நெல்லி மரம் [சிறுகதை]

எங்கள் வீட்டின் கொல்லைப்புறம் நான் சிறுவனாக இருந்த காலத்தில் மரங்களும், செடிகளும் அடர்ந்திருந்தது. சமயங்களில் ஏதாவதொரு ஓணாணோ, வேறேதோ நான் பெயரறியா சிறு உயிரினமோ சட்டென எங்காவது இலைகளின் ஊடே அல்லது காய்ந்த சருகுகளின் ஊடே தாவியோடும்.  இந்த நகரிலேயே கொல்லை இருக்கும் வெகு சொற்பமான வீடுகளுள் எங்கள் வீடும் ஒன்று. அப்படியே கொல்லை இருக்கும் சொற்பமான வீடுகளில் கூட எங்கள் வீட்டைப் போல அடர்த்தியாக மரங்களோ, பூச்செடிகளோ இருந்திருக்காது.

வீட்டின் கொல்லை முகப்பிலிருந்த தென்னை அத்தனை செழிப்பில்லாமல் கிடக்கும். அதில் இளநீர் என்கிற அற்புதம் நாகலிங்கப்பூ, குறிஞ்சிப்பூ மாதிரி எப்போதேனும் வருடங்கள் சில கழிந்தபின் வரும். அதனருகில் இருந்த கொய்யா மரம் ஒவ்வொரு பருவத்திலும் சுவை மிகுந்த கொய்யாக்கனிகள் தந்திடும். ஆகவே எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கொய்யா மரம் மேல் ரொம்பவே விருப்பமுண்டு. விருந்தினர்கள் யார் வந்தாலும் பருவ காலத்தில் அவர்கள் கையோ, பையோ நிரம்ப கொய்யாக்கனிகள் கிடைக்கும்.

எங்கள் வீட்டின் தளம் வித்தியாசமான அமைப்பிலானது. திரையரங்கின் இருக்கை அமைப்புகளைப் போல வீட்டைத் தாண்டியதும் படிப்படியாக கொல்லைப்புறம் படியிறங்கும். தென்னையும், கொய்யாவும் ஒரே சமதளத்தில் இருக்கும். அதைத்தாண்டி சற்று இறக்கத்தில் சில பூச்செடிகள் அலங்கரிக்கும். அதன் இறுதியில் முருங்கை மரமொன்றும், மாமரமொன்றும் உயர்ந்து நிற்கும். பூக்களின் வரிசையில் பக்கவாட்டில் சீத்தாப்பழ மரமும், பப்பாளி மரமும் இருக்கும். அதைத்தாண்டி சற்று தள்ளி பள்ளமான இன்னொரு பகுதி வெகு காலம் ஏதும் நடப்படாமலே இருந்தது.

சில காலம் தள்ளி, அப்பா ஒரு மரக்கன்றைக் கொண்டு வந்தார். பார்ப்பதற்கு புளியங்கன்றைப் போல இருந்தது. நான் முழுமையான நகரச் சிறுவனாக மாறிக்கொண்டிருந்த காலம் அது. அப்பாவிடம் கேட்டேன். ‘ஏம்பா அது புளிய மரமா?’

‘இல்லடா. இது நெல்லிக்கன்னு.’

’இல்லப்பா.. நான் நெல்லி மரம் பார்த்திருக்கேன்பா. இலை கொஞ்சம் பெருசா இருக்கும்’.

’அது அர நெல்லிடா! இது முழு நெல்லி’

ஓ! என வியந்தேன்.

நடப்படாமல் கிடந்த வெறும் நிலத்தில் கொஞ்சமாய் இடம் எடுத்துக்கொண்டது அந்த நெல்லிக் கன்று. அத்தோடு அதை நான் கிட்டத்தட்ட மறந்தே விட்டேன். தென்னையும், கொய்யாவும் குறிப்பிட்ட இடைவெளியில் வீட்டருகே இருப்பதால் மதிய வேளைகளுக்கான நிழலும் கிடைத்து விடும். மாமரத்தருகே போனால் அதன் அடர்த்தியினால் ஏதேனும் பூச்சியோ, ஓணானோ தாவும். பூச்செடிகளுக்கும் எனக்கும் துளி சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை என்பது கொள்கை முடிவு.

இத்தனை ஒத்திவைப்புகள் இருப்பதால், நெல்லி மரத்தருகே விளையாட்டாகக் கூட போகாமல் இருந்தேன். அதற்கொரு நாளும் வந்தது.

விளையாட்டாக போகாமலிருந்த நான் விளையாட்டுக்காக போனபோது பார்த்தேன். நெல்லிக் கன்று நட்டது நட்டபடி அப்படியே இருந்தாற்போல இருந்தது.

இது வளர்கிறதா இல்லையா என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. ஆனாலும் அதில் அத்தனை சுவாரசியம் காட்டாமல் நான் விளையாடப் போனேன்.

எப்போதேனும் பொழுதுபோகாத காலங்களில் மர இலைகளை வைத்து ஏதேனும் செய்துகொண்டிருப்பேன். ஏதேனும் என்றால் ஏதும் கலைப்பொருளோ, வீட்டு உபயோகப் பொருளோ அல்ல. விளையாட்டாகவே மர இலைகளைப் பிய்த்து அதை கிழித்து வைப்பேன். தென்னை இலைகளைப் பொறுத்தமட்டில் அதுவாக கீழே விழுந்தாலோ, யாரேனும் மரம் ஏறி இறங்குகையில் தவறுதலாக கீழே விழும் ஒன்றிரண்டு கீற்றுகளே அதிகம். சில பல வருட இடைவெளிகளில் ஏதேனும் கிளையையே வெட்ட நேர்ந்தால் அன்றைக்கு சாகவாசமாக கீற்றைக் கிழிக்க இயலாமல் போய்விடும்.

ஆகவே எனக்கு விருப்பமான மரம் கொய்யாவாக இருந்தது. ஏற இறங்க எளிதான வடிவமைப்பில் வளர்ந்து செழித்த மரம் அது. இலைகளும் கையடக்கமாக இருக்கும். விளையாட்டாக எத்தனையோ இலைகளை பிய்த்து அதை நுண்ணியமாக கீறி, கிழித்துப் பார்ப்பேன். கிழித்த பிறகு கையில் இலை வெகு நேரம் தங்காது. தூக்கி எறிந்து விடுவேன். அநேகமாக எங்கள் வீட்டு மரங்களில் எனக்கு விருப்பமானதாகவும் வசதியானதாகவும் கொய்யா மரமே இருந்தது. வெகு மாதங்கள் கழித்து கொய்யா மர இலைகளின் பின்புறம் பூச்சிகளால் பாதிக்கப்பட்டு வெண்மை பூசிக் கிடந்தது. இலைகளை தொட்டாலே அது ஒருவகை ஒவ்வாமையைக் கொண்டு வருவதாய் தோன்றியது. அதன் பின் கொய்யா மரம் அத்தனை இன்பம் தரவில்லை. பூச்சிகளை ஒழிக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அது ஏதும் பயனில்லை.

இத்தனை காலமும் கழிந்த பிறகு, ஒரு எதேச்சையான மாலை நேரத்தில் நான் நெல்லி மரத்தைப் பார்த்தேன். சற்றே கொஞ்சம் உயரமாக வளர்ந்திருந்தது. இலைகள் பொடிசாக இருந்ததால் அதை அதிகம் கவனிக்கவே இல்லை. ஆனாலும் மாதக்கணக்கில் வளராமல் கிடந்த அந்த நெல்லி மரத்தின் மீது இனம் புரியாத வெறுப்பு வந்தது.

எப்போதேனும் மரங்களுக்கோ, செடிகளுக்கோ நான் நீரூற்றுகையில் வேண்டுமென்றே நெல்லிக்கு ஊற்றாமல் நகர்வதோ, அல்லது ஒரே முறையில் செடிக்கு மூச்சு திணறுமளவு நீரை அழுத்தமாக கொட்டிவிட்டு நகர்வதோ உண்டு. எப்படியாவது அந்த நெல்லிக் கன்று வளராமல் போனால் நல்லதெனத் தோன்றியது. அதன்பின்பு நான் நெல்லிக்கன்றை பார்ப்பதையே தவிர்த்தேன்.

சில பல வருடங்கள் கழிந்த பின்பு நானும் பதின்பருவம் வந்த காலத்தில் எங்கள் வீட்டைப் புனரமைக்க அப்பா திட்டமிட்டார். நகரின் பெரும்பான்மையான வீடுகளுள் நாங்களும் ஒன்றென மாறினோம். கொல்லைப்புறத்தின் பெரும்பகுதி மாறுதலுக்கு உள்ளானது. தென்னை மரமும், கொய்யா மரமும் தன் நிலத்தை இழந்து வெளியேறின. மாமரம் அதற்கு முன்பே எதிர்பாராமல் தன் வாழ்நாளை முடித்துக் கொண்டது. பல பூச்செடிகளும், சில மரங்களும் இதில் பிழைத்துக் கொண்டன.

ஆச்சர்யமாக நெல்லி மரம் தப்பிப் பிழைத்தது. ஆனாலும் கிட்டத்தட்ட அபாய கட்டத்தில்தான் கிடந்தது. நெல்லி மரம் இருந்த பகுதி வீட்டுக் கொல்லையின் மிகத் தாழ்வான நிலம். புனரமைப்பின் முதல் திட்டமே, கொல்லையை வீட்டுத் தளத்திற்கு நிகரான சமநிலைக்கு கொண்டு வருவதுதான். அவ்வாறாக மேடாக்கி சமப்படுத்திய பின்பு நெல்லி மரம் ஏதோ சின்னதாக மண்ணிலிருந்து தென்பட்டது. அநேகமாக இன்னும் சில வாரங்கள் போக்கு காட்டி மறையக்கூடும் என்று நான் எண்ணினேன்.

வீடு கிட்டத்தட்ட புதிதாகி விட்டது. கொஞ்சம் விரிவடைந்தும் விட்டது. கொல்லைப்புறம்தான் இருந்த தடமே இல்லாமல் கண் முன் அழிந்து போயிற்று. அதை மீட்டெடுக்க சீத்தாப்பழ மரமும், பப்பாளி மரமும் தங்களாலான வளர்ச்சி எடுத்தன. அம்மா பூச்செடிகள் வைக்க விருப்பமெடுத்துக் கொண்டார். கனகாம்பரமும், செம்பருத்தியும் செம்மண்ணில் புதிதாய் வளர முனைப்பெடுத்தன.

சில மாதங்களில் ஆச்சர்யங்கள் தரத் தொடங்கியது நெல்லி மரம். தடிமன் அதிகரித்த தண்டுகளும், அபாரமான உயர வளர்ச்சியும் ஒரு வகையில் அதிர்ச்சிதான். சில மாதங்களில் என் உயரத்தையெல்லாம் சுலவில் தாண்டி உயரத் தொடங்கியது. அருகே அணில்களுக்கு அவ்வப்போது உணவளித்த சீத்தா மரத்தை தாண்டி உயர்கையில் எங்கள் எல்லோருக்கும் ஆச்சர்யம்தான். பப்பாளி மரமெல்லாம் பந்தயத்துக்குள்ளேயே வரவில்லை. ஓரளவில் தன் வளர்ச்சியை நிறுத்திக் கொண்டது.

ஆனால் பப்பாளிதான் பிரச்சினையைத் துவங்கியது. சுமாரான உயரத்தில் இருக்கும் பப்பாளியே அதன் கொள்ளளவைத் தாண்டி பழங்களையும், காய்களையும் தன்னிடத்தே கொண்டிருந்தது. சீத்தாப் பழங்களையும் அவ்வப்போது நாங்கள் சுவைத்தோம். இந்த நெல்லிக்கு என்ன ஆயிற்று?

யாரேனும் எப்போதாவது கொண்டு வந்து தரும் முழு நெல்லிகளை வாங்கி மெல்ல மெல்லக் கடித்துச் சுவைத்து பின் உடனே ஓடிப்போய் தண்ணீர் அருந்துகையில் ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. அந்த மகிழ்ச்சியை எங்கள் வீட்டு நெல்லி மூலம் பெற விருப்பம் கொள்ளத் துவங்கினேன். அடேய்! நெல்லி எப்போது எங்கள் வீட்டுக்கு சுவைமிகு கனிகளைத் தருவாய்?

புதிய கொல்லைப்புறத்திற்கு நாயகனாக மாறியது நெல்லி மரம். கிட்டத்தட்ட புதிய சிறிய கொல்லைப்புறம் முழுமைக்குமான நிழலை ஒற்றை ஆளாகத் தருமளவு அதன் வளர்ச்சி இருந்தது. நல்ல உயரத்திற்குப் பிறகே பக்கவாட்டுக் கிளைகள் வளர்ந்து அகலத் தொடங்கியதன் விளைவு அது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் அதன் சிறிய இலைகளும், கொஞ்சம் கிளைகளுமே தென்படும். இன்னும் எத்தனை உயரம் வளருமோ என்கிற அச்சமும் எங்களுக்குள் வந்தது.

அவ்வப்போது நெடுநேரம் உற்று நோக்கிவிட்டு அம்மா சொல்வார் இப்படி. ‘டேய்! நெல்லி மரத்துல பூ விட்ருக்குடா’

எங்கே எனக் கேட்டால் அங்கே என உயரே கை நீளும். நான் பார்க்கையில் இலைகளையும், கிளைகளையும் மீறி ஏதும் என் கண்ணில் புலப்படாது. இப்படியே இரண்டு மூன்று முறைகள் வெறும் ’பூ’க்காட்சி மட்டும் நெல்லி மரம் தந்ததில் வீட்டில் நெல்லி மரம் மீதான ஆர்வமும், அது குறித்த பேச்சுக்களும் குறைந்தன.

அப்புறமாய் ஒரு சிறு இரும்புக்கம்பியை நெல்லி மரத்தண்டில் அடித்து வைத்தார் அப்பா. நெல்லி உண்டாக்குகிற பூக்களைக் காப்பாற்றும் கடைசி உத்தியாகவே நான் அதைப் பார்த்தேன். அதற்கும் பயனில்லாமல் நீண்ட வாரங்கள் போக்கு காட்டியது இதனிடையே புதியதாக இன்னுமொரு பிரச்சினை வந்தது.

பூக்களை மட்டும் அவ்வப்போது உதிர்த்து வந்த நெல்லி மரம் அதன் வளர்ச்சியை மட்டும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இல்லை. வளர்ந்த உயரம் போதாமல் பக்கவாட்டுக் கிளைகளும் பருத்து, செழித்து வளர்ந்ததில் அண்டை வீட்டை நெருங்கி முட்டத் தொடங்கியது. இப்போது வேறு வழியில்லாமல் ஒரு பக்கவாட்டுக் கிளையை மரத்தினின்று முறித்தோம். சில காலம் சென்ற பின் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவருக்கு இந்த நெல்லி மரத்தின் நீண்ட நெடிய வரலாற்றைச் சுருக்கமாகத் தெரியப்படுத்தியதன் பின்னர் அவர் மரத்தைப் பார்த்தார். இன்னுமொரு பூ துளிர்ந்திருந்தது. அவர் அதைப் புறந்தள்ளி இம்மரத்தை கிட்டத்தட்ட வெட்டி வீழ்த்துவதே ஆகக் கூடிய சிறந்த செயல் என்றார்.

நாங்களும் கிட்டத்தட்ட முழுமையாக வெட்டி வீழ்த்தினோம். அடித்தண்டு மட்டும் எஞ்சிய நிலையில் பரிதாபமாக காட்சி தந்தது நெல்லி மரம். அடித்தண்டை நீக்க வேண்டுமானால் வேரோடுதான் நீக்க வேண்டும். அதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம். அது கிட்டத்தட்ட உயிரிழந்ததைப் போலதான்.

சில வாரங்களில் மீண்டும் அடித்தண்டின் மீதிருந்து ஒரு நெல்லிச் செடி புறப்பட்டது. எனக்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை. நெல்லிச் செடியை சில நிமிடங்கள் உற்றுப்பார்த்த அப்பாதான் சொன்னார். ‘இந்த நெல்லி மரத்துக்கு வைராக்கியம் அதிகம்டா! எத்தனை முறை வேணும்னாலும் நீ வெட்டிக்கோ.. நான் முளைச்சு வருவேன்னு சொல்லாம சொல்லிக் காட்டுது.’

நானும் அதை ஆமோதித்தேன்.

சில நாட்களில் அந்த சின்னஞ்சிறு நெல்லிச்செடியிலும் பூச்சி பாதித்தது. சில இலைகள் சுருங்கி வீழ்ந்தன. மீண்டுமொரு முறை முழுமையாக செடி அகற்றப்பட்டது. மீண்டும் அடித்தண்டு மட்டும் பரிதாபமாக காட்சி தந்தது.

பிறிதொரு நாள் கொல்லையிலிருந்த செடிகளுக்கெல்லாம் நான் நீர் பாய்ச்சினேன். எல்லாப் பக்கமும் பாய்ச்சிய பின்பு ஏனோ அந்த நெல்லி மரத்தின் சிதிலமான அடித்தண்டைப் பார்த்தேன், அப்பாவின் வார்த்தைகள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நெல்லி மரம் பற்றி அப்பா சொன்ன வார்த்தைகள் எனக்கு நினைவில் வந்தது.

அடித்தண்டிற்கு கொஞ்சம் நீர் விட்டேன். மீண்டுமொரு முறை அது பிறந்து வர வேண்டுமென விரும்பினேன்.

ஆசிரியர்: தமிழ்

எழுத்து, வாசிப்பு இரண்டும் பிடிக்கும். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் படிப்பதை விரும்புவேன். எப்போதாவது இவற்றை எழுதுவேன். மொழியியல், வரலாறு, தொழில்நுட்பம் இவற்றில் இப்போதைக்கு ஆர்வம். இனி எப்போதைக்குமே!

One thought on “நெல்லி மரம் [சிறுகதை]”

  1. வாழ்த்துக்கள் தம்பி. நல்லா இருக்கு !

    உன் எழுத்தும் நெல்லி போல் இடைவேளை பூத்தாலும், முதிர்ந்து வருகிறது, துளிர்ந்து எழுகிறது.

மறுமொழியிட