இரவுக்காட்சி!

ஒரு இனிமையான விடுமுறை நாளின் மாலையில் குட்டித்தூக்கத்தில் இருந்து எழுந்து மணியைப் பார்த்தேன்.

5.50.

சற்றே சோம்பல் நீங்கி வீட்டைச் சுற்றி ஒரு நடை போய் வந்தேன். தம்பி எனக்கு முன்னமர்ந்து தொலைக்காட்சியை இயக்கிக் கொண்டிருந்தான். திடீரென ஒரு திரைப்பட விளம்பரம் தொலைக்காட்சியில் வந்தது. என்னைப் பார்த்துக் கேட்டான்.

“என்ன, இன்னைக்கு போவமா?”

”இனி கிளம்பிப் போகனும்னா நைட் ஷோ தான் போகணும்டா!”

”சரி. அப்ப நைட் ஷோவே போவோம்!”

அவன் சொல்லிய அடுத்த பத்தாவது நிமிடத்தில் வானம் இருளத் தொடங்கியது. மழைத் தூறல்கள் மண்ணில் ஆங்காங்கே வீழ்ந்தன. குளிர் கலந்த காற்று பலமாக வீசத் தொடங்கியது. அப்பா வந்தார் 7 மணிவாக்கில். இன்று வெளியூர் பயணம் போவதாய் சொன்னார். அவருக்கு ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பையை சரிபார்த்து வழியனுப்ப முனைகையில், அனுமதி கேட்டோம்.

மழை தூறப்போவது போல் தெரிகிறது. ஜாக்கிரதையாகப் போய்வாருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். மழை சற்றுநேரத்தில் வேகம் பிடித்தது. 8 மணியளவில் நான் இரவு உணவை உண்ணத் தொடங்கிவிட்டேன். நண்பன் ஒருவனுடன் தம்பி உரையாடி முடிக்க மணி 8.30 ஆகிவிட்டது.  அப்போதுதான் வெளியே கவனிக்க நேர்ந்தது. மழையின் வேகம் முன்போலில்லை. இறங்கி விளாசத் துவங்கிய மழையின் தாக்குதலில் வீட்டின் பின்புறத்தில் சில அசௌகரியங்கள் ஏற்பட்டன. சிறுபாடுபட்டு அதைச்  சமாளித்து   குடை ஒன்றை ஏற்பாடு செய்து வீட்டைவிட்டுக் கிளம்ப மணி 9-20 ஐத் தொட்டது. மழையோ நிற்கிற பாடாகத் தெரியவில்லை.

இன்றே பார்த்தால்தான் ஆச்சு என்கிற நிலைமை எங்கள் இருவருக்கும். சரி ஆனது ஆச்சு! என்று கிளம்பினோம். குடையை ‘பேலன்ஸ்’ செய்வதில் இருவரும் சற்றே தடுமாறினோம். யாரேனும் ஒருவர் நனைவது அவசியமாய்ப் போனது. இருவரும் விட்டுக்கொடுக்காமல் சென்று மாறிமாறி கொஞ்சம்-கொஞ்சமாய் நனைந்தோம். சாலைகளை, வீதிகளை, தெருவோரங்களைக் காணச் சகிக்க முடியாதபடிக்கு மழையின் குரூரம் இருந்தது. இன்னும் பெருந்தூறல் தொடர்ந்துகொண்டே இருந்தது.

தெருவோரத்தில் இருந்த ஒரு வீட்டின் முன்பகுதியில் சிறு குட்டை போலத் தேங்கிக் கிடந்த மழைநீரை பெரும்பாடுபட்டு ஒரு பெரியவர் வெளியேற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே 2-3 பேர் குழந்தைகள், பெண்கள் இருந்தனர். அதே குடும்பத்தினராய் இருக்கலாம். இன்றைக்கு அவர்கள் பாடு அதோகதிதான். சாலையின் ஓரத்தில் இருக்கிற சாக்கடைகள் நிரம்பி மழைநீரோடுக் குழாவி நடுசாலைக்கு அழுக்கு நீரை அனுப்பிக் கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் ஆச்சர்யத்தோடு கடந்து நாங்களிருவரும் போய்க்கொண்டிருக்கிறோம்.

எங்களூரா இது? என்று மழையைப் பார்த்து ஆச்சர்யமடைந்து இதோடு 8 வருடங்கள் கடந்துவிட்டன.  இதோ இவ்வருடம் ஆச்சர்யம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. நடக்கிற தூரமாய் இல்லாவிட்டாலும் நடந்து செல்வது எனக்குப் பிடிக்கும். இருவரும் நடந்து போகிற சாலையில் ஓரிடத்தில் கால் வைக்க இயலாதபடிக்கு (மழைக்)கழிவுநீர் போய்க் கொண்டிருந்தது. தேங்கி நின்ற அதைக் கடக்க சுலபமான வழி தேடுவதற்குள் தூரத்தில் வந்த கார்க்காரன் ஒருவன் அந்த மழைநீரின் மேல் வேகமாய் காரின் சக்கரங்களைப் பாய்ச்சினான். அதுவரை திரைப்படங்களில் மட்டுமே அவ்வாறான காட்சிகளைப் பார்த்துவந்த நான் சற்றே தாவினேன். முழங்காலுக்குக் கீழே கழிவுநீர் என்மேல்  வாரியிறைக்கப்பட்டது.

தம்பி என்னைப் பார்த்து சிரித்தான். நான் சற்றே கோபமடைந்து சொன்னேன்.

“உன்னாலதான் இதெல்லாம்…”

“சரி..சரி ரோட்ட பாத்து வாடா!”

மழையின் தாக்கம் ஓரளவில்  குறைகிற நேரத்தில் திரையரங்கை நெருங்கினோம். வழியில் தேங்கி நின்ற மழைநீரினைக் கடக்க சில உபாயங்களைத் தம்பியே சொன்னான்.

“எல்லாத்திலும் சயின்ஸ் இருக்குடா!” என்றவன் பரப்பு இழுவிசையில் தொடங்கி இயற்பியல் பாடம் எடுக்க ஆரம்பித்தான். (பொருளின்) இயல்பை அறிவதுதான் இயற்பியல் என்று தொடங்கிய அவனிடம் நான் சமாளிக்கத் தொடங்கினேன். ”இதெல்லாம் எனக்கு தேவையில்லைனு சொல்லாத.” என்று முடித்துவைத்தான் தம்பி.

திரையரங்கை நெருங்கிவிட்டோம்.

இந்த படம்தான் இப்போது ஓடுகிறது என்று விளக்கம் சொன்ன தம்பியை நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். பெருமழை பெய்த விடுமுறைநாளின் இரவுக்காட்சிக்கு அது ஒன்றும் குறைவான கூட்டம் இல்லை என்றே பட்டது. டிக்கெட் கவுண்டரில் போய்க் கேட்டோம்.

65/85

சிறுவிவாதத்திற்குப் பிறகு இரண்டு 85 ரூபாய் டிக்கெட்களைப் பெற்றோம். உள்ளே போய் அமர்கையில் மணி 9.50. பிரபல பாடகரின் சமீபத்திய ஹிட் பாடலொன்று ஒலிபரப்பாகியது. தம்பி கேட்டான்.

“இந்த பாட்ட நீ கேட்ருக்கியா?”

”இல்லியே” என்றேன். அவன் மைண்ட் வாய்ஸ் வேறுவிதமாக  எண்ணியிருக்கலாம்!!

சற்றுநேரத்தில் எங்களுக்குப் பின் மொத்தமாய் 10 பேர் அமர்ந்திருப்பார்கள். இதில் ஒருவர் குடும்பத்தோடு வந்திருந்தார். இப்படிப்பட்ட சூழலிலும் குடும்பத்தோடு வந்ததை எண்ணி ஆச்சர்யப்படுகையில் திரை ஒளிர்ந்தது.

தமிழ்நாடு அரசு செய்திப்படம்! நெய்வேலி சுரங்கப் பங்குகளில் 5% பங்கை தமிழக அரசே வாங்கியதன் முன்+பின் கதைகளை படங்கள், வீடியோக்கள், எதுகை, மோனை, இயைபு கலந்த தமிழ்ச் சொற்றொடர்களால் அள்ளி விளாசிக் கொண்டிருந்தனர். என் கவனமெல்லாம் யார் இந்த வசனங்களை எழுதித் தந்திருப்பார் என்றே சென்றது.

பின்னர் கரம், சிரம், கால் நீட்டாதீர், புகை பிடிக்காதீர் உள்ளிட்ட “நல்லெண்ணங்களை” விதைக்கக் கூடிய ஸ்லைடுகள் வந்தன. ஒருவழியாக படம் திரையிடப்பட்டது.

இயக்குனர் பேர் வரும்போது தம்பி சொன்னான். ”இவன் பேருக்காகத்தான் இந்த “font”-ல் டைட்டில் கார்டு போட்டிருப்பார்கள் போல. ஆனாலும் நல்லாருக்கு”. எனக்கும் அது சரியெனப்பட்டது.

ஒருவழியாக இடைவேளை வந்தது. உடனே ஒரு ட்ரெய்லர் என்று சொல்லி ஒரு படத்தை திரையிட்டார்கள். கீழே இருந்து தலைவா! என்றொரு குரல். அந்நடிகரின் பெயரைச் சொல்லி வாழ்க என்று கோஷமிட்டார். அந்தப் படம் நல்லாருக்கோ, இல்லையோ ஒட்டிவிடுவார்களோ என்றொரு ஐயம் ஏற்பட்டது. இன்னொன்று டீஸரை ஏன் ட்ரெய்லராக பெயரிட்டு வெளியிட்டார்கள் என்றொரு ஐயம். சர்தான் போடா! என்று இருவரும் எழுந்து வெளிவந்தோம். என்ன வாங்கலாம் என்ற யோசனையில் தம்பி இருந்தான் .

“பாப்கார்ன் வாங்கலாமா?”

“பாப்கார்ன் வேண்டாம். உடலுக்குக் கேடு என்று கேள்விப்பட்டிருக்கேன்.” என்றேன்.

”அப்ப ஸ்வீட் கார்ன் வாங்கலாம்” என்றவனின் மனநிலையைப் புரிந்துகொள்ளமுடியாமல் பொறுப்பை அவன்வசம் கொடுத்து டாய்லெட்டை நோக்கி விரைந்தேன். எது ஆண்களுக்கு, எது பெண்களுக்கு என்ற குழப்பத்தில் அலைந்து ஒருவழியாக உள்சென்றேன். சுத்தமென்றால் சுத்தம்… என்று மெச்சுகிற அளவில் இருந்த கழிப்பறை அது.  பிற்பாடு இருவரும் அரங்கினுள் சென்று அமர்ந்தோம். கைகளில் சூடான ஸ்வீட் கார்ன்.

அந்த படத்துக்குப் போயிருக்கலாம் என்ற மனநிலையில் இருந்த எனக்கு அவ்விளம்பரம் கண்ணில் பட்டது. இளையராஜாவின் ஹிட் பாடல்களில் ஒன்றான அப்பாடலை அப்படியே எடுத்து ஒரு விளம்பரம் போட்டார்கள். பின்னர் மீண்டும் திரைப்படம்.

அதற்கு மேல் ஆங்காங்கே சிரிப்பூட்டினாலும், ஒரு லாஜிக்கான மிஸ்டேக்கை கொஞ்சமாய் திருத்தியிருந்தார்கள். படத்தில் ஓரிடத்தில் வருடமொன்றைக் குறிப்பிடுகையில் தம்பி சொன்னான். அந்த வருடத்தைப் பார்த்துக்கோ.. என்றான். பிற்பாடு அந்த பிழையை சொல்லிக்காட்டினான் அவன்.

”படம் ஏற்கனவே பாத்துட்டியா?”

“இல்ல. சில சீன்கள் தெரியும்.”

ஒருவழியாக படம் முடிகையில் மனம் நிறையாமல் திரையரங்கை விட்டு வெளியே வந்தோம். இதுக்காகவா வந்தோம் என்று இருவருமே நினைத்தது உண்மை. இருந்தாலும் பொழுதுபோக்கு என்று சொல்லி ஆறுதல் அடையலாம். இதுக்கு அந்த படத்துக்கே போயிருக்கலாம் என்ற என் மனசாட்சி மேலும் உறுதியானது.

”டிக்கெட்ட பத்திரமா வச்சுக்கோ.”

”ஏன்?”

“போலிஸ் செக்கிங் இருக்கலாம்!”

“அப்படியா?”

“மணி 1 ஆயிடுச்சு. பின்ன?”

வழியில் பூராம் சில கேள்விகள் கேட்டுக்கொண்டே வந்தான் தம்பி.

“டேய்! இதுல இப்படி ஆராய்ச்சி பண்ண வேணாமே?”

“நீ முன்ன மாதிரி இல்ல!”என்று சொல்லிவிட்டு அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாட்டை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே வந்தான். உடல் முழுக்க எரிச்சலோடு நான் உடைமாற்றிவிட்டு உறங்கச் செல்கையில் மணி ’அதிகாலை’ 1.40.

இந்தப் படத்தையா இவ்வளவு இடைஞ்சல்களுக்கிடையே பார்த்தேன் என்று நான் பெற்ற அதே உணர்ச்சிகளை நீங்களும் இந்தப் பதிவையா இவ்வளவு நேரம் படித்தோம் என்று நினைத்துப் பெற்றிருந்தீர்களேயானால், எனது ஆழ்ந்த நன்றிகள்!!!

அனுபவங்களைப் பகிர
ஓர் விருப்பம்!
அவ்வளவே.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s