கோவர்த்தனன் -3

   கோவர்த்தனன் -3* என்றுதான் தலைப்பிட வேண்டும். ஏனென்றால் இது வெறும் மூன்றாம் அத்தியாயம் அல்ல. இரண்டாம் அத்தியாயம் மிகவும் குறைவாக இருந்ததென்றும், சுவாரசியம் இல்லையென்றும் நண்பர்கள் பலரும் சொல்லியபடியாலும், இந்த அத்தியாயம் வருவதற்கு மிகத் தாமதம் ஆகிவிட்டபடியாலும், வாசகர்களுக்கு ஒரு சிறப்பான வாசிப்பு உணர்வைத் தர(!) எண்ணியதாலும், புதிய வாசகர்களின் ஆதரவைப் பெற எண்ணியுமாய் (ஸ்ஸ்ஸ்!) இப்பதிவை முதல் மூன்று அத்தியாயங்களாய் வெளியிட விருப்பம்.

இன்னோர் காரணம் என்னவென்றால், தொடர்ந்து இத்தளம் இயங்குவது தற்காலிகமாக தடைபடக் கூடும் என அஞ்சுவதால். மின் தடை, மற்றும் எனது சொந்த அலுவல் காரணமாயும் அடுத்த அத்தியாயம் கொஞ்சம் ( ! ) தாமதமாகலாம் ….

ஒரு வேண்டுகோள்:  இப்பதிவை/கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் என்கிற பதிவைப் படித்துவிட்டு தொடரவும். காரணம் இந்த தொடருக்கான முன்னுரையைப் படித்து, பிறகு கருத்து சொல்லலாம்.

                                                       கோவர்த்தனன்
அந்த இரவை அவரால் கண்டிப்பாக மறக்க முடியவில்லை. அவர் நிலையிலிருந்து பார்க்கும் எவராலும் அந்த இரவை மறக்க முடியாது. காரணம் இருக்கிறது. அன்றுதான் அவரின் ஆருயிர் மகள் காணாமல் போனாள். இன்றோடு இரு நாட்கள் முடிந்துவிட்டது. அவரின் கண்ணீரும் வற்றிவிட்டது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் அவரைக் காண முடியாமல் அவரின் தோழர் ஒருவர் அவருக்கு ஆறுதல் கூறினார்.
“நீங்கள் கண்டிப்பாக என்னுடன் இப்போ வரணும்”.
“எங்க?”
“கண்டிப்பா காவல்நிலையத்திற்கு அல்ல.”
.”நீ காவல்நிலையத்துக்கு அழைத்திருந்தால் நான் மறுத்திருப்பேன். எனக்கு நன்றாகத் தெரியும். நமது ஊரில் காவல்நிலையம் செல்வதெல்லாம் வீண் வேலை. உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும் யார் குற்றவாளி என்று.“
“யார் குற்றவாளி என்று உங்களுக்கு தெரிந்தபட்சத்தில் அவனுக்கு நியாயமான தண்டனை கிடைக்க வேண்டாமா?”
என்ன சொல்றீங்க நீங்க?”
என்னோடு வாருங்கள். சொல்கிறேன்.
இப்போதேவா?
இல்லையில்லை. நாளை காலை.
சரி வர முயற்சிக்கிறேன்.
அந்த இரவு சிறப்பாக ஒருவேளை அவருக்கு இருந்திருக்கலாம். அடுத்த நாள் அத்தனை நன்றாக இல்லை. பொழுது விடிந்த சில மணிநேரங்களில் காவலர்கள் இருவர் வீட்டின் கதவைத் தட்டினர்.
என்ன விஷயம் என அவர் கேட்பதற்குள்ளாகவே காவல் வண்டியில் அவர் ஏற்றப்பட்டார். அந்த வண்டி கரும்புகையைக் கக்கியபடி ஒரு பூங்காவின் வாசலை அடைந்தது. நேற்று மாலை வரை பலருக்கும் இனிய தருணங்களைத் தந்து கொண்டிருந்த பூங்கா இரவில் பரபரப்பானது. ஒரு கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஏனெனில் ஒருமாதிரியான துர்நாற்றம் அப்பகுதியில் வீசியதாக புகார் எழுந்தது. இரவு முழுவதும் நடந்த சோதனையில் பூங்காவின் பின்புற வாசலுக்கு முன் மரங்களிலிருந்து விழுந்த பூக்கள் குவிக்கப்பட்டு ஒரு குன்றினைப் போல் காட்சியளித்தன. காவல் ஆய்வாளர் சந்தேகத்தின் அடிப்படையில் பணியாளர்களின் உதவியோடு அந்த குவியலை அகற்றச் சொன்னார்.
உண்மையிலேயே சரியாக கணித்தாரா? இல்லை எதேச்சையாக கூறினாரா? எனப் புரியாமல் பணியாளர்கள் விழித்தனர். நிச்சயமாக இதுபற்றிய விசாரணையில் பலர் தலை உருளக்கூடும் என்றே ஆய்வாளர் நினைத்திருப்பார். காரணம் இருந்தது. உள்ளே ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடந்தது.
வாய் துணியால் மூடப்பட்டிருந்தது. கை ரத்தம் தோய்ந்த நிலையில், காயங்களுடன் மேல்நோக்கியவாறு இருந்தது. மொத்தத்தில் சடலம் முழுமையாக சிதைந்து காணப்பட்டது. அப்பெண் துன்புறுத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு ஆய்வாளர் வந்தார். இவ்வளவும் முன்தினம் மாலையிலிருந்து இன்றையதினம் காலை வரை நடந்தவை

.
இளம்பெண் கொலை என்று தெரிந்தவுடன் கடந்த ஒரு மாதத்தில் காணாமல்போன பெண்களைப் பற்றிய தகவல்கள் கேட்டு அத்தனை காவல்நிலையங்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது. இதன்பேரில் மொத்தமாய் ஏழு பேர் பூங்கா வாசல் முன் காவல் வண்டியில் வந்து இறங்கினர்.
இதற்குள்ளாக தகவல் தெரிந்து பத்திரிகையாளர்கள் பூங்காவைச் சுற்றிவளைத்தனர். ஆனால் காவலர்கள் அவர்கள் யாரையும் பூங்காவினுள் அனுமதிக்கவில்லை. எனினும் இளம்பெண் கொலையுண்டதாக தகவல் நகரம் முழுவதும் மின்னலை விடவும் வேகமாய் சென்று சேர்ந்தது.

இதனிடையே புகார் அளித்த ஏழு பேரும் பூங்காவின் பின்புறம் அழைத்துச் செல்லப்பட்டனர். சில அடையாளங்கள் சொல்லப்பட்டு காண்பிக்கப்பட்டது. இதில் சிலர் இல்லையென மறுத்து வெளியேறினர். ஒவ்வொருவர் உள்ளத்திலும் நம் பெண்ணாயிருக்குமோ என்ற பதைபதைப்பை உணர முடிந்தது. நான்காவது நபராக முன்சொன்ன நபர் வந்தார். அவர் சில அடையாளங்கள் சொல்ல, ஒரு மூத்த காவலர் உணர்ச்சிப்பெருக்குடன் அவரை பின்னால் உந்திச் சென்றார்.
“அய்யா கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதக் கேளுங்க.அவசரப்படாதீங்க .மனச கல்லாக்கிடுங்க ”
“என்ன சொல்ல வர்றீங்க ” என்றவரின் கண்கள் கண்ணீரைச் சுமந்து நின்றன.
“இறந்தது உங்க பொண்ணுதான்.”
“………………..”
“எப்படியும் எங்க டிபார்ட்மெண்ட்ல விசாரணை பண்ணி…… ”
“பொணத்த அடக்கம் பண்ண தந்துடுவீங்க. அதானே!”
“அது இல்லீங்க சார். கொலையாளிய கண்டுபுடுச்சு…….”
“தூக்குல போட்ருவீங்களா?”
“இல்லீங்க. சரியான தண்டனைய வாங்கித் தருவோம்.”
“……..”
நீதியின் மீது நம்பிக்கையைத் தொலைத்தவராய் அவ்விடத்தை விட்டு அகன்றார்.
“சார். போஸ்ட் மார்ட்டம் ரிப்போட் வந்ததும் வீட்டுக்கே பாடிய கொண்டு வந்துருவோம்.”
“…………”

பூங்காவை விட்டு வீடு வந்து சேர்ந்தார் அவர். இப்போது அப்பெண்ணின் தாய்க்கும் நம்பிக்கை தகர்ந்தது. இருவருமே ஒருவரையொருவர் தேற்ற முடியாத துன்பத்துள் ஆழ்ந்தனர். அவ்வளவையும் கண்ட வானமும் அப்போது சாரலாய் அழுதது. சிறிது நேரம் கழித்து கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. சென்று கதவைத் திறந்தார்.
“சார். நான் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வர்றேன். விசாரணைக்காக வர்றீங்களா? ”
“…….”
“சார். நீங்க அமைதியா இருந்தா உங்க பொண்ண கொலை பன்னுனவன கண்டு பிடிக்க முடியாது.”
பிறகு மனைவி வலியுறுத்தியதால் ஒரு வழியாக கிளம்பிச் சென்றார் அவர். வந்த காவலருக்கு வயது இருபத்தைந்து அல்லது கொஞ்சம் முன்ன-பின்ன இருக்கலாம். செல்லும் வழியில் அவரிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்தார்.
“சார்…. நீங்க சொல்ற பதில வச்சுதான் நாங்க கொலையாளிய பிடிக்க முடியும். ஸோ ப்ளீஸ் கோ-ஆப்ரேட் வித் அஸ் .”
“தம்பி. உன்கிட்ட ஒண்ணு கேக்கட்டுமா?”
“கேளுங்க சார்.”
“கொலை பண்ணுனவன்-னு சொன்னீங்களே. அப்ப கொலை பண்ணவன் ஆண் தான்னு முடிவு பண்ணீட்டீங்களா.”
“அப்படி இல்ல சார். பொண்ண கொடூரமா கொலை பண்ணின அடிப்படையில ஒரு யூகம். அவ்ளோதான்.”
“ஒரு வேளை இத ஒரு பொண்ணே பண்ணிருக்கலாமே!”
“அதுக்கு பெரிய வாய்ப்பில்லை சார். கொலை பண்றவரைக்கும் வேணா ஒக்கே. பட் குழி தோண்டி புதைச்சு மூடிருக்குறத பாத்தாலே தெரியும். எனிவே இந்த ரூட்லயும் விசாரணை பண்றோம் சார். ”
இந்த உரையாடல் முடியவும் காவல் விசாரணை அலுவலகம் சென்று சேரவும் சரியாக இருந்தது. இருவரும் விசாரணை அதிகாரியின் அறைக்குள் சென்றனர். அங்கிருந்த நாற்காலியில் அவர் அமர பின்புறம் அந்த காவலரும், இன்னொரு காவலரும் நின்றிருந்தனர். இப்போது அங்கே விசாரணை ஆரம்பமானது.

“உங்க பேர் என்ன?”
“மூர்த்தி”
“இந்த விசாரணைல எல்லா தகவல்களையும் உண்மையா கொடுங்க. அப்பதான் குற்றவாளிய சீக்கிரம் பிடிக்க முடியும்.”
“சரிங்க சார்.”
“இதுக்காக உங்க பின்னாடி நிக்கிற ரெண்டு பேரையும் நியமிச்சுருக்காங்க. உங்கள கூட்டிட்டு வந்தார்ல அவர் பேர் செழியன். இன்னொருத்தர் வேல்ராசு. ”
செழியனும், வேல்ராசும் மூர்த்திக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தனர். வேல்ராசு செழியனைக் காட்டிலும் மூத்தவர். இருவரும் அமர்ந்த பின்னர் விசாரணை அதிகாரி தொடர்ந்தார்.
“இன்னைக்குள்ளவே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எங்களுக்கு கிடச்சிடும்னு நம்புறோம். முடிஞ்சமட்டும் சீக்கிரமா ஒங்க பொண்ணு பாடிய குடுத்துருவோம். நீங்க இப்ப போகலாம்.”
மூர்த்தி அறையை விட்டு வெளியேறியவுடன் விசாரணை அதிகாரி மற்ற இருவருக்கும் வழக்கமான கட்டளைகளைக் கூறிச் சென்றார்.
செழியன் மட்டும் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றான். எப்படியாவது இக்கொலை பற்றிய உண்மையை விரைந்து கண்டு கொள்ள எண்ணியிருக்கலாம். மருத்துவர் அறைக்குள் செழியன் நுழைந்தான். சம்பிரதாயமான அறிமுகத்திற்குப் பின்,
“சார். இதுவரையான நிலவரம் பத்தி சொன்னா ரொம்ப உதவியா இருக்கும்.”
“எஃப்.ஐ.ஆர். போட்டாச்சா சார்?”
“நீங்க சொல்ற தகவல வச்சுதான் எழுதனும் சார்.”
“சரி. அந்த பொண்ணு சாதாரணமா சாகல.”
“தெரியும் சார். பாடிய வெளிய எடுக்கும்போதே கண்டுபிடிச்சாச்சு.”
“வெறும் காயங்கள மட்டும் நான் சொல்லல சார்.”
”….”
“அந்த பொண்ணக் கற்பழிச்சுருக்காங்க. ஆமா. உடம்புல இருக்க கீறல்களும் சரி, வாயில் கட்டிருந்த துணியும் சரி. என் முடிவதான் சொல்லுது.”
”அதாவது சார். கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமோ?”
”எக்ஸாக்ட்லி. அவ ஒருவேளை உயிருக்குப் போராடி கொல்லப்பட்டிருக்கலாம்.”
“அதென்ன சார் ஒருவேளை?”
“உண்மை என்னனு நீங்கதான் சார் கண்டுபிடிக்கணும்.”
”ஒக்கே சார். ஃபுல் ரிப்போர்ட் வந்தவுடனே சொல்லிடுங்க.”
செழியன் தகவல்களை வேல்ராசிடம் சொல்லி பதிவு செய்கிறான். இதனிடையே செழியன் மீண்டும் மூர்த்தி இல்லத்திற்கு செல்கிறான். சாதாரண உடையில்.
“சார்….”
“வாங்க சார். என்ன இந்நேரத்தில?”
“சும்மாதான் சார் வந்தேன். வாக்கிங் போற பழக்கம் இருக்கா சார்?”
“என்ன திடீர்னு ஏதாவது விசாரணையா?”
“அய்யோ! அப்டிலாம் இல்ல சார். தனியா பேசனும். அதான்!”
சில நிமிடங்களில் இருவரும் நகரின் முதன்மை வீதியில் சென்று கொண்டிருக்கின்றனர். நகரமோ பகல்நேர பரபரப்பைத் தொலைத்து அமைதியைச் சந்திரன் வழியே பாய்ச்சியது. அப்படி ஒரு சம்பவமே காலையில் நடந்ததாகவே யாருக்கும் கவலையில்லை.
செழியன் தான் தொடங்கினான்.
”சார். ஒரு ரிக்வெஸ்ட். ”
“என்ன.”
“என்னை பொதுஇடத்துல மட்டும் சார்னு கூப்டுக்கோங்க!”
“அப்டின்னா….!”
“சாதாரணமா தம்பினே கூப்பிடுங்க.”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“மதியம் உங்க முகத்த பாத்தவுடனே ஒரு ஞாபகம் சார். ஒரு மரியாதை ஏனோ தெரியல….”
“சரிங்க தம்பி. இப்ப எதுக்காக கூப்பிட்டீங்க?”
“வழக்கு பத்திதான். சில விசயங்கள சொல்லனும். அப்புறம் கேட்கனும்.”
“என்ன விசயம்?”
“அதாவது சார்……. உங்க பொண்ணு சாதாரணமா சாகல……. கற்பழிச்சு கொல்லப்பட்டிருக்காங்க.”
”நான் காலையில பாத்தப்பவே தெரிஞ்சுடுச்சு தம்பி.”
“அப்ப எனக்கு நீங்க சில விசயங்கள சொல்லனும்.”
”என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும் தம்பி. யார் மேல சந்தேகம்னுதானே! ”
“எக்ஸாக்ட்லி சார்.”
“அத நான் உண்மையான விசாரணையிலேயே சொல்வேனு நீங்க எதிர்பாக்கல அப்டிதானே!”
“…….”
“உள்ள எனக்கிருக்கிற வலி எனக்குதான் தம்பி தெரியும்.”
“…………”
“சந்தேகம் எனக்கு முன்னாடி என் பொண்ணுக்கே வந்திடுச்சு தம்பி. அப்பவே கொஞ்சம் தயாரா இருந்திருக்கனும்.”
”சார். நான் ஏன் தனியா இத கேக்கிறேன்னா இந்த கேஸ எப்படியாவது நான் நல்லபடியா முடிக்கனும்னு ஒரு வெறிதான் சார். நீங்க தயங்காம, மறைக்காம சொல்லுங்க சார்.”
”…….”
“உங்களோட அமைதியே சில உண்மைகள சொல்லுது சார்.”
“சரி. அப்ப அந்த உண்மைகள சொல்லுங்க தம்பி.”
“உங்க பொண்ணுக்கு இப்படி ஏதாவது நடக்கும்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும்தானே?”
“ஆமாம். என் பொண்ணுக்கு கூட தெரியுமே!”
“சார். எனக்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றீங்களா?”
“சொல்றேன் தம்பி. ஆனா நாளைக்கு காலைல. இப்ப வேணாம். லேட்டாயிடுச்சு. ஒய்ஃப் தனியா இருப்பா. அவளையாச்சும் நான் பாதுகாக்கனும்ல.”
“…….”
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். இருவர் முகத்திலும் தோன்றிய உணர்ச்சிகளை வார்த்தைகளில் சொல்லி உணர்ச்சிகளைக் குறைக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக இருவரும் தத்தமது வீடுகளுக்கு திரும்பினர். செழியனின் மனம் மட்டும் குழம்பியிருந்தது. மூர்த்தியின் மனதை அடுத்த நாளிலாவது அறிய எண்ணினான்.
҉                            *****************************************************************       01

 

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் முந்திய நாளைப் போல இருப்பதில்லை. ஒவ்வோர் நாளும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மனம் தான் உணர மறுக்கிறது. நமக்கு தோதான நிகழ்வுகள் மட்டுமே விரும்பக்கூடிய மாற்றங்களாக இருக்கின்றன.

இப்போது கூட நகரத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இது எத்தனை பேருக்கு இன்பம் தந்திருக்கக்கூடும்? வீடே இல்லாத எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? அவர்கள் எல்லோருமே மழையை ஆராதிப்பார்களா? சில இயற்கை ஆர்வலர்களுக்கும், வெயிலால் பகலில் பாதிப்படைந்தவர்களும் புளாங்கிதம் அடையக் கூடும். ஆனாலும் புவியில் உயிர் செழிக்க மழை அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மூர்த்தியின் மனதுள் ஏதோ பெரும் பாரம் இருப்பதை தெரிந்து கொண்டான் செழியன். அதை எப்பாடுபட்டாவது அறிய வேண்டும். இல்லாவிட்டால் இந்த வழக்கில் ஒரு துரும்பைக் கூட கிள்ள முடியாது. அவர் பெண்ணுக்கும் சந்தேகம் இருப்பதாக கூறினார். இந்த புள்ளியில் தொடங்கினால் ஏதேனும் துப்பு கிடைக்கும். இவருக்கு குற்றவாளி யார் என தெரிந்திருக்கும் பட்சத்தில் வெகு சுலபமாய் தண்டனை பெற்றுத் தர முடியுமே? அவர் உண்மையிலேயே மறுப்பதானால் வேறு பிரச்சினைகள் இருக்குமா? அப்படியானால் சொந்தப் பிரச்சினை அல்லது வேறு ஏதாவது பெரிய இடத்து விவகாரமாய்தான் இருக்கக் கூடும்.
ஆக மொத்தத்தில் வழக்கை விட சிக்கலாய்ப் போனது செழியனின் மனம்.
மறுநாள்.
முன்தினம் பெய்த மழை தற்போது சற்றே நீண்ட தூறலாயும், சாரலாயும் விட்டுவிட்டு பெய்து மண்ணை ஈரம் செய்துகொண்டே இருந்தது. இருந்தாலும் நகரின் அன்றாட அலுவல் பாதிப்பில்லாமல் சுழன்றது.
மீண்டும் மூர்த்தி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணை அதிகாரியின் அறையில் செழியனும். வேல்ராசும் உடனிருந்தனர்.
“வணக்கம் சார்” – மூர்த்தி.
இதன் தொடர்ச்சியாக அதிகாரி விசாரணையைத் தொடங்கினார். உடனே குறுக்கிட்ட மூர்த்தி.
“சார். ஒரு நிமிசம். மன்னிச்சுக்கங்க. இப்ப நீங்க எந்த கேள்வி கேட்டாலும் என்னால சரியான பதிலை சொல்ல முடியாது”
“இங்க பாருங்க சார்! எங்க கடமையை சரியா, முறையா செய்ய நாங்க ஆசைப்படுறோம். உங்க பொண்ணுதானே இறந்தது. அப்ப நீங்கதான் விசாரணைக்கு ஒத்துழைக்கணும்.”
இப்போது மூர்த்தி கோபமடைந்து,
“ஆமா சார். அதத்தான் நானும் சொல்றேன். இறந்தது என் பொண்ணுதான். அவ பொணத்தக் கூட இன்னும் என் மனைவி பாக்கல. உடனடியா என்னோட பொண்ணு உடம்ப ஒப்படைங்க. அப்புறமா நான் விசாரணைக்கு வரேன். இத நான் வராமலே சொல்லிருக்கலாம். அது முறையா இருக்காதுனுதான் இங்க வந்து சொன்னேன். அதுபோக உங்ககிட்ட நேரடியா சொன்னா நல்ல பலன் கிடைக்குமேனு உத்தேசிச்சுதான் சொல்றேன்……. ”
உடனே செழியனும், வேல்ராசும் விசாரணை அதிகாரியின் அருகே சென்று ஏதோ சொல்கின்றனர். இருவர் சொன்னதையும் கேட்டுவிட்டு அதிகாரி மூர்த்தியிடம் விரைவாக வழக்கை முடிக்க ஆவன செய்வதாக சொல்கிறார். மூர்த்தி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். சிறிது நேரத்தில் செழியனும் மூர்த்தியின் பின்னே வந்தான்.
செழியன் தன் பின் வருவதைப் பார்த்த மூர்த்தி, அருகிலிருந்த மர நிழலில் காத்திருந்தார். அருகே செழியன் வந்ததும்,
”தம்பி. உங்க விசாரணையெல்லாம் நாளைக்கு வச்சுக்கிடுங்க. இப்ப எதுவும் வேணாம்.”
”சார். ஒரு அரை மணிநேரம் ஒதுக்க முடியுமா?”
ஏன்?
என் வீட்டுக்கு நீங்க வர முடியுமா?
முடியாது தம்பி. ஏன் வரணும்?
ஒண்ணுமில்ல சார். உங்க கூட பேசும்போது இந்த யூனிஃபார்ம் உறுத்தலா தோணுது. அதான் வேற ட்ரெஸ் மாத்திட்டு….
இருவரும் கண்களாலேயே வார்த்தைகளை இப்போது பரிமாறிக்கொள்கின்றனர். அதில் கொஞ்சம் நாமும் யூகிக்கலாம். அதாகப்பட்டது, நேற்று இரவு போல ஒரு நடை போகலாம் என்பது மட்டும் புரிந்தது.
அதென்ன! அடிக்கடி இப்படி ஒரு நடை போகிறார்களே? என எண்ணுபவர்களுக்காக, செழியன் நல்ல உடல்வாகு கொண்டவன். அதன் பின்ணணியில் செழியனின் 7 ஆண்டு நடையும் உள்ளது. அதாவது தினமும் 3 கிலோமீட்டராவது, ஜாகிங் செய்வான். மூர்த்தியோ, தன் முதுமையை வெல்ல தினமும் ’நடையாய் நட’ப்பவர். அதனாலேதான், இருவருக்கும் நடப்பதில் பிரியம்.
இந்த நேரத்தில் இன்னொரு தகவலையும் சொல்லிவிடுவது சிறப்பு. செழியனும், மூர்த்தியும் முன்னமே நண்பர்கள். தினமும் நடைபயில அதிகாலையிலே நகரைச் சுற்றித் திரிந்த தருணங்களில்…………….. அப்படியே நீங்களே புரிந்து கொள்ளவும்!
விட்டுவிட்டு ஈரம் செய்த மழை இப்போது இல்லை. ஆனாலும் மழையின் தடம் நகரம் முழுதும் இருந்தது.

இப்போது உரையாடல்.
“சொல்லுங்க தம்பி.”
“ஒரே விஷயம்தான் சார். நேற்று பேசிய விதத்தை வச்சே நான் யூகிச்சுட்டேன். உங்களுக்கு கொலையாளி யார்னு தெரியும்தானே?”
“ஆமாம். ஆனா உறுதியா தெரியாது!”
“என்கிட்ட சொல்லுங்க சார். எப்படியாவது தண்டனை வாங்கித் தரேன்.”
“தம்பி. அதைவிட்டு வேற ஏதாவது கேளுங்க நான் சொல்றேன். நீங்க கேட்டதுக்கு பதில் சொல்ல அவகாசம் வேணும். ”
”சரிங்க சார். நீங்க அவகாசம் எடுத்துக்கிடுங்க. ஆனா உங்களுக்கு யார் மேல சந்தேகம்னு நெனக்கிறீங்களோ தயங்காம என்கிட்ட மட்டுமாவது சொல்லிடுங்க. நான் ரகசியமாவே விசாரிக்கிறேன். இப்ப நீங்க போங்க சார்.”
”அப்புறம் தம்பி, என் பொண்ணு…..”
“கவலைப்படாதீங்க சார். இன்னைக்கு ராத்திரிக்குள்ள வீட்டுக்கே கொண்டுவரச் சொல்லீருக்கோம். ஃபார்மாலிட்டீஸ் முடியட்டும். நானே வீட்டுக்கு வரேன் சார்.”

இப்போது அந்த நகரம் சூரியனின் ஆளுகைக்குள் இருக்கிறது. இருட்டினால் தான் தெரியும் நிலவின் தன்மை!
҉                                                        *************************************************02

இப்போது இருட்டிவிட்டது. நகரம் மட்டுமல்ல. மூர்த்தி குடும்பமும்தான். இரவு வேளையில் மருத்துவமனையிலிருந்து அவரின் மகளின் உடல் வீடு வந்து சேர்ந்தது. மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் வந்திருந்தனர். சிலர் மறுநாள் காலை வருவதாயும் சொல்லியிருந்தனர். எனவே அவர்கள் விடியலுக்காக காத்திருந்தனர்.
அவர்கள் காத்திருக்கட்டும். நாம் நகரைக் கொஞ்சம் சுற்றுவோம். நகரம் அவர்களை மட்டுமா உள்ளடக்கியுள்ளது? வலி அவர்களுக்கு மட்டுமா உரியது. வலி மானுடச் சொத்து. வலியில்லாமல் வாழ்க்கையேது? என பாடல் எழுதுவது எளிது. வலியொடு வாழ்வது கொஞ்சம் கடினம்தான். ஆனாலும் என்ன, நாம் எல்லோரும் வலிகளோடு பழகிவிட்டோம். சிலர் அதை உணராமல்தான் துன்பம் கண்டு அஞ்சுகின்றனர். வலிகள் எப்படி இயற்கையோ, வாழ்க்கையும் அப்படித்தான்.
இப்போது நாம் ஒரு மாடிவீட்டு சன்னல் அருகே வெளிப்புறமாக இருக்கிறோம். உள்ளே சில இளைஞர்கள் உள்ளனர் என வெளியிலிருந்து பார்க்கும்போதே தெரிகிறது. நான்கைந்து இளைஞர்கள் இருக்கக்கூடும். அவர்களில் ஒருவன் நடுவே நின்று ஏதோ உற்சாகமாய் பேசிக்கொண்டிருக்கிறான். சுற்றி இருந்தவர்கள் அத்தனை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் செல்லும்போதுதான் தெரிகிறது அவன் உற்சாகமாய் பாடிக்கொண்டிருந்தான்.
அவன் தொடர்ந்து பேசியது,
“இப்ப நான் பாடுனத எல்லோரும் சேர்ந்து ஒண்ணா கோரஸா ஒரே மாதிரி பாடனும்டா! மிஸ் பண்ணாதீங்க”.
சிலர் தயாராக மேசை மீது கைகளை வைத்திருந்தனர். தாளம் தட்டுவதற்காக இருக்கும்.

“கானக் கருங்குயிலே!
கச்சேரிக்கு வரியா! வரியா!!
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி
வாழ்த்து ஒண்ணு தரியா! தரியா!!

உடனே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. நின்றிருந்தவன் ‘உஷ்’ என்றபடி உதட்டின் மேல் விரலை வைத்தான். எல்லோரும் அமைதியாயினர். கடைசியாய் அறைக்கதவின் அருகில் இருந்தவன் போய்க் கதவைத் திறந்தான். வந்தவர் வீட்டு உரிமையாளராய் இருக்கக்கூடும்.
“ராசாக்களா! நல்லாப் பாடுறீங்க! ஆனா பகலெல்லாம் வேற எங்காவது போய் பாடுங்கய்யா. அத விட்டுட்டு ராத்திரி எல்லோரும் தூங்கப் போற நேரத்துக்குதான் பாட ஆரம்பிப்பீங்களா?”
உடனே கூட்டத்திலிருந்த ஒருவன் எழுந்து காலேஜ் ஃபங்ஷன்-க்காக ரிஹர்ஸல்….. என இழுத்தான்.
இன்னொருவன் இனிமே தொந்தரவு இருக்காது சார் என்றான்.
அவரும் தீர்ந்தது கதை என நினைத்து அறையிலிருந்து வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து சில வழக்கமான விசாரிப்புகள், உரையாடல்கள் முடிந்து சிலர் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். இப்போது அந்த அறைக்குள் நான்கு பேர் இருந்தனர்.
இரு நாட்கள் கழித்து, ஒரு மாலைநேரத்தில்.
முன்னர் குறிப்பிட்ட பூங்காவிற்கு அடுத்தபடியாக ஒரு மைதானம் இருந்தது. அங்குதான் இப்போது குறிப்பிட்ட இளைஞர்களும், நகரின் மற்ற பகுதிகளில் இருக்கக் கூடிய அநேக இளைஞர்களும் ஒவ்வோர் நாள் மாலையும் கூடுவர். பூங்காவிற்கும், மைதானத்திற்கும் இடையே ஒரே சுவர்தான் உண்டு. நகரின் முதன்மையான பொழுதுபோக்கு பிரதேசமாக அப்பகுதி மாறிப் போனதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள் கூட ஏற்படும். சிறு-குறு வியாபாரிகளுக்கான முக்கிய சந்தையாக அவ்விடம் மாறிப்போனதை தனியே சொல்ல தேவையிருக்காதல்லவா?
ஒவ்வோர் வார இறுதிகளிலும், கூட்டம் கூட்டமாய் வரும் இளைஞர்களின் ஆவேசம் ஒவ்வோர் வாரமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. வாரக் கணக்கில் காத்திருந்து சண்டையிட விரும்பாத கோஷ்டிகள் ஒவ்வோர் நாளும் வந்து சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும். அவ்வப்போது காவலர்கள் வந்து எச்சரிக்கும்படியும் இருந்து வந்தனர். தற்போதெல்லாம் பூங்காவும், மைதானமும் கொஞ்சம் மாறிவிட்டது. ஆனால் அது யாரும் விரும்பாத மாற்றம். இளம்பெண் கொலை செய்யப்பட்டதில் இருந்து பூங்கா கடந்த இரு நாட்களாகப் பூட்டப்பட்டிருந்தது. பூங்கா மொத்தமாய் ஸ்தம்பித்தாலும் மைதானத்தில் ஓரளவு ஆட்கள் நடமாட்டம் இருந்தது. விளையாட்டுப் பிரியர்களின் தயவாலே இது சாத்தியமாயிற்று.
இரு நாட்கள் முந்திய இரவு ஒரு வீட்டின் அறையில் கண்ட நான்கு பேருமே இப்போது மைதானத்துள் நுழைந்தனர். எல்லாமே வழக்கங்கள்தான்! காலை எழுந்தவுடன் படிப்பு இருக்கிறதோ, என்னவோ? மாலையில் விளையாட்டு இருக்கும். (பாரதியார் பாவம்தான்!!)
நேற்று அதே அறையிலிருந்து வெளியேறிய பிற நண்பர்களும் கொஞ்சநேரத்தில் வருவதாகக் கூறியிருந்தனர். நால்வரில் இருவர் மட்டும் பூங்காவையும், மைதானத்தையும் இணைக்கும் சுவரின் மீது ஏறி அமர்ந்தனர். அவர்களுக்குப் பின்னால், அதாவது பூங்காவில். இருவர் அமர்ந்திருந்தனர்.
அட! அவர்கள் ஏற்கனவே நமக்கு அறிமுகம் ஆனவர்கள்தான்! ஆமாம். அவர்கள் இருவரும் மூர்த்தியும், செழியனும்தான். அடடா! இரு நாட்கள் அவர்களை விட்டுவிட்டோமே! கொஞ்சம் நாட்களை முன்னோக்கி நகர்த்துவோம். அதாவது இந்த அத்தியாயத்தின் முதல் சில வரிகளுக்குள்.
மூர்த்தியின் மகளின் உடல்தகனத்திற்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே கொஞ்சபேர்தான் வந்திருந்தார்கள். நிறைய பேர் அனுதாபங்களையும், ஆறுதல்களையும் சொல்லிக்கொண்டிருந்தனர் அது விழலுக்கு இறைத்த நீரென அறியாமல். உறவினர்களின் ஆறுதல்கள் எல்லாவற்றையும் அவர்கள் முன்னமே எதிர்பார்த்திருந்ததால் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தனர். செழியன் கிட்டதட்ட குடும்பத்துள் ஒருவனாகவே மாறியிருந்தான், யாரும் எதுவுமே சொல்லமுடியாதபடி இயங்கினான்.
நல்லபடியாக உடல்தகனம் முடிந்தது. உறவினர்கள் சிலர் கொஞ்ச நாட்கள் தங்கி ஆறுதல் சொல்ல விரும்பி அங்கேயே இருந்தனர். மறுநாள் மாலை (அதாவது இப்போது.) வரை பல்வேறு எண்ணங்களைச் சுமந்து நின்ற மூர்த்தியை கொஞ்சம் ஆசுவாசப்படுத்த எண்ணி செழியன் அந்த பூங்காவிற்கு அழைத்து வந்தான்.
இதோ இருவரும் பேச எத்தனிக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னே முன்னர் குறிப்பிட்ட இளைஞர்கள் இருவரும் காத்திருக்கிறார்கள்.
அட! நீங்களும் கொஞ்சம் காத்திருங்களேன், அடுத்த அத்தியாயத்திற்காக!!
҉ 03

4 thoughts on “கோவர்த்தனன் -3

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s