கவிதைத் தொகுப்புகள்

யாரோ ஒருவர்

மெதுவாக நீள்கிறது என் பயணம்
சோற்றுப்பானை மேலிருந்து
வெளியேறும் நீராவி போல
ஒவ்வொரு நொடியும் பயம்காட்டி
செல்லவில்லை

ஏதாவதொரு தருணம் மட்டும்
தடுமாற வைக்கிறது
நீண்ட பயணத்தில்
எங்கோ ஓரிடத்தில்
கால் தட்டும் கல்லைப் போல

யாரோ ஒருவர் எப்போதும் போல
என்னை அரவணைக்கிறார்.
தாயில்லா மழலைகளின் தாய் போல

யாரோ ஒருவரின் கரிசனம்
எனக்கு கிடைக்கிறது
கோடையில் தாகத்தை
தீர்க்கும் இளநீர் போல

யாரேனும் ஒருவர்
தினமும் கைகுலுக்குகிறார்
புது முல்லைப்
பூவை வருடியது போல

யாரேனும் ஒருவர்
அடிக்கடி முதுகில்
தட்டிக்கொடுக்கிறார்
நீண்ட தூரம் செல்லும்
படகின் துடுப்பைப் போல

யாரேனும் ஒருவர்
மனம் விட்டுச் சிரிக்கிறார்
வெடித்துச் சிதறும்
ஐம்பது வாலா பட்டாசைப் போல

ஏதோ ஒரு கணத்தில்
யாரோ ஒரு தோழர்
என் மேல்
கோபம் கொண்டு
நானறியாமல் பிரியக் கூடும்
நெடுவரிசை பிளக்கும்
எறும்பைப் போல

 

பிறிதொரு கணத்தில்
இன்னொரு தோழர்
என் மேல்
அன்பு கொண்டு
நானறிய சேரக் கூடும்
தலைவாழை விருந்தில் வைத்த
இரண்டாவது இனிப்பு போல

 

எப்போதெல்லாம்
மனம் குதூகலிக்கிறதோ
அப்போதெல்லாம்
யாரோ ஒருவர் மூலம்
விரும்பும் இசை காற்றில்
கசிந்து வருகிறது

 

Advertisements

’போல’ கவிதைகள்

தமிழ் மின்னிதழ் – சுதந்திரம் -2015 -ல் நான் எழுதிய கவிதைகள் சில வெளியாகி உள்ளது.
அடிப்படையில் தமிழில் இம்மாதிரியான வடிவங்களின் பெயர்கள் என்னவென்று தெரியாத காரணத்தால் பொதுவாக கவிதைகள் என்றே அழைக்கப்படுகிறது. இதெல்லாம் கவிதையென்றால் பாரதியார் எழுதியதெல்லாம் என்ன என்றெல்லாம் கூட கேள்விகள் எழுகின்றன. கொஞ்சம் நாசூக்காக புதுக்கவிதைகள் என்று சொல்லிக்கொள்ளலாம் என்றாலும் அதுவும் சரியாகப் படவில்லை.

கட்டுரை எழுதவே எனக்கு விருப்பமிருந்தது. ஆனாலும் நேரம் இன்மையால் ஏற்கனவே எழுதி வைத்தவற்றிலிருந்து எடுத்து அனுப்பிவிட்டேன். இனி கவிதைகளை இதழ்களுக்கு அனுப்புவது குறித்து தீர யோசிக்க வேண்டியிருக்கும்.

என்னளவில் உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் ஒற்றை வரிமேல் தீராத நம்பிக்கை உண்டு. உரைநடையின் சிக்கனந்தான் கவிதை என்பதையே நான் எடுத்துக்கொள்கிறேன். உரைநடையில் கவித்துவம் கூட்ட பயன்படும் உவமைகளை இங்கு கருப்பொருளாக எடுத்திருக்கிறேன்.

உவமை என்பதல்லாமல் இருந்த மூன்று கவிதைகள் இதழில் வெளியாகவில்லை. அதற்கும் இதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக, எழுத்தாளர் ஜெயமோகன் இவ்விதழ் குறித்த பதிவில், கவிதைகள் பெரும் சோர்வை அளித்தன என்று குறிப்பிட்டுள்ளார். நல்லவேளையாக எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இனியும் நான் கவிதைகள் எழுத முயற்சிப்பேன். ஆனால் இதழ்களில் பிரசுரிப்பது குறித்து நன்கு யோசிப்பேன்.
ஆகவே கடைசியாக,
வேறு யாரேனும் இதழை வாசிக்க விரும்பினால்
வாசிக்க‌ / தரவிறக்க: https://drive.google.com/file/d/0BwdaEHEd7U78dWxXLWlQNl9jcWc/edit

நான் எழுதியவை:

 

அலை தழுவிய
பாதம் போல
குளிர்கிறது

நெடுநாள் கழித்து
வீடு திரும்பிய
என் மனம்

*
இப்போதெல்லாம்
தினமும் ஒருமுறை
வீதியை மழை நனைக்கிறது

உன் நினைவுகள்
என் மனதை நிறைப்பதைப் போல

*

உறக்கமில்லாத
இரவுகளில் செவியை
நிறைக்கும் இசை போலவே
நினைவு அடுக்குகளில் இருந்து
மீட்டெடுத்த உன் நினைவுகளும்
மனதை நிறைக்கின்றன

*

மூடிய சன்னலின்
ஏதோ ஒரு இடைவெளி வழியே
நுழைந்து குளிரேற்றும்
சில் காற்றைப் போல
பேசாது கழித்த
நாட்களுக்கெல்லாம்
சேர்த்து வைத்து
நியாயம் செய்கிறது
அந்த அலைபேசிக் குரல்!

*

அலமாரி

நான் அடுக்கி வைத்ததை
நீ கலைத்து விடுகிறாய்
நான் அடுக்கி வைப்பதிலேயே
களைத்து விடுகிறேன்

*

விரல் பட்டதும் எழும்பும்
இசை போல
உன் குரல்
என்னை அழைக்கையில்
அனிச்சையாக
எழுந்து நடக்கின்றன
என் கால்கள்

*

எங்கேயோ கேட்டு
மறக்க முடியாத
சந்தப்பாடலைப் போல

உதடுகள்
நினைத்த போதெல்லாம்
முணுமுணுக்கிறது
உன் பெயரை 

*

மழைத் தூறலின் நடுவே
நின்று பருகிய தேநீர் போல
துளித்துளியாக உற்சாகம்
சேர்க்கிறது உன் வார்த்தைகள்

*

எப்போதாவது உன் நினைவுகள்
எப்படியாவது பேனா முனைக்குள்
நுழைந்து விடுகிறது.

மெய்க்குள்ளே உயிர் போல
மைக்குள்ளே கலந்து விடுகிறது

அவ்வப்போது இப்படி
ஏதாவது எழுதத் தூண்டுகிறது

*

முருங்கை இலை சேர்த்து
உருக்கிய நெய் வாசம் போல

நினைக்கையில் எல்லாம்
நெஞ்சோடு கலந்துவிடுகிறது
நெடுநாள் கழித்து சந்தித்த
நண்பனின் நினைவுகள்

சில கவிதைகள்!

நிறைய வாசிக்க வேண்டும் என்கிற தீராத ஆர்வத்தின் பொருட்டு கவிதைகளையும் வாசித்து, உணர்ந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறேன். மாதிரிக்குக் கொஞ்சம் மட்டும் இங்கே!

கவிஞர் தாமரையின் ஒரு கவிதை. ஆனந்த விகடனில் கடந்த ஆண்டு வெளியானது.

கொடி

மெல்ல முன்நகர்ந்து
கிடைத்த கம்பைப்
பிடித்து எழுந்து
இறுகப் பற்றிச் சுற்றிப்
பிணைந்திருக்கும்
இளம் அவரைக்கொடி
நினைவுபடுத்துகிறது.
கணவன் இல்லாத
அல்லது இருந்தும் இல்லாத
ஒற்றைப் பிள்ளை
வைத்திருக்கும்
எல்லாத் தாய்மார்களையும்!

 

பேயோன் எழுதிய இக்கவிதைகள் நள்ளிரவும் கடலும் நானும் தொகுப்பில் இருந்தவை… 

 

நான் நடக்காத இடங்களில்
நின்று, யோசித்து
நடக்கிறது பல்லி

*

காலியான ஆட்டோவிற்கு
வேகத்தைப் பார்!

*

செய்வதையே செய்யும்
இந்தக் கடலுக்குத்தான்
எத்தனை சத்தம்

 

பாவேந்தர் பாரதி பற்றி எழுதியது

பைந்த மிழ்த்தேர்
      பாகன்! அவனொரு
செந்தமிழ்த் தேனீ
       சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக்
        குயில்! இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக்
         கவிழ்க்கும் கவிமுரசு! 

இந்நாள்!

வணக்கம்.

இன்று வரலாற்றில் முக்கியமான நாள். இந்திய வரலாறு எனக் கொள்வோம். அது என்ன என்பதை இந்த தளத்தின் முதல் பதிவிலேயே எழுதியிருந்தேன். இன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள். இதே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேர்ட்பிரஸ் மூலமாக இத்தளத்தைத் தொடங்கினேன்.

இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கிக் கொண்டே இருந்தேன். அப்பாவோடு உரையாட நேரம் வாய்த்தது. உரையாடல் என்றாலும் என்னால் சரிப்பா! என்றுதான் சொல்ல முடிந்தது.

நீ உழைக்கிறாய் தமிழ். ஆனால் அது போதாது. அக்கறையோடு உழைக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு வழி!

இன்றைக்கு அப்பா சொன்னது. சில மாதங்கள் முன்பிருந்தே, ஏன் பல வருடங்கள் முன்னரே இதைத்தான் சொல்லியிருக்கிறார். கடினம் என்பதை எட்டுவதே கடினமாக இருக்கிறது.

தளத்தை ஆரம்பிக்கையில் என்னவெல்லாம் எழுத நினைத்தேனோ அதில் ஒரு பத்து விழுக்காடு எழுதியிருப்பேன். அதிலும் எழுத நினைக்காதவற்றைதான் அதிகம் எழுதினேன். 120 பதிவுகளைத் தாண்டி எழுதியிருக்கிறேன். 2013 ஆண்டின் துவக்கத்தில் தினம் ஒரு பதிவு எழுதலாம் என்று திட்டமிட்டேன். இரண்டோ, மூன்றோ தொடர் பதிவுகள் எழுதிய தருணம். நான்காவது நாள் பல் துலக்கும்போது நண்பர் வந்தார். இன்னைக்கு என்ன போஸ்ட் என்றார். நாளொரு பதிவு திட்டம் இனிதே கைவிடப்பட்டது. மாறாக இன்னொரு தோழர் சொல்லியதன் பேரில் இன்னொரு பக்கம் எழுதி வருகிறேன்.

இனிமேல் என்னுடைய பரிசோதனை முயற்சிகளும், சொற்பமான-நீளமான அனுபவங்களும், ஓரளவேனும் தேர்ந்த (நேர்த்தியான தமிழ்க்) கட்டுரைகளும் மட்டுமே* இங்கே இடுவதாக உத்தேசம். *- மாறுதலுக்குட்பட்டது.

எல்லோருக்கும் நன்றி. இதைத் தாண்டி விரிவாகச் சொல்லும் மனநிலையில் நான் இல்லை. தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டியவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பரிசோதனை முயற்சிகள் என்று சொன்னேன் அல்லவா!

மொத்தமாய் 4-5 சிறுகதைகள் கைவசம் உள்ளன. கவிதை முயற்சிகள், சந்தப் பாடல்கள் என தனிப்பிரிவுகள் உண்டு. குறுநாவல், கட்டுரைத் தொகுப்புகள், தொழில்நுட்பம், வரலாறு, மொழியியல் எதையும் விடுவதாயில்லை. ஆனால் காலம் அதிகமாகத் தேவைப்படுகிறது.

அதிகம் என்பதைக் காட்டிலும் மிக அதிகம் தேவைப்படுகிறது!

சரி விடுங்கள்….

வழக்கம்போல என்னுடைய பரிசு இம்முறை (யும்) பாடல் வடிவில்!

வழக்கம்போல (இதுவும்) ராஜாவின் பாடல். (க்ளூ: இரு பாடகர்களில் ஒருவர் ஸ்ரேயா கோஷல்! )

என்னை அதிகம் வேலை வாங்கிய பாடல். ஏறத்தாழ அரை மணிநேரம் எழுதியிருப்பேன். ஆனால் மூன்று- நான்கு வாரங்கள் எடுத்துக்கொண்டேன். இசைக்கேற்ற வார்த்தைகள் அமைவதில் சில சிக்கல்கல் இருந்தன. பாடலின் இசையை  மட்டும் எடுத்துக்கொண்டு தீம் நானே எழுதியது. பாடலைக் கண்டுபிடித்தால் பாட இனிமையாக இருக்கும். வெறுமனே படித்தாலும், இனிமையாகவே (எனக்கு) இருக்கிறது.

பாடலைக் கண்டுபிடித்தவர்கள்.. கருத்தாக குறிப்பிடலாம்.

உந்தன் எண்ணத்தில்
வண்ணம் சேர்க்கிறாய்
சொந்தம் யாவையும்
ஒன்று சேர்க்கிறாய்  எப்படி?

பழைய நினைவுகள்
புதிய கனவுகள்
இவை யாவும் ஒன்றென
மாற்றிச் செல்கிறாய் எப்படி?

கனிச் சுவை போல
மெல்லச் சிரிப்பாயே!
தனித் திறனாலே
உளம் ஈர்ப்பாயே!
இந்த இன்பம் போதுமே வாழ்வு முழுமைக்கும் தோழனே!

சொற்கள் யாவிலும்
உள்ளம் தொடுகிறாய்! –இனித் தேனாய் வா!

(உந்தன் எண்ணத்தில்…)

இனியன சொல்லிச் சென்றாய்
புதியன கற்றுத் தந்தாய்
மறந்திடும் நினைவு யாவும்
மனதினில் பதியச் செய்தாய்

ஒரு குன்றின் மீது
இரவு இட்ட ஒளியாய்
பெரு மரத்தின் மீதில்
உள்ள ஒற்றைக் கனியாய்

தன்னிலை மறந்தெனை
உவகையில் கொல்கிறாய்
என்னிலை சொல்லவே
வார்த்தைகள் இல்லையே

புது காற்றாக பெரும் ஊற்றாக
மனங்கள் யாவிலும் மலர்ச்சி செய்கிறாய் தோழனே!

(உந்தன் எண்ணத்தில்…)

கணிப்புகள் கடந்து சென்றாய்
பணித்திடும் நிலையைக் கொண்டாய்
சினத்தினைப் போக்கி வைத்தாய்
மனத்தினில் உயரே நின்றாய்

மலர்ந்த பூவைப் போல
உன் உள்ளம் என்றும்
முதிர்ந்த கனியைப் போல
உன் சொற்கள் போதும்

பாதைகள் யாவிலும்
வழிகளைத் தருகிறாய்
பயணங்கள் யாவிலும்
துணையென வருகிறாய்

மழைத் துளியாக தேன் சுவையாக
இந்த இன்பம் போதுமே வாழ்வு முழுமைக்கும் தோழனே!

(உந்தன் எண்ணத்தில்… )
   

மூன்றால் ஆண்டில் தமிழ்!

வாழ்த்துங்கள் -வளர்கிறேன்!

நன்றி.

தோழர் ஒருவரின் கடிதம் ஒன்றை மீண்டும் படித்தேன். புத்தக வாசிப்பு அனுபவம் ஒன்றினை எழுதச் சொல்லியிருக்கிறார். அடுத்த பதிவாகக் கொண்டுவரத் திட்டம்.

ஹைக்கூ!

கவிதைகளில் ஒரு ரகம் ஹைக்கூ! தமிழ்ப்படுத்தினால், குறும் பா! (சரிதானே?)  ஜப்பானைத் தாயகமாகக் கொண்ட ஹைக்கூ கவிதைகள் (இதுவும் சரிதானா?) பல்வேறு விதமான எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் இப்போதும் எண்ணற்றோரால் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.

எனக்கு ஒரு சில ஹைக்கூக்கள் கிடைத்தன. அதை இங்கு பதிகிறேன். எழுதியவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் என்பதைக் குறிப்பிடுகிறேன்.

 ஓடி விளையாடு பாப்பா
ஏக்கத்துடன் படித்தாள்
‘ஊனமுற்ற சிறுமி’!

தயிர் சாதம்
சுமங்கலி ஆனது.
ஊறுகாய் வைத்ததால்!

கருத்த பெண்
புகுந்தகம் வந்தாள்.
கலர் டி.வி யோடு!

காக்கும் கடவுளுக்கு கலக்கம்
கடற்கரையை நெருங்க நெருங்க.
-விநாயகர் சதுர்த்தி.

கறை படிந்த வேட்டிகள்
மேடையில் முழங்குகின்றன.
கறைகளை நீக்குவதாக!

எறும்புகளுக்குக் கொண்டாட்டம்!
தவறி விழுந்த சோறு.
செய்யாமல் செய்த உதவி.

எழுதியது: அந்தோணி பிரதீஸ் 

படித்த மாத்திரத்தில் யாருக்கேனும் சுருக்கமான ‘நறுக்கு’கள் தோன்றியிருக்கலாம். நான் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.