நூல் பல வாசி!

சில புத்தகங்களை எந்த பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என்று அடித்து சொல்லலாம். விறுவிறுப்பான நாவல்களை வேண்டுமானால், சரியான இடத்தில் இண்டர்வெல் போல நிறுத்திப் படிக்கலாம். மற்றபடி பல புத்தகங்கள் இந்த வகையில் சேராது. அதிலும், சிலரின் இயல்பு வேறு. தொடர்ச்சியாக புத்தகங்களைப் படிக்க ஏதுவாக நேரம் அமையாது போகலாம். அதே நேரம், தொடர்ந்து புனைவுகளாகப் படிக்கிறவர்களுக்கும் ஒரு மாறுதல் தேவையெனில் மாற்று தேடலாம்.

அவர்களுக்கு மாற்றாக நான் பரிந்துரைப்பது கட்டுரை நூல்கள். கட்டுரைத் தொகுப்புகள் நிறைந்த நூலைப் படிக்கத் தேர்ந்தெடுக்க பல காரணங்களைச் சொல்லலாம். சிலவற்றை இங்கே எடுத்துக் கொள்கிறேன்.

எப்போது வேண்டுமானலும் படிக்கலாம். எவ்வித தயக்கமும் இல்லாமல், படிக்கலாம். எங்கிருந்து வேண்டுமானாலும், எந்தப் பக்கத்திலிருந்தும் தொடங்கலாம். நாவல்களில் ’இவ்வசதி’ அறவே இல்லை. சிறுகதைத் தொகுப்புகள் தனி.

ஏனென்றால் அவற்றை படிக்கவும் உணரவும் ஒரு காலமும், சூழலும் தேவை. குறிப்பாக என்னைப் போன்றவர்கள் அந்த ரகம்தான். எனக்கு ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படிக்க சில சூழல்கள் அமைய வேண்டுமென்பேன். அதனாலேயே, பல புத்தகங்களைத் தாமதமாக, சில புத்தகங்களை மிகத் தாமதமாக, படிக்க நேரிட்டது.

சரி கதைக்கு இல்லையில்லை, கட்டுரைக்கு வருவோம்.

கட்டுரைத் தொகுப்புகளில் என்ன படித்தாலும் ஏதாவது ஒரு விடயம் நம் சிந்தனைக்குள் சிக்கி மூளைக்கு வேலை வைக்கும் இப்படி நமக்கு நடந்திருக்கிறதே என்றோ, ஓகோ, இப்படியெல்லாம் நடக்கிறதா என்றும் தோன்றும், இதில் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தனி. என்னைக் கேட்டால் தமிழில் நூற்றுக்கு எண்பது தன்னம்பிக்கை புத்தகங்கள் குப்பையான நடையில், எழுதப்படுகின்றன. சாதித்தவன் இப்படி செய்தேன் என்று எழுதலாம். தோற்றவன் கூட இப்படி செய்யக் கூடாது என்று எழுதலாம். ஆனால்.. சரி விடுங்கள். இங்கேயும் சில தன்னம்பிக்கை நூல்களைத் தருகிறேன். அவற்றை உங்கள் own risk-ல் படியுங்கள். இல்லையேல், பொதுவான நூல்களைத் தைரியமாக படிக்கத் தொடங்குங்கள்.

வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தொடர்ந்து பல கட்டுரை நூல்களை எழுதியிருக்கிறார் என நம்புகிறேன்., கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 எழுதியிருப்பார். இப்போது கூட தினத்தந்தியில் எழுதி வருகிறார்.

அவர் எழுதிய சில நூல்கள் எங்கள் வீட்டு நூலக அலமாரியையும் அலங்கரிக்கின்றன. படிப்பது சுகமே! என்ற புத்தகத்தைப் படிக்க சுகமாகவே இருக்கும். தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த கட்டுரைகள்/ வழிமுறைகள் அடங்கிய நூல். தற்போதைய மதிப்பெண்/மனப்பாட கல்விமுறைக்கு இப்புத்தகம் ஒத்துவராது. இது அதிக மதிப்பெண் வாங்க உதவும் நூல் அல்ல என்றும் அந்நூலிலேயே எழுதியிருப்பார்கள்.

அடுத்ததாக ஏழாவது அறிவு என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் 3 பாகங்கள் கொண்ட தனித்தனி நூல்கள். எளிய வாசிப்புக்கு எனது பரிந்துரை மூன்றாம் பாகம். கூர்ந்த வாசிப்புக்கு முதல் பாகத்தை எடுக்கலாம். எந்த பாகத்தையும், எந்த அத்தியாயத்திலும் படிக்கலாம். தொடர்ச்சி என்று கிடையாது. குறைந்த அளவு சிந்தனை தெளிவு கிடைக்கலாம்.

அவரின் அனுபவங்களும் உரையாடல்களும் நிரம்பிய ஓடும் நதியின்  ஓசை (2 பாகங்கள்) நூலும் இதே வகை. ஆனாலும் தங்குதடையற்ற நடை. இறுதியாக, முத்தாய்ப்பாக ஒரு சொல்லாடல் என வசீகரிக்கும் கட்டுரை புத்தகம். இதுதவிர ..எஸ் தேர்வு அணுகுமுறைகள் நூலையும் அதைகுறித்து அறிய விரும்புபவர்கள் வாங்கலாம். இவையனைத்தும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) வெளியீடு.

சிபி. சாலமன் எனக்கு மிஸ்டர் பாப்புலர் நூலைப் படித்ததன் மூலம் அறிமுகமானார். அதன் பின் 3 நூல்கள் படித்துவிட்டேன். தன்னம்பிக்கை நூல்களுக்கான நடையில் சற்று தூக்கலான நடை அமைத்து படிக்கும்படி எழுதியிருப்பார். மிஸ்டர் பாப்புலர் நூல் எல்லோருக்கும் படிக்க வேண்டியதன் தேவை இருக்காது என்பது என் கருத்து. இதே ஆசிரியர் எழுதிய குஷி-100 நூலை எல்லோரும் படிக்கலாம். 100 குட்டி, குட்டி வழிமுறைகள் அடங்கிய சுவாரசியமான புத்தகம். இதுதவிர நான் படித்து ஓரளவில் ’செயல்படுத்திப்’ பார்த்த புத்தகம் இவர் எழுதிய 5S! ஜப்பானிய சூத்திரங்கள் ( செய்ரி, செய்டன், செய்சோ, செய்கெட்ஸு, ஷுஸுகே ) பற்றிய அறிமுக நூல். இந்த 3 நூல்களும் கிழக்கு பதிப்பக வெளியீடு.

ஈழம் குறித்து அறிவதற்கு எண்ணற்ற நூல்கள் உண்டு. தற்போதைய தமிழ் வாசிப்புச் சூழலில் நிறைய நூல்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும் தரம் சிறப்பாகவே உள்ளது. அதில் ஒரு நூல் இது. 2009-க்கு சற்று முன் இலங்கை சென்றுவந்த ஓவியர் புகழேந்தி அவர்கள் எழுதிய பயணக்கட்டுரை வடிவிலான புத்தகமே, தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும். கவித்துவமான தலைப்பு என்றாலும் நூலுக்குள் சொல்லவந்த கருத்துகள் வன்மை மாறாமல் சரியாக எழுதப்பட்டிருப்பதாக படித்தவர்கள் எனக்கு பரிந்துரைத்த நூல் இது. தமிழீழத்தில் தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைக்கச் சென்ற ஓவியரின் பார்வையில் மன உணர்வுகளை அப்படியே தந்துள்ளார். “தமிழீழத்திற்குச் சென்று உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் துடிப்பவர்கள், இந்நூலைப் படிப்பார்களானால், நிச்சயம் மனநிறைவு அடைவார்கள்” என்று பழ. நெடுமாறன் அவர்களால் பாராட்டப்பட்ட நூல். நூலின் உள்ளேயே இதன் விமர்சனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு ஆட்டோ ஓட்டுநரும் அடக்கம். தோழமை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

கடிதங்களைச் சேகரிப்பது என்பது சுவாரசியமான ஒன்று. கடிதங்களைப் படிப்பதில் எல்லோருக்கும் உவகை இருக்கும்தான். வரலாற்றில் எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகள் இருந்திருக்கின்றன. மூதறிஞர் வெ. சாமிநாதசர்மா அவர்கள் எழுதிய வரலாறு கண்ட கடிதங்கள் என்ற சிறுநூல் சில கடிதங்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. நூல் இப்போது அச்சில், வெளியீட்டில் உள்ளதா? என்று தெரியவில்லை. எனக்குக் கிடைத்த பிரதி 1998-ம் வருடப் பதிப்பு. பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலை நூலகங்களில் கிடைத்தால் வாசிக்க மறவாதீர்.

கடிதங்களை விட பேச்சுக்கு மதிப்பு அதிகம். அதிலும் செயல்மிகு தலைவர்கள் பல்வேறு தருணங்களில் ஆற்றிய உரைகள் இன்னும் பிரசித்தம். பொன்.சின்னத்தம்பி முருகேசன் எழுதிய உலகப் பேருரைகள் எனும் நூல் அந்த வாய்ப்பை நமக்குத் தரும். கி.மு 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் பெரிக்கில்ஸ் முதல் நெல்சன் மண்டேலா வரையான 25 பேரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள் இப்புத்த்கத்துள் இருக்கின்றன. இந்தியக் கவிஞர் தாகூர் அமெரிக்காவில் இந்திய தேசியவாதம் குறித்து 1925-ல் ஆற்றிய உரையும் இதில் அடக்கம். சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

சுஜாதா அவர்களின் அணிந்துரை மூலமாக எனக்கு எழுத்தாளர் லா.ச.ரா அவர்களின் நூல்கள் மேல் ஒரு விருப்பம் இருந்தது. அவரின் குறுநாவல் ஒன்றைப் படித்திருக்கிறேன். கேரளத்தில் எங்கோ ஓரிடத்தில் வசிக்கும் ஒரு முதியவரின் நினைவுகளும், வாழ்வும், அனுபவங்களும், சமூக நிலைகளும் குறித்த நூலே கேரளத்தில் எங்கோ
எதிர்பாராத நடை, பாத்திர அறிமுகங்கள், சுளீர் உரையாடல் என நான் படித்த அவரின் முதல் புத்தகத்திலேயே ஈர்த்துவிட்டார். உயிர்மை பதிப்பக வெளியீடு இந்நூல்.

பெங்களூரில் (1916) பிறந்து 18 வயதில் எழுதத் தொடங்கிய இவரின் முதல் சிறுகதை ஆங்கிலத்தில் வெளிவந்தது. 90 வயது வரை வாழ்ந்த இவர் சென்னையில் (2007) மரணம் அடைந்தார். இவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை.

இந்நூலின் மின்பிரதி இதோ: கேரளத்தில் எங்கோ
இன்னும் இன்னும் நிறைய வாசிக்க காத்திருப்பும் அவசியமானதே!

ஆசிரியர்: தமிழ்

எழுத்து, வாசிப்பு இரண்டும் பிடிக்கும். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் படிப்பதை விரும்புவேன். எப்போதாவது இவற்றை எழுதுவேன். மொழியியல், வரலாறு, தொழில்நுட்பம் இவற்றில் இப்போதைக்கு ஆர்வம். இனி எப்போதைக்குமே!

One thought on “நூல் பல வாசி!”

  1. இத படிக்கும் போதே எனக்கு தல சுத்துது… எவளோ படிக்குற… எவளோ (அழகா) எழுதுற…. கலக்குற ! 🙂

    / பல புத்தகங்களைத் தாமதமாக, சில புத்தகங்களை மிகத் தாமதமாக, படிக்க நேரிட்டது/ மக்களே இது எல்லாம் சுத்த பொய், நம்பாதீங்க ப்ளீஸ்!

மறுமொழியிட