இரகுவும், ராபியும்!

சில மாதங்களுக்குப் பிறகு இவ்வருடம் வெளிவரும் எனது மூன்றாவது சிறுகதை. முந்தைய இரு சிறுகதைகளில் முதலாவது என் ஆத்ம திருப்திக்காக. அதில் எந்த குறையோ, நிறையோ நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் கதைக்கு முடிவு சரி இல்லை என்றார்கள் சிலர். கதையின் முடிவு மோசமாயிருக்கிறதென்றும், சரியாக எழுத பயிற்சி தேவை என்றும் வந்தது. ஏகப்பட்ட கதைகளைத் தழுவியிருப்பதாக நெருக்கமான அன்பர் சொன்னார்.

 இதன் பின் நெருங்கிய நலவிரும்பிகள் இருவர் தொடர்ச்சியாக எனக்குத் தேவையான அறிவுரைகள், ஆலோசனைகள் எல்லாம் தந்து கதையென்றால் எப்படியெல்லாம் இருக்கலாம். என்று பலவாறாக உரையாடி தெளிவுபடுத்தினர். அதன் விளைவாக ஒரு நாள் யோசித்த சில நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதி முடித்த கதை. இந்த கதைக்குள் ஒரு கதை இருக்கிறது. அதாவது அந்தக் கதையாவது  உங்களை திருப்தி செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கதை முடிந்ததும் இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

சமர்ப்பணம்

என்னால் (லும்) ஒரு சிறுகதை சிறப்பாக எழுதிவிட முடியும் என நம்பிக்கை வைத்து ஆலோசனை கூறிய அந்த ’இருவருக்கு’.

********************************************************************************

பசி என்றுகூட ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அகோரப் பசி என்றோ, இல்லையென்றால் வேறு ஏதாவது பொருத்தமான வார்த்தையில்தான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக எனக்கு பசி இல்லை. அதற்கும் மேலான அதீத உணர்வு என் உடலின் செல்களை அரிக்கத் தொடங்கிவிட்டது.

எதுவெல்லாம், எப்போதெல்லாம் நடக்க வேண்டாம் என எண்ணுகிறோமோ, அவையெல்லாம் அவ்வப்போதே நிகழ்ந்துவிடுகின்றன. இன்றைக்கு முழுக்க வேலைப்பளுவில் சிக்காமலிருந்தால் நல்லது என எண்ணினேன். அது நடக்கவில்லை. காலையிலேயே அலுவலகப்பணியாக தொலைதூரப் பயணம். அதிலும் பேருந்துகளே தடம் பதிக்கத் தயங்கும் சில சிற்றூர்களில் ஒன்றான அந்த ஊருக்கு என்னை அனுப்பினார்கள்.

ம்ம்ம்.. இதுதான் விடயம்.

இடைவிடாத பணிகளின் பொருட்டால் இயல்பாகத் துவங்கிய மதிய நேரத்துப் பசி மாலை வேளையாகிப் போனதால் வயிற்றைக் கிள்ளத் தொடங்கிவிட்டது. திடீரென்று எங்கிருந்தோ ஒலித்த மயிலின் அகவல் காதில் விழ இன்னும் வலியோடு வயிற்றை அரித்தது ஹைட்ரோகுளோரிக். எல்லாவற்றையும் கடந்து ஒரு உணவகத்துக்குள் நுழைந்த என்னை சப்பாத்தி மட்டும்தான் இருக்கு! என்றபடி ஒரு சர்வர் வரவேற்றார். கடிகாரத்தை பார்த்தேன்.  மணி ஐந்தை தொட எத்தனித்தது.

“புரோட்டா இல்லியா?” என்றேன்.
“இன்னைக்கு லேட்டாகும் சார். அரை மணிநேரமாகும்.” என்று பதில் வந்தது.

சர்வர்களே அரைமணிநேரம் என்று சொன்னால், எவ்வளவு நேரமாகும் என்பதை நானே கணித்து, 4 சப்பாத்திகள் போதுமென்று சொன்னேன்.

சர்வர் சொல்லிவிட்டுப் போன தொனியை ஆராய்ந்தேன்.

“இன்னைக்கு லேட்டாகும் சார். அரை மணிநேரமாகும்.”

இன்னைக்குதான் லேட்டாகணுமா? என்று மனம் வயிற்றை இன்னொரு முறை பிராண்டியது. நல்ல வேளையாக சப்பாத்திகள் வந்து சேர்ந்தன.

இரண்டு முழு சப்பாத்திகளை விழுங்கியப் பின் ஒரு உணர்வு வந்தது. அப்போதென்று அடித்த காற்றின் ’ஜிலீர்’ தன்மை உடலெங்கும் பரவியது. இன்று காலையும் சரியாகச் சாப்பிடவில்லை. மதியம் சுத்தமாக ஒன்றும் சாப்பிடவில்லை. தொடர்ந்து உடல் நோகும் அளவு அலைச்சலில் உழன்றவனால்தான் அந்த சப்பாத்தியும், காற்றும் தந்த ஜிலிர்ப்பை உணர முடியும்.

சற்று நேரத்தில் காற்றின் உஷ்ணம் ஏறத் தொடங்கியது. என்ன காரணம் என்பதை உணரத்தொடங்கிய தருணத்தில் இருந்து உஷ்ணம் என்னையும் தாக்கத் தொடங்கியது.

என்ன செய்வதென்றே புரியாத வண்ணம் ஒருமாதிரி விழிக்கத் துவங்கினேன்! ஆம். அப்போதுதான் உணரத் தொடங்கியிருந்தேன். என் பர்ஸைக் காணவில்லை. எவனாவது திருடியிருப்பானோ? இல்லை… இல்லை. தவறுதலாக அலுவலக மேசையினுள் வைத்திருப்பேன் என்றொரு ஞாபகம். ஓ! ஒரு மங்கலான நினைவு வருகிறது. இரகுதான் என்னிடம் பர்ஸை வாங்கினான். அவன்தானே வாங்கினான்? ஆம். அவனேதான். அவனைத் தவிர வேறு யாரிடமும் தந்திருக்க வாய்ப்பும் இல்லை. சூழ்நிலையும் இல்லை. பாவிப்பயல்! என் செல்போனை வேறு வாங்கிக்கொண்டான். இப்போது அவசரத்துக்கு அழைக்கலாம் என்றாலோ, போன் வேறு இல்லை.

இவ்வளவு நேரமும் யோசித்ததில், அடங்கியது போலிருந்த பசி மீண்டும் எட்டிப்பார்த்தது. தட்டில் இரண்டு சப்பாத்திகள் மிச்சமிருக்கின்றன. பொறுமையாக சாப்பிட்டேன். பேசாமல், சர்வரிடம் போன் வாங்கி இரகுவை அழைக்கலாமா? இல்லை இன்னும் கொஞ்சநேரம் பொறுத்திருந்தால் இரகுவே வந்துவிடுவான் என்றெல்லாம் தோன்றியது.

ரெண்டுமே மோசமான யோசனைகள்தான் என்றும் தோன்றியது. என்ன செய்யலாம் என்றபடி சப்பாத்தியைக் கிள்ளி வாயில் வைத்தேன். அவ்வளவு நேரமாய் உணராத இன்னொன்றை அப்போது உணர்ந்தேன். காலில் என்னமோ தட்டுபட்டாற்போல இருந்தது. என்னதான் என்று பார்க்கலாமென்று, ஷூவை (ஷூ அணிந்த காலை) சற்றே நகர்த்தினேன். கொஞ்சம் முந்தி அதைப் பார்த்திருந்தேனேயானால், ஏதோ ஹோட்டல் பில் போல என நினைத்திருப்பேன்.

பர்ஸ் தொலைத்தவன் கண்ணுக்கு, பார்க்கிறதெல்லாம் பணமாய்த் தெரியும் என்பதைப் போல எனக்கு அது ஏதோ ரூபாய் நோட்டாய் இருக்கலாம் என்று பட்டது. மிகவும் சிரத்தை எடுத்து கவனமுடன் அந்த பணத்தை எடுத்துப்பார்த்தேன் ஆனந்தமும், அதிர்ச்சியும் ஒருசேரத் தாக்கினாற்போல அதைக் கையில் எடுத்துப் பார்த்தேன்.

முழுதாக ஐம்பது ரூபாய். என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. அந்த நேரம் எனக்கு என் நிலைதான் பெரிதாகத் தெரிந்தது. மறுநொடி எனக்கு பணத்தை எடுக்கத் தோணவில்லை. இத்தனை நாட்கள் இல்லையில்லை இத்தனை வருடங்கள் நல்லவனாக எடுத்த பேரெல்லாம், வீணாகி விடுமே? மனம் களங்கம் அடையாதா? என்றொரு உறுத்தல். அடுத்த நொடி இங்கிருந்து கவுரவமாக வெளியேற வேறு வழி உள்ளதா? இல்லையே! என்று ஒரு எண்ணம். ஒருவேளை இது ஆண்டவன் கிருபை என்று எடுத்துக் கொள்ளலாமா? ச்சீச்சீ… யாரோ ஒரு வறியவரின் பணம்தான் இது. எந்தப் பணக்காரன் இங்கு உண்டுவிட்டு பணத்தைத் தொலைக்கிறான்? அதுவும் அழுக்கேறிய பழைய நோட்டு.

சில நிமிடங்களில் மனம் மாறி சாப்பிட்டு முடித்தவுடனே “இலைய எடுத்துட்டு போங்க சார்” என்ற சர்வரின் உத்தரவுக்கு இணங்கி, அதைத் தொட்டியில் வீசிவிட்டு கை கழுவினேன். முகம் சற்று மலர்ந்தாற்போல இருந்தது. என்னுடைய பில்லை அந்த ஐம்பது ரூபாயைக் கொண்டு கட்டிவிட்டு கடையைவிட்டு வெளியேறினேன். வயிற்றில் பசி இல்லாததால், ஒருபக்கம் நிறைவு இருந்தாலும், அடுத்தவர் பணம் நமக்கேன்? என்றொரு வாட்டலும் மனதை மீண்டும் அரித்தது.

அலுவலகத்தில் இரகுவின் இடத்துக்குப் போனேன். என் போனில் ஃப்ரூட் நிஞ்சா விளையாடிக் கொண்டே,  “என்னடா! சாப்பிட்டு முடிச்சிட்டியா?”  என்றான். நடந்ததையெல்லாம் அவேஸமாக ச்சை ஆவேசமாக  சொல்லிவிட்டு உர்ரென அவனைப் பார்த்தபடியே பேச்சைத் துவக்கினேன்.

”எல்லாமே உன்னாலதாண்டா! ஒழுங்கா பர்ஸையும் வச்சுக்க விடல.. செல்போனையும் எடுத்துக்கிட்ட..”

”இப்ப… உனக்கு என்ன பிரச்சினைனு சொல்லு. நல்லா திருப்தியாதானே சாப்பிட்ட?”

“அடுத்தவன் காசுல, அவன் அனுமதியில்லாம…….”

“டேய்…டேய் நிறுத்து… பொறுமையா நான் சொல்றத காதுல வாங்குறியா?”

“சொல்லு.”

இருவரும் மேசையின் எதிரெதிரே அமர்ந்தோம். இரகு ஆரம்பித்தான்.

“ஒரு கதை சொல்றேன். குட்டிக்கதைதான். அவசரப்படாம கேட்டுட்டு சொல்லு”

“ஒரு ராபி… துறவினு வச்சுக்கோ… அவர் ஒரு இளைஞனிடம் கேட்கிறார். “நீ தெருவில் போகிற வழியில் ஒரு பணப்பையைப் பார்க்கிறாய். அப்போது என்ன செய்வாய்? –னு கேக்குறார். அவன் இப்படி சொல்றான்…”

“அந்தப் பையை ஒரு நிமிடம் நான் வைத்திருப்பதும் தவறுதான். அதை உரியவர்களிடம் ஒப்படைத்துவிடுவேன்-ங்கிறான். ”

“அதுக்கு துறவி சொல்றார். நீ ஒரு முட்டாள்!”

“இப்ப நீ முட்டாள்னு நினைச்சுக்காத! இன்னும் இருக்கு.”

“இன்னொருத்தன் அதே கேள்விக்கு, மற்றவர்கள் யாரும் கவனிக்கலைனா, நானே எடுத்துக்குவேன் –னு சொல்றான். ”

“அதுக்கு அவர் “நீ ஒரு பேராசைக்காரன்”னு சொல்லியனுப்புறார். ”

“இன்னொருத்தன் அதே கேள்விக்கு, கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு,  நானே எடுத்துக்குவேன் இல்லாட்டி சில சமயம் உரியவர்களிடம் கொடுப்பேன். அது அந்த சூழலைப் பொறுத்த்து –னு சொல்றான். ”

”ராபி எதிர்பார்த்ததும் அதுமாதிரியான  பதிலைத்தான். அவர் பாராட்டி அவனை அனுப்பிட்டார்.”

நான் புரிந்தும், புரியாதவன்போல் அவனைப் பார்த்தேன். அவனே தொடர்ந்தான்.

இங்க பார். அந்த பணத்தை நீ எடுத்து சரியான ஆளிடம் கொடுப்பது அவ்ளோ சாத்தியமானது இல்ல. தெரிஞ்சுதா? பேஸிக்கா நீ அவ்ளோ நல்லவனும் இல்ல.. முட்டாளும் இல்ல” என்றான்.

“ம்ம்” என்றேன்.

“அதேபோல் அதை உடனே உனக்கு அபகரிக்கணும்னு தோணல. ஸோ, நீ பேராசைக்காரனும் இல்ல” என்றான்.

சற்று தெளிவுடன் அவன் சொல்வதைக் கவனித்தேன்.

”கடைசியா அந்த சூழல்ல உனக்கு அந்த பணம் தேவைப்பட்டுச்சு. அதனால அதை உனக்கு சாதகமாக்கிக் கிட்ட அவ்ளோதானே! நீதாண்டா உண்மையான மனுஷன்”

ஒரு நீண்ட பிரசங்கம் நிகழ்த்தி முடித்தவன்போல் என் முன்னே பெருமிதமாக அமர்ந்திருந்தான் இரகு. எனக்கும் உள்ளம் கொஞ்சம் ஆறுதலடைந்தது. சற்று நேரத்தில் புத்தி யோசித்தது.

”நான் மனுஷனா மாறுறதெல்லாம் இருக்கட்டும். இனிமே என் அனுமதியில்லாம என் போனையும், பர்ஸையும் எடுக்காதடா! நான் சாதாரணனாவே இருந்துட்டு போறேன்.” என்றபடி படாரென பேசி நகர்ந்தேன்.

இரகுவின் முகத்தில் ஈயாடவில்லை. எனக்குள்ளிருந்த ராபி சத்தமாகச் சிரிக்கத் தொடங்கியிருந்தார்.

*****************************************************************

ராபி என்றால். யூத மதத்தில் துறவி, தலைவர் போன்றவர். அவர்களைப் பற்றிய கதை ஒன்றையும் இதில் இணைத்தேன். இக்கதை கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் படித்த ஒரு கதை. ஏதாவது கதை எழுதலாம் என்று தீர்மானிக்கையில் என் எண்ண ஓட்டங்களுக்கு வலு சேர்ப்பதாய் வந்து நின்ற கதை அது. உரையாடல் வடிவில் எளிமையாகவே அக்கதையை எடுத்தாண்டுள்ளேன்.

Advertisements

6 thoughts on “இரகுவும், ராபியும்!

 1. வணக்கம் ,

  நல்ல நம்பிக்கையுடன் கதையின் ஆரம்பம் !வாழ்த்துக்கள் உங்கள் மூன்றாம் சிறுகதைக்கு தமிழ்.மகிழ்ச்சியும் கூட….

  கதையின் ஆரம்பம் சற்று விறுவிறுப்புடன் ஆரம்பிக்க வில்லை என்றாலும் உங்கள் நடையில் விறுவிறுப்புடன் கொண்டு வந்துவிட்டீர் !
  kudos

  கதைக்குள் கதையாக அமைத்து நல்ல கருத்தை உள்ளடக்கிவிட்டீர் 🙂 மேலும் நிரம்ப எழுத வாழ்த்துக்கள் தமிழ் .

  நன்றி,
  தோழி

  1. கருத்துகளுக்கு நன்றி.
   எல்லா கதைகளும் விறுவிறுப்புடன் ஆரம்பிக்க வேண்டியது அவசியமில்லைதானே!
   இதெல்லாம் பிறை நிலாக் கதைகள் குறைகளாகத் தான் தெரியும் முழுநிலா வெளிவந்து மகிழ்ச்சி செய்யத்தான் போகிறது.

   இன்னும் நிரம்ப எழுத எனக்கும் விருப்பமே.

   நன்றி.

 2. ஆரம்பம், நடை, உரையாடல், நிகழ்ச்சி, உணர்வுகள் எல்லாம் நலம். கருவில் எனக்கு உடன்பாடு இல்லை. உள்ள இருக்கும் கதையை நியாயப்படுத்தவே எழுதிய கதை போல உள்ளது. எதிர்பார்பை எட்டவில்லை! அடுத்த கதைக்காக (என் வாசிப்பு) காத்திருப்பு தொடரட்டும்… சீக்கிரம் அடுத்தத போடவும் 🙂

  1. ராபி கதைக்காக, மேலே ஒரு கதையாக எழுத நினைக்கவில்லை.
   கதையின் நாயகனுக்கு ஒரு நாளில் நேரும் அனுபவங்களாகச் சொல்லலாம். இந்தக் கதையை யோசித்த கணநேரத்தில் மனதில் தோன்றிய அந்த ராபி கதையையும் துணைக்கு வைத்துக் கொண்டேன்.
   அதை நேரடியாக சொன்னால், எல்லோருக்கும் புரியுமா? என்கிற ஐயம் எனக்கு இருந்தது.

   அடுத்த கதை இன்னும் சுவாரசியமாக எழுதவே எனக்கும் விருப்பம்.
   நன்றி.

 3. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் தமிழ். பாராட்டுக்கள்.
  திரு சுகி சிவம் அவர்களின் உரையைக் கேட்பதுபோல இருந்தது. அவர்தான் இப்படி தன் அனுபவம் ஒன்றைச் சொல்லி, அதற்கு தகுந்தாற்போல் ஒரு கதையையும் சொல்லுவார். கதைக்குள் கதை என்றிருக்கும் அவரது உரை. சனிக்கிழமை தோறும் காலை ஏழு மணிக்கு சன் தொலைக்காட்சியில் கேட்கலாம்.

  இந்தக் கதையையே முடிவும், ராபி கதையும் இல்லாமல் எழுதுங்களேன். எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

  இன்னும் சுவாரசியமான கதை படிக்க எனக்கும் விருப்பம்.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s