அறிவிப்பு

இந்நாள்!

வணக்கம்.

இன்று வரலாற்றில் முக்கியமான நாள். இந்திய வரலாறு எனக் கொள்வோம். அது என்ன என்பதை இந்த தளத்தின் முதல் பதிவிலேயே எழுதியிருந்தேன். இன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள். இதே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேர்ட்பிரஸ் மூலமாக இத்தளத்தைத் தொடங்கினேன்.

இன்றைய நாளை மேலும் சிறப்பாக்கிக் கொண்டே இருந்தேன். அப்பாவோடு உரையாட நேரம் வாய்த்தது. உரையாடல் என்றாலும் என்னால் சரிப்பா! என்றுதான் சொல்ல முடிந்தது.

நீ உழைக்கிறாய் தமிழ். ஆனால் அது போதாது. அக்கறையோடு உழைக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு வழி!

இன்றைக்கு அப்பா சொன்னது. சில மாதங்கள் முன்பிருந்தே, ஏன் பல வருடங்கள் முன்னரே இதைத்தான் சொல்லியிருக்கிறார். கடினம் என்பதை எட்டுவதே கடினமாக இருக்கிறது.

தளத்தை ஆரம்பிக்கையில் என்னவெல்லாம் எழுத நினைத்தேனோ அதில் ஒரு பத்து விழுக்காடு எழுதியிருப்பேன். அதிலும் எழுத நினைக்காதவற்றைதான் அதிகம் எழுதினேன். 120 பதிவுகளைத் தாண்டி எழுதியிருக்கிறேன். 2013 ஆண்டின் துவக்கத்தில் தினம் ஒரு பதிவு எழுதலாம் என்று திட்டமிட்டேன். இரண்டோ, மூன்றோ தொடர் பதிவுகள் எழுதிய தருணம். நான்காவது நாள் பல் துலக்கும்போது நண்பர் வந்தார். இன்னைக்கு என்ன போஸ்ட் என்றார். நாளொரு பதிவு திட்டம் இனிதே கைவிடப்பட்டது. மாறாக இன்னொரு தோழர் சொல்லியதன் பேரில் இன்னொரு பக்கம் எழுதி வருகிறேன்.

இனிமேல் என்னுடைய பரிசோதனை முயற்சிகளும், சொற்பமான-நீளமான அனுபவங்களும், ஓரளவேனும் தேர்ந்த (நேர்த்தியான தமிழ்க்) கட்டுரைகளும் மட்டுமே* இங்கே இடுவதாக உத்தேசம். *- மாறுதலுக்குட்பட்டது.

எல்லோருக்கும் நன்றி. இதைத் தாண்டி விரிவாகச் சொல்லும் மனநிலையில் நான் இல்லை. தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டியவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பரிசோதனை முயற்சிகள் என்று சொன்னேன் அல்லவா!

மொத்தமாய் 4-5 சிறுகதைகள் கைவசம் உள்ளன. கவிதை முயற்சிகள், சந்தப் பாடல்கள் என தனிப்பிரிவுகள் உண்டு. குறுநாவல், கட்டுரைத் தொகுப்புகள், தொழில்நுட்பம், வரலாறு, மொழியியல் எதையும் விடுவதாயில்லை. ஆனால் காலம் அதிகமாகத் தேவைப்படுகிறது.

அதிகம் என்பதைக் காட்டிலும் மிக அதிகம் தேவைப்படுகிறது!

சரி விடுங்கள்….

வழக்கம்போல என்னுடைய பரிசு இம்முறை (யும்) பாடல் வடிவில்!

வழக்கம்போல (இதுவும்) ராஜாவின் பாடல். (க்ளூ: இரு பாடகர்களில் ஒருவர் ஸ்ரேயா கோஷல்! )

என்னை அதிகம் வேலை வாங்கிய பாடல். ஏறத்தாழ அரை மணிநேரம் எழுதியிருப்பேன். ஆனால் மூன்று- நான்கு வாரங்கள் எடுத்துக்கொண்டேன். இசைக்கேற்ற வார்த்தைகள் அமைவதில் சில சிக்கல்கல் இருந்தன. பாடலின் இசையை  மட்டும் எடுத்துக்கொண்டு தீம் நானே எழுதியது. பாடலைக் கண்டுபிடித்தால் பாட இனிமையாக இருக்கும். வெறுமனே படித்தாலும், இனிமையாகவே (எனக்கு) இருக்கிறது.

பாடலைக் கண்டுபிடித்தவர்கள்.. கருத்தாக குறிப்பிடலாம்.

உந்தன் எண்ணத்தில்
வண்ணம் சேர்க்கிறாய்
சொந்தம் யாவையும்
ஒன்று சேர்க்கிறாய்  எப்படி?

பழைய நினைவுகள்
புதிய கனவுகள்
இவை யாவும் ஒன்றென
மாற்றிச் செல்கிறாய் எப்படி?

கனிச் சுவை போல
மெல்லச் சிரிப்பாயே!
தனித் திறனாலே
உளம் ஈர்ப்பாயே!
இந்த இன்பம் போதுமே வாழ்வு முழுமைக்கும் தோழனே!

சொற்கள் யாவிலும்
உள்ளம் தொடுகிறாய்! –இனித் தேனாய் வா!

(உந்தன் எண்ணத்தில்…)

இனியன சொல்லிச் சென்றாய்
புதியன கற்றுத் தந்தாய்
மறந்திடும் நினைவு யாவும்
மனதினில் பதியச் செய்தாய்

ஒரு குன்றின் மீது
இரவு இட்ட ஒளியாய்
பெரு மரத்தின் மீதில்
உள்ள ஒற்றைக் கனியாய்

தன்னிலை மறந்தெனை
உவகையில் கொல்கிறாய்
என்னிலை சொல்லவே
வார்த்தைகள் இல்லையே

புது காற்றாக பெரும் ஊற்றாக
மனங்கள் யாவிலும் மலர்ச்சி செய்கிறாய் தோழனே!

(உந்தன் எண்ணத்தில்…)

கணிப்புகள் கடந்து சென்றாய்
பணித்திடும் நிலையைக் கொண்டாய்
சினத்தினைப் போக்கி வைத்தாய்
மனத்தினில் உயரே நின்றாய்

மலர்ந்த பூவைப் போல
உன் உள்ளம் என்றும்
முதிர்ந்த கனியைப் போல
உன் சொற்கள் போதும்

பாதைகள் யாவிலும்
வழிகளைத் தருகிறாய்
பயணங்கள் யாவிலும்
துணையென வருகிறாய்

மழைத் துளியாக தேன் சுவையாக
இந்த இன்பம் போதுமே வாழ்வு முழுமைக்கும் தோழனே!

(உந்தன் எண்ணத்தில்… )
   

மூன்றால் ஆண்டில் தமிழ்!

வாழ்த்துங்கள் -வளர்கிறேன்!

நன்றி.

தோழர் ஒருவரின் கடிதம் ஒன்றை மீண்டும் படித்தேன். புத்தக வாசிப்பு அனுபவம் ஒன்றினை எழுதச் சொல்லியிருக்கிறார். அடுத்த பதிவாகக் கொண்டுவரத் திட்டம்.

Advertisements

அந்த 365 நாட்கள்!

இதே நவம்பர் 4-ம் தேதி.சென்ற ஆண்டு. ஒரு இனிமையான ஞாயிற்றுக்கிழமை. நீண்ட நாட்களாக இல்லையில்லை.. மாதங்களாக மனதில் இருந்த ஒரு திட்டம் உருப்பெற்றது. திரைப்பாடல்களை எடுத்து அதிலிருந்து சில நயங்களைத் தொட்டு எடுத்துப் பதிவாக்க வெகு காலமாக எண்ணம் இருந்தது. ஆனால் துணிவு வரவில்லை. ஏற்கனவே தொடங்கிய தொடர்களையே நடத்தத் திணறியவன் நான். இது ஆகாது என மனம் ஒதுக்கிய தருணத்தில், நினைவில் வந்தார் ஓஜஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்பே ப்ளாக்கர் தளத்தில் தமிழ் திரைப்பட பாடல்வரிகளுக்கென தளம் தொடங்கியிருந்தார் ஓஜஸ். அதன்பின் ப்ளாக்கரை கைகழுவி (!) வேர்ட்ப்ரஸ் -ல் பிரவேசித்து விட்டார். அது எனக்குத் தெரியும் என்பதால், அவரிடமே சாட்டில் தொடர்பு கொண்டேன். சில நாட்கள் முன்பு அது பற்றி நாங்கள் உரையாடியும் இருக்கலாம்.. ஆனால் நினைவில்லை.
சாட்டில் வந்தார் ஓஜஸ்.
முதலில் எவ்வளவு வேகமாக பெயரை பதிவு செய்கிறமோ, அவ்வளவு நல்லது எனப்பட்டது. பல்வேறு பெயர்களுக்குப் பிறகு வேர்ட்பிரஸில் இருந்த ஒரு பெயர்தான் இசைப்பா…!
அதுவே போதுமானதாகப் பட்டதால் இருவருக்கும் பிடித்துப்போனது. உடனடியாக ஒரு அறிமுகப்பதிவு எழுதினோம். உடனடியாக முதல் பதிவை ஜிமெயில் இன்பாக்ஸில் எழுதி, அதை word-க்கு மாற்றி அனுப்பினேன்.
பவர் கட்!

பின்னர் ஓஜஸுடைய திருத்தங்களைப் பார்த்து மீண்டும் சிறிய திருத்தம் செய்து அனுப்பினேன். பின்னர் அவர் மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்து அனுப்பினார். என்ன திருத்தம் செய்திருக்கிறான் என்பது எனக்கு விளங்க சற்று நேரம் பிடித்தது. கடைசி வாக்கியத்தில் சிறிய திருத்தம் செய்திருந்தான். அதை நான் ஏற்கனவே திருத்தி அனுப்ப, மீண்டும் திருத்தி வைத்திருந்தார்.

முதல் பாடல் என்ன பதிவாக்கலாம் என்று விவாதித்தோம்…

மிக மிக மிக பிரபலமான கவிஞரின் கடைசிப் பாடலை இடலாமா? என்றொரு யோசனை. பின்னர் தன்னம்பிக்கை விதைக்கும் அந்த பாடலை இடலாம் என்று இருவருமே தீர்மானிக்கையில் ஒரு எண்ணம்.

எல்லோரும் சினிமாப் பாடல்களை பதிவாக்குகிறார்கள். நாம் வித்தியாசத்தை இங்கிருந்து துவங்கினால் நலமே என்று தோன்றியது. தெய்வீகமான பாடல் இடலாம் என்றொரு எண்ணம். ஓஜஸ் ஆரம்பித்தார். அமரர் கல்கி எழுதிய ஒரு பாடலை பதிவாக்கச் சொன்னார். சரியென ஆரம்பித்தோம். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்றொரு நம்பிக்கையில் நாங்களாகவே ஒரு format-ல் எழுதினோம்.

அப்புறம் ஓரளவு தேறி எப்படி எழுதலாம் என்கிற கருத்து இருவருக்கும் வருவதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது. 4 பதிவுகள் இருவருமாக எழுதியிருந்தோம் (என்று நினைக்கிறேன்!). டிசம்பரில் குளிர்கால விடுமுறைக்கு நான் சென்றுவிட்டேன்.. அதில் ஒன்றோ, இரண்டோ பாடல்கள் வெளியிட்டிருந்தார். அதற்கு ரஞ்சனி அவர்களின் பதிலுரையும் கிட்டியது.

ஜனவரி முதல் வாரத்தில் ஒரு காலைப் பொழுதின் வசீகரத்தில் ஓஜஸே தொடங்கினார். விஸ்வரூபம் பாடல்களை பதிவாக்கினால் என்ன?

படமே வரல! என்ற என் வாதத்தையும் தாண்டி செயலில் இறங்கினார். சின்னச் சின்ன திருத்தங்களோடு துவங்கிய அப்பணியில், இரு சிக்கல்கள் இருந்தன. வரிகளின் நம்பகத்தன்மையும், எப்படி வெளியிடுவது என்கிற ஐயமும் இருந்தது. மாலையில் முன்னோட்டமாக பதிவை அனுப்பினார். அழகாக பாடலின் அதிகாரப்பூர்வ காணொளியையும், அருமையான படங்களையும் இணைத்து அழகுபடுத்தியிருந்தார்.

நடிகர் கமல் ஹாசனின் வாழ்க்கையை விஸ்வரூபத்திற்கு முன் – பின் என்று பிரிக்க முடியுமோ என்னவோ ஆனால் இசைப்பா-வின் வெற்றியை அப்படி பிரிக்கலாம். அத்தனை பகிர்வுகளும், கருத்துகளும், பார்வைகளும் வந்து விழுந்தன. தொடர்ந்து பவானி, குழலினி, ரஞ்சனி என பங்களிப்பாளர்கள் கிடைத்தது எங்கள் பாக்கியம்.

பெரும்பாலான பங்களிப்பாளர்கள் பெண்களாகவே அமைந்ததும், பெயரின் கடைசி எழுத்து ஒரே மாதிரி அமைந்ததும் நாங்கள் எதிர்பாராதவை. பாலா சார் ட்விட்டர் மூலமாக கேட்ட ஒரு வாசகர் விருப்ப பாடல் அவரையும் இசைப்பா-வுக்குள் இழுத்தது. இசைப்பா-வின் அதிகாரப்பூர்வமான முதல் எடிட்டராக இயங்கிவருகிறார்!!

தங்கமீன்கள் படப்பாடல்கள் வெளிவந்த அன்றே கேட்டு ரசித்த ஓஜஸ் அதை பதிவாக்க எண்ணினார். மறுநாள் என்னையும் ரசிக்க வைத்து, அப்பதிவுக்கு முன்னுரை (மாதிரி) எழுதச் சொன்னார். அதுவும் ஹிட்!

கும்கி பாடல்கள் முழுத்தொகுப்பை ஜனவரி மாதத்தில் எழுதி அனுப்பினார் பவானி. எப்போ வெளியிடுவீங்க? என்று கேட்கும் அளவுக்கு தள்ளிப்போன அப்பதிவு மே இரண்டாம் வாரத்தில் வெளிவந்தது. இசைப்பாவின் தேடல்களிலும், கூகுள் தேடல்களிலும் முன்னணியில் இருக்கும் பதிவு இப்போதுவரை அதுதான்.

ஜூன் மாதத்தை இளையராஜா மாதமாகவே கிட்டத்தட்ட மாற்றிவிட்டார் ஓஜஸ்! வேறென்ன சொல்ல? இதுதவிர செப்டம்பர் முழுக்க நீஎபொவ பாடல்களாக நிரப்பியிருந்தோம். அதில் ஓஜஸுடைய பங்கு மிக முக்கியமானது. ஒரு மாதம் முழுக்க என்வசம் இருந்தது.

தனிப்பட்ட முறையில் சொல்வதானால் பதிவான பல பாடல்களில் சின்னச் சின்ன திருத்தங்களையும் கருத்துகளையும் எழுதியிருக்கிறோம். துவக்கத்தில் திரைப்பாடல்களில் உள்ள பா நயங்களையும், மொழி நயங்களையும் எடுத்துக் காட்டியிருந்தோம். பிற்பாடு தவறிவிட்டது. பிரிவோம் சந்திப்போம் படப்பாடல்கள் நல்ல உதாரணம். அதைத் தாண்டி பெரும பாடல்களில் அவ்வாறு இயல்பாக அமையவில்லை. அது தவிர பாடல் உண்டாக்கிய அனுபவம், சமூகத் தாக்கம் என்று சற்று தடம் மாறி பயணித்தது இசைப்பா.

மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளோம். ஒராண்டில் பெரும்பாலான திரைக் கலைஞர்களின் பாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம். தவறிவிட்டது. நிறைய பாடல்கள் ட்ராஃப்ட்-ல் தூங்குகின்றன. அவையெல்லாம் வெளிவரும் பட்சத்தில் நிலைமை சரியாகும்.

ஒரு தளம் எத்தனை இன்பம், அனுபவம் தர வேண்டுமோ அதை இசைப்பா எனக்குத் தர முயன்றிருக்கிறது. இனியும் அப்படித்தான்.

இன்றோடு இசைப்பாவுக்கு ஒரு வயது.

உங்கள் விருப்பமான பாடல்களுள் ஒன்றேனும் இங்கு உள்ள 65+, பதிவுகளில் இருக்கும். ஏதேனும் ஒன்றேனும் உங்களுக்கும் பிடிக்கும்.

எனக்கோ இதைப்பற்றியெல்லாம் அதிகம் எழுதப் பிடிக்கவில்லை.. எழுதிய வேண்டியவை ஏதேனும் விட்டுப்போயிருக்கலாம். இருக்கட்டும்… இதுவரை இசைப்பா தளத்தையே பார்த்திராதவர்கள் தைரியமாக சென்று ஒருமுறை பார்க்கலாம்.

முகவரி: isaipaa.wordpress.com

அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் இனிய அனுபவங்களைத் தந்துவிடும் எங்கள் இசைப்பா…
பங்களிப்பாளர்கள், பார்வையாளர்கள், உதவிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

முன் குறிப்புக்கு முந்தைய குறிப்பு:

இப்பதிவில் அறிவுக்கு வேலை வைக்கும் எவ்வித குறிப்பும் இல்லை. எனவே தவறுதலாக உள்ளே வந்தவர்கள் இப்போதே வெளியேறலாம். சில இடங்களில் ஆங்கில வார்த்தைகள் அப்படியேயும், தமிழ்+ஆங்கிலம் கலந்தும் தரப்பட்டுள்ளன.

முன் குறிப்பு:

பதிவின் பொருட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ள பதிவுகளின் இணைப்பு கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்கள் எழுதிய உணர்வும் இல்லை, அதிக பதிவுகள் எழுதிய நினைவும் இல்லை. அதிக கருத்துக்களை சரியாக எழுதியாக தோன்றவே இல்லை. ஆனாலும் எப்படியோ வந்துவிட்டது. எண்கள் வெறும் எண்கள் தான் என்றாலும் இலக்கம் (Digit) அதிகரிக்கையில் ஏதோ இனம் புரிந்த பயமும் அதிகரிக்கிறது.

சரி… உற்சாகத்துடனே கொஞ்சம் எழுதிவிடுகிறேன்….

என்னளவில் 30+ பதிவுகள் எல்லோரும் ரசிக்கும்படி எழுதியிருப்பேன். என் அலைவரிசையில் மிகச்சரியாக இயங்கும் பேர்வழிகளுக்குதான் இதர 99 பதிவுகளும் பிடிக்கக்கூடும். எனக்கே நான் எழுதியதில் சில இடங்கள், சில பதிவுகளில் மாறுபாடான கருத்துக்கள் உண்டு.

நண்பர் ஒருவர் ஒரு பதிவைப் படித்துவிட்டு, இதெல்லாம் ‘எழுதும் இடத்தில்’ (myinks.wordpress.com) மட்டும் எழுது. இங்கே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதுதவிர இன்னும் சில பதிவுகளை பதிவிட வேண்டாம் என்ற அறிவுறுத்தல்களும் வந்தன. குறிப்பாக தன் விவரங்கள் பற்றிய பதிவுகளைத் (Personal) தவிர்க்கச் சொல்லியும் அறிவுரைகள் வந்தன.

நான் தொழில்முறை எழுத்தாளன் இல்லை என்பதால், என் பதிவுகளில் எண்ணற்ற குறைகளை உங்களால் கண்டுபிடிக்க முடியும். அதையும் மீறி சில பதிவுகளின்பால் எண்ணற்ற பாராட்டுகள் விழுந்தன.

எனக்கு பதிவுகளை எழுதுவதை விட அதற்குப் பொருத்தமான தலைப்பினைத் தேடுவதில் ’தாவு’ தீர்ந்து விடுகிறது. அதையும் மீறி சில பதிவுகளுக்கு தலைப்பு அமைந்துவிடுகிறது.

எனக்கு பிடித்த தலைப்புகளில், எனது பதிவுகளில் முதன்மையானது என்று சிலவற்றைச் சொல்லலாம்.

 • இழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல.
 • தவறவிடக் கூடாதவன்

இவையிரண்டும் நான் முழுக்கவே உணர்ந்து எழுதியவை. அதிக பாராட்டுகளையும் பெற்றவை.

தவறவிடக்கூடாதவனுக்கு, பாலா சாரின் கமெண்ட் கிடைத்தது என் பாக்கியம்!

இழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல. பதிவைப் படித்துவிட்டு அழுததாக ஒரு நண்பர் கூறினார்.

என்னை நம்பி ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரை கூட ஒரு நண்பர் கொடுத்திருந்தார். இன்னொன்று விரைவில் ஆரம்பமாகும்.

தேவன் நூற்றாண்டு பதிவு சிறப்பாக இருந்ததாக நிறைய பேர் சொன்னார்கள். இன்னும் எழுதியிருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றியது.

நிறைய பேரை நான் இமிடேட் செய்து எழுதியிருக்கிறேன். அவற்றையெல்லாம் அவரவர்களுக்கான என் tribute ஆக எடுத்துக்கொள்ளவும்! இமிடேட் செய்வது தவறென்றாலும், தவிர்க்க இயலவில்லை. பொறுத்தருள்க.

ஒரு பயணத்தில் ஒருவர் என்னிடம் கேட்டார்.

“புத்தகங்களைப் படிக்க உனக்கு யார் inspiration?”

நான் எப்போதும் சொல்லும் பதில் என் அப்பா தான். இப்போது பல தோழர்கள் உதவுகிறார்கள், அவர்களுக்கும் நன்றி. உங்கள் எல்லோருடைய ஆதரவினாலும்தான் என் வாசிப்பு வளர்கிறது. நன்றி.

மழையில் கரைந்த வரிகள் பதிவு இந்த சீசன் மட்டுமல்ல, ஒவ்வொரு மழை சீசனுக்கும் hit அடிக்கும் என நம்புகிறேன்.

நம் நாட்டில் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்து கொள்ள முனைவோரின் எண்ணிக்கை சத்தமில்லாமல் உயர்ந்து வருவதாக எண்ணுகிறேன். என் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வாக்கியம் “தமிழ் மொழியின் சிறப்பு”

ட்விட்டர் மூலம் கிடைத்த சில தோழர்கள் மூலமாக நிறைய அறிந்துகொள்ள முடிந்தது. அவர்களுக்கும் நன்றி.

மற்றவர்களுடைய எழுத்துகளை வாசிக்கையில்தான் எனக்கான இடம் எதுவென புரிகிறது. இன்னும் வாசிப்பை ஆழமாக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கான முயற்சிகளில் உள்ளேன்.

கவிதை முயற்சிகளில் அதிகம் ஈடுபடவில்லை என்று சொன்னால் அது பொய். ஆனால் அதிகம் வெளிக்காட்டவும் இல்லை. நிறைய முயற்சிகளில் ஓரளவேனும் மனநிறைவைத் தரும் முயற்சிகளை மட்டுமே தர விருப்பம். இப்பதிவின் இறுதியிலும் ஒரு முயற்சி உள்ளது.

சிறுகதைகளில் ஓரளவு தேறியுள்ளதாக நம்புகிறேன். அடுத்தடுத்த கதைகளுக்கான detailing சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டில் ஓரளவு சீராகிவிடும். அவற்றின் பொருட்டு எனக்கு உதவிய அன்பர்களுக்கு எப்போதும் நன்றி.

உன் பதிவுகளினால், எழுத்துகளினால் நானும் எழுதுவதற்குத் தூண்டப்பட்டேன் என்றெல்லாம் சொன்னார் ஒரு தோழர். வீட்டிற்கு வந்து பெற்றோர் முன் பாராட்டிய தோழருக்கும் மீண்டுமொருமுறை  உள்ளத்து நெகிழ்ச்சியோடு நன்றி.

நிறைய நன்றி சொல்லிவிட்டேன். நிறைய மிச்சமிருக்கும்… இப்போதைக்கு போதும்.. இன்னும் நிறைய பதிவுகள் எழுதத்தானே போகிறேன். அப்போது மிச்சம் வைக்காமல் சொல்கிறேன்.

நீண்ட நாட்கள் கழித்து 20 நிமிடத்தில் எழுதிய பாடல். இதுவும் தழுவல்தான். திரைப்பாடல்தான். நீங்கள் கண்டுபிடிக்க ஒரு க்ளூ தரவா?

 • இது ’வழக்கம்போல*’ இளையராஜா அவர்களின் இசையில் பூத்த பாடல்!

இன்னொரு க்ளூ!

 •  இது ராஜா பாடிய பாடல் அல்ல

இந்த க்ளூ குடுக்குற வேலையெல்லாம் #RQ365 செய்யும் மாயம்!!

பாடல் இதோ!

அதிகாலை எழுந்தாலே
மனசெல்லாம் உற்சாகம்!
மழை பொழிந்த பாலை போல்
மனம் மாறுதோ?

மலைபோல வரும் வேலை
மடுவைப் போல் குறையாதா?
அலைபோல் தான் துன்பமெல்லாம்
அது உனக்கு புரியாதா?

எண்ணம் போல வாழ்க்கையடா!
ஏத்துக்கணும்.

தொட்டு விடும் தூரம்தானே
வெற்றியென்னும் எண்ணம் போதும்!
குட்டிக் குட்டிக் கனவுகள்தானே
வாழ்க்கையடா!

வலிகள் சொல்லும் கதைகள் எல்லாம்
வழியில் சொன்ன கதைகள் இல்லை
புரிந்து கொண்டால்  வாழ்க்கை முழுக்க
இன்பமடா!

கற்ற கல்வி யாவிலுமே
பெற்ற அறிவு உனதாகும்
மற்றதெல்லாம் துணை சேரத்தான்
கனவெல்லாம் நனவாகும்.

எப்போது இலக்கை அடையும் கனவு…..கனவு?

தென்றல் வந்து தீண்டும்போதும்
வண்டல் மனதை வருடும்போதும்
கலையாத உள்ளம்தானே
கரை சேரும்!

பறக்கிற பொழுதுகள் எல்லாம்
சிறகாகும் உன் மனதோடு
புது வெள்ளம் போல நீயும்
நடைபோடு

எழுதித்தான் தீர்த்தாலும்
பழுதின்றிப் போகாது
தழுவித்தான் தீர்த்தாலும்
அன்பென்றும் குறையாது

இப்போதும் உன்னைச் சேரும் அன்பு….அன்பு!

என் வரிகளின்றே முடிக்கிறேன்.

எழுதித்தான் தீர்த்தாலும்
பழுதின்றிப் போகாது!

எத்தனை பழுதிருப்பினும் பொறுத்து அருள்வது நும் கடன்.

என்றென்றும் மாறாத அன்புடன்,

தமிழ் (@iamthamizh)

பதிவை முழுக்க படித்தமைக்கு நன்றி.

உங்களுக்கான அன்புப் பரிசு இச்சிறு மின்நூல்: 

மூன்று சிறுகதைகள்

ராஜாவின் பாடல்களில் எனக்குப் பிடித்த 1000 பாடல்களைத் தொகுத்துக் கொண்டிருப்பதை அறிவீர்கள். இதோ நூறு பாடல்கள் இப்போது…. எனக்குப் பிடித்த இளையராஜா பாடல்கள் 100/1000 : ரசனை! 

பதிவின் பொருட்டு சில இணைப்புகள்:

இழந்தது துடுப்புகளைத்தான். இலக்குகளை அல்ல.

தவறவிடக் கூடாதவன்

தேவன் ’மகா’ தேவன்

மழை குறித்த கட்டுரைகள்

தமிழ் மொழியின் சிறப்பு

மகிழ்ச்சியின்  கவிதை

பழைய கத!

இது ஒரு கதை. வெறும் கதையல்ல. வீரக் கதை. அதிகம் அறியப்படாத ஒரு மாவீரரின் கதை. அதை தொடங்கும் முன் மற்றொரு முன் கதையையும், அதாவது கதை பிறந்த கதையையும் அறிந்தால்தான் சுவாரசியமாயிருக்கும்.

என்கிறபடி உத்தேசமாகத் தொடங்கிய இந்த தொடர்பதிவு 7 குட்டி குட்டி அத்தியாயங்களாய் இதே தளத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் தொடங்கியது. பல்வேறு தனிப்பட்ட காரணங்களினாலும், சூழல்களினாலும் தொடர் அப்படியே நின்றுவிட்டது. அதை மீண்டும் தொடரச் சொல்லி நண்பர்கள் பலர் சொல்லியபடியால் பழையபடி தொடர விருப்பம்.

பலரும் மறந்திருக்கக் கூடும். எனவே குட்டி குட்டி ரீவைண்ட் 🙂

 •  யெசுகெய்-ஹோலுன் தம்பதியினருக்குப் பிறந்தவன் டெமுஜின். பிற்காலத்தில் செங்கிஸ்கான் என அறியப்பட்டவரும் இவரே.
 •  யெசுகெய் போர்ஜிகின் இனத் தலைவர். ஹோலுன் மெர்கிட் இனப்பெண்.
 •  இப்போது ஹோலுன் யெசுகெய்யின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியின் பெயர் சோச்சிஜெல். அவளின் மகன் பெயர் பெக்டெர். அதாவது சரித்திரப்படி டெமுஜினின் அண்ணன்.
 • டெமுஜின் என்றால் இரும்பு மனிதன் என்று பொருள்.
 • அவர் பிறந்த இடம் மங்கோலியாவில் ஆனான் நதிக்கரையோரம் இருந்த டெலூன்போல்டெக். அதாவது இப்போதைய மங்கோலியத் தலைநகரான உலான்பாட்டருக்கு (Ulan Bator) அருகே.
 • அவர் பிறந்த ஆண்டு கி.பி. 1155-க்குள்ளிருந்து கி.பி. 1167-க்குள் இருக்கலாம் என கணிக்கப்பட்டாலும், பலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆண்டு 1162. ஆசியக் காலண்டர்படி அது குதிரைகளின் வருடம்.
 •  (இப்போதும் சீனாவில் ஆசியக் காலண்டர்படி விலங்குகளின் பெயரில்தான் வருடங்கள் அழைக்கப்படுகின்றன.)
 • மங்கோல் என்ற சொல்லுக்கே ‘குதிரையின் முதுகில் வாழும் மக்கள்’ என்று பொருள். ‘அருகிலிருக்கும் நெருப்பு என்ற அர்த்தமும் உண்டு.
 • அவ்வப்போது சீனாவுடன் சண்டை நடந்துள்ளது. அவர்கள் மங்கோலியர்களைத் தடுக்க எண்ணியே தடுப்புச் சுவர்கள் கட்டத் தொடங்கினர். அவ்வாறு பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வம்சத்தினரால் கட்டப்பட்ட சுவர்கள்தாம் தற்போதைய சீனப் பெருஞ்சுவர். J
 • கொரியாவின் எல்லையில் ‘யாலு’ நதிக்கரையிலிருந்து, ’கோபி’ பாலைவனம் வரையுள்ள சீனப் பெருஞ்சுவர் 6400 கி.மீ நீளம் கொண்டது. 16-ம் நூற்றாண்டில் முழுமை பெற்றது.
 • மங்கோலியர்கள் கற்களால் ஆன வீடுகளை அவர்கள் கட்டுவதில்லை. ‘கெர்’ எனும் கூடாரங்களில்தான் வசித்தனர்.
 •  கெர் என்பது வட்டவடிவக் கூடாரம். சாதாரணக் கூடாரம் அல்ல. கிட்டத்தட்ட வீட்டிற்கான அளவு ஓரளவு பெரிய கூடாரங்கள். வாசல், சன்னல் எல்லாமே இருக்கும்.
 • மங்கோலியர்கள் ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் நான்கு வயதிலேயே குதிரையேற்றம் பழக விடுவார்கள். உட்கார முடியாது என்பதால், குதிரை மீது நின்றபடி ஓட்ட பயிற்சியளிப்பார்கள்.
 • டெமுஜின் 4 வயதை அடையும் முன்பே குதிரையேறக் கற்றுவிட்டான். வில் வித்தையையும் கூட!
 •  பொதுவாக தாக்குதல் தொடுப்பவர்கள் குழந்தைகளையும், வயதானவர்களையும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். தலைவனாகத் தகுதி உள்ள வாரிசுக்கு மட்டும் முடிந்தது கதை! இதுதவிர எல்லா சூறையாடல்களும் முடிந்தபின் கூடாரங்களைத் தீயிலிடும் படலமும் உண்டு.
 •  ஏழு அல்லது எட்டு வயதில் ஒரு பையனுக்குரிய மணப்பெண்ணை நிச்சயம் செய்துவிடுவார்கள். பொறுமை அவசியம். இது குழந்தை திருமணமல்ல. அச்சிறுவனும், சிறுமியும் பருவ வயதை எட்டிய பின்னரே திருமணம் நடைபெறும்.
 • ஹோலுன் யெசுகெய்யிடம் சொன்னாள்.
  “நீங்கள் என்னைக் கடத்திக்கொண்டு வந்ததிலிருந்து எங்கள் இனக்குழுவினர் (மெர்கிட்) உங்கள் மீது கோபமாயுள்ளனர். எனவே டெமுஜினுக்கு எங்கள் இனக்குழுவிலிருந்து பெண் எடுத்தால் இருதரப்பினருக்கும் நல்லுறவு உண்டாகும்”
 • மறுநாள் இருவரும் கிளம்பினர். பயணத்தின் ஊடே யெசுகெய் அவரது நண்பரான டெய்-செட்சென் –ஐச் சந்திக்க நேர்கிறது. அங்கே அவர் மகளான போர்ட்டே-வை கண்டதும் டெமுஜினுக்குப் பிடித்துப் போகிறது. அவளுக்கும் அப்படியே.
 • திருமணம் முடிவாகிறது. ”பெண்ணிற்கு வரதட்சணையாக (அப்பவே!) குளிர்காலத்திற்கான கறுப்பு நிற அங்கியைத் (Black Sable Coat) தருகிறேன். இன்னும் 5 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்யலாம்” என்கிறார் டெய்-செட்சென்.
 • வேறு இனக்குழுவில் பெண் தேர்ந்தெடுக்கப் பட்டால், மணமகன் பெண் வீட்டாரோடு சில நாட்கள் தங்கி அவர்களுக்காக பணிபுரிய வேண்டும். இதை மணமகள் சேவை என்று கூறுவர்.
 • டெமுஜின் அங்கேயே தங்குகிறான். யெசுகெய் வீடு திரும்புகிறார். மங்கோலியர்களுக்கு இடி என்றால் பயம். இடி இடித்தால் அவர்களின் கடவுள்களில் ஒருவரான தெங்ரி கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம். மழை காரணமாய் பயணம் தடைபடுகிறது.
 • மறுநாள் செல்லும் வழியில் அவர்களுடைய எதிரி இனக்குழுவாகிய டட்டார் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் மூலம் யெசுகெய் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறார். தகவல் அறிந்து வீடு திரும்புகிறான்
 • யெசுகெய்யின் இறுதி ஊர்வலம் முடிந்து வீடு திரும்புகின்றனர் டெமுஜின், ஹோலுன் உள்ளிட்ட குடும்பத்தினர்.

சுருக்கமாகச் சொல்வதானால், யெசுகெய் மறைவு வரையிலான நிகழ்வுகள் 7 சிறிய அத்தியாயங்களாய் எழுதினேன்.

கிட்டத்தட்ட 20 பக்கங்கள் கொண்ட இந்நிகழ்வுகளை 3 பக்கங்களுக்குள் தந்துள்ளேன். வரலாறு, கலாச்சாரத் தகவல்கள், கூடுதல் குறிப்புகளோடு 7 அத்தியாயங்களையும் மொத்தமாக விரிவாகப் இங்கே படிக்கலாம்

கூடுதலாக:

கத பிறந்த கதை

இதன் தொடர்ச்சி விரைவில் தொடர்ந்து வெளிவரும்.

தொடர்ந்து பல்வேறு தோழர்கள் செங்கிஸ்கான் குறித்த இணையத்தில், வார இதழ்களில் வெளிவந்த குறிப்புகள், புத்தகங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவற்றைத் தந்து உதவினார்கள். அவர்களுக்கும் நன்றி.

சில விருப்பங்கள்

வணக்கம்.

இதோ செப்டம்பர் துவங்கி சில நாட்களும் ஓடிவிட்டன. என்னளவில் செப்டம்பர் ஒரு இனிய மாதம். அது எவ்வளவு இனியது? எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும்/தந்தது/ தரப்போகிறது? என எல்லாமே இனி வரப்போகும் பதிவுகளில் ஓரளவேனும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சில விருப்பங்கள் உள்ளன. சென்ற ஆண்டைப்போல அதையெல்லாம் நான் சொதப்பாமல் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் இருக்கிறது. இங்கே கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.

பலவகைப்பட்ட புத்தகங்களை என் ஆற்றலுக்கு, அறிவுக்கு  உட்பட்டு உங்களுக்கு அறிமுகம் செய்ய விருப்பம். இதில் சிலவற்றை அழுத்தமாக தெரியப்படுத்துகிறேன்.

 1. அவை படிக்க ஏதுவான புத்தகங்கள்.
 2. தமிழ் /ஆங்கிலம் தவிர்த்த புத்தகங்கள் கிடையாது.
 3. அவையெல்லாம் நான் முழுக்க படித்ததாக உறுதி சொல்ல முடியாது.
 4. அவை பெரும்பாலும் குறிப்பிட்ட பதிப்பகங்களின் புத்தகங்களாக இருக்கலாம்.
 5. அவை பெரும்பாலும் குறிப்பிட்ட ஆசிரியரின் புத்தகங்களாக இருக்கலாம்.
 6. அவை மின் வடிவிலோ, அச்சு வடிவிலோ என்னிடம் இருப்பவை.
 7. அவை இரவல் புத்தகமாகவும் இருக்கலாம்.
 8. * மேலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 

குறைந்த அளவாக 30 புத்தகங்கள் அறிமுகம் செய்ய விருப்பம். அதிக அளவாக அவை ஐம்பதை (50) நெருங்கலாம். நெருங்காமலும் இருக்கலாம். எளிய அளவிலோ, அல்லது எனக்கு புரிந்த மட்டிலோ எழுதுவேன் என நம்புகிறேன். உங்கள் பொறுமையை முடிந்தளவு சோதிக்காமல் எழுத முயற்சிப்பேன்.

இதுதவிர சென்ற ஆண்டு தொடங்கிய ஒரு தொடரை இப்போதாவது எழுத முடியுமா? என சில தோழர்கள் விரும்பியதால் அதையும் தொடருவேன். இதுதவிர இன்னும் சுவையான ஒன்றிரண்டு பதிவுகளும் எழுதுவேன் என நம்புகிறேன்.

நம்பிக்கை…………. அதானே எல்லாம்!

உங்கள் ஆலோசனைகளையும் கூறலாம். ( இந்த பதிவு பற்றி அல்ல. இதற்கு பின் எழுதப்போவன பற்றி.)

நன்றி.

அன்பன்,

தமிழ்