கற்றதனாலாயப் பயன்!

இது முழுக்கவே பயணங்களும், அவற்றின் அனுபவங்களும் கொண்ட பதிவு.
நிறைய திட்டங்களைக் கலைத்துப் போட்ட விடுமுறையாகிப் போயிருக்கிறது கடந்த வாரம். இருந்தாலும் சில பயணங்களும், உரையாடல்களும் இதம் தந்த விடுமுறை இது. அதுவரையில் மகிழ்ச்சியே!
பொங்கலன்று இனிமையான சம்பவங்களைக் கடந்து சில நிகழ்வுகள் ஆக்கிரமித்து விட்டன. என் மேல்தான் தவறென்றாலும் அதை என்னாலேயே தவிர்க்க முடியவில்லை. அதன்பின் கொஞ்சம் உருப்படியாக வாசித்தேன். அப்பாவோடு எக்கச்சக்கமான உரையாடல் வாய்த்தது. நான் அதிகம் பேசவில்லை.

கேரளாவின் ஒரு மாவட்டம் முழுக்க அமிலங்களால் சிதைந்து போயிருக்கிறது. ஆனால் அரசோ வருவாயைக் காரணம் காட்டுவதாய் ஒரு கட்டுரை படித்தேன். அதிர்ச்சிதான்.

நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். உரையாடுகையில் ஊடே அவரின் தோழர்கள் சிலர் வந்திருந்தனர். வீட்டுக்கு வெளியே நின்றபடியே உரையாடிக் கொண்டிருந்தோம். தன்னுடைய பணி அனுபவங்களைப் பற்றி சொன்னார் நண்பரின் நண்பர். (நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே!) திடீரென பள்ளி அனுபவங்கள் பக்கம் உரையாடல் திரும்பியது. இன்னொருவரை சுட்டிக் காட்டி இவரும் உங்க பள்ளிதான் என்றார்.
“நான் பத்தாம் வகுப்புவரைதான் அங்க படிச்சேன்”
“பத்தாவதில் எந்த பிரிவு?”
சொன்னார்.
எனக்கும் என் தோழருக்கும் அதிர்ச்சி. காரணம் அது நான் படித்த பிரிவு. நான் தொடர்ந்தேன்.
“நானும் அதே பிரிவுதான்! ”
“தெரியும். தமிழ்தானே உம்பேரு!”
“ம்ம்ம்.. ஆமா உன் பேரு *** தானே! முன்னமே தோணுச்சு…… என்ன எப்படி அடையாளம் கண்டுபிடிச்ச!”
அவர் சொன்ன பதில் எதிர்பார்த்த ஒன்றுதான்!
“பார்த்த உடனே…..”
பெரும்பாலான பள்ளித் தோழர்கள் என்னை அடையாளம் காண்பதில் சிரமப்படுவதே இல்லை. மாறாக நான் அவர்களைக் கண்டுபிடிப்பதற்குள் ”அவனா இருக்குமோ? இவனா இருக்குமோ?” என்று தாவு தீர்கிறது.

கரும்பு மட்டும்தான் இந்த பொங்கலை மறக்க முடியாதபடிக்குச் செய்தது. முடிந்தமட்டும் விருப்பம்போல கரும்பு தின்ன முடிந்தது (கரும்பு தின்னக் கூலியா!)! சன் டிவியில் ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் ஒன்று நீண்ட இடைவெளிக்குப் பின் ஒளிபரப்பானது. அதன் பின்னணி குறித்து அப்பா சொன்னார். சிரித்தபடியே ஆமோதித்தேன்! விடுமுறை நாட்கள் முழுக்க  படங்கள், பாடல்கள் என்றெல்லாம் பெரிதாக அமர்க்களப்படவில்லை. அத்தோடு வீட்டிற்குள் நுழையும் முன்பே அந்த மூன்றெழுத்துப் படம் குறித்த போஸ்டர்களும், படம் பார்க்க காத்திருந்த ரசிகர்கூட்டமும் ஆச்சர்யம்தான்! நாடோடிகள் படத்தில் ஒரு வசனம் வரும்.

”இந்த வசனம்-லாம் யார் எழுதுறா?
”அதுக்கு பதினைந்து பேர் கொண்ட குழு இருக்கே!”

அந்த பதினைந்து பேர் கொண்ட குழுவினர்தான் என் கண்ணில் படவில்லை. ’சிலர்’ அரசியலுக்குள் வர மறுப்பதன், அல்லது வரத் துடிப்பதன் பின்னணி ஓரளவேனும் புரிந்தது.

வாசித்தவற்றையெல்லாம் முதலில் மனதினின்று எடுக்க வேண்டும். பல சிறுகதைகளையும், சில கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கத் திட்டம்! டான் நதி புத்தகத்தைத் தொடவே இல்லை. தொட்டால் முடிக்கிற வேகம் வாய்க்க வேண்டும். சும்மா சும்மா அந்த புத்தகத்தை துன்புறுத்துவது நியாயமாகப்படவில்லை.

ஒரு சுகமான பேருந்துப் பயணம் வாய்த்தது. காதில் மாட்டிய ஹெட்போனை கடைசிவரை கழட்டவில்லை. இதில் சில ஆச்சர்யங்கள் நிகழ்ந்தன.

  1. முதல் பாடல் இளையராஜா, அடுத்து கார்த்திக் ராஜா, அடுத்து யுவன் ஷங்கர் ராஜா என முதன்முறையாக பாடல்கள் வரிசையாக ஒலித்தது.
  2. எனக்கருகில் அமர்ந்திருந்த நபர் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பொறுத்துப்பார்த்தார். கடைசியாக அவரும் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பண்பலை வானொலியை இயக்கி ரசித்தார்.
  3. ஒரு குழந்தை எனக்கு எதிரே (அம்மாவின் மடியினின்று இறங்கி) நின்றிருந்தது. வெகுநேரமாக என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தது. அவ்வப்போது நானும். திடீரென என் தொடை யைத் (அதாவது பேண்ட்ஸை) தொட்டது அக்குழந்தை. இருமுறைகள் தடுத்த அதன் அம்மாவுக்கு (என் அனுமானத்தில் ) வயது இருபத்தைந்திலிருந்து முப்பதுக்குள் இருக்கும். இருமுறைகளுக்குப் பின் அந்தப் பெண் அக்குழந்தையைத் தடுக்கவில்லை. அது என் காதுகளையே பார்த்துக்கொண்டிருப்பதாகப் பட்டது. என் ஐயம் வீணாகவில்லை. சற்றுநேரத்தில் மூன்று முயற்சிகளுக்குப் பின், என் தோளைக் கொஞ்சம் சாய்த்து, அப்படி-இப்படி என அசைந்து ஒருபக்க ஹெட்போனை கழற்றிவிட்டது. இன்னொரு காதில் எனக்கு பாட்டு கேட்டுக்கொண்டிருந்தது. அக்குழந்தையின் தாய், எனக்கு அருகில் இருந்தவர், எனக்கு முன் -பின் அமர்ந்திருந்த சிலரும் ஒரே நேரத்தில் அதிசயித்தனர். (ஓஓஓ!)(பார்ரா!)

    ”அவங்கப்பாவிடமிருந்து தொற்றிய பழக்கம் இது” பூரிப்புடனே அந்த தாயார் கணநேரத்தில் பகிர்ந்த தகவல் இது. எனக்கோ அக்குழந்தையிடம் ஹெட்செட்டைக் கொடுக்க மனமில்லை.

    இது இளம்பருவம்; அதன் காது மிகச் சிறியது; என்னிடம் ஓடிய பாடலின் டெம்போ; நான் கேட்டுக்கொண்டிருந்த ஒலியின் அளவு; பாடல் குழந்தையிடம் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என பல எண்ண மின்னல்கள் என்னைச் சுற்றின. கடைசியாக மீண்டும் ‘இயல்பு நிலை’க்குத் திரும்பினேன். 

பொங்கலன்று காலை இனிதே விடிந்தது. தோழர்கள் சிலருக்கு வாழ்த்து சொல்ல அழைத்தால் நான்கு விதமான மறுமொழிகள் கிடைத்தன.

1. பிஸி
2. அரைகுறையாக உரையாடல் கேட்டது. பின்னர் சிக்னலில் பிரச்சினை
3. ஸ்விட்ச்டு ஆஃப்
4. முழுமையாக ரிங் மட்டும் போய் முடிந்தது.
இதன் பின் எதிர்பாராத விதமாக வகையாக ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேன். அதனின்று மீள்வதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

*******************

கடைசியாக:

2011 ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். தலைவர்கள் சிலரின் தத்துவங்களை ’சிறப்பு’ ட்வீட்டாக இடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட ஒரு தத்துவத்தை ’அவர்’ எனக்கு முன்பே இட்டுவிட்டார். ஓஜஸிடம் இதைச் சொன்னவுடன்.

“யோசிக்கிற ட்வீட்லாம் அப்பப்போ எழுதிடணும். வெயிட் பண்ணினா அவ்ளோதான்!”

 என்றார். இப்போது வரை புத்திக்கு உறைப்பேனா என்கிறது. இதன் காரணமாய் நான் இழந்தவையும் இருக்கிறது. அதை விடுங்கள். இன்றோடு நான் ட்விட்டருக்குள் நுழைந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. வேறென்ன சொல்வேன்?

தோழர்களுக்கு நன்றி. 

One comment

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s