ஆனந்தமும், இன்னும் கொஞ்சமும்…

இந்த ஆண்டு துவங்கியதிலிருந்தே நான் குறைவாக எழுதுவதாக இங்கு  தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே அதிகமாகத் தான் எழுதுகிறேன்.

இசைப்பா தொடர்ந்து இயங்க எங்களால் ஆனமட்டும் முயன்றுகொண்டிருக்கிறோம். அண்ணன் கூட தனது நாற்சந்தியில் நெடுங்காலமாய் எழுதாமல் இருக்கிறார். ஆனாலும் நான் தொடர்ந்து இயங்குகிறேன்.

ஆம். நண்பர்கள் தரும் ஒத்துழைப்பின் காரணமாக தொடர்ந்து கூகுள் ப்ளஸ்-ல் குறும்பதிவுகள்-நடப்புகள்-அனுபவங்கள் ஆகியவற்றை மிகக் குறுகிய வட்டத்திற்குள் (Circles) எழுதி வருகிறேன். அவையெல்லாம் எனக்கே எனக்கானவை. பொதுவான பதிவுகள் அல்ல.

அங்கே இயங்குவதன் காரணமாய் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நண்பர்களுக்கு நன்றி. உரைநடை மேல் தான் ஈர்ப்பு அதிகம் இருக்கிறது. ஓரளவில் எழுதவும் இலகுவாய் உள்ளது. ஆனால் ஆசை யாரை விட்டது.

எங்கோ விட்ட குறை தொட்ட குறை இருந்திருக்கும் போல. பல வருடங்களாகவே, உரைநடையின் Cousin Brother என அழைக்கப்படும் கவிதை மேல் ஒரு பிரியம். அவ்வப்போது யோசித்து குட்டி குட்டி வார்த்தைகளில் எழுதிய அனுபவங்கள் இருக்கின்றன.

சமீபமாக இரண்டாண்டுகளாக கிட்டத்தட்ட தினமும் பாடல்கள் கேட்கிற வாய்ப்பு கிடைக்கிறது. கவிதை புத்தகங்களும் கைக்கு கிடைக்கின்றன. எப்படியோ கவிதை தோன்றுவதற்கான சூழலையும் உருவாக்கினேன்.

தமிழ் மொழி அழகிய மொழி. அழகிய வார்த்தைகளின் களஞ்சியம். இதமான வார்த்தைகளைத் தன்னகத்தே கொண்ட தனிப்பெரும் மொழி. தேனினும் இனிய மொழி. இவற்றில் எவருக்கும் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை என்பதும் உண்மை.

தமிழ்க் கவிதைகளில் புதுக் கவிதைகள் தவிர்த்து பிறவற்றில் மென்மையாக அல்லது வன்மையாகவே இலக்கணம் வழிந்தோடும். அது ஒன்றும் தவறில்லை. அதில்தான் அழகியல் பிறக்கும். அந்த வகையில் எனக்கு எதுகைப் பாடல்கள் மேல் பிரியம்.

இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பதுதான் எதுகை.

நேற்று (20-01-2013) மாலை வானிலை மாற்றம் காரணமாக மழைக்கான அறிகுறி தென்பட்டது. மழை எப்போதுமே, பொதுவாக கவிதைக்கான அறிகுறி! நானும் கவிதை எழுத ஆசைப்பட்டு மூன்று வரிகள் எழுதினேன். தமிழ் மொழி அழகிய மொழி என்று சொன்னேன் அல்லவா! அந்த அதிசயம் என்னை இழுத்துச் சென்றது. வார்த்தைகளை மாற்றி மாற்றி எதுகையில் 150க்கும் அதிகமான வார்த்தைகளில் எழுதி,  முடிக்க மனமே இல்லாமல் முடித்தேன்.

முழுமையாக எழுதிய பின் ஓரளவு திருப்தி ஏற்பட்டது. பரவாயில்லை. ஏதோ எனக்கு  எழுத வருகிறது எனத் தோன்றியது. இனி அவ்வப்போது எழுத முயற்சி நடக்கும். வெவ்வேறு இலக்கணங்களை மையப் படுத்தி.

எனது குட்டி-குட்டி கவிதைகளையும் (!) கவிதையாக மதித்து (!!) அவற்றையும் பாராட்டி ஊக்குவித்த அனைத்து தோழர்களுக்கும் எனது இதயத்திலிருந்து நன்றி.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஆனந்தம் எற்படுகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே ஆனந்தம் ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. இதில் நானும் ஆனந்தம் குறித்து நான் உணர்ந்தவற்றில் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் ஏதேனும் தோன்றலாம்.

 மழை நேரத்து தேநீர் ஆனந்தம்!

குடையிருந்தும் நனைந்தால் ஆனந்தம்!
மடை தாண்டும் வெள்ளம் ஆனந்தம்!
விடை சொல்லும் கேள்விகள் ஆனந்தம்!

குயில் பாடும் கீதம் ஆனந்தம்!
மயில் ஆடும்போதும் ஆனந்தம்!

தாகம் தீர்க்கும் தண்ணீர் ஆனந்தம்!
தேகம் குளிரும் காற்றும் ஆனந்தம்!
மேகம் மேல்படரும் வானவில் ஆனந்தம்!

மீளாத கனவுகள் ஆனந்தம்!
மூளாத போர்கள் ஆனந்தம்!
வாளாத நேரங்கள் ஆனந்தம்!

பசிக்கிற நேரத்து உணவுகள் ஆனந்தம்!
ருசிக்கிற வேளையில் இன்னும் ஆனந்தம்!
வசிக்கிற வீட்டின் சூழல் ஆனந்தம்!

பேசுகிற வார்த்தைகள் ஆனந்தம்!
கூசுகிற வெளிச்சம் ஆனந்தம்!
வீசுகிற தென்றல் ஆனந்தம்!
ஏசுகிற எதிரியும் ஆனந்தம்!

கண்டிக்கும் நண்பன் ஆனந்தம்!
தண்டிக்கும் அன்னை ஆனந்தம்!
துண்டிக்கும் மின்சாரம் ஆனந்தம்!
வேண்டிக் கொள்ளும் வரங்கள் ஆனந்தம்!

கரை தொடும் கடலும் ஆனந்தம்!
நுரை பொங்கும் அலையும் ஆனந்தம்!
இரை தேடும் பறவைகள் ஆனந்தம்!

பனி விழும் புல்வெளி ஆனந்தம்!
கனி தரும் மரங்கள் ஆனந்தம்!
இனி வரும் காலங்கள் ஆனந்தம்!

கொட்டுகிற மேளம் ஆனந்தம்!
திட்டுகிற தம்பியும் ஆனந்தம்!
மீட்டுகிற இசையும் ஆனந்தம்!

கதை சொல்லும் குழந்தை ஆனந்தம்!
அதைக் கேட்கும் பொழுதே ஆனந்தம்!
விதை வளரும் செடிகள் ஆனந்தம்!

சிந்திக்கிற எண்ணங்கள் ஆனந்தம்!
சந்திக்கிற உறவுகள் ஆனந்தம்!
நிந்திக்கிற துன்பங்கள் ஆனந்தம்!

வண்ணம் தீட்டும் மழலை ஆனந்தம்!
எண்ணம் வளர்க்கும் சிந்தனை ஆனந்தம்!
மண்ணைத் தொடும் வியர்வை ஆனந்தம்!
விண்ணைத் எட்டும் வெற்றி ஆனந்தம்!

எதுகையில் எழுதினால் ஆனந்தம்!
அதுவரை அனைத்தும் ஆனந்தம்!
இதுவும் கவிதையென்றால் இன்னும் இன்னும் ஆனந்தம்!

இன்றைய நாள் இன்னொரு வகையில் எனக்கு சிறப்பான நாள். ட்விட்டர் தளத்தில் இன்று எனக்கு மூன்றாம் ஆண்டு துவங்குகிறது. இதுவரை துணைநின்ற தோழர்கள், வழிகாட்டிகள் அனைவருக்கும் நன்றி.

எனக்கு தளத்தை அறிமுகம் செய்த அண்ணன் ஓஜஸிற்கும், எப்போதும் வழிகாட்டுகிற மதிப்பிற்குரிய பாலா சாருக்கும் நன்றி.

இதுவும் ஆனந்தம்தான்!

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா?
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா?
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்!
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்!
குயில்களும், மலர்களும் அதிசயம்!
கனவுகள், கவிதைகள் இரகசியம்!!

Advertisements

4 thoughts on “ஆனந்தமும், இன்னும் கொஞ்சமும்…

 1. உங்களின் தமிழ் படிக்க படிக்க ஆனந்தம்!
  எங்களின் எண்ணங்கள் படிக்க
  உங்களுக்கு ஆனந்தமா?

  சும்மா முயற்சி செய்தேன். எதுகை புரிந்தது. ஒரு வரியில் இத்தனை சொற்கள் இருக்க வேண்டும் என்று கணக்கு இருக்கிறதா?

  உங்களுக்கு ஆனந்தம் ஏற்படுத்தும் பல விஷயங்கள் பலருக்கும் ஆனந்தம் ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

  வாழ்த்துகள்!

 2. எதுகையில் எழுதுவது எல்லோர்க்கும் பிடிக்கும்.
  எது கை கொடுக்காவிட்டாலும் புலவனுக்கு எதுகை கைகொடுக்கும் என்பார்கள்.
  காரணம் இன்னும் சொல்லலாம்.
  எதுகையில் தமிழின் அழகு (என் கருத்து) இன்னும் அருமையாக வெளிப்படும். புதிய அறிந்த/அறியாத சொற்கள் கூட பரவசப்படுத்தும்.

  முதல் எழுத்து ஒன்றி வந்தால் அது மோனை.

  அதிலும் முயன்று பாருங்கள்.

  எளிய வார்த்தைகள் -தமிழில்
  ஏராளம்.

  ## விருப்பம் இருப்பின் இதையே முதல் வரியாகக் கொண்டு துவங்குங்கள்.

  நானும் தமிழில் சாதாரணன் தான். இலக்கணம் கற்று பல ஆண்டுகளாகி விட்டன.
  ஆகவே எனக்கும் இத்தனை வார்த்தைகளில் எழுத வேண்டுமா எனத் தெரியாது. பெரும்பாலும் அப்படியொன்றும் விதி இருக்காது என்றே கருதுகிறேன்.

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s