ஆதங்கமும்,கவிதையும் இன்னபிறவும்…..

நாமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறதையெல்லாம் நாமாகவே எழுதிவிடுகிறதில்லை. வேறொருவர் மூலமாக வெளிப்பட்டுவிடுகிறது. அதை நம் சோம்பேறித்தனம்தான் என்பதா?

இல்லையில்லை….. அப்படி முழுவதுமாக சொல்லிவிட முடியாதுதான். ஆனலும் நம் ஆதங்கத்தை…..நாம் வெளிப்படுத்தும் ஆதங்கத்தை…..நாம் வெளிப்படுத்த நினைக்கும் விஷயங்களை பிறர் வெளிப்படுத்துகையில் மனம் கொஞ்சம் ஆறுதல் அடையும்தானே! அப்படித்தான் எனக்கும் இருந்தது. இங்கே வெளியாகியிருக்கிற பதிவு வேறொரு தளத்தில் வேறொரு நபரால் எழுதி பதியப்பட்டது.

ஆனாலும் என்ன? நல்ல விடயங்களை யார் சொன்னாலும் கேட்கலாம் தானே. நாம் அன்றாடம் கேள்விப்படுகிற , நம்மை சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒரு விடயம். கொஞ்சம் யோசித்தாலே பகீர் என்றிருக்கிறது. (எனக்கு!)

நீங்களும் படியுங்களேன்….உங்கள் பதிலும் ’ஆம்’  என்றிருக்கும் என்றே நம்புகிறேன்.

பதில் சொல்லுங்கள் அம்மா …மொழி பெயர்ப்பு கவிதை

பார்ட்டிக்கு போனேன் அம்மா

நீ சொன்னதை மறக்கவே இல்லை

குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்.

சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்

காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மா
ஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது

ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
“அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் ”
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்

நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீ சீக்கிரம் வரமாட்டாயா என்று ஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப் போல் வெடித்தது என் வாழ்க்கை

எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.

இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும் அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை

நான் போன பார்ட்டிக்கே கூட அவனும் வந்திருக்கக் கூடும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .

எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக

என்னை மோதியவன் நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்ன செய்ய முடியும்?

தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கச்சொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
“நல்ல பையன்” என்று என் கல்லறையில் எழுதி வையுங்கள்.

எவரேனும் அவனுக்கு சொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று.
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்

என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் …

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

தமிழில் : பூங்குழலி

இது http://www.eegarai.net/  தளத்தில் இருந்து எப்போதோ படித்த கவிதை.
ஒரு வருடத்திற்கு முன் எனது ப்ளாக்கர் தளத்தில் பதிந்த கவிதை.

ஆசிரியர்: தமிழ்

எழுத்து, வாசிப்பு இரண்டும் பிடிக்கும். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் படிப்பதை விரும்புவேன். எப்போதாவது இவற்றை எழுதுவேன். மொழியியல், வரலாறு, தொழில்நுட்பம் இவற்றில் இப்போதைக்கு ஆர்வம். இனி எப்போதைக்குமே!

“ஆதங்கமும்,கவிதையும் இன்னபிறவும்…..” இல் 15 கருத்துகள் உள்ளன

  1. கவிதையை படித்ததும் மனது கனத்து விட்டது. கவிதையின் தாக்கம் ரொம்ப நாளைக்கு இருக்கும் போலிருக்கிறது – நானும் ஓர் அம்மா என்பதாலோ என்னவோ!

    எனது பதிவில் இணைப்பு கொடுக்கலாமா உங்கள் அனுமதிக்கு பின்?

    1. எந்த பதிவையும் நீங்கள் தாராளமாய் பயன்படுத்திக்கொள்ளலாம் அம்மா! தங்கள் எண்ணங்களுக்கும், கருத்திற்கும் நன்றி

  2. மிக அற்புதமான கவிதை. நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்படி ஒரு கனமான கவிதை படிக்கிறேன். ரஞ்சனி அம்மா கூறியது போல இந்த கவிதையின் பாதிப்பு நீ்ண்ட நாள் மனதிற்குள் இருக்கும் போல! நன்றி.

    1. சாலைகளில்(விபத்துகளில்)இறப்பவர்கள் எல்லோருமே தவறு செய்தவர்கள் இல்லை. சூழ்நிலை மாற்றிவிடுகிறது.கொஞ்சம் விழிப்புணர்வு நமக்கெல்லாம் தேவைப்படுகிறதுதானே!

  3. என்ன சொல்வது ஒரு சமூகமே கண் முன் தெரிகிறது. அதுவும் தமிழ் சமூகம் தான் எனக்கு கண் முன் தெரிகிறது. அருமையான மொழியாக்கம்.பதிவுக்கு நன்றிகள்

  4. குடிக்கிறவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஈட்டியாய்க் குத்தினாற்போல
    கவிதை அவர்களைச் சென்றடையுமானால் , மற்றவர்களைப்பற்றி சிந்தனை இருக்குமானால், சற்றேனும் திருந்தினால்க்கூட போதும். பிறரை தன் வழிக்கு கூப்பிட பயந்தால்கூட போதும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்றொரு புராண வசனம் ஒன்று உண்டு.. நல்ல உணர்வுக் கவிதை.

  5. கவிதை ……யாரோ தவறு செய்ய யாரோ பலியாகிறார்கள்…பெறும்பாலும் இந்த முரண் தான் விதியாக இருக்கிறது.,நல்லதொரு பகிர்வு.
    //என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
    இது கொஞ்சமும் நியாயமில்லை//

    இறந்து கொண்டிருக்கிற தருவாயில் அந்த மனிதன் புலம்புகிறான்….(பயனற்றதாக போகப்போகிற அந்த புலம்பல்கள் கவிதையாகி பலர் மனதை காயம் செய்கிறது) 😦

  6. ரஞ்ஜனி அம்மாவின் தளத்தில் இருந்து இங்கு வந்தேன்.

    —என் மூச்சடைக்கிறது அம்மா
    ரொம்ப பயமாய் இருக்கிறது
    எனக்காக அழாதே அம்மா..
    எனக்காக எப்போதும் நீ இருந்தாய் …—

    😦 எப்படி இருந்திருக்கும் இறக்கும் தருணத்தில் அந்த அன்பு மகனுக்கு…

  7. “இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
    நான் சத்தியமாக குடிக்கவில்லை .
    அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
    அவர்கள் எதையும் நினைக்கவில்லை”

    மனம் கனத்து விட்டது…
    அழகான ஆக்கம்…

  8. நம்மை நாம் பாதுகாத்தாலும் சமூகம் நம்மளை பாதுகாக்க தவறுகிறது…குடித்துவிட்டு ஓட்டும் மனிதர்களால் …

    //நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
    குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
    இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?//

    கண்கள் கசிந்து விட்டது …

    நன்றி தமிழ் !

மறுமொழியிட