்றுத்தேடித்தான் கண்டுப்பிடிக்க முடியும்.

திமிர் பிடிச்ச பேச்சு, தெனாவட்டு பார்வை, எவன் கூடவேணும்னா போகலாம், குறைந்த பட்ச ஆடைகள் போடுவது, பிறப்புறுப்பை பற்றி பேசுவது ஆகியவைதான் பெண்ணியம் என்று நீங்கள் நினைத்திருப்பீரெனில் மேற்கொண்டு படிக்கவும். “எதற்கு இத்தனை பேர் பெண்ணியம் பற்றி பேசுதுங்க, அவர்களுக்கு தான் எத்தனை சலுகைகள், இன்னும் என்னதான் வேணும் இந்த எழவெடுத்ததுங்களுக்கு!“ என்று சொல்வீரேயானாலும் மேலே படிக்கவும்.

வேதக்காலத்தில், ஆணும் பெண்ணும் சமமாக இருந்ததாகவும், எல்லாமே கற்றுத்தெரிந்துக் கொண்டார்கள் பெண்கள் என்று பல வேதங்கள் சொல்கிறது. எப்போது இருந்து மாறியது இந்த நிலை. 500 BCக்கு மேலே, ஆரியர்களும், இஸ்லாமியர்களும் வந்ததால் குடைசாய தொடங்கியதாம் பெண்களுக்கான மரியாதை. மிதிப்பட்டு, நசுங்கி, அடுப்பங்கரை நெருப்போடு கரிபடிந்து, இரவுகளில் பேசாது புணர்ந்து, பிள்ளை பெத்துப்போடும் இயந்திரங்களாகி, பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சுதந்திரம் செத்து நடைபிணங்களாக மாறிப்போனார்கள். அவர்களுக்கு எதிராக நடந்த எதுவுமே வரலாற்றில் பதியவில்லை. பதிக்கப்பட்டவைகளும் ஆண்களின் வக்கிரத்திற்கு மைல்கல்லாகி போன மேற்கூறிய விஷயங்கள் தான். படங்களில் பார்த்தோ, புத்தகங்களில் படித்தோ இருக்கலாம் நீங்கள்.

Early vedic period சமயத்தில், பெண்கள் 20 வயது மேலே தான் பெரும்பாலும் மணந்ததார்களாம், திருமணம் செய்யும் ஆணை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இருந்ததாம், ஆனால் பெண்ணினம் அதன் பின் தாங்க நேர்ந்த துரதிர்ஷ்டங்கள் பல்வேறு. 70 வயது ஆணிற்கு கூட 10, 12 வயது பெண்ணைக்கூட திருமணம் செய்ய பால விவாக உரிமை, இன்னும் sathi ( உடன்கட்டை ஏறுதல் ), jauhar ( தோற்ற நாட்டின் பெண்கள் அத்தனை பேரும் அடுத்த நாட்டிற்கு உரிமை பொருள் ஆவது.. எவன் வேண்டுமானாலும் புணரும் குப்பைத்தொட்டி ஆவார்களாம். இது இன்னமும் நடந்துக்கொண்டே தானே இருக்கிறது ), தேவதாஸிகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று நீண்டுகொண்டே போகும் பட்டியல் முழுக்க கண்ணீர், ரத்தவாடை, திரும்ப பேசமுடியாது அடங்கி போன உறுப்புகள் தான், வரலாற்றின் பக்கங்கள் முழுக்க.

“இன்னும் எத்தனை நாட்கள் தான் பேசுவீர்கள் இதையே. ஆமாம் அந்த காலத்தில் இப்படி தான் இருந்தார்கள், இறந்தார்கள். அதற்கு இப்பொது என்ன செய்வது“ என்று ஒரு வேளை உங்களுக்கு தோணலாம். தோணும். பழைய கதையை விடுவோம். இப்போது நம் சமயத்திற்கு time travel செய்யலாம். பெண்கள் படிக்கிறார்கள், ஆண்களை காட்டிலும் பெரிதாய். பெண்கள் கால்வைக்காத துறையே இல்லை. இதனை கேட்கும்போது பெருமையாக இருக்கிறது, நிஜமாகவே. ஒடுக்கப்பட்டு இருந்த நிலையில் இருந்து எழுந்து நிற்க முயலும் கம்பீரம் தாங்கிய பெண்ணினம் பற்றி யோசிக்கும் போது. ஆனால் இத்தனைக்கு நடுவிலும், சமீபத்தில் பார்த்த ஒரு statistics சொல்வது உங்களோடு பகிரவா?

ஐக்கிய நாடுகள் சபை (UN) சொல்கிறது, ஒரு நிமிடத்திற்குள் 3 பெண்களுக்கு அநீதி நிகழ்கிறதாம், 7 நிமிடத்திற்குள் ஒரு பெண் கணவனாலோ அவன் குடும்பத்தினராலோ கொடுமைப் படுத்தப்படுகிறாளாம், 30 நிமிடத்திற்குள் ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் படுகிறாளாம். இந்த எண்கள் உங்களுக்கு ஏதாவது சொல்கிறதா.. சர்வ நிச்சயமாக ஒன்றும் சொல்லியிருக்காது. இப்படி வைத்துக்கொள்ளுங்களேன். இந்த கடிதம் நீங்கள் படித்து முடிக்கும் போது உங்கள் அறையின் உள்ளேயோ, நீங்கள் இருக்கும் அலுவலக அறையின் தரையிலோ, இந்த பெண்களை உங்கள் அருகிலோ, எதிரிலோ, நிற்கவோ அமரவோ கிடத்தியோ பாருங்கள். அரைமணி நேரத்தில் உங்களை சுற்றி 90 பெண்கள் அழுதுக் கொண்டிருக்கலாம். ஒரு நான்கு பெண்கள் அடிவாங்கி வெவ்வேறு உடல் மனக்காயத்தோடு அமர்ந்து கொண்டிருக்கலாம். ஒரு பெண் நிச்சயம் துணிகிழிந்து, ரத்தம் ஒழுக, ஒருவனாலோ அல்லது பலராலோ பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவோடோ, இன்றியோ கிடக்கலாம்.

அட போகட்டும் ஐய்யா… ஒரு மணிநேரத்தில் குவியும் உடல்களை கணக்கு போட உங்களுக்கெல்லாம் நேரம் இல்லை. உங்க நேரம் IPL, நித்தியானந்தா, Airtel, மதிய சாப்பாடு, Hero Honda, மட்ட வெயில், car, ரோட்டின் traffic, சிகரெட், காலை முதல் மாலை வரை உங்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் வேலை, உங்களை தாண்டி போகும் Figure, sms இன்னும் இது போல extra விஷயங்களை பார்க்கவே நேரம் போதாது. இதில் நீங்கள் தாண்டி போகும் 2 பெண்களில் நிச்சயம் ஒருவர் அவர் வீட்டிற்குள்ளேயே எதாவது ஒரு விதத்தில் domestic violence அனுபவிப்பவர் மற்றும் திருமணமான மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கட்டாயம் இக்கொடுமை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தன் வாழ்க்கையில் எல்லா பெண்களும் ஒரு முறையேனும் இப்படி கட்டாயம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார் என்னும் விஷயம், உங்களுக்கு தேவை இல்லாதது தான்.

பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், எப்படி அடக்க ஒடுக்கமாக நடக்கவேண்டும் என்று நம் 25 வயது முதல் 60 வயது வரை உள்ள கதாநாயகர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் கேட்டு கைத்தட்டவும், “சரியா சொன்னாருடா“ என்று சீட்டி அடிப்பது தானே உங்களுக்கு பிடிக்கும். நான் புடவையிலோ, சல்வாரிலோ, ஜீன்ஸிலோ, நைட்டியிலோ எந்த உடையில் இருந்தாலும் என்னை சந்தித்த 90% ஆண்கள் பேசும்போதோ, பேச்சின் ஊடேயோ என் மார்பையோ உடலையோ பார்த்தார்கள், மேய்ந்தார்கள். மீதமுள்ளவர்கள் பார்த்ததை நான் பார்க்கவில்லை, அதனால் அவர்களை இதில் இருந்து விட்டுவிடுவோம். ஆக நான் என்ன உடுத்தினாலும் பார்க்க தானே போகிறீர்கள். நான் ஒன்றும் பேச்சின் ஊடே உங்கள் கால்சராயின் zipper, பார்த்துக்கொண்டு பேசவில்லையே. நீங்கள் மட்டும் ஏன் இப்படி?

என் உடை என்னை, என்னுடைய ஒழுக்கத்தை பறைசாற்றும் என்பது தானே உங்கள் நியாயம். நான் அணியும் உடுப்புகளின் வழியே மறைந்தும் மறையாது தெரியும் என்னுடைய உடல் தானே உங்கள் காமத்தை தூண்டுகிறதாய் உங்கள் பக்கத்து தர்க்கம். என்னுடைய நடை உடை பாவனை பேச்சுதானே உங்களுக்கு சொல்கிறது நான் பத்தினியா, பரத்தையா என்று. நீங்களே சொல்லுங்கள், உங்கள் உலகில் யார் நல்ல பெண்கள்? யார் ஒரு மாதிரி பெண்கள்? உங்கள் தாய் உங்கள் தகப்பனை பார்த்ததில் ஒன்றும் நீங்கள் பிறக்கவில்லையே, ஆதிகால செயல் செய்து தானே நீங்கள் உருவாகியிருப்பீர்கள். உங்கள் தாயாரிடம் இருக்கும் மார்பகமோ, உங்கள் தங்கைகளின் இடுப்போ, உங்கள் அக்காக்களின் தொடையோ, உங்கள் அத்தையின் பிட்டமோ, உங்கள் சித்தியின் உதடோ, உங்களுக்கு உடல் பசியை தூண்டி விட்டிருக்கிறதா, அல்லது உங்கள் உறுப்புகளுக்கு இரத்தவோட்டம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கிறதா, அல்லது நீங்கள் உங்கள் இருட்டுகளின் தனிமையில் மேலே சொன்ன எதையாவது யோசித்துக்கொண்டே சுய இன்பம் அடைந்திருக்கிறீர்களா?…

சரி விடுங்க. விஷயத்திற்கு திரும்ப வருவோம். உங்களில் எத்தனை பேருக்கு Domestic violence definition மற்றும் அதன் வகைகள் தெரியும். உங்களின் அலுவலின் மத்தியில் இதை பற்றி தெரிந்திருந்தால் சந்தோஷம், ஒன்றும் செய்யாது போனாலும், அதாவது தெரிந்திருக்கிறதே என்று. தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். Domestic violence ஏகப்பட்ட கிளைகளின் கீழே இருப்பினும், நடப்பிற்காக 5 முக்கிய வகையாக்கி இருக்கிறார்கள். Physical and sexual abuse, Emotional or Psychological abuse, Verbal abuse, Financial abuse, Neglect இது தான் அவை என்கிறார்கள்.

உடலால் அத்துமீறல்… உங்கள் வடிகாலுக்காக… உங்களின் சுயவிருப்பு வெறுப்புகள், கோபங்கள், எரிச்சல்கள், கையாலாகாதத்தனங்கள் ஒட்டுமொத்தமாக வந்து கழித்துவிட்டு போகும் கழிவறைதான் நான். உங்கள் செயலிற்கு நீங்கள் கொடுக்கும் காரணம் என்னவாக இருந்தாலும், என் மேல் ஒரு விரல் கூட என் சம்மதமின்றி வைக்க,உங்களுக்கு உரிமை இல்லை, அது தெரியுமா உங்களுக்கு? பேச்சின் உச்சக்கட்டத்தில் என் கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் தீர்ந்து போனாலோ, அல்லது இல்லாது போனாலோ என்னை அடக்க உங்கள் விரல்களுக்கு தோதாக இருக்கும் என் கன்னமும், உங்கள் கைக்குள் சிக்கும் என் தலைமயிரும், முதுகில் விழுந்த இடிகளும், உங்கள் கால்கள் உதைத்ததில் ஒரு ஓரமாக சென்று சுருண்ட என் உடலும், அங்கங்கே கன்னிப்போய் வீங்கியோ, நடக்கமுடியாது நடந்ததோ, உதடு கிழிந்து வாயில் வைக்கும் உணவுப்பொருள் கிளப்பும் எரிச்சலும், நீங்கள் அடிக்கையில் உங்கள் காலை கட்டிக்கொண்டு அழுத என் பிள்ளைகளோ இன்னும் சில நாட்களில் மறக்கக்கூடும். “குடும்பம்னா அப்படி இப்படி தான் இருக்கும், adjust பண்ணிக்கிட்டு போம்மா. பாரு அவன் இன்னும் சாப்பிடாம இருக்கான், போய் சாப்பாடு போடு என்றும், அடிக்கிற பரதேசியின் கைதான் அணைக்கும்“ என்று சொல்வதும் என்னைப் போலவே ஒரு பெண்ணாக இருக்கலாம். கனன்று எரிந்து நீர்த்து அடங்கிப்போகும் என் கோபங்கள், நாளை நீங்கள் வந்து சொல்லும்,“ ஏதோ யோசனைல அடிச்சிட்டேன்“ என்பதில். நீங்கள் மன்னிப்பு என்ற ஏதோ கேட்டுவிட்டதால் மகாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள். உங்கள் மனதில் நடந்த இந்த சம்பவத்தின் தழும்புகள் நிற்காது, ஏனென்றால் இதை பற்றி சொன்ன ஒற்றை வார்த்தையில் கால் கழுவியது போல உங்கள் அழுக்குகள் அடித்துக்கொண்டு போய்விட்டது. எனக்கும் நினைவிருக்காது, நாளை வேறு ஒரு காரணத்திற்காக அடித்து வலிக்கும் வரை. நான் தான் அப்போதே சொன்னேனே, எனக்கு இன்னும் பெயர்வைக்கவில்லை என்று.

இது ஒருபுறம் இருக்க, உங்களின் உடல் வேட்கைக்கு இரையாகும் என் உடல் அடிக்கடி, எனக்கு பிடித்தோ, பிடிக்காமலோ. எனக்கு உச்சம் வந்ததா வரவில்லையா என்று நீங்கள் எண்ணும் அளவிற்கு இன்னும் எனக்கு படுக்கையில் உரிமை இல்லை. “பாதிநேரம் எப்போது முடித்து என் மேல் இருந்து எழுவாய், நான் தூங்க!“ என்று தான் தோணும். இதில் உனக்கு நான் எனக்கு பிடித்ததை செய்யச்சொல்லி கேட்டாலோ, நான் இங்கு உடல் வேட்கையால் உந்தப்பட்டவளாக, ஒரு ஒழுக்கம் நிறைந்த குடும்பப்பெண் அல்லாது scarlet woman ஆகி போவேன். எதுவும் சொல்லாமல் இருந்தால் “இப்ப எல்லாம் இதை செய்றியா, அதை செய்றியான்னு கேட்கிறது இல்லையே! வேற எவனாவது இருக்கானாடி!“ என்று சிரித்துக்கொண்டே என்மேல் இயங்கும் போது, நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாய் நான் என்ன யோசிக்கவேண்டும் என்று நீங்களே சொல்லுங்களேன்.

Verbal abuse and Psychological abuse and Emotional abuse… They go hand in hand. “என்னடி எதிர்த்து எதிர்த்து பேசுற?“ என்றோ “ உங்க குடும்பத்தில எவனக்கும் மானரோஷமே இல்லை. என் தலை எழுத்து இப்படி ஒரு கேடுகெட்ட குடும்பத்தில் பொண்ணெடுத்திருக்கேன்“ என்றோ அடைமொழியாக சேரும் நாய், பேய், சனியன் பிடிச்சதே, போன்றவைகளோ, தவறு என்று ஒரு நாளும் உங்களுக்கு தோன்றியிருக்காது. வீட்டின் நான்கு சுவத்துக்குள் நடக்கிற விஷயத்தை யாரோடும் பேசி குடும்பமானத்தை நடுதெருவிற்கு கொண்டு வரக்கூடாது என்பது உங்கள் புரட்டுகள் வெளியேறாமல் இருக்க நீங்களே சொல்லிக்கொள்ளும் சட்டம். ’’வீட்டை விட்டு போடி மயிரு! எனக்கு ஆயிரம் பொண்ணு கிடைக்கும். உன்னைய எந்த நாயி சீந்துதுன்னு பார்ப்போம்“ என்று காறிதுப்புவதை வாங்கி கொள்வது தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. தனித்து சமூகத்தில் நிற்பின், இது போலவே மேயும் மிருகங்கள் பலவற்றை தனித்து சந்திக்க எனக்கு தெம்பு இல்லாது போயிருக்கலாம்.

Financial abuse… உங்கள் வீட்டு தேவைக்கோ, உங்கள் படிப்பு செலவிற்கோ, உங்கள் வாழ்கை நிலையை உயர்த்திக்கொள்ளவோ, ஈடுக்கட்டவோ, உங்கள் தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடன் அடைக்கவோ, உங்களால் வாங்க இயலாது நிற்கும் கனவான நிலம், வீடு, கார், போன்றவைகளை சட்டென நீங்கள் வரதட்சணையாய் சம்பாதித்ததில் உடைந்து உட்கார்ந்த என் குடும்பம் இன்னும் எழவே இல்லை. அது எப்படி இத்தனை நாள் உங்கள் அப்பா போலவே கஷ்டப்பட்டு, எனக்கு படிப்பிற்கு வழி செய்து, உண்ண உடுத்த உடைக்கொடுத்து, தங்க நிழல் கொடுத்து, இப்போது என்னை திருமணமும் செய்து கொடுத்த வீட்டாருக்கு, மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்க கூட உங்களோடு நான் தினம் வழக்காட வேண்டியிருக்கிறது. நான் மாதம் பூராவும் சம்பாத்தித்த காசு எப்படி செலவழிக்கவேண்டும் என்று நீங்கள் போட்டு கொடுக்கும் மாதாந்திர பட்ஜெட்டில், எனக்கு தேவையானவற்றை உங்களிடம் ஒருமுறைக்கு 10 முறை சொன்னால் தான், “சே.. போய் தொலை… அடுத்த மாசம் இப்படி எல்லாம் என்னை கேட்காம செலவு வைக்காதே!“ என்று சொல்லும் உங்களை நான் தினம் தினம் சகித்து, மேலும் உங்கள் வீட்டாரின் மீதும் பாசம் பரிவு பொழிந்து, என் தாய் தந்தையரை புறக்கணித்து, என்னுடைய சுயத்தை சுட்டுக்கொண்டே என் நாட்களை போக்கவேண்டும். உங்களை போலவே வேலைக்கு சென்று வரினும், என் அன்றாடைய அல்லல்களை விட என் சம்பளக்கவர் முழுக்க வாங்குவதில் நீங்கள் காட்டும் அக்கறைதான் அதிகம். உங்களின் வேலை நேரம் போலவே இருப்பினும், வீட்டிற்கு வந்ததும் அடுக்களையில் என் வேலை தொடங்கும். உங்கள் சாயந்திரங்கள் சுலபமானது. “அப்படி என்னதான் புடுங்கினியோ எப்ப பாரு அசதியா இருக்குன்னு அலுத்துக்கறே“ என்று சலித்துக்கொள்ளும் உங்களை நான் பொறுத்துக்கொள்வேன். என் முதுகெலும்பில் பாதி ஒடித்து உங்களுக்கும், மீதியை இந்த சமூகத்திற்கும் கொடுத்துவிட்ட கர்ணபரம்பரை நான்.

இப்போது புதிதாக கேட்க தொடங்கி இருக்கும் வார்த்தை ALPHA FEMALE… குடும்ப தலைவன் Alpha male என்ற நிலை மாறிப்போய் கொண்டே இருக்கிறது. இதுவரை மேலே சொன்ன எல்லாமே ஏதோ படிக்காத அப்பிராணிகளுக்கு மட்டும் நடப்பதாய் கொள்ளவேண்டாம். படித்த வேலைக்கு செல்லும் நடுத்தர மக்களை பற்றி தான் சொல்கிறேன். இதில் தொழிற்கல்வி படித்தவர்களும் உண்டு, மருத்துவம், எஞ்சினியரிங் படித்த பெண்களும் இது போன்ற வாழ்க்கையில் சிக்கி சின்னாபின்னப் படுவதாய் கேள்வி. பெண் தலையெடுத்து வேலைக்கு சென்று சம்பாதிக்க எல்லா பொறுப்புகளையும் அவள் தலையில் கட்டிவிட்டு, ஹாயாக சுற்றி வரும் ஆண்கள் பெருகி வருவதாய் சொல்கிறார்கள். அது புதிதாய் மாறிவரும் கலாச்சாரத்தின் படிக்கட்டாய் இருக்கிறதாம். இதில் என்ன கொடுமைகள் நிகழுமோ.

இப்படி ஒரு ஆசையோ பாசமோ இல்லாத தாம்பத்தியத்தில் சிக்கி, இப்படி்யே உழன்று எங்கேயாவது கொஞ்சம் பாசம் கிடைக்காதா என்று vulnerable state of mind உடன் இருக்கும் நான் தான் நீங்கள் தெருவிலும், பஸ்ஸிலும், ஆட்டோவிலும், கடையிலும், பார்க்கும் அரூபமான 85%. நான் என் வீட்டிலேயும் சிக்கி, வேலையிலேயும் கஷ்டப்பட்டு, புருஷனால் exploit செய்யப்பட்டு, ignore செய்யப்பட்டு, மிதியடி ஆகிப்போகிறேன். உடல் தேவைகள், companionship, அன்பு, இப்படி கடையில் கிடைக்காதவைகளுக்காக ஏங்கியவள் நான். என் கணவன் என்னை தொட்டு பல மாதங்கள் ஆனது என்றும் நான் புலம்பலாம். இல்லை என்னை தினம் தொடுகிறான் மூர்க்கமாய் என்றும் சொல்லலாம்.
ஒரு balance இல்லாத வாழ்க்கையில் திரியும் என்னை வெகு சுலபமாய் சில பாசவார்த்தைகள் கொண்டு மயக்கமுடியும். கணவனிடம் கிடைக்காத ஆசையும், அங்கீகாரமும், கொடுக்கும் கணவன் அல்லாத உங்களுக்கு என் உடலையும் தருவேனாயிருக்கும். என் நம்பிக்கையையும் உடலையும் சேர்த்து, நீங்கள் எனக்கு தெரிந்தோ தெரியாமல் ஒளித்து எடுக்கும் படங்களும், வீடியோக்களும் உங்களுக்கும் உங்களை போலவே உள்ளவர்களுக்கும் வெகு கிறக்கமான விஷயங்கள். அப்படி உங்கள் படங்களில் மனதில் ஒட்டியது முதல் பெருத்த மார்பகங்கள், குடுவை முதல் மடிப்பு விழும் இடுப்புகள், அழகான கனத்த பிட்டம், வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு முகங்கள், வெவ்வேறு சிரிப்புகள் ஆகியவற்றை தாங்கிவரும் நான் நிஜத்தில் வெகுவாய் மனம் நொந்து நொடிந்து போன ஒரு அம்மா, ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு மகள், ஒரு குடும்பதலைவி.

ஆக மொத்தம் உங்கள் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் என்னால் ஏதோ ஒரு ஆதாயம் ஏதோ ஒரு விதத்தில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய பாதுகாப்பு, தேவைகள், விருப்பங்கள், பிடிக்காதவைகள் அனைத்தும் என்னோடேயே அடங்கி போகும். அதை பற்றி யோசிக்கவோ பேசவோ செயல்படவோ உங்களுக்கு நேரம் இல்லை தான். ஒரு கட்டத்திற்கு மேல் உங்கள் வன்மத்தை நியாயம் என்று சொல்லி எனக்குள் நானே அடங்குவேன். மனைவி என்றால் என் உரிமைகளை, என் சொந்தங்களை, என் நட்புக்களை மறக்கவேண்டும். ஆமாம் என்னை அடிப்பது நியாயம், என் பணத்தை பிடுங்குவது நியாயம், என்னை வார்த்தையால் அவமானப்படுத்தி குத்துவது நியாயம், என் உடல் தேவைகளை நிராகரிப்பது நியாயம் இப்படி அடுக்கிக்கொண்டே போகிறேன் என் கல்லறைவரை.

இதுவரை மேற்கூறிய எல்லாமும் உங்களால் வெகு சுலபமாய் ஒதுக்கித்தள்ளப்படலாம். ஏனென்றால் நீங்கள் சொல்லும் பதில், எங்க வீட்டு பொண்ணுங்க இந்த மாதிரி இல்லை. எங்க வீட்டுல நாங்க இது மாதிரி எல்லாம் வளரல. நாங்க நல்ல குடும்பம். இது தானே உங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. நம் வீடு சுத்தமாக இருப்பின் போதும், பக்கத்து வீட்டு சுவற்றில் எவன் சிறுநீர் கழித்தால் நமக்கென்ன.

இந்த அழகிய உலகில், வாழ்க்கையை நீங்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் பார்த்து ரசித்து, அலசி ஆராய்ந்து அனுபவியுங்கள். நான் அதற்கு தடையாக நின்றதே இல்லை. நான் உங்கள் எதிரி அல்ல. உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் எத்தனை அழகாக ஏற்கிறீர்களோ அத்தனைக்கு சுலபமாய் என்னை உங்களாலும் உங்களை போன்ற மற்றவர்கள் செதுக்கும் எல்லைக்குள், எந்த ஒரு குறுகுறுப்பும் இன்றி உங்களால் எதிர்பார்க்கப்படுவது போல வாழவேண்டும் என்று சொல்கிறீர்கள், அதை தான் ஏற்க முடியவில்லை. சுயம் தொலைக்கும் எங்களுக்கு வாழ்க்கை தினம் சமையலில் இடும் உப்பு புளி மிளகாய் தான்.

எப்படி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் என் சுதந்திரத்தை முழுக்க எடுத்துக்கொண்டு, உங்களால் கட்டப்பட்ட எல்லைக்குள், சுற்றி வரும் தூரம் மட்டும் நடக்க தோதாய் கழுத்தில் கயிறும் கட்டி, “என் மனைவிக்கு எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு“ என்று வாய் கூசாது சொல்கிறீர். உங்களின் “எல்லாவிதத்திற்கு“ எது எல்லை கோடு.

நான் உங்களிடம் இவற்றை எல்லாம் பற்றி சொல்லியது, தனித்து இயங்க இல்லை. என் உலகம் இயல்பாய் நடக்க நீங்கள் வேண்டும். பகிர்தலும், புரிதலும் கொண்டு உங்களை போலவே என்னையும் நடத்த வேண்டும் என்பதே நான் இறுதியில் முன்வைக்கும் ஒன்று. எனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும்.

யமுனா ராகவன்
http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_22.html

இணைப்புகள்:

இன்னோர் ஆதங்கமும்- கவிதையும்! (தமிழ்)

சட்டம்! (எழுதும் இடம்)

நாலு வரியில் நான்!

வணக்கம்.
விரும்பி எடுத்துக்கொண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பதிவு. இது சற்றே பழைய விஷயம்! (தமிழ்) இணையத்தில் அன்றாடம் வாசிப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு தளம் நாலு வரி நோட்டு. நச்ன்னு நாலு வரி, நாள்தோறும் எனும் இலக்கோடு (!) 365 நாட்கள் இயங்கி வந்த தளம். ஏறக்குறைய 400 பதிவுகளையும், எண்ணற்ற பாடல் குறிப்புகளையும் கொண்ட தளம். இப்போது புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
அதற்காக இப்பதிவா? இல்லை இல்லை.. அதே தளத்தில் விருந்தினர் பதிவாக நானும் எழுதியிருந்தேன். அதன் முழுமையான வடிவம் இங்கே!
தாமரை இலை-நீர் நீதானா?
தனியொரு அன்றில் நீதானா?|
புயல் தரும் தென்றல் நீதானா?
புதையல் நீதானா?

பாடல்: கருகரு விழிகளால்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்: கார்த்திக் 

தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

தனியொரு அன்றில் என்றால்?

இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்

(நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)

“அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே..விட்டுப்பிரியாதே”

என்று எழுதியிருக்கிறார்.
சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
(நாலுவரி நோட்டு – நவம்பர்-10-2013)
இத்தோடு கதை நிற்கவில்லை! இன்னொரு பதிவும் அனுப்பியிருந்தேன். தவிர்க்கமுடியாத சூழல் காரணமாக அது பதிவாகவில்லை. எனவே வெளிவராத அந்த பதிவும் இங்கே!
********************************************************************
பயணங்கள் எல்லாமே சுவாரசியமானவைதான். ஆனாலும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொன்றும் சுவாரசியமானது.

நடந்து செல்வது, வண்டிகளில், சாலைகளில் செல்வது, கப்பலில், வானத்தில் என எப்படியெல்லாமுமே பயணப்படுவது இப்போதுள்ள வளர்ச்சி நிலையில் சாத்தியமாகிறது.
ஆனால் பயண தூரத்தை நம்மால் குறைக்க முடியுமா? அதிலும் நெடுந்தூர பயணத்தை எப்படிக் குறைப்பது?
பழங்கதை ஒன்று உண்டு.
ஒரு தந்தை மகனிடம் இதே கேள்வியைக் கேட்பார். வீடு திரும்ப நிறைய தூரம் நடக்க வேண்டும். எனவே பயண தூரத்தைக் குறைத்துவிடு என்பார். மகன் புரியாமல் விழிப்பான். அவனை அதைச் சொல்லி அடித்தபடியே வீடு வந்து சேர்வார். மறுநாள் மனைவியின் ஆலோசனையைக் கேட்டு பயணதூரத்தைக் குறைத்து விடுவான்.
எப்படி?
திரும்பி வருகிற வழியெல்லாம், ஏதாவது சுவாரசியமாக உரையாடியபடியே வருவான். அதனால் நடந்த களைப்பு தெரியாமல் இருவரும் வீடு வந்து சேருவர். இப்படிப் போகும் கதை…
அதே போலான உணர்வைச் சொல்லும் ஒரு பாடல்…

பாடல்: பூங்காற்றே பூங்காற்றே
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்: பென்னி தயாள் 

மொழி தெரியாப் பாதையிலும்
அர்த்தங்கள் இன்று புரிகிறதே!
 வழித்துணையாய் நீ வந்தால்
போகும் தூரம் குறைகிறதே!
 
மனதுக்குப் பிடித்தவளோ, காதலியோ, யாரோ,எப்படியோ விருப்பமானவர் ஒருவர் உடன் வந்தால், வழித்துணையாய் வந்தால்  போகும் தூரம் குறையாதா என்ன?

நன்றி: என்.சொக்கன்
நாலுவரிநோட்டு

இணையத்தின் சமூகப் பயன்பாடு

இணையத்தின் சமூகப் பயன்பாடு:

சமூகமும், இணையமும்:

சமூகம் என்பது தனிமனிதர்களால் ஆனது என பொதுவாக கூறிவிட முடியும். தனிமனிதர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு இருப்பியல் பிரச்சினைகளைக் கையாள்வதே சமூகம் என்றொரு கருத்தும் உண்டு. சூழலின் பொருட்டும், வாழ்வியல் முறைகளின் சமீபத்திய மாற்றத்தின் பொருட்டும்  தற்போதைய சமூகம் இணையத்தினை அதிகளவில் பயன்படுத்துகிறது. பெரும்பாலும் இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்கிறபோதும், சமூகத்தின் பல்வேறுநிலைகளில் உள்ளவர்களும் அன்றாடம் இணையத்தினை பயன்படுத்தியாக வேண்டிய சூழல் வலுப்பெறும் காலம் இது.

கல்வித் தேடலுக்கு, அறிவுத் தேடலுக்கு, வணிக விருத்திக்கு, நண்பர் குழாமோடு பேச, சமூக-வலைதளங்களில் பொழுதுபோக்க, இன்னும் இன்னும் எத்தனையோ வடிவங்களில் இன்றைய சூழலில் இணையம் பயன்பட்டு வருகிறது.

அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கத்திற்கும், அழிவிற்குமாய்  பயன்படுவதைப் போலவே அறிவியல் வளர்ச்சியின் ஒரு அங்கமான இணையத்தின் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும்.

இணையம் என்றால் இணைப்பது என்று பொருள் கொண்டோமேயானால், சாட்சாத் இன்றைய சமூகத்தினை, அதன் மாந்தர்களை எப்படியேனும் இணைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளது இணையம்.

உரையாடும் களம்:

தனிமனித உரையாடல் கிட்டத்தட்ட மறைந்துவரும் சமூகத்தில், முக்கியமாக இளைஞர்களுக்கு அதற்கான வடிகாலாக இணையம் மாறியிருக்கிறது. மணிக்கணக்கில் நேரத்தை இணையத்தில் செலவிடும் இளைஞர்களின் மனப்போக்கில் இதை எளிதாக அறிய முடியும். ஆம். உலகளவில் சமூக வலைத்தளங்களுள் முதன்மையானதாக கருதப்படும் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தும் உலக நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. அதே நேரம் இந்தியாவில் 8 முதல் 12 வயது வரையிலான 89 சதவீதம் குழந்தைகள் பெற்றோர் அனுமதியுடன் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அணுகுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது  ஆறுதலான விஷயமாகும்.  

ஏதோ தூர தேசத்தில் இருக்கும் மகனிடமோ, உறவினரிடமோ நாம் உரையாடுவதற்கான வாய்ப்பையும் இணையம் வழங்குகிறது. அருகில் அமர்ந்து பேசும் வாய்ப்பினை, உரையாடல்கள் நீர்த்துப் போன இக்காலத்தில் இணையம் எளிய முறையில் பக்கத்தில் அமர்ந்து பேசுவதுபோல் உணரும் வகையில் Skype முதலான பலவழிகளைக் காட்டுகிறது.

அலுவல்:

வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக அலுவலகப் பணிகளை முடித்துவிடுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. பிரபலமான பெருநிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இதனைப் பரிந்துரைக்கின்றன. இதன்மூலம் நிறுவனத்தின் பணிகள் விரைவாக முடிந்துவிடுவதுடன், ஊழியர்களுக்கு காலம், பணம், பயண அலைச்சல் மிச்சமாவதுடன் மனநிறைவும் ஏற்படுகிறது.

தேடல்:

மனித மூளையானது எல்லாத் தகவல்களையும் சேகரித்து தன்னகத்தே அழியாமல் பாதுகாக்கக் கூடியதல்ல. இதன் காரணமாக, நம்முடைய ஞாபக மறதிகளுக்கான மருந்தாக வாய்த்திருக்கிறது இணைய தேடுபொறிகள் (Search engines).

எதுவானாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும் என்கிற அளவு நம்பிக்கையை அந்நிறுவனம் மக்களிடையே, பல்வேறு துறைசார்ந்தவர்களிடையே ஏற்படுத்துகிறது. மறந்து போன ஏதோ ஒரு கவிதை வரியின் ஒரு வாக்கியத்தை உள்ளிட்டால் மொத்தக் கவிதைத் தொகுப்பையும் கண்முன் நிறுத்துகின்றன இணைய தேடுபொறிகள். அவ்வகையில் இணையத் தமிழ் முன்னெப்போதும் அடையாத வளர்ச்சியை கடந்த சில ஆண்டுகளில் பெற்றுள்ளது. தமிழில் உள்ள  வளங்கள் யாவும் மின்வடிவில் சேகரிக்கப்படுவதன் மூலமாக எதிர்காலத் தலைமுறையினருக்குமாக தொண்டாற்றுகிறது இணையம். இதற்கு உறுதுணையாக இயங்கும் பல இலட்சக்கணக்கான தமிழர்களும் நன்றிக்குரியவர்கள்.

வலைப்பூக்கள்வலைத்தளங்கள்:

யார் வேண்டுமானாலும் எழுதலாம். எந்தப் பிரிவின் கீழும் எழுதலாம். நாமே அதனை வெளியிடலாம். நம்முடைய கருத்துகளுக்கு, பதிவுகளுக்கு உடனடியாக எதிர்வினையைப் பெறலாம் என்கிறபடியாக பல்வேறு நல்லியல்புகளைக் கொண்டிருப்பதாலோ என்னவோ தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கையும், அதில் இயங்குபவர்களின் பங்களிப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சாமானியர்களும் இதில் பங்களிக்கத் துவங்கியிருப்பதால், தமிழ்ச்சமூகத்தின் வாசிப்பு வளம் பெருகத் தொடங்கியிருப்பதை உணரலாம். அத்தோடு, புதிய எழுத்தாளர்கள் பலரும் உருவாகிவருவதும் மறுக்க முடியாதது.

மின்வாசிப்புக் களம்:
சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம் வரும் 2015 ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. அதற்குள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை டிஜிட்டல் மயமாக்கி ஆவணப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியின் பிரபல எழுத்தாளர்களாகக் கருதப்படும் பலருடைய படைப்புகளும் இணையத்தில் மின் நூல்களாகக் கிடைக்கின்றன என்றபோதிலும் முழுமையாக இதுவரை இல்லை என்பது வருத்தத்திற்குரியது. ஓலைச்சுவடிகளை அச்சுநூல்களாக மாற்றிய சென்ற நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாக, காலத்தால் அழியாத வகையில் முக்கியமான படைப்புகளை மின்வடிவில் ஆவணப்படுத்துவது இப்போது முக்கியமானதாகும். முக்கியமாக நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளை முழுமையாக ஆவணப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. இது அடுத்த தலைமுறையினருக்கான அறிவுத் தொண்டாகும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

மின்வழிக் கற்றல்

 இணைய வழிக் கற்றல் பெருகத் தொடங்கியிருப்பதன் மூலம், மாணவர்களுக்கும், கற்றலின்பால் ஆர்வங்கொண்ட பலருக்கும் இணையம் ஆசானாக விளங்கத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைகழகங்கள், கல்வி அமைப்புகள் இணையவழி கற்றலை சான்றிதழ்கள் மூலம் அங்கீகரிப்பதும், தொடர்ச்சியாக அதை முன்னெடுப்பதும் ஆரோக்கியமான நிகழ்வுகள். இதன்மூலம், இருந்த இடத்தில் இருந்தே, வீட்டிலிருந்தே கல்வி பயில்வதற்கான வாய்ப்பை ஆர்வமுள்ள எல்லோருக்கும் வழங்குகிறது இணையம்.

வணிகபொருளாதார பயன்பாடுகள்:

வணிக ரீதியாகவும் இணையத்தினை பயன்படுத்தி இலாபம் ஈட்ட முடியும். இணையவழி வணிக பரிவர்த்தனைகளின் தாக்கம் தற்போது சாதாரண மக்களையும் எட்டியுள்ளதால், மின் வணிகம் நல்ல மதிப்பையும், வளர்ச்சியையும் பெற்றுள்ளது. அதிலும் தற்போதைய இளைஞர் சமுதாயத்தின் தேவைகள் அனைத்தும் இணையத்தின் மூலமாக எளிதில் கிடைக்கின்றன. சலுகை விலையில் சகலவிதமான பொருட்களும் (அன்றாடத் தேவைக்கான பொருட்கள், அழகுசாதன/அலங்காரப் பொருட்கள், புத்தகங்கள், ஒலி/ஒளி குறுந்தகடுகள், இன்னும் இன்னும் நிறைய பொருட்கள்) மின்வணிக நிறுவனங்கள் மூலமாக இணையத்தில் கிடைக்கிறது. இவ்வாறாக வாங்கப்படும் பொருட்களின் தரமும், விலையும் வாடிக்கையாளர்களிடையே நம்பகத்தன்மையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இணையத்தில் இவ்வகை வணிகங்களின் எதிர்காலம் வளமாகவே உள்ளது. மக்களின் நேரத்தினையும், பணத்தினையும் மிச்சப்படுத்துவதற்கு இவை உதவியாக உள்ளன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பிரபல அமெரிக்க மின்வணிக நிறுவனமான அமேசான் ஆளில்லா விமானங்களின் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலைக்களஞ்சியங்கள்அகராதிகள்:

இணையவெளியின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் தமிழ்ப் பக்கத்திற்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் நெடும் பங்களிப்பின் மூலமாக, ஆரம்பிக்கப்பட்டே பத்தே ஆண்டுகளில் இந்திய மொழிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் விக்கிபீடியாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் 57 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளை எழுதியுள்ளனர். உலக அளவில் 287 மொழிகளில் 60-வது இடத்தில் தமிழ் விக்கிபீடியா உள்ளது.

இணையத்தில் உள்ள மின் அகராதிகள், மொழிமாற்றிகள் மூலமாக பல்வேறு மொழிகளையோ, அல்லது குறிப்பிட்ட வேற்றுமொழிச் சொல்லுக்கான பொருளையோ உடனடியாக அறிய முடிகிறது.

சமூக மாற்றங்கள்:

சமீப ஆண்டுகளில் ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் நடைபெற்ற விரைவான தகவல் பரிமாற்றங்களின் காரணமாய் எகிப்து, துனீஷியா முதலான சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்தியாவிலும் சமூகவலைதளங்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பல்வேறு இந்திய அரசியல் மற்றும் சமூக  நிகழ்வுகளின் பின்னணியில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களின் தாக்கங்கள், எதிரொலிகள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு சமூகவலைதளங்கள் பெருமளவு உதவும். சில அரசியல் கட்சிகள் இணையப் பிரச்சாரத்தினை வலுப்படுத்த இவற்றையே நம்பியிருக்கின்றன. பெரும்பாலான இளைஞர்கள் இவற்றைப் பயன்படுத்துவதும், உடனடியாக எதிர்வினை தருவதுமாய் இருப்பதால் சமூக நிகழ்வுகள் இதில் முக்கியத்துவப்படுத்துகிறது. ஆனாலும் ஆழமான விவாதங்கள் அதிகளவில் இப்போதுவரை இல்லாமல்தான் இருக்கிறது. அடுத்துவரும் காலங்களில் ஆழமான சமூக விவாதங்களுக்கு சமூக வலைதளங்களின் மூலமாக இணையம் களம் அமைக்கக் கூடும்.

 

இறுதியாக:

சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சத்தைத் தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் இந்தியா அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். தற்போது சீனா 30 கோடி பயனாளிகளோடு முதல் இடத்திலும், அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பயனாளிகளோடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இணையம் என்பதை நல்லவிதமாக அணுகினால், அது நன்மையை மட்டுமே பயக்கிறது. அதை ஆயுதமாகக் கருதினால் அழிவையே தந்துவிடும். சமூகத்தின் பார்வையில் இணையம் இருமுனையிலும் கூரானக் கத்தியாகவே பெரும்பாலும் அணுகப்படுகிறது. அப்படியே வைத்துக் கொண்டாலும், அதை பாதுகாப்பாக கையாளுபவர்களுக்கு யாதொரு அழிவுமில்லை. இதே எண்ணத்தை இணையவெளியில் உலவும் அனைவரும், இணையத்தை அன்றாடம் பயன்படுத்தும் அனைவரும் மனதில் நிறுத்தினால் அனைத்தும் நலமே.

குறிப்பு:

*-பல்வேறு இணையதளங்கள், வார/மாத/நாளிதழ்களில் வெளியான தகவல்கள், புள்ளிவிபரங்கள் இங்கு உதாரணத்திற்காக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.