அன்புள்ள அப்பாவிற்கு…

அன்புள்ள அப்பாவுக்கு,

தந்தைக்கு கடிதம்

தந்தைக்கு கடிதம்

தங்கள் அன்பு மகன் எழுதிக்கொள்வது, உங்களுக்கும் கடிதம் எழுதிவிட்டால் இப்போதைக்கு என் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்துவிடும். உங்களுக்கு முதல் கடிதமாக எழுத எனக்கு விருப்பமில்லை. அதற்கு இரண்டே காரணங்கள்தான்.

  • ஒருவேளை இக்கடிதம் பெரிதாக, நீண்டு செல்லலாம்.
  • இக்கடிதம் உங்களுக்கு முதல் கடிதம் அல்ல.

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஏற்கனவே நான் உங்களிடம் இரு கடிதங்கள் கொடுத்திருக்கிறேன். பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன். இன்னும் 2 கடிதங்கள் எழுதினேன். அவை உங்களை வந்து சேரவில்லை.

சரி. பழந்கதைகளை விட்டுவிட்டு இப்போது கடிதத்தைத் தொடர்கிறேன். மற்ற இருவருக்கும் கடிதம் எழுதியாகியபடியால் உங்களிடமும் சில எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஆவல். அவ்வளவே!

என்னைச் சிறப்பானவனாக வளர்த்தெடுக்க நீங்கள் விருப்பம் கொண்டிருப்பீர்கள். அதன்படியே என்னையும் வளர்த்திருக்கிறீர்கள். நான் அவ்வாறே வளர்ந்தேனா? என்பதெல்லாம் தனி.

கொஞ்சம் வருத்தம் என்னுள்ளும் தொக்கி நிற்கிறது அப்பா! நீங்கள் பெருமிதம் கொள்கிறபடி ஏதாவது நிகழ்த்தவேண்டும் என்கிற ஆவல் மட்டும் பல ஆண்டுகளாக என் மனதுள் கொதித்து எழுந்து அடங்கவே மறுக்கிறபடி, திமிறுகிறது.

என்ன வார்த்தைகளையெல்லாம் இன்னும், இன்னும் இட்டு என் நிலையை உங்களிடம் சொல்வதெனத் தெரியவில்லை. ஆனாலும் என் நிலை உங்களுக்கு கொஞ்சமேனும் புரிந்திருக்கும்.

என் வாயிலிருந்து சில வார்த்தைகளாவது வெளியே கேட்காதா? என நீங்கள் எண்ணும்படியாக பலவேளைகளில் நான் (மௌனம் சாதித்தபடி ) நடந்துகொண்டிருக்கிறேன். பொறுத்தருளவும்.

ஆனால் உங்களிடம் நான் பேச நினைக்கும் எல்லாவற்றையும் உங்கள் எதிரில் பேச இயலவே இல்லை. உங்கள் மேல் எனக்கு பயமா? என்றால் இல்லை. இல்லவே இல்லை என உறுதியுடன் கூறிக்கொள்வேன்.

என் அப்பாவின் மேல் எனக்கு பயம் கிடையாது. மற்றவர்களை விட மரியாதை உங்கள் மேல் எனக்கு அதிகம். நான் உங்களிடம் அதிகம் பேசாமல் இருந்தாலும், உங்கள் அறிவுரைகளை நீங்கள் தந்துகொண்டேதான் இருக்கிறீர்கள். அதை நான் ஒருபோதும் மறந்ததில்லை. ஆனால் செயல்படுத்த முடியாமல் பலவேளைகளில் திணறியிருக்கின்றேன். நீங்கள்தான் என்னை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

உங்கள் வளர்ப்புமுறை குறித்து பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காரணம் எனது அணுகுமுறையாக இருக்கலாம். எனது நடத்தையாக இருக்கலாம்.

எப்போதெல்லாம் எனக்கு கண்டிப்பு தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் வழங்கினீர்கள். எனது திறமையின் எல்லைவரை மட்டுமே உங்கள் கண்டிப்பு சென்றது. வீணாக உங்கள் விருப்பங்களை என் மேல் நீங்கள் திணித்ததே இல்லை. எனவே நீங்கள் உன்னதமானவர்.

தம்பிக்கு அதே அளவு அறிவுரை சரியான தருணத்தில் கிடைக்கவில்லையென்று நினைக்கிறேன். உங்களுக்கு இன்னும் தருணம் இருக்கிறது. அவன் இன்னும் உயரம் எட்ட நீங்களும் அவசியம்.

என் மேல் நானே கொள்ளாத நம்பிக்கை கொண்டிருக்கிற மனிதர் இந்த உலகத்தில் உண்டென்றால், அது நீங்களாகவே இருக்கமுடியும். நான் எப்படி என்னை வடிவமைக்கவேண்டும் என நானே சிந்திக்க நீங்கள்தான் காரணமாய் இருந்துள்ளீர்கள்.

உங்களை உங்கள் அப்பா (என் பாட்டனார்) எப்படி வளர்த்தார் என்பதை நீங்கள் கூறவும், உங்களைவிட வயதில் மூத்தவர்களான பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். உங்கள் வளர்ப்புமுறைகள் அதன் காரணமாகவே என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன.

யாராவது பேசிக்கொண்டிருந்தால், அவர்களின் வார்த்தைகளைக் கொண்டே அவர்களை மடக்கினால் அவர்களிடம் உங்கள் தொழில் குறித்தும், இன்னாரின் மகன் நான் என்றும் வார்த்தைகள் விழும். எனக்குத் தெரியும். நீங்கள் எந்த தொழில் செய்திருந்தாலும், உங்கள் நாவின் வன்மை அப்படித்தான் இருந்திருக்கும்.

நான் என்ன மாதிரியான புத்தகங்கள் படிக்கவேண்டும் என தீர்மானித்தீர்கள். எனக்கு சிறந்த வாசிப்பு அனுபவங்களைத் தந்தீர்கள். எப்போதும் அதை நான் மறக்கவே மாட்டேன்.

நான் நாளிதழ்களை எழுத்துக் கூட்டி படித்துப் பழகுகிறபோது எனக்கு தெரிந்து நான் 2 அல்லது 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பேன். இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரு நாளிதழின் எந்த செய்தியை ஆழமாகப் படிக்க வேண்டும்? எதை கவனிக்க வேண்டும்? எதை ஒதுக்க வேண்டும்? செய்திகளின் உள் அர்த்தம் என்ன? எதுதான் நடுநிலைத்தன்மை? எப்படி ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்? ஒரு வார இதழை எப்படி படிக்க வேண்டும்? எதை நினைவில் கொள்ளவேண்டும்? எதை தூர ஓட்ட வேண்டும்?  வியாபார உத்திகள், சமகால அரசியல், வாழ்வியல், சமூகம் ……ம்ம்ம்ம் இன்னும் இன்னும் எவ்வளவோ…??  சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். சாதாரணமாக எந்த பிள்ளைக்கும் ஒரு தந்தை இப்படியெல்லாம் சொல்லமாட்டார் என நினைக்கிறேன்.

இதை எளிதாக சில ஆண்டுகளுக்கு முன் உணர்ந்தேன். சிலருக்கெல்லாம் ஏன் நாளிதழ்களைப் படிக்க வேண்டுமென்றே தெரியவில்லை. சிலரோ தேவையற்ற செய்திகளில் நாட்டம் கொண்டு நேரம் போக்கியதைக் கண்டிருக்கிறேன். அந்த வகையிலும் உங்களுக்கு நன்றி. நீங்கள் யார்க்கும் வாய்க்காத ஒரு அப்பா!

உங்கள் அரசியல் கொள்கைகள் யாவையும் என்னை பத்தாம் வகுப்பு படிக்கிறவரையில் நெருங்கவே இல்லை. அதன்பின் நான் படித்த புத்தகங்கள்தான் என்னை மாற்றியிருக்கும் என நினைக்கிறேன். நன்றி. எப்போதுமே இந்த புத்தகத்தைப் படி/வாங்கு என நீங்கள் சொன்னதே இல்லை.

எனக்கான சுதந்திரத்திற்கான எல்லைகளை என் வயது ஏற, ஏற அதிகரித்துக்கொண்டே போனீர்கள். அதேஅளவு என் வயது ஏற, ஏற உங்கள் மீதான எனது விருப்பமும் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது.

நான் என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறபோதெல்லாம் உங்கள் முகம் போல் எனக்கு தோன்றுகிறதே இல்லை. எனக்குத் தெரிய, என் நடவடிக்கைகள் உங்களைப் போல இல்லவே இல்லை. ஆனாலும் உங்களைப் போல நான் உருவத்தில் இருக்கிறேன் என்றும், உங்களை என் செய்கைகளினால் நான் பிரதிபலிக்கிறேன் என்று ( உங்களை நன்கு அறிந்த ) பிறர் கூறுகையில் வியப்பைத் தவிர எனக்கு வேறேதும் தோன்றுவதே இல்லை.

உன் தந்தையால் தான் இன்று சிறப்பாக இருக்கிறேன் எனக் கூறுகிறவர்களைக் கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன். அதனால் ஆச்சர்யப்பட்டும் போயிருக்கிறேன். எத்தனை விதமான ஆட்களைப் பழகி வைத்துள்ளீர்கள்? எத்தனை எத்தனை அனுபவங்களைக் கொண்டிருக்கிறீர்கள்? எனக்கெல்லாம் அப்படி அமையுமா? என காத்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்னோடு பேசுகிற பொழுதும் ஆச்சர்யம்தான்! உங்களோடு பதினைந்து நிமிடங்கள் பேசினால் ( அதாவது நான் உங்கள் பேச்சைக் கேட்டால்!! ) என்னால் குறைந்தபட்சம் 5-6 பதிவுகள் எழுத முடியும். அவ்வளவு பேசியிருக்கிறீர்கள். அவ்வளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்.

என் ஆவலெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் உங்களை விட அதிக புகழ் பெற வேண்டுமென்று உங்கள் விருப்பம் இருக்கும். அது இயற்கைதான். ஆனால் எனக்கோ உங்கள் அளவாவது அனுபவங்களும், நண்பர்களும், புகழும் கிடைக்க வேண்டும். அதற்கு நான் உழைக்க வேண்டும்.

நம் சுற்றத்தார் எல்லோரையும் கணக்கில் எடுத்தால் நீங்கள் மட்டும் தனித்து தெரிவீர்கள்! உங்கள் கொள்கைகள் மீது மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், உங்கள் மேல் யாரும் குறை சொன்னதாக அறியவில்லை. ஏனெனில் உங்களின் குணத்தால், மனத்தால் அந்த பெயரை ஈட்டியிருந்தீர்கள். நான் உங்கள் அளவிற்கு கடவுள் மறுப்பு கொள்ளவில்லை என்றாலும் மூட நம்பிக்கைகளை வெறுக்கிற அளவில் நானும் உங்கள் பாதையில் செல்கிறேன்.

பணத்தை விட குணத்தில் சிறந்த மனித மனங்கள்தான் வாழ்க்கைக்குத் தேவை என புரியவைத்திருக்கிறீர்கள். எனக்கு கிடைத்த தோழர்களை எண்ணி மகிழ்கிறேன்.

இன்னும் இன்னும் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் உங்களிடம் பகிர்வதற்கு என்னிடம் எண்ணங்கள் இருக்கின்றன. தந்தை-மகன் (உறவின் மேன்மை) குறித்து வள்ளுவரும் சில குறள்களைக் கூறியுள்ளார். அதையெல்லாம் இங்கே இட்டு நிரப்பி உங்களை மேலும் புகழ்ந்து……ம்ம்ம்ம். போதும். அதெல்லாம் தேவையே இல்லாதவை. அதைவிட மோசமானதாக வேறேதும் இல்லை.  நான் அதிகம் உங்களுக்கு எழுதுவதைவிட, உங்களிடம் பேசுவதற்கே விரும்புகிறேன். அதைத்தான் நீங்களும் விரும்புவீர்கள் என எனக்கும் தெரியும். உங்களோடு மனம்விட்டு, அச்சம்விட்டு, உள்ளத்தில் எழுகிற சொற்களையெல்லாம் வெளித்தள்ளிப் பேசுகிற அந்த நாள் எந்நாளோ? தெரியவில்லை. ஆனாலும் நாம் இருவரும் பேசித்தான் ஆகணும்!

இதிலுள்ளவையெல்லாம் கொஞ்சம்தான். எழுத நினைத்தவை இன்னும் அதிகம். உங்கள் பதில் கடிதம் நான் எதிர்பார்க்கமாட்டேன். நீங்கள் என்னிடம் தொலைபேசியிலேயே பேசினால் பொதும் உங்கள் குரல் என்னை எந்நாளும் வழிநட்த்தும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு அதுவே போதும்.

      இப்படிக்கு,

                   உங்கள் அன்பு மகன்

One comment

  1. எதற்கு இந்த கடிதம் என்று புரியவில்லை…? அவரை புகழ்வது போல் கண்டிப்பாக இல்லை… அவரை விட எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மையே அதிகம் என்பதையும், அதை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதையுமே தெரிவிப்பதாக இருக்கிறது… எதற்கும் முதலில் நீங்களே சென்று நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்…

    மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம்… என்னைப் பொறுத்த வரை… பாராட்டும் குணம் தான்… அப்பா மட்டுமல்ல… யாராக இருந்தாலும்…

    நன்றி… சிந்திக்க வைத்தமைக்கு…

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s