தீராக் கனா -08

#08

தூக்கத்தில கனவு வர்றது ரொம்ப சாதாரணமான விஷயம். சில கனவுகள் நமக்கு சில காலம் தள்ளி நடக்கலாம். முன்னாடி நமக்கு நடந்த சில நிகழ்வுகள் கனவாக வரலாம். எல்லாமே விதிப்படியும் இல்லை. எல்லாமே அறிவியல்பூர்வமானதும் இல்லை.

மருத்துவர் வெகு இயல்பாக தன் கருத்துக்களை அடுக்கிக் கொண்டே போனார். நான் நிதானமாக அவரின் பேச்சினை உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

கனவுக்கு கலர் இல்ல.. அது கருப்பு வெள்ளைதான் என்றார். அது சுவாரசியமான தகவலாகப் பட்டது. முயற்சித்துப் பார்க்க எண்ணினேன்.

பகல்ல நிறைய வேலை பார்த்துட்டு இராத்திரி தூங்கினா பெரும்பாலும் படுத்த உடனே தூக்கம் வந்திடும். தூக்கம் வந்தே ஆகணும்னு கட்டாயமில்லை. அப்படி ஒரு ஆழ்ந்த தூக்கத்திலயும் கனவு வரும். நிறைய சொல்லலாம். நீ குழப்பிக்க அவசியம் இல்ல. இது மாதிரி இன்னொரு முறை கனவு ஏதும் வந்து ரொம்ப தொந்தரவா நினைச்சினா என்னை வந்து பாரு. இப்படி வீட்டுக்கெல்லாம் வராத. நேரா ஹாஸ்பிடல் வந்து பாரு என்றார்.

கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றேன்.

மருத்துவரின் மனைவி அப்போதுதான் நாங்கள் இருந்த அறைக்குள் நுழைந்தார். நான் அவருக்கும் நன்றி சொல்லி வெளியேறினேன்.

மருத்துவரின் மனைவி அவரிடம் என்னைப் பற்றிக் கேட்டார். ‘என்னவாம்?’

மீண்டுமொருமுறை கதையைச் சுருக்கமாக சொன்ன மருத்துவரிடம் அவர் கேட்டார்.

மறுபடியும் அவன் உங்களப் பார்க்க வருவானா?

எனக்கு அப்படித் தோணல.. அவன் மறுபடியும் வரமாட்டான்னு நினைக்கிறேன்

*

ஒரு வாரம் முழுதாக கழிந்திருந்தது. கனவே இல்லாத ஒரு வாரம். கனவு எதையும் கண்டுவிடக்கூடாது என்கிற பிடிவாதம் கொண்டு உறங்கிய நாட்கள் அவை. அதே வேளையில், எனக்கான அடுத்த பயணத்திற்கான எல்லா முன் தயாரிப்புகளும் நடந்துகொண்டே இருந்தன.

நாளை இரவு பெங்களூரு செல்லும் இரயிலைப் பிடிக்க வேண்டும். இன்றிரவு உறங்குவதுதான் வீட்டில் கடைசி என்பது போலொரு உணர்வு அழுத்த, போர்வையை இழுத்துப் பிடித்து உறங்கிக் கொண்டிருந்தேன். நாளை இரவு எப்படியிருக்கும் என்று சிந்தனை நகர்ந்தது.

உறுதியான முடிவுகள் எடுக்க நினைக்கையில்தான் எத்தனை எத்தனை குழப்பங்கள். இருக்கிற குழப்பங்களையெல்லாம் தீர்ப்பதிலேயே மனமும், நேரமும் செலவானால், வாழ்க்கையை வாழ்வது எப்படி?

இன்னொரு பயணம் எனக்கு முன் நின்றது. அதற்கு முன் நான் நிதானித்துக் கொள்ள வேண்டும். யாரோ ஒருவரின் கனவிற்குள் நானிருப்பேன். அதிலிருந்து வெளியேறியாக வேண்டும். அது எப்படி சாத்தியமாகும் எனத் தெரியவில்லை.

கனவுகள் எங்கேயோ எப்போதோ கேட்ட பாடலின் ஓசை போல, ஒலியாக காதுக்குள் ஒலிக்கின்றன. நிகழ்காலத்தின் ஏதோ ஒரு கணத்தில் அவை காட்சிகளாக விரிகின்றன. அக்காட்சிகள் யாவும் முழுமையானதாகவோ, முழுமையற்றதாகவோ. அர்த்தமுள்ளதாகவோ, அர்த்தமற்றதாகவோ அமைகின்றன.

கனவுகள் காட்சிகளாய் விரிகையில் அதில் ஏதோ ஒரு கணம் அர்த்தம் இழக்கிறது. கனவில் அந்த பிரச்சினையே இல்லை. கனவென்பதில் பொருளுக்கு இடமில்லை. அது கற்பனைக்கு அப்பாற்பட்டது.

நான் எனக்கான கனவுகளை பின் தொடர்வதா? இல்லை ஒரேயடியாக மறந்து, வேறு வேலைகளில் நாட்டம் கொண்டு அதைப் புறந்தள்ளி விடுவதா? இரண்டாவது அத்தனை சாத்தியமில்லைதான்.

*

நல்ல விடியல் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும். அதற்குள் நான் இலக்கை எட்டியாக வேண்டும் என்று விரைந்து கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் பிரம்மாண்டமான கரைகள் என் கண்ணில் பட்டன. எந்த இடத்தில் போய்க் கொண்டிருக்கிறேன் என்று யோசனை இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறேன். முகத்தை ஏதோ அழுத்திக் கொண்டிருப்பது போல உணர்ந்தேன். அது கவசம் போல பட்டது. என் முகம் மேல் அது பட்டும் படாமலும் பொருந்தியிருந்தது. எனது கை முகத்தின் மேல் பட்டதும் கவசம் காணாமல் போனது. என்னைச் சுற்றிலும் விரவியிருந்த நீரின் வண்ணத்தை உறுதி செய்ய இயலவில்லை. இப்போது நான் ஒரு பிரம்மாண்டமான படகில் சென்றுகொண்டிருக்கிறேன். காற்று நன்றாக வீசுகிறது. அந்த மெல்லிய ஒலி செவியினுள் ஒலித்துக் கொண்டிருந்தது. எனக்குப் பின்னால் நடப்பனவற்றை நான் காண வேண்டுமென ஒரு உந்துதல். பின்னால் திரும்பிப் பார்த்தேன். என் தலைக்குப் பின்னிருந்த உயரமான கம்பத்தில் ஏதோ ஒரு கொடி தெரிந்தது. காற்றின் போக்கில் அது நன்றாக அசைந்து கொண்டிருந்தது. அதிலிருக்கும் சின்னத்தைப் பார்க்க முயற்சித்தேன். என்னால் முடியவில்லை.

‘செழியா!’

நான் இப்போதுதான் விழிக்கிறேன். அம்மா அழைத்துவிட்டார்.

சட்டென படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன். ஒரு காட்சியும் நினைவில் நிற்காமல் நழுவி மறைந்தது. முகம் முழுக்க உறக்கம் அப்பியிருந்தது.

என்ன இன்னைக்கும் பகல் கனவா? என்றார்.

நான் மெல்லிதாக புன்னகைத்தேன்.

போன முறை இண்டர்வியூ. இந்தமுறை என்ன இன்க்ரிமெண்டா?

ஆமாமா இந்த முறை இன்கிரிமெண்ட் ஆகியிருக்கு.. என மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு நகர்ந்தேன். எனக்காக இன்னொரு கோப்பையிலிருந்த தேநீர் ஆவி பறந்து கொண்டிருந்தது.

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s