கல்கி

தந்தை

பெரியார்

இன்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் . சென்ற வருடம் இதே நாளில் பதிவுகள் ஏதும் எழுதாது இருந்தமைக்கு சிலர் ஏன் பதிவொன்றும் இடவில்லை என்று கேட்டனர். இம்முறை சற்றே பெரியாரை உங்களுக்கு என் அளவில் அறிமுகம் செய்கிறேன்.

மிகவும் கோபமூட்டும் ஒரு விடயம் என்னவென்றால், பெரியார் வெறுமனே கடவுள் எதிர்ப்பாளராக அறியப்படுவதுதான். அதைத் தாண்டி, அவருடைய பல புரட்சிகரமான கருத்துகள் பல சமூகத்தில் பரவலாக அறிமுகப்படுத்தப்படக் கூட இல்லை என்பது வேதனையானது. அதற்கு ஒருவிதத்தில் அவர் துவங்கிய இயக்கத்தினரே காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

கடவுள் மறுப்பைத் தாண்டி அப்படி என்ன செய்திருக்கிறார்? சொல்லியிருக்கிறார்? என்பதெல்லாம் மிதமான வாசிப்பின் ஊடே அறியக்கூடிய உண்மைகளாகும். பெயருக்குப் பின்னே சாதி அடையாளம் இருக்க வேண்டாம் என்று சொல்லி, அதை செயல்படுத்தியவர் பெரியார்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை-பகுத்தறிவு இயக்கத்தால் கவரப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதக அடிப்படையில் அல்லாமல் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் புரட்சிகரமான பெயர்களையும் வைத்தனர். இன்றைக்கு அந்தப் போக்கு முற்றிலும் மாறி வருவதும், அதன் விளைவுகளும் கண்கூடு.

உங்கள் வாரிசு யார் என்று கேட்கப்பட்டபோது பெரியார் அளித்த பதில் இது. என் சிந்தனைகள். பெரியாரின் சிந்தனைகள் விலைமதிப்பற்றவை.

முன்னெப்போதையும்விட பெரியாரின் தேவை இப்போது அதிகரித்திருக்கிறது. அவருக்குப் பிறகு, நாத்திகவாதத்தை சீற்றத்துடன் பிரசாரம் செய்த இன்னொரு தலைவர் இங்கே தோன்றவே இல்லை. இந்த நிமிடம் வரை.

நமக்கு முன் வாழ்ந்தவன் எவனாக இருந்தாலும்,குருவாக இருந்தாலும், மதத்தலைவனாக இருந்தாலும், மற்றவனாக இருந்தாலும் அவன் கருத்து களை அப்படியே ஏற்கக் கூடாது. அவன் கருத்துகள் எவ்வளவு உயர்ந்தனவாக இருந்தாலும் அதனை நம் அறிவைக் கொண்டு சிந்தித்து அவை தற்காலத்திற்கு ஏற்றதா என்று பார்த்து ஏற்கவேண்டும்.

நம் பெண்கள் குறைந்த பட்சம் 20 வயது வரை படிக்க வைக்க வேண் டும். அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும்.வாழ்விற்கு ஏற்ற வருவாயுள்ள தொழிலை அவர்களுக்குக் கற்பிக்கவேண்டும். அதன்பின்            அவர்களாகத் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். வாழ்க்கையில் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும். மனிதன் என்றால்-பகுத்தறிவுள்ளவன் என்றால், அதற்குப் பொருள் கவலையற்று வாழ்வதேயாகும்!

மக்களை ஒன்றாக்குவதற்காக என்று ஏற்பட்டதுதான் மதங்களாகும் என்கிறார்கள். ஆனால், இதன் பலன் என்னவாயிற்றென்றால் மனிதன் ஒற்றுமையாக வாழ முடியவில்லை. பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

  • இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்மற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது

’பெரியாரும் நானும் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்திருக்கிறோம் என்று சொல்வது சரியல்ல! பெரியாரை நான் ஒருபோதும் பிரிந்தது கிடையாது! நான் எங்கிருந்தேனோ, அங்கெல்லாம்  என் உள்ளத்திலே பெரியார் இருப்பார். அவர் உள்ளத்தில் நான் இருப்பேன்!’

‘இந்த ஆட்சி, தந்தை பெரியாருக்கு எங்களுடைய காணிக்கை!’.

  -பேரறிஞர் அண்ணாத்துரை

சீரார் ஈ.வெ.ரா அவர்களுக்கும் எனக்கும் உள்ள அக நகும் நட்பு யார் என்ன சொன்ன போதிலும் என்றும் குறையாது.

                                          – இராஜகோபாலாச்சாரி (கவர்னர் ஜெனரலாக இருந்த போது எழுதியது)

தமிழ்நாட்டில் இராமசாமியின் பிரசங்கம் ஒன்றைமட்டுந்தான், என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். -எழுத்தாளர் கல்கி

பெரியாரே சொன்னது.

நான் யார்?

ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு “யோக்கிதை” இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதி மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத் தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்.

பெரியார் குறித்து இதே தளத்தில் உள்ள பிற கட்டுரைகள்:

தந்தையோடு…

தந்தையோடு…-02

தந்தையோடு..-03

பெரியார் பற்றி கல்கி சொன்னவை

மின் நூல்களாகப் படிக்க நான் பரிந்துரைப்பவை:

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியாரே எழுதிய தன் வரலாறு (சிறுநூல்)

உயர் எண்ணங்கள்

அச்சு நூல்களில் நான் பரிந்துரைப்பவை:

தமிழர் தந்தை -சாமி. சிதம்பரனார்

மிக விரைவில் இன்னும் சில நூல்களையும் இதே இடத்தில் பரிந்துரைக்கிறேன்.

பதிவில் இடம்பெற்ற கருத்துக்கள் யாவும், பல்வேறு புத்தகங்கள், தளங்கள், பதிவுகளில் இருந்து எடுத்தாளப்பட்டவையே. பெரியாரை முடிந்தமட்டும் மாற்றுக்கோணத்தில் அறிமுகம் செய்ய வேண்டி அன்றி வேறெதுவும் இல்லை.

“தொண்டு செய்து பழுத்த பழம்.
தூய தாடி மார்பில் விழும்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும்.
மனக் குகையில் சிறுத்தை எழும்.”
-பாவேந்தர் பாரதிதாசன் பெரியார் குறித்து பாடியது

Advertisements

ஆடித்திருநாள்!

இதோ ஆடி 18.

கடந்த ஆண்டுக்கு முன்புவரை இதே நாளை அனிச்சையாக கடந்து கொண்டிருந்த நான்

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

என்ற வரிகளைப் படிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலிருந்து உணரத் தொடங்கி

அருள்மொழிவர்மனின் அருமை நண்பனே! நீடூழி நீ வாழ்வாயாக! வீரத் தமிழரின் மரபில் உன் திருநாமம் என்றும் நிலைத்து விளங்குவதாக!

என்று படித்து முடிக்கிறவரையில் ஒரு கற்பனா உலகிற்குள் சஞ்சரித்துவிட்ட மாயையைப் பெற்றேன் என்பதே உண்மை.

பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களுடன் கல்கி

கடந்த ஆண்டின் ஆடி 17-ம் நாள் ட்விட்டரில் சாதாரணமாக முதல் அத்தியாயமான ஆடித்திருநாள் -ல் இருந்து சிலவரிகளை ட்வீட்டினேன். அண்ணன் சொல்லியதற்கிணங்க அவற்றை பதிவாகத் தொகுத்து ஆடித்திருநாள் என்ற பதிவை இட்டேன்.

அதன்மூலமாக நான் பெற்ற அனுபவங்கள் கொஞ்சநஞ்சமல்ல..  என் தளத்தின் வருகையிலும் அதன்பின்தான் ஏற்றம் தொடங்கியது. அந்த பரவசத்தை இன்னொரு முறை (கொஞ்சமாக) பதிவிடுகிறேன்.

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்……

…..ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்……

….அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ….

     “வடவாறு பொங்கி வருது
          வந்து பாருங்கள், பள்ளியரே!
     வெள்ளாறு விரைந்து வருது
          வேடிக்கை பாருங்கள், தோழியரே!
     காவேரி புரண்டு வருது
          காண வாருங்கள், பாங்கியரே!”

 இணையத்தில் கண்ட சில தகவல்கள் இங்கே:

  • கல்கி  K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார்.
  • பொன்னியின் செல்வன் இதுவரை மூன்று முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  •  இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன்,சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள்.

மூத்த பதிவர் ரஞ்சனி அவர்களுக்கும், அண்ணன் ஓஜஸ் அவர்களுக்கும் நன்றி சொல்லி முடிப்பதே என்னளவில் பொருத்தமானது, மரியாதையான செயலுமாகும். நன்றி.

கூடுதலாகப் படிக்க:

பொன்னியின் செல்வன் திறனாய்வு – வைகோ

படமும், சில தகவல்களும் , கூடுதல் இணைப்பும் : தமிழ் விக்கிபீடியா.
பின் குறிப்பு: பொன்னியின் செல்வன் குறித்த கூடுதல் தகவல்களை விக்கிபீடியாவில் இட்டு வைத்தால் அடுத்தடுத்த புது வாசகர்களுக்கு சிறப்பாயிருக்கும். அங்கே இன்னும் பதியப்படாத தகவல்கள் ஏராளம்.

பொன்னியின் செல்வன் விக்கிபீடியா பக்கத்திற்கு செல்ல 

சுழற்காற்று நினைவுகள்-4

முந்தைய பகுதிகளைப் படிக்க:

முந்தைய அத்தியாயத்தின் முடிவில் ஊமை ராணியார் என்று நான்  குறிப்பிட்டது கொஞ்சம் தவறுதான். காரணம் இருக்கிறது. ஆரம்பகட்டத்தில் பொன்னியின் செல்வரைக் காவிரியாற்றின் (பொன்னி) வெள்ளத்தினின்று அருள்மொழிவர்மரைக் காப்பாற்றிய காவேரி அம்மனாகக் குறிப்பிடுகிறார் கல்கி.

இதில் வந்தியத்தேவன் தன்னுடைய குலப்பெருமை குறித்த பாடல் ஒன்றைப் பாட, அதற்கு பொருள் கூறுகிறான் ஆழ்வார்க்கடியான்.

வந்தியத்தேவன் பாடல்

 

தொடர்ந்து,  காவேரி அம்மன் குறித்த பல தகவல்களை பொன்னியின் செல்வர் கூறுகிறார். இலங்கையின் பலபகுதிகளில் அப்போதிருந்த குளிர்காய்ச்சல் காரணமாய் நிலவிய மோசமான சூழல்கள் குறித்தும் கூறுகிறார். எத்தனை துயர் வந்திடினும் காவேரி அம்மன் நம்மைக் காப்பாற்றுவாள் என நம்பிக்கை சொல்கிறார்.

இப்போது காவேரி அம்மனே மீண்டும் பொன்னியின் செல்வரிடத்து வந்து பேசுகிறாள். சைகைகளால்தான். உடனே மூவரும் காவேரி அம்மனைப் பின்தொடர்கின்றனர்.

ஒரு குகை போன்ற பகுதிக்கு வந்த அவர்களை, அங்கேயே நிறுத்தி பொன்னியின் செல்வரை மட்டும் முன்னே அழைக்கிறாள் காவேரி அம்மன். அங்கே தன் வரலாற்றையே சித்திரங்களாக வரைந்துவைத்து சுட்டிக்காட்டினாள். சில சுவாரசியமான சம்பவங்கள் அனைத்தும் அங்கே சித்திரங்களாக இருந்தன. தொடர்ச்சியாக, இளவரசருக்கு நேரக்கூடிய அபாயங்களையும் சித்திரங்களாய் காட்டினாள்.

அதுவரையில் வந்தியத்தேவனோ காவேரி அம்மனின் முக அமைப்பும். பழுவூர் இளையராணி நந்தினியின் முக அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு வியக்கிறான்.

காவேரி அம்மன் அவர்கள் மூவரையும் கூட்டிக்கொண்டு குகையின் மேல்பகுதிக்கு (அதாவது யானை ஸ்தூபம் ஒன்றின் உச்சிக்கு) வருகிறாள். சற்று முன்பு வரை அவர்கள் தங்கியிருந்த மகாசேனர் அரண்மனை தீக்கிரையாகிக் கொண்டிருந்தது. வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் மீண்டும் அதிர்ச்சியடைகிறார்கள். அருள்மொழிவர்மரோ சாதாரணமாக இதெல்லாம் முன்பே தெரியும் என்கிறார்.

சித்திரங்களின் பாஷை பற்றிய அந்த உரையாடல் உண்மையிலேயே சரியான இடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் குறித்த நமது கேள்விகளை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்துகிறது. உதட்டோரம் சிறிதளவேனும் புன்னகையைப் படரச் செய்வதில் ஆங்காங்கே ஆழ்வார்க்கடியானும், வல்லவரையனும் போட்டியிடுவதுபோல் தோன்றுகிறது.

யானை ஸ்தூபத்தில் இருந்து எழுகிற மூவரும் காலையில் புறப்படுகின்றனர். தூரத்தில் குதிரைகளில் சில வீரர்கள் கையில் வேலோடு வருகிறார்கள். அவர்கள் அருகில் வரும் முன்பு பொன்னியின் செல்வரோ வந்தியத்தேவனுடன்  சண்டைபிடித்து வாட்போரில் இறங்கினார். வந்தியத்தேவனோ சண்டையிடுவதைக் காட்டிலும் தற்காத்துக் கொள்வதே சிறப்பென தாக்குப்பிடிக்கிறான். இருவருக்குமிடையே வாட்போர் சூடுபிடிக்கிறது. எதிரே வந்தவர்கள் சேனாதிபதி கொடும்பாளூர்ப் பெரியவேளார்பூதி விக்கிரம கேசரியும், பார்பேந்திரனும்தான். அவர்கள் பல வீரர்களுடன் பெரும் சப்தங்களுடன் வந்த காரணத்தாலாயே இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதாக அறியமுடிகிறது. வீரர்களின் ஊடே ஒரு பெண் யானையின் அம்பாரியிலிருந்து இறங்கி வருகிறாள். அருள்மொழிவர்மருக்கும், வந்தியத்தேவனுக்கும் இடையேயான வாட்போரை மற்ற வீரர்களைப் போல ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவளை கூட்டத்தின் ஊடே கண்டுகொண்ட வந்தியத்தேவன் ஒரு கணம் திடுக்கிட்டான். அதை பயன்படுத்திய அருள்மொழிவர்மர் அவனின் வாளைத் தட்டிவிட்டார். அதைக் கண்டு சிரித்தாள் அப்பெண். அவள் வேறு யாராய் இருக்கமுடியும்?

ஆம். சமுத்திரக்குமாரிதான்! பூங்குழலிதான்!

-நினைவுகள் அழியாது

 

 

சுழல்காற்று நினைவுகள்-3

தவறவிட்ட தருணங்களுக்காக வருத்தங்கள்.

மீண்டும் பொன்னியின் செல்வன் தொடரை ஆரம்பிப்பதாய் முடிவு. மகிழ்ச்சிதானே!

புதியவர்களுக்காக….
புதுவெள்ள நினைவுகள்
புதுவெள்ள நினைவுகள்-2
புது வெள்ள நினைவுகள்-3
சுழல் காற்று நினைவுகள்-1
சுழல்காற்று நினைவுகள்-2
சுழல்காற்று நினைவுகள் பற்றிய இரண்டாம் தொடரில் பொன்னியின் செல்வன் குறித்த அறிமுகத்தோடு நிறுத்தியிருந்தேன். இப்போது மேலும் தொடர்கிறேன்.

பொன்னியின் செல்வனை அருகில் கண்டு அதிசயத்தில் ஆழ்ந்திருந்தான் வந்தியத்தேவன். அவனிடமிருந்த இளையபிராட்டி குந்தவைதேவியின் (கையாலேயே எழுதப்பட்ட) ஓலையைப் பார்த்து வந்தியத்தேவனை அணைத்துப் பாராட்டுகிறார். அவனோ, சொர்க்கத்தில் இருப்பதாய் உணர்கிறான். எல்லாமே பொன்னியின் செல்வனின் மாயம்தான்!

இதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வனுக்கு, சோழர் படையினர் ஏலேல சிங்கன் என்கிற இலங்கையின் தமிழ் மன்னனின் கதையை சரித்திர நடனக் கூத்தாக காண்பிக்கின்றனர்.கூத்து முடிந்தபின் பொன்னியின் செல்வர் ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் இருவரையும் அழைத்து ஓலை குறித்து கேட்கிறார். அதிலிருந்து,

  • குந்தவை தேவி அவரை உடனே, பழையாறை அரண்மனைக்கு வரச் சொல்கிறார்.
  • ஆதித்த கரிகாலர் அவரை காஞ்சிக்கு வரச் சொல்கிறார்.
  • சோழ நாட்டு முதல்மந்திரி அநிருத்த பிரம்மராயர் அவரை இலங்கையிலேயே இருக்கச் சொல்கிறார்.

மூன்றும் மூன்றுவிதமாய் இருப்பது கண்டு பொன்னியின் செல்வர் திகைக்கிறார்.

இதனிடையே சில சம்பவங்களைப் பற்றி எடுத்துரைக்கிறார் பொன்னியின் செல்வன். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் சோழ ராஜ்ஜியத்தின் நிலையை எடுத்துரைக்கிறார்கள்.இறுதியாக பார்பேந்திரப் பல்லவனைச் சந்திக்க அருள்மொழிவர்மர் மற்ற வீர்ர்கள் துணையின்றி, இவர்கள் இருவரை மட்டும் அழைத்துச் செல்கின்றார்.

வழியில் இலங்கையின் புத்த சிலைகளையும், தமிழகத்தின் சிவன் சிலைகளையும் ஒப்பிட்டு, அதைப்போல் பெரிதாய் சிவன் சிலைகள் சோழ நாட்டில் எழுப்ப விருப்பம் சொல்கிறார். அங்கு அவருக்கு ரகசியச் செய்தி கிடைக்கிறது. மூவரும் அநுராதபுரம் விரைகின்றனர்.

அநுராதபுரத்தின் சிறப்புகளை கல்கி அள்ளித் தெளிக்கிறார் வந்தியத்தேவன் எண்ண அலைகளின் மூலமாய். அநுராதபுரத்தில்  முவரும் இருட்டும்வரை காத்திருக்கின்றனர். அங்கே திருவிழா களைகட்டியிருந்தது ஆழ்வார்க்கடியானுக்கும், வந்தியத்தேவனுக்கும் வியப்பை அளிக்கிறது. வழக்கமாக போர்க்காலங்களில் மக்கள் இப்படியெல்லாம் இருப்பார்களா? என எண்ணி அருள்மொழிவர்மரை வியக்கின்றனர்.

அநுராதபுரத்தில் இடிந்த புத்த மடாலயங்களின் சீரமைப்புப் பணிகள் பொன்னியின் செல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் நடக்கிறதென்பதை அறிந்து வந்தியத்தேவன் மேலும் வியக்கிறான்.

அப்போது வந்தியத்தேவனுக்கு விந்தையான திட்டம் தோன்றுகிறது.

அப்படி என்ன திட்டம் தோன்றியது…?

அத்தனை சுவாரசியமான திட்டம் வந்தியத்தேவனுக்குத் தோன்றியது மட்டுமல்லாமல் ஏன் இப்படியும் நடந்தால் நன்றாகத்தான் இருக்குமே என எண்ணவைக்கும் யோசனை. அதை புத்தகத்திலே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றாக இருட்டியபின் அனுராதபுரத்துள் மூவரும் நுழைகிறார்கள். அங்கே சில மாயங்கள் நடக்கின்றன. பழையகாலத்து அரண்மனை ஒன்றின் முகப்பை அடைகிறார்கள்.

அங்கே மகாசேனர் என்கிற சிங்கள மன்னர் பற்றியும், புத்தர் சிலைகள், தாகபா, பெரஹராத் திருவிழா…. இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ தகவல்களை கல்கி அடுக்குகிறார். பொன்னியின் செல்வனைப் படித்தால் பல்வேறு தகவல்களுக்கான அடிப்படைத் தகவல்கள் கிடைக்குமென்றும் எண்ண முடிகிறது.

இதன் தொடர்ச்சியாக சில மாயாஜாலங்கள் நிகழ்கின்றன. சுழல்காற்று பாகத்தில் 35-ம் அத்தியாயம் படித்து அவற்றை தெரிந்துகொள்ளுங்கள். பலமுறை படித்தவர்கள் இந்த அத்தியாயத்தின் தன்மையை புரிந்துகொள்வர் என நினைக்கிறேன்.

அத்தியாயம் 35-இலங்கைச் சிங்காதனம்.  அதன் இறுதி வாக்கியங்கள் யாவும் பிரமிப்பூட்டும்படி இருந்தது என்பதை தனியே சொல்லத் தேவையில்லை. அது ஊமைராணியாரின் அறிமுகம்!

 

-நினைவுகள் அழியாது

குமாரலிங்கத்தின் சில தினங்கள்!

முன்னர் எழுதிய செங்கோடனும் செம்பாவும் பதிவு பலரும் படித்திருப்பதற்கான ஒரு வாய்ப்பு இருந்திருந்தது. காரணம் அப்பதிவு எழுதிய பிறகு கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளிக்குப் பிறகுதான் தவறவிடக் கூடாதவன் எழுதினேன். ஏன் இதை எழுதவேண்டுமென்றால், இப்பதிவும் கல்கி அவர்களின் இன்னுமோர் (குறு) நாவல் குறித்த அறிமுகம்தான்!

சோலைமலை இளவரசி என்ற நாவல்தான் அது. துவக்கமே திகிலாக ஆரம்பமாகிறது. விடுதலைப் போராட்டத்தின் இறுதிகாலத்தில் கதை நிகழ்கிறது. கதை நாயகனான குமாரலிங்கம் சுதந்திரப் போராட்டத்தில் வேட்கை கொண்டவன்.

1942-ம் வருடத்தில் கதை துவங்குகிறது. தீவிரமான வேட்கை கொண்ட குமாரலிங்கத்தை காவல்துறையினர் கைதுசெய்ய எண்ணுகிற சமயத்தில் தப்புகிறான். தொடர்ச்சியாக சோலைமலைக்கருகே வருகிறான். சோலைமலை அடிவாரத்தில் உள்ள பாழடைந்தக் கோட்டைக்கு வந்து தங்க உத்தேசிக்கிறான். காரணம்? அலைச்சல்தான்!

அங்கனம் உத்தேசித்து அவன் பாழும் கோட்டையின் முகப்பில், ஒரு மறைவிடத்தில் உறங்க எண்ணுகிறான். அந்த இடத்தில் தொடங்கி கதை மின்னல் வேகத்திலும் விரைவாக செல்கிறது.மொத்தமாக இருபது அத்தியாயங்களே உள்ளன!

நம் ஆழ்மனதுள் சில நம்பமுடியாத சம்பவங்கள் தோன்றுகிறபடி கதைப்போக்கை அமைத்துள்ளார் கல்கி. திடீர்திடீர் என்று கதையின் போக்கு மாறிக்கொண்டே செல்வதை வெகுவாக உணர்ந்து ரசிக்க முடிகிறது.

தலைப்பிற்கு பங்கம் வராதபடி கதையின் போக்கை வடிவமைத்துள்ளார். இதன்காரணமாக கொஞ்சம் சரித்திர முலாம் பூசியுள்ளார் கல்கி. தற்கால திரைப்படங்களில் மட்டும் காணக்கூடிய வகையிலான காட்சியமைப்பு இந்த நாவல் முழுமையும் உணர முடிகிறது.

இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த கதையின் நீளம்தான். ஒரு நாளே அதிகம். மின் புத்தகமாக இதைப் படித்தேன். 62 பக்கங்கள்தான் இருக்கின்றன. கதை நகரநகர சில சமயங்களில் இதயத்துடிப்பும் கூட அதிகமாகிறது.

இன்னொன்று இதன் முடிவு. வழக்கமான ஒன்றாகத்தான் மாறிவிட்டது. ஆனாலும் வேறுமாதிரி எடுத்தால் அவ்வளவு உணர்ச்சி எழும்பாது! அதிகம் கதை குறித்து எழுத நினைப்பில்லை. முடிந்தால் நீங்களே படியுங்கள். அப்போதுதான் நான் சொன்னதன் அர்த்தம் விளங்கும். ஏற்கனவே படித்தாலும், இன்னுமொரு முறை படிக்க எண்ணம் வரும்!

இரண்டுவிதமான கதைகள், அவற்றைக் கோர்க்கும் லாவகம், சம்பவங்களின் தன்மை என ஓவ்வோர் விதத்திலும் சுவாரசியம் சேர்க்கிற நாவல்.

சோலைமலை இளவரசி   படித்தால்….பிடிக்கும்!