தீராக் கனா -07

#07

கிளம்பியாயிற்று.

நாங்கள் ஏறிய பேருந்து காலை நேரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்தபடி நகர்ந்தது. என் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் மொத்த சாலையிலுமே, வண்டிகள் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தன. எனக்கு அவசரமில்லை. ஆனால் எல்லோருக்கும் அப்படியில்லை அல்லவா. நானியும் உடன் வந்து கொண்டிருந்தான். பேருந்தின் உள்ளும் நெரிசலில் நிற்கிறோம். விரைவாக இன்ஸ்ட்யூட் போவதெல்லாம் அடுத்த கதை. முதலில் சில அடிகள் வண்டி நகர வேண்டும்.

நெரிசல் குறைவாக அமைந்து, எனக்கு காற்றோட்டம் வேண்டுமென நினைத்தேன். நினைத்ததெல்லாம் எல்லா வேளைகளிலும் நடப்பதில்லை. ஒரு வேளை கனவுகளின் அடிப்படை இதுதானோ? நிறைவேறாத நினைவுகள் கற்பனை வேடம் கட்டி இரவில் வருவதுதான் கனவா?

பேருந்து எங்களுக்கான நிறுத்தத்தில் நின்றது. இறங்கிய பின் சில தொலைவு நடக்க வேண்டும். கதை பேசி சிரித்தபடியே, நடக்க ஆரம்பித்தோம். இம்மாதிரியான தருணங்களில்தான் ”சுகமான மலரும் நினைவுகள்” ஒருமுறை மனதில் நிழலாடிச் செல்கின்றன.

எதற்காக இங்கே வந்தோம்? இவ்வளவு நாள் என்ன கற்றோம்? இப்போது எந்த நிலையில் நிற்கிறோம்? எல்லாவற்றையும் அந்நினைவுகள் பறவை பார்வையில் கோடிட்டு உணர்த்தி விடுகின்றன. வாழ்க்கையில் இழப்பதென்றால் இனிமேல்தான் இழக்க வேண்டும். இதுவரையான வாழ்க்கை எனக்கு சேர்ப்புதான். இலாபம்தான். ஒரு வேளை நான் இதுவரை எதை இழந்திருந்தாலும் அதெல்லாம் இழப்பின் கணக்கில் சேராது என அக்கணம் தோன்றியது. அடுத்தது என்ன என்பதில் மட்டும் நான் உறுதியாக நின்று கொள்ள வேண்டியிருக்கும்.

சிந்தனை வேகம் திடீரென தடைபட்டது. சாலையோரத்தில் வண்ணக் குடை ஒன்றினைப் பார்த்தேன்.

இன்ஸ்டிட்யூட்டுக்குப் போகிற வழியில், அதே போலான மரங்கள் நிறைந்த சாலையோரத்தில் நின்றிருந்தாள் ஒரு பெண். கையில் சில புத்தகங்களும், தோளில் ஒரு கைப்பையும் இருந்தன. வண்ணக்குடை ஒன்றின் நிழலில் அவள் நின்றிருந்தாள். மனதுள் என்னமோ தோன்ற நிதானமாக அருகில் போனேன்.

எக்ஸ்யூஸ் மீ..

திரும்பினாள். முகம் நினைவில் வந்து மறைகிறது.

எனக்கு பேசியாக வேண்டுமென்று ஒரு உந்துதல்.

நான் பேச நினைக்கும் முன் அவள் பேசத் தொடங்கினாள்.

உங்க பேர் ம்ம்ம்… செஜியனா? இல்ல… ஐ காண்ட் ப்ரொனௌன்ஸ் கரெக்ட்லி.. ஸாரி என்றாள்.

எனக்கு என்ன பதில் சொல்வதென உடனடியாகத் தோன்றவில்லை. ”ஓ! இல்லை… என் பேர் செழியன். இஸட் ஹெச் – ழ உச்சரிப்பில் வரும்”.

ஓ! சாரி அகெய்ன்..

ஹாங்…உங்க பேரு?

”என் பேரு பாகிரதி. உங்களை எங்கயோ பார்த்த ஞாபகம் இருக்கு… நாம எங்க மீட் பண்ணினோம்னு ஞாபகம் இருக்கா?”

எனக்கு வெகுநேரம் அங்கு நிற்கத் தோன்றவில்லை. இல்லீங்க.. என்று சொல்லிவிட்டு, சட்டென்று நானியோடு இன்ஸ்டிட்யூட்டிற்குள் நுழைந்தேன்.

என்னால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் அடக்கிக் கொண்டேன். ஒருவழியாக இன்ஸ்டிட்யூட்டில் எல்லா விதமான பணிகளையும் முடித்து, கையோடு சான்றிதழ் வாங்கியாயிற்று. மீண்டும் ஒருமுறை பெங்களூர் வந்ததற்கு ஒரு உருப்படியான வேலை முடிந்தது.

சான்றிதழோடு வெளியே வந்து மீண்டும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. உற்சாகமோ, குழப்பமோ, அச்சமோ எது என்னை சூழ்ந்த போதிலும் அதிலிருந்து நிதானித்துக் கொள்ள, தப்பித்துக் கொள்ள எனக்கு கொஞ்சம் தேநீர் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வடிகால்கள். எனக்கு அப்படியொரு வடிகால்தான் தேநீர். எந்த நேரத்திலும் அடிமையாகி விடக்கூடாது என்றொரு உள்ளுணர்வு எப்போதும் என்னுள் இருக்கும்.

அருகிலிருந்த கடைக்காரர் ’நந்தினி’ பால் பாக்கெட் ஒன்றைப் பிரித்தார்.

நானியைக் கேட்டேன். ’டீ?’

அவன் மறுக்கவே, நான் கடைக்கு முன் சென்று தேநீர் கேட்டேன். யாரோ இருவர் பைக்கில் வந்தனர். ஒந்து டீ, ஒந்து காஃபி என்றனர்.

நானி கேட்டான். அப்புறம் எப்போ ஊருக்கு?

யோசிக்கணும் என்றேன்.

தேநீரின் சூடு உடலுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. சிந்தனை இன்னொரு திசையில் ஓடிக் கொண்டிருந்தது.

*

அன்றிரவு ஒரு கனவும் வரவே இல்லை. அடித்துப் போட்டது போல் உறங்கி எழுந்திருந்தேன். வழக்கமான பணிகள் ஓய்ந்ததும் புதிய மின்னஞ்சல்களைக் காண எண்ணி மடிகணினியைத் திறந்தேன்.

எதிர்பாராத விதமாகவோ அல்லது எதிர்பார்த்த விதமாகவோ ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. சில தினங்கள் முந்தி சென்றிருந்த ஒரு நேர்காணல் தேர்வில் தேறியிருந்தேன். எதிர்பார்த்தபடியே அழைத்து விட்டார்கள்.

எதிர்பார்த்தபடியே பெங்களூர் கிளைதான். எதிர்பாராத ஒன்று அவர்கள் சொன்ன தேதிதான். வேலையில் சேர இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தன.

ஊருக்குச் சென்று திரும்புவது ஒரு நல்ல முடிவாகப் பட்டது. கிளம்பி விட்டேன்.

வீட்டிலிருந்த ஒரு நாளில் இந்த கனவுகளைப் பற்றி நினைவு வந்தது. எனக்கு நன்கு தெரிந்த ஒரே மருத்துவரை கலந்தாலோசிப்பது சரியென எண்ணி உங்களைச் சந்தித்து நடந்ததை எல்லாம் சொல்லியும் முடித்து விட்டேன்.

இனி நீங்கள்தான் எனக்கு ஏதேனும் சொல்ல வேண்டும்.

மருத்துவர் புன்னகை மாறாமல் என்னைப் பார்த்தார்.

 

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s