எனக்கான குறிப்புகள்

தொடர் விடுமுறை என்ற எண்ணம் மனதெங்கும் வியாபித்திருந்தது. அந்த வெள்ளிக்கிழமையின் காலையில் எனக்கு வந்த இரு தொலைபேசி அழைப்புகள் என்னுடைய பயணத்தின் போக்கை தீர்மானித்துவிட்டன. அன்று மாலை திருச்சியிலிருந்த சர்வதேச (பொறுத்தருள்க: அது ISO-9001) பேருந்து நிலையத்தில் கைச்சுமையோடு காத்திருந்தேன்.

இன்னொரு தோழரோடு பயணத்தை அங்கிருந்து தொடங்கியாக வேண்டும். அன்றுதான் தெரியும் ஓட்டுநர்களில் வெள்ளைச் சீருடைக்காரர்கள் இருப்பது. அரசு ஏசி-வால்வோ பேருந்தை இயக்குபவர்கள் அவ்வாறு அணிகிறார்கள். இருக்கட்டும். மேற்படி காத்திருந்து, அந்த தோழரோடு பயணமானேன் திண்டுக்கல்லுக்கு.

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா நடக்கிறதென நண்பர்கள் மூலம் அறிந்தேன். அது போதாமல், எஸ்.ரா-வின் வலைதளத்தில் வேறு குறிப்பிடப்பட்டிருந்தது அங்கே ஒருநாள் பேசப்போவதாக. ஆக, திண்டுக்கல்லுக்கு புத்தகக் கண்காட்சிக்கு போகும் வாய்ப்பு கிடைக்குமா? என்று யோசித்தேன். 14-ம் தேதி வரை இருக்கும் என்று தகவல் கிடைத்தது. கிளம்பியாயிற்று.

மறுநாள் காலையில் அப்பாவோடு ஒரு உரையாடல். எப்போதும் புத்தகங்கள் வாங்கும் முன் அப்பாவிடம் உரையாடுவது வழக்கம். அவராக எந்த தனிப்பட்ட பரிந்துரையும் சொல்வதில்லை என்றாலும் ஏதாவது எனக்குத் தேறும்!! என்ற நம்பிக்கையில் தொடரும் உரையாடல் அது. தம்பிக்கான புத்தகப் பரிந்துரை பற்றிய உரையாடலில் திடீரென குறுக்கிட்டது டான் நதி!

நானும், இன்னும் இரு தோழர்களுமாய்க் கிளம்பினோம். நடக்கிற தொலைவுதான் என்று நடந்தே போனோம். மைதானம் முழுக்க பள்ளிச் சிறுவர்கள் கூட்டம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிறைந்திருந்தது. ஒரே நல்லது என்னவென்றால், அவர்கள் அனைவரும் 5,6,7-ம் வகுப்பு படிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள்; எப்படியும் அவர்களால் எங்களுக்குத் தொந்தரவு வரப்போவதில்லை என்று நினைத்து நகர்ந்தோம்.

புத்தக அரங்குகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த மாதிரியே குறைவாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையோடு உள்புகுந்தோம். முதலில் ஈர்த்தது NCBH அரங்குதான்.

அரங்கின் பேரைக் கண்டவுடனே, கண்கள் அந்த புத்தகத்தைத் தேடத் துவங்கின. அவர்களும் அப்புத்தகத்தையும் முன் நிறுத்தியிருந்தார்கள்.

முன் சொன்ன அப்பாவுடனான உரையாடல் இவ்வாறு போனது.

“டான் நதி அமைதியாக போகிறது புத்தகம் தமிழில் கிடைக்குதுப்பா!”

“தோன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது….”

”NCBH publish பண்ணிருக்காங்கப்பா!”

“எவ்வளவு?”

“460-னு நினைக்கிறேன்.”

“விலை குறைச்சலா சொல்ற மாதிரி தெரியுது. ஆனா அது நல்ல புத்தகம் கண்டிப்பா படிக்கணும்.”

இப்படி தொடர்ந்த உரையாடல் மீண்டும் நினைவுக்குள் வந்தது. டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது என்ற அப்புத்தகத்தை ஒருமுறை கையில் ஏந்தி புரட்டினேன். அப்பாவிடம் சொல்லி வாங்கிக்கொள்ள திட்டமிட்டு நகர்ந்தேன். வேறெந்த அரங்கும் ஈர்க்கவில்லை. பல இடங்களில் மாணவர்களின் நெரிசல் வேறு. அவர்கள் அதிகமாய் பேசிக்கொண்ட புத்தகங்கள் ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ். சிறு பண்டல் போல காணப்பட்ட அப்புத்தகத் தொகுதிகள் பல கடைகளில் விற்பனைக்கு இருந்தது.

கிழக்கு பதிப்பகத்தில் சில புதிய புத்தகங்களைக் காண நேர்ந்தது. இலியட்-நூலின் தமிழ் பதிப்பின் அளவும், விலையும் பார்த்த மாத்திரத்தில் கீழே வைத்து விட்டேன். குட்டி நூல்களும் 40 ரூபாய்க்கு மாறி இருந்தது. நான் ரசித்துப் படித்த பல்வேறு நூல்களை மீண்டுமொருமுறை கண்டுகொண்டே போனேன். மருதன் எழுதிய சே குவேரா குறித்த இருநூல்கள் அருகருகே இருந்தது. இதுதவிர்த்து, த்ரில்லர் என்ற வகையில் நூல்கள் வெளியிடுகிறார்கள் என்பதை இப்போதுதான் அறிந்தேன். ஜெமோ-வின் உலோகம் நாவல் அவ்வரிசையில் காணக் கிடைத்தது. மற்ற நூல்களைத் தேடுவதற்குள் கூட்டம் சேர, அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம்.

போட்டித் தேர்வுகள் குறித்த நூல்கள் தற்போது அதிகம் விற்பனையாகி வருவதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அதைக் கண்ணாரக் கண்டும் விட்டேன்!

சாகித்ய அகாதமி அரங்கு கூட்டமின்றி இருந்ததால் விரைவாக அங்கே சென்றோம். கண்ணில் முதலில் பட்டது தகழி எழுதிய “செம்மீன்” வழக்கம்போல் சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பு. 120 ரூபாய். அத்தோடு சிறுகதைத் தொகுதி ஒன்றும் மலிவுவிலையில் வாங்கினேன். தள்ளுபடி போக குறைவான விலையே வந்தது. மொத்த விலையில் 30% குறைவு. மகிழ்ச்சியோடு அடுத்த அரங்கைத் தேடினேன். NBT அரங்கினுள் நுழைந்தேன்.

உறுப்பினர் அட்டையைத் தயாராக வைத்திருந்தேன். முதலில் பட்டது புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு. அதைக் கடந்து துழாவியதில் அகப்பட்டது சுவாமியும், நண்பர்களும். அத்தோடு முதல்முறையாக ஆங்கில புத்தகம் ஒன்றையும் தேர்ந்தெடுத்தோம். பிற்பாடு பணம் கொடுக்கையில் உறுப்பினர் அட்டையையும் முன் வைத்தேன். அதைப் பார்த்து அதிர்ந்தவர் என்னிடம் கேட்டார்

“NBT மெம்பரா?”

“ஆமாம்.”

“இத்தனை நாளில் ஒரு NBT மெம்பரையும் பார்த்ததேயில்லை.” என்றார்.

என்னை(யும்) NBT உறுப்பினர் அட்டை வாங்கச் சொன்ன அந்த தோழரை நினைத்துக் கொண்டேன். நன்றி.  அத்தோடு இன்னொரு மாணவன் அவரிடம் கேட்டான்.

“அண்ணே! 20 ரூபாய்க்கு புத்தகம் இருக்குமா?”

“இருக்கு. உள்ளே போய்ப் பாரு.”

“அண்ணே 10-15 ரூபாய்க்கு இருக்குமா?”

“இருக்குப்பா! உள்ள போய்ப் பாரு!”

புன்னகைத்தபடியே கண்காட்சியை சுற்றிவிட்டு நகருக்குள் வந்தோம். பிறகு நேராக வீட்டைச் சென்றடைந்தோம்.

அடுத்த ஆண்டு சென்னைக்கோ, மதுரைக்கோ, ஈரோட்டுக்கோ, திருப்பூருக்கோ, நெய்வேலிக்கோ செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக பதித்திருக்கிறது திண்டுக்கல்! வேறென்ன சொல்ல?

மதிய நேரத்தில் வீட்டை அடைந்த கொஞ்ச நேரத்தில் அப்பாவும் வீட்டுக்கு வந்தார், கையில் வார இதழ்களும், கூடவே ஒரு புத்தகமும்.

ஆவலோடு புத்தகத்தை வாங்கினேன். வேறென்ன? டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது!

பொறுமையாக அதன் உறையைப் பிரித்தேன். கையில் ஏந்திப் புரட்டினேன். மூன்று தொகுதிகள் இருந்தன. முழுமையான தொகுப்பா? என்ற சந்தேகம் இப்போதுவரை இருக்கிறது

அப்பா அப்புத்தகத்தை ஒரு NCBH கடையில் கேட்டு வாங்கியிருக்கிறார். அப்புத்தகத்தைப் பற்றி விற்பனையாளரே வியந்து கேட்டுள்ளார். அப்புத்தகத்தை மட்டும் கேட்டு சில அழைப்புகள் அவருக்கு வந்ததாகவும். அதிலும் குக்கிராமத்திலிருந்து கூட கேட்டதாகவும் ஆச்சர்யத்துடன் கூறிய கடைக்காரருக்கு புத்தகம் குறித்து அப்பா கொஞ்சம் சொல்லியிருக்கிறார். எங்களுக்கும் கொஞ்சம் சொன்னார். மிச்சத்தைத் தேடியும், படித்தும் அறிய வேண்டும்!

இந்த ஆண்டு ”தாய்” நாவல் ஏற்படுத்திய உற்சாகத்தினை, உணர்வினை அடுத்த ஆண்டு டான் நதி ஏற்படுத்திவிடும் என நம்புகிறேன்.

பின்னர், நகரைச் சுற்றி ஒரு குறும்பயணமும், நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சிறு உரையாடலுமாய் பொழுது கழிந்தது. நண்பர்களுடன் அதிகம் பேச நேரமும், சூழலும் அமையவில்லை. இரவில் அப்பாவும் அம்மாவும் ரொம்பவே பேசினார்கள். சில இலக்குகள் காத்திருக்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தனை தெளிவுடன் உறங்கியது அன்றுதான். இனியும் அப்படித்தான்!!

நண்பர்களிடம் விசாரித்தும், ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படம் எங்கே ஓடுகிறது என அறிய இயலவில்லை. அதை அறிந்த பிற்பாடு திரையரங்கு செல்லும் திட்டம் கைவிடப்பட்டது 😦

சில வருடங்களுக்குப் பிறகு அப்பாவின் மேடைப் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நழுவ விட்டுவிட்டேன். இன்னொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்றெண்ணிக் காத்திருக்கிறேன்!

தம்பி அதிகம் கேட்டுக்கொண்டதன்படி இன்னொரு படத்திற்கு நாங்கள் இருவர் மட்டும் செல்ல திட்டமிட்டோம். அப்படம் நல்லதொரு திரையரங்கில் ஓடியது முக்கியக் காரணம்! அதில் பாருங்கள்.. அத்திட்டம் போட்ட அடுத்த 10-வது நிமிடத்தில் இருந்து விதியின் விளையாட்டு துவங்கியது.

அதைத் தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் இனிதே கழிந்தன. வீட்டு அலமாரிகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அதைப் பார்க்கவே கொள்ளை இன்பம்தான்! ஏறத்தாழ 300 புத்தகங்களைக் கொண்ட எங்கள் வீட்டு நூலகத்தில் முதன்முதலாக என் கையால் சிவகாமியின் சபதம் நூலை வைத்தேன். அதுதான் எங்கள் வீட்டில் உள்ள ஒரே  தமிழ் வரலாற்றுப் புதினம் .

அதைப் பரிசாக எனக்களித்த தோழர்களுக்கு மிக்க நன்றி. அவர்கள் இதைப் படிக்கையில் மகிழ்வார்கள் என நம்புகிறேன்.

மேன்மையான நிதானத்தை இந்நாட்களும், பயணங்களும் தந்திருப்பதாய் நம்புகிறேன். அதன் பலனை முழுமையாக அறுவடை செய்துவிட்டால் போதும். வேறொன்றும் வேண்டாம்!

இனி அதிகம் இங்கே எழுதும் வாய்ப்பு கிடைக்காது என்றே நினைக்கிறேன். முன்னமே எழுதி வைத்திருக்கும் சில பதிவுகள் வரக்கூடும். அவ்வப்போது எழுத நினைப்பதையெல்லாம் ”எழுதும் இடத்தில்” பகிர்கிறேன்.

3 comments

 1. அம்மாடி (எம்புட்டு படிக்குற… எவளோ அழகா எழுதுர…) அப்பாடி (பேர் எங்கையும் அடிப்படல)

  தாயும், நதியும் உங்களுக்கு உற்சாகம் அளிப்பதில் மகிழ்ச்சி தான். (அதையும் தமிழில் வாங்கிப் படிப்பது பாரட்ட தக்கது) ஆனாலும் தாய் நதியான தமிழ் வரலாறு மற்றும் இதர நூல்கள் ஏன் உங்கள் பிரதாண பட்டியலில் எப்பவுமே இல்லை ? இந்தியன் என்பதிலும், தமிழன் என்பதிலும் உற்சாகமூட்டும் தருணங்கள் பல உள்ளன. 2015 அதற்க்கு வழி வகுக்கட்டும்.

  1. ஏற்கனவே நான் இதுபற்றி எழுதிவிட்டேன் ”எழுதும் இடத்தில்”.
   http://myinks.wordpress.com/2013/05/05/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

   எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகங்களைத் தான் என்னால் படிக்க இயலும். தவிர ரஷ்ய இலக்கியங்கள் யாவும் தரத்தில் குறைந்தவை அல்ல. உலகளவில் அதிகம் நேசிக்கப்பட்ட நாவல்கள்.

   புதினங்கள், குறுநாவல்கள்தான் இல்லையே தவிர மற்ற நூல்களுக்கு பஞ்சமில்லை. அதனால்தான் நான் கதை புத்தகங்களை அதிகம் வாங்க முற்படுகிறேன்.

   பல நூல்கள் 1970-80 காலத்தியவை. இப்போதெல்லாம் எவர்க்கும் எளிதில் கிட்டாத தலைப்புகளில் அமைந்த அரிய நூல்கள் உண்டு.

   டான் நதி நூலினைத் தொடர்ந்து கன்னிநிலம் என்றொரு நாவல் இருக்கிறதாம்.
   அதையும் படித்துவிட்டால், ரஷ்ய இலக்கியக் கடலினுள் பாதம் நனைத்த பாக்கியம் பெறுவேன்.

   “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்றான் பாரதி. (அப்பாடா! 😉 )

   1. அதே பாரதி சொன்ன சில வரிகள்
    “பாரத நாடு பழம்பெரும் நாடே
    பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.”

    ” ……– செல்வம்
    எத்தனை யுண்டு புவிமீதே — அவை
    யாவும் படைத்த தமிழ்நாடு

    கல்வி சிறந்த தமிழ்நாடு — புகழ்க்
    கம்பன் பிறந்த தமிழ்நாடு — நல்ல
    பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
    பாரெங்கும் வீசும் தமிழ்நாடு.

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே — தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — நெஞ்சை
    அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
    யாரம் படைத்த தமிழ்நாடு.”

    (பாரது கடலில் இருந்து சிறு துளிகள்… தமிழ் கடல் இதை விட பெரிது ;))

    இந்த மொழி பெயர்த்தல் பற்றி பாரதி (மட்டும்) பேச தகுதியானவன், ஒன்பது மொழிகளில் புலமைப் பெற்றவன். கம்பன், வள்ளுவன், சிலம்பு படித்துவிட்டு இந்த வரியை கோட் செய்தால் நலமாகும்.

    எளிமயாக கிட்டும் நூல்களையும் வாசிக்கலாம். தாய் மொழிக் கடலில் தடம் பதியுங்கள் என்பதே என் கருத்து !

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s