தந்தையின் மகன்

ஒவ்வொரு புத்தகத்திலும்  ஒரு வாழ்க்கை இருக்கிறது.

கடந்த ஜூன் இறுதியில் வாங்கி, ஜூலை முதல் வாரத்துக்குள்ளாக படித்து முடித்த ஒரு புத்தகம். தகழி.சிவசங்கரன் பிள்ளை அவர்கள் மலையாளத்தில் எழுதி, சுந்தர ராமசாமி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  தோட்டியின் மகன் புத்தகமே அது.

மிக எதேச்சையாக பார்வையில் பட்ட புத்தகம். படிக்கத் துவங்கிய நாளிலிருந்து அத்தனை எளிதில் கடக்கமுடியாத உணர்வுகளைத் தந்த நூல்.  பொதுவாக சில நூல்களை எடுத்த நொடியில் இருந்து விரைவாக படித்து முடித்து கீழே வைக்கிற வகையிலான நடையில் சுவாரசியமும் கலந்து இருக்கும்.

வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன். புத்த்கத்தின் நடை பல இடங்களில் பரபரவென பறக்கிறார்போல நகர்கிறது. எங்கேனும் ஓரிடத்தில் வெளிப்படும் வசனம் (உரையாடல்) நெஞ்சை அப்படியே கிழித்துவிடுவது போல உறையவைக்கிறது. பல இடங்களில் தொடர்ச்சியாகப் படிக்க முடியாமல் இதயம் விக்கித்தபடி நின்றிருக்கிறேன்.

சரி. சுருக்கமாக கதையைப் பகிர்கிறேன்.

இசக்கி முத்து ஒரு தோட்டி. வயதான முதிய தோட்டி. அவரின் மகன் சுடலைமுத்து-வையும் தோட்டியாக மாற்ற விருப்பம்கொள்கிறார். விருப்பமில்லாவிட்டாலும், சூழலின் பொருட்டு சுடலைமுத்து தோட்டியாக மாறுகிறான். அன்றைக்கே எதிர்பாராமல் இறக்கிறார் தந்தை. பின்னர் தோட்டியின் மகனான தனக்கு ஏற்படும் அனுபவங்களையும், பிறரது வாழ்க்கைமுறைகளையும் ஒப்பிடத் துவங்குகிறான்.  மற்ற தோட்டிகளிடமிருந்து, அவனது நடவடிக்கைகளாலும், செயல்களினாலும் வித்தியாசப்படுகிறான். திருமணமான பிறகு மனைவியிடம் இலட்சியங்களைப் பகிரும் அவன் தன் பிள்ளை தோட்டியாகி விடக்கூடாது என்பதற்காக எவ்வளவோ, மெனக்கெடுகிறான்.அவன் கதை என்னவாயிற்று என்பதை சொல்லிவிடும் ஒரு புனைவுதான் தோட்டியின் மகன்.

மேம்போக்காக பார்த்தால், சாதாரணமாகத் தோன்றும் இக்கதையினுள் அத்தனை வீரியமும் அடங்கிக் கிடக்கிறது. குறிப்பாக நடைமுறை வாழ்க்கையினை  மேம்படுத்த சுடலைமுத்து செய்கிற காரியங்களின் தன்மை குறித்த கேள்வி எழுகிறது. அவன் செய்வன எல்லாம் சரியா?  என்கிற வினா சற்றே எழுகிறது.

நாவலின் ஒவ்வொரு இடமும் நிமிர்ந்து எழ வைக்கிறது. குறிப்பாக, தோட்டியின் மகன் தோட்டியாகத்தான் மாற வேண்டுமா? அவனும் மனிதன் தானே?  என்ற வகையில் நமக்குள் கேள்விகளை எழுப்பிவிடுகிறது இந்த புத்தகம். குறிப்பாக அவன் மகனுக்கு பெயரிடும் இடமும், அதன் பின்னர் பள்ளியில் பிற மாணவர்களினால் கேலிக்குள்ளாவதால் பாதிப்படையும் சுடலைமுத்துவின் மகன், இசக்கி முத்துவின் பிணத்தை மறைக்க பிற தோட்டிகள் செய்யும் முயற்சிகள்-அதன் பிரதிபலன்கள்; சம்பளக்குறைப்பு, ஊழல், சங்கம் என நிகழ்கால சம்பவங்களின் பாதிப்பின் ஊடே பயணிக்கும் கதை சற்றே பிரமிக்க வைக்கிறது. சக தோட்டிகள், அவர்தம் வாழ்வியல், முனிசிபல் சேர்மன், ஓவர்சீயர், உள்பட குட்டிகுட்டி கதை மாந்தர்களும் மிக யதார்த்தம். குறிப்பாக சொல்லவேண்டுமானால், எந்த ஒரு இடத்திலும் பழுதில்லாத உரையாடல்கள் முகத்தில் அறைந்து போகின்றன. கதை மொத்தமும், கேரளாவில் ஆலப்புழை நகரில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

நிறைய இடங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றாலும், புதியவர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்க விருப்பமில்லை. பல உரையாடல்களைப் பகிர்ந்திருக்க வேண்டும். பொதுவெளி என்பதால் சிலவற்றை மட்டும் பகிர்கிறேன். அதிலேயே நாவலின் அழுத்தத்தை உங்களால் உணரமுடியும் என நம்புகிறேன்.

“எம்மவனுக்கு இண்ணைக்கு கெடைக்கிற சோறு என்ணைக்கும் கெடைக்கணும் ஆண்டவனே!” 

அழுக்கை அப்புறப்படுத்தும் தோட்டி, அழுக்கைத்தான் தின்ன வேண்டும் போலிருக்கிறது.

அவனை நாற்றம் பிடித்தவனாக்கிய பொருள் அந்த பெரிய மனிதர்களின் வயிற்றுக்குள்ளும் இருக்கிறதே!

பணக்காரன், வயிறு தெரியாமே திம்பான். வேலைவெட்டி செய்யமாட்டான். சீரணமாகாது. ஏழைங்க கண்டதையும், கெடச்சதையும் திம்பானுங்க. அவங்களுக்கும் சீரணமாகாது.

இன்னும், இன்னும் பகிரலாம். ஆனால் பதிவின் நீளம் கருதி இன்னும் சில தகவல்கள்.

இக்கதை (நாவல்) 1946-ல் மலையாளத்தில் ’தகழி’யால் எழுதப்பட்டது. 1951-52 -ல் தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்து வார இதழ் ஒன்றில் வெளிவந்த இந்நாவல் தமிழில் புத்தகமாக வெளிவந்த ஆண்டு ஆகஸ்ட்-2000. தற்போது 9 பதிப்புகள் கடந்து விற்பனையாகும் இந்நூல் காலச்சுவடு பதிப்பக வெளியீடு.

இந்நூலை மொழிபெயர்க்கையில் ஆசிரியருக்கு வயது 20. அப்போது தன்னை கலாச்சார ஏழை என்று கூறிக்கொள்ளும் அவர் நூலை வெளியிட ஏற்பட்ட துன்பங்களையும் நூலில் பகிர்ந்துள்ளார்.

நூலின் பின் அட்டையில்:

நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்ப காலப் படைப்புகளில் முக்கியமானது ’தோட்டியின் மகன்’. தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம் – சேரி; கேட்காத மொழி – பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை – மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொது கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மாற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.

மொழிபெயர்ப்பாளர் சுந்தர ராமசாமி அவர்களின் அனுபவம்:

தோட்டியின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின. வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்சிகளை அள்ளிக்கொண்டு வர முடிகிறது! தகழி வெளிப்படுத்தியிருப்பது தோட்டிகளின் வாழ்க்கை சார்ந்த தகவல்களை அல்ல என்பதையும், காலம் அவர்களது அடிமனங்களில் மூட்டும் நெருப்பு என்பதையும் உணர்ந்தபோது மிகுந்த வியப்பு ஏற்பட்டது. கொடுமையில் மனம் கொள்ளும் கோபத்தில், ரத்தத்தில் உஷ்ணம் ஏறாமல் என்னால் அப்போதெல்லாம் தோட்டியின் மகனின் எந்தப் பக்கத்தையும் படிக்க முடிந்ததில்லை.

 நூலின் முன்னுரையில் உள்ள உரையாடல்:

’மலையாளத்திலும் தோட்டியின் மகன் என்றே தலைப்பா?’

’ஆமாம்’.

சில கணங்கள் மௌனம்.

‘வாங்கிப் படிக்கிறாங்களா ?’

‘நிறைய.’

‘முழுக்கவும் தோட்டிகள்தான் வராங்களா ?’

‘அநேகமாக அவங்கதான்.’

‘காதல் உண்டா ?’

‘உண்டு.’

‘காதலிப்பவளும் தோட்டிச்சியா ?’

‘ஆமாம்.’

‘அவங்க பாக்கற வேலைவெட்டி பத்தியெல்லாம் சொல்றாரா ?’

‘சொல்றார்.’

‘ஒண்ணுவிடாம ?’

‘ஒண்ணுவிடாம.’

‘குடும்பத்தைப் பத்தி ?’

‘சொல்றார்.’

‘தமிழ்ல தலைப்பை மாத்திப்புட்டா என்ன, தோழர் ?’

இன்னும் இன்னும் எழுத ஆசை. சில கேள்விகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன. அதையும் அடுத்த பதிவில் பதிட விருப்பம். பதிவின் நீளம் கருதி இங்கே தற்காலிகமாக முடிக்கிறேன். இறுதியாக என் பார்வையில் இந்த நூல்….

ஒவ்வொரு தந்தையும் தனது மகனின் (எதிர்கால) வாழ்க்கை குறித்து கவலைப்படுகிறார்கள். அப்படி கவலைப்படும் இரு தோட்டிகளும், அவர்களின் மகன் பற்றிய கதைதான் தோட்டியின் மகன். 

Advertisements

3 thoughts on “தந்தையின் மகன்

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s