தேவன் ‘மகா’ தேவன்

சில மாதங்களுக்கு முன்புதான் இந்த ஆண்டு அமரர். எழுத்தாளர் தேவன் அவர்களின் நூற்றாண்டு (1913-2013) என்று தெரியும். அவருக்கு நான் தான் அறிமுகம் கொடுக்கவேண்டியது என்றில்லை. அவரின் புத்தகங்களே அவருக்கான மரியாதையையும், புகழையும் காலந்தோறும் தரும். ஒரு எழுத்தாளன் விரும்புவதும் அதுதானே!

சில ஆண்டுகளுக்கு முன் பாலா சாரை அவருடைய அலுவலகத்தில் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். உரையாடலின் ஊடே, உன் Blog பேர் என்னவென்று கேட்டார். சொன்னேன். முதல் கட்டுரையாக ‘தேவன் “மகா”தேவன்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருந்தது. முழுக்கவே விக்கிபீடியாவில் இருந்து தொகுத்த தகவல்கள். அதற்கே அவர் பாராட்டினார். இதோ, இப்போது தேவனின் நூல்கள் சிலவற்றைப் படித்தவன் என்கிற முறையில் எனது இந்தப்பதிவை அழுத்தமாக, மகிழ்ச்சியாக எழுதுகிறேன்.

அப்போது நூலகத்தில் தோழர் அர்ஜூனோடு உலாவுகையில் நூலகத்தின் புதுவரவுகளாக துப்பறியும் சாம்பு புத்தகம் நேர்த்தியான வடிவமைப்பில் காட்சியளித்தது. அவ்வளவுதான்! புத்தகத்தைக் கைப்பற்றிய நாங்கள் அடுத்த 50 நாட்களுக்கு நூலகத்தில் வைக்கவே இல்லை. தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தோம். பளபளவென்றிருந்த அந்நூல் சற்றே பழுப்பேறியிருந்தது. 50 கதைகளையும் சுவைத்துப் படித்தோம், தொலைக்காட்சியில் தொடராக, மேடை நாடகங்களாகவும் வந்துள்ளதாம். வேறென்ன சொல்ல?

அதே நூலகத்தில் மிஸ்டர் வேதாந்தம் நூலையும் எடுத்து மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறோம். அதுகுறித்து, அதில்வரும் கேரக்டர்கள் பற்றி, (குறிப்பாக மிஸ்டர்.சுவாமி பற்றி) அடிக்கடி உரையாடியுள்ளோம். அதில்வரும் கடித சம்பாஷணைகள், ஹாஸ்யங்கள், திடுக் திருப்பங்கள் எல்லாவற்றோடும் நிதானமாக நீந்தியுள்ளோம். அது ஒரு தொடர்கதையாக தொலைக்காட்சியில் கூட வந்துள்ளதாம்.

மாலதி என்கிற சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும் வாய்ப்பு தோழர் சிதம்பரம் மூலமாக எனக்கு கிடைத்தது. சின்னச் சின்ன இடைவெளிகளில் எதிர்பாராத கேரக்டர்கள் மூலமாக கலீரென சிரிக்க வைக்கும் வித்தை அவர் பேனாவுக்குள் எப்படி வந்ததோ தெரியவில்லை. வெவ்வேறு கதைமாந்தர்களின் ஊடே மெலிதான நகைச்சுவை மிளிர எப்படி எழுதினாரோ? என்று பலமுறை எண்ண வைக்கிறார்.

அண்ணன் ஓஜஸ் மூலமாக ஜஸ்டிஸ் ஜகந்நாதன் படித்தேன். ஒரே ஒரு வழக்கு. அதிலும் கொலைவழக்கு. அதில் ஆங்காங்கே சிரிக்க, புன்னகைக்க வைக்கும்படி நேர்த்தியான எழுத்து நடை. தேவனின் பெரும்பலம் அவருடைய அசாத்தியமான எழுத்துநடைதான் என்பது என் கருத்து. நீண்ட நேரம் படித்தது போலான உணர்வும், அதிக பக்கங்களைப் படித்து முடித்தது போலான உணர்வும் எழும்பும். ஆனால் நேரமோ சிற்சில நிமிடங்களையே கடந்திருக்கும். நேரங்களை மறந்து ரசிக்க வைக்கக்கூடிய ஒப்பற்ற எழுத்து தேவனுடையது.

மிகச்சமீபத்தில் பாலா சார், மற்றும் அண்ணன் ஓஜஸ் மூலமாக சி.ஐ.டி சந்துரு நாவலையும் படித்து முடித்தேன். காட்சியோடு நம்மையும் ஒன்ற வைக்கும் எழுத்து. அதிலும் சந்துருவின் உரையாடல் ஒவ்வொன்றும் அட! அட! அட! படிக்கையில் தோன்றும் உணர்ச்சிகள் தனி. பளீரென உடைத்துப் பேசும் வேகம் நச்! ஆனால் என்ன? #MMKR படம் பார்த்தாற்போல ஆளாளுக்கு தலையில் தாக்கிக்கொண்டு மயக்கமுறுகிறார்கள் J

இது தேவனின் கடைசி நாவலாம்! இப்போதைக்கு நான் படித்த அவரின் கடைசி நாவலும் இதுதான்.

ஒரே ஒரு வருத்தம் மிஞ்சுகிறது. அவர் எழுதிய இன்னொரு சிறப்பான நாவலான லஷ்மி கடாட்சம் புத்தகத்தின் தோற்றத்தைப் பார்த்து மலைத்துப் போய் படிக்காமல் தவறவிட்டுவிட்டேன். இன்னும் சிறப்பான நூல்களை நான் பார்த்தது கூட கிடையாது. அதையெல்லாம் படிக்க எனக்கு இனியொரு தருணம் அமையும்… காத்திருக்கிறேன்.

சனியன் பிடித்த கடியாரம்! அதைக் கண்டுபிடித்தவன் 12.30 க்கும் ,1.00 க்கும், 1.30 க்கும் ஒரே அடிதான் வைத்தான். முட்டாள்! 12.30 என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போது, 1.30 யே ஆகியிருக்கலாம்.

-தேவன் எழுதிய ’மாலதி’ சிறுகதை தொகுப்பில்      

வக்கீலுக்கு வெறும் சட்ட ஞானம் இருந்தால் மட்டும் போதாது. அலங்காரம் செய்து வேஷம் போட்டு வரும் பொய்களைத் தேடித் துரத்தி, விரட்டிப் பிடித்து, அம்பலப்படுத்தும் சாமர்த்தியம் வேண்டும்; சாட்சிகளைத் திக்குமுக்காடச் செய்து, உளற அடித்து, எத்தனை தந்திரமாக எதிர்க்கட்சி வேலை செய்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து, நிர்ப்பயமாக முன்னேறும் ஆற்றல் வேண்டும். அசடுகளை அதட்டியும், துஷ்டனை மிரட்டியும், இரண்டுங்கெட்டான்களை குஷிப்படுத்தியும், பொய்யர்களைக் கிழித்துப் போட்டும் வேலை செய்து வெற்றி காண வேண்டும்.

சாமான்யமா இது?

தேவனின் ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நூலில் இருந்து

நிறைய எழுதலாம். ஒன்று. உங்களுக்கும் இதே மாதிரியான/ இதைவிட சிறப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கலாம். இரண்டு. இதுவரை படித்திராதவர்களின் அனுபவங்களைக் கெடுக்க விரும்பவில்லை.

Advertisements

4 thoughts on “தேவன் ‘மகா’ தேவன்

  1. ஆஹா, மிக அருமையான பதிவு.

    இது வரை தேவனை தெரியாதவர்கள், சிறிதே தெரிந்தவர்களை நிச்சயம் மேலும் வாசிக்க தூண்டிவிடும். நீ சொன்ன அத்தனை புத்தகங்களையும் நான் படித்துள்ளேன் (லஷ்மி கடாட்சம் உட்பட #வெளம்பரம் ).

    நீ சொன்னது போல காலம் மறந்து படிக்க உவந்த புதினங்கள். தேவனின் ஒரு பக்க கதைகளையும் சீக்கிரம் படித்து விடு!

    இன்னும் தேவனை பற்றி ஓரிரு வரி சேர்த்து இருக்கலாம் : கல்கி கீழ் துணை ஆசிரியர். ஆனந்த விகடனின் நீண்ட நாள் ஆசிரியர்…. பதிவு முழுமை பெரும் பழைய பதிவை லிங்க் செய்யவும்.

    /அதில்வரும் கடித சம்பாஷணைகள், ஹாஸ்யங்கள், திடுக் திருப்பங்கள் எல்லாவற்றோடும் நிதானமாக நீந்தியுள்ளோம்/ செம 😀

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s