இன்னொரு சிற்பி!

எங்கள் வகுப்பில் அமைதி. குண்டூசி விழுந்தால் கேட்குமளவுக்கு அமைதி என்பார்களே அப்படித்தான் இருந்தது. பக்கத்து வகுப்பறையில் டம், டம், டம் என்று அடி விழுந்து கொண்டிருந்தது. காலாண்டுத் தேர்வு முடிவுகள் ஒவ்வொரு வகுப்பாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. எங்கள் எட்டாம் வகுப்புக்கு அறிவிக்க ஆல்பர்ட் வாத்தியார்தான் வருகிறார். எங்களுக்கு முந்திய வகுப்பில் இப்போது வாசிக்கிறார்.

எங்களுக்குள் ஒரே பீதி. பலருக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும். வந்தவுடன் பெரிய கண்ணாடி ஸ்கேல் இருக்கிறதா? என்றார். எவனோ ஒருவன் தந்தான்.

ஒவ்வொரு எண்ணாக எல்லா பாடங்களின் மதிப்பெண்களையும் வாசித்தார். பலருக்கும் அடி விழுந்தது. என் நல்ல நேரமோ என்னமோ எனக்கு ஏதும் அடி இல்லை. ஆனால் மனதிற்குள் அவர் மேல் ஒரு பயம் குடிகொண்டுவிட்டது.

ஒன்பதாம் வகுப்பில் எங்கள் வகுப்பில் எல்லோரும் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பிரிவுகளுக்குச் சென்றோம். முதல் நாளே தெரிந்து விட்டது. ஆல்பர்ட் வாத்தியார்தான் எங்களுக்கு வகுப்பாசிரியர். ஆங்கிலம்+கணிதம்.

வாத்தியார் பேசும்போது திடீரென கண்ணை மூடிக்கொள்வார். பார்ப்பதற்கு கொஞ்சம் நகைப்பாகத் தான் இருக்கும். அவர் தன்னுடைய பணியின் இறுதி காலத்தில் இருந்தார். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்தவர். ஆனால் அதெல்லாம் அவர் பணியில் எதிரொலிக்காது. கண்டிப்பு உறுதி.

ஒரே ஒருமுறை தவறாக என்னை அடித்திருக்கிறார். மற்றபடி சில வேளைகளில் அவரிடம் நான் வகுப்பில் பேசினேன் என்று ’குற்றம்’ சாட்டப்பட்டு அடி வாங்கியிருக்கிறேன். அவர் தண்டிக்கும் முறையெல்லாம் வித்தியாசமானது. ஆகவே வகுப்பில் பேச அஞ்சுவேன். ஆனால் அவர் இரக்கமானவர். யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாத சூழலில் எத்தனையோ முறை உதவியிருக்கிறார். பாடம் நடத்துவதில் எந்தவிதமான கஷ்டமும் அவருக்கு கிடையாது. சுருக்குவழியில் மனப்பாடம் செய்தால் அவருக்கு பிடிக்காது.

நிறைய பேர் முக்கோணவியல் வாய்ப்பாடுகளை(sin 0-0;…. sin-90- 1 வகை) எளிமையாக சொல்லிக்கொடுப்பார்கள். அவர் இதுக்கு இதுதான்.. என்கிற மாதிரி சொல்வார். மற்றபடி எளிமையாக மதிப்பெண் எடுத்து பாஸ் செய்வது எப்படி என்றெல்லாம் வழிசொல்வார்.

இரண்டாம் பருவத் தேர்வில் நான் கணிதத்தில் தவறிவிட்டேன். ஆனால் சமூக அறிவியலில் நான்தான் வகுப்பில் முதல் மாணவன். வகுப்பே (வகுப்பில் பெரும்பாலானோர்) எனக்காக அவரிடம் கேட்டது(னர்). அவரும் சரி எவ்வளவு மார்க் என்றார். நான் சொன்னதைக் கேட்டுவிட்டு இவ்ளோ மார்க் போட்டெல்லாம் பாஸ் பண்ணிவிட முடியாது. அடுத்த முறை படிச்சு பாஸ் பண்ணிக்கோ என்றார். இன்னொருவன் எழுந்து சார் இவன் தான் சோசியல்ல ஃபர்ஸ்ட் மார்க் என்றான். அதுக்காக? என்றார்.

யாரும் பேசவில்லை.

அதன்பிறகு பள்ளிக்கு வந்திருந்த ஒரு சிறப்பு விருந்தினர் ஆல்பர்ட் சார் பற்றி சொன்னபோது ஆச்சர்யப்பட்டேன். அவர் தலைசீவி, சைக்கிளில் பள்ளிக்கு வரும் அழகே தனி என்றார். இப்போது ஆல்பர்ட் வாத்தியாருக்கு முடியெல்லாம் கொட்டிவிட்டது. இருக்கும் கொஞ்சம் முடியும் நரைத்து விட்டது. அவர் வீட்டிலிருந்து மொபெட்டில் வருகிறாரோ, நடந்து வருகிறாரோ? ஏதுவும் இப்போது இல்லை.

ஆனால் ஏதோ ஒரு வசீகரம் அவருக்கு இருந்தது.

பத்தாம் வகுப்பிலும் அவர் எங்களுக்கு கணித ஆசிரியராக வந்தார். முதல் பருவத்தில் நான் வாங்கியது 37 மதிப்பெண்கள். தாளை என்னிடம் கொடுக்கையில் கேட்டார்.

“என்ன தமிழு, படிக்கலியா?”

சுருக் என்று என்னமோ குத்தியது. யாரேனும் ஒருவர் நம்முடைய மதிப்பெண்களை எதிர்பார்க்கையில் நாம் உருப்படியாக படிக்காமல் இருக்கலாமா? (ஆனால் இந்த சுருக் அனுபவங்கள் என் அந்திமக் காலம் வரை தொடரும் போல! அவ்வளவு இருக்கு!)

வழக்கமான அதே புளித்துப்போன பதிலை அவருக்கும் சொன்னேன். அடுத்த முறை நல்லா படிக்குறேன் சார்.
பத்தாம் வகுப்பில் நான் கணிதத்துக்கு சிறப்புவகுப்புக்கு சென்றேன். எவனோ கிளப்பி விட்டான். நம்ம சாரே எடுக்குறாராம். வேறெங்கேயும் ட்யூசன் போகக்கூடாதாம்!

வீட்டில் சொன்னேன். அவரே எடுக்குறார்னா அவர்கிட்டயே போ!

நாங்கள் மொத்தமாய் 65 பேர் அப்போது 10-ம் வகுப்பில். அவ்வளவு பேருக்கும் அவரால் தனிவகுப்பு எடுக்க முடியாது. ஆனால் நாங்கள் 20-25 பேர் அவர் வீட்டு முன்னறையில் போய் உட்கார்ந்தோம். அவர் கணக்கு சொல்லித் தருவது தனியழகுதான். அவருடைய இளமையான புகைப்படம் ஒன்று அதே அறையில் மாட்டப்படிருந்தது. பார்த்த மாத்திரத்தில் உணர்ந்தேன். இளமைக்காலத்தில் அவர் எவ்வளவு வசீகரமாக இருந்திருப்பார்?

அவருக்கு அது பள்ளியில் இறுதி ஆண்டு. ஓய்விற்கான பாராட்டு விழா.

அப்போதுதான் இன்னொரு ஆச்சர்யம். அவர் சிறுவயதில் நன்றாக படித்தார் என்று சொல்லி இரண்டு முறை டபுள் ப்ரொமோட் ஆகியிருக்கிறார். 20 வயதில் ஆசிரியராக வேலைக்கு வந்துவிட்டார். 38 வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார்.

எத்தனையோ கணக்குகளை மீண்டும் மீண்டும் சொல்லித் தந்தவர். விடுமுறை நாட்களிலும் அவர் வீட்டில் போய் சந்தித்து படித்திருக்கிறோம். அதையெல்லாம் உடல் அழியும் வரை மறக்கமாட்டேன். அவ்வாறான ஒருநாள் அவர் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். நடக்கிற தூரம்தான் என்றாலும் 15 நிமிடங்களாகும் என்பதால் என் சைக்கிளை கேட்டார். மற்றவர்களின் சைக்கிளைக் காட்டிலும் என்னுடையது எல்லாவிதத்திலும் வித்தியாசமானது.

அது என் அக்கா ஒருவர் பயன்படுத்தி எனக்கு வந்தது. ஆகவே மற்ற (பெரிய)சைக்கிள்களைக் காட்டிலும் உயரம் குறைவானது. பார் இல்லாதது. அவர் முன்னே சொல்ல இன்னொரு தோழரின் சைக்கிளில் பின்னேறி வந்தேன். பள்ளிக்கு முன் வண்டியை நிறுத்தி என்னிடம் கொடுத்தவர் சொன்னார்.

“தமிழ். ப்ரேக்கை சரி பாத்து வை!”

சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை அவர் வீட்டருகே சந்தித்தேன். அவரைக் கண்டதுமே கைகள் ப்ரேக்கை அழுத்தும் முன் கால்களால் சாலையில் குதித்தேன். என்னைப் பார்த்ததும் ஞாபகம் அவருக்கும் வந்துவிட்டது.

“நல்லாயிருக்கியா தமிழ் ”
“நல்லாருக்கேன் சார். ”
“யாரு.. டேவிட்கிட்ட படிக்கிறியா? ”
“ஆமா சார். அவர்கிட்டதான்.”
“சரி. பாத்து பத்திரமா போ.”
பின்குறிப்பு:
அவரிடம் நான் தனிப்படிப்பு படிக்க கொடுத்த கட்டனம் 100 ரூபாய் மட்டுமே. வேறெப்போதும் அவர் எங்களிடம் காசைக் கேட்டதேயில்லை. நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் எடுத்த மதிப்பெண் 95. வேறெப்போதும் இதைத் தாண்டியதில்லை. அவர் என் சைக்கிளில் ஏறியபின் வேறெந்த சைக்கிளிலும் ஏறியிருக்க மாட்டார் என நம்புகிறேன். இப்போது அந்த சைக்கிள் என்னிடமும் இல்லை. இன்னொருவர் வைத்திருக்கிறார். அவருக்கு இவ்வரலாறு தெரிய நியாயமில்லை. எனக்கு இந்த ஞாபகம் மட்டும் போதும்.

இவர் இன்னொரு சிற்பி. -இதற்கு முன்

Advertisements

One thought on “இன்னொரு சிற்பி!

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s