அன்புள்ள தம்பிக்கு…

அன்புள்ளதம்பிக்கு,

அண்ணன் எழுதியது. உனக்காக நான் ஒரு கடிதம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணித் துவங்குகிறேன். எவராலும் சுலபமாக புரிந்துகொள்ளப்படாத சகோதரர்கள் நாம் என்று நினைக்கிறேன். நாம் உண்மையிலேயே நல்ல சகோதரத் தன்மையோடு இத்தனைகாலமும் வாழ்ந்துள்ளோமா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன்.

இருவருக்குமே முதிர்ச்சியில்லை என்று சொன்னால் அது கொஞ்சம்தான் உண்மை. காரணம் இணக்கமான சகோதரர்களை நம் வாழும் காலத்திலேயே கண்டுள்ளோம். நம் இருவர் மீதும் நம் பெற்றோர் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டுள்ளார்கள். நம்முடைய ஒவ்வோர் வெற்றிக்கும் பின்னால் அவர்களின் புன்னகையும், கண்ணீரும் நமக்கு அத்தனை துல்லியமாகப் புரிவதில்லை என்று நினைக்கிறேன்.

நம் அளவிற்கு சண்டையிட்டு அடிக்கடி குலாவுகிற சகோதரர்கள் சொற்பம்தான் என்று நான் நம்புகிறேன். அடக்க இயலாத கோபங்களை உன் மீது நான் கொண்டிருந்த தருணங்களும் உண்டு. அளவில் அடங்காத அன்பை உன் மீது கொண்ட காலங்களும் உண்டு.

உன் அளவிற்கு என்னைப் புரிந்துகொண்டவர்கள் இவ்வுலகில் எனக்குத் தெரிந்து எவருமில்லை. அத்தனை துல்லியமாக என் எண்ண ஓட்டங்களைப் புரிந்தவன் நீ. நீ இல்லாத தருணங்கள் இரணமாகியபோதுதான் இதை உணர முடிந்தது. உன் உணர்வுகளின்பால் எனக்கு அத்தனை நாட்டம் இல்லை.

சமீப காலங்களில் என்னை அடிக்கடி கோபம் செய்யும்போதும் கூட அத்தனை வெறுப்பு கண்டதில்லை என் மனம். காரணம் நீ இல்லாது நான் தவித்த தருணங்கள்தான்.

நீ சரியாக கணிப்பாய். என்னை மற்றவர் முன்னிலையில் உயர்த்திட, என்னை நானே செதுக்கிட உன் அறிவுரைகள் பயன்பட்டன. பல தருணங்களில் நான் பெறவேண்டிய புகழ்களை நீ அறிந்தும்-அறியாமலும் தட்டிச் சென்றிருக்கிறாய். பரவாயில்லை. நான் வருத்தம் கொள்ளவில்லை. ஏனென்றால் நீ என் தம்பி!

நான் எப்போது சிறப்பாக செயல்படுகிறேனோ அப்போது மட்டுமே உன் பாராட்டு கிடைக்கும். சமீபத்திய திட்டுகள்  அனைத்தையும் இப்படி நினைத்து கொள்கிறேன். நன்றி.

நான் அவசரத்தில் வார்த்தைகளை உதிர்த்தாலோ, தவறுகள் ஏதும் நேர்ந்தாலோ என்னை என்னுள் இருந்து மீட்கிற இரட்சகன் நீ. பெருமைக்கு சொல்லவில்லை. என்னைப் பற்றி அறிந்தவன் நீ.

என் நண்பர்களை உன் நண்பர்களாய் பாவித்தவன் நீ. அவர்களுக்கும் நன்றி சொல். உன் அனுபவங்களையெல்லாம் என்னோடு பகிர்ந்து வழி சொன்னவன் நீ. மிக்க நன்றி.

அக்காள் கூட சொன்னாள். இப்போதெல்லாம் அவனைப் பேர் சொல்லாமல் தம்பி என்றே சொல்கிறாய். இக்குணம் எப்படி வந்தது.?  அட! ஆமாம்!!   என்று எனக்கே தோன்றியது. அப்படிப்பட்டவன் நீ!

உன்னைப் பற்றி என் ஆசிரியர்கள் என்னிடம் விசாரித்த தருணங்கள் பெருமையானவை. நம் பாட்டிக்கும் உள்ளூர புன்னகை தரும் அளவிற்கு உன் கல்வித்தரத்தை உயர்த்திக் கொண்டாய். எனக்கு அந்த தருணம் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்காது. வாழ்த்துகள் தம்பி!

எத்தனைப் பெருமையாய் உன்னை நான் சொன்னாலும் நான்தான் உன்னை விடச் சிறப்பானவன் என்கிற கருத்து பிறரிடத்து வந்துள்ளது. இனியும் வந்தால் கொஞ்சம் மகிழ்வேன். உனக்கு அதற்காகவும் நன்றி!

எப்போதும் எனக்குள் தோன்றக்கூடிய தலைக்கனங்கள், பிறர் உண்டாக்குகிற தேவையற்ற வீண் புகழ்கள் யாவையும் அழிக்கிற சக்தி எப்போதும் உனக்குண்டு. மிக்க நன்றி. எப்போதும் எனக்கானவன் நீ! வாழ்வின் எந்த தருணங்களிலும் என்னைப் பிரியாதே தம்பி!

உனக்கும், எனக்கும் பல்வேறு விடயங்களில் வேறுபட்ட விருப்பங்கள் இருக்கலாம். அதனாலென்ன? என் பிரியம் என்றும் உன்னோடுதான்!

எனக்கு ஒரு அசட்டுத்தனமான எண்ணம்  இருக்கிறது. உன்னிடம் கூட சொல்லியிருந்தேன். அதேதான் இப்போதும்!!!

“நீ பெற்ற வெற்றிகளை விட என் தோல்விகளின் எண்ணிக்கை அதிகம். நீ பலமுறை வெற்றியின் ருசி கண்டவன். அதனால் உன் போராட்டம் வெற்றி நோக்கியதாய் இருக்கும். நீ தோல்வி காணவும் போவதில்லை. ஆனால் நான் பெறும் ஒற்றை வெற்றி கூட உன் வெற்றியைவிட வலியதாய்த் தோன்றுகிறது எனக்கு.

வெற்றியை மட்டுமே ருசிக்கிற வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன் நீ. தவறாகச் சொல்லவில்லை. தோல்விகளுள் மூழ்கியவனைப் போய்க் கேள்! வெற்றியின் ருசியை முழுதாய் அறிந்தவன் அவன்தான்!!

அதிகம் எழுத வேண்டும். பலவற்றையும் பகிர வேண்டும். ஆனால் நீயும் எழுத விருப்பம் கொண்டால்..? என்ன செய்வது? நீ ஏதேனும் சொல்ல விரும்பினால் எனக்கு அடுத்த கடிதத்தில் எழுதவும்.

உன் கடிதம் காண விரும்பும் ,

உன் அண்ணன்.

2 thoughts on “அன்புள்ள தம்பிக்கு…

  1. உடன் பிறந்தவர்களுக்குள் ஏற்படும் சண்டை, மனஸ்தாபம் அவைகளின் நடுவே அவ்வப்போதுவெளிப்படும் பாச உணர்வுகள் எல்லாவற்றையும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

    தம்பி உங்களுக்குப் போட்டி என்று இந்த வயதில் தோன்றலாம். வயதான பின் இந்த எண்ணம் மாறிவிடும்.

    நானும் என் அக்காவைப் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தால் படியுங்கள்.
    http://wp.me/p2RUp2-e

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s