பயணக் குறிப்புகள்

ஒரு குறுகிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பயணப்பட்டேன். இம்முறை சற்றே அவசரப் பயணம்தான். எதிர்பாராத திட்டமிடுதல்களுடன் விரைவாகத் தொடங்கி, விரைவாகவே முடிந்த பயணம். பயணத்தின் இறுதியில் நிதானித்துக் கொள்வதற்கான வாய்ப்பும் கிட்டியது. காரணம்? என் வீட்டில் பயணம் நிறைவுற்றது.

உடன் பயணிப்பவர்கள் ஓவ்வொரு முறையும் வித்தியாசமாக, மிக வித்தியாசமாக அமைகிறார்கள். அதிலும் அருகில் அமர்ந்து உறங்குபவர்களைப் பிடிக்கவில்லை. நான் பெரும்பாலும் உறக்கத்தினை தவிர்ப்பது வழக்கம். அதற்கு என் செவியில் வழியும் இசையும் காரணம்.

விடுங்கள். அதைத் தவிர்த்துவிட்டு, இன்னும் சிலர் பேருந்தின் பயணிகள் அனைவருடைய கவனத்திற்கும் உள்ளாகிறபோது, மனம் சற்று வேதனையாகத் தான் உள்ளது. 40-லிருந்து 50-க்குள் வயதிருக்கும் என நான் கணித்த ஒருவர் அரைக்கால் சட்டை (டவுசரே தான்!) அணிந்து பேருந்தில் பயணித்தார்.  இன்னுமொரு 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அரைகுறையான ஆடை அணிந்து, நகரின் முதன்மையான சாலை ஒன்றில், இரவில் நின்றுகொண்டிருந்தார். வீட்டில் உடுத்த வேண்டிய ஆடைகளை வீட்டில் மட்டும் உடுத்தினால் என்னவோ? (ஆடைச் சுதந்திரம் பற்றி அதிகம் படித்தபடியால், இதற்கு மேல் நான் இதுகுறித்து எழுதப் போவதில்லை. )

உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதாகத் தோன்றியது. வெளியில் சென்று உண்டால்தான் வீட்டுச் சாப்பாட்டின் அருமை புரியுமென்பது எத்தனை உண்மையான கூற்று!

வீட்டில் ஒரு வரலாற்றுப் புதினத்தினைப் படிக்கத் துவங்கினேன். பிற்பாடு இன்னொரு நூலின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு அந்த நூலினைப் படிக்கத் துவங்கினேன். பெரிக்கில்ஸ் எனும் அரசியல் தலைவர் குறித்து வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். தமிழில் கூகுளில் தேடினால் எனக்கே ஆச்சர்யமான ஒரு விடை இருக்கிறது. ஆங்கிலத்தில் தேடினால் நீங்களும் அவர் குறித்து அறிய நேரும். Perikles கி.மு 400களில் வாழ்ந்த கிரேக்கர். இவருடைய பேச்சாற்றல் பிரபலமானது. இவருடைய பெயரைத் தேடுகையில் இறுதி அஞ்சலி உரை ஒன்றும் வருகிறது. அதுவும் இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் தேடிப் படியுங்கள்.

எதேச்சையாக, கிட்டத்தட்ட 8-9 ஆண்டுகளுக்குப் பிறகு, (இன்னும் சரியாக நினைவு படுத்தினால் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும் பிறகு) ஒருவரைக் காண நேர்ந்தது. (சந்திக்க அல்ல. காண.) அவர்தானா? என்றோர் ஐயம் எழுந்து மறைந்தது. அவரேதான்.

என்னை என் தம்பி என நினைத்துக் கொண்டு கேட்டார். (என்னுடைய புதிய தோற்றம் காரணமாய் இருக்குமோ?? )  நான் மறுத்துவிட்டு என்னைப் பற்றியும், தம்பியைப் பற்றியும் கூறினேன். அப்பா பற்றி ஒரிரு வார்த்தைகள் கேட்டார். மொத்தமாய் 30 நொடிகளில் என்னைக் கடந்து போய்விட்டார்.

இன்னும் சில (அல்லது பல) ஆண்டுகளுக்குப் பிறகு இதே பதிவின் மேற்கண்ட பத்தியைப் படிக்கையில் என்ன மாதிரியான உணர்ச்சி என்னை ஆட்கொள்ளுமோ என்றொரு பதற்றம் மட்டும் எஞ்சி நிற்கிறது.

இவ்வாண்டு கிட்டத்தட்ட 20 புத்தகங்கள் படித்து முடிக்கத் திட்டம். மறு வாசிப்பை கணக்கில் கொள்ளவில்லை. பார்த்த திரைப்படங்களையும், கேட்ட பாடல்களையும் எண்ணிக்கையில் சொல்வது கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிவதற்கும், அண்ணாந்து பார்த்து எச்சில் துப்புவதற்கும் பொருத்தமாகும் என்பதால் கூற விரும்பவில்லை. ஆனால் இதைப் பற்றி எழுதும் எண்ணம் இருக்கிறது.

புதிதாகப் பதிந்த பக்கம்: மென் தூறல்!

இதைத் தனிப் பதிவாக்கினால் என்ன என்றொரு தோழர் கேட்டார். அதிகம் பேருக்குத் தொந்தரவு கொடுக்க விருப்பமில்லை. என் முயற்சிகளின்பால் விருப்பங்கொண்ட தோழர்கள் கட்டாயம் அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவ்வப்போது கட்டாயம் அப்பக்கத்தை மேம்படுத்துவேன்.  இன்னும் சில மாற்றங்கள் செய்யும் எண்ணமிருக்கிறது.

அது கைகூடினால் மகிழ்ச்சியே. அடுத்த ஆண்டிற்கான திட்டங்களையும் (!)  விரைவில் பகிர்கிறேன்.

Advertisements

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s