அனுபவங்கள்

எளிய தமிழில் சொல்வது…

வணக்கம்.

புதிய மின்னூல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம். நான் எழுதிய மின்னூல் ஒன்று வெளியாகியுள்ளது. (தரவிறக்க இணைப்பு பதிவின் இறுதியில் உள்ளது.)

எளிய தமிழில் WordPress.

மின்னூல்

எளிய தமிழில் WordPress

ஏறக்குறைய மூன்றாண்டுகளாய் நீடித்த மின்னூல் உருவாக்கம் இது. ஆகவே ஒருவகையில் இது மகிழ்ச்சியான செய்தி. மூன்று ஆண்டுகள் என்றாலும் புத்தகம் சிறிய புத்தகம்தான். அதை ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு எனக்கான சூழல் கடைசிவரை அமையவே இல்லை. ஆகவே இது ஒரு பெரும் தாமதம்.

கணியம் தொடங்கப்பட்ட காலத்திலேயே (அதன் முதன்முதல் இதழ் முதலாகவே) அதை அறிந்து வியந்தோம் நானும் என் நண்பர் ஓஜஸும். நான் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை எழுத விரும்பி கணியம் பொறுப்பாசிரியரை அணுகினேன். இதை எழுதுறீங்களா? என சுலபமாக அவர் கொடுத்த வாய்ப்பு இப்போது அனைவருக்குமான இம்மின்னூலாக மாறியுள்ளது.

உண்மையில் இம்மாதிரி மின்னூல்கள் எழுதுவது சுலபம். ஆனால் அதை எழுத நேரம் சரியாக அமைவது ஒருவகை அதிர்ஷ்டம். அதேசமயம் தமிழில் கணினி தொடர்பான நூல்களை எழுதுபவர்களை விட அதிக சிரமம் அடைபவர்கள் அதைப் படிக்கிறவர்கள்தான்.

நான் அடிப்படையில் தமிழ்வழியில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் படித்தவன். ஆகவே தமிழில் கணினி தொடர்பான கலைச்சொற்களைப் படிப்பது ஒருவகை சவால்!

பள்ளியில் உயிரியியல் படித்த பலருக்கும் கணிப்பொறி படிப்பவர்களைக் கண்டால் சின்னதாக பொறாமை கூட இருக்கும். நாங்கள் எளிதாக மதிப்பெண் பெறுகிறவர்கள் என்பார்கள்.

எங்கள் பாடத்திட்டம் அப்படி! அதைத் திருத்த முயல வேண்டியது கல்வித்துறைதான்.

வேர்ட்பிரஸ் குறித்து எழுத எவ்வளவோ விஷயங்கள் உண்டு. தொடர்ச்சியாக மேம்பாட்டில் இருக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள் அது.

நான் இந்நூலில் குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாமே அடிப்படையானவை. இந்த அடிப்படை விஷயங்களையும் நூலாக்குவதில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. சாதாரண வேர்ட்பிரஸ் மென்பொருளுக்கும், வலைப்பூவாக நாம் பயன்படுத்தும் வேர்ட்பிரஸ் தளங்களுக்கும் இடையேயான வித்தியாசங்களினால் சில சமயம் நானே குழம்பிவிட்டேன் என்பதே உண்மை.எதை நோக்கி எழுதுவது என்கிற குழப்பத்தில் இரண்டிற்கும் பொதுவான விஷயங்களை மட்டும் எழுதியிருக்கிறேன்.

இருமுறை நானே எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஒருமுறை கணியம் பொறுப்பாசிரியர் த.சீனிவாசன் அவர்கள்தான் வேர்ட்பிரஸ் தொடர்பான நூலுக்கான தேவை குறித்து மேலும் சொன்னார். போதாமல் யாரோ ஒருவர் வேர்ட்பிரஸ் குறித்த மின்னூலைக் கேட்டு கணியம் குழுவினருக்கு மின்னஞ்சல் வேறு அனுப்பியிருந்தார்.

அவ்வளவுதான். விரைவாக மீண்டும் எழுதத் துவங்கிவிட்டேன்.

இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. A4 PDF மின்னூல் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. நானே மின்னூல் வடிவமைப்பு செய்ய வேண்டியது. ஆனால் என்னிடம் முழுமையான Content இல்லை. சில மாதிரி படங்கள் அழிந்துபோய் விட்டன.

மீண்டும் கணியம் தளத்திலிருந்து எடுத்து ஒட்டினாலும், தகவல்பிழைகள் ஏதும் வரக்கூடும் என்கிற பயம் வேறு. பொறுப்பாசிரியரிடமே பொறுப்பை ஒப்படைத்து நகர்ந்து கொண்டேன்.

ஒரு விஷயம் மட்டும் உறுதி.

தமிழில் கணினி தொழில்நுட்ப நூல்களை எல்லோரும் படிக்கும்படி எழுதுவது ஒரு சவால். அதை ஓரளவு நான் வென்றிருக்கிறேன் என நம்புகிறேன். தனிப்பயனாக்குதல் என்று ஒரு சொல் பயன்படுத்தியிருப்பேன். Customization என்பதன் தமிழாக்கம் அது. எத்தனை பேருக்கு அதெல்லாம் புரியுமோ தெரியாது! மற்ற இடங்களிலெல்லாம் முடிந்த மட்டும் தமிழும், ஆங்கிலமும் கலந்து நெருடல் இல்லாமல் எழுதியிருக்கிறேன்.

[விஷயம் என்ற சொல்லை முன்பு விடயம் என்றே நான் பயன்படுத்தினேன். அதுவும் இம்மின்னூலில் அப்படியே இருக்கிறது. இப்போது நான் விஷயமாகத்தான் எழுதுகிறேன் விடயமாக அல்ல!]

தற்போதைய வேர்ட்பிரஸ் வசதிகள் முழுமையாக இம்மின்னூலில் ஒருவேளை இருக்காது. அடிப்படையில் குழப்பம் இல்லை. மாதிரிப் படங்கள் மாறியிருக்கலாம்!

இதை மேம்படுத்தி எழுத வேண்டிய தேவை மீண்டும் எழும். அப்போது குறைகளை நானே களைவேன் என நம்புகிறேன்.

தமிழில் தொழில்நுட்ப நூல்களுக்கான தேவை அதிகம் உண்டு. அதில் என் பங்கில் ஒரு துளி இது.

இம்மின்னூல் உருவாக்கத்தில் பங்கு கொண்ட த.சீனிவாசன், பிரசன்னா, லெனின் குருசாமி ஆகியோருக்கு என் நன்றிகள் எப்போதும் உண்டு.

வரும் காலங்களில் நிறைய பேர் கணியம், Free tamil ebooks திட்டங்களில் செயலாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

தரவிறக்க இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/learn-wordpress-in-tamil/

நன்றியுடன்

தமிழ்

Advertisements

முதல் புத்தகம் [மின்னூல்]

முதல் புத்தகம் வெளியாகியிருக்கிறது.

முதல் மின் புத்தகம். பெயர் யோசிக்க ரொம்ப சிரமப்படக்கூடாது என்று எண்ணியிருந்தபடியால் அப்படியே முதல் புத்தகம் என்றே நூலுக்குப் பெயரும் வைத்தாயிற்று.

சொல்லப்போனால் இது அதிகாரப்பூர்வமான முதல் மின்னூல். இதற்கு முன்பு இரு மின்னூல்களை தொகுத்து நண்பர்களின் வாசிப்புக்காக அனுப்பியிருந்தேன். அதெல்லாம் முழுக்கவே சுயபதிவுகள் என்பதால் பொதுவெளியில் வைக்கவில்லை.

மின்னூல் வெளியிட வேண்டுமென்று கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே விருப்பம் இருந்தது. அதற்காக நண்பர்கள் சிலர் எவ்வளவோ உழைப்பைக் கொட்டினார்கள். அத்தனையும் கிட்டத்தட்ட வீணாகிவிட்டது. அதற்காக அவர்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும்.

கணியம் வலைத்தளம் தொடங்கிய ஓராண்டின் இறுதியில் அதில் ஒரே ஒரு பதிவு எழுதியிருந்தேன். பின்னர் அதன் ஆசிரியரான திரு. த. ஸ்ரீனிவாசன் அவர்களிடம் வேறேதேனும் எழுத யோசனைகள் தேவையெனக் கேட்டேன். அவர் ஒரு பெரும் வாய்ப்பைக் கொடுத்திருந்தார். அதை முழுக்க முடித்திருந்தால், அதுவே என்னுடைய முதல் மின்னூலாக  கணியம் குழு மூலமாக வந்திருக்கும்.

அந்த காலகட்டத்தில் துவங்கப்பட்ட திட்டமே free tamil ebooks திட்டம். ஒன்றிரண்டு நூல்கள் வெளியிட்ட காலத்திலேயே அக்குழுவிலிருந்து அழைப்பு கிடைத்தது. என்னுடைய தளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வலைப்பதிவுகளின் இணைப்புகள் கேட்டிருந்தனர்.

அப்போதிருந்த மனநிலையில் அது எனக்கு உவப்பானதாகப் படவில்லை. நான் உருப்படியாக ஒன்றும் எழுதியிருக்கவில்லை என்று என் ஆழ்மனதில் ஒரு எண்ணம் இப்போது வரையுமே இருக்கிறது.

மதிப்பில் இனிய ரஞ்சனி நாராயணன் அவர்களும் இதே போல் ஒரு தொகுப்பு மின்னூல் வெளியிட்ட காலத்தில் அவருக்கு எழுதிய மின்னஞ்சலில் சொல்லியிருப்பேன். நீங்கள் ஏதேனும் புனைவு எழுதியிருக்கலாம் என்று.

அப்போதைய மனநிலை அப்படித்தான் இருந்தது.

அதுதான் இணையத்தில் தளத்திலேயே இருக்கிறதே.. அதை ஏன் மீண்டும் தொகுத்து மின்னூல் ஆக்க வேண்டுமென்ற எண்ணம். பிறரது முயற்சிகளைப் படிக்கையில்தான் அந்த திட்டம் சிறப்பானதாகப் பட்டது.

ஆனால் இப்போதும் என் தளத்தில் உருப்படியான கட்டுரைகள் என்று எடுத்தால் எத்தனை தேறுமென்று தோன்றவில்லை.

சில மாதங்கள் முன்பு தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்நூல். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 09 2015) வெளியாகியுள்ளது. (இணைப்பு இறுதியாக உள்ளது.)

முதல் புத்தகம் இருபத்து ஐந்து பக்க அளவில் இருந்தால் போதுமென விரும்பியிருந்தேன். ஆனாலும் நாற்பது பக்க அளவில் இருந்தால் நன்றாக இருக்குமென வெளியீட்டாளர் விருப்பம் கொண்டார். சில பதிவுகள் புதிதாக எழுதி, சிலவற்றை கூடுதலாகச் சேர்த்து நாற்பது பக்கங்கள் கொண்டு வந்தேன்.

பல நண்பர்களின் வாழ்த்துகள் கிடைத்தன. ஒரே ஒரு மின்னஞ்சல் (இதுவரைக்கும்) அறியாத ஒருவரிடமிருந்து வந்தது. இத்தளத்தைக் கூட புதிதாக நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். இன்னொரு தளத்தில் கூட இந்நூலில் அறிமுகம் காணக் கிடைக்கிறது. சில மின்னஞ்சல் குழுக்களில் இப்புத்தகத்தை எடுத்துச் சென்று அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

நிறைய பேர் வாசித்தால் மிக்க மகிழ்ச்சிதான்.

பிழைகள் ஏதும் இருப்பின் பொறுத்தருள்க. நானே மெய்ப்பு பார்த்ததால் இப்படித்தான் இருக்கும். என் கண்ணில் என் பிழைகள் படாது அல்லது தாமதமாகக் கண்ணில் தெரியும். இதே புத்தகத்தை நண்பர் ஓஜஸ் எழுதியிருந்தார் என்றால்  என் கண்ணில் பிழைகள் சுலபமாகப் பட்டிருக்கும். ராசி அப்படி!

முதல் புத்தகம் cover image

முதல் புத்தகம்

நண்பர்களின் பங்களிப்போடு என் நூல் வர வேண்டுமென விரும்பினேன். அட்டைப்படம் என் தோழர் மூலமாக வரையப்பட வேண்டுமென விரும்பியிருந்தேன். பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நானே உருவாக்கி விட்டேன்.

வழக்கமான அட்டைப்படம் மாதிரி இல்லவே இல்லை. அதன் காரணம் நானேதான். இன்னுமொரு புத்தகம் இதைவிடச் சிறப்பாக நான் எழுதினால் அப்போது வேறு கதை சொல்கிறேன். அதுவரைக்கும் இதுதான்.

முன்னுரை படிக்க, வெவ்வேறு வடிவங்களில் தரவிறக்க…
http://freetamilebooks.com/ebooks/first-book/
பரவலாக என் நூல் செல்லுமாறு வெளியிட்ட free tamil ebooks குழுவினருக்கு நன்றி திரு, ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு என் நெகிழ்ச்சியான வணக்கம்.

தமிழ்
அக்டோபர் 12 2015

’போல’ கவிதைகள்

தமிழ் மின்னிதழ் – சுதந்திரம் -2015 -ல் நான் எழுதிய கவிதைகள் சில வெளியாகி உள்ளது.
அடிப்படையில் தமிழில் இம்மாதிரியான வடிவங்களின் பெயர்கள் என்னவென்று தெரியாத காரணத்தால் பொதுவாக கவிதைகள் என்றே அழைக்கப்படுகிறது. இதெல்லாம் கவிதையென்றால் பாரதியார் எழுதியதெல்லாம் என்ன என்றெல்லாம் கூட கேள்விகள் எழுகின்றன. கொஞ்சம் நாசூக்காக புதுக்கவிதைகள் என்று சொல்லிக்கொள்ளலாம் என்றாலும் அதுவும் சரியாகப் படவில்லை.

கட்டுரை எழுதவே எனக்கு விருப்பமிருந்தது. ஆனாலும் நேரம் இன்மையால் ஏற்கனவே எழுதி வைத்தவற்றிலிருந்து எடுத்து அனுப்பிவிட்டேன். இனி கவிதைகளை இதழ்களுக்கு அனுப்புவது குறித்து தீர யோசிக்க வேண்டியிருக்கும்.

என்னளவில் உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் ஒற்றை வரிமேல் தீராத நம்பிக்கை உண்டு. உரைநடையின் சிக்கனந்தான் கவிதை என்பதையே நான் எடுத்துக்கொள்கிறேன். உரைநடையில் கவித்துவம் கூட்ட பயன்படும் உவமைகளை இங்கு கருப்பொருளாக எடுத்திருக்கிறேன்.

உவமை என்பதல்லாமல் இருந்த மூன்று கவிதைகள் இதழில் வெளியாகவில்லை. அதற்கும் இதழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக, எழுத்தாளர் ஜெயமோகன் இவ்விதழ் குறித்த பதிவில், கவிதைகள் பெரும் சோர்வை அளித்தன என்று குறிப்பிட்டுள்ளார். நல்லவேளையாக எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இனியும் நான் கவிதைகள் எழுத முயற்சிப்பேன். ஆனால் இதழ்களில் பிரசுரிப்பது குறித்து நன்கு யோசிப்பேன்.
ஆகவே கடைசியாக,
வேறு யாரேனும் இதழை வாசிக்க விரும்பினால்
வாசிக்க‌ / தரவிறக்க: https://drive.google.com/file/d/0BwdaEHEd7U78dWxXLWlQNl9jcWc/edit

நான் எழுதியவை:

 

அலை தழுவிய
பாதம் போல
குளிர்கிறது

நெடுநாள் கழித்து
வீடு திரும்பிய
என் மனம்

*
இப்போதெல்லாம்
தினமும் ஒருமுறை
வீதியை மழை நனைக்கிறது

உன் நினைவுகள்
என் மனதை நிறைப்பதைப் போல

*

உறக்கமில்லாத
இரவுகளில் செவியை
நிறைக்கும் இசை போலவே
நினைவு அடுக்குகளில் இருந்து
மீட்டெடுத்த உன் நினைவுகளும்
மனதை நிறைக்கின்றன

*

மூடிய சன்னலின்
ஏதோ ஒரு இடைவெளி வழியே
நுழைந்து குளிரேற்றும்
சில் காற்றைப் போல
பேசாது கழித்த
நாட்களுக்கெல்லாம்
சேர்த்து வைத்து
நியாயம் செய்கிறது
அந்த அலைபேசிக் குரல்!

*

அலமாரி

நான் அடுக்கி வைத்ததை
நீ கலைத்து விடுகிறாய்
நான் அடுக்கி வைப்பதிலேயே
களைத்து விடுகிறேன்

*

விரல் பட்டதும் எழும்பும்
இசை போல
உன் குரல்
என்னை அழைக்கையில்
அனிச்சையாக
எழுந்து நடக்கின்றன
என் கால்கள்

*

எங்கேயோ கேட்டு
மறக்க முடியாத
சந்தப்பாடலைப் போல

உதடுகள்
நினைத்த போதெல்லாம்
முணுமுணுக்கிறது
உன் பெயரை 

*

மழைத் தூறலின் நடுவே
நின்று பருகிய தேநீர் போல
துளித்துளியாக உற்சாகம்
சேர்க்கிறது உன் வார்த்தைகள்

*

எப்போதாவது உன் நினைவுகள்
எப்படியாவது பேனா முனைக்குள்
நுழைந்து விடுகிறது.

மெய்க்குள்ளே உயிர் போல
மைக்குள்ளே கலந்து விடுகிறது

அவ்வப்போது இப்படி
ஏதாவது எழுதத் தூண்டுகிறது

*

முருங்கை இலை சேர்த்து
உருக்கிய நெய் வாசம் போல

நினைக்கையில் எல்லாம்
நெஞ்சோடு கலந்துவிடுகிறது
நெடுநாள் கழித்து சந்தித்த
நண்பனின் நினைவுகள்

தமிழ் வளர்க்க

தமிழை வளர்க்க என்ன வழி?
முதல் வழி பேசுவது. நல்ல தமிழை எழுதவும் பேசவும் செய்தாலே அது வளரும். ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசப் பழக வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது கொஞ்சம் கடினமாகக் கூட இருக்கலாம். இது எல்லோருக்குமானது.
ஆனால் வளரும் தலைமுறைக்காரர்களிடம் நல்ல தமிழை விதைத்தால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். நல்ல தமிழ்நூல்களை வாசிக்கப் பழக்கினால், அதன் சுவையில் அவர்களாகவே தமிழை உணர்ந்து படிப்பார்கள்.

குறளைச் சொல்லித் தருகையில் அதன் பொருளை நிதானமாக, அதன் பொருட்சுவையை அழகாக எடுத்துரைக்கும் தமிழாசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால் பாடத்திட்டம் அதனை அனுமதிப்பதில்லை. அங்குதான் முதல் அடி விழுகிறது.

திருக்குறள் என்பது ஏதோ மனப்பாடம் செய்ய முடியாத கடினமான ஒன்றாக மாணவர்கள் முன் நிற்கிறது. இதர செய்யுள்களுக்கும் அதே நிலைமை. உரைநடைப் பாடமென்பது தமிழின் உரைநடையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதாக அமைய வேண்டும். அங்கும் குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதிலாகவே அவை இருக்கின்றன.

அடிப்படையில் கேள்வித்தாள் என்பது மிகவும் நேரடியாக இருக்கிறது. மறைமுகமான கேள்விகளும், சிந்தித்து சுயமான விடையளிக்கும் வகையிலும் அமைய வேண்டும்.

துணைப்பாடம் என்றொரு பகுதி உண்டு. சுவையான கதைகள் கொண்ட பகுதி.
தமிழ் இரண்டாம் தாளில் ஒரு வினா வரும். கற்பனையாக யோசித்து எழுதக் கூடிய பகுதி. ஒன்பதாம், பத்தாம் வகுப்பில் கவிதை எழுதக் கூட கேள்விகள் உண்டு. ஆனால் அவற்றுக்கெல்லாம் பதிலாக இன்னொரு கேள்வி(கள்) இருக்கும். அவற்றிற்கான நோக்கமே அழிந்திடும்.

இளவல் ஒருமுறை அந்த கற்பனையான கேள்விக்கு பதில் எழுதியமைக்கு ஆசிரியர் கண்டித்திருக்கிறார். அதற்கு பதிலாக நேரடியான கேள்விக்குப் பதில் எழுதப் பணித்திருக்கிறார். நானும் கற்பனையான கேள்விகளைத் தவிர்த்திருக்கிறேன். ஒரே காரணம் மதிப்பெண்.

தமிழை வளர்க்க நிறையவே வழிகள் உண்டு. அவை இப்போது அடைபட்டு நிற்கின்றன. ஒரு இரவில், ஒரு நாளில் மாற்றம் நிகழ்ந்து விடாதுதான். நாம் சிறிய அளவில் முயற்சியெடுத்தால் போதும். ஒவ்வொருவரின் பங்களிப்பால்தான் இது சாத்தியமாகும். இங்கே நிறைய பழமைவாதிகள் உண்டுதான். அவர்களை மீறிக்கொண்டுதான் இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்.

பள்ளிகள் தமிழைப் பேசவும், எழுதவும், வாசிக்கவும் பழக்கும் இடமாக இருப்பின் நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். பள்ளிப்படிப்பை முடிக்கிறவர்கள் துளியும் தமிழ் தெரியாமல் வெளிவருகிற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் இப்போதைக்கு போதுமானது. அடுத்தது மதிப்பெண் குறித்த கவலைகள்.

 

**

நண்பரொருவர் கேட்ட கேள்விக்கு என்னளவில் யோசிக்கத் தொடங்கி எழுதியதை அப்படியே பதிந்துவிட்டேன். இன்னும் யோசனைகள் இருக்கலாம். இது என்னுடைய யோசனை அவ்வளவே.

-தமிழ்.

சில குறிப்புகள்

திடீரென இந்த வரி நினைவுக்குள் வந்தது. ஏன் என்று கேட்டால் சில கேள்விகளுக்கு பதில் வராதுதான்.

பள்ளியில் படிக்கிற போது, சில பாடல்களை சிறப்பான விளக்கங்கள் மூலம் நடத்திய ஆசிரியர்கள் எல்லோருக்கும் நினைவில் இருப்பார்கள். விளக்கங்கள் உதாரணங்கள் மூலம் மனதில் காலத்திற்கும் நின்றிருக்கும்.
எங்கிருந்தோ வந்து காதில் விழுந்தது.

“போடா! சொன்னப்பயலே”.

எந்த வார்த்தை இப்படி திரிந்து வந்தது என யோசனை போனது. இப்போதெல்லாம் நிறைய வார்த்தைகள் திரிந்துகொண்டே போகின்றன அல்லவா! டங்கா மாரி என்கிற வார்த்தையின் மூலம் அடங்கா மாரி – யா? இடங்கா மாரி- யா? என்றொரு பதிவைக் காண நேர்ந்தது.
பாரதிதாசனுக்கு அறிமுகம் தேவைப்படாது. அவரெழுதிய பாடல் ஒன்றின் ஒற்றை வரி ரொம்ப காலமாக மனதில் இருக்கிறது.

”தொன்னை யுள்ளம் ஒன்றுண்டு – தன்னாட்டு சுதந்தரத்தால் பிறநாட்டை துன்புறுத்தல்”

சொன்னப்பயல் என்கிற வார்த்தை என்னை தொன்னையுள்ளம் வரை கொண்டு சென்றது.
பாரதிதாசனுக்கு அவர் எழுதியதிலேயே பிடித்த பாடல் என்று

”எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்.. ” பாடலைச் சொல்வார்கள். அதில் பாருங்கள்.. ஈனுவது என்பது தாய்க்குரியது. அதில் தந்தை முன்னால் எப்படி வருவார்? இது என் தமிழாசிரியர் ஒருமுறை எழுப்பிய கேள்வி.

இலக்கண வரைமுறைகளின் படி வந்திருக்கலாம் என்பது என் துணிபு. எனை ஈன்ற தாய்க்கும் தந்தைக்கும் என்பதில் ஏதோ குறை இருப்பது போல வாசிக்கையிலேயே தோன்றுகிறது.

சமீபத்தில் அடிக்கடி கேட்ட பாடலென்று சொல்லச் சொன்னால் நிறையவே சொல்லலாம். அதில் இங்கு குறிப்பிட வேண்டியது பாரதியாரின் “ஆசை முகம் மறந்து போச்சே” முழுப்பாடல் ஒலி வடிவில் இல்லையென நினைக்கிறேன். வரி வடிவில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 

”பறவையா பறக்குறோம்..”  பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? பலமுறை நானும் அப்பாடலைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் தோணவில்லை. சமீபத்தில் திடீரென தோன்றியது இப்படி..
அப்பாடலின் ஒரு வரி இப்படிப் போகும்..
”சூரியன் போல நாங்க சுழலுவோம்!”
அறிவியல் படி சுழல்வது பூமிதான். சூரியன் அல்ல!
பாரதிதாசன் – பாரதி – யுகபாரதி என ஒரு சுற்று வந்தாயிற்று அல்லவா!

*
வீட்டுக்கு இம்மாத தொடக்கத்தில் சென்று திரும்பினேன். குறுகிய இப்பயணத்தின் சில மணிநேரங்களை மதுரையில் செலவிட்டேன். மாலை நேரம்தான் சென்றேன் என்றாலும் வெப்பம் அதிகம்.

சீமாந்திரா, தெலுங்கானா மாநிலத் தோழர்கள் சிலரோடு உரையாடினேன். தமிழ்நாட்டை விட ஆந்திரப் பிரதேசம் வெப்பம் அதிகம் என்றே நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் மதுரை அதிகம் சுடுவதாகச் சொன்னார்கள்.

உணவு முறையும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வித்தியாசமாக இருப்பதாகச் சொன்னார்கள். மதியம் மட்டும்தான் சோறு கிடைக்கிறது. காலையும், இரவும் இட்லி, தோசை மட்டும் எப்படி சாப்பிடுவது என்றார்கள். சில உணவுகளை பழகிக் கொள்ளச் சொன்னேன்.

டவுன் ஹால் ரோட்டில், பஞ்சாபி தாபாக்களைக் குறித்து வைத்திருக்கிறார்கள். வாரம் ஒருமுறை தாபாவில் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொன்னார்கள். அதே சாலையில் நான்கு தாபாக்கள் இருப்பதைக் கண்டேன். தமிழ் எழுத்துருக்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்கிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் தமிழ் கற்றுவிடுவார்கள் என நம்புகிறேன். உதவி தேவை என்றால் அழைக்கிறோம் என்றார்கள்.
*
ஒன்றிரண்டு தோழர்கள் சில வருடங்கள் முன்பு குறும்படம் எடுப்பது பற்றி பேசினார்கள். அவ்வப்போது சில உரலிகளை மின்னஞ்சல் செய்வார்கள். பெரும்பாலும் அவர்களின் நண்பர்கள் எடுத்தவை.
காசநோய் விழிப்புணர்வு குறும்படமெல்லாம் பார்க்க வைத்துவிட்டார்கள். அதுவும் எனக்கு டிபி என்று மட்டும்தான் தெரியும். அக்குறும்படம் பார்த்த பிறகுதான் Tuberculosis என்ற முழுப்பெயர் தெரியும். குறும்படங்கள் பார்ப்பதில் இப்படியும் ஒரு நன்மை! இன்னுமொரு தோழர் தன் குறும்படத்துக்கு திரைக்கதையே தயார் செய்திருந்தார் குறும்படம் எடுக்கும் யோசனை இருக்கிறதா என தெரியவில்லை.

நண்பர் நவபாரத் எனக்கு சில ஆண்டுகள் முன்பிலிருந்து பழக்கம். புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். பல்கலைக்கழக அளவில் பரிசெல்லாம் வாங்கியவர். சில குறும்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இன்று காலை அலைபேசி மூலம் அழைத்தேன்.

ஏறக்குறைய இரண்டாண்டுகள் கழித்து வேறொரு எண் மூலம் அழைத்தேன். ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டு பேசினார். வாழ்த்துகள் சொல்லிவிட்டு படம் குறித்த என் புரிதலைச் சொன்னேன். அவர் என்ன நினைத்து எடுத்தார் என்பதைச் சொன்னார். ஒரு ரொமாண்டிக் படம் எடுக்க வேண்டியதுதானே என்றால், அதற்கும் பதில் வைத்திருந்தார். தொழில்முறை ஒளிப்பதிவாளராக இன்னும் அவர் மாறவில்லை. அதற்கான முயற்சிகளில் உள்ளார். ஆனால், ஒளிப்பதிவில் அவருடையஆர்வம் நான் அறிவேன். அவருடைய ஐந்தாவது குறும்படம் இப்போது வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=nUmSkiwsLtc


*

பாரதிதாசன் பாடல் –

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்,
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்,
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்.