டெமுஜின் கதை-2

பிறப்பின் பின்ணணி

டெமுஜின் மங்கோலிய மண்ணில் அவதரித்து விட்டார் என்பதோடு கதையை மேலும் சுலபமாக தொடர்ந்துவிட முடியாது. இதன் பொருட்டு நாம் காலத்துள் பின்செல்ல வேண்டும்.

டெமுஜின் ஹோலுனின் மகன். ஆனால் யெசுகெய் அவளது முதல் கணவரல்ல. குழம்பி விடாதீர்கள். இதற்கு பின்னும் கொஞ்சம் வரலாறு உள்ளது. அதை அறிய நாம் அப்போதைய மங்கோலியாவை அறிந்து கொள்வோம்.

12-ம் நூற்றாண்டில் மங்கோலியாவில் ஏராளமான நாடோடி இனக்குழுக்கள் வாழ்ந்துள்ளனர். இவர்கள் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், வாழ்வியல் என எல்லாமே சைபீரிய பழங்குடிகளைப் பெரும்பாலும் ஒத்திருந்தன. அவர்களின் மொழி அல்டாய் எனப்பட்டது. அதாவது அவர்கள் அல்டாய் எனும் மலை மீது வசித்துவந்த காரணத்தால்.

மங்கோலியாவின் கிழக்கில் இருந்த இனக்குழுக்கள் டட்டார், மான்செஸ் மற்றும் கிடான். இதுதவிர மத்திய ஆசியாவில் துர்கிக் எனும் இனக்குழுவினர் வசித்து வந்தனர். துர்கிக் இனக்குழுவினரும் டட்டார் இனக்குழுவினரும் பலநேரங்களில் இணைந்து புதுப்புது இனக்குழுக்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இது போக, திருமண உறவுகள் மூலமும் புதிய இனக்குழுக்கள் உருவாகும். ஒரு குழுவின் தலைவருக்குப் பெயர் ‘கான்’. கான் என்றால் தலைவன்/அரசன் என்று பொருள். 4-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய பகுதிகளை ஆண்டவர்கள் ஹன் எனும் இனத்தவர். மங்கோலியர்கள் தங்களை ஹன்னின் வழித்தோன்றலாகவே கூறுவர். ஹன் என்றால் மங்கோலியர் மொழியில் ‘மனிதன்’ என்று பொருள்.

இப்போ டெமுஜின் கதைக்குள் போவோம்.

சிலுடு என்பவர் மெர்கிட் எனும் இனத்தவர். புதிதாய் திருமணமானவர். இளம் ஜோடிகளிடையே பரஸ்பர நெருக்கத்தை அதிகரிக்க தனியே கூடாரம் கட்டி வாழ வேண்டும் என்று அவர்கள் கலாச்சாரம். ரதத்தைச் செலுத்தினார். ரதத்துள் அமர்ந்திருந்தாள் ஹோலுன். அப்போது அவளுக்கு வயது 16. ரதத்தைச் சுற்றிலும் சில பாதுகாவலர்கள் வந்தனர். சிறிது நேரத்தில் கடைசியாக வந்த பாதுகாவலன் கத்தினான். “ஓடுங்கள்! எதிரிகள் வருகிறார்கள்!’

அவர்கள் 30 பேர். இவர்களோ 8 பேர்தான். சண்டை பிடிப்பது சாமர்த்தியமல்ல எனத் தெரிந்தது சிலுடுவிற்கு. ரதத்தை விரட்டினார். அதற்குள் 3 பாதுகாவலர்கள் சீறி வந்த அம்புகளுக்கு இரையாகி மாண்டனர். இதைக் கண்ட மற்ற பாதுகாவலர்கள் ஆளுக்கொரு திசையில் மறைந்தனர். அப்போதும் சிலுடு ஹோலுனிடம் ‘நான் உன்னைக் கைவிடமாட்டேன்’ என்றார். ஆனால் நிலைமை அப்படியிருக்கவில்லை. ரதம் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்ல முடியவில்லை. பாய்ந்து வந்த அம்பு ரதத்தின் கூரையைத் தாக்கியது.

உடனே ஹோலுன் “உங்கள் உயிர் எனக்கு முக்கியம். எப்படியாவது தப்பியுங்கள்.” என்றாள். சிலுடுவிற்கும் அதுவே சரியெனப் பட்டது. பிறிதொரு சமயம் அவளை மீட்கலாம் என எண்ணி மறைந்தார். ரதம் வேகம் குறைந்து நின்றது. எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்டது.

யெசுகெய் ஹோலுன் முன்வந்து கேட்டார்.

“நல்ல அழகு! உன் பெயர் என்ன?”

ஹோலுன் அமைதியாயிருந்தாள். அவரே தொடர்ந்தார்.

“நான் யெசுகெய். போர்ஜிகின் இனத் தலைவன். இனி நீ என் மனைவி.” எனக் கூறி ஹோலுனைக் குதிரையில் ஏற்றிப் பறந்தார். இனி அவள் அவருக்குத்தான் சொந்தம்.

இங்கே ஒரு சின்ன நினைவுறுத்தல். அப்போதைய நாட்களில் ஒரு இனக்குழுவினர் பிற இனக்குழுவினரைத் தாக்கி கால்நடைகள், குதிரைகள், உணவுப்பொருட்கள், விலைஉயர்ந்த பொருட்கள் முதலானவற்றை அபகரித்துக் கொள்வது வழக்கம். சில நேரங்களில் தலைவனின் மனைவி/மனைவிகளையும் மற்றும் மற்ற அழகான பெண்களையும் கூட்டிச் செல்வர். அதாவது, பெண்கள்தான் வெற்றிக்கான அடையாளம்,வெகுமதி,எல்லாமுமே.

பழந்தமிழ்நாட்டில் ஆநிரைகள் (கால்நடைகளை) கவர்வதும் இதே காரணம்தான். ஆனால் இது தமிழ்நாடு. அது மங்கோலியா அவ்வளவுதான். அங்கே மாறுபட்டக் கலாச்சாரம்.

இப்போது மீண்டும் கதைக்குள்.

இப்போது ஹோலுன் யெசுகெய்யின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியின் பெயர் சோச்சிஜெல். அவளின் மகன் பெயர் பெக்டெர். அதாவது சரித்திரப்படி டெமுஜினின் அண்ணன்.

இப்போது நாம் மீண்டும் முதல் அத்தியாயம் செல்ல வேண்டும். அங்கே டெமுஜினை பிறந்தபடியே விட்டுவிட்டோம். டெமுஜின் என்றால் இரும்பு மனிதன் என்று பொருள்.

அவர் பிறந்த இடம் மங்கோலியாவில் ஆனான் நதிக்கரையோரம் இருந்த டெலூன்போல்டெக். அதாவது இப்போதைய மங்கோலியத் தலைநகரான உலான்பாட்டருக்கு அருகே. அவர் பிறந்த ஆண்டு கி.பி. 1155-க்குள்ளிருந்து கி.பி. 1167-க்குள் இருக்கலாம் என கணிக்கப்பட்டாலும், பலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆண்டு 1162. ஆசியக் காலண்டர்படி அது குதிரைகளின் வருடம்.

(இப்போதும் சீனாவில் ஆசியக் காலண்டர்படி விலங்குகளின் பெயரில்தான் வருடங்கள் அழைக்கப்படுகின்றன.)

குழந்தையான டெமுஜினை யெசுகெய் ‘டெமுஜின்’ என பலமுறை உச்சரித்து அதன் நெற்றியில் பாசத்தோடு முத்தமிட்டார். ஹோலுன், யெசுகெய்யைத் தன் கணவராக முழுமையாக ஏற்றுக்கொண்ட நொடி அது.

-இனிமேல்தான் ஆரம்பம்

மறுமொழியிட

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s