தீராக் கனா -06

#06

டக்க ஆரம்பித்து ரொம்ப தொலைவெல்லாம் இல்லை. ஒரு பேருந்து நிறுத்தத்திலிருந்து இன்னொரு பேருந்து நிறுத்தம் வரை நடக்க விருப்பம் கொண்டு நடந்தே போனேன். மரத்தினின்று பூக்கள் சிதறிக்கிடந்தன. இன்னுமா சாலையை சுத்தம் செய்யவில்லை என்று தோன்றவிடாதபடிக்கு ஒரு அழகுணர்ச்சி அவ்விடத்தே இருந்தது. வண்டிகள் அவ்வப்போதே வந்து சென்றன. இன்னும் நெரிசலுக்கு நேரமுண்டு. யாரோ ஒரு பெண்மணி கையில் புத்தகத்தோடு நின்றிருந்தாள். சத்தியமாக அது பாட நூல் அல்ல என்பதில் உறுதியாக இருந்தேன். அவள் முகம் மங்கலான நினைவுதான். ஏற்கனவே கனவில் வந்த முகம் போல இருந்தபடியால் பேசியே ஆக வேண்டுமென அருகில் போனேன்.

எக்ஸ்கியூஸ் மீ.

திரும்பிவிட்டாள்.

’கேன் ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்? ஐ திங்க், ஆல்ரெடி வீ மெட்.’

தமிழா? என்றாள்.

எனக்கு ஒருபக்கம் ஆச்சர்யம் இருப்பினும் இன்னொரு பக்கம் பழக்கமான ஒன்றாகிவிட்டது. எளிதில் அவதானிக்கிறார்களே என்கிற ஆச்சர்யம் எனக்கு இங்கு கிடைத்துக்கொண்டே இருந்தது.

ஆமாங்க. நான் தமிழ்தான். பேர் செழியன். உங்களுக்கு தமிழ் தெரியுமா?

என்னமோ பேசிவிட்டேன். அவளும் தொடர்ந்தாள்.

கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஆக்சுவலா நான் தெலுங்கு என்றாள்.

எனக்கும் கூட தெலுங்கு புரியுமென்றேன். அவள் அதை பொருட்படுத்தவில்லை.

கையிலென்ன புத்தகமென்றேன்.

ஹிப்போகிராட்டிஸ் பற்றிய புத்தகம் என்றாள். எங்கோ கேள்விப்பட்ட பெயர். அவளிடம் கேட்கத் தோன்றவில்லை.

என்னிடம் கூட ஆனக்ஸாகரஸ் பத்தி ஒரு புத்தகம் இருக்கிறது என்றேன். அடுத்த கேள்வி யார் ஆனக்ஸாகரஸ் என்று கேட்பாள் என அவதானித்தேன். அவள் அதையும் பொருட்படுத்தவில்லை.

விடியலின் இலகுவான சப்தங்களையும், குளிர்ந்த காற்றினையும் கிழித்தபடி ஒரு பேருந்து வந்தது.

நான் ஏற வேண்டிய பஸ் வந்திடுச்சு. நீ எங்க போற? நீயும் கூட வர்றியா? என்றாள். என்ன சொன்னீங்க? என்றேன். ‘கூட வர்றியா இல்லியா?.. நூவு ஒஸ்தாவா ராவா?’

கண்களை ஒருமுறை திறந்துவிட்டு மூடியதாக நினைவு. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த மாதிரி எழுந்து அமர்ந்தேன்.

நானிதான் கேட்டிருக்கிறான். ஒஸ்தாவா ராவா?(வர்றியா இல்லியா?)

என்னய்யா சொல்ற என்றேன்.

மறந்துட்டியா? இன்னைக்கு இன்ஸ்டிட்யூட் போகணுமே என்றான்.

நினைவிற்குள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன. நான் விடியலுக்குப் பிறகு எதேச்சையாக தூங்கியிருக்கிறேன். இன்றைக்கு சான்றிதழ் வாங்க இன்ஸ்டிட்யூட் போக வேண்டும்.

மறுபடியும் ஒரு பகல் கனவா? அதென்ன தூங்கிய உடனேயே கனவு வருகிறது. எப்போதுமில்லாமல் இப்போதெல்லாம் பெண்கள் வருகிறார்கள். அதிலும் முக்கியமான கட்டத்தில் கனவைக் கலைக்கிற விதமாக யாரேனும் ஒருவர் எழுப்புகிறார்கள். எல்லாமே எங்கோ சொல்லி வைத்த மாதிரி நடக்கிறது.

நேர்காணல் அறையைப் பார்த்த சமயத்திலேயே உள்ளுக்குள் என்னமோ கேட்டுக்கொண்டே இருந்தது. நடப்பதெல்லாம் மெய்தானா என்கிற சிந்தனை.

கனவா? நனவா? எதில் நான் இருக்கிறேன்? ஏனிந்த மயக்க நிலை? உடலில் ஏதும் கோளாறு உண்டா? கனவின் காரணம் என்னவாக இருக்கும்? அதன் பலன் என்ன? அதுதான் தீர்க்கதரிசனமா? பின்னால் நடக்கப் போவது கனவாய் காட்சி தருகிறதா? எப்போதும் எனக்கு கனவு கைகொடுக்குமா? மொத்தமாக இதையெல்லாம் மறந்து புறந்தள்ள ஏதும் பயிற்சிகள் எடுக்க வேண்டுமா?

எந்த தெரிவை நான் தேர்ந்தெடுக்க?

வீட்டிலிருந்த போது முதல் கனவு நேர்காணல் அறை போல் தோன்றியது. காத்திருக்கையிலேயே கனவு கலைந்து விட்டது. இத்தனை தொலைவு கடந்து வந்த பிறகு அக்கனவு இங்கே அதுவும் பெங்களூருவில் தோற்றம் பெறுகிறது. எனக்குள் என்ன நடக்கிறது?

அடுத்தது பேருந்தில் ஒரு கனவு அதுவும் அக்கனவு தொடங்கும் முன்னரே கலைகிறது. முகம் தெரியாத ஏதோ ஒரு பெண்ணை, முகம் தெரியாத நான் ஏன் சந்திக்க நினைக்கிறேன். அதில் ஏதும் அர்த்தம் இருக்கிறதா?

இப்போது சற்று முன் கூட ஒரு கனவு. அதிலும் பெண் வருகிறாள். அவள்தான் முன்னர் வரப் பார்த்தவளோ? அதிலும் நேரில் உரையாடியதைப் போலான ஒரு தோற்றம். முக்கியமான நேரத்தில் நானி எழுப்பி விட்டான். எவ்வளவு யோசித்தாலும் முகம் நினைவில் தோன்றவே இல்லை.

பாதாதி கேசம் வரை அவளைக் கொண்டு வரும் கற்பனை முகத்தை மறக்கிறது. என் நினைவில் அவள் முகத்தை மட்டும் என் கற்பனையே மறைக்கிறது. ஒரு ஆணின் கனவில் பெண் வருவதில் என்ன தவறு இருக்கப் போகிறது? ஏதோ ஒரு பெண்ணின் கனவில்.. அட! ஒவ்வொரு பெண்ணின் கனவிலும் கூட யாரோ ஒருவர் வரத்தானே செய்வார்.

இதில் எந்தப் பக்கத்திலும் தவறேதும் இருப்பதாக புலப்படவில்லை. எனக்கு இப்போதைக்கு சின்னதாக ஒரு சஞ்சலம். அதுவும் குளித்தால் தீரப்போகிறது.

இதையெல்லாம் மனதிற்குள் ஓட்டிக்கொண்டே, குளித்து முடித்து தயாராகி விட்டேன்.

அப்புறம்.. கிளம்பலாமா? என்றான் நானி.

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s