கேள்வியும்-பதிலும்…

வாசிப்பின் மகத்துவம் அறிந்தவர்களுக்கு, வணக்கம்.

இந்த பதிவில் எனது இரண்டாம் சிறுகதையை உங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன். முதல் கதையான நட்பு வட்டம் முழுக்க முழுக்க எனது ஆத்ம திருப்திக்காக எழுதியது. ஆகவே அது எல்லாத் தரப்பினருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று அவசியம் இருக்காது. அதிலிருந்து முழுமையாக மாறி இக்கதையை எழுதி முடித்தேன். இக்கதையை எழுதத் துவங்கியதும், முடித்ததும் சுவாரசியமான ஒரு விடயம். காரணம் இருக்கிறது.

இக்கதையை துவங்கியபோது நினைத்த எந்த சம்பவங்களையும் இதில் எழுதவில்லை. கிட்டத்தட்ட 3-4 விதமான கதைகள் இதே நடையில் பொருந்திப்போனது. இறுதியாக எளிமையாக ஒரு கருப்பொருளைக் கொண்டு முடித்தேன். தலைப்பின் காரணத்தையும் இங்கே சொல்லிவிடுகிறேன். கதையின் இறுதி வாக்கியம் ஒரு கேள்வியில் முடிகிறது. எல்லோருக்கும் ஓரளவு அறிமுகமான ஒரு கேள்விதான். பதில்கள் வேறுபடும். இருக்கட்டும்.

சிறப்பான சிறுகதைகளைப் படித்து அதன் இன்பத்தில் தன்னைத் தொலைத்த வாசகர்கள் இதைப் படிக்க முனையும்போது இது ஒரு எளியவனின்  முயற்சி என்பதையும் நினைவில் கொள்ளவும். கதை சில அசுவாரசியங்களை உங்களுக்கு அளித்தால் பொறுத்தருள்க. கதையில் சில பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்த்துள்ளேன். சிலவற்றை உங்களால் உணரமுடியும் என நம்புகிறேன்.

அன்பிற்கினிய அம்மாவிற்கும், அப்பாவிற்கும், ‘அவனுக்கும்’ இக்கதை சமர்ப்பணம்.

******************************************************************************

 

பொழுது விடிந்திருந்தது. நேரம் ஆறைத் தாண்டியிருக்கலாம். என் கண்களில் இன்னும் உறக்கம் முழுமையாகத் தெளிந்திருக்கவில்லை. மேலும் போர்வையைக் கொண்டு உடலை மூடினேன். அந்த நிசப்த இருட்டுக்குள் என்னை மூழ்கடிக்க நினைக்கையில் என் அலைபேசி அலறியது. கண்களைச் சுருக்கியபடி யார் அழைக்கிறார்கள் என பார்த்தேன். ஒய்ஃப் என்றிருந்தது. என்ன சொல்லப் போகிறாள் என்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தும் தெரியாததுபோல் என்ன விஷயம் எனக் கேட்டேன்.

‘என்ன நல்ல தூக்கமா? எந்திரிங்க! நான் என்ன சொல்லிட்டு போனேன்னு நெனப்பே இல்லையா?’

இருக்கே! நல்லா ஞாபகம் இருக்கு.

மணி ஆறாச்சு. இன்னும் எந்திரிக்கலேனா எப்படி?

இப்ப என்ன ஏழு மணிக்கெல்லாமா பேங்க் திறக்குறாங்க?

வேகமா எந்திருச்சு கெளம்புற வழியப் பாருங்க ‘ என்று சொன்னபடி போனை வைத்துவிட்டாள்.  திரும்பவும் உறங்க மனம் மட்டுமல்ல உடலும் அனுமதிக்கவில்லை. எழுந்தேன்.

எட்டரைக்கெல்லாம் தயாராகிவிட்டேன். மேசை டிராவில் பணம் இருந்தது. மொத்தமாய் ஆயிரத்தி எழுநூறு ரூபாய் இருந்தது. வங்கியில் கட்டியதுபோக இருபத்தஞ்சு ரூபாய் மிஞ்சும். சட்டைப் பையில் பார்த்தேன். ஐம்பது ரூபாய் இருந்தது. காலைச் சாப்பாட்டுக்கு இது போதும். மதியம் மனைவி வந்திடுவாள்.

காலை உணவு முடிந்தது. மணி ஒன்பதரைதான் ஆனது. வங்கியின் எதிர்புறம் இருந்த டீக்கடையில் கால்மணி நேரத்தைக் கழித்தேன். என் அலுவலகத்திலே பங்சுவாலிட்டிக்கு நான்தான் உதாரணம். ஒன்பதே முக்காலுக்கெல்லாம் வங்கியினுள் நுழைந்து விட்டேன். உள்ளே சில அலுவலர்கள் மட்டுமே இருந்தனர். சனிக்கிழமை என்றாலே அலுவலர்களின் முகத்தில்  ஒரு வெறுமையைக் காண முடியும். முக்கியமாக வங்கிகளில்.

வங்கியில் படிவங்களை நிரப்பிவிட்டு, இருக்கையில் அமர்ந்தேன். என்னோடு சேர்ந்து மூன்று பேர் இருந்தனர். அக்கவுண்ட் அதிகாரி கந்த சஷ்டி கவசத்தை காற்றில் ஒலிக்க விட்டிருந்தார். மணி  பத்தைக் கடந்திருந்தது. ஆனால் அலுவலர் எவரும் கவுண்டரில் இல்லை.

மணி பத்தேகாலைத் தொட்டிருந்தது. அங்கிருந்த மற்றவர்களும் நேர விரயம் குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எப்படியும் முதல் ஆளாகப் போய் வேலையை முடித்து விட வேண்டும் என்ற வேகம் மட்டும் ஒருவேளை எங்களுக்கு இருந்திருக்கலாம். இரண்டில் ஒரு கவுண்டர்தான் வேலை செய்தது. சனிக்கிழமை என்றால் கவுண்டர்கள் கூட பாதிதான் வேலை செய்யும் போல.

அலுவலர் கவுண்டரின் உள்ளிருந்து சிக்னல் கொடுத்ததுதான் தாமதம். அனைவரும் விரைந்தோடி வரிசையில் நின்றோம். எனக்கு முன்னால் இருவர். இருவருமே கல்லூரியில் படிப்பவர்களாக இருக்கலாம் என யூகித்தேன். முதல் நபர் சரியாக படிவம் பூர்த்தி செய்யாததால் வெளியேற்றப்பட்டார். இரண்டாம் நபர் சில்லரை தராததால் வாக்குவாதம் நடந்தது. நானே தீர்த்துவைத்தேன். இதனாலோ என்னவோ என் வேலையும் விரைவாக முடிந்தது.

ஏறத்தாழ பத்தரைக்கெல்லாம் வங்கியை விட்டு வெளியேறினேன். அடுத்து இரயில் நிலையம். டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் மதுரைக்கு போக வேண்டும். அங்கும் இதே போல் சில்லறைத் தகராறு.  சட்டைப் பையில் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் சில்லரை இருந்தது. அங்கும் தீர்த்துவைத்தேன்.  ரொம்ப தாங்ஸ் ஸார் என்றார் அவர். அடுத்தது நான். சரியாக சில்லரையை எடுத்துக் கொடுத்தேன். உங்களை மாதிரி எல்லாரும் இல்ல சார். இருந்தா நல்லாருக்கும் என்றபடி டிக்கெட் கொடுத்தார் அலுவலர். மனம் குளிர அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோதுதான் கவனித்தேன். சில்லரை என்னிடமில்லை. பரவாயில்லை. பத்து ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சமாளிக்க எண்ணிக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் நகரப் பேருந்து வந்தது. ஏறினேன். இடம் கிடைத்ததால் அமர்ந்தே  வந்தேன். நகரப் பேருந்துகளில் ஏறியவுடன், சன்னலோர இருக்கை கிடைப்பது எத்தனை மகிழ்ச்சியானது என்பது அதை உணர்ந்தவர்களுக்கேத் தெரியும். அவ்வளவு நேரம் கழித்து பின்புறம் பார்த்தேன். இரயில் நிலையத்தில் நான் சில்லறை தீர்த்து வைத்த நபர் அங்கே இருந்தார்.

பத்து ரூபாயை நடத்துனரிடம் நீட்டினேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மீதி சில்லரையை என்னிடம் தந்துவிட்டார். இன்னும்  அரைமணிநேரமாவது பயணம் இருக்கும். உறங்குவதற்கு மனமில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றேன். மனம் இன்னும் லயித்துப் போனது. இருக்காதா பின்னே? வேலையெல்லாம் முடிந்தது.

சோலையெல்லாம் பூத்துநிற்கும் மலர்களைக் கண்டவுடன் உள்ளம் எவ்வளவு மகிழ்ச்சியில் திளைக்கும்? அப்படித்தான் எனக்கும் இருந்தது. வீட்டுக்குப் போனால் எப்படியும் வேலை இருக்கும். இல்லாவிட்டால் புத்தகம் படிக்கலாம், டி.வி. பார்க்கலாம். எதுவும் தோன்றாவிட்டால், கம்மென்று கிளம்பி மாலையில் நண்பனின் வீடு வரைக்கும் போய்வரலாம். அட! எதுவும் வேண்டாம். என் மகளை பூங்காவிற்கு மாலை கட்டாயம் அழைத்துப் போனால் என்ன? அவள் கட்டாயம் மகிழ்வாள். அவள் மட்டுமா மனைவியும் கூட மகிழ்வாள். மகளின் புன்னகைக்கு முன்னே எத்தனை மகிழ்ச்சி இருக்குமென்று தந்தைக்குத்தான் தெரியும்!

இத்தனை நாட்களாய் இந்த சிந்தனைகள் எங்கே போயின என்றே தெரியவில்லை. ஒரு பயணம் எல்லாவற்றையும் புரட்டிவிடுகிறதுதானே! ஆமாம். இத்தனை எண்ணங்களும் என் மனதை அந்த பயணநேரத்தில் ஆக்கிரமித்திருந்தன. வீட்டுக்குப் போனவுடன் மனைவி கையால் மதிய உணவு. முடித்தவுடன் சிறு உறக்கம். மாலையில் மகளோடு பூங்காவிற்கு செல்லலாம். பிரமாதமாக இருந்தது திட்டம்.

அந்நேரம் பார்த்து பேருந்தில் உற்சாகமாக பாடல் ஒலித்தது. எல்லா நகரப் பேருந்துகளிலும் ஏன் பாடல் போடுவதில்லை என மனம் எண்ணியது.

நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து. இன்னும் கால் மணிநேரமோ, என்னமோ வீட்டிற்குள் இருப்பேன். அந்த நினைப்பே பெரும் உற்சாகம் தந்தது. எதனால் என்று எனக்கே நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் இதற்குமுன் நான் அப்படியிருந்ததில்லை. ஒரு புது அனுபவம் என்றே மனம் சொல்லியது.

அப்போது நினைத்தும் பாராத ஒரு நிகழ்வு நடந்தேறியது, எங்கள் பேருந்து மற்றொரு வண்டியோடு மோதி சரிந்தது. நான் சன்னலோரத்தில் இருந்தபடியால் பலத்த அடி விழுந்தது. என் மனம் அப்படியே ஒரு சுற்று சுற்றியது.

இந்த உடலைவிட்டு உயிர் எப்படியும் பிரியக் கூடாது. நான் எத்தனையோ நினைவுகளை சுமந்துகொண்டிருக்கிறேன். எப்படியும் உயிர்பிழைத்தாக வேண்டும். கண்டிப்பாக இன்னும் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். என் நண்பர்களோடு இன்னும் பல காலம் உறவு நீடிக்கவேண்டும். அய்யோ! என் மகளை எப்படியாவது பூங்காவிற்கு அழைத்துபோயாக வேண்டும். அவளின் புன்னகையை நினைத்துப் பார்த்தேன். அவளோடு இன்னும் பல ஆண்டுகள் இவ்வுலகில் வாழத் திட்டமிட்டிருந்தேன். என் மனைவியை நினைத்துப் பார்த்தேன். என் ஆசைகள் யாவையும் அவர்கள் இருவரிடமும் பகிர எண்ணினேன்.

கண்கள் மூடிக்கொண்டன. இந்த உலகின் வாழ்வை விட்டு நான் வெகுதூரம் போய்க் கொண்டிருப்பதாய்த் தோன்றியது. ஏதாவது மாயம் நிகழ்ந்து என் உயிர் உடலுக்குள் திரும்பிடுமா என்றெல்லாம் தோன்றியது. தூரத்தில் ஆறேழு பேர் ஓடி வருவதுபோல் தோன்றுகிறது. அவர்கள்தான் என்னை மீட்க வந்த இரட்சகர்கள். அவர்கள் என்னருகே வரும்வரை உடலில் உயிர் இருக்க விருப்பம் கொள்கிறேன். ஆனால் விதி என்றொரு விந்தை விட்டுவிடுமா?

என் நினைவுகள் யாவும் முற்றிலும் ஒழிந்து போயின. என் கனவுகள் யாவும் முழுமையாக நொறுங்கிப் போயின. என் வாழ்நாள் இதோ முடிந்தே விட்டது. ஒரு விபத்து என்னவெல்லாம் செய்கிறது?

Advertisements

5 thoughts on “கேள்வியும்-பதிலும்…

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s