அப்பா

இடைவெளிக்குப் பின்…

நீண்ட நெடும் ஓய்வு காலத்திற்குப் பிறகு புத்துணர்ச்சியோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் களைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏறத்தாழ இரண்டு-மூன்று மாதங்களாகக் குறிப்பிட்ட வேலை எதுவும் இல்லை. ஆனாலும் இது கடினமான தருணம். 2014 கடினமாக அமையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு கடினமாக அமையும் என்றுதான் எதிர்பார்க்கவில்லை. அந்த கடினத்தை எதிர்கொண்டதன் களைப்புதான் இப்போது எஞ்சியிருக்கிறது.

வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்துவிட்டேன் (என்று நினைக்கிறேன்!). இனி என்ன நடக்கவேண்டும் என்பதையும் நானேதான் தீர்மானித்தாக வேண்டும். இந்த வாய்ப்பைக் கோட்டைவிடக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்கிறேன். அதற்கான பயிற்சிகளிலேயே கடந்த காலமும் கடந்து விட்டது.

கிட்டத்தட்ட பயிற்சி முகாமில் கலந்துகொண்டவனைப் போலவே இருக்கிறேன். காலநேரம் பார்க்காமல் கிடைத்த அறிவுரைகள் ஏராளம். நடுநிசியோ, அதிகாலையோ என்னிடம் என்னைப் பற்றி உரையாட ஏராளமான நலவிரும்பிகள் இருந்தனர்.

இதுவரையிலான நாட்களில் நடந்த தவறுகள் என்னென்ன? நான் எனக்காக மாற்றிக்கொள்ள வேண்டிய திருத்தங்கள், உணர்ந்துகொள்ள வேண்டிய சமுகச்சூழல்கள் என பலதரப்பட்ட வடிவங்களில் என்னைக் கூர்தீட்டிக் கொள்ள ஏதுவாக பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களின் அனுபவங்களை எனக்குச் சொல்லித் தந்தார்கள். இந்த வருடத்தை மறக்கமுடியாதபடிக்கு நிறையவே நிகழ்ந்து விட்டது.

என்ன செய்வது என்கிற குழப்பமே பெரும் கவலையைத் தந்தது. புத்தகங்களையும் ஒரே ஒழுங்கில் படிக்க இயலவில்லை. ஒரு பெருநாவல் ஒன்றினை நடுநிசியில் வாசிக்க முற்பட்டால் உறக்கம் வந்துவிடுகிறது. இன்னொரு நாள் எட்கர் தோர்ப் கொடுத்த கணக்குகளைத் தீர்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாமல் போட்டுக்கொண்டிருந்தேன். என்ன செய்ய தலைவிதி!!

நூலகங்களுக்குப் போனாலும் தலைவலியோ, உடல்சோர்வோ ஏற்படுகிறது. உடல் எடை சற்றே உயர்ந்திருக்கக் கூடும். இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

சுயபுராணங்களை இங்கு தவிர்க்கவே பார்க்கிறேன். ஆனாலும் அவ்வப்போது மட்டும் இடுவதில் ஒரு ஆனந்தம். புத்தகங்கள் குறித்தும், மற்ற இயல்பான பகிர்வுகள் பற்றியும் மட்டும் இனி இங்கு எழுத ஆசை. எவ்வளவு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் படிக்கவும், எழுதவும் மட்டும் ஆசை விட்ட பாடில்லை.

படித்தவை!

 • மாணாக்கர்களுக்கு மட்டும் – தேவன்
 • சாயாவனம் -சா கந்தசாமி
 • மைதிலி -தேவன்
 • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் -நாவல் வடிவில் – கே.ஜி.ஜவர்லால்
 • ஃபெலூடாவின் சாகசங்கள்-2 -மகாராஜாவின் மோதிரம் – சத்யஜித் ரே
 • மூன்று விரல் -இரா. முருகன்
 • ஒரு லோட்டா இரத்தம் – பேயோன்
 • விஷ்ணுபுரம் தேர்தல் – இரா.முருகன்
 • இளவரசனும் ஏழையும் – சுருக்கப்பட்ட தமிழ்ப் பதிப்பு -மார்க் ட்வைன்
 • கிறிஸ்துமஸ் கீதம் – சுருக்கப்பட்ட தமிழ்ப் பதிப்பு -சார்ல்ஸ் டிக்கன்ஸ்
 • ஒரு கவிஞனின் கதை -கவியரசர் கண்ணதாசன்

இத்தோடு 

 • யாமம் -எஸ்.ராமகிருஷ்ணன் – முற்றுப்பெறவில்லை…

நூல்களில் சிலவற்றைப் பற்றிய என்னுடைய புரிதல்களையும், அனுபவங்களையும், அறிமுகத்தையும் விரைவில் பகிர முடியும் என நம்புகிறேன். இன்னும் சில நூல்கள் விட்டுப்போயிருக்கலாம். ஏனென்றால் இம்முறை நான் ஏதும் கணக்கு வைத்துக் கொண்டு படிக்கவில்லை. கிடைத்ததையெல்லாம் படித்தேன்.பல நூல்கள் ஒரே நாளில் சில மணிநேரங்களில் முடிக்கப்பட்டவை. (அவ்வளவு சிறிய நூல்கள்.)

இந்நூல்களில் ஏதேனும் ஒன்றையாவது நீங்களும் படித்திருப்பீர்களானால் மறுமொழியில் குறிப்பிடுங்கள்.

வாசித்ததில் உள்ளத்தோடு ஒன்றி அடிக்கடி தற்போது உச்சரிப்பது இவ்வரிகள் தான்:

வாழ்க்கை நிற்காது. அவ்வப்போது சண்டித்தனம் செய்யும்.

கன்ட்ரோல் – ஆல்ட்டர் – டெலிட்

திரும்ப இயக்கம்.

ஏதேதோ இழந்துபோயிருக்கலாம். ஆனால் என்ன? முதலில் இருந்து தொடங்க வேண்டியதுதான்.

மற்ற கதையெல்லாம் அடுத்த பதிவில்…

Advertisements

அப்பாவும் தமிழும்!

மனதிற்கு நெருக்கமான பதிவுகளை எழுதுவதில் ஒரு திருப்தியும், ஆறுதலும் இருக்கிறது. அவ்வகையில் அப்பாவும், தமிழும் பதிவுகள் ரொம்பவே நெருக்கமானவை. அவற்றைத் தொகுத்து, இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கிறேன்.

*********************************

அப்போது ‘தமிழு’க்கு எத்தனை வயது என்று நினைவில்லை. தம்பிக்கும் சிறு வயதுதான். பாட்டியின் படுக்கைக்கு அருகே ஒரு அலமாரி. அதில் அவருக்கான மருந்துகள் அடங்கிய டப்பா இருக்கும். ஒரு இனிய விடுமுறை தினக் காலைப் பொழுதில் மணி ஏழில் இருந்து எட்டுக்குள்ளாக இருக்கும். அப்பா உறங்கிக் கொண்டிருந்தார்.

தமிழும், தம்பியும் ஏதோ விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. விளையாட்டுப் போக்கில் இருவரும் பாட்டியின் படுக்கையில் ஏறி அலமாரி பக்கம் உலவினர். மருந்து டப்பாவின் மேல் கிடந்த ஒரு பழைய ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றினை பார்த்த தமிழுக்கு ஏதோ தோன்றியிருக்கும் போல. உறங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பினான்.

“அப்பா! பாட்டியோட மருந்து டப்பா மேல இது இருந்துச்சுப்பா” என்றவாறு அவரிடம் நீட்டினான்.

அப்பாவின் உறக்கம் அடுத்த சில நொடிகளில் கலைந்து கண்களில் கோபம் அதிகமானது. அவர் பார்வைக்கு எட்டினாற்போல தமிழும் தம்பியும் விளையாடிய இரு பிளாஸ்டிக் டென்னிஸ் மட்டைகள் இருந்தன. இரண்டையும் ஒரு கையில் இறுக்கிப் பிடித்து, தமிழையும், தம்பியையும் மாறி மாறி அடித்தார்.

அடிக்கும்போதே ”அடுத்தவங்க காசை எடுப்பியா” என்ற அதட்டலும் காதுக்குள் விழுந்தது. எடுக்கமாட்டேம்பா என்று தமிழால் சொல்ல முடிந்ததா என்றும் நினைவில்லை. இருவரையும் சில நிமிடங்கள் வீட்டு (உள்)வாசலில் முட்டி போட வைத்தார்.

இன்றுவரை தமிழ் அடுத்தவர்கள் காசுக்கு ஆசைப்பட்டதும் கிடையாது. கடன் வாங்கியது கூட கிடையாது. அந்த அடி இப்போது நினைவில் மட்டும் இருக்கிறது. அப்பாவின் வளர்ப்பு எத்துணை கடினமானதாகத் தோன்றினாலும் அதன் விளைவு எக்காலத்திலும் தமிழுக்கு இனிய பயனையே தந்தது.

கதை சொல்லும் நீதி:    அடி நல்லது!

அப்போது ’தமிழ்’ ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். முதல் இடைத் தேர்வில் கணக்கில் 67 மதிப்பெண்கள் பெற்றதற்காக அப்பா வருத்தப்பட்டார்.

“முதல் மார்க் யாரு?”
சொன்னான்.
“எவ்ளோ மார்க்?”
“97.”
“அவனால் அவ்ளோ மதிப்பெண் எடுக்கும்போது உன்னால் ஏன் எடுக்க முடியல? இதை ஒரு தாள்ல எழுது. இதுக்கு பதில் நீதான் சொல்லணும்.”

ஏறக்குறைய அரைமணிநேரத்துக்கும் மேலாக நீண்ட அந்த உரையாடலில் தமிழின் கண்களில் கண்ணீர் ததும்பி வெளியேறியது மட்டும்தான் நினைவில் இருக்கிறது.

இப்போது தமிழ் ஏழாம் வகுப்பு முதல் இடைத் தேர்வில் எடுத்த கணித மதிப்பெண் தாளுடன் வீட்டிற்குள் வந்தான். அம்மாவிடம் வெகு தயக்கத்துக்குப் பிறகு சொன்னான்.

”பதினெட்டு தாம்மா!”

ஏழு மணியளவில் வீட்டுக்கு வந்த நண்பன் தமிழைப் பற்றி பேச அம்மா அதிர்ந்து கேட்டார். ”மார்க் எவ்ளோ? ”

”பதினெட்டு”

அம்பதுக்கா?

இல்ல நூத்துக்கு!

இதை ஏன் முன்னாடியே சொல்லல! நான் அம்பதுக்குனு நினைச்சு விட்டுட்டேன். அப்பாகிட்ட என்ன சொல்லப் போற?

அப்பாவிடம் பலமான தயக்கத்தினூடே மதிப்பெண்ணை சொன்னான். ஒரு வார்த்தை பேசவில்லை. கண்களில் துளி உணர்ச்சியையும் காட்டாமல் அப்பா அமர்ந்திருந்தார். தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவுக்கு மட்டும் புரிந்துவிட்டது போல.

காலாண்டு தேர்வுக்காக அடுத்த நாளிலிருந்தே பயிற்சியைத் தொடங்கினார் அம்மா. தினமும் கணக்கு பாடம் படிக்க வேண்டும். போட்ட கணக்கையே மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும். காலாண்டு தேர்வு முடிவுகள் வந்தன. வாய் நிறைய புன்னகையோடு வீட்டுக்கு வந்தான்.

கணக்கில் வகுப்பில் இரண்டாமிடம். 84 மார்க்கு! கூடவே இரண்டாவது தரமும் (ரேங்க்!) தான்!

சில நாட்களுக்குப் பின் அப்பாவிடம் மதிப்பெண் பட்டியலில் கையொப்பம் வாங்கச் சென்றான் தமிழ்.

மதிப்பெண் பட்டியலைப் பார்த்த அப்பாவுக்கு மகிழ்ச்சி. தமிழை இறுக்கி அணைத்த அப்பா அருகிலிருந்த தமிழின் தம்பியிடம் சொன்னார்.

“உன்னால இப்படி வாங்க முடியுமாடா! பார்ரா! ”

கடைசி வரைக்கும் அப்பாவின் மௌனம் அவனுக்கு புரியவில்லை. அவர் கொண்டாடியது  மட்டும் நினைவில் நின்றுகொண்டது. அவர் வித்தியாசமான அப்பா. தமிழுக்கு மட்டும் என்ன குறைச்சல்? அவனும் வித்தியாசமான மகன் தான்! அத்தோடு பள்ளிப் படிப்பை முடிக்கும் வரைக்கும் அம்மாதிரி மதிப்பெண் பெற்ற ஒருவனைக் கூட தமிழ் காணவே இல்லை என்பது தனிக் கதை.

……………………………………………………………

……………….அதை விடுங்கள். நான் சொல்ல விரும்புவது என் அப்பாவைப் பற்றி. அவரும் என்னைக் காட்டிலும் என்மேல் நம்பிக்கை வைத்தவர். நான் முடியாது என்று நினைத்தவற்றையெல்லாம் நானே செய்ய தூண்டியவர். எப்போதெல்லாம் முடிவெடுக்கத் திணறினேனோ, அப்போதெல்லாம் வழிகாட்டியவர்.எதற்கு மேம்போக்காக சொல்ல வேண்டும்?

அடுத்து என்ன படிக்க வேண்டுமென்பதை பத்தாம் வகுப்பில் இருந்து எனக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு நிலையிலும் நான் அவர் நினைத்தற்கு மாறான முடிவுகளையே (பெரும்பாலும்) எடுத்ததாக கருதுகிறேன். ஒவ்வொரு நிலையிலும் நான் தோற்காமல் இருக்க அவர் அளித்த ஊக்கம் அளவிட முடியாத ஒன்று. என்னைப் பேச வைத்து பார்க்க கொள்ளைப்பிரியம் கொண்டிருப்பார். எனது வாசிப்பு ஆர்வத்திற்கு சரியான தீனி அவர் போடவில்லை. மாறாக எங்களின் தேடலுக்கான அடிப்படையை நன்றாக அமைத்துக்கொடுத்திருக்க்கிறார்.

எப்போது திட்டவேண்டுமோ, அப்போதெல்லாம் திட்டத் தவறியதில்லை. எப்போது கண்டிக்க வேண்டுமோ அப்போதும் அப்படித்தான்.. கண்டிப்பு என்றால் இங்கே வன்மையான பிரயோகம்! அதேபோல் ஒரு கட்டத்திற்கு மேல் எங்களுக்குத் தேவையான சுதந்திரத்தையும் அவராகவே தந்தும் விட்டார். இப்போது எண்ணிப் பார்த்தால் குறைகளும் அவர்மேல் சொல்லலாம்.

என்னால் அவர் மேல் பத்து குறைகளைச் சொல்லமுடியும். அதே சமயம் தொண்ணூறு நிறைகளை அவர் சொல்வதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அப்புறம் நான் எங்கே போய் முகத்தை வைத்துக்கொள்வது?

********************************************

……………………தந்தையிடம் சொன்னவுடன் “ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி” என்றார். எனக்கு அவர் அப்படி சொன்னதே போதுமானதாகப்பட்டது. இன்னும் கொஞ்சம் பேசினார். கடைசியாக இன்றிரவு நன்றாக உறங்கு என்றார். அசந்தே போய்விட்டேன். காரணம் இருக்கிறது. என் தூக்கத்தை அப்பா விமர்சித்து மட்டுமே கேட்டவன் நான்.  “நீ தூக்கத்தைக் குறைச்சினா பெரிய ஆளா வருவ” என்று அவர் சொல்லும்படியே என் வழக்கம் இருந்தது. அப்பா அப்படி சொன்னதும் ரொம்பவே கரைந்து விட்டேன்.

இன்னைக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக, நிம்மதியாக, நிதானமாகத் தூங்கச் செல்வேன்பா!

**************************************************

……………..” என் அப்பாவின் மேல் எனக்கு பயம் கிடையாது. மற்றவர்களை விட மரியாதை உங்கள் மேல் எனக்கு அதிகம். நான் உங்களிடம் அதிகம் பேசாமல் இருந்தாலும், உங்கள் அறிவுரைகளை நீங்கள் தந்துகொண்டேதான் இருக்கிறீர்கள். அதை நான் ஒருபோதும் மறந்ததில்லை. ஆனால் செயல்படுத்த முடியாமல் பலவேளைகளில் திணறியிருக்கின்றேன். நீங்கள்தான் என்னை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

உங்கள் வளர்ப்புமுறை குறித்து பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காரணம் எனது அணுகுமுறையாக இருக்கலாம். எனது நடத்தையாக இருக்கலாம்.

எப்போதெல்லாம் எனக்கு கண்டிப்பு தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் வழங்கினீர்கள். எனது திறமையின் எல்லைவரை மட்டுமே உங்கள் கண்டிப்பு சென்றது. வீணாக உங்கள் விருப்பங்களை என் மேல் நீங்கள் திணித்ததே இல்லை. எனவே நீங்கள் உன்னதமானவர். “

…………..”பணத்தை விட குணத்தில் சிறந்த மனித மனங்கள்தான் வாழ்க்கைக்குத் தேவை” என புரியவைத்திருக்கிறீர்கள். எனக்கு கிடைத்த தோழர்களை எண்ணி மகிழ்கிறேன். ……….

இறுதியாக:

உங்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. தற்போது எனக்குத் தேவையாயிருக்கிற உங்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. தேவையான தருணங்களில் ஆறுதல்களும், தேற்றல்களும், அணைப்புகளும், அனைத்துமே உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கிறது. நீங்கள் எடுக்கிற சில முடிவுகளின் விளைவுகள்தான் ஆச்சர்யத்தில் முடிகின்றன. அவ்வகையில் உங்களின் பல்வேறு முடிவுகள் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கின்றது. பல்வேறு தருணங்களில் உங்களை நான் வருத்தம் கொள்ளச் செய்திருக்கலாம். ஆனால் நானாக அப்படி செய்யவில்லை என்பதே உண்மை. உங்கள் அறிவுரைகள் பல்வேறு கணங்களில் எனக்குப் பேருதவியாக இருக்கின்றன. 

அனிச்சையாக என் உதடுகள் உங்களை உச்சரிக்கின்றன. உறங்கச் செல்கையில், போர்வையை மூட நினைக்கையில், முறுவலிக்கும்போது, ஏதோ ஒரு கடினமான தருணங்களில் ’அப்பா’ என்றே உதடுகள் உச்சரிக்கின்றன. உருவத்தில் உங்களைப் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். மற்றவற்றில் உங்களைத் தாண்டிச் செல்வதுதானே உங்களுக்குப் பெருமை.

பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா!

கடந்த சில நாட்கள்…!

எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது போலான உணர்வு. முக்கியமாக மின்தமிழில்.

இணையத்தோடு இணையாமல் சில நாட்கள் இருந்தது ஒன்றும் பெரிதாகப்படவில்லை. நண்பர்களோடு உரையாடவும், சில வேலைகளுமாய் (!) நேரங்கள் கடந்து போயின. அப்பாவோடு பேசுகையில் நீண்ட மாதங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக இயல்பாக பேசினேன். அதுவே பெருமகிழ்ச்சியாயிருக்கிறது.

இன்று நள்ளிரவில் நண்பர்களோடு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்தேன். வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்தன. சில தினங்களுக்கு முன்பு சில தோழர்களோடு பேச நேர்ந்தது. அதன் வாயிலாக ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளேன். இனி சுயமுன்னேற்ற நூல்களை வாங்குவதற்கு அவசியமில்லை.

சில தோழர்களின் உரையாடல் அத்தகைய நம்பிக்கையை எனக்குத் தந்துவிட்டுப் போயிருக்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்துக்கும் அதிகமானோர் என்னுடைய உடல்நிலை குறித்த ஆதங்கத்தை நேரடியாக சொல்லி நெகிழ வைக்கிறார்கள். உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றச் சொல்லி எக்கச்சக்கமான பரிந்துரைகள் கிடைத்தன. உடலை முதலில் மீட்க வேண்டியிருக்கிறது.

நேற்று அண்ணன் ஒருவர் அழைத்தார். குறிப்பிட்ட தேர்வு ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறார். பாராட்டுதலுக்குரிய அவ்வெற்றிக்கு என்னைக் (யும்) காரணமாகச் சொன்னார்.  அதுவும் காலை வேளையில் முதல் ஆளாக என்னிடம் சொல்லி பெருமிதப்படுத்தினார். என்னுடைய வெற்றிக்கு என் ’அண்ணன்’கள் பலரைக் காரணமாய்ச் சொல்லி பெருமைப்படுவதே என் வழக்கம். மாறாக இம்முறை தலைகீழ் மாற்றம்!

புதிய ரசனைகளுக்குள் என்னை ஆட்படுத்த முடியுமா? என்று முயன்றுகொண்டிருக்கிறேன். புதுமைப்பித்தன் சிறுகதைகள், சந்தோஷ் நாராயணன் இசை, மதன் கார்க்கி வரிகள் என இதுவரை அதிகம் தொடாத ரசனைகளுக்குள் மூழ்க முயல்கிறேன். அதிகமான வாசிப்புக்கு என்னிடம் கைவசம் புத்தகங்கள் இல்லை. இணையத்தையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

அரைகுறையாக தொழில்நுட்பம் அறிந்த சிலரின் அதிகபிரசங்கித்தனத்தின் விளைவுகளை வழக்கம்போல சகித்துக் கொண்டே கடக்க வேண்டியதாய் இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன் ஒரு வன்முறைக் களத்தைப் பார்வையிட முடிந்தது. கொஞ்சம் கூட சிந்தனைக்கு வேலை கொடுக்கக் கூடாது என்கிற மனோபாவம் கொண்ட பட்டதாரி இளைஞர்களின் கைவரிசையின் காரணமாய் பல்லாயிரம் ரூபாய்கள் நட்டமடைந்த களத்தை வெறித்துப் பார்த்துவிட்டு திரும்புவதைத் தவிர வேறொன்றும் என்னால் ஆகவில்லை.

பழிக்குப் பழி என்கிற கருத்தின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் கடந்த எட்டு மாதங்களில் இரண்டு பழிக்குப் பழி நிகழ்வுகளை கேள்விப்பட நேர்ந்தது. இதில் எதற்கு நான் வருத்தப்படுவது என்பது எனக்கே விளங்கவில்லை. முன்னதைக் காட்டிலும் பின்னது இன்னும் கேவலமாய் இருக்கிறது.

தம்பி என்னை சில புகைப்படங்கள் எடுக்கப் பிரியப்பட்டான். போகிறபோக்கில் எடுத்த புகைப்படங்களை விட வலிய எடுத்த படங்கள் மோசமாயிருந்தன. அவன் ஒன்றே ஒன்றுதான் சொன்னான். இந்த முழு வாழ்வுக்கும் எனக்கு அந்த ஒற்றை வாக்கியம் போதுமானதாக இருக்கும்.

இயல்பாக இரு. இயல்பாக இருக்க முயற்சிக்காதே! அது மிகக் கேவலமாய் இருக்கிறது.

மிகச் சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. சில விதிமுறைகள் இருந்தன. அதை சிரிப்புடன் படித்துவிட்டு  அதன்படி செயல்படுத்தியபோது அருகிலிருந்த ஒரு நபர் ஒரு கேள்வி கேட்டார். மனதில் இருந்த புன்னகை மறைந்து போய்விட்டது. அந்த விதிமுறைகளை எழுதிய மதிப்பிற்குரியவருக்கு அநேக கோடி வணக்கங்களை மனதார சொல்லிக்  கொள்கிறேன். 

ஒரு கதை சொல்வார்கள்.

ஒரு ஆசிரியர் வகுப்பிலிருந்த மாணவர்களுக்கு திடீர் தேர்வு வைப்பார். இருபது வினாக்கள் பதினைந்து நிமிடங்கள் அவகாசம். முதலில் முடிப்பவருக்கு பரிசு என அறிவிப்பார். எல்லா மாணவர்களும் அவசர அவசரமாக எழுதிக்கொண்டிருக்கையில் ஒரு நிமிடத்தில் ஒரு மாணவன் வெற்றுத்தாளோடு  அவரிடம் சேருவான். அவனுக்கே பரிசும் கிடைக்கும்.

வேறொன்றுமில்லை. கடைசி வினாவில் மேற்கண்ட எந்த வினாவிற்கும் விடை அளிக்கத் தேவையிருக்காது என்றிருக்கும். இக்கதையின் கருத்தை விளக்க நான் எழுதவில்லை. மாறாக இதே போன்று கடைசி வாக்கியத்தில்  அந்த மின்னஞ்சலிலும் ஒரு ’ட்விஸ்ட்’ இருந்தது. எத்தனை பேரின் கண்களில் அது தெரிந்ததோ?

என்னைவிட வயதில் சில ஆண்டுகள் மூத்தவர் ஒருவர் என்னை மிக மரியாதையுடனே அழைக்கிறார். அணுகுகிறார். மனதிற்கு நெகிழ்ச்சி தருகிறது. இதே அளவு மரியாதையை பிறருக்கும் நான் தர வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போலான நிகழ்வாகவே உணர்கிறேன். கால ஓட்டத்திற்குள் நானும் கொஞ்சம் மாறியாக வேண்டும் என்று தந்தை அடிக்கடி சொல்வார். அதற்கான தயாரிப்புகளில் உள்ளேன். பல்வேறு தலைப்புகளில் வாசிக்க ஆர்வமிருப்பினும் கொஞ்சம் தள்ளி வைக்கவே விருப்பம்.

என்னைப் பொறுத்தமட்டில் காலம் பொன் போன்றதல்ல.. உயிர் போன்றது! எனது வழக்கமான வேலைகளை இப்போதும் மும்முரமாய் செய்ய முடிகிறது. ஒன்றே ஒன்றைச் சொல்லி முடிக்க விருப்பம். (அது நாடகத்தனமாய் இருந்த போதிலும்)

தமிழ் இப்போ ஹாப்பி அண்ணாச்சி!

 

கற்றதனாலாயப் பயன்!

இது முழுக்கவே பயணங்களும், அவற்றின் அனுபவங்களும் கொண்ட பதிவு.
நிறைய திட்டங்களைக் கலைத்துப் போட்ட விடுமுறையாகிப் போயிருக்கிறது கடந்த வாரம். இருந்தாலும் சில பயணங்களும், உரையாடல்களும் இதம் தந்த விடுமுறை இது. அதுவரையில் மகிழ்ச்சியே!
பொங்கலன்று இனிமையான சம்பவங்களைக் கடந்து சில நிகழ்வுகள் ஆக்கிரமித்து விட்டன. என் மேல்தான் தவறென்றாலும் அதை என்னாலேயே தவிர்க்க முடியவில்லை. அதன்பின் கொஞ்சம் உருப்படியாக வாசித்தேன். அப்பாவோடு எக்கச்சக்கமான உரையாடல் வாய்த்தது. நான் அதிகம் பேசவில்லை.

கேரளாவின் ஒரு மாவட்டம் முழுக்க அமிலங்களால் சிதைந்து போயிருக்கிறது. ஆனால் அரசோ வருவாயைக் காரணம் காட்டுவதாய் ஒரு கட்டுரை படித்தேன். அதிர்ச்சிதான்.

நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். உரையாடுகையில் ஊடே அவரின் தோழர்கள் சிலர் வந்திருந்தனர். வீட்டுக்கு வெளியே நின்றபடியே உரையாடிக் கொண்டிருந்தோம். தன்னுடைய பணி அனுபவங்களைப் பற்றி சொன்னார் நண்பரின் நண்பர். (நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே!) திடீரென பள்ளி அனுபவங்கள் பக்கம் உரையாடல் திரும்பியது. இன்னொருவரை சுட்டிக் காட்டி இவரும் உங்க பள்ளிதான் என்றார்.
“நான் பத்தாம் வகுப்புவரைதான் அங்க படிச்சேன்”
“பத்தாவதில் எந்த பிரிவு?”
சொன்னார்.
எனக்கும் என் தோழருக்கும் அதிர்ச்சி. காரணம் அது நான் படித்த பிரிவு. நான் தொடர்ந்தேன்.
“நானும் அதே பிரிவுதான்! ”
“தெரியும். தமிழ்தானே உம்பேரு!”
“ம்ம்ம்.. ஆமா உன் பேரு *** தானே! முன்னமே தோணுச்சு…… என்ன எப்படி அடையாளம் கண்டுபிடிச்ச!”
அவர் சொன்ன பதில் எதிர்பார்த்த ஒன்றுதான்!
“பார்த்த உடனே…..”
பெரும்பாலான பள்ளித் தோழர்கள் என்னை அடையாளம் காண்பதில் சிரமப்படுவதே இல்லை. மாறாக நான் அவர்களைக் கண்டுபிடிப்பதற்குள் ”அவனா இருக்குமோ? இவனா இருக்குமோ?” என்று தாவு தீர்கிறது.

கரும்பு மட்டும்தான் இந்த பொங்கலை மறக்க முடியாதபடிக்குச் செய்தது. முடிந்தமட்டும் விருப்பம்போல கரும்பு தின்ன முடிந்தது (கரும்பு தின்னக் கூலியா!)! சன் டிவியில் ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் ஒன்று நீண்ட இடைவெளிக்குப் பின் ஒளிபரப்பானது. அதன் பின்னணி குறித்து அப்பா சொன்னார். சிரித்தபடியே ஆமோதித்தேன்! விடுமுறை நாட்கள் முழுக்க  படங்கள், பாடல்கள் என்றெல்லாம் பெரிதாக அமர்க்களப்படவில்லை. அத்தோடு வீட்டிற்குள் நுழையும் முன்பே அந்த மூன்றெழுத்துப் படம் குறித்த போஸ்டர்களும், படம் பார்க்க காத்திருந்த ரசிகர்கூட்டமும் ஆச்சர்யம்தான்! நாடோடிகள் படத்தில் ஒரு வசனம் வரும்.

”இந்த வசனம்-லாம் யார் எழுதுறா?
”அதுக்கு பதினைந்து பேர் கொண்ட குழு இருக்கே!”

அந்த பதினைந்து பேர் கொண்ட குழுவினர்தான் என் கண்ணில் படவில்லை. ’சிலர்’ அரசியலுக்குள் வர மறுப்பதன், அல்லது வரத் துடிப்பதன் பின்னணி ஓரளவேனும் புரிந்தது.

வாசித்தவற்றையெல்லாம் முதலில் மனதினின்று எடுக்க வேண்டும். பல சிறுகதைகளையும், சில கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கத் திட்டம்! டான் நதி புத்தகத்தைத் தொடவே இல்லை. தொட்டால் முடிக்கிற வேகம் வாய்க்க வேண்டும். சும்மா சும்மா அந்த புத்தகத்தை துன்புறுத்துவது நியாயமாகப்படவில்லை.

ஒரு சுகமான பேருந்துப் பயணம் வாய்த்தது. காதில் மாட்டிய ஹெட்போனை கடைசிவரை கழட்டவில்லை. இதில் சில ஆச்சர்யங்கள் நிகழ்ந்தன.

 1. முதல் பாடல் இளையராஜா, அடுத்து கார்த்திக் ராஜா, அடுத்து யுவன் ஷங்கர் ராஜா என முதன்முறையாக பாடல்கள் வரிசையாக ஒலித்தது.
 2. எனக்கருகில் அமர்ந்திருந்த நபர் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பொறுத்துப்பார்த்தார். கடைசியாக அவரும் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பண்பலை வானொலியை இயக்கி ரசித்தார்.
 3. ஒரு குழந்தை எனக்கு எதிரே (அம்மாவின் மடியினின்று இறங்கி) நின்றிருந்தது. வெகுநேரமாக என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தது. அவ்வப்போது நானும். திடீரென என் தொடை யைத் (அதாவது பேண்ட்ஸை) தொட்டது அக்குழந்தை. இருமுறைகள் தடுத்த அதன் அம்மாவுக்கு (என் அனுமானத்தில் ) வயது இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் இருக்கும். இருமுறைகளுக்குப் பின் அந்தப் பெண் அக்குழந்தையைத் தடுக்கவில்லை. அது என் காதுகளையே பார்த்துக்கொண்டிருப்பதாகப் பட்டது. என் ஐயம் வீணாகவில்லை. சற்றுநேரத்தில் மூன்று முயற்சிகளுக்குப் பின், என் தோளைக் கொஞ்சம் சாய்த்து, அப்படி-இப்படி என அசைந்து ஒருபக்க ஹெட்போனை கழற்றிவிட்டது. இன்னொரு காதில் எனக்கு பாட்டு கேட்டுக்கொண்டிருந்தது. அக்குழந்தையின் தாய், எனக்கு அருகில் இருந்தவர், எனக்கு முன் -பின் அமர்ந்திருந்த சிலரும் ஒரே நேரத்தில் அதிசயித்தனர். (ஓஓஓ!)(பார்ரா!)

  ”அவங்கப்பாவிடமிருந்து தொற்றிய பழக்கம் இது” பூரிப்புடனே அந்த தாயார் கணநேரத்தில் பகிர்ந்த தகவல் இது. எனக்கோ அக்குழந்தையிடம் ஹெட்செட்டைக் கொடுக்க மனமில்லை.

  இது இளம்பருவம்; அதன் காது மிகச் சிறியது; என்னிடம் ஓடிய பாடலின் டெம்போ; நான் கேட்டுக்கொண்டிருந்த ஒலியின் அளவு; பாடல் குழந்தையிடம் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என பல எண்ண மின்னல்கள் என்னைச் சுற்றின. கடைசியாக மீண்டும் ‘இயல்பு நிலை’க்குத் திரும்பினேன். 

பொங்கலன்று காலை இனிதே விடிந்தது. தோழர்கள் சிலருக்கு வாழ்த்து சொல்ல அழைத்தால் நான்கு விதமான மறுமொழிகள் கிடைத்தன.

1. பிஸி
2. அரைகுறையாக உரையாடல் கேட்டது. பின்னர் சிக்னலில் பிரச்சினை
3. ஸ்விட்ச்டு ஆஃப்
4. முழுமையாக ரிங் மட்டும் போய் முடிந்தது.
இதன் பின் எதிர்பாராத விதமாக வகையாக ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன். அதனின்று மீள்வதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

*******************

கடைசியாக:

2011 ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். தலைவர்கள் சிலரின் தத்துவங்களை ’சிறப்பு’ ட்வீட்டாக இடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட ஒரு தத்துவத்தை ’அவர்’ எனக்கு முன்பே இட்டுவிட்டார். ஓஜஸிடம் இதைச் சொன்னவுடன்.

“யோசிக்கிற ட்வீட்லாம் அப்பப்போ எழுதிடணும். வெயிட் பண்ணினா அவ்ளோதான்!”

 என்றார். இப்போது வரை புத்திக்கு உறைப்பேனா என்கிறது. இதன் காரணமாய் நான் இழந்தவையும் இருக்கிறது. அதை விடுங்கள். இன்றோடு நான் ட்விட்டருக்குள் நுழைந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. வேறென்ன சொல்வேன்?

தோழர்களுக்கு நன்றி. 

பெரியார் பற்றி கல்கி சொன்னவை

பெரியார் குறித்த புரிதலுக்கான பல பதிவுகளில் இதுவும் ஒன்று. இன்னும் வரும்…. இதன் முன்னுரையை (பதிவின் காரணம்) படிக்க இங்கே சொடுக்கவும்.

முற்றுணர்ந்த பேராசிரியர்!

கல்கி

சாதாரணமாக இராமசாமியாருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டுப் பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால், இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை , அரைமணி நேரத்துக்கு மேல் என்னால் உட்கார்ந்து கேட்க முடியாது. ‘பஞ்சாப் படுகொலை’யைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால், பண்டிதர் சுராஜ்-உத்-தௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ஆம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருமுன், பொழுது விடிந்துவிடும். ஆனால், இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவுதான் நீட்டினாலும், அவருடைய பேச்சில் அலுப்பு தோன்றுவதே கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் இராமசாமியின் பிரசங்கம் ஒன்றைமட்டுந்தான், என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன்.

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுள்ளே முதன்மை ஸ்தானம் தயங்காமல் அளித்துவிடுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில், முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளிலும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்!

தாம் உபயோகிக்கும் சொற்கள் எல்லாம் செந்தமிழ்ப் பதங்கள் தாமாவென்று, நாயக்கர் சிந்திப்பதில்லை. எழுவாய் பயனிலைகள், ஒருமை பன்மைகள், வேற்றுமை உருபுகள் முதலியவற்றைப் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை. ஆனால், தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை, மக்களின் மனத்தைக் கவரும் முறையில் அவர் சொல்லும் வித்தையை, அவர் நன்கறிவார். அவர் கூறும் உதாரணங்களின் சிறப்பையோ, சொல்ல வேண்டுவதில்லை.

இராமசாமியாரின் பிரசங்கம் பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறு எவரையும் விட, அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம், படித்தவர்களுக்கு ரசிக்காது என்ற முடிவு செய்தல் பெருந்தவறாகும். என்னைப் போன்ற அரைகுறைப் படிப்புக்காரர்களேயன்றி, முழுதும் படித்துத் தேர்ந்த பிஏ., எம்ஏ., பட்டதாரிகளுங்கூட அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அவருடைய விவாதத்திறமை அபாரமானது. ”இவர் மட்டும் வக்கீலாகி வந்திருந்தால், நாமெல்லாம் ஓடு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்” – என்று ஒரு பிரபல வக்கீல், மற்றொரு வக்கீல் நண்பரிடம் கூறியதை நான் ஒரு சமயம் கேட்டேன்.

உபயோகமற்ற வாதங்களும் அவர் வாயில் உயிர்பெற்று விளங்கும். ஓர் உதாரணம் கூறி முடிக்கிறேன். அந்த காலத்தில் ஸ்ரீமான் நாயக்கர் மாறுதல் வேண்டாதவராக விளங்கியபோது, சட்டசபைப் பிரவேசத்துக்கு விரோதமாகப் பல பிரசங்கங்கள் புரிந்தார். அப்போது அவர் கூறிய வாசகங்களுள் ஒன்று சட்டசபைப் பிரவேசத்தினால் வீண் பணச்செலவு நேரும் என்பது.

“ஒரு ஜில்லாவில் சுமார் 30,000 வாக்காளர்கள் இருப்பார்கள். அபேட்சராக நிற்பவர், இந்த 30,000 ‘கார்டாவது’ போட வேண்டும். சர்க்கார் தபால் இலாகாவுக்கு லாபம். இத்துடன் போகாது. இந்த அபேட்சகர் செத்துப் போய்விட்டதாக, எதிரி அபேட்சகர் ஒரு வதந்தியைக் கிளப்பிவிடுவார். “நான் செத்துப்போகவில்லை, உயிருடன்தான் இருக்கிறேன்” என்று மறுபடியும் 30,000 கார்டு போட வேண்டும்.”

நாயக்கரின் இந்த வாதத்தில், அர்த்தமேயில்லை என்று சொல்ல வேண்டுவதில்லை. அதுவும் எழுத்தில் பார்க்கும்போது வெறும் குதர்க்கமாகவே காணப்படுகிறது. ஆனால், அப்போது – ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்தபோது, நானும் இன்னும் 4,000 ஜனங்களும், ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒருமுறை ‘கொல்’  என்று சிரித்து மகிழ்ந்தோம்.

1931-ல் ஆனந்தவிகடன் –ல் எழுதியது