அப்பாவும் தமிழும்!

மனதிற்கு நெருக்கமான பதிவுகளை எழுதுவதில் ஒரு திருப்தியும், ஆறுதலும் இருக்கிறது. அவ்வகையில் அப்பாவும், தமிழும் பதிவுகள் ரொம்பவே நெருக்கமானவை. அவற்றைத் தொகுத்து, இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுதியிருக்கிறேன்.

*********************************

அப்போது ‘தமிழு’க்கு எத்தனை வயது என்று நினைவில்லை. தம்பிக்கும் சிறு வயதுதான். பாட்டியின் படுக்கைக்கு அருகே ஒரு அலமாரி. அதில் அவருக்கான மருந்துகள் அடங்கிய டப்பா இருக்கும். ஒரு இனிய விடுமுறை தினக் காலைப் பொழுதில் மணி ஏழில் இருந்து எட்டுக்குள்ளாக இருக்கும். அப்பா உறங்கிக் கொண்டிருந்தார்.

தமிழும், தம்பியும் ஏதோ விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. விளையாட்டுப் போக்கில் இருவரும் பாட்டியின் படுக்கையில் ஏறி அலமாரி பக்கம் உலவினர். மருந்து டப்பாவின் மேல் கிடந்த ஒரு பழைய ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றினை பார்த்த தமிழுக்கு ஏதோ தோன்றியிருக்கும் போல. உறங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பினான்.

“அப்பா! பாட்டியோட மருந்து டப்பா மேல இது இருந்துச்சுப்பா” என்றவாறு அவரிடம் நீட்டினான்.

அப்பாவின் உறக்கம் அடுத்த சில நொடிகளில் கலைந்து கண்களில் கோபம் அதிகமானது. அவர் பார்வைக்கு எட்டினாற்போல தமிழும் தம்பியும் விளையாடிய இரு பிளாஸ்டிக் டென்னிஸ் மட்டைகள் இருந்தன. இரண்டையும் ஒரு கையில் இறுக்கிப் பிடித்து, தமிழையும், தம்பியையும் மாறி மாறி அடித்தார்.

அடிக்கும்போதே ”அடுத்தவங்க காசை எடுப்பியா” என்ற அதட்டலும் காதுக்குள் விழுந்தது. எடுக்கமாட்டேம்பா என்று தமிழால் சொல்ல முடிந்ததா என்றும் நினைவில்லை. இருவரையும் சில நிமிடங்கள் வீட்டு (உள்)வாசலில் முட்டி போட வைத்தார்.

இன்றுவரை தமிழ் அடுத்தவர்கள் காசுக்கு ஆசைப்பட்டதும் கிடையாது. கடன் வாங்கியது கூட கிடையாது. அந்த அடி இப்போது நினைவில் மட்டும் இருக்கிறது. அப்பாவின் வளர்ப்பு எத்துணை கடினமானதாகத் தோன்றினாலும் அதன் விளைவு எக்காலத்திலும் தமிழுக்கு இனிய பயனையே தந்தது.

கதை சொல்லும் நீதி:    அடி நல்லது!

அப்போது ’தமிழ்’ ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். முதல் இடைத் தேர்வில் கணக்கில் 67 மதிப்பெண்கள் பெற்றதற்காக அப்பா வருத்தப்பட்டார்.

“முதல் மார்க் யாரு?”
சொன்னான்.
“எவ்ளோ மார்க்?”
“97.”
“அவனால் அவ்ளோ மதிப்பெண் எடுக்கும்போது உன்னால் ஏன் எடுக்க முடியல? இதை ஒரு தாள்ல எழுது. இதுக்கு பதில் நீதான் சொல்லணும்.”

ஏறக்குறைய அரைமணிநேரத்துக்கும் மேலாக நீண்ட அந்த உரையாடலில் தமிழின் கண்களில் கண்ணீர் ததும்பி வெளியேறியது மட்டும்தான் நினைவில் இருக்கிறது.

இப்போது தமிழ் ஏழாம் வகுப்பு முதல் இடைத் தேர்வில் எடுத்த கணித மதிப்பெண் தாளுடன் வீட்டிற்குள் வந்தான். அம்மாவிடம் வெகு தயக்கத்துக்குப் பிறகு சொன்னான்.

”பதினெட்டு தாம்மா!”

ஏழு மணியளவில் வீட்டுக்கு வந்த நண்பன் தமிழைப் பற்றி பேச அம்மா அதிர்ந்து கேட்டார். ”மார்க் எவ்ளோ? ”

”பதினெட்டு”

அம்பதுக்கா?

இல்ல நூத்துக்கு!

இதை ஏன் முன்னாடியே சொல்லல! நான் அம்பதுக்குனு நினைச்சு விட்டுட்டேன். அப்பாகிட்ட என்ன சொல்லப் போற?

அப்பாவிடம் பலமான தயக்கத்தினூடே மதிப்பெண்ணை சொன்னான். ஒரு வார்த்தை பேசவில்லை. கண்களில் துளி உணர்ச்சியையும் காட்டாமல் அப்பா அமர்ந்திருந்தார். தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவுக்கு மட்டும் புரிந்துவிட்டது போல.

காலாண்டு தேர்வுக்காக அடுத்த நாளிலிருந்தே பயிற்சியைத் தொடங்கினார் அம்மா. தினமும் கணக்கு பாடம் படிக்க வேண்டும். போட்ட கணக்கையே மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும். காலாண்டு தேர்வு முடிவுகள் வந்தன. வாய் நிறைய புன்னகையோடு வீட்டுக்கு வந்தான்.

கணக்கில் வகுப்பில் இரண்டாமிடம். 84 மார்க்கு! கூடவே இரண்டாவது தரமும் (ரேங்க்!) தான்!

சில நாட்களுக்குப் பின் அப்பாவிடம் மதிப்பெண் பட்டியலில் கையொப்பம் வாங்கச் சென்றான் தமிழ்.

மதிப்பெண் பட்டியலைப் பார்த்த அப்பாவுக்கு மகிழ்ச்சி. தமிழை இறுக்கி அணைத்த அப்பா அருகிலிருந்த தமிழின் தம்பியிடம் சொன்னார்.

“உன்னால இப்படி வாங்க முடியுமாடா! பார்ரா! ”

கடைசி வரைக்கும் அப்பாவின் மௌனம் அவனுக்கு புரியவில்லை. அவர் கொண்டாடியது  மட்டும் நினைவில் நின்றுகொண்டது. அவர் வித்தியாசமான அப்பா. தமிழுக்கு மட்டும் என்ன குறைச்சல்? அவனும் வித்தியாசமான மகன் தான்! அத்தோடு பள்ளிப் படிப்பை முடிக்கும் வரைக்கும் அம்மாதிரி மதிப்பெண் பெற்ற ஒருவனைக் கூட தமிழ் காணவே இல்லை என்பது தனிக் கதை.

……………………………………………………………

……………….அதை விடுங்கள். நான் சொல்ல விரும்புவது என் அப்பாவைப் பற்றி. அவரும் என்னைக் காட்டிலும் என்மேல் நம்பிக்கை வைத்தவர். நான் முடியாது என்று நினைத்தவற்றையெல்லாம் நானே செய்ய தூண்டியவர். எப்போதெல்லாம் முடிவெடுக்கத் திணறினேனோ, அப்போதெல்லாம் வழிகாட்டியவர்.எதற்கு மேம்போக்காக சொல்ல வேண்டும்?

அடுத்து என்ன படிக்க வேண்டுமென்பதை பத்தாம் வகுப்பில் இருந்து எனக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு நிலையிலும் நான் அவர் நினைத்தற்கு மாறான முடிவுகளையே (பெரும்பாலும்) எடுத்ததாக கருதுகிறேன். ஒவ்வொரு நிலையிலும் நான் தோற்காமல் இருக்க அவர் அளித்த ஊக்கம் அளவிட முடியாத ஒன்று. என்னைப் பேச வைத்து பார்க்க கொள்ளைப்பிரியம் கொண்டிருப்பார். எனது வாசிப்பு ஆர்வத்திற்கு சரியான தீனி அவர் போடவில்லை. மாறாக எங்களின் தேடலுக்கான அடிப்படையை நன்றாக அமைத்துக்கொடுத்திருக்க்கிறார்.

எப்போது திட்டவேண்டுமோ, அப்போதெல்லாம் திட்டத் தவறியதில்லை. எப்போது கண்டிக்க வேண்டுமோ அப்போதும் அப்படித்தான்.. கண்டிப்பு என்றால் இங்கே வன்மையான பிரயோகம்! அதேபோல் ஒரு கட்டத்திற்கு மேல் எங்களுக்குத் தேவையான சுதந்திரத்தையும் அவராகவே தந்தும் விட்டார். இப்போது எண்ணிப் பார்த்தால் குறைகளும் அவர்மேல் சொல்லலாம்.

என்னால் அவர் மேல் பத்து குறைகளைச் சொல்லமுடியும். அதே சமயம் தொண்ணூறு நிறைகளை அவர் சொல்வதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது. அப்புறம் நான் எங்கே போய் முகத்தை வைத்துக்கொள்வது?

********************************************

……………………தந்தையிடம் சொன்னவுடன் “ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி” என்றார். எனக்கு அவர் அப்படி சொன்னதே போதுமானதாகப்பட்டது. இன்னும் கொஞ்சம் பேசினார். கடைசியாக இன்றிரவு நன்றாக உறங்கு என்றார். அசந்தே போய்விட்டேன். காரணம் இருக்கிறது. என் தூக்கத்தை அப்பா விமர்சித்து மட்டுமே கேட்டவன் நான்.  “நீ தூக்கத்தைக் குறைச்சினா பெரிய ஆளா வருவ” என்று அவர் சொல்லும்படியே என் வழக்கம் இருந்தது. அப்பா அப்படி சொன்னதும் ரொம்பவே கரைந்து விட்டேன்.

இன்னைக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக, நிம்மதியாக, நிதானமாகத் தூங்கச் செல்வேன்பா!

**************************************************

……………..” என் அப்பாவின் மேல் எனக்கு பயம் கிடையாது. மற்றவர்களை விட மரியாதை உங்கள் மேல் எனக்கு அதிகம். நான் உங்களிடம் அதிகம் பேசாமல் இருந்தாலும், உங்கள் அறிவுரைகளை நீங்கள் தந்துகொண்டேதான் இருக்கிறீர்கள். அதை நான் ஒருபோதும் மறந்ததில்லை. ஆனால் செயல்படுத்த முடியாமல் பலவேளைகளில் திணறியிருக்கின்றேன். நீங்கள்தான் என்னை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

உங்கள் வளர்ப்புமுறை குறித்து பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காரணம் எனது அணுகுமுறையாக இருக்கலாம். எனது நடத்தையாக இருக்கலாம்.

எப்போதெல்லாம் எனக்கு கண்டிப்பு தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் வழங்கினீர்கள். எனது திறமையின் எல்லைவரை மட்டுமே உங்கள் கண்டிப்பு சென்றது. வீணாக உங்கள் விருப்பங்களை என் மேல் நீங்கள் திணித்ததே இல்லை. எனவே நீங்கள் உன்னதமானவர். “

…………..”பணத்தை விட குணத்தில் சிறந்த மனித மனங்கள்தான் வாழ்க்கைக்குத் தேவை” என புரியவைத்திருக்கிறீர்கள். எனக்கு கிடைத்த தோழர்களை எண்ணி மகிழ்கிறேன். ……….

இறுதியாக:

உங்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. தற்போது எனக்குத் தேவையாயிருக்கிற உங்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. தேவையான தருணங்களில் ஆறுதல்களும், தேற்றல்களும், அணைப்புகளும், அனைத்துமே உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கிறது. நீங்கள் எடுக்கிற சில முடிவுகளின் விளைவுகள்தான் ஆச்சர்யத்தில் முடிகின்றன. அவ்வகையில் உங்களின் பல்வேறு முடிவுகள் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கின்றது. பல்வேறு தருணங்களில் உங்களை நான் வருத்தம் கொள்ளச் செய்திருக்கலாம். ஆனால் நானாக அப்படி செய்யவில்லை என்பதே உண்மை. உங்கள் அறிவுரைகள் பல்வேறு கணங்களில் எனக்குப் பேருதவியாக இருக்கின்றன. 

அனிச்சையாக என் உதடுகள் உங்களை உச்சரிக்கின்றன. உறங்கச் செல்கையில், போர்வையை மூட நினைக்கையில், முறுவலிக்கும்போது, ஏதோ ஒரு கடினமான தருணங்களில் ’அப்பா’ என்றே உதடுகள் உச்சரிக்கின்றன. உருவத்தில் உங்களைப் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். மற்றவற்றில் உங்களைத் தாண்டிச் செல்வதுதானே உங்களுக்குப் பெருமை.

பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா!

Advertisements

5 thoughts on “அப்பாவும் தமிழும்!

  1. கண்டிப்பாக உங்கள் அப்பா செய்த ஒவ்வொரு விடயமும் உங்கள் நல்லதற்கே…என் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்டிப்பாக தெரிவிக்கவும் தமிழ் ! 🙂

  2. நம்பிக்கை – தன் மகன் எப்படியும் தனது மனதை அறிவான் எனும் நம்பிக்கை… அதே போல் மகனும்…

    எனது தந்தையும் இதே போல்…

    தந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s